Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிறுகதை
நாச்சியார் பொம்மை
- அம்புஜவல்லி தேசிகாச்சாரி|அக்டோபர் 2007|
Share:
Click Here Enlargeஒரு நிமிட நேரம் கண் இமைக்கவும் மறந்து நின்றுவிட்டாள் மாலினி.

'மம்மீ, இந்த டாலைப் பாரேன்; சீதர் அங்கிள் வீட்டிலே கொலுவிலே பார்த்தோமில்லே!' ஆச்சரியக் கூக்குரலிட்டாள் ஐந்து வயது நீரஜா என்கிற நீருக்குட்டி.

இடம் தருமமிகு சென்னை மாநகரின் ஏதோ ஒரு அவென்யூ. அறை முழுவதும் வைக்கோலும் பழந்துணிகளும் சிதறிக் கிடக்க, வீடே பிரித்துப் போட்ட சர்க்கஸ் கூடாரம் போல் காட்சியளித்தது. வேறொன்றுமில்லை; வரப்போகும் நவராத்திரியை முன்னிட்டுப் பரணிலிருந்து பொம்மைப் பெட்டியை இறக்கி வைத்துத் தயார் செய்துகொண்டிருந்தனர் வீட்டுப் பெண்மணிகள். அவர்கள் மும்முரமாக வேலை செய்யட்டும்; சற்று அவர்களை அறிமுகம் செய்துகொள்வோம்.

சென்னை மாநகரில் புதிதாக முளைத் திருக்கும் மென்பொருள் கம்பெனியொன்றில் கணிசமான சம்பளத்துடனும், வாழ்க்கைத் துணையாக வாய்த்த சுகுணா, இரண்டு வயது மகன் சித்தார்த், தாய் ரங்கம் எனச் சிங்காரக் குடித்தனம் செய்து வருகிறான் பார்த்தா என்ற பார்த்தசாரதி. அவனுடைய ஒரே தமக்கை மாலினி. அமெரிக்க மண்ணில் ஏதோ ஒரு மகா பெரிய கம்பெனியின் உயர்நிலை அதிகாரியான முரளிக்கு 'வாக்கப்பட்டு' இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை தாய் நாட்டைத் தரிசிக்க வருபவள். இம்முறை திருச்சியிலிருக்கும் மைத்துனர் கல்யாணமும் சேர்ந்து கொள்ளவே, கணவருடன் வந்திருக்கிறாள். இதுவரை விசேஷமாக ஒன்றும் சொல்லவில்லையே என்று தோன்றுகிறதா? இதோ வருகிறது.

வெளிநாட்டிலிருந்து வரும் மிகப்பல நாரீமணிகளைப்போல் டாலரில் சம்பாதித்து ரூபாயில் செலவழிப்பதும், வழக்கமான பாபாலால், உம்மிடியார், நாயுடு ஹால், ஸ்பென்ஸர், சிலபல கலைப்பொருட் கடைகள் என்று ஷாப்பிங் செய்துவிட்டு, ஓரிரு நட்சத்திர உணவு விடுதிகளில் அவ்வப்போது உணவருந்தி விட்டும் திரும்பினால்தான் பிரச்னையில்லையே? ஒவ்வொரு முறை வரும் பொழுதும் ஏதோ தான் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தது போல் 'ஏ.ஸி. உறைக்க வேயில்லை, நல்ல ஆட்டோமாடிக் வாஷிங் மெஷின் வாங்கக் கூடாதா; பாஸ்தாவும், பேகலுமாகச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு பருப்பும் சாதமும் பிடிக்கவேயில்லை (அதுகள் சாதம் கலந்த கிண்ணத்தைக் கூட ஒட்ட வழித்து அனுபவித்துச் சாப்பிடுங்கள்!).

தம்பியின் திருமணம் முடிந்த பின்னும் சில குடும்ப விவகாரங்களைக் கவனிக்க வேண்டி முரளி திருச்சியிலேயே தங்கி விட்டு ஊர் திரும்ப இரண்டு நாட்கள் முன்பு வருவதாக இருந்தார். ஊர் திரும்பியதும் மாலினியும் ஒரு வேலையில் அமரும் எண்ணமிருந்ததால் ரங்கத்தையும் உடன் அழைத்துச் செல்ல உத்தேசித்திருந்தாள். வழக்கம் போலக் காட்டு தர்பார் நடத்திக்கொண்டு மாலினி செங்கோலோச்சி வந்தாள்.

அன்று காலை ரங்கம் தான் புதுக் கலகத்தை ஆரம்பித்து வைத்தாள். 'பார்த்தா, நீ நாளை முதல் டூரிலிருப்பாய்; நவராத்திரிக்கு முன் திரும்ப முடியாதென்றாயே. பரணிலிருந்து பொம்மைப் பெட்டியை இறக்கிக் கொடு; கொலு வைக்கத் தயாராக வைத்து விடுகிறேன். நானும் கிளம்பிவிட்டால் சுகுணா ஒண்டியாகச் செய்ய சிரமப் படுவாள்' என்று கரிசனத்துடன் கூற, பொம்மைப் பெட்டி கீழிறக்கப்பட்டு, வீடு மேற்கூறிய விதம் காட்சியத்துக் கொண்டிருந்தது.

மாலினி வெளிநாடு சென்றபின் நவராத்திரி சமயம் வர நேராததால், புதிதாகச் சேர்ந்த பொம்மைகளை ஆராய ஆரம்பித்தாள். 'கருட சேவை செட் காஞ்சீபுரத்துக்கே போய்ட்டாப் போலிருக்கு; சென்னபட்ணா செட் எப்போ வாங்கினேம்மா? ராஸக்ரீடை அம்சமாக இருக்கு' என்று விமர்சனங்களை அடுக்கிய வாறிருந்த மாலினி அந்த நாச்சியார் பொம்மையைப் பார்த்ததும் அப்படியே பிரமித்து விட்டாள். ஒரு கை முஷ்டியளவு மண்ணில் தன் கைவண்ணம் முழுதும் காட்டி விட்டிருந்தான் அதைச் செய்த கலைஞன். அது சாதாரண பொம்மை மாதிரியே இல்லை. திருத்தமான நாசியும், உலகையே சுழட்டித் தன்னுள் அடக்கிக் கொண்டுவிடுவது போன்ற அகன்ற விழிகளும், கிள்ளுக் கிள்ளாகக் கொசுவம் வைத்த புடவை மடிப்பும், தோளிலமர்ந்து ரங்கன் புகழைப் பாடுவது போல் சாய்ந்த நிலையில் பச்சைக் கிளியும், அதை ரசிப்பது போன்ற மந்தஹாச முறுவல் அலங்கரிக்கும் கொவ்வை இதழ்களும்...

'இரண்டு வருஷம் முன்னாடி சுகுணாவோட கடலூர் சித்தி அவளுக்குப் பண்ருட்டியி லிருந்து வாங்கி வந்தாள். போன வருஷ கொலுவில் இதைப் பாராட்டாதவர்களே இல்லை' என்று அதன் விருத்தாந்தத்தைக் கூறினாள் ரங்கம்.

'சுகுணா, எனக்கு இதைக் கொடுத்து விடேன். இந்த வருஷம் என் வீட்டுக் கொலுவில் இந்தப் பொம்மை இருக்கட்டும்' என்று தானே தீர்மானம் செய்து அறிக்கையும் விட்டுவிட்டாள் மாலினி.

'இந்த மாதிரி பொம்மை பண்ருட்டியிலேயே ஒரு குடும்பம்தான் செய்கிறதாம். எனக்காக ஆர்டர் கொடுத்து வாங்கினாள் சித்தி. பிழைத்துக் கிடந்தால், நான் கடலூர் போகும்போது உங்களுக்காக ஒன்று வாங்கி வைக்கிறேன்; அடுத்த வருஷம் லீவில் வரும்போது எடுத்துப் போகலாம்' என்றாள் சுகுணா. மனைவியின் சங்கடத்துக்குக் கை கொடுக்க முன்வந்தான் பார்த்தா. 'அக்கா, இது அவளுக்குப் பரிசாக வந்தது. அதைப் போய்க் கேட்கிறாயே. அடுத்த நவராத்திரிக் குள் உனக்காக வேறு வாங்கித் தந்து விடுகிறேன்' என்று அவனும் தன் பங்குக்கு வாக்களித்தான்.

'ஆம்..மாம் ஏதோ உங்க சொத்தையே கேட்டுட்டாப்பலே இதைக் கொடுக்க ஆளாளுக்கு ஆயிரம் சாக்கு சொல்லுங்க' என்று முகத்தை முழநீளம் தூக்கி வைத்துக்கொண்டு விருட்டென்று அங்கிருந்து விலகினாள் மாலினி. 'ஏம்மா சுகுணா, நவராத்திரிக்குத்தான் இன்னும் பத்து நாளுக்கு மேலிருக்கே. உன் சித்திக்கு போன் செய்தால் வாங்கி வர மாட்டாளா? இதை அவளுக்குக் கொடுத்துவிடேன்' என்று மகளுக்குப் பரிந்து வந்தாள் ரங்கம். மகளின் பிடிவாதம் அவளுக்குத் தெரியாதா? மேலும், தானும் அவளுடன் சென்று இருக்க வேண்டுமே! இதையே வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் காட்டிக் குதறி விடுவாளே என்ற கவலையும்தான்.
மாமியார் தன் மகளின் பிடிவாதத்துக்குப் பரிந்து வந்தது சுகுணாவின் மனதைப் பாதித்து விட்டது. மெளனமாக மீதி பொம்மைகளை எடுத்து வைத்து, அந்த இடத்தை சுத்தம் செய்தாள். அடுத்த இரண்டு நாட்களும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலே பொழுது கழிந்தது. 'சுகு, நீயாவது விட்டுக் கொடுக்கக் கூடாதா? ஏதோ ஒரு வீட்டுக் கொலுவில் அந்தப் பொம்மை இருந்து விட்டுப் போகட்டுமே' என்று பார்த்தா பலவிதங்களிலும் மனைவியை சமாதானப் படுத்தி ஒருவாறு நாச்சியார் பாஸ்போர்ட், விசா எதுவுமில்லாமலே மாலினி குடும்பத்துடன் அமெரிக்கா பயணப்பட்டு விட்டாள்.

ஊர் திரும்பியவுடனே விரைவில் சேர வேண்டிய வேலை விஷயமாக மும்முரமாக அலைந்து கொண்டிருந்தாள் மாலினி. குழந்தை நீரு அரைநாள் பள்ளிக்குச் சென்றுவிட்டு, பகலில் சற்றுத் தூக்கம், சற்று விளையாட்டு, பின் வழக்கமான கார்ட்டூன் என்று பொழுதைக் கழித்துக் கொண்டிருந் தாள். சின்னவள் மீரா இன்னும் பள்ளி செல்லும் வயதடையாததால் சற்று விளையாட்டு, சற்று டி.வி. என்று வீட்டைச் சுற்றி வந்துகொண்டிருந்தாள். ஒரு வாரத்தில் நவராத்திரி வந்து விடுவதால் ஊரிலிருந்து கொண்டுவந்த நாச்சியார் பொம்மை மூலையில் ஒரு குட்டி மேஜைமேல் வைக்கப் பட்டிருந்தது. மாலினி போகவர அதைப் பார்த்துப் பெருமைப் பட்டுக் கொண்டாள். கொலுப்படியில் நட்டநடுவில் கிளி கொஞ்ச நிற்கும் நாச்சியார் பொம்மைக்குக் கிடைக்கப் போகும் பாராட்டை இப்போதே மனதில் முன்னோட்டம் விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த வார இறுதியில் மாப்பிள்ளை முரளியின் அலுவலகத் தோழன் - வட இந்தியன் - குடும்பத்துடன் விருந்துக்கு வந்திருந்தான். அவன் மனைவியின் கண்ணில் முதலில் பட்டது நாச்சியார் தான். 'வாவ், ஹவ் ப்யூடி·புல்!' என்று பார்த்துப் பார்த்து வியந்தாள். அவளுடன் வந்திருந்த அவர்கள் மகள், மீராவுக்கு ஈடானவள், பொம்மையைப் பார்த்தவுடனே தனக்கு வேண்டுமென்று அழ ஆரம்பித்துவிட்டாள். வேறு ஏதேதோ விளையாட்டுப் பொருட் களைக் கொடுத்தும் சமாதானமாகாமல் அழுது அழுது முகமெல்லாம் வீங்கிச் சோர்ந்து விட்டாள் குழந்தை. ஒரு கட்டத்தில் குழந்தையின் கையில் அந்தப் பொம்மையைக் கொடுத்து அது விளையாடுகையில் மேற் பார்வை பார்த்துக் கொண்டு பெரியவர்கள் நிற்க வேண்டியதாயிற்று.

மீரா மட்டும் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாளா? அவளும் பிடிவாதத்தில் அம்மாவுக்கேற்ற வாரிசாயிற்றே. விறுவிறு வென்று ஓடி வந்து அக்குழந்தையின் கையிலிருந்த பொம்மையை இழுக்க, சுவற்றில் பலமாக மோதி, ஒரே செகண்டில் பொம்மையின் கொண்டை தெறித்து விழுந்தது. விருந்தினர் மீண்டும் மீண்டும் வருத்தம் தெரிவித்துவிட்டு ஒருவழியாகச் சென்றனர். மாலினியின் முகத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை.

நவராத்திரியும் வந்து கொலு வைத்தாகி விட்டது. பின்னமான நாச்சியார் பொம்மை மீராவின் விளையாட்டுச் சாமான்களுடன் சேர்ந்து ஒரு மூலையில் கிடந்தது. ஊருக்குப் போன் செய்து ரங்கம் பேசிக் கொண்டிருந் தாள். 'அம்மா, இங்கேயும் சித்தியிடம் சொல்லி புது நாச்சியார் பொம்மையும், கூட மீனாட்சியம்மன் ஒன்றும் செய்து வாங்கி விட்டேன். இரண்டும் கொலுவுக்கே நடுநாயகமா இருக்கு. அங்கே புது பொம்மையுடன் கொலு அமர்க்களமாக இருக்கா?' விசாரித்தாள் சுகுணா. 'ஹூம்... அமர்க்களத்துக்கு என்ன குறைச்சல்' என்று நினைத்துக் கொண்டாள் ரங்கம்.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி
Share: 
© Copyright 2020 Tamilonline