Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2002 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சூர்யா துப்பறிகிறார் | சினிமா சினிமா | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar
Tamil Unicode / English Search
சிறுகதை
Dear Ann Landers
கோவிந்தசாமியின் "அரிய" கருத்து 2 - பாசம் ஒன் வே டிரா·பிக்கா?
தானம்
K.M. கோவிந்தசாமியின் சரித்திரம் 3
- அட்லாண்டா கணேஷ்|செப்டம்பர் 2002|
Share:
எச்சரிக்கை: K.M. கோவிந்தசாமியின் கருத்துக்கள் நம் கருத்து அல்ல. ஏதாவது கேள்விகள் இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள் முடிந்தால் அவரைப் பிடித்து பதில் வாங்கி அனுப்புகிறோம். இல்லையேல் எங்களைக் குறை கூறாதீர்கள்.

வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் மாதிரி அது முடிந்தவுடன் அவரவர்கள் தனது ஸ்டேஷனில் இறங்கி விடுவார்கள் என்று யாரோ ஒரு புத்திசாலி கூறியிருப்பதாக ஞாபகம். (ஒரு வேளை அது அட்லாண்டா கணேஷ் தானோ? அப்புறம் எப்படி அது புத்திசாலி சொன்னது என்று கேட்கிறீர்களா?) சரி சரி அதை விடுங்கள். நமது மறைந்த அருமைக் கவிஞர் கண்ணதாசன் "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்" பாடலில் வாழ்க்கை தத்துவத்தை மிக அருமையாக, அழகாக, ஆச்சரியப்படும்படி கூறியிருப்பார். அந்த பாடலை கேட்கக் கேட்க அந்த உண்மைகள் நம்மை புல்லரிக்க வைக்கும். (தயவு செய்து பார்க்கில் வைத்து இந்த பாட்டைக் கேட்காதீர்கள் புல் அரித்துத் தள்ளிவிடும் ஜாக்கிரதை).

ஏன் திடீரென்று இந்த எண்ணம் வாழ்க்கை, பயணம், முடிவு எல்லாம்? ஒன்றுமில்லை எல்லார் வாழ்விலும் தவிர்க்க முடியாதுதான். 74 வயதில் இரண்டு நாட்கள் உடம்பு முடியாமல் என்னுடன் இருந்த எனது தாயார் சாதாரண காய்ச்சல் தான் ஒன்றும் பயமில்லை என்று டாக்டர் கூறியிருந்த போதிலும் எங்களை ஏமாற்றிவிட்டு திடீரென தன் ஸ்டேஷனில் இறங்கிவிட்டார் எங்களிடம் சொல்லாமல் கொள்ளாமல். பாடலாசிரியர் கண்ணதாசன் எழுதியபடி "கூக்குரலாலே கிடைக்காது, அது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது, அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது" என்ற கசப்பான உண்மையை உணர்த்தியது.

அட்லாண்டாவில் எல்லோரும் அவரை செல்லமாக "பாட்டு மாமி" "பாட்டு மாமி" என்றுதான் அழைப்பார்கள். சிறு வயதில் நல்ல குருக்களிடம் சிஷ்யையாக இருந்து பாட்டில் அபார ஞானம். கூடவே நல்ல குரல். நன்றாக பாடினாலும் மற்ற வாத்தியங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் வயலின், ஹார்மோனியம் எல்லாம் நன்றாகக் கற்றுக்கொண்டு அசத்தியது நிஜம்.

எங்கள் குடும்பத்தில் எல்லோரும் நான் (non) வயலினிஸ்ட் அவர்கள் மட்டும் நல்ல வயலினிஸ்ட். நாங்கள் அட்லாண்டா வந்த பிறகு 8 முறை இங்கே வந்து எங்களுடம் ஒவ்வொரு முறையும் குறைந்தது 6 மாதம் தங்கியுள்ளார். ஒவ்வொரு முறை வரும்போதும் அவர்கள் வந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் பெரியவர்களும் குழந்தைகளும் பாட்டு மற்றும் வயலின், கீ போர்ட் கற்றுக்கொள்ள வந்து விடுவார்கள். வீடு கலகல என்று ஆகிவிடும். வேலைக்குப் போகாத பெண்கள் வீக் டேஸில் பகலில் வருவது எனக்கும் என் மனைவிக்கும் மன திருப்தியைக் கொடுக்கும். நாங்கள் வேலைக்குப் போகும் போது யாராவது அம்மாவிற்குத் துணையாக இருக்கிறார் களே என்று.

எங்கள் வீட்டில் அனாவசியமாக வாசல் கதவை பல நாட்கள் பூட்ட வேண்டிய தேவையே இருக்காது. பலர் வருவதும் போவதுமாக இருப்பார்கள். போகும் போது பூஜை அறையில் தட்சணையை மறக்காமல் வைத்துவிட்டுப் போவார்கள். எது எப்படியோ அம்மாவை வைத்து நாங்கள் அட்லாண்டாவில் பாபுலர் ஆனது பொய்யல்ல.

"ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்டத் தாய்" என்ற திருக்குறள் போல அந்த பெருமையை நான் கொடுக்கா விட்டாலும் அந்தத் திருக்குறளை மாற்றி அந்தத் தாய் அந்த பெருமையை தன் மகனுக்குக் கொடுத்தார்கள். அட்லாண்டாவின் பல தமிழர்கள் அவர் மேல் ஒரு தனி பாசம் வைத்திருந்தார்கள். எனது தாயாரும் 3 வயது குழந்தையோ அல்லது முப்பது வயது இளைஞரோ அல்லது 60 வயது தாண்டியவரோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்ற சப்ஜெக்டைப் பேசி முகம் முழுவதும் சந்தோஷச் சிரிப்புடன் அவர்கள் மேல் அன்பைப் பொழிவார்கள்.

அந்த Dec. 15 எங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு துக்க நாள். ஒரு மனித உயிர் போவது எவ்வளவு ஈசியா என்று மிகவும் சோகத்துடன் ஆச்சரியப்பட்ட நாள். நம்ப முடியாத நாள். கடவுள் எங்கே எங்கே என்று தேடிய நாள். ஒரு வேளை ஈ.வே.ரா. பெரியார் சொன்னது உண்மைதானோ என்று நினைக்க வைத்த நாள். ஆனால் கடவுளின் அல்லது இயற்க்கையின் திருவிளையாடலை யாரால் அறிய முடியும் அல்லது மாற்ற முடியும்?

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று முதலில் மாதா என்று கூறியது எவ்வளவு பெரிய உண்மை. எல்லோருக்கும் எதற்கும் அம்மா தானே. ஐயா நான் சொல்வது சொந்த அம்மாவை, பெற்ற தாயை, தமிழறிந்த தமிழர்களே வேறு அம்மாவைப் பற்றிக் கூறுகிறேன் என்று தவறாக எண்ணிவிடாதீர்கள். நமது தமிழ் நாட்டை ஆளும் கட்சி அரசியல் வாதிகளைக் கேளுங்கள் அவர்களும் அடித்துச் சொல்வார்கள் அம்மா தான் எல்லாம், எனது உயிரே அவர்களுக்குத் தான் என்று. இன்னும் நான்கு வருடங்கள் இந்தக் கூத்து நிச்சயமாக நடக்கும் அதன் பிறகு அன்றைய நிலைமைக்கேற்ப அம்மாவா, அப்பாவா, அண்ணனா, தம்பியா என்ற முடிவை எடுப்பார்கள். அதற்கும் நான் இப்போது எழுதுவதற் கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

நன்றாகக் குத்துக்கல் மாதிரி இருந்த எனது தாயார் "லேசாக உடம்பு சுடுகிறது. என்னவோ தெரிய வில்லை ரொம்ப வீக்காக இருக்கிறது. எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை" என்று வெள்ளிக் கிழமை Dec. 14 மதியம் சொன்னபோது இரண்டு டைலினால் (Tylenol) மாத்திரைகளைக் கையில் கொடுத்து இதைச் சாப்பிட்டால் சரியாகிவிடும் கவலைப் படாதீர்கள் என்று கூறி வெளியே சென்ற நான், ஒரு மணி நேரம் சென்று வீட்டிற்குப் போன் அடித்து அம்மா எப்படி இருக்கிறார்கள் என்று கேட்க டயல் செய்தால் நான்கு முறை அடித்து மெசேஜுக்குப் போனபோது நான் கவலைப் பட்டேன்.

உடனே என் மனைவிக்குப் போன் போட்டுக் கேட்டபோது அவளும் அம்மா தூங்குகிறார் போலுள்ளது மெசேஜ் தான் வருகிறது என்று கூற எனது மார்கெடிங் வேலையில் இரு கஸ்டமர்களை மறந்து வீட்டிற்குப் பறந்து போய் பார்த்தால் நாங்கள் ஆசையுடன் வளர்க்கும் எங்களது இரண்டு நாய்களும் சுற்றி நின்று, என்ன ஆயிற்று இந்த பாட்டிக்கு என பார்த்துக்கொண்டிருக்க, பாவம் கிழிந்த நாராக அந்த பெரிய உருவம் மாடிக்குக் கூடப் போகமுடியாமல் கீழேயே தரையில் படுத்து முக்கி முனக நான் பதறிப் போய் அம்மா அம்மா எனக் கூப்பிட அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வடிய உடம்பை என்னவோ செய்கிறது என்று திக்கித் திணறிக் கூற எனக்கு எதுவோ செய்து பந்து ஒன்று தொண்டையை அடைத்தது.

உடனே வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவ மனைக்குக் கூட்டிச்சென்று டாக்டரைப் பார்த்து "ஐயா இதுதான் நடந்தது என்ன உடம்பு என்று பாருங்கள், இவர்கள் எனது தாயார் ரொம்ப ஸ்வீட் லேடி, உடம்பில் ஷ¤கர் உள்ளது அதற்கு மருந்து மாத்திரை சாப்பிடுகிறார்கள் ஆகவே நன்றாக செக் அப் செய்யுங்கள்" என்று கூற அவரும் தன் கடமையைச் செய்து மருந்துகள் எழுதிக் கொடுத்து "ஒன்றும் கவலைப்படவேண்டாம்" என்று கூறியபோது தான் மனம் சிறிது நிம்மதி ஆகியது. வரும் வழியில் மருந்துகளையும் வாங்கி வீடு வந்து முதல் டோஸை கொடுத்த பிறகுதான் மற்ற வேலைகளைப் பற்றி யோசிக்க முடிந்தது.

எங்கே மற்ற விஷயங்களை யோசிக்க முடிந்தது? மறுபடியும் மறுபடியும் அம்மா அம்மா தான் ஞாபகம். 17 வயதில் திருமணம் செய்து கொண்டு குடும்ப பாரத்தை சுமக்கத் தொடங்கி முதல் பெண் குழந்தையை 10 மாதம் வளர்த்து ஒரு சிறிய விபத்தில் பறிகொடுத்து, அதற்கப்புறம் ஒரு ஆணையும், இரண்டு பெண்களையும் பெற்று வளர்த்து, குழந்தைகளுக்கும் எல்லா விஷயத்திலும் எல்லோரும் பர்·பெக்டாக இருக்கவேண்டும் என்று அதிகம் எதிர்பார்த்த புருஷனுக்கும் ஒரு பாலமாக இருந்து அவரது கோப தாபங்களைத் தாங்கி சிரித்த முகத்துடன் எப்போதும் இருந்து தன் பாட்டையும், வாய்ப் பாட்டையும் கவனித்துக்கொண்டு இருந்தது பொய்யல்ல. மனது கனமாக இருந்த நேரங்களில் கூட தனது பாட்டினால் எல்லார் மனச்சுமையையும் குறைத்தது பொய்யல்ல.

அவர்களது தந்தையைப் (எனது தாத்தா) போலவே இவரும் J. கிருஷ்ணமூர்த்தி ·பாலோயர். JKயின் வாழ்க்கை தத்துவத்தை தப்பாமல் பின்பற்றி வாழ்க்கை பிரச்சனைகளை எளிதாக சமாளித்து எப்போதும் சந்தோஷமாக இருக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றவர். அவர்களது அமெரிக்க விஜயம் போது இருந்த ஒரே ஆசை ஒரு முறை கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலீஸ் அருகில் உள்ள JKவின் Ohio வாலீ ஆசிரமத்தைப் பார்ப்பதுதான். என் மனைவியும், பெண்ணும் அவர்களை அங்கே கூட்டிக்கொண்டு போய் 2 நாட்கள் இருந்தது எங்களுக்குப் பெரிய மனத் திருப்தி.

எல்லோரும் நல்லவர்கள் உலகில் யாருமே கெட்டவர்கள் கிடையாது என்ற சித்தாந்தத்தை கடைசிவரை கடைபிடித்தவர்கள். "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்நயம் செய்துவிடல்" என்ற குறளை வள்ளுவர் எழுதியது இவருக்காகவோ என்று எனக்கு பலமுறை தோன்றியுள்ளது. நானும் எனது நண்பரும் இந்தக் குறளைச் சொல்லும்போது "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் ஓட ஓங்கி உதைத்துவிடல்" என்று மாற்றிச் சொல்லி அற்ப சந்தோஷம் படுவோம். (உதை வாங்கியது உண்டே தவிர கொடுத்தது கிடையாது).

அந்த Dec. 15 சனிக்கிழமைக் காலை 3 மணிக்கே எனக்கு தூக்கம் கலைந்து அம்மா அறைக்குப் போய் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க, தூங்காமல் புரண்டு புரண்டு படுத்து அம்மா, அப்பா என்று முனகிக் கொண்டிருந்தார். நான் "அம்மா எப்படி இருக்கிறது உடம்பு" எனக் கேட்டதும் "ஒன்றும் முடியவில்லை ரொம்ப வீக்காக இருக்கிறது ஒரே இருமல், உடம்பு வலி" எனக் கூறினார். "இருமலுக்கு மஞ்சள் பொடி, மிளகு பால் காய்ச்சித் தரவா?" என நான் கேட்க சரி என்று கூறினார். (எங்களுக்கு அவர் எப்போதும் இருமலுக்கு அதைத் தான் கொடுப்பார்கள். ஒரே நாளில் சரியாகிப் போகும். மஞ்சள் பொடிக்கு அவ்வளவு மருந்துச் சக்தி. அதைத் தான் மஞ்சள் மகிமை எனப் பெரியவர்கள் கூறியிருக்க வேண்டும்!!!). உடனே கீழே வந்து அதைக் காய்ச்சும் நேரத்தில் டெல்லியிலிருக்கும் தங்கையை போனில் கூப்பிட்டு அம்மாவிற்கு உடம்பு சரியில்லை. U.S. வந்து 3 மாதம் இருக்கமுடியுமா? எனக் கேட்டு அவளும் சரி எனக் கூற போனுடன் மேலே போய் அம்மா உரள் பெண்ணுடன் பேசுங்கள் எனக் கூறியபோது இரண்டே இரண்டு நிமிடம் பேசிவிட்டு என்னால் முடியவில்லை பிறகு பேசுகிறேன் என்று சொன்னபோது நிஜமாகவே அம்மாவிற்கு ஏதாவது சீரியஸ் உடம்போ என்று எண்ணினேன்.

மஞ்சள் பொடி, மிளகு பாலைக் குடிக்கவைத்து சிறிது ஆறுதல் சொல்லி அமைதியாகத் தூங்கச் சொல்லி நான் எனது கம்ப்யூடரை நோக்கி எனது ஈ-மெயில்களைப் பார்க்கச் சென்றேன். எடுத்தவுடன் ஒரு விளம்பரம் "இந்தியாவிலிருந்து வரும் உங்கள் சொந்த பந்தங்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளதா?" என்று கேட்டு இல்லையென்றால் நமக்கு எவ்வளவு செலவு என்ற டீடெயில்ஸ் வேறு. பகீர் என்று வயத்தைக் கலக்கியது. நல்லகாலம் ஒவ்வொரு முறை வரும்போதும் எனது தாயார் மறக்காமல் எங்களது சொல்லைத் தட்டாமல் சென்னையிலிருந்தே ரூ. 15000 கொடுத்து ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துத்தான் வருவார்கள். ஆகவே அந்த பகீர் கொஞ்சம் குறைந்து அந்தப் பாலிசியை அம்மாவிடம் இருந்து வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஏனோ தோன்றியது. அம்மா இங்கு வந்த 8 முறையும் இன்சூரன்ஸோடு தான் வந்தார்கள் ஆனால் ஒரு முறை கூட அதை பயன் "படுத்த" வில்லை அம்மாவிற்கு உடம்பும் "படுத்த"வில்லை.

மணி காலை 5.30. எனது மனைவி எழுந்து அம்மாவிடம் போய் தலையை பிடித்துவிட்டுக்கொண்டு பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்தேன். அம்மாவும் முக்கி முனகி, திக்கித் திணறி திடீரென்று 41 வயதில் இறந்து போன எனது இரண்டாவது தங்கையைப் பற்றியும் 4 வருடங்களுக்கு முன்னால் இயற்கையான காரணங்களால் இறந்த எனது அப்பாவைப் பற்றியும் ஏதோ பேசினார். பாவம் அந்த புத்திர சோகம் அவரை மிகவும் பாதித்து இருந்தது. அந்தப் பெண் பிறவியிலேயே சிறிது உடல் ஊனமும் மற்ற ஹெல்த் பிரச்சனைகளுடனும் தான் இந்த உலகில் ஜனித்தாள். அவர் வாழ்வில் இது இரண்டாவது புத்திர சோகம் அதை அவரால் தாங்கவே முடியவில்லை. என்ன தான் JKயின் தத்துவங்கள் மனதில் இருந்தாலும் ஒரு பெற்ற தாயால் புத்திர சோகத்தை தாங்குவது அவ்வளவு எளிதல்ல. தான் போன பிறகு அந்த பெண் என்னவெல்லாம் செய்யவேண்டும் என யோசித்து யோசித்து எல்லா காரியங்களையும் செய்து வைத்திருந்த அந்த தாயால் அந்தப் பெண் திடீரென மறைந்ததால் அவள் போன பிறகு தான் என்ன செய்வோம் என்று எண்ணியே பார்க்காததால் அதை நினைத்து நினைத்து மனதில் குமைந்துக் கொண்டு இருந்தார் வெளியில் அதிகம் சொல்லாமல்.
அம்மாவிற்கு என் மனைவி சாப்பிட ஓட்ஸ் கஞ்சி கொடுத்துக் கூடவே அமர்ந்து நன்கு ரெஸ்ட் எடுக்கச் சொல்லிக் கொண்டிருக்க அதற்குள் அந்த இன்சூரன்ஸ் பேபர்களை நான் தேடி எடுத்து அவர்களைக் கூப்பிட்டு விஷயங்களை தெரிந்து கொண்டபோது மணி 9.30. அபோது தான் அம்மா நன்றாக தூங்க ஆரம்பித்துவிட்டார். சப்தம் எதுவும் போடாதீர்கள் என என் மனைவி சத்தமாகக் கூற நான் அவளைப் பார்த்துச் சத்தம் போடாதே என்று வாயில் விரலை வைத்து சைகை செய்தேன். என் மனைவி எங்கள் சொந்தக்கார டாக்டர் ஒருவருக்கு போன் செய்து அம்மா நிலைமையைச் சொல்ல அவர் ஆஸ்பிடலில் சேர்ப்பது நல்லது சுகர் இருப்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் எனக் கூற அவர்களை எந்த ஆஸ்பிடலில் உடனே சேர்ப்பது எனப் பேச ஆரம்பித்தோம்.

இப்போது வாசலில் காலிங் பெல் அடிக்க எப்போது வீட்டை பெயிண்ட் அடிக்க எவ்வளவு ஆகும் என்று கேட்டிருந்த எங்களுக்கு கோட் (quote) கொடுக்க ஒரு வேலைக்கார கான்ட்ராக்டர் வந்து இருந்தார். நல்ல நேரம் பார்த்தார் இந்த ஆள் என நான் நினைக்க என் மனைவி இப்போது விட்டால் இன்னும் ஒரு மாதம் சென்றுதான் வருவார் ஆகவே நீஙக்ள் போனில் ஆஸ்பிடல் மற்றும் இன்சூரன்ஸ் விஷயங் கலை விசாரியுங்கள் நான் மாடியை இவருக்குக் காட்டுகிறேன் என்று அந்த ஆளைக் கூட்டிக்கொண்டு மாடிக்குச் சென்றாள். மணி 10.24 AM. நான் இங்கிருந்து அம்மா தூங்குகிறார்களா? என்று கேட்க அவள் ஆமாம் இப்போது தான் பார்த்தேன் எனக் கூற அப்பாடி எனப் பெருமூச்சு விட்டேன். அடுத்த நிமிடம் மாடியிலிருந்து என் மனைவி "கணேஷ் சீக்கிரம் வாங்க, சீக்கிரம் வாங்க, எனக்கு பயமாக இருக்கிறது" எனக் கத்த அந்த வெளி ஆள் முழிக்க நான் தடுக்கி விழுந்தபடி மாடிக்கு ஓட எனது தாயார் பேச்சு மூச்சு இல்லாமல் பாதி கண்ணைத் திறந்து சிறிது வாயும் திறந்து அசையாமல் படுக்கையில் கிடப்பதைப் பார்த்து பதறிப் போய் அம்மா அம்மா என்று அவர்களை எழுப்ப முயல ஒரு பதிலும் அம்மாவிடமிருந்து இல்லை. கை நடுங்க நாடியைப் பார்க்க துடிப்பது போல இருந்தது. நெஞ்சில் கை வைத்து பார்த்தால் இதயத் துடிப்பு இருப்பது போல இருந்தது. இதற்கு முன்னால் இதெல்லாம் செய்து பழக்கம் இல்லாததால் எனக்கு உடல் நடுங்க, என் மனைவி ஹிஸ்டீரியா பேஷண்ட் போலக் கத்த நாய்கள் இரண்டும் என்ன என்ன என்று சுற்றிச் சுற்றி வர வந்த வேலைக்காரரிடம் "என்னையா சும்மா நிற்கிறாய்? உனக்கு இதெல்லாம் செக் செய்யத் தெரியுமா?" என நான் கேட்க அவர் நான் வந்த நேரம் சரியில்லை பிறகு கூப்பிடுகிறேன் என்று வாசலை நோக்கி பறந்தார் பயத்துடன்.

உடனே 911ஐக் கூப்பிட்டுச் சொல்ல அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க 5 நிமிடத்தில் ஆம்புலன்ஸ், போலிஸ் கார், ·பயர் இஞ்சின் வீட்டு வாசலில் பறந்து வந்தது. திமு திமு என்று நான்கு ஐந்து பேர் ஓடிவர அவர்களை வழி நடத்தி மேலே அம்மா அறைக்குக் கூட்டிச் சென்றோம். எங்களை வெளியே தள்ளி விட்டு அவர்கள் அம்மாவை கவனிக்க ஆரம்பித்தனர். யார் உள்ளே வந்தாலும் கதவைத் திறக்கும் முன் எங்கள் செல்ல நாய்கள் வள் வள் என்று குறைத்து தன் கடமையைச் செய்யும் ஆனால் அன்றோ அத்தனை நிசப்தம், வீட்டில் ஏதோ சீரியஸ் இந்த நேரத்தில் நாம் தொல்லை கொடுக்கக் கூடாது என எண்ணியதோ என்னவோ வாய் மூடி நடப்பதை கவலையுடன் பார்த்துக் கொண்டு இருந்தன இரண்டும். அந்த இரு உயிர்கள் மேலும் எனது தாயார் மிகவும் பாசமாக இருந்தார்.

ஆம்புலன்ஸில் வந்த 3 கடோத்கஜர்களும், 2 கடோத்கஜிகளும் மேலே அம்மாவைப் புறட்டி எடுத்துவிட்டு ஒருவர் எங்களிடம் வந்து உடனடியாக ஆஸ்பிடல் கூட்டிச் செல்கிறோம் எனக் கூறியபோது அம்மா உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே? என்று நான் கேட்க அவர் ஐயா அதற்குத்தான் அவரை அங்கு கொண்டு செல்கிறோம் நீங்கள் உங்கள் காரில் மெதுவாக வாருங்கள் அவசரமாக எங்களைப் பின் தொடராதீர்கள் என ஒரு முறைக்குப் பல முறை கூறி அந்த ஐவரும் எனது தாயாரைத் தூக்கிக் கொண்டு ஆம்புலன்ஸ¤க்கு வந்தனர். என்ன ஆயிற்றா? உயிர் இருக்கிறதா என்ற கேள்விக்கு மிக மழுப்பலான பதில் தான் வந்தது. இதற்குள் இரண்டு மூன்று முக்கிய போன்களைச் செய்து ஆஸ்பிடல் அட்ரெஸ் கொடுத்து ஆம்புலன்ஸ் இன்னும் கிளம்பவில்லையே என்று பார்த்தால் ஒருவர் மட்டும் அம்மாவை ஏதோ செக் செய்துக்கொண்டு இருக்க மற்றவர்கள் வேறு ஏதோ முக்கிய விஷயங்களைக் கவலையின்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அந்தக் காட்சி கண்களை உறுத்தியது.

எங்கள் டிரைவ் வேயில் 20 நிமிடங்கள் ஆற அமர இருந்த பிறகுதான் அந்த வண்டி கிளம்பியது. பதற்றம் எங்களுக்குத்தான் அவர்களுக்கு தினமும் அதைப் பார்த்துப் பார்த்து மனம் கனத்துப் போய் இருந்தது போலும். பத்தே நிமிடத்தில் ஆஸ்பிடல். உள்ளே போனால் அன்பாக பேசி எல்லா இன்சூரன்ஸ் டீடைல்ஸையும் வாங்கி முடித்தவுடன் டாக்டர் உங்களை உள்ளே அழைக்கிறார் என்று ஒரு நர்ஸ் கூப்பிட உள்ளே சென்றோம்.

டாக்டர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இருக்கும்போதே அதைப் பற்றிக் கவலைப்படாமல் "எனது அம்மா எங்கே? எப்படி இருக்கிறார்?" என நான் கேட்க அவர் மிக அமைதியாக அதைச் சொல்லத்தான் உங்களைக் கூப்பிட்டேன். நீங்கள் அவருக்கு என்ன உறவு? என்று கேட்க பொறுமை இழந்து நான் அவர் மகன் என்று குரலை உயர்த்த அவர் என்னை அமைதி காக்கச் சொல்லி மெதுவாக அம்மா இனி திரும்பி வரமாட்டார் என்ற செய்தியைக் கூறினார். விளையாடாதீர்கள் என்ன ஆயிற்று? எப்படி இறந்தார்கள்? என நான் கேட்க அவர் கூறிய பதில் "ஐயா, அதை நீங்கள் தான் சொல்லவேண்டும் ஏனெனில் உயிர் உங்கள் வீட்டிலேயே பிரிந்து விட்டது." எனச் சொல்ல தலைச் சுற்றி அதை ஏன் அவர்கள் எங்களிடம் கூறவில்ல என்று நான் கேட்க அவர்களுக்கு அதைக் கூற அனுமதி இல்லை முடிவை ஒரு டாக்டர்தான் கூறவேண்டும் அதனால தான் சொல்லவில்லை என்றார். துக்கம் தொண்டையை அடைத்தது. அம்மா அவ்வளவுதான் இனி திரும்ப வரமாட்டார்கள் என்ற எண்ணமே என்னவோ செய்தது. இதற்குள் நாங்கள் போன் செய்து சொல்லியிருந்த நான்கு ஐந்து சொந்தங்களும், நண்பர்களும் அங்கே தேடி வர அம்மா போய்விட்டார்கள் என்ற செய்தி கேட்டு சிலர் நம்பமுடியாமல் திகைக்க, சிலர் கதற நாங்கள் அவர்களை சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.

என்னதான் மனதில் வருத்தமும் சோகமும் இருந்தாலும் அடுத்து நடக்கவேண்டியதை கவனிக்க வேண்டியது ஆயிற்று. வீட்டிலேயே இறந்ததால் பாடியை போஸ்ட் மார்டம் செய்தாக வேண்டிய கட்டாயம் வேறு. (எனக்கு பகீர் என்றது. நான் கொடுத்த மஞ்சள் பொடி, மிளகு பால் இந்த நாட்டு டாக்டர்களுக்கு புரியுமா அல்லது அதை வைத்து நம்மை சந்தேகப்படுவார்களோ? என்று. அது அம்மா வயிற்றில் ஜீரணமாகி இருக்கவேண்டுமே என்று நான் வேண்டாத தெய்வம் இல்லை). அதை கவர்ன்மெண்ட் ஆஸ்பிடலில் தான் செய்யவேண்டும் என்பதுதான் சட்டமாம். ஆகவே பாடியை இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கே எடுத்துச் சென்றுவிடுவோம் என்று அவர்கள் கூற அந்த வருத்தத்திலும் அம்மாவின் உடலில் இருந்த வைர, தங்க நகைகளை எடுக்க வேண்டுமே என்ற கவலை தலை தூக்கியது. இன்சூரன்ஸ் கம்பெனி இதர செலவுக்கு பைசா கொடுப்பார்களா? அல்லது கையிலிருந்து செலவு செய்ய வேண்டுமா? என்ற கேள்வி வேறு மனதில் எழுந்தது.

நண்பரின் மனைவி உதவியுடன் நகைகளை எல்லாம் கழற்றிய பிறகு அவர்கள் பாடியை கவர்ன்மெண்ட் ஆஸ்பிடலுக்கு எடுத்துப் போவதைக் கண்ணீருடம் பார்த்துக்கொண்டிருந்தோம் பத்திரமாக நகைகளை பாக்கெட்டில் போட்டபடி. அம்மாவின் பாடி கூட இனி வீட்டுக்கு வராது கவர்ன்மெண்ட் ஆஸ்பிடலி லிருந்து உடல் இறுதி காரியங்களுக்கு ·ப்யூனரல் ஹோம் தான் வரும் என்ற உண்மை சுட்டது. அம்மா இனிமேல் உயிருடன் வரமாட்டார்கள் வரமாட்டார் கள் என்று ஒரு பக்கம் மனது கூறிக்கொண்டே இருந்தது. ஆனாலும் இந்தப் பாழாய் போன மனது அம்மா சுண்டு விரலில் இருந்த காஸ்ட்லி வைர மோதிரத்தை கழட்ட மறந்துவிட்டோமோ? என்ற சந்தேகத்தை எழுப்பியது. தனியே போய் அதை செக் செய்த பிறகுதான் மனம் சீரியஸாக அம்மாவைப் பற்றி வருத்தப்பட ஆரம்பித்தது. (மனம் ஒரு குரங்கு அல்லது நான் இவ்வளவுதான்).

மனதைத் தேற்றிக்கொண்டு சொந்த பந்தம், நண்பர்களுடன் வீட்டிற்கு வந்தால் வாசலில் 15-20 பேர்கள் விஷயம் அறிந்து காத்துக்கொண்டிருந்தனர். எப்படியோ பாட்டு மாமி போய்விட்டார் என்ற விஷயம் அட்லாண்டா தமிழர்களுக்குத் தெரிய வந்து, ஒரு மணி நேரத்தில் 100 பேர்களுக்கு மேல் எங்கள் வீட்டில் கூடிவிட்டனர். வாசல் பெல் அடித்தாலே பாய்ந்து பாய்ந்து குரைக்கும் எங்கள் செல்ல நாய்கள் அன்று மட்டும் மவுன விரதம் அனுஷ்டித்தது. ஏன் என்பது இன்றுவரை புரியாத புதிர்.

ஒரு சில க்ளோஸ் கசின்களும் உயிர் நண்பர்களும் விடுவிடு என்று காரியத்தில் இறங்கி அடுத்தடுத்த நாள் அன்பு அம்மாவிற்கு நடக்கவேண்டிய கடைசி காரியங்களுக்காக போனிலும் நேரிலும் அலைய ஆரம்பித்தார்கள் அவ்வப்போது நடப்பதை எங்களிடம் தெரிவித்தவாறு. துக்க நேரத்தில் இவர்களில் தேவை மிகவும் புரிந்தது. நமக்கும் நாலு பேர்கள் இருக் கிறார்கள் என்ற எண்ணமே அம்மா நம்மை விட்டுப் பிரிந்தாலும் மனது ஒடிந்து விடாமல் இவர்கள் தடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையை தந்தது. எனது மகளும் மருமகனும் Rochester, NYயிலிருந்து உடனடியாகக் கிடைத்த ·பிளைட்டில் வந்து இறங்கிவிட்டனர்.

வாசலில் இடி இடிப்பது போல ஒரு சத்தம் நான்கு ஐந்து பேர்கள் வேகமாக வந்து கதவை இடித்துத் தள்ளி திறந்து உள்ளே வர திரும்பிப் பார்த்தால் நமது K.M. கோவிந்தசாமியின் குடும்பம் உள்ளே வந்துகொண்டிருந்தனர். யாரையுமே பார்த்து குரைக்காத எங்கள் செல்ல நாய்கள் இவர்களைப் பார்த்து அதிகம் குரைத்தன. நான் நாய்களை அடக்க நாக்கு நீ..ளம் "எதுக்கு இந்த சனியன்களை வளர்கின்றீர்கள்" என்று கேட்டது இன்னும் எனக்கு மறக்கவில்லை. அடுத்த செகண்ட் நாக்கு நீ..ளம் நாகலட்சுமி தலைவிரி கோலமாக நின்று ஓ என்று கத்தி "ஐயோ மாமி போய்விட்டார்களே" என்று கண்ணீரே வராமல் கதற அவளை அடக்க இரண்டு மூன்று நிமிடம் ஆகியது. நான்காவது நிமிடத்தில் ஒன்றுமே நடவாதது போல சாதாரணமாகப் பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு அவசரமாக கிளம்பியதில் சாப்பாடு கொடுக்க வில்லையாம் அதனால் இங்கே சாப்பிட என்ன இருக்கிறது என்று யாரையோ கேட்டுக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

அதற்குள் அந்த சூப்பர் ஹைப்பர் குழந்தைகள் குலுங்கி குலுங்கி சிரித்தபடி கோவிந்தசாமியிடம் மாமா மறுபடி காரில் வரும்போது சொன்ன ஜோக்கை சொல்லு சொல்லு எனக் கேட்டுக் கொண்டிருந்தன. அவனும் இரண்டு முறை சும்மா இருங்கள் என்று சொல்லி அவர்களை அடக்கப் பார்த்தான். ஆனால் முடியவில்லை. திடீரென வயத்தெரிச்சல் வரது கோவிந்தசாமியைப் பார்த்து "இங்கே எல்லோரும் ரொம்ப வருத்தமாக இருக்கிறார்கள் குழந்தைகள் ஆசைபடுகிற மாதிரி இப்ப காரில் வரும்போது சொன்னேயே அது மாதிரி இரண்டு ஜோக் எடுத்துவிடு அப்போதான் இங்கேயும் நிலமை சரியாகி எல்லோரும் நல்ல மூடுக்கு வருவார்கள் எனக் கூற வேளை கெட்ட வேளையில் இந்த ஆள் என்ன சொல்கிறார் என்று எல்லோரும் திரும்பிப் பார்க்க என் முகம் கோபத்தில் சிவந்தது ஆனால் அதைக் காட்ட முடியாமல் கண்ணீர் அருவியாகக் கொட்டியது.

இதற்குள் கோ.சாமி எதையோ நினைத்து பெரிதாக விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான். பொறுமை இழந்த ஒருவர் அவரிடம் தயவு செய்து இப்படியெல்லாம் செய்யாதீர்கள் எல்லோரும் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள் என்று கூற அவன் "வாயை மூடுயா, நீதான் இங்கே எல்லாம் நின்னு பேசறியே, கொஞ்சம் சும்மா இரு எங்களுக்கும் இந்த குடும்பத்தின் மீதும் போன அந்த மாமி மீதும் அக்கறை உண்டு அதனால் தான் குடும்பத்தோடு அத்தனை பேரும் இங்கே வந்திருக் கிறோம்" எனச் சொல்லி அவரை அடக்கி ஒருவர் இறந்தால் அழக்கூடாது, துக்கப்படக்கூடாது, எல்லோரும் சந்தோஷப் படவேண்டும். இந்த உலக பந்தங்களிலிருந்து ஒரு உயிர் விடுதலைப் பெற்றுப் போனதை நாம் எல்லாம் கொண்டாடவேண்டும்" என்று பெரிய ஞானியைப் போல பேச எங்களுக் கெல்லாம் பற்றிக்கொண்டு வந்தது.

உணர்ச்சி வசப்பட்ட ஒரு நண்பர் துக்க வீட்டிலே இப்படி எல்லாம் பேசாதீர்கள், கடவுளே உங்களை மன்னிக்கமாட்டார், தயவு செய்து நீங்கள் எல்லாம் வெளியே போய்விடுங்கள் எனக் கூற புயல் போல அங்கே வந்த நாக்கு நீ..ளம் நாகலட்சுமி "இங்கே இருக்கிற 100 பேரில் ஒரே ஒருவன் தான் கொஞ்சம் அறிவோடு பேசுகிறான், பெரிய ஞானியாக இருக்க வேண்டியவன் ஏதோ எங்க அதிர்ஷ்டம் எங்களோடு இருக்கிறான், இந்த அட்லாண்டாவிற்கே இவனால் பெருமை, இவன் பேசுவதையெல்லாம் வெள்ளைக் காரர்கள் வாய் பிளந்து கேட்கிறார்கள் ஆனால் நம்ம ஆட்கள் தான் இதை எல்லாம் புரிந்துகொள்ள முடியாமல் என் தம்பியை வக்ர புத்தி என வர்ணிக்கிறார்கள் என குரலை உயர்த்திச் சொல்ல நாங்கள் எல்லாம் பேய் முழி முழித்தோம்.

திடீரென்று வயத்தெரிச்சல் வரது "நாகு இவங்களுக்கெல்லாம் நல்லதைச் சொன்னால் மனதில் ஏறாது, ஒரு பிரியோஜனமும் இல்லை இதுக்குப் பதிலாக சுவற்றில் முட்டிக்கொள்ளலாம், நான் போய் ஒரு சிகரெட் பிடித்து மனதை ஆற்றிக்கொண்டு வருகிறேன்" என்று ஒரு டேபிள் மேல் இருந்த எனது முழு பாக்கெட்டை தன் பையில் போட்டுக்கொண்டு வெளியே செல்ல என் துக்கம் இன்னும் கொஞ்சம் அதிகமாகியது. இந்த மொத்தக் கும்பலில் 3 பேர்கள் தான் சிகரெட் குடிப்பவர்கள் என்னையும் சேர்த்து. வயத்தெரிச்சல் வரதராஜனும் இன்னொரு நல்ல நண்பரும் தவிர வேறு யாரும் சிகரெட்டைத் தொடக்கூட மாட்டார்கள். நெருங்கியவர்கள் உரிமையாக என்னிடம் எத்தனையோ முறை விட்டுவிடுங்கள் இந்தப் பழக்கத்தை என்று வேண்டுகோள் வைத்திருக் கின்றனர். இப்போது வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என் மனைவியும் பெண்ணும் சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் எங்கள் கண்ணில் படாமல் எங்காவது போய் பிடித்துத் தொலையுங்கள் என்று என்னைத் திருத்த முடியாமல் அவர்கள் திருந்திவிட்டனர். இந்த நேரத்தில் இந்தக் குடும்பத்துடன் மல்லுக்கு நிற்பதைக் காட்டிலும் ஒரு சிகரெட் பிடிக்கத் தோன்றியது. மற்ற சிகரெட் பிடிக்கும் நண்பரைக் கூப்பிட்டு வயத்தெரிச்சல் வரது முன் பக்கம் போனதால் அவனை அவாய்ட் செய்ய நாங்கள் பின் பக்கம் பிடிக்கச் சென்றோம். உள்ளே இன்னும் "ஒருவர் இறந்தால் சந்தோஷப்பட வேண்டும்" என்ற தலைப்பில் கோவிந்தசாமியும் அவனது அக்கா நாக்கு நீ..ளம் நாகலட்சுமியும் இன்னும் விடாமல் பேசித் தள்ளிக்கொண்டிருந்தனர். அவர்களை வெறுப்பாக ஒரு பார்வை பார்த்து வெளியே சென்றேன் நண்பருடன் ஒரு தம் அடிக்க.

ஒரு இரண்டு நிமிடம் கூட ஆகியிருக்காது உள்ளே பெரிய சத்தம். கோவிந்தசாமி மற்றும் நாக்கு நீ..ளம் குரல் ஓங்கி ஒலிக்க நான் கோபத்தின் உச்சக்கட்டதில் இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் இந்தக் குடும்பத்தால் அட்லாண் டாவை விட்டு வேறு எங்கோ போனாலும் பரவாயில்லை என்று பயந்து உள்ளே போனால் பார்த்தக் காட்சியை என்ன என்று சொல்லுவது. வயத்தெரிச்சல் வரது மார்பை பிடித்தபடி மல்லாக்க கிடக்க ஞானி கோவிந்தசாமியும் அவன் அக்கா நாக்கு நீ..ளமும் "ஐயையோ ஐயையோ இவருக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லையே? உடனே டாக்டரைக் கூப்பிடுங்கள், ஆம்புலன்ஸ¤க்குப் போன் செய்யுங்கள்" எனக் கத்தி ஆர்பாட்டம் செய்து கொண்டு இருந்தனர். என்ன ஆயிற்று என்று கேட்டேன். வயத்தெரிச்சல் வரது சிகரெட் பிடித்து முடித்து உள்ளே வர வாசல் கதவை லேசாகத் திறந்தாராம் "நாகு எனக்கு மார்பு வலிக்கிறது பயமாக இருக்கிறது" என்று கூறி அப்படியே சாய்ந்து விட்டாராம். நான் 440 வோல்ட் ஷாக் அடித்த மாதிரி நின்றேன்.

மறுபடியும் என் வீட்டில் காலையில் நடந்த அதே கூத்து. ஆம்புலன்ஸ், ·பயர் இஞ்சின் மற்றும் போலிஸ் வர பறுபடியும் 5 கடோத்கஜர்களும் / கடோத்க ஜிகளும் வர வயத்தெரிச்சல் வரதுவை புறட்டி எடுத்து மார்பில் குத்து குத்து என்று குத்தினர் ஆனால் இம்முறை அவரைத் தூக்கிக்கொண்டு ஆஸ்பிடலுக்கு உடனே ஓடினர். ஞானி கோவிந்தசாமியும் அக்காவும் குழந்தைகளும் தனது ஊருக்கு உபதேசம் 10 நிமிடத்திற்கு முன்னால் செய்ததை மறந்து உருண்டு பிரண்டு அழுது பின்னாலேயே ஓட இரு நண்பர்கள் அவர்களை சமாதானப் படுத்தி தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு அவர்களையும் ஆஸ்பிடலுக்குக் கூட்டிச் சென்றனர்.

"சனி பொணம் தனி போகாது" என்று யாரோ சொல்லிக்கொண்டு இருந்தது காதில் விழுந்தது. மனது ஐயோ என்று அலறியது. இன்னும் சில மணி நேரங்களுக்கு வயத்தெரிச்சல் என்ன ஆனார் என்று எங்களுக்குத் தெரியப் போவதில்லை. ஆனாலும் அந்த வருத்தத்திலும் ஞானி கோவிந்தசாமியும் அவன் அக்கா நாக்கு நீ..ளம் நாகலட்சுமியும் ஒருவர் இறந்தால் என்ன செய்யவேண்டும் என்று கூறியதும் அவர்களுக்குக் கிட்டத் தட்ட அந்த நிலை வந்ததும் அவர்கள் நடந்துகொண்ட விதமும் எங்களை வெகுவாக பாதித்தது.

நன்றி

அட்லாண்டா கணேஷ்

பின் குறிப்பு: நல்ல காலமாக ஆஸ்பிடலுக்குச் சென்ற வயத்தெரிச்சல் வரது இதய அறுவை சிகிச்சையுடன் ஒரு மாதம் ஆஸ்பிடலில் இருந்து குணமாகி வீட்டிற்கு வந்துவிட்டார். அதில் ஆச்சரியம் அந்தக் குடும்பம் இப்போதும் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று ஒரு வேளை அவர் போயிருந்தால் நாங்கள் உங்களைப் போல அழுது ஆர்பாட்டம் செய்திருக்க மாட்டோம் என்று சத்தியம் செய்கிறார்கள் வயத்தெரிச்சல் வரது முன்பாகவே. "கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்" என்று யாரோ ஒரு மகான் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
More

Dear Ann Landers
கோவிந்தசாமியின் "அரிய" கருத்து 2 - பாசம் ஒன் வே டிரா·பிக்கா?
தானம்
Share: 




© Copyright 2020 Tamilonline