Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
நேர்காணல்
"இலக்கியம் வேறு ஆன்மீகம் வேறு அல்ல" - டாக்டர் சுதா சேஷய்யன்
- அரவிந்த் சுவாமிநாதன்|நவம்பர் 2007||(2 Comments)
Share:
Click Here Enlargeசென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் துறைப் பேராசிரியராக விளங்கும் டாக்டர் சுதா சேஷய்யன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவியல் களஞ்சியம் ஆகியவற்றுக்கு மருத்துவம் பற்றிப் பங்களிப்புச் செய்தவர். பல இதழ்களில் இலக்கியம், அறிவியல், ஆன்மிகம், மருத்துவம் எனப் பல துறைகளைப் பற்றிக் கட்டுரைகள் எழுதி வருகிறார். உடற்கூறியல் குறித்த 'Gray's Anatomy' என்னும் நூலின் சர்வதேச வல்லுநர் குழு உறுப்பினர். இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளர். 'ஞானத்தமிழ் வாணி', 'அருள்மொழி அரசி' போன்ற பல பட்டங்களையும், தமிழக அரசின் 2005-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருதையும் பெற்றிருப்பவர். 'பாரதி இலக்கியச் செல்வர்', 'கேப்டன் சேஷாத்ரி நாதன் விருது', 'சுதாசார வர்ஷிணி' எனப் பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவரை, நமது இதழுக்காகச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து...

கே: அடிப்படையில் நீங்கள் ஓர் உடற்கூறு மருத்துவர்; ஆனால் ஒரு சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்து வருகிறீர்கள். இலக்கிய ஆர்வம் உங்களுக்கு ஏற்பட்டது எப்படி?

ப: இலக்கியத்தையும் உடற்கூறுத் துறையையும் நான் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கவில்லை இலக்கிய ஆர்வம் எனது பள்ளிப் பருவத்திலேயே இருந்தது. அது வளர்வதற்கு, பெற்றோரையும், என்னை ஊக்குவித்த அ.ச.ஞா. போன்ற அறிஞர் பெருமக்களையும் காரணமாகக் கூறலாம். கம்பராமாயணம், திருக்குறள், பாரதி கவிதைகள் என்று படிப்படியாக வளர்ந்த எனது இலக்கிய ஆர்வம் இன்றும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

கே: உங்கள் கல்வி பற்றி...

ப: எனது பள்ளிப்பருவம் குரோம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிந்தது. பின் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பு. அதன் பின் எம்.எஸ். பயின்றேன். முதலில் டியூட்டராகவும் உதவிப் பேராசிரியராகவும் இருந்த நான், தற்போது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உடற்கூறுத் துறைப் பேராசிரியராக (Anatomy Professor) பணியாற்றி வருகின்றேன். எனது பெற்றோர்கள் இருவருமே டாக்டராக இருந்தவர்கள் தாம்.

கே: நீங்கள் ஒரு சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர். ஆனால் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் தற்போது உங்களை அதிகம் காணமுடிவதில்லை. ஏன்?

ப: பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் இருந்து நானாகவே ஒதுங்கிக் கொண்டு விட்டேன். காரணம், பல விஷயங்களில் எனக்கு அது ஏற்புடையதாக இல்லை. எனது கல்லூரிப் பருவத்தில் நீதிபதி மு.மு. இஸ்மாயில், கம்பனடிப்பொடி சா.கணேசன், அ.ச. ஞானசம்பந்தன் போன்ற அறிஞர்களின் முன்னிலையில் உரையாற்றி இருக்கிறேன். அவ்வளவு பெரிய சான்றோர்கள் முன் பேசும்போது மிகுந்த படபடப்பும், ஒருவித அச்சமும் இருக்கும். அவர்கள் எங்களை ஊக்குவித்து, ஏதேனும் தவறுகள் இருந்தால் கூடத் தனியாக அழைத்து ஆலோசனை கூறி வழிநடத்துவர். ஆனால் தற்போதைய பட்டிமன்றங்களின் நிலை வேறு. இதற்காக பட்டிமன்றப் பேச்சாளர்களை நான் குறை கூறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இப்போதைய நிகழ்ச்சிகளில் மாற்றம் தேவை. எவ்வளவு காலத்திற்குத்தான் அப்பாவா, அம்மாவா குடும்பத்துக்கு யார் முக்கியம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருப்பது? பட்டிமன்றம் என்பது ஒரு களம். ஒரு தலைப்பை பல்வேறு கோணங்களில், பல்வேறு பார்வைகளில், பலவிதங்களில் அலச உதவுவது. அதில் கலந்து கொள்பவர்களும் சரி, சுவைஞர்களும் சரி, அதனால் அறிவு விருத்தி பெற வேண்டுமே அல்லாது தவறான சிந்தனைக்குக் கொண்டு செல்வதாக அமைதல் கூடாது.

சமூக விழிப்புணர்வுப் பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. எய்ட்ஸ் குறித்து, சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு குறித்து எனப் பல தலைப்புகளில் பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அது போன்று தற்போது நிகழ்வது அரிதாக இருக்கிறது. பட்டி மன்றங்கள் மக்களிடையே நல்ல சிந்தனைகளைத் தூண்டுவனவாக அமைய வேண்டும்.

கே: ஒரு இலக்கியச் சொற்பொழிவாளராக இருந்த நீங்கள் ஆன்மிகச் சொற்பொழிவாளராக மாறியது எப்படி?

ப: உண்மையைச் சொல்லப்போனால் இலக்கியம் வேறு ஆன்மிகம் வேறு அல்ல; இரண்டுமே ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை தாம். அவற்றைப் பிரித்துப் பார்ப்பது தேவையற்றது. சங்க இலக்கியங்களில் ஆன்மிகம் பற்றிப் பேசப்பட்டுள்ளது. பரிபாடலும் ஆன்மிகம் பற்றிப் பேசுகிறது. புறநானூறு, சிலப்பதிகாரம் உட்பட முற்கால, பிற்கால இலக்கியங்கள் அனைத்துமே ஆன்மிகம் பற்றிப் பேசுகின்றன. நாயன்மார்கள், ஆழ்வார்கள் எனப் பலரும் இலக்கியத்தையும், ஆன்மிகத்தையும் வளர்த்திருக்கிறார்கள். எனவே இலக்கியம், ஆன்மிகம் என இரண்டையும் தனித் தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. கம்பராமாயணத்தில் எனக்கு ஆர்வம் அதிகம். கம்பன் ஓர் இலக்கியவாதியாக இருக்கும் அதே சமயத்தில், அவனது ஆன்மிக நோக்கும் என்னைக் கவர்ந்தது. அந்த ஆர்வம் பல்வேறு நூல்களைக் கற்கும்போது அதிகரித்தது. இலக்கியங்கள் கூறும் உண்மை என்ன என்பதை அறிய ஆர்வம் பிறந்தது. அது தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்களைக் கற்கும்போது மேலும் விரிவடைந்தது. அவ்வளவுதான்.

கே: ஓய்வு ஒழிச்சலே இல்லாத இந்த விஞ்ஞான யுகத்தில், ஆன்மிகச் சொற் பொழிவுகளுக்கும், ஆன்மிக எழுத்துக்களுக்கும் மக்களிடையே வரவேற்பு உள்ளதா?

ப: விரும்புவது மட்டுமல்ல. ஆர்வத்துடன் திரளாகக் கலந்து கொள்ளவும் செய்கிறார்கள். ஐயங்களைப் போக்கிக் கொள்ளப் பல கேள்விகளையும் கேட்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். பலர் குறிப்பெடுத்துக் கொண்டு செல்கிறார்கள். இது முன்பைவிட மக்களிடையே ஆன்மிக நாட்டம் அதிகரித்துள்ளதையே காட்டுகிறது. இந்த இயந்திர யுகத்தில் வாழும் மக்கள், வாழ்க்கையின் உண்மை நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்வதில் மிக்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எழுத்துக்களைப் பொறுத்தவரை முன்பை விடத் தற்போது நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கிறது. நான் மிகத் தொன்மையான சில ஆலயங்களைப் பற்றி எழுதும்போது, வாசகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்று சஞ்சலப்பட்டதுண்டு. ஆனால் அவற்றுக்கு வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பு இருப்பதைக் கடிதங்கள், தொலைபேசி வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. ஆகவே, விஞ்ஞான யுகமாக இருந்தாலும் சரி, மக்களிடையே ஆன்மிக ஆர்வத்துக்குப் பஞ்சமில்லை.

கே: ஆன்மிகக் கட்டுரைகள் எழுதவும், டி.வி.யில் கோவில் திருவிழா நேர்முக வர்ணனை, சொற்பொழிவு போன்றவற்றுக்காகவும் பல்வேறு திருத்தலங் களுக்குப் பயணம் செய்கிறீர்கள். அவை குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

ப: இரவு முழுவதும் பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்திருக்கிறேன். மாட்டு வண்டியில் பயணம் செய்திருக்கிறேன். குக்கிராமங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஒருமுறை நான் நண்பர்களுடன் சேலம் ஸ்கந்தாசிரமத்துக்குச் சென்றிருந்தேன். அன்று ஹனுமத் ஜெயந்தி. தரிசனம் முடிந்து புறப்படும் வேளையில், என்னை அடையாளம் கண்டு கொண்ட அன்பர் ஒருவர் அங்குள்ள சுவாமிகளிடம் என்னைப் பற்றித் தெரிவித்தார். அனைவருக்கும் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்த சுவாமிகள், உடனே என்னை அழைத்தார். என்னை அமரச் சொன்ன அவர் என்னிடம், 'இன்று ஹனுமத் ஜெயந்தி. ஹனுமனைப் பற்றி அரைமணி நேரம் பேசு!' என்று கூறினார். நானும் மறுக்காமல் அரைமணி நேரம் உரையாற்றினேன். நிகழ்ச்சியின் முடிவில் எனக்குப் பிரசாதம் தந்து ஆசிர்வதித்த சுவாமிகள் 'நீ மேலும் இத்துறையில் வளர்ந்து இன்று இருப்பதை விட அதிக உயர்வடை வாய்!' என்று வாழ்த்தினார். சுவாமிகளின் வாழ்த்தும் ஆசியும் பலித்தது என்று தான் கூற வேண்டும்.

மற்றுமொரு சம்பவம். நான் மும்பைக்குச் சென்றிருந்த பொழுது அன்பர் ஒருவர் ஸ்ரீ சௌந்தர்ய லஹரி பற்றித் தனது இல்லத்தில் வந்து உரையாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். ஆனால் அன்று மாலையே நான் சென்னைக்குத் திரும்புவதாக இருந்ததால் என்னால் அவரது வேண்டுகோளை ஏற்க முடிவில்லை. ஸ்ரீ சௌந்தர்ய லஹரி நூலுக்கு ஸ்ரீ காஞ்சி மகாப் பெரியவர் அருளிய விளக்கத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் ஒன்று உண்டு. அது என்னிடம் இல்லை. ஒருமுறை நான் காஞ்சி மடத்துக்கு பால பெரியவர்களை தரிசிக்கச் சென்றிருந்தேன். என்னை ஆசிர்வதித்த பால பெரியவரும், பெரியவரின் ஆங்கில மொழிபெயர்ப்பு சௌந்தர்ய லஹரி விளக்க உரையை எனக்குத் தருமாறு பணியாளரைப் பணித்தார். பணியாளரும் தேடிப் பார்த்து அது இல்லை என்பதால் பேசாமல் இருந்து விட்டார். அந்தப் புத்தகம் எனக்குக் கிடைக்காமலேயே இருந்தது. பின் ராமகிருஷ்ண மடத்தில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக மீண்டும் நான் மும்பை செல்ல நேர்ந்தது. அப்போது மீண்டும் அந்த நண்பர் அணுகி, ஸ்ரீ சௌந்தர்ய லஹரி பற்றி சொற்பொழிவாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். நானும் ஒப்புக் கொண்டேன். தினந்தோறும் மதியத்தில் அந்நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாயிற்று. கிட்டத்தட்ட நூறு பேர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பாடல்களைப் பாடுவது, அதற்கான விளக்கம் கூறுவது என்ற முறையில் தொடர்ந்து எட்டு நாட்கள் அந்நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் இறுதி நாளன்று அதில் கலந்து கொண்ட பெரியவர் ஒருவர், பால பெரியவர் அளிக்கச் சொன்னதாகக் கூறி எனக்கு ஒரு புத்தகத்தை அளித்தார். அது, காஞ்சி மகா பெரியவரின் சௌந்தர்ய லஹரி ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகம்!

நான் தேடிக் கொண்டிருந்த புத்தகம் என்னைத் தேடி வந்தது குறித்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனக்கு அந்நூலை அடைவதற்கான தகுதி இருக்கிறதா என்று இறைவனால் சோதனை செய்து பார்க்கப்பட்ட பிறகே அந்நூல் எனக்குக் கிடைத்ததாகக் கருதுகிறேன். இப்படி எவ்வளவோ அனுபவங்கள்!

கே: சொற்பொழிவுகளின் போது உங்களுக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்கள்...

ப: சமீபத்து நிகழ்வு ஒன்றைக் கூறுகிறேன். நவராத்திரி சொற்பொழிவுக்காக ராம கிருஷ்ணா மிஷனுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள குழந்தைகளிடம் மகாலட்சுமியைப் பற்றிச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தேன். மகாலட்சுமிக்கு இன்னொரு பெயரும் உண்டு. பாற்கடலில் தோன்றியதால் அலைமகள் என்ற பெயராலும் அவள் அழைக்கப்படுகிறாள். அலைமகள் என்று அழைக்கப்படுவதன் காரணம் மாணவர்களில் யாருக்காவது தெரியுமா என்று கேட்டேன். ஒரு மாணவன் மட்டும் எழுந்து 'அலை எப்படி ஓர் இடத்தில் நில்லாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறதோ, கரையை நோக்கி வந்து போய்க் கொண்டிருக்கிறதோ அதுபோலச் செல்வமும் ஓரிடத்தில் நிலையாக இருக்காது அதனால்தான் அந்தப் பெயர் என்று கூறினான். வடமொழியில் திருமகளுக்கு 'சஞ்சலா' என்ற பெயர் உண்டு. ஓரிடத்தில் நிலையாக இருக்காமல், அங்கும் இங்கும் செல்வதால் மகாலட்சுமி அந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறாள். வடமொழி அறியாத அந்தச் சிறுவன் அதுபற்றி, கிட்டத்தட்ட அதே கருத்தில் கூறிய விளக்கம் எனக்கு வியப்பைத் தந்தது. இக்கால மாணவர்களின் அறிவுத் திறனையும், புதிய சிந்தனைப் போக்கையும் உணர வைத்தது.
கே: தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாமல், வடமொழியிலும் மிக்க பயிற்சியுடையவர் நீங்கள். இந்த பன்மொழித் திறமை பற்றிக் கொஞ்சம் கூறுங்களேன்.

ப: திறமை என்றெல்லாம் பெரிதாக எதுவும் சொல்லி விட முடியாது. தமிழைப் போன்று வடமொழியிலும் எனக்குச் சிறுவயது முதலே ஆர்வம் உண்டு. எனது பள்ளிப் பருவத்திலேயே நான் வடமொழியைக் கற்கத் துவங்கி விட்டேன் என்றாலும் சரளமாகச் சொற் பொழிவாற்றும் அளவுக்கு எனக்குப் பயிற்சி கிடையாது. இது போன்ற மொழிகளைக் கற்கும் போதுதான் அறிவு விரிவடைகிறது. ஒரே பொருளை ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் கூறி இருக்கின்றார்கள், எப்படி இந்தியா முழுமையும் ஒருமித்த சிந்தனை நிலவியிருக்கிறது என்பன பற்றியெல்லாம் பல மொழிகளைக் கற்கும் போது நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

கே: செம்மொழியாக விளங்குவது நம் தமிழ் மொழி. சங்க காலம் முதற்கொண்டு பௌத்தர், சமணர், கிறிஸ்தவர், இஸ்லாமியர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என அனைவராலும் போற்றி வளர்க்கப்பட்ட மொழி நம் மொழி. ஆனால் தற்போதோ தமிழ்நாட்டில், தமிழ் படிக்காமலேயே ஒருவர் பட்டப்படிப்பு முடித்து வேலை பெற்றுவிடலாம் என்ற நிலை நிலவுகிறது. இது குறித்துத் நாம் செய்ய வேண்டியன என்னென்ன?

ப: இந்நிலை மிகவும் வருத்ததிற்குரிய ஒன்றுதான். பொதுவாக, மொழிகளின் மீது ஆர்வம் உடைய ஒருவர், மற்ற மொழிகளையும் கற்றுக் கொள்வதில் ஆர்வமுடையவராகத் தான் இருப்பார். அதில் தவறில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் மொழியை ஒதுக்குவது மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம். அரசும், மற்ற அமைப்புகளும் சேர்ந்து தான் இதற்கு ஒரு தீர்வைக் காண முன்வர வேண்டும். தொடக்கக் கல்வியிலிருந்தே தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். அப்போதுதான் இந்த நிலை மாறும்.

கே: மருத்துவப் பணி, ஆன்மிக, இலக்கியச் சொற்பொழிவு, வானொலி தொலைக்காட்சி வர்ணனைகள், தொடர்கள், நூல்கள் எழுதுதல் என்று பலவற்றைச் செய்கிறீர்கள். அதுபோக ஒரு சிறந்த ஆய்வாளராகவும் விளங்கி வருகிறீர்கள். ஒரே சமயத்தில் எவ்வாறு உங்களால் இத்தனைத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட முடிகிறது?

ப: பல்வேறு பணிகளில் கலந்து கொள்வது என்றால் அதற்கான நேரத்தைத் திட்டமிடல் மிகமிக அவசியம். ஒரு நாளுக்கு இருபத்து நான்கு மணி நேரம் என்றால் காலையில் விரைவாகவே எழுந்து கொள்வதன் மூலம் மேலும் சில மணித்துளிகளை நாம் பெறுகிறோம். நான் பணிக்குத் தொடர் வண்டியில் பயணம் செய்யும்போது, புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பேன். சொற்பொழிவுகளுக்குச் செல்லும் முன்னமேயே பேசுவதைப் பற்றித் திட்டமிட்டுக் கொள்வேன். பயணத்தின்போது அதுபற்றிச் சிந்தித்துக் கொண்டே செல்வேன். முறையான சிந்தனை நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. ஆகவே நேர நிர்வாகமும் திட்டமிடலும் முக்கியம்.

கே: ஒருபுறம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து கொண்டிருக்கிறது, மறுபுறமோ வெகுவேகமாக சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இதைக் குறித்து நீங்கள் கருதுவது என்ன?

ப: சக மனிதர்களின் மீதான சமூக அக்கறை குறைந்து கொண்டு வருவதுதான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன். பொருளாதார ஏற்றத்தாழ்வும், சமூகச் சமச்சீரின்மையும் அதனால்தான் ஏற்படுகிறது. அந்நிலை மாற வேண்டும். அதற்கு சமூக அமைப்புகள், அரசு மட்டுமல்லாது ஒவ்வொரு தனிமனிதனும் முயல வேண்டும். குறிப்பாக, பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

கே: விகடன் குழுமத்தினர் வெளியிட்ட 'பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்' உருவாக்கத்தில் நீங்கள் தலைமைப் பதிப்பாசிரியராக முக்கியப் பங்கு வகித்திருக்கிறீர்கள். அதில் நீங்கள் எதிர்கொண்ட நடைமுறைச் சிக்கல்கள், சிரமங்கள் போன்றவற்றைப் பற்றிக் கூறுங்களேன்?

ப: அது ஒரு சவாலான பணிதான். பிரிட்டானிகாவின் தமிழ்ப் பதிப்பு என்பதால், ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்ளே பணியாற்ற வேண்டி இருந்தது. நாமாக புதிதாக எதையும் உருவாக்கிச் சேர்த்திட இயலாது. ஆகவே பணி மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்தது. ஆங்கிலத்துக்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களைக் கண்டறிந்து பயன்படுத்தியது ஒருபுறம் என்றாலும், சில வகைச் சொற்களை நாம் அப்படியே பயன்படுத்த வேண்டியும் வந்தது. குறிப்பாக சில கலைச்சொற்களை (technical terms) நாம் அப்படியே ஒலிமாற்றி (transliteration) எழுத வேண்டியிருந்தது. மேலும் தமிழ் ஒரு Phonetic Language என்பதால் உச்சரிப்பு மிக முக்கியமான ஒன்று. சான்றாக Antony என்பதைத் தமிழில் சிலர் அந்தோணி என்றும், சிலர் ஆன்டனி என்றும், வேறு சிலர் ஆன்டணி என்றும் எழுதுவர். இதுபோன்ற உச்சரிப்புப் பிழைகள் நேராமல் இருப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினோம். என் அறையில் என்னைச் சுற்றி இது போன்ற சொற்களின் சரியான உச்சரிப்பைத் தொகுத்து எழுதி ஒட்டி இருந்தேன். தவறுகள் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாகச் செயல்பட்டு வந்தோம். சான்றாக மியூனிக் என்ற சொல் ம்யூனிக் என்றும், ம்யுனிக் என்றும் ம்யூனீக் என்று பலவிதமாக உச்சரிக்கப்படுகிறது. எனவே எங்கள் குழுவினர் அனைவரும் இது பற்றிக் கலந்தாலோசித்து இதுபோன்ற சொற்களின் உச்சரிப்பைத் ஒருதரப்படுத்திக் கொண்டு வந்தோம்.

வள்ளுவர் கூறிய 'தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும்' என்ற குறள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. இறைவன் அடியார்களுக்காக ஓலைச் சுவடியில் எழுதியது, பிழைகளைத் திருத்தியது போன்ற சம்பவங்களை நினைத்தவாறே இருப்பேன். எனக்கு இறைவன் நேரில் வந்து அவ்வாறு அருளவில்லை என்றாலும், அகராதியில் பெரிய அளவில் பிழைகள் எதுவும் நேராத வண்ணம் ஏதாவது ஒரு வழியில், என் குழுவினர் யார் மூலமாவது அதனைச் சுட்டிக்காட்டி, நல்ல முறையில் வெளிவர உதவி செய்தான் என்று தான் கூற வேண்டும்.

கே: இன்றைய தேவைக்கேற்பத் தமிழ் மொழியில் பல்துறை நூல்களை, குறிப்பாக அறிவியல், தொழில்நுட்ப நூல்களை உருவாக்குவது மிக முக்கிய மானதாக இருக்கின்றது. புதிய அறிவியல் கலைச்சொல் அகராதி உருவாக்க வேண்டுவதும் அவசியமா கின்றது. இதற்கான வழிமுறைகள் குறித்துத் தங்கள் கருத்து என்ன?

ப: இயற்பியல், வேதியியல் போன்ற துறைகளில் பல கலைச்சொல் அகராதிகள் உருவாக்கப்பட்டு விட்டன. என்றாலும் முதலில் இதற்கு அனைவரது ஒருங்கிணைப்பும் இன்றியமையாததாகிறது. அறிவியல் தொழில்நுட்பச் சொற்களுக்கு இணையான சொற்களை தமிழில் தேடிக் கண்டறிந்து பயன்படுத்துவது அவசியம். Central Security Police Force என்பதற்கு 'மத்திய சேம நலக் காவல் படை' என்ற சொல் பயன்படுகிறது. இதில் உள்ள 'சேம' என்ற சொல் பண்டைய இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும். பல தொழில்நுட்ப வார்த்தைகளுக்கு பண்டைய இலக்கியங்களில் இருந்தும், ஆழ்வார், நாயன்மார் பாடல்களில் இருந்தும் இணையான சொற்களைக் கண்டறியலாம். என்றாலும் அவ்வகை வார்த்தைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த அகராதிகள் உருவாக்கும் பணியைத் தள்ளிப் போடுதலும் கூடாது.

சில இடங்களில் இலக்கணத்தை மீறுவதும் தேவையாகிறது. மொழிக்கு முதலில் சில எழுத்துக்கள் வராது என்றாலும், இது போன்ற கலைச்சொல் உருவாக்கப் பணியில் ஈடுபடும்போது தவிர்க்க முடியாத இடங்களில் அதனை மீறுவது தவறில்லை என்றே நான் கருதுகிறேன். வேதியியல், மருத்துவம், தொழில்நுட்பம் என்று இவ்வகைக் கலைச் சொல் உருவாக்கத்தின் போது, உலகம் முழுவதும் ஒரு வார்த்தையை எவ்வாறு உச்சரித்துப் பயன்படுத்துகின்றதோ அதே வகையில் நாமும் உச்சரிக்க வேண்டும். இல்லாவிட்டால் பொருள் புரியாமல் போகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதற்கு அறிஞர்கள் தமக்குள் ஒன்றுபட்டு விவாதித்து, ஒரு பொது வடிவமைப்பை ஏற்று, அதன் படியே செயலாற்ற வேண்டும்.

கே: உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

ப: தற்போது தமிழ் இணையப் பல்கலைக் கழகத்துக்காக மருத்துவக் கலைச்சொல் அகராதி தயாரிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். அதைச் செவ்வனே செய்து முடிக்க வேண்டும். இந்திய இலக்கியங்களில், குறிப் பாக நல்ல பல பழைய நூல்கள் மக்களிடையே போதிய அறிமுகம் இல்லா மலும், வரவேற்புப் பெறாமலும் இருக்கின்றன. அவற்றை மீண்டும் மக்கள் முன் கொண்டு வர வேண்டும். நல்ல பல நூல்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது.

கே: நீங்கள் இத்துறையில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் பற்றிச் சொல்ல முடியுமா?

ப: முதலில் எனது பெற்றோர்கள். இருவருமே டாக்டர்கள். அதிக வேலைப்பளு உள்ளவர்கள் என்றாலும் என் வளர்ச்சிக்காக நிறைய உழைத்தார்கள். என் தந்தை தனது செயல்களால் எனக்கு முன்னுதாரணமாக விளங்கினார். அவர் நன்கு கற்றவர். எங்கள் வீட்டில் ஒரு நூலகமே வைத்திருந்தார். எனது தாயார் தனது அலுவல்களை விட்டுவிட்டு நான் போட்டிகளில் கலந்து கொள்ளச் செல்லும் போது எனக்குத் துணையாக வந்து, பலமணி நேரம் காத்திருந்து என்னை அழைத்துச் செல்வார். அ.ச.ஞானசம்பந்தனார் அவர்களும் என்னைப் பலவிதங்களில் ஊக்குவித்தார். கம்பன் கழகங்களுக்கும் என் வளர்ச்சியில் மிக முக்கிய பங்குண்டு.

நீதிபதி திரு. மு.மு. இஸ்மாயில் அவர்களை என்னால் மறக்க முடியாது. பட்டிமன்றங்களில் புதுமையையும், புரட்சியையும் கொண்டு வந்தவர் அவர். சர்வதேச இளைஞர்கள் விழா கொண்டாடப்பட்ட சமயத்தில், எங்களைப் போன்ற இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர் கம்பன் கழகப் பட்டிமன்றங்களில் எங்களைப் பேச வைக்க ஏற்பாடு செய்தார். பலத்த எதிர்ப்பையும் மீறி, எங்களைப் போன்றவர்களின் திறமைமீது அவர் நம்பிக்கை வைத்தது வீண் போகவில்லை. அப்போதைய தமிழ் இலக்கிய தளத்தில் அது மிகப் பெரிய பரபரப்பை உண்டு பண்ணியது. ஆர்.எம்.வீ அவர்களும் இளைஞர்கள் ஆண்டு அரசு விழாவாகக் கொண்டாடப்பட்ட போது, எங்களை ஊக்கு வித்துப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெறச் செய்தார். பல கால கட்டங்களில் பல சான்றோர்கள் உறுதுணையாக இருந்தனர்.

கே: உங்களின் முன்மாதிரி அல்லது வழிகாட்டி என்று நீங்கள் யாரைச் சொல்வீர்கள்? ஏன்?

ப: அ.ச. ஞானசம்பந்தன் அய்யா அவர்கள் இலக்கியத்தைப் பற்றி நான் விவாதிக்கும் போது, உனது பார்வை வித்யாசமாக இருக்கிறது என்று கூறி என்னை ஊக்குவிப்பார். மேடைகளில் அதுபற்றிப் பேசுமாறு கூறி உற்சாகப்படுத்துவார். ஆன்மிகத்தைப் பொறுத்தவரையில் நான் மிக முக்கியமானவராகக் கருதுவது காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களைத் தான். ஆசி பெறுவதற்காக ஒவ்வொரு முறை நான் ஸ்ரீமடத்துக்குச் செல்லும் பொழுதும், கிரந்தங்களில் இருந்தும், பல்வேறு ஆன்மிக இலக்கியங்களில் இருந்தும் உதாரணங்களைக் கூறி, அவற்றையெல்லாம் கற்குமாறு என்னை ஊக்கப்படுத்தியவர் அவர்தான். ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் அவ்வாறே என்னை ஊக்கப்படுத்துபவராக இருந்தார். இவர்களைத்தான் நான் என் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவர்களாகக் கருதுகிறேன்.

கே: தென்றல் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

ப: எங்கோ தொலைதூரத்தில் கடல் கடந்து வாழ்ந்தாலும், இந்த மண்ணின் வேரை, கலாசாரத்தை, பண்பை விட்டுக் கொடுக்காமல் வாழும் தென்றல் வாசகர்களுக்கு எனது வணக்கங்கள். அவர்களது இந்தப் பண்பும் தேசப்பற்றும் மேலும் வளர்ந்து, அது பாரதத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கும், தென்றல் வாசகர்களுக்கும் எனது நன்றியும் வணக்கமும்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்
Share: 
© Copyright 2020 Tamilonline