Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
நினைவலைகள்
ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு
- சி.கே. கரியாலி, திருவைகாவூர் கோ. பிச்சை|ஆகஸ்டு 2007|
Share:
Click Here Enlargeஆங்கிலத்தில்: சி.கே. கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை

தேசிய அகாடமியில் பயிற்சி நடைபெறும் போது நிர்வாக அதிகாரிகள் சுற்றுலாவாக இந்தியாவின் ஒரு பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். நான் ஓரளவு நன்கறிந்த வங்காளம், பீகார், ஒரிசா பயணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். குடிமைப் பாதுகாப்பு பயிற்சி பெற 15 நாள்கள் நாக்பூர் சென்றோம். அங்கிருந்து ரூர்க்கேலா சென்றோம். நடுவில் கொல்கத்தா செல்ல வேண்டியதாயிற்று. கொல்கத்தா எப்போதுமே நெரிசல் மிகுந்த இடம். மாவட்ட நிர்வாகம் நாங்கள் தங்க விருந்தினர் மாளிகையை ஒதுக்கித் தரவில்லை. ரயில் நிலையத்திலேயே ஓரமான இடத்தில் எங்கள் பெட்டி தள்ளப்பட்டு, அதிலேயே ஒருவாரம் தங்கியிருக்கும்படி நேர்ந்தது. அங்கே பயணிகள் தங்கும் அறையில் உள்ள குளியலறையில் குளித்தோம். பிறகு தினசரி வேலைகளைக் கவனிக்கக் கிளம்பினோம். பின் அசன்சால் செல்ல ஆயத்தமானோம்.

எனது தோழி சுதா சின்ஹாவுக்கும் விமானப் படை உதவி அதிகாரி அஞ்சாலியாவுக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது. அவள் தனக்கு ஆடைகள் வாங்குவதற்காக புகழ் பெற்ற படாபஜார் செல்ல எண்ணி இருந்தாள். அவள் அழைக்கவே நானும் உடன் சென்றேன். நான்கு மணிக்குள் திரும்ப வேண்டும் என்ற எங்கள் தலைவர் ஜோஜியின் கட்டளையுடன் நாங்கள் புறப்பட்டோம். அங்கும் இங்குமாக அலைந்து பொருட்களை வாங்கிய பிறகு நேரத்தை கவனித்தால், மணி நான்கைக் கடந்து விட்டிருந்தது. உடனே பதைபதைத்து ஒரு வாடகைக் காரில் பாய்ந்து ஏறி ஹெளரா ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டோம். கொல்கத்தா போக்குவரத்து நெரிசலில் நாங்கள் அங்குலம் அங்குலமாகத்தான் முன்னேற முடிந்தது. இறுதியாக ஆறு மணிக்குத்தான் நாங்கள் வந்து சேர்ந்தோம்.

அங்கே... எங்கள் இருவரையும் தவிக்க விட்டுவிட்டு அனைவரும் சென்று விட்டிருந் தனர். என்ன செய்வதென்றோ, எங்கு சொல்வதென்றோ எங்களுக்குத் தெரிய வில்லை. யாரிடம் போய் புகார் செய்வது என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தோம். அப்போது தான் எங்கள் சகாக்கள் நவீன் பாஜ்பாயும், சுதீந்தர் சிங்கும் எங்களைத் தேடி வந்து சேர்ந்தனர். ஜோஜி எப்படி எல்லாம் கோபத்துடன் இருந்தார் என்பதையும், எங்களை அழைத்துச் செல்வதற்காக, நகர்ந்து கொண்டிருந்த ரயிலிலிருந்து குதித்துக் காத்துக் கொண்டிருந் ததையும் எங்களிடம் கூறினர். பின் அவர்களுடன் ஓடிச் சென்று, நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் ஏறினோம். உள்ளே ஜோஜியின் முகம் கோபத்தால் கருத்துப் போய் இருந்தது. பலவகை வார்த்தைகளால் எங்களைத் திட்டினார். நாங்கள் திருத்த முடியாதவர்கள், பொறுப்பற்றவர்கள் என்றார். அதிகாரிகளாக இருக்கத் தகுதி அற்றவர்கள் என்றும் கடிந்து கொண்டார். அவர் பேச்சை முடித்த உடன், அவர் முன்பு கேட்டுக் கொண்டபடி வாங்கி வைத்திருந்த ரசகுல்லா பெட்டியையும் கல்கத்தா தாம்பூலப் பொட்டலத்தையும் வைத்துவிட்டு, இவை களை வாங்கச் சென்றதால்தான் நேரம் கடந்து விட்டது என்று விளக்கினோம். உடனே அவர் தாம்பூலத்தை வாயில் போட்டுச் சுவைத்து மென்று கொண்டே 'உங்களை நான் மன்னித்துவிட்டேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.. நான் இயக்குநரிடம் உங்கள் மீது புகார் கொடுப்பேன்' என்றார். பிறகு இவை யாவும் மறக்கப்பட்டுவிட்டன என்பதுதான் மிகவும் சுவையான விஷயம்.

*****


ஜனவரி 26, 1999 அன்று லண்டனில் நடைபெற்ற குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தில் நான் கலந்து கொண்டது ஒரு மகிழ்ச்சியான நினைவு. நான் அப்போது ஆக்ஸ்·போர்டிலுள்ள ராணி எலிசபெத் மாளிகைக்கு வருகை தரும் அதிகாரியாக இருந்தேன். தாய்நாட்டிலிருந்து வெகுதொலை வில் இருப்பதையும், நான் சென்னையில் மாவட்ட ஆட்சியாளராக இருந்தபோது தொடங்கிவைத்த குடியரசு தின விழாவின் அதிவிமரிசையான கலாசார நிகழ்ச்சியையும் நினைத்தால் துக்கமாக வந்தது. அப்போது தான் இந்திய தூதரக அலுவலகத்திலிருந்து, அங்கு நடைபெறும் குடியரசு தின வரவேற்பில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று திடீரென அழைப்பு வந்தது. நானும் மிக்க மகிழ்ச்சியுடன் அதில் கலந்து கொண்டேன். இந்திய ஹைகமிஷனர் சல்மான் ஹைதரும், அவரது மனைவியும் அன்புடன் என்னை வரவேற்றனர். எல்லோரும் மைய அரங்கத்தில் கூடியதும் ஹைகமிஷனர் தேசியக் கொடியை ஏற்றினார். பின் விருந்தும் நடந்தது. ஹைதர் அண்மையில்தான் இந்தப் பதவியில் சேர்ந்திருந்தார். அலுவலகத்திலுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் மிகப் பிடித்தமானவர். ஆக்ஸ்·போர்டில் படித்த அவருடைய ஒரு பெண் அஷ்மோலியன் அரும்பொருள் காட்சியகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்திய சமூகத்தின் மிகச் சிறந்தவர்களான ஷீலா ·ப்ளேதர் சீமாட்டி போன்றவர்களை நான் அங்கிருந்த போது சந்தித்தேன். இங்கிலாந்தின் பிரபுக்கள் சபையில் உறுப்பினரான வெள்ளையரல்லாத முதல் பிரமுகர் இவர்தான். 'இந்து' போன்ற பத்திரிகைகளின் திறமையான பத்திரிகை யாளர்களையும் அங்கு சந்தித்தேன். பிரபுக்கள் சபையில் உறுப்பினராக இருக்கும் கிளைவ் பிரபுவின் கொள்ளுப் பேத்திக்கும் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். இந்திய சுதந்திரத்தின் 50ம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த தூதுக் குழுவில் அவரும் ஒருவர். சென்னையைச் சேர்ந்த எனது பழைய தோழி கலா கோபாலைச் சந்தித்தேன். இங்கிலாந்தில் பரதநாட்டிய ஆசிரியையாக, நாட்டியத்துக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அவர். எனது குழுவைச் சேர்ந்த கோபாலை மணம் செய்து கொண்டிருந்தார். அவர் மகாராஷ்டிர அமைப்பைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. ஆக்ஸ்·போர்டுக்கு வருகை தருமாறு ஹைதருக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் அதை ஏற்று, ஜூன் 17ஆம் தேதி ராணி எலிசபெத் இல்லத்தில் எங்களுடன் உணவு அருந்தினார்.

*****


உதவி ஆட்சியாளராகப் பயிற்சி பெற நான் கோயம்புத்தூரில் சேர்ந்த காலத்தில், முதன்மைச் செயலாளர் சபாநாயகம் வருகை தர இருக்கிறார் என்று ஒரு பெரிய பரபரப்பு உண்டாயிற்று. அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த உயரதிகாரி. 1948ல் ஐ.சி.எஸ். என்பது ஐ.ஏ.எஸ். என்று மாற்றப்பட்டபின் நடந்த முதல் பயிற்சிக் குழுவைச் சேர்ந்தவர். அவர் தமிழ்நாட்டின் செல்வாக்கும் வசதியும் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். வெள்ளைக்கார அதிகாரிகளால் பயிற்றுவிக்கப்பட்டவர். மத்திய அரசில் கல்வித்துறைச் செயலாளர் போன்ற முக்கியமான பதவிகள் பல வகித்தவர். அவர் குரல் இடியோசை போன்றது. மாநிலத்திலுள்ள அதிகாரிகளும் ஊழியர்களும் மிக்க அச்சத்துடன் அவரிடம் பணிவோடு நடந்து கொள்வார்கள். ஆகவே புதிதாகச் சேர்ந்த நாங்கள் அவரைச் சந்திக்க மிகுந்த பயத்துடன் இருந்தோம்.

வரவேற்புக்குப் பின் மாவட்ட ஆட்சியாளர் மாளிகையில் முதன்மைச் செயலாளருடன் காலைச் சிற்றுண்டி அருந்த நாங்கள் அழைக்கப்பட்டிருந்தோம். அவர் என்னைப் பார்த்துக் கேட்டது: 'மாவட்ட ஆட்சியாளர் முறையாக உனக்கு உணவு அளிக்கிறாரா? அவரது சமையல் அறைக்குச் செல்ல உனக்கு உரிமை உண்டா? குளிர்பதனப் பெட்டியைத் திறந்து சாக்லெட் எடுக்க அதிகாரமுண்டா?' போன்றவைதாம். மாவட்ட ஆட்சியாளர் வீட்டில் குளிர்பதனப் பெட்டியே இல்லை என்று நான் சொல்ல வேண்டியதாயிற்று.

சிற்றுண்டிக்குப் பிறகு ரமேஷ் சந்திர பண்டா, இளங்கோவன், நான் ஆகிய மூவரையும் அவரது போல்க்ஸவாகன் என்ற சிறிய காரில் ஏறிக்கொள்ளும்படி ஆணையிட்டார். இடித்து நெருக்கி உட்கார்ந்தபடி உதகைக்குப் பயணமானோம். மோரிஸ் ஐசி என்ற அதிகாரியிடம் கோவையில் உதவி ஆட்சியாளராகத் தான் பயிற்சி பெற்ற அந்த நாள்களைப் பற்றி எங்களிடம் சொல்லிக் கொண்டு வந்தார். உதகமண்டலத்தின் பூர்வீக குடிகளான தோடர்கள் பற்றியும், தேயிலை சாகுபடி ஏற்பட்டது, யூகலிப்டஸ் மரங்கள் நட்டது பற்றியும் விளக்கினார். நாங்கள் உதகையை அடைந்த சமயம் எங்களுக்கு அவரைப் பற்றிய பயம் மறைந்தே விட்டது. உதகை சேர்ந்த உடனேயே நீலகிரி மாவட்ட ஆட்சியாளர் சாமிநாதனிடம் எங்களை ஒப்புவித்து உதகையைச் சுற்றிப் பார்த்து வர ஏற்பாடு செய்யும்படி பணித்தார்.

*****
இந்திய நிர்வாகப் பணிக்கான பயிற்சிகளில் ஒரு மாத காலம் ராணுவத்துடன் இருப்பதும் மிக முக்கியமானதாகும். மிகப் பழமையானதும், பெருமை கொள்ளத்தக்கதுமான இந்திய ராணுவத்தின் இரண்டாவது சீக்கியப் படைப் பிரிவுடன் (சிக் ரெஜிமெண்ட்) இணைந்து நான் பணியாற்றினேன். மகாராஜா ரஞ்சித் சிங்கின் படையிலிருந்த சிறந்த வீரர்களைக் கொண்டு வெள்ளையர்களால் இப்பிரிவு அமைக்கப்பட்டது. தொன்மையான பாரம்பரியமும் வரலாற்றுப் பெருமையும் இதற்கு உண்டு. வலிமைமிக்க இந்திய ராணுவத்தில் இதுவும் ஒன்றாகும். நாங்கள் படையுடன் இணைந்த போது ஐக்கிய பஞ்சாப் இரண்டு துண்டுகளாகி விட்டது. 2வது சீக்கியப்படை 1970-71 போரில் பதுங்கு குழிகளில் மறைந்து கொண்டே பாகிஸ்தான் குண்டுவீச்சை வீரத்துடன் எதிர்கொண்டு போராடியது. 1972லும்கூட அப்படை போர் பிராந்தியத்தில்தான் இருந்தது. அதிகாரிகளும் சிப்பாய்களும் போர்க்காலம் முழுவதும் பதுங்கு குழிகளிலேயே வசித்தனர். அவர்களுக்கு உணவுகூட அங்கேயே தான்.

எனது சக அதிகாரிகள், பாதல், அனிதா தாஸ் (புதுமணத் தம்பதியர்) தாஜூவார் ரஹ்மான் மற்றும் நான் மத்தியப்பிரதேசப் பிரிவினர். நாங்கள் டேராடூனிலிருந்து சஹரன்பூருக்கும் பின் அங்கிருந்து அமிர்த சரஸ¤க்கும் புறப்பட்டோம். எங்களை அமிர்தசரஸ¤க்கு அழைத்துச் சென்ற அழகிய இளைஞரான காப்டன், அந்தப் படைப் பிரிவின் சரித்திரத்தில் அதுவரை பெண்களைக் களத்துக்கு அழைத்துச் சென்றதில்லை என்றார். சக வீரர்களோடு தோளோடு தோள் நெருங்கிப் பழகுவோம், பதுங்கு குழிகளிலும் தூங்கும் பைகளிலும் படுத்துப் பழகிக் கொள்வோம் என்று அவருக்கு உறுதி அளித்தோம்.

சிப்பாய்களுடன் பழகி, ஆயுதப் பிரயோகம் செய்வது எப்படி என்பதையும் ஒற்றைக்கு ஒற்றை சண்டையிடும் முறையையும் கற்றுக்கொண்டோம். சுபேதார்கள், ஹவில் தார்கள் ஆகியோரின் வேலைகள் பற்றி அறிந்து கொண்டோம். மாறுவேடம் பூண்டு வாகனங்களில் சுற்றி வந்தோம். விமான எதிர்ப்புத் துப்பாக்கியுடன் செல்லும் வாகனங்களில் சவாரி செய்தோம். ஆயுதச் சாலைகள், வெடிமருந்துக் கிடங்குகளுக்கு விஜயம் செய்தோம். கூர்க்கா படைப் பிரிவுக்கும் மரியாதை நிமித்தம் சென்று சந்தித்துப் பேசினோம். இறுதியாக ஒரு கிடங்குக்கு விஜயம் செய்தோம். அங்கு விசேஷ நிகழ்ச்சிகளில் அதிகாரிகள் உணவருந்தும் வெள்ளி மேஜையைப் பார்த்தோம். அவர்கள் வென்றெடுத்த கேடயங்கள் கோப்பைகள் போன்றவை அங்கு இருந்தன. ஓய்வு பெற்ற அதிகாரிகளின் அன்பளிப்புகள், இறந்து போன அதிகாரி களின் குடும்பத்தார் அளித்த பொருட்கள் அங்கே இருந்தன. ஆயிரக்கணக்கில் வெள்ளிக்கட்டிகள். அதில் சிலவற்றில் தங்கம் பதிக்கப்பட்டிருந்தன. படைப்பிரிவின் தொன்மையான அந்தஸ்தைக் காட்டும் இரண்டு விக்டோரியா சிலுவைகளும்கூட அங்கு இருந்தன. போரில் பெற்ற வெற்றி யினாலும், தொன்மையான வரலாற்றாலும் அந்தப் படைப் பிரிவு காலத்தைக் கடந்து நீடித்து வருகிறது.

பின் இந்தியாவின் மிகப் புனிதமான இடங்களில் ஒன்றான பொற்கோவிலைப் பார்க்க அமிர்தசரஸ¥க்கு சென்றோம். கோவில் குளத்தில் புனித நீராடிவிட்டு கோபுரத்தில் உள்ள தங்கவேலைப்பாடுகளை பார்க்கச் சென்றோம். கோவிலில் உள்ள தங்கமும் சுற்றிலுமுள்ள தங்க வாயிற் கதவுகளும் முன்னொரு காலத்தில் சோமநாதர் கோவிலில் இருந்து முகமது கோரியாலும் முகமது கஜினியாலும் கொள்ளையடிக்கப் பட்டவை. பின் அவை மகாராஜா ரஞ்சித் சிங்கால் மீட்கப்பட்டு, கோவில் அர்ச்சகர் களின் வேண்டுகோளுக்கிணங்க குருத்வாரா கோபுரத்திலும் அதைச்சுற்றி நிர்மாணிக்கப் பட்ட வாயிற் கதவுகளிலும் பூசப்பட்டதாம்.

ஏதுமறியாத அப்பாவி மக்களை ஜெனரல் சுட்டுக் கொன்ற இடமான ஜாலியன்வாலாபாக் சென்றோம். துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த இடங்களையும், கூட்டநெரிசலில் நூற்றுக் கணக்கான மக்கள் விழுந்த கிணற்றையும் பார்த்தோம். சில தியாகிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களது சந்ததியினரைச் சந்தித்தோம். இது எங்கள் அனைவருக்கும் இதயத்தைப் பிழியும் அனுபவமாக இருந்தது.

2வது சீக்கியப்படைப்பிரிவில் ஜனவரி 73 ஆரம்பத்திலிருந்து தங்கி இருந்து அவர்களுடன் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடினோம். ராணுவத்தில் புத்தாண்டு தின நிகழ்ச்சிகள் மிக முக்கியமானவையாகும். முழுபடைப்பிரிவும் ஒன்று சேர்ந்து ஆட்டம் பாட்டு விருந்துகளுடன் புத்தாண்டு தினத்தை அமிர்தசரஸில் விமரிசையாக நடத்தியது. இத்தனை நாளும் படைப்பிரிவுகளுடன் இருந்ததில் ஏற்பட்ட உடல், மன சோர்வி லிருந்து விடுபட்டு வெளியே வரும் சந்தர்ப்பமாக அது அமைந்தது. இந்திய ராணுவத்தின் வடக்குப் பிராந்திய தளபதி என்னிடம் வந்து தலைகுனிந்து நான்தான் முதலில் நடனமாடி விழாவைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். (மேல் அதிகாரி கீழே இறங்கி வரும் போது மற்ற அதிகாரிகள் பதவி வரிசைக்கிரமப்படி அவரைப் பின் தொடர வேண்டுமென்பது சம்பிரதாயம்) நான் நாட்டியம் அறிந்தவள் அல்ல. ஆயினும் இது கெளரவமான பணி என்பதால் தவிர்க்க முடியவில்லை. பருமனான மனிதருக்கு ஈடு கொடுத்து பெரிய அரங்கத்தில் ஆடி வர முயற்சி செய்தேன்.

முதல் நாட்டியத்துக்குப் பிறகு மாலைநேரம் முழுவதும் குளிர்பானத்தை உறிஞ்சிக் கொண்டும் போலோ விளையாட்டிலும், ராணுவ உணவு அருந்திக்கொண்டும் இருந்தேன்.

ஆங்கிலத்தில்: சி.கே. கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை

*****


சி.கே.கரியாலி

சி.கே.கரியாலி மாவட்ட ஆட்சியர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக ஆளுநரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருக்கிறார். தமிழின் மீது கொண்ட பற்று காரணமாக அதனைக் கற்றுக் கொண்டு, ஒரு தமிழ்ப் பெண்ணாகவே வாழ்க்கை நடத்தி வருபவர். அவர் தமது அனுபவங்களைத் தொடர்ந்து சென்னை ஆன்லைனில் எழுதி வருகிறார். அதிலிருந்து சில பகுதி களைத் தென்றல் தருகிறது...
Share: 
© Copyright 2020 Tamilonline