Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2006 Issue
ஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
அயோத்தி
- நகுலன்|ஆகஸ்டு 2006|
Share:
Click Here Enlargeஒரு வெள்ளிக்கிழமை சீனுவும் அவன் தாயார் சரஸ்வதி அம்மாளும் வெளித் திண்ணையில் மிகவும் சநதோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மணி 10-30, நல்ல வெய்யில். தெருவில் சனசஞ்சாரமில்லை. ஆகாயம் நல்ல நீலம். ஒரு வெள்ளை மேகம் கூட இல்லை. சீனுவின் தகப்பனார் சங்கரய்யர் கடைத்தெருவுக்குப் போயிருந்தார். அதனால்தான்... சீனு தொடர்ந்து சிந்திக்க வில்லை. ஒருவேளை அதிகமாகச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் படிப்பதின் விளைவாக இருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் அது அப்படியில்லை என்பதும் அவனுக்குத் தெரியும். உண்மையை விட, வாழ்க்கையை விட, வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது. அப்படி ஒன்றும் விலகி நிற்கவில்லையே, சரஸ்வதி அம்மாள் குரல் அவனைத் தட்டி எழுப்பியது. ''என்னடா சீனு கதை ஏதாவது எழுதத் திட்டமிடுறாயா? ஒன்றும் வேண்டாம்'' என்றாள். அவன் ஒன்றும் சொல்லவில்லை. ஒருமுறை அவன் அம்மா சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது. ''சீனு, இது ஒன்றும் வேண்டாம், ஒருவரும் படிக்க மாட்டார்கள். நாலு பேர்கூட வாழ்ந்தால் இதெல்லாம் அப்படித்தான் இருக்கும். உன் அப்பாவைத்தான் பாரேன்..'' என்று சொல்ல வந்தவள் நிறுத்திக் கொண்டாள். அவனும் ''ஏன்?'' என்று கேட்கவில்லை. நாலுபேர் சேர்ந்தால் எந்தத் துறையிலும் என்ன நடக்கும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். என்றாலும் வாழ்க்கை கசக்கிறது என்று வாழ்க்கையை உதறிவிட முடிகிறதா என்ன? அவன், தெருவில் ஒரு நாய் எலும்புத் தோலுமாக நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு ஓடிப் போய்க் கொண்டிருப்பதை அர்த்தமில்லாமல் பார்த்தான். சரஸ்வதி அம்மா ''வா, உனக்குக் காபி என்றால் பிடிக்குமே குடித்துவிட்டு வரலாம்'' என்றாள். காப்பி வழக்கத்தைவிட, நன்றாக இருந்தது. மறுபடியும் வாசலில் வந்து உட்கார்ந்தார்கள்.

வாசல் கதவை தள்ளிக் கொண்டு ஒரு 'மாமி' வந்தாள். பருமனுமில்லாமல், ஒல்லியாகவு மிராமல் ஒரு தேகவாகு. ஒரு வெள்ளை ரவிக்கை. நாலைந்து இடங்களில் ஒட்டுப் போட்டு தைத்த ஒரு பச்சைப் புடவை. நல்ல சிவப்பு.

வந்தவள் சரஸ்வதி அம்மாவிடம் ''இதுதானே சங்கரய்யர் வீடு'' என்று கேட்டாள்.

''ஆமாம்''

''நிங்கள்தானே சரஸ்வதி அம்மா?''

''நீங்கள்தான் சீனுவோ? நீங்கள் தானே காலேஜில் எம்.ஏக்குப் படிக்கிறீர்கள்?''

''நீங்கள் யார்? தெரியவில்லையே.''

''போன மாதம் திருச்சிக்குச் சிதம்பரய்யர் பிள்ளை கல்யாணத்திற்குப் போயிருந்தேன். அங்கு உங்கள் பெண் ராதாவைப் பார்த்தேன். அவளும் என் மாமா - உண்டியல் வியாபாரம் நடத்துக்கிறாரே வேணுவய்யர் - அவர்பெண் லக்ஷ¢மியும் ஒன்றாகப் படித்தார்கள். உங்க பெண் இப்ப சிலோனிலே இருக்காளாமே அவள் புருஷனக்குக்கூட பெரிய வேலை கவர்ன்மெண்டில் வருமான வரி இலாகாவில் - என்று சொன்னாள். அவள் பையன்கள் ரெண்டு பேரையும் பார்த்தேன். நல்ல புத்திசாலிக் குழந்தைகள். ஐயோ, ஆனா அடிக்கிற லூட்டி! உங்க பொண்ணுக்கு ஆனாலும் பொறுமை ஜாஸ்திதான் மாமி, அவகிட்டக் கூடச் சொன்னேன். உங்களைப் பார்த்தாச் சொல்றேன்னு.''

சீனு இடைமறித்தான்.'' ''ஏன் மாமி, இதெல்லாம் சொல்றதுக்கா இந்த வெயில்லே வந்தேள்.''
சரஸ்வதி அம்மாள் ஒன்றும் பேசவில்லை. தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த மாமி, ''அம்பி, நீ அப்படித்தான் கேட்பாய், உனக்கென்ன தெரியும்?

சீனுவுக்கு அவள் உரிமைப் பேச்சு பிடிக்கவில்லை. ஆனால் தெருவைப் பார்த்துக் கொண்டே இருந்த சரஸ்வதி அம்மாள் அந்த அம்மாவைப் பார்க்காமலேயே ''சொல்லுங்கள், மாமி!'' என்றாள்.
''என்னவோ மாமி, நம்ப பெரியவா சும்மாவா சொன்னா.. பொண்ணாய்ப் பிறப்பதே பாவம். அதுவும் பெண்ணாப் பிறந்து வாழ்க்கைப் பட்டு, வாச்சவன் சரியா அமையாட்டா, போரும் போரும்! கேளுங்கோ, அம்மா! நீங்கள் கேழ்விப்பட்டிருப்பேள் திவான் நாகசாமி ஐயரைப் பத்தி, அவா தம்பிக்குத்தான் வாழ்க்கைப் பட்டேன். இவரும் மூக்கும் முழியுமா நன்னாத்தான் இருந்தார். படிப்புத்தான் வரலை. கார்ப்பரேஷன்லெ வேலையா இருந்தார். சொத்து இருந்தது. ஆனா, மனுஷன் குடிக்கிறதுன்னா மாமி இப்படியா குடிப்பான்! நீங்ககூடப் பார்த்திருப்பேள். ஒரு குளோஸ் கோட்டும் மூக்குப் பொடி கலர்லெ ஒரு குல்லாய்; சில சமயம் நன்னாக் குடிச்சிட்டுக் கார்ப்பரேஷன் லாரிலெ அக்கிரகாரத்லெ வீட்டு வாசல்லெ வந்து இறங்குவார். அக்கிரகாரத்திலே இவரைக் கண்டா எல்லாருக்கும் பயம். வைய ஆரம்பிச்சா வாயிலெ என்ன வார்த்தை தாண்ணு இல்லெ. மாமி, இவரோட நான் பட்டது 10, 15 இல்லே 25 வருஷம் அவதிப்பட்டேன். அவர் சாகிறபோது இப்ப இருக்கற வீடுதான் மிச்சம். பின்னெ நான் கஷ்டப்பட்டது. என் பெண்ணை ஒரு நாலு கிளாஸ் படிக்க வைச்ச கஷ்டம், அவர் அண்ணா செத்தப் பிறகு, அந்தக் குடும்பம் பாம்பேக்குப் போயிடுத்து. சொந்தக்காரர் ஒத்தரும் திரும்பிப் பார்க்கலெ. கடைசியா அவளை இந்த ஊரிலெ உள்ள ''கோமள விலாஸ்'' ஹோட்டல் ஹெட்குக்குத்தான் கொடுத்தேன். அவளுக்கு இஷ்டமில்லே. பின்னெ என்ன பண்றது மாமி? வேணுஐயர் கிட்ட சொன்னதும் - அதான் சரின்னார். அவர் கலியாணத்திற்கு வரல்லை. சேஷனும் இந்த வீட்டுக்கு ஆசைப்பட்டுத்தான் என் பெண்ணுக்குத் தாலி கட்டினான். எப்படியும் ஒரு ஆண் துணை வேண்டியிருக்கே, மாமி? இப்பெல்லாம்னா பெண்கள் வேலைக்குப் போறா. அவள் அப்படிப் படிப்பிலும் சுட்டியில்லே. பின்னெ என்ன பண்றது? இப்ப இரண்டு பேருக்கும் என்னைப் பிடிக்க வில்லை. அவனுக்கு ஒரு அதிகப் பத்தாப் போயிட்டேன்; அவளுக்கு நான் தலைகுனிவு ஏற்படுத்திட்டேண்ணு. இன்னிக்காலமெ ஒரு புடவையை எத்தனை நாள்தான் மாத்தி மாத்திக் கட்டிக்கிறதுன்னு சொன்னதும் அவள் பண்ணின கூத்து; அவர்கூடத் தேவலை. தங்கம் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசலை. அந்த அம்மாள் தன் புடவைத் துண்டால் தன் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். சரஸ்வதி அம்மாள் ஒன்றும் பேசாமல் எழுந்து போய் பூஜை அறையில் கிடந்த நீலப் புடவையைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்துவிட்டு, ''போய் வாருங்கள், மாமி'' என்றாள். அந்த அம்மாள் மீண்டும் தன் கண்ணைத் துடைத்துக் கொண்டு புடவையை வாங்கிக் கொண்டு சென்றாள்.

சீனு, ''வெறும் வேஷம்''

''சீனு, இருக்கலாம். ஆனா வேஷம் போடாட்டா நம்ப ஒத்தராலேயும் ஒருநாள்கூட உயிரை வெச்சிண்டு இருக்க முடியாது'' அப்பொழுது கேட்டைத் திறந்து கொண்டு தபால்காரன் ராமசாமி வந்தான். அம்மாவிடம் மணி ஆர்டர் பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு, ''இப்பப் போனாங்களெ அந்த அம்மாவை உங்களுக்கு தெரியுமா?'' என்று சரஸ்வதி அம்மாவிடம் கேட்டான்.

''எங்க தெருவிலேதான் இருக்காங்க. தினம் வீட்டெல வந்து கதை கதையாச் சொல்லி அழுவாங்க. பல வாட்டி வீட்லெ சண்டை பிடிச்சுக்கிட்டு இப்படித்தான் வெளியே போயிடுவாங்க.''

அம்மா ஒப்புப் போட்டுக் கொடுத்த ரசீதையும் வாங்கிக் கொண்டு அவன் போனான். அவன் போனதும் கடைத் தெருவிலிருந்து திரும்பி வந்த சங்கரய்யர் தன் மனைவியிடம், ''பெரியவன் பணம் அனுப்பிவிட்டானா! சரி பீரோவிலெ வை'' என்று பூஜை அறையைத் தாண்டி சமையல் அறையில் இருந்து வந்தவர், பூஜை அறைக் கொடியில் இருந்த பானைத் தண்ணீரில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டுத்திரும்பி ''சரசு! உன் நீலப் புடவை எங்கே?'' என்றார்.

சரஸ்வதி அம்மாள் ஒன்றும் சொல்ல வில்லை.

அப்பொழுதுதான் சீனுவுக்கு அவன் தகப்பனாருக்கு வேலை போய்ச் சரியாகப் பதினைந்து வருஷம் ஆயிற்று என்பது ஞாபகம் வந்தது.

நகுலன்
Share: 
© Copyright 2020 Tamilonline