Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | சிறப்புப் பார்வை | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | Events Calendar
எழுத்தாளர் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | கவிதைப்பந்தல் | சமயம்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
மேற்கத்திய இசைக்கருவியில் கர்நாடக இசைவிருந்து
நிக்கோட்டின் அபாயம்
புகையை விரட்டிய தீர்ப்பு
அம்மா - உலக அன்னையர் தினம்
- சரவணன்|மே 2001|
Share:
Click Here Enlargeஉலக அன்னையர் தினம். குறிப்பிட்ட நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னமே தொலைக்காட்சி, வானொலி என மனிதனின் மகத்தான கண்டுபிடிப்புகள் அனைத்தும் போட்டி போட்டு 'உலக அன்னையர்'களை குளிர்விக்கப் புறப்பட்டுவிடும். அன்னையர்கள் பெற்ற அருந்தவ மக்களும் தேடிப் பிடித்து அந்த ஒரு நாளில் மட்டும் அம்மாக்களுக்குச் சேவை செய்வதைப் பிறவிப் பயனாக நினைக்கத் தொடங்கி விடுவர். (இங்கே 'அம்மா; என்ற சொல் தமிழக அரசியல் கலவாதது).

தமிழர்களின் வாழ்வில், வரலாற்றில் அன்னையர்களுக்கு இதற்கு முன்னர் விழாக்கள் எடுக்கப்பட்டிருக்கிறதா? சல்லடை போட்டுத் தேடினாலும், சிறு குறிப்பைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக அம்பை சொல்வது போல, தன் வாழ்நாளில் ஒரு லட்சம் தோசைகள் வார்த்தவளாகவே அம்மாக்களை இனம் காண முடிகிறது. எட்டுக்கு எட்டு அளவுள்ள வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையிலேயே அம்மாக்கள் இருந்திருக்கிறார்கள்.

அம்மாக்களின் உயர்ந்த பட்ச லட்சியம என்ன? ஆசைகள் என்ன? கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாலும் விடை என்னவோ குழந்தைகள் என்பதிலேயே முடிகிறது. குழந்தைகளின் வாழ்வைச் சுற்றியே அம்மாக் களின் வாழ்வும் கட்டப்பட்டிருக்கிறது. குழந்தை பெற்றால் மட்டுமே அவளுக்குப் பெயர் 'அம்மா'. இல்லாதபட்சத்தில் அவளுக்கு இச் சமூக அமைப்பில் குறைவுபட்ட இடமே வழங்கப் படுகிறது. வேண்டுமானால் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் அம்மா என்றழைத்துக் கொள்ளலாம்.

எல்லா குழந்தைகளும் ரஜினிகாந்த், பண்டரிபாய் போல இருந்து விட்டால், அன்னையர் தினத்தை ஞாபகப் படுத்த வேண்டியிருந்திருக்காது. (அம்மா என்றழைக் காத உயிரில்லையே என்கிற 'மன்னன்' படப் பாடலை நினைவுபடுத்திக் கொள்க;)

தமிழின் செவ்விலக்கியங்களை விட நாட்டுப்புற இலக்கியங்கள் அம்மா பற்றிய பதிவுகளை எதிர்மறையாகவேனும் சுட்டியிருக் கின்றன. செவ்விலக்கியப் பதிவுகளில் 'அம்மா' பற்றி ஒரே விதமாகவே வெளிக்காட்டப் பட்டிருக்கின்றன. காதலனுடன் ஓடிப் போன தன்னுடைய மகள் போகும் பாதையில் என்னவிதமாகத் துன்பப்படுவாளோ! அவளால் வெயிலைத் தாங்க முடியுமா? என்றளவிலேயே அம்மாக்கள் சிந்தித்திருப்பதாக அக் காலத்திய புலவர்கள் வரையறுத்திருக்கின்றனர். மிஞ்சிப் போனால் மகள் சென்ற பாதையிலுள்ள மரங்களைப் பார்த்துப் புலம்புவதற்கு அனுமதிக் கப்பட்டிருக்கிறாள். மறந்துங்கூட தன்னுடைய துன்பங்கள் குறித்து அப்பாக்களிடம் புலம்பி யிருக்கவில்லை.

ஆனால் நாட்டுப்புறப் பாடல்கள் என்று வரும் போது அம்மாக்களின் புலம்பல்கள் நேரடி யாகவே ஒலிக்கின்றன.

"கிண்ணியிலே போட்ட சோற்றை
கீறித் தின்னப் பிள்ளையில்லை
ஊருக்குப் போகையிலை
உடன்வரப் பிள்ளையில்லை"

என்று அம்மாக்கள் குழந்தையின்மை குறித்துப் பாடுவதாக நாட்டுப்புறப் பாடல்கள் தெரிவிக் கின்றன. இப் புலம்பல் ஒரு கட்டத்தில் அவளைக் குற்றம் சாட்டும் நோக்கில் திரும்புவதை,

"பூக்கிற காலத்திலே
பூ மாறிப் போனேனே
காய்க்கிற காலத்திலே
காய் மாறிப் போனேனே"

என்ற வரிகள் எடுத்துக் காட்டுகின்றன. குழந்தை வரம் பெறுவதற்காகத் தான் பட்ட கஷ்டங்களை,

"எட்டாத கோவிலுக்கு
எட்டி விளக்கேற்றி
தூரத்துக் கோவிலுக்குத்
தூண்டா விளக்கேற்றி]
சோதி பரதேசிகளுக்குத்
தூமடமும் கட்டி வைத்து"

என்று பாடல்களில் வெளிப்படுத்துகிறாள். இவ்வளவு கஷ்டப்பட்டுத் தான் பெற்ற பிள்ளையை அவள் சீராட்டும் விதமே அலாதி தான்.

"மாசிப் பிறையோ நீ வைகாசி மாங்கனியோ
தேசப் பிறையோ நீ தெவிட்டாத மாங்கனியோ
எங்கள் குலம் மங்காமல் எதிர்குலத்தார் ஏசாமல்
தங்கமலி பொக்கிஷத்தைத் தானாள வந்த கண்ணோ"

என்று சீராட்டித் தன்னுடைய குழந்தையைத் தாலாட்டுகிற அவள்,

"கடைக்குக் கடை பார்த்துக்
கல்லிழைத்த சங்கெடுத்துச்
சுத்திச் சிகப்பிழைத்துத்
தூருக்கே பச்சை வைத்து
வாங்கி வந்தார் தாய்மாமன்
வெள்ளியால் செய்த ஏட்டில்
வைர எழுத்தாணி கொண்டெழுத
பள்ளியில் சேர்க்க மாமன்
பருவுடன் வந்திடுவார்"

என்று பாடுகிறாள்.
குழந்தைகளின் பிறப்பு, வளர்ப்பு, திருமணம், பேரன் - பேத்திகள்... என அம்மாக்களின் வாழ்வு முழுவதும் இந்த வட்டத்திற்குள்ளாகவே சுற்றி முடிந்து விடுகின்றது.

கொஞ்சம் பின்னோக்கிப் போய்ப் பார்த்தால், இந்தியச் சமூக வரலாற்றுப் பந்தயத்தில் பரிதாபமாக இடத்தைப் பறி கொடுத்து அம்மாக்கள் தோற்றுப் போன விசயம் தெரிய வரும். ஆரம்ப கட்டங்களில் தாய் வழிச் சமூக அமைப்பின் உயர்ந்த இடத்திலேயே அம்மாக்கள் இருந்தனர். அது பிற்பாடு உடமைப் பயன்பாடு போன்ற ஆணாதிக்கச் சிந்தனைகளெல்லாம் வேர்விட்ட பிறகே, படிப்படியாக முதன்மை ஸ்தானத்திலிருந்து இறக்கப்பட்டு சமையலறைக்குள் அடைத்து வைக்கப்பட்டனர்.

இந்த விதமான அதிகாரப் பறிப்பு குடும்பம் என்கிற அமைப்பை முன்னிறுத்தியே சாத்தியமாகியது. இதைப் பற்றி ஏங்கல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுவார்.

"இப்பொழுது ஆடவன் வீட்டில் மெய்யான ஆதிக்கத்தை நிறுவிவிட்ட படியால் அவனுடைய தனி ஆதிக்கத்திற்கு இருந்த கடைசித் தடையும் தகர்ந்து விட்டது. தாய் உரிமையை ஒழிப்பதன் மூலமாகவும் தந்தை உரிமையை அரங்கேற்றுவதன் மூலமாகவும், ஜதைத் திருமணம் ஏக ஸ்திரீ விவாகமாகப் படிப்படியாக மாறுவதன் மூலமாகவும் தந்தையின் ஏதேச்சதிகாரம் ஊர்ஜிதமாகி நீடித்தது"

தாய் உரிமையின் வீழ்ச்சியும் தந்தை அதிகாரத்தின் எழுச்சியும் வேத நூல்களில் மிகவும் வெளிப்படையாக விவரிக்கப்படவில்லை. ஆனால் இந்த மாறுதல்களைக் குடும்பத்தின் வளர்ச்சியில் சுலபமாகப் பார்க்க முடியும். தாய் உரிமையின் வீழ்ச்சி பற்றி ஏங்கல்ஸ் குறிப்பிடுகையில்,

"தாய் உரிமையின் வீழ்ச்சி, பெண்ணினத்திற்கு ஏற்பட்ட உலக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தோல்வியாகும். ஆடவன் வீட்டுக்கும் எஜமானான். பெண் சிறுமைப்பட்டு, அடிமையாகத் தாழ்த்தப்பட்டாள். அவள் அவனுடைய சிற்றின்ப இச்சைக்கு அடிமையானாள். குழந்தைகளை உற்பத்தி செய்யும் வெறுங் கருவியாக ஆனாள்" என்பார்.

ஆக நாட்டுப்புற வெளிப்பாடுகளும் இந்தியத் தத்துவ மரபு சார்ந்த காலகட்டத்தின் வெளிப்பாடுகளும் அன்னையை குழந்தை பெறுவதற்குண்டான கருவியாகவே பார்த்து வந்திருக்கின்றன என்பது விளங்குகிறது. தற்சமயம் நம்மிடையே பரிச்சயமாகியுள்ள நவீன வாழ்க்கை முறை பெண்களுக்கு குறிப்பாக அம்மாக்களுக்குச் சுதந்திரமான இடத்தைத் தந்துள்ளதாகக் கற்பனைகள் நிலவுகின்றன. ஆனால் அது உண்மையல்ல என்று பல்வேறு பெண்ணிய அமைப்புகளும் கோடிட்டுக் காட்டுகின்றன. இன்றளவும் தமிழகத்தின் தென்கோடிக் கிராமங்களில் சமையலறையை விட்டு வெளியே வராத நிலை தொடர்வது வருத்தமளிக்கக் கூடியது. இன்னும் கிராமத்தை விட்டு அடுத்த ஊருக்கோ நகர்ப் புறத்துக்கோ வாழ்நாளில் ஒரு முறை கூட பயணம் செய்யாத தாய்மார்களும் இருக்கிறார்கள். மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த நிலைமை கண்கூடாகத் தெரிய வருகிறது.

மதுரைப் பகுதிகளில் "உங்க வீட்டில் மீனாட்சி ஆட்சியா? சொக்கநாதர் ஆட்சியா?" என்று கேள்விகள் எழுப்புவர். இந்தக் கேள்வியின் உள் அர்த்தம் தாய் ஆதிக்கம் செலுத்துகிறாளா? தந்தை ஆதிக்கம் செலுத்துகிறாரா? என்பதுதான். தாய் ஆட்சி செலுத்துவதாகச் சொன்னால் கௌரவக் குறைச்சலாய்க் கருதும் நிலையும் இருக்கிறது. 'வினையே ஆடவர்க்கு உயிர்' என்றவாறே கிராமப் புறங்களில் நிலையிருக்கிறது. பிள்ளைகளைக் கவனித்தல், பெண் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்த்தல் ஆகிய பணிகளே தாய்மார்களுக்குப் பிரதானமாக உள்ளது. ஒரு பெண் குழந்தை தவறு செய்தால், அந்தத் தவறுடன் தாயைச் சம்பந்தப்படுத்திப் பேசும் நிலையுமிருக்கிறது. ஆண் பிள்ளைகள் தறுதலையாய் அலைவதற்கும் தாயின் நிலைக்கும் சம்பந்தமிருப்பதாகக் கருதுகின்றனர்.

இத்தகைய கிராமப்புறங்களில் அன்னைக்கு சமைத்தல் தொழிலே தவிர்க்கமுடியாத கடமையாக உள்ளது. அதிகப் பட்சமாக சில வருடங்களுக்கு முன்பே பொழுது போக்கிற்காகத் தொலைக்காட்சிகள் பார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். நகர்ப்புறங்களில் இந்த நிலையில் சற்று மாற்றங்கள் காணப்படுகின்றன. நகர்ப் புற தாயார்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள சுதந்திரமும் கயிற்று முனையில் கட்டப்பட்டிருக்கும் மாட்டைப் போன்றதுதான். கயிற்றின் நீளம் வரைக்கும் மட்டுமே அவர்களால் போய் வரமுடியும். கயிறு இல்லாமல் அவர்களால் ஒரு எட்டுகூட நகர முடியாத நிலையே இருக்கிறது.

நகர்ப் புறத்தில் வேலைக்குப் போகும் தாய்மார்கள் பொறுப்பற்றவர்களாக, அழகைப் பேணுபவர்களாக, அடங்காப் பிடாரிகளாக ஊடகங்களால் சித்திரிக்கப்படுகின்றனர். அப்படி வேலைக்குப் போகும் தாய்மார்களின் பிள்ளைகள் அன்புக்கு ஏங்கி ரௌடிகளாக மாறிப் போவதாகவும் சித்திரிக்கின்றன. ஆக நவீன வாழ்க்கை முறையிலும் குழந்தைகள் வளர்ப்பதே தாயின் கடமையாகச் சித்திரிக்கப்படுகிறதை விளங்கிக் கொள்ளலாம்.

அன்னையர் தினக் கொண்டாட்டங்கள் இந்த பல நூற்றாண்டு நிலையை மாற்றுவதாக இருந்தால் வரவேற்கப்பட வேண்டியது. உயர்தர மற்றும் மத்தியத் தர மக்கள் மட்டுமே கொண்டாடும் விழாவாக இருக்கிற பட்சத்தில், விழா கொண்டாடப்படுவதற்கான நோக்கமே அடிபட்டுப் போகும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு வேலைநிமித்தமாகச் சென்றுள்ள தமிழர்கள் ஆங்கிலமயமான விழாக்களைத் தமிழ்ப்படுத்திக் கொண்டாடுவது தவறில்லை. தமிழ்நாட்டில் அம்மாக்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தமிழகத்தி முதியோர் இல்லங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான தாய்மார்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் பணிபுரிபவர்களாக இருக்கின்றனர் என்கிற தகவல் அதிர்ச்சியூட்டுகிறது. தங்களுடன் தாயார்களை அழைத்துச் செல்ல முடியாததற்குக் காரணமாக சீதோஷ்ண நிலை சொல்லப்படுகிறது. ஆனால் அதில் கொஞ்சம் தான் உண்மையிருக்கிறது. தேவையற்ற சுமையையே இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.

அன்னையர் தினக் கொண்டாட்டங்கள் உண்மையிலேயே அன்னையர்கள் வாழ்வில் சந்தோசத்தைக் கொண்டு வந்தால், அதை விடச் சந்தோசம் இந்த உலகத்தில் வேறெதிலும் இருக்க முடியாது.

சரவணன்
More

மேற்கத்திய இசைக்கருவியில் கர்நாடக இசைவிருந்து
நிக்கோட்டின் அபாயம்
புகையை விரட்டிய தீர்ப்பு
Share: 
© Copyright 2020 Tamilonline