Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | விளையாட்டு விசயம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மாயமாய் மறைந்த மெமரிகள்
- கதிரவன் எழில்மன்னன்|பிப்ரவரி 2002|
Share:
(முன் கதைச் சுருக்கம்: Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, எதேச்சையாக யாரோ ஒருவரின் வீட்டில் நகை காணாமல் போன போது, துப்பறிந்துயார் எடுத்தது என்று கண்டு பிடித்து விடுகிறார். அன்றிலிருந்து அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, சூர்யா முதலில் பொழுது போக்காகவும், பிறகு முழு நேரமாகவும் துப்பறிய ஆரம்பிக்கிறார். வக்கீல் நிறுவனம் வைத்திருந்த அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண் MBA படித்து பங்கு வர்த்தகம் புரிபவன். ஆனால் துப்பறியும் ஆர்வத்தால் சூர்யாவிடமே நிறைய நேரம் செலவழிக்கிறான்! அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ்! ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். அவ்வப்போது தேவைப் படும் போது மட்டும் சூர்யாவுக்கு உதவுகிறாள்.

சூர்யாவுக்கு, அவரது நண்பன் குமாரிடமிருந்து ஒரு கலவரமான மின்னஞ்சல் வந்தது. குமாரின் நிறுவனம் தயாரித்து வந்த 3D ஹோலோக்ரா·பிக் மெமரிகள் சில காணாமல் போய்விட்டன, சில கெடுக்கப் பட்டு விட்டன. இன்னும் சில நாட்களுக்குள் சூர்யா மறைந்து விட்ட மெமரிகளைக் கண்டு பிடித்து கொடுக்காவிட்டால் குமாரின் நிறுவனமே சிதைந்து போய்விடக் கூடிய நிலைமை வந்து விடக் கூடும். கண்டு பிடிக்க, சூர்யாவும் கிரணும் சான்டா க்ளாராவில் உள்ள குமாரின் நிறுவனத்துக்கு வந்து சேர்கிறார்கள். மேலும் தொடர்வோம்:)

ரண் வழக்கம் போல தன் போர்ஷா மேல் யாரும் அவர்களின் கார்க் கதவு திறக்கும் போது இடித்து விடக் கூடாது என்பதற்காக கட்டிடத்தின் முன்னேயே நிறுத்தாமல் மற்றக் கார்களிடமிருந்து சற்று தொலைவில் நிறுத்தினான். இருவரும் கட்டிடத்துக்கு விரைந்து நடக்கும் போது சூர்யா சுற்றுப் புறத்தை ஒரு நோட்டம் விட்டார்.

குமாரின் நிறுவனத்தின் பெயர் ஹோலோஸ்டோர். அது Silicon Valley-இல் உள்ளப் பலப் பல நிறுவனங்களைப் போல ஒரு ஆரம்ப நிலை நிறுவனம் (start-up). அதனால், பார்க்க ஒன்றும் பிரமாதமாக இல்லை. ஒரு சுமாரான அலுவலகக் கட்டிடத்தில் ஒரு பகுதி. அதே கட்டிடத்தில் இன்னும் இரண்டு ஆரம்ப நிலை நிறுவனங்கள் இருந்தன. ஆனால், வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப் பட்டு, தனித் தனிக் கதவுகள் தான். அதை சூர்யா குறித்து வைத்துக் கொண்டார்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. அமெரிக்காவில் பெரும் பாலோர் காலையில் சர்ச் சென்று திரும்பிவிட்டு டெலிவிஷன் முன் அமர்ந்து, பீர் அருந்திக் கொண்டு ·புட்பால் தேவர்களுக்கு பூஜை செய்ய வேண்டிய நேரம்! இருந்தாலும் கட்டிடத்தின் முன் ஏகப் பட்ட கார்கள் நிறுத்தப் பட்டிருந்தன.

"Silicon Valley Culture" - சூர்யா தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார். தான் அந்தத் தொழிலில் இருந்த போது அதே போல வாரம் ஏழு நாட்களும் உழைத்த ஞாபகம் வந்தது.

"ஆமாம், இப்ப நமக்கு மட்டும் என்ன வாழ்ந்ததாம்?! அக்கடான்னுட்டு 49er ஆட்டம் இருக்கு, பாக்காம, நாம இங்க வந்திருக்கோமே?!" இது கிரணின் அங்கலாய்ப்பு!

சூர்யா ஒரு புன்னகையுடன் அவன் தோளைத் தட்டி விட்டு மேலே நடந்தார்.

ஹோலோஸ்டோர் இருந்த பகுதியின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர். ஒரு மிகச் சிறிய வரவேற்பறை. ஒரு மூலையில் ஒரு மேஜை, ஒரு ·போன். இன்னொரு பக்கம் இரண்டு நாற்காலிகள். அவ்வளவுதான்! யாரும் அங்கு இல்லை. உள்ளே போகும் கதவு மூடியிருந்தது. பேட்ஜ் வைத்து திறக்க வேண்டியது. சூர்யா செல் ·போனில் குமாரைக் கூப்பிட்டார். சில நொடிகள் கூட ஆகியிருக்காது. தடாரென உள்கதவு திறந்தது. குமார் அவசரமாக ஓடி வந்தார். சூர்யாவின் கையைப் பிடித்து குலுக்கிக் கொண்டே மூச்சிரைத்துக் கொண்டு வார்த்தை வார்த்தையாக சிந்தினார்.

"வெரி சாரி ... சூர்யா, காக்க ... வைச்சிட்டேனா?! இன்னிக்கு Sunday... இல்லையா, அதான், ரிசப்ஷனிஸ்ட்... இல்ல. பொதுவா கம்பனி... ஆளுங்கதான் பாட்ஜ் போட்டு வந்துடுவாங்க... எனக்கு மறந்தே போச்சு."

கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டார். "Thank God for Cell Phones! ஞாயிறும் அதுவுமா அவசரமா வந்ததுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சூர்யா! இது எவ்வளவு சீரியஸான விஷயம்னு உனக்குப் புரிஞ்சிருக்காது, இருந்தாலும் எனக்காக வந்துருக்கே..."

படபடப்புடன் பேசிக் கொண்டே போன குமாரின் பார்வை கிரணின் மேல் விழவே, அவரது குரல் சினிமாப் பாட்டுக் கடைசியில் தேய்ந்து போவது போல குறைந்து கொண்டே வந்து நின்றே விட்டது. சூர்யாவைப் பார்த்து அவரது புருவம் உயர்ந்தது.

"யாரிந்த பொடிப் பய?! இவனைப் போய் இங்க ஏன் இழுத்துட்டு வந்திருக்கே?"

அவரது சிந்தனை ஓடிய விதம் சூர்யா, கிரண் இருவருக்குமே புரிந்து விட்டது.

சூர்யாவின் புன்னகை விரிந்தது! வழக்கமாக நடப்பதுதானே?!

"கவலைப் படாதீங்க குமார். கிரண் என் வலது கை மாதிரி. என் எல்லா கேஸ்களுக்கும் எனக்கு உதவி செய்யறான். ரொம்ப புத்திசாலி. ஆனா கொஞ்சம் தமாஷ் பேர்வழி அவ்வளவுதான்!" என்றார்.

உடனே குமார் கிரணின் கையை ஒரு அசுரப் பிடி பிடித்து குலுக்கித் தள்ளிவிட்டார்! "Pleased to meet you கிரண்! உள்ள வாங்க!" அவன் கையை படாரென விட்டு விட்டு உள்ளே ஓடாத குறையாக வேகமாக நடந்தார்.

கிரண் தன் கையை பிடித்து விட்டுக் கொண்டான்! "அப்பாடா, என்ன அசுரப் பிடியடா மனுஷனுக்கு?! அடுத்த தடவை பாத்தா சும்மா ஸ்டைலா கை ஆட்டிடணும், மறந்து போய் கூட கை குடுத்துடக் கூடாது!"

குமாரின் தோற்றம், பட படப்பான பேச்சு, குடு குடுவென நடந்த விதம் எல்லாமே கிரணுக்கு சிரிப்பை வர வழைத்தன. குமார் கொஞ்சம் குள்ளம்தான். ஐந்தடி நாலங்குலம்தான். அந்த உயரத்துக்கு மனிதர் வஞ்சனை இல்லாமல் உடம்பை வளர்த்திருந்தார். நல்ல அகலத்துடன், தொப்பையும் கூட. அந்த உடம்பைக் குலுக்கிக் கொண்டு அவர் சென்ற ஓடும் நடை மிக விசித்திரமாகவே இருந்தது!

கிரண் மெல்ல சூர்யாவிடம், "என்ன இந்த ஆசாமி, எப்பவும் இப்படித்தானா? இல்லன்னா இந்த கேஸ்னால இப்படி பட படக்கிறாரா?!" என்றான். சூர்யா மெல்ல தலையசைத்து, மௌனமாக வரும் படி சைகை செய்து, குமாரின் பின் விரைந்தார்.

குமார் நேராக அவரது lab-க்கு ஓட்டமும் நடையுமாக சேர்ந்தார். அந்த அறை ரொம்பப் பெரியது என்று கூற முடியாது. சாதாரண ஆபீஸ் அறைகளை விட கொஞ்சம் பெரியது அவ்வளவுதான். சில மேஜைகள் ஆங்காங்கு சுவருக்குப் பக்கத்தில் இருந்தன.

"நாங்க செஞ்சுகிட்டிருக்கிறதும் டெஸ்ட் பண்ண வேண்டியதும் மிகச் சிறிய பொருள்தானே?! அதான் ஒரு குட்டி லேப்" என்றார் குமார் ஒரு சோகப் புன்னகையுடன்.

சூர்யா மெமரி பார்ட்களை வைத்திருந்த கேபினெட்டின் சாவித் துவாரத்தை மெல்லிய டார்ச் விளக்கு போட்டு முன் புறமும் பின் புறமும் சோதித்தார். நிச்சயமாக சாவி இல்லாமல் திறந்து மீண்டும் மூடியிருக்க முடியாது! குமாரைப் பார்த்து "யார் யாரிடம் சாவி இருந்தது?" என கேட்டார்.

"நிறைய பேரிடம்! இந்த லேப் வேலை செய்யறவங்க எல்லார் கிட்டயும் சாவி இருக்கு.

அப்புறம், எங்கிட்ட ஒண்ணு இருக்கு. மொத்தம் பத்து பேர் கிட்ட இருக்கும்."

"போச்சுடா! அது தவிர யாரு சாவி திருடியிருக்கலாம்னு வேர சேத்துக்கணும்!" - இது கிரணின் வர்ணனை!

சூர்யா கேட்டார், "இந்த கேபினெட் உள்ள இருந்ததை எல்லாம் எடுத்து சோதனை பண்ணீங்களே, அதெல்லாம் இருந்த படியே திரும்ப வச்சீங்களா, இல்ல வேற மாதிரியா?"

"போலீஸக் கூப்பிட வேண்டியிருக்கலாம்னுட்டு, எப்படியிருந்ததோ அப்படியே வச்சோம்.

மீதியிருக்கற பார்ட்ஸ் கூட, க்ளோவ்ஸ் போட்டுக் கிட்டுதான் எடுத்து டெஸ்ட் செஞ்சோம்."

"அவை எப்பவும் இதே மாதிரிதான் வைக்கப் பட்டிருக்குமா, இல்லை வேற வேற மாதிரியா?"

"இல்ல, இந்த மாதிரியே இருக்கும்னு சொல்ல முடியாது. யார் யார் எத வேணா எடுத்து வேலை செஞ்சுட்டு கேபினெட்டுக்குள்ள எங்க வேணா வெச்சுடுவாங்க. இப்ப கொஞ்சம் வழக்கத்துக்கு இன்னும் நீட்டாவே இருக்குன்னுதான் சொல் லணும்!"

"வெரி இன்ட்ரெஸ்டிங்!" என்றார் சூர்யா.

"என்ன, என்ன?" என்றார் குமார் வெகு ஆவலுடன்!

ஆனால், சூர்யா பதிலளிக்கவில்லை. தலையசைத்து விட்டு தரையில் குனிந்து காபினெட்டைச் சுற்றி இருந்த பல துண்டு, துகள்களை எடுத்து சிறிய ப்ளாஸ்டிக் பைகளில் போட்டு அவற்றின் மேல் எதோ விவரம் எழுதிக் கொண்டார். குமார் அதையெல்லாம் மிக ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். சூர்யா திடீரெனக் குதித்தெழுந்து "கண்டேன் திருடனை!" என்று பிடித்து கொடுத்து விடுவார் என்ற ஆர்வம் அவருக்கு!

சூர்யா அப்படி துண்டு துகள்களைச் சேகரிப்பது பெரும்பாலும், பார்ப்பவர்களுக்கு நிம்மதி தருவதற்காக மட்டும் என்பது ஒரு காலத்தில் கிரணின் சந்தேகம்! ஏனென்றால், அவர் அந்த மாதிரி சேகரித்த சங்கதிகளிலிருந்து துப்பு துலக்கியதாக அவனுக்கு பல உதாரணங்கள் தோன்றவில்லை. அவர் பல பேரிடம் பேசியும், மின்வலையிலும், நூலகத்திலும் ஆராய்ச்சி செய்துதான் வழக்கமாக கண்டு பிடிப்பதாக தோன்றியது. வெளியில் சொல்ல வில்லை! ஆனாலும் தாங்க முடியாமல் சூர்யாவிடம் மட்டும் ஒரு முறை கேட்டு விட்டான்!

சூர்யா புன்னகைத்தார்! "கிரண், நான் முதல் முதலாக கண்டு பிடித்த துப்பே இந்த மாதிரி கீழே விழுந்திருந்த ஒரு காகிதத் துண்டிலிருந்துதான்! அப்புறமும் சில முறை இந்த மாதிரித் துகள்கள் மிக முக்கியமாக இருந்திருக்கு. இந்தத் தொழிலே இப்படித்தான்! பெரும்பாலும், ரொம்பப் போரடிக்கக் கூடிய தொழில். ஜிங்குன்னு உடனேயே, எதிரேயே துப்பு வந்து நிக்கறதில்லை. கிடைக்கக் கூடிய எல்லா விவரத்தையும் குருவி, எறும்பெல்லாம் சாப்பாடு சேக்கற மாதிரி, கொஞ்சம் கொஞ்சமா பொறுமையா சேர்த்துக்கணும். சம்பந்தப் பட்டவங்கள கேள்வி கேக்கறதும் அதுக்குத்தான். சேர்த்த எந்த விவரத்திலேந்து துப்பு கிடைக்கும்னு சொல்லவே முடியாது. சில சமயம் ஒரு காகிதத் துண்டா இருக்கலாம். சில சமயம் ஒரு கவனிச்ச விஷயமா இருக்கலாம். சில சமயம் அவங்க சொன்ன ஒரு விவரமா இருக்கலாம். ஆன', நிறைய முறை, துப்பு அது அத்தனைய பத்தியும், இன்னும் பல சொந்த ஆராய்ச்சிகளையும் மொத்ததுல சேத்து ஆழ்ந்து யோசித்தாத்தான் கிடைக்குது. மேலும், நீ சொல்றதும் கொஞ்சம் இருக்கு! நாம சும்மா நின்னுகிட்டு பாத்திட்டே இருந்தா க்ளையன்ட்ஸ¤க்கும் திருப்தியிருக்காது! நாமும் செய்யற முயற்சிய பாத்து கொஞ்சம் நிம்மதிதான் கிடைக்கட்டுமே பாவம்!

இப்ப கூட சொல்றேன் பாரு, நீ இப்ப உள்ள போய் ஆரஞ்சு ஜூஸ் குடிச்சது எனக்கு எப்படித் தெரியும்?"

கிரண் திடுக்கிட்டான். "எப்படி பாஸ்? நான் உள்ள எங்கயோ போய் இல்ல குடிச்சிட்டு வந்தேன்?! நீங்க பின்னாலேயே வந்து spy பண்ணீங்களா என்ன?!"

சூர்யா விளக்கினார், "நான் சொல்லிட்டா அது ரொம்ப சுலபம், இவ்வளவுதானா விஷயம்னு நினைப்பே. நான் நீ ஜூஸ் குடிச்சத பாக்கல. ஆனா, நீ இங்கேந்து போகும் போது உன் சட்டை சுத்தமாத்தான் இருந்தது. ஆனா, நீ போயிட்டு வந்தப்ப ஒரு சின்ன ஜூஸ் கறை சட்டை மேல இருக்குன்னு கவனிச்சேன், புரிஞ்சுகிட்டேன்! இப்படித்தான் துப்பறியறதும். சின்ன சின்ன விஷயமா, நல்லா கவனிச்சு, சேத்து கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுகிட்டு, பெரிய புதிர அவுக்கணும்."

அன்றிலிருந்து கிரண் அந்த பேச்சை எடுப்பதில்லை. அவர் எதையெல்லாம் கவனிக்கிறார், எதை எடுத்து சேகரிக்கிறார், எது அவருக்கு ஆர்வத்தை எற்படுத்துகிறது என்று கவனிக்கலானான். அப்போதுதான் சூர்யாவின் ஒவ்வொரு நடப்பிலும், கிறுக்கோ, குறுக்கோ, ஒரு நுணுக்கம் இருப்பதைத் தெரிந்து கொண்டான்.

அதனால், அவர் கேபினெட்டில் பார்ட்கள் எப்படி வைக்கப் பட்டிருந்தன என்பதை நோண்டிக் கேட்டு, இன்ட்ரெஸ்டிங் என்று சொன்னதை கவனித்து வைத்துக் கொண்டான். "அப்புறம் சூர்யாவிடம் அதன் முக்கியத்துவத்தை விசாரிக்க வேண்டும்."

சூர்யா, அவரது வேக்யும் க்ளீனர் வேலையை முடித்துக் கொண்டு, குமாரிடம் வந்தார். "சரி, உங்களூக்கு யார் மேலேயாவது குறிப்பிட்ட சந்தேகமிருக்கா?"
குமார் தயங்கினார். "உம்... சந்தேகம்னா, எதையும் hard ஆதாரமா வச்சு சொல்ல முடியாது. ஆனா... உள் ஆசாமிதான் யாரோ செஞ்சிருக்காங்கன்னு உறுதியா தெரிஞ்சு போச்சு. அதனால மொத்தமா பாத்தாலே ஒரு பத்து பேர்தானே இருக்க முடியும்? அதுலயும் இந்த மீதி இருக்கற சாம்பிள்கள கெடுத்து வச்சிருக்கற நுணுக்கம் ரொம்ப எக்ஸ்பர்ட்டுக்குத்தான் வரும்... "

தொழில் நுட்ப வேலையில் இருந்து வந்ததால் சூர்யாவுக்கு அதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவல் அதிகமாயிற்று. "அது எப்படின்னு கொஞ்சம் சொல்றீங்களா?!"

கிரண் தலை மேல் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான்! "போச்சுடா, techy stuff ஆரம்பிச்சாச்சு. பாஸ் தன்னோட பழைய world-கே போயாச்சு. இனிமே, மணிக் கணக்குத்தான் ஆகும், திரும்பி வர!"

ஆனால் கிரணுக்கும் அதைப் பற்றி கேட்க ஆசைதான். 3D, ஹோலோக்ராம் என்றெல்லாம் கதையில் படித்ததுதான். நிஜமாகவே எப்படி செய்திருக்கிறார்கள் என்று பார்க்கும் ஆவல் அவனுக்கும் இருந்தது. கவனமாக கேட்கலானான்.

குமாரின் முகத்தில் தன் படைப்பைப் பற்றிப் பேசும் ஒரு பெருமித ஒளி பிறந்தது!

"இந்த 21st century-ல கூட இந்த மெமரி ஒரு அற்புத சாதனைன்னுதான் சொல்லணும். நீங்க பயன் படுத்தற கம்ப்யூட்டர்ல எல்லாம் hard drive, CD, DVD போன்ற சுழல்ற தட்டுலதான் bits பதிக்கப் படுது. ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு limitation இருக்கு. சிலதுல கொஞ்சமாதான் bits அடைக்க முடியும். சிலது வேகம் கம்மி. எல்லாமே மெக்கானிக்கலா நகரற technology, அதுனால உடைஞ்சு போக நிறைய வாய்ப்பு இருக்கு, size-ம் பெரிசு. அதுனால காமிரா மாதிரி சின்ன கருவிகளில பயன் படுத்த முடியாது. Flash, மெமரி ஸ்டிக், அப்படின்னு சில நகராத technology வச்சு வந்தது. ஆனா எல்லாமே capacity கம்மி, ரொம்ப வேகமும் குறைவு. கம்ப்யூட்டர்ல இருக்கற RAM மெமரி அளவுக்கு வேகமும், DVDய விட அதிக capacityயும், ஆனா மிகச் சின்ன sizeல இது வரைக்கும் வந்ததில்ல. இதோட reliability ரொம்ப அதிகம். Disk drives ஐ விட பத்து பங்கு அதிகம்! நூறு வருஷம் கூட கல்லு மாதிரி உழைக்கும்!"

கிரணுக்கு திடீரென ஒரு ஆவலான சந்தேகம் பிறந்தது. ஆசையுடன் கேட்டான். "ஆமா, 3D, ஹோலோக்ராம்னா, ஸ்டார் வார்ஸ்ல Princess Leia உருவத்த R2D2 வெளில ப்ரொஜெக்ட் பண்ணுமே அந்த மாதிரி இதுல வருமா என்ன?!"

குமார் தன் துன்பத்தையும் மறந்து களுக் என்று சிரித்தே விட்டார். "இல்லை கிரண்! Sorry to disappoint you! அந்த மாதிரி இல்லை. இது மெமரிக்கு உள்ளதான் 3D, ஹோலோக்ராம் எல்லாம். மூணு டிமென்ஷன்ல bits pack பண்ணறோம். ஹோலோக்ராமும் உள்ள பயன் படுத்தியிருக்கற டெக்னிக் தான், வெளில காட்டறதில்ல! எல்லாம் capacity அதிகரிக்கவும், ரொம்ப வேகமா இருக்கவும் தான்."

வேகத்தை பற்றி நன்கு உணர்ந்தவன் கிரண்! "அப்ப உங்க technology என் கம்ப்யூட்டர் மெமரிய விட வேகமா? அட?! நான் லேட்டஸ்ட், fastest மாடலா பாத்து இல்ல வாங்கினேன். உங்க மெமரிய என் கம்ப்யூட்டர்ல போட்டுக்கலாமா?" என்றான்.

குமார் புன்னகையுடன் ஆமோதித்தார். "போட்டுக்கலாமே! இங்க பாருங்க நாங்க அஞ்சு விதமான கருவிகள்ல பொருத்தறா மாதிரியான அஞ்சு பார்ட் பண்ணி வச்சிருக்கோம். அது அதுக்கு சரியான சைஸ¤ம் interface-ம் செஞ்சோம். இந்த குட்டி கொஞ்சம் ஒல்லியா ரெண்டு பக்கமும் தங்க கால் நிறைய வச்ச பூரான் பூச்சி மாதிரி இருக்கறது செல் ·போனுக்கு. அந்த நாலு வரிசைல பல chips வச்சு இருக்கறது கம்ப்யூட்டருக்கு. அத போட்டா கம்ப்யூட்டருக்கு disk அவசியமே இல்ல. ரெண்டு விதமான ஸ்டோரேஜ் வேண்டியதே இல்ல. ஒரே மெமரில ஒரே வேகத்துல ப்ரோக்ராமுக்கும் பயனாகும் உங்க files வச்சுக்கவும் பயனாகும். அப்புறம் இங்க சதுரமா இருக்கறது..."

கிரண் குறிக்கிட்டு முடித்தான், "...PDA-வுக்கு! இதோ இருக்கே எங்கிட்ட. அப்ப இந்த மெமரி போட்டா என் PDAலயே DVD movie எல்லாம் வச்சுக்கலாமா?! Way cool! லேட்டஸ்ட் ஸ்டார் வார்ஸ் படமெல்லாம் போட்டுக்க வேண்டியதுதான்!"

குமார் உற்சாகமாக தலையாட்டி ரசித்தார்! "ஆமாம், கரெக்ட்! சரியா விஷயத்த புடிச்சுகிட்டே!"

கிரண் இன்னும் உற்சாகத்துடன் குதித்தான். "அப்ப, இது வந்துட்டா, Diskன்னு எதுவுமே வேணாமா?! Hard Drive, DVD, CD எல்லாமே போச்சா?! SDRAM கூட காலியா?! நூறு ஆயுசா இதுக்கு?! அடேங்கப்பா! ஒரே கல்லுல அத்தன மாங்காயா? அற்புதம்!"

குமார் அவன் உற்சாக வெள்ளத்தில் குளித்து, உச்சி குளிர்ந்தே போய்விட்டார். "பொடிப் பய தான், ஆனா, ரொம்ப புத்திசாலி" என்று நினைத்துக் கொண்டார். பூரித்து, உப்பி விட்டார்!

இதுவரை மௌனமாக கேட்டுக் கொண்டிருந்த சூர்யா, கற்பனா வானத்தில் பறந்து விட்ட இருவரையும் மீண்டும் தரைக்குக் கொண்டு வந்தார். "அற்புதம் தான்! ஆனா இது எப்படி வேலை செய்யுது, எப்படி கெடுக்கப் பட்டிருக்குன்னு தெரியணுமே?!"

குமார் தற்போதைய நிலைமையை மீண்டும் உணர்ந்து காற்று எடுக்கப் பட்டு விட்ட பலூன் போல சுருங்கி விட்டார். முகம் தொய்ந்து போய் விழுந்தது.

"இது ஹோலோக்ராபிக் மெமரி. ஒரே இடத்துல வேற வேற light frequency வச்சு, பல bits store பண்ண முடியும். Light வச்சு செய்யறதால நல்ல வேகமும் கூட. இந்த யோசனை ரொம்ப நாளா இருந்திருக்கு. ஆனா, அதை சரியா நாம பயன் படுத்தக் கூடிய அளவுக்கு, வேண்டிய வேகமும், capacity-யும் இது வரைக்கும் கொண்டு வர முடியல. ஆனா, போன வருஷம், Prof. Chang -னு ஒரு U.C. Berkeley ப்ரொ·பசர் என் கிட்ட வந்து அதுல இருந்த problem எல்லாம் நீக்கிட்டதாகவும், இந்த மாதிரி பண்ண முடியும்னும் சொன்னார். அவர் சொன்னத வேற யாரும் practical-னு ஒத்துக்கல, நம்பல. நான் தான் ரிஸ்க் எடுத்து கொஞ்சம் பணம் போட்டு செய்யச் சொன்னேன். அப்புறம், venture capital வந்தாச்சு. நாங்க நான் காட்டின மாதிரி அஞ்சு விதமான பார்ட்ஸ் ரெண்டு ரெண்டு செஞ்சு வச்சோம். அடுத்த வாரம் காட்டியாகணும். இல்லன்னா, பழைய குருடி கதவ திறடின்னு, நாங்க சும்மா புளுகறோம், அது வேலை செய்யலன்னு பட்டம் கட்டி கம்பனிய மூடிடுவாங்க..."

குமாரின் குரல் தேய்ந்து, அடக்க முடியாத துயரத்தால் தளும்ப ஆரம்பித்தது.

சூர்யா ஆறுதலாக, "கண்டு பிடிச்சிடலாம் குமார், கவலைப் படாதீங்க, இப்ப சொல்லுங்க இது எப்படி நுணுக்கமாக கெடுக்கப் பட்டிருக்கு?"

குமார், தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு விவரிக்க ஆரம்பித்தார். "நான் சொன்னேன் இல்லையா இதுல வேற வேற light frequency-யால ஒரே இடத்துல பல bits வைக்கப் படுதுன்னு? ஒவ்வொரு bitக்கும் அந்தந்த frequencyயையே போட்டாத்தான் திரும்பி எடுக்க முடியும். அதுக்கு control ஒண்ணு இருக்கு. அந்த பகுதில ஒரே ஒரு gate மட்டும் short செய்யப் பட்டிருக்கு. அதுனால, ஒரு பில்லியன் patternsல சிலது மட்டும் வேண்டிய frequency தராம, வேற குடுக்கும். அதுவும் எப்பவும் வராது, ஒரு சில bit combinationல சில நேரத்துலதான். அதுனால சரியா வேலை செய்யலன்னுதான் முடிவு வரும். ஆனா, மொத்தமா test செய்யாட்டா இது தெரியாது!"

சூர்யாவுக்கு எதோ க்ளிக் ஆயிற்று! "இந்த மாதிரி தப்பா வரது நீங்க அடுத்த வாரம் காட்ட வேண்டியதுல...?"

குமார் சோகமாக தலையாட்டி ஆமோதித்தார். "ஆமாம், சூர்யா, நீங்க நினைக்கறது சரி. அதுதான் diabolically clever! நாங்க மொத்த டெஸ்ட் பண்ணிப் பாத்தில்லன்னா, இந்த அஞ்சு இருக்கேன்னு குஷியா நிதானமா இருந்திருப்போம். அப்புறம் எங்க demo நடுவுல இந்த மாதிரி தப்பா வந்து மொத்தமா அவமானமாயிருக்கும். நல்ல வேளை Prof. Chang-க்கு டெஸ்ட் பண்ணிப் பாக்கணும்னு தோணிச்சு!"

சூர்யா தொடர்ந்தார். "ரைட். ஓகே, யார் மேலேயோ சந்தேகம் இருக்கு போலிருக்கே, யாரு, ஏன்?"

குமார் மீண்டும் தயங்கினார். "அது... வந்து..."

சூர்யா ஊக்குவித்தார். "சொல்லுங்க குமார், நீங்க எல்லாம் சொல்லிட்டாத்தானே கண்டு பிடிக்க முடியும்?!"

குமார் விழுங்கிக் கொண்டு, குரலைத் தாழ்த்தி, "ஷீலான்னு ஒரு பிரமாதமான, brilliant எஞ்சினீயர். எனக்கு அவள ரொம்ப பிடிக்கும். என் மகள் மாதிரின்னு கூட சொல்லலாம். அவளுக்கு இந்த மாதிரி நுணுக்கமெல்லாம் நல்லா தெரியும். கொஞ்ச நாளா, அவ மூட் சரியில்ல. அவளோட மேனேஜரோட சரியாப் பேசாம, முறைக்கறதாவும், முணுமுணுக்கறதாவும் ரிப்போர்ட். அவ பண்ணியிருக்கலாமோன்னு மேனேஜர் சந்தேகிக்கிறார். எனக்கு அப்படித் தோணல. ஷீலா தங்கமான பொண்ணு. பண்ணியிருக்க மாட்டா."

சூர்யா "சரி உங்க ஆளுங்க ஆ·பீஸ் எல்லாம் பாத்து, அவங்களோட பேசிப் பாக்கலாம் வாங்க. முதல்ல ஷீலா ஆ·பீஸ் போகலாம்." என்றார்.

அங்கு போய் விசித்து விசித்து அழுது கொண்டிருந்த ஷீலாவையும் அவளது க்யூபையும் பார்த்து விட்டு, ஷாலினியுடன் ஒரு முறை கொஞ்ச நேரமே போனில் பேசி விட்டு, உடனே அவர் கூறியது ஷீலா, குமார், கிரண் எல்லோருமே திடுக்கிடும் அளவு ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline