Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | விளையாட்டு விசயம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
விளையாட்டு விசயம்
களை கட்டிய கிரிக்கெட் கச்சேரி
- சரவணன்|பிப்ரவரி 2002|
Share:
ஜனவரி 6-ஆம் தேதி சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம் களை கட்டியிருந்தது. சிறுவர்களுக்கான டென்னிஸ் போட்டி நடந்து கொண்டிருந்தது. சிறிசும் பெரிசுமாய் விளையாட்டு வீரர்கள் ஒட்டு மொத்தமாக மைதானத்தில் குழுமியிருந்தார்கள். ஆங்காங்கே பயிற்சியாளர்கள் தங்களது மாணவர்களைப் 'பெண்டு' நிமிர்த்துக் கொண்டி ருந்தார்கள். மாணவர்களும் வேர்க்க விறுவிறுக்க தத்தமது கருமமே கண்ணாக விளையாட்டில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தார்கள்.

இதெல்லாம் நாள்தோறும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் வழக்கமான நிகழ்வுகள்தான். ஆனால் ஆச்சர்யமான, கேட்டவுடன் சந்தோசத்தை வரவழைக்கும் நிகழ்வொன்றும் அங்கே நிகழ்ந்தேறியது.

நந்தனம் ஹாக்கி மைதானத்தில் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகச் சொன்ன மைதானக் காவலாளியின் முகத்தில்கூட சந்தோசம் அரும்பாக மின்னி மறைந்தது. ஹாக்கி மைதானத்தை நோக்கி ஆர்வத்துடன் நமது பயணம் தொடர்ந்தது.

குறும்புக்கார சிறுவனைப் போல மழை அடம்பிடித்து விட்டு விட்டுத் தூறியது. மழையை உள்வாங்கிக் காற்று ரகசியச் சேதியைச் சொல்லிக் கொண்டு வந்து முகத்தை வருடிய அதி அழகான காலை நேரமது! மார்கழி மாதத்துக் காலையை நியாபகப்படுத்தி குயில்கள் மரங்களில் அமர்ந்து இயற்கை விளையாட்டை நிகழ்த்தியபடி, இனிய குரலெடுத்துக் கூவிக் கொண்டிருந்தன.

குயில்களில் இசையைச் செவிமெடுத்தபடி ஹாக்கி மைதானத்திற்குள் நுழைந்தால், 'கர்நாடக இசைக் குயில்கள்' அங்கு ஒட்டு மொத்தமாகச் சங்கமமாகியிருந்தனர். ஆச்சரியம் மேலிட, ஏதாவது இசைக் கச்சேரி நடைபெறப் போகிறதா? இசை விழாதான் முடிந்து விட்டதே? என்று கேள்விகள் கேட்டால், இசைக் கலைஞர்கள் குறும்பாகச் சிரிக்கிறார்கள்.

ஏன் நாங்கள் கிரிக்கெட் விளையாடக் கூடாதா? என்று பதில் கேள்வி எழுப்புகிறார்கள். ஆம்! இசை விழாவிற்காகச் சென்னை வந்திருந்த இசைக் கலைஞர்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இசைக் கச்சேரியை முடித்த களைப்பில் கலைஞர்கள் அங்கு வீரர்களாய் மாறி 'கிரிக்கெட் கச்சேரியை' நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

44 விளையாட்டு வீரர்கள் நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடத் தயாராக மைதானத்தில் நின்று கொண்டிருந்த காட்சி பார்வையாளர்கள் அனைவரிடமும் புதிய அனுபவமொன்றை எழுப்பிச் சென்றது.

பதினாறு ஓவர்கள் கொண்ட இந்த கிரிக்கெட் மேட்ச்சில், பாடகர் முர்ராரி லெவன், பாடகர் டி.எம்.கிருஷ்ணா லெவன், மிருதங்கக் கலைஞர் பூங்குளம் சுப்பிரமணியன் லெவன், கோட்டு வாத்தியக் கலைஞர் ரவிகிரண் லெவன்... என நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டு அவை களுக்கு முறையே, ரெட், பிரவுன், யெல்லோ, ப்ளூ எனச் சீருடைகளும் கொடுக்கப்பட்டிருந்தன.

இந்தக் கிரிக்கெட் கச்சேரியை YOUTH ASSOCIATION FOR CLASSICAL MUSIC (YACM) அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த 1994-ஆம் ஆண்டிலிருந்து இதுமாதிரி கிரிக்கெட் கச்சேரியைச் சென்னையில் நடத்தி வருவதாக அந்த அமைப்பின் செயலாளர் நம்மிடம் தெரிவித்தார். முழுக்க முழுக்க இனிமையான மனநிலையைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் இந்த கிரிக்கெட் கச்சேரியில் இளைய கலைஞர்கள், மூத்த கலைஞர்கள், விளையாட வாய்ப்பில்லாத போதும் பெண் கலைஞர்கள் என எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பல கலைஞர்கள் தங்களின் உற்றார் உறவினர் கள் சூழ வந்திருந்தும் கச்சேரிக்குக் களை கட்டினார்கள்.

'விடாதே பிடி', 'வீ வான்ட் சிக்ஸர்', 'குட் கேட்ச்' என நிஜ கிரிக்கெட் மேட்சிற்கு எந்த விதத்திலும் குறையில்லாத அளவிலேயே இங்குள்ள பார்வையாளர்களும் திகழ்ந்தார்கள். சில இசைக் கலைஞர்கள் தங்களது மனைவி மார்களிடம் 'இன்னைக்கு செஞ்சுரி அடித்துக் காட்டுகிறேன் பார்' என்று சொல்லி விட்டு வந்து முதல் இரண்டு பந்துகளிலேயே கிளீன் போல்டு ஆகி, அசடு வழியச் சிரித்தது சிரிப்ப¨லையை உண்டு பண்ணி மேலும் கச்சேரியைக் களைகட்ட வைத்தது.

"டிசம்பர் மாதம் முழுவதும் பல்வேறு இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டுவிட்டு ஒருநாள் இது மாதிரி கிரிக்கெட் கச்சேரியிலும் கலந்து கொள்வது சந்தோசமாக இருக்கிறது. எல்லோரும் சந்தோசமாக ஒன்றாகக் கூடியிருந்து இந்த விளையாட்டுப் போட்டியை தொடர்ந்து நடத்தி வருவது சாதனைதான். இந்தப் போட்டியில் கண்டிப்பாக எங்கள் அணி வெற்றி பெறும். ஏனெனில் எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் துடிப்பானவர்கள்" என்று ஸ்டீவ் வாக் ரேஞ்சுக்குத் தன்னுடைய அணியைப் பற்றிய புகழாரங்களை அள்ளி வீசினார் டி.எம்.கிருஷ்ணா லெவன் அணித் தலைவரான டி.எம்.கிருஷ்ணா.
நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று பேச்சை ஆரம்பித்த பூங்குளம் சுப்பிரமணியன் இந்தக் கிரிக்கெட் போட்டிக்குப் புது விளக்கமொன்றையும் அளித்தார். "கர்நாடக சங்கீதம் கிரிக்கெட் இரண்டிற்கும் பெரிய அளவு ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டிலுமே மிகுதியான கவனத்தைச் செலுத்த வேண்டி யுள்ளது. கூர்ந்து கவனிப்பது என்பது இரண்டிலுமே முக்கியம். அடிப்படையில் நாங்கள் நல்ல ரசிகர்கள். அதன்படி எல்லா விளையாட்டுகளையும் ரசிப்போம். தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டி ருந்தால்கூட ரசிப்போம். அப்படியிருக்கையில் நாங்களே விளையாடுகையில் ரசிக்காமல் இருப்போமா? ரசித்து ருசித்து விளையாடு கிறோம்" என்று ருசியும் மணமும் மிக்க கிரிக்கெட் பற்றி விளம்பரப் பாணியில் விவரித்தார் பூங்குளம் சுப்பிரமணியன்.

"ஜூனியர் சீனியர் என எந்தப் பாகுபாடுகளுமின்றி எல்லோரும் கூடும் இந்தக் கிரிக்கெட் கச்சேரியில் நானும் ஒரு அணித் தலைவராக இருக்கிறேன் என்பதில் பெருமை யடைகிறேன். மேலும் இங்கு நடைபெறும் போட்டியில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் கிடையாது. என்ன நடந்தாலும் அதை நாங்கள் ரெம்பவும் ஸ்போட்டிவ்வாக எடுத்துக் கொள் கிறோம். இங்கு சந்தோஷம்தான் மிக முக்கியமானது. இனி வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நான் கலந்து கொள்வேன்" என்று படு சீரியஸாகப் பதில் தந்து விட்டு ·பீல்டிங் செட் பண்ணுவதற்காக அந்தப் பக்கமாய் நகர்ந்தார் முர்ராரி.

பதினாறு ஓவர்களாக நடந்த இந்தக் கிரிக்கெட் போட்டியில் டென்னிஸ் பந்தே பயன்படுத்தப்பட்டது என்பதால், ஆளாளுக்குப் புகுந்து பயமில்லாமல் விளையாடினார்கள். பலர் தொழில்முறை ஆட்டக்காரர்களுக்குத் தாங் களும் சலித்தவர்களில்லை என்பது போல ஸ்கையர் டிரைவ், ஸ்ட்ரெயிட் டிரைவ் என கிரிக்கெட்டின் அத்தனை நுணுக்கங்களையும் பயன்படுத்தி ஆடி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் கள். இளம் கலைஞர்களைவிட மூத்த கலைஞர்களே அதிகம் பிரகாசித்தார்கள் கிரிக்கெட் கச்சேரியிலும்!

இசைக் கலைஞர்கள் பலருக்கு மைதானத்தில் கத்திக் கத்தியே தொண்டைக் கட்டிக் போயிருக்கும்! முர்ராரி, டி.எம்.கிருஷ்ணா இருவரும் மைதானம் முழுக்கவும் பிரகாசித் தார்கள். ஓடி ஓடி தங்களது அணியினர்களைத் தட்டிக் கொடுத்தல், பீல்டிங் செட் பண்ணுதல், கேட்சைக் கோட்டை விட்டால், முதலில் திட்டி விட்டு பின்பு பரவாயில்லை என்று சொல்லி விளையாட்டை நோக்கிக் கவனத்தைத் திருப்பச் செய்தல்... என எல்லா வகைகளிலும் தங்களுடைய அணித் தலைவருக்குரிய திறமையைக் காட்டினர்.

இறுதி ஆட்டம் முர்ராரி லெவன், டி.எம்.கிருஷ்ணா லெவன் இடையே நடந்தது. முதலில் பேட் செய்த முர்ராரி லெவன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் குவித்தது. அடுத்து பேட் செய்ய வந்த டி.எம்.கிருஷ்ணா லெவன் 77 ரன்கள் என்ற இலக்கை வெகு எளிதாகக் கடந்து 78 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

YOUTH ASSOCIATION FOR CLASSICAL MUSIC (YACM) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த கிரிக்கெட் கச்சேரியில் 'மேன் ஆப் த சீரியஸாக' சஞ்சய் சுப்பிரமணியன் தேர்ந் தெடுக்கப்பட்டார். இறுதி ஆட்டத்தின் 'மேன் ஆப் த மேட்ச்சாக' கிருஷ்ண பிரகாஷ் தேர்தெடுக்கப்பட்டார். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தங்களது தேன் தடவிய இசையால் இசை நெஞ்சங்களை வசீகரித்த இசைக் கலைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டின் மூலமும் பார்வை யாளர்களை வசீகரித்தனர். அவர்களது கிரிக்கெட் மேட்ச்சைப் பார்த்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியே வரும் போது 'பேசாமல் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு இவர்களையே தேர்ந்தெடுத்து அனுப்பினால் என்ன?' என்றுகூடத் தோன்றியது.

விளையாட்டாகத்தான் இந்தச் சிந்தனை தோன்றியது என்றாலும், நடந்தாலும் ஆச்சர்யப் படுவதிற்கில்லை!


சரவணன்
Share: 
© Copyright 2020 Tamilonline