Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
இலக்கியம்
நிலம் பெயர்ந்தாலும் நீங்காத தொடர்பு
- பெரியண்ணன் சந்திரசேகரன்|ஜூலை 2006|
Share:
Click Here Enlargeகுறிஞ்சி மலைநாட்டுச் சிறுகுடியில் வாழும் தலைவனும் அருகில் உள்ள சிற்றூரில் வாழும் தலைவியும் காதலில் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறிருக்கும் பொழுது தலைவியின் தோற்றத்தில் பசலை போன்ற மாறுதல் அறிகுறிகளையும் அவர்கள் மறைமுகமாகக் கூடுதல் போன்றவற்றையும் கொண்டு ஊர்ப்பெண்கள் சிலர் தங்கள் வெம்மையான வாயினால் சலசலத்தனர்; அவர்களின் அந்தப் பேச்சைக் கவ்வை அல்லது அம்பல் என்று வழங்குவர். அது கேட்டு வருத்தமுற்ற தலைவிக்கு அவள் தோழி சொல்லிய மிடுக்கும் உறுதியும் கலந்த ஆறுதற் சொற்களைக் கேட்போம் குறுந்தொகைப் பாட்டொன்றில் இங்கே. மதுரைக் கொல்லன் புல்லன் என்னும் சங்கக்கவிஞர் ஈராயிரம் ஆண்டுகள் முன்பு பாடியது இப்பாட்டு.

ஊகக் கருங்குரங்கு திறந்த பலா:

தோழி தலைவனின் மலைநாட்டைப் பற்றிக் குறிப்புப் பொதியப் பேசுகிறாள். அங்கே நீண்ட மயிரையும் கூரிய பற்களையும் கறுத்த விரலையும் கொண்ட ஊகம் என்னும் வகையினதான கருங்குரங்கின் ஏற்றை (ஆண்) பலாமரத்தில் ஏறி விளையாடுகின்றது. அப்பொழுது அது பலாக் கனியை ஒரு பக்கத்தில் தோண்டிப் பழம் திறந்து உடைந்து அதன் கனிந்த சுளைகளின் இனிய நாற்றம் கிளம்புகிறது. அந்த நறுநாற்றம் சிவந்தபூக்களைப் பூக்கும் காந்தள் என்னும் பூஞ்செடி செழித்த சிறுகுடியில் கமழுகின்றது. அத்தகைய ஓங்கிய மலைநாட்டவன் தலைவன்.

"...நீடுமயிர்க்

கடும்பல் ஊகக் கருவிரல் ஏற்றை
புடைத்தொடுபு உடைஇப் பூநாறு பலவுக்கனி
காந்தளம் சிறுகுடிக் கமழும்
ஓங்குமலை நாடன்" (குறுந்தொகை: 373:4-8)

[கடும் = கூர்; ஊகம் = கருங்குரங்கு வகை; ஏற்றை = ஆண்; புடை = பக்கம்; தொடுபு = தொட்டு, தோண்டி; உடைஇ = உடைந்து]

இங்கே ஊகக்குரங்கின் செயலைச் சொல்வதன் குறிப்பை நாம் கவனிக்கவேண்டும். எட்டடிக் கவிதையில் பாதியைத் தலைவன் ஊரை வெற்றே விவரிக்கக் கவிஞர் வீணடிப்பதில்லை. அவை மறைமுகமாக சில கருத்துகளைச் சொல்ல உள்ளன.

அந்தக்காட்சியில் ஊகம் தலைவனாகவும் பலாக்கனி தலைவியும் ஆவர்! ஊகம் பலாவைத் தொட்டதால் பாலமணம் ஊரில் கமழ்வதுபோல் தலைவன் தலைவியோடு தொடர்பு கொண்டதால ஊரில் கவ்வைப் பேச்சு ஒலிக்கிறது என்பது குறிப்பாகும்.

தலைவனுடன் நட்புக் கெடாது

"ஊரில் சில பெண்களின் வாய் வெம்மையானதுதான்; அது நெஞ்சைச் சுடுவதுதான். ஆனால் அவர்களின் வாய் கிளக்கும் கவ்வைப் பேச்சுக்கு அஞ்சித் தலைவனுடன் உள்ள நின் காதல் கேடு எதுவும் உடையதோ? இல்லை!" என்று ஊக்கம் ஊக்குகிறாள் தோழி:

"நிலம்புடை பெயரினும் நீர்தீப் பிறழினும்
இலங்கு திரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வை அஞ்சிக்
கேடுஎவன் உடைத்தோ, தோழி! ...
ஓங்குமலை நாடனொடு அமைந்தநம் தொடர்பே!"
(குறுந்தொகை: 373-1-4, 8)

[புடை = பக்கம், இடம்; இலங்கு = ஒளிர்தல்; வெவ்வாய் = வெம்மையான வாய்; கவ்வை = பேச்சு; எவன் = ஏன்; உடைத்து = உடையது]
பூகம்பத்தால் நிலம்நடுங்கி இடம் பெயர்ந்தாலும் நீர் தன் குளிர்த்தன்மை கெட்டுத் தீயாகப் பிறழ்ந்தாலும் ஒளிரும் அலைகொண்ட பெருங்கடல் சுருங்கி அக்கரை தோன்றினாலும் ஓங்குமலைநாட்டுத் தலைவனோடு அமைந்த தொடர்பு கெடாது! எவ்வளவு பெரிய இடைஞ்சல் நேரினும் உடலுக்கும் உயிருக்கும் அஞ்சிக் கலங்காமல் தொடரும்.

மேலும் அவர்கள் காதல் நிலத்தையும் நீரையும் கடலையும் அளவில் விஞ்சியது என்பதையும் தோழியின் சொல் குறிக்கிறது. அவ்வாறு தலைவனோடு தலைவிக்கு உள்ள நட்பின் அளவை நிலத்தொடும் நீரொடும் வெளிப்படையாக ஒப்பிட்டுப் பாடும் பாட்டுக் குறுந்தொகையில் உண்டு:

நிலத்தினும் பெரிதே! வானினும் உயர்ந்தன்று!
நீரினும் ஆர்அளவின்றே! சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே!
(குறுந்தொகை: 3: தேவகுலத்தார் பாடியது)

[உயர்ந்தன்று = உயர்ந்தது; ஆர் = அரிய; அளவின்று = அளவினை உடையது, அளவினது என்பதன் மாற்று; நல்லது என்பதை நன்று என்பதுபோல்]

"மலைச்சாரலில் கரிய கொம்புகளைக் கொண்ட குறிஞ்சிமரத்தின் பூவைக்கொண்டு தேனை வண்டுகள் இழைக்கும் நாடனொடு அமைந்த நட்பு, நிலத்தினும் பெரிது! வானத்தினும் உயர்ந்தது! நீரினும் அளப்பதர்கு அரிய அளவை உடையது!" என்று ஐம்பூதங்களில் மூன்றினை மிஞ்சிய வலிமை உடையதாகச் செந்தமிழ்ப் பண்பாடு கண்ட காதலை நாம் இங்கே காண்கிறோம். இந்தப் பாட்டை இனிய தமிழிசை இராகத்தில் இசைப்பது பொருந்தும். கேதாரகவுளை போன்ற மிடுக்கான இராகத்தில் இசைப்பது இந்தப் பாட்டின் கருத்துக்கு இயையும்.

பெரியண்ணன் சந்திரசேகர்
Share: 
© Copyright 2020 Tamilonline