Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நிதி அறிவோம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | இலக்கியம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
26ம் பக்கத்து மடிப்பு
- ச.தமிழ்ச்செல்வன்|அக்டோபர் 2006|
Share:
Click Here Enlargeமனசில் ஒரு பரபரப்புடன் அந்த ட்ரெங்குப் பெட்டியை பரணிலிருந்து கீழே இறக்கினார். இறக்கும் போதே தூசி கிளம்பி நாசியை அடைத்தது. அறையெங்கும் தூசிப் படலம் பரவியது. "கச் கச்" என்று தும்மியபடி அறையை விட்டு வெளியே வந்தார். "அடாடாடாடா சும்மாவும் இருக்க மாட்டேங்கியளேஒஒ என்றபடி கையில் கரண்டியுடன் சமையல் கட்டிலிருந்து பார்வதி வந்து விட்டாள். துண்டால் மூக்கைப் பொத்தி தும்மலை அடக்கியபடி பள்ளிக்கூடத்து பையனைப் போல ரொம்பப் பாவமாக முழித்தார். இந்த முழியைக் கண்டால் உடனே பார்வதியின் மனசு இளகிவிடும். "சரிசரி எக்கேடும் கெட்டுப் போங்க" என்று அத்தோடு விட்டு உடனே உள்ளே திரும்பிவிட்டாள்.

கொஞ்சம் தூசி அடங்கட்டும் என்று ஹாலில் ஈஸிசேரில் சாய்ந்தார். நேற்று சாயந்திரம் தபாலில் மூர்த்தியின் - கிருஷ்ணமூர்த்தியின் கடிதம் வந்திருந்தது. ராத்திரி பூராவும் தூக்கமின்றிப் புரள வைத்தது. எத்தனை வருஷத்துக்குப் பிறகு எழுதியிருக்கிறான். இரவு முழுக்க பழைய நினைவுகள் சரஞ்சரமாய் வந்து கொண்டே யிருந்தன. காலையில் எழும் போது மனசே புதுசாயிருந்தது. குறுகுறுப்பும் நடுக்கமும் லேசான பரபரப்புமாயிருந்தது. எழுந்ததுமே முதல் காரியமாக அந்த ட்ரெங்குப் பெட்டியைத்தான் மனம் நாடியது. இருந்தாலும் மனசை அடக்கிக் கொண்டு குளிக்கப் போனார். சாப்பிடப் போனார். ஆனால் கடிதத்தை ரெண்டு மூணு தரம் எடுத்துப் படிக்காமல் மனசை கட்டுப்படுத்த முடியவில்லை.

...சென்ற வாரம் நீ ரிடையராகி விட்டதாக தற்செயலாக கேள்விப்பட்டேன். ஏதோ எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈஸிசேரில் உறைந்துவிடாதே. மைடியர் ராஜாமணி, வாழ்க்கை இன்னும் இருக்கிறது. இப்பாவாச்சம் ஒருமுறை இங்கு வந்து போ - உன் மனைவியுடன்தான். பிறகு... உன் மனைவியுடன் தான் என்று அவன் கடைசியில் ரொம்ப ஞாபகமாய்ச் சேர்ந்திருப் பதாகப்பட்டது. அதில் லேசான சிரிப்பு - கேலிச் சிரிப்பும் பின்னால் நிற்கிறது. இத்தனை வருஷமாகியும் இன்னும் அது புதுசாய் உறுத்துகிறது...
"மணி... மணீய்.. ராஜாமணி இருக்கானா.." உள்ளே நுழையும் போதே பிரியம் தோய்ந்த குரலில் அழைத்தபடி வந்தான் மூர்த்தி. அதற்குள் கண்ணாடி வளையல் சிணுங்கிட பார்வதி வெளிப்பட்டாள். முகம் இறுகியிருந்தது.

"வந்தாச்சா, வாங்க. இப்பதான் சாப்பிட உட்கார்ந்தார். உடனே எழுப்பி விட்டுடறேன் இருங்க.."
என்று மனசில் கூர்மையாகக் குத்தும் படியாகச் சொல்லிவிட்டு முகத்தை வெடுக் கெனத் திருப்பிக் கொண்டு அடுக்களையுள் புகுந்து கொண்டாள். உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த மணி அவள் பேசிவிட்டதைக் கேட்டு அப்படியே உறைந்து போனான். அதற்கு மேல் ஒரு வாய்க்கூட சாப்பிட முடிய வில்லை. வெளியே எழுந்து வருவதற்குள் மூர்த்தி போய்விட்டிருந்தான். மனம் உடைந்தவனாக அறைக்குள் போய் கதவை அடைத்துக் கொண்டான் மணி. இப்படிச் செய்துவிட்டாளே, எப்படி மனசு அவனுக்கு புண்பட்டுப் போயிருப்பானோ, கல்யாணமான நாளிலிருந்தே பார்வதி குமுறிக் கொண்டுதான் இருந்தாள் என்றாலும் இப்படியா கொட்டுவாள். முகத்தை முறித்துப் பேசுகிற வன்மம் ச்சே.
அவள் வந்து கதவைத் திறக்கச் சொல்லி மன்றாடுவாள் என எதிர்பார்த்தான். ஆனால் அவள் குளித்து தலைமுழுகி கோவிலுக்குப் போய்விட்டாள். ராத்திரித் தனிமைப் படுக்கையில் கண்டிப்பாக மன்னிப்புக் கேட்பாள் என்று பார்த்தான். அப்படி மன்னிப்பு கேட்கும் போது ரொம்பக் கறாராகப் பேசிவிட வேண்டியதுதான் என்று இருந்தான். நேரம் கழிந்து கொண்டிருந்தது. ச்சே என்ன மனுஷி இவள். கோபத்தை வெளிக்காட்டும் படியாக அந்த பக்கம் திரும்பி விறைப்புடன் படுத்துக் கொண்டான். இவ ஒரு மனுஷியா, தொடக்கூடாது இவளை. செத்தாலும் தொடக்கூடாது. பேசவும் கூடாது. என்ன ஆனாலும் சரி.

ஆனால் இன்றைக்கு வரைக்கும் அவள் மன்னிப்புக் கேட்கவில்லை. மன்னிப்பு இருக்கட்டும். மூர்த்தியைப் பற்றிய பேச்சே எடுத்ததில்லை. மூன்றாவது பையன் பாரதியின் கல்யாணத்துக்கு மூர்த்தி வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்ததை அவளிடம் சொன்ன போதுகூட "அப்பிடியா.." என்று லேசாகச் சொல்லிவிட்டு வேலையைக் கவனிக்கப் போய்விட்டாள்.

ம்ஹ்ம். அன்றைக்கு ராத்திரி பொங்கிய கோபத்தையும், விறைப்பையும் பார்வதி பக்கத்தில் படுத்துக் கொண்டு பின்னாலிருந்து கிச்சுகிச்சு மூட்டியும் சேட்டைகள் செய்தும் ஒன்றுமில்லாமல் கரைத்துவிட்டாள். ரொம்பக் கேவலமாயிருந்தது. இப்ப நினைப்பதற்கு. அறைக்குள் தூசி தணிந்திருந்தது. பெட்டி யைத் திறக்கவும் மறுபடியும் லேசாகக் கிளம்பியது. உள்ளே நோட்டுகளும், புத்தகங்களும் டைரிகளும் பழைய கடிதங் களுமெனப் பழுப்பேறிக் கிடந்தன. நாலைந்து டைரிகளைச் சேர்த்து எடுக்கவும் பொது பொதுவென தாள் துகள்களும் பொடி பொடியாகிப் போன தூசியுமாக உதிர்ந்து விழுந்தது. இப்படி விட்டுட்டோ மே என மனம் பதறியது. ஓரங்களிலெல்லாம் கரையான் அரித்திருந்தது. உயினும் மேலாகப் போற்றி வைத்திருந்த பொக்கிஷத்தை இப்படி விட்டுட்டோ மே..
கோபத்தில் உடம்பு ஆடியது. மூச்சிறைத்தது. "அறைஞ்சேன்னா பல்லுகில்லெல்லாம் உதுந்து போகும் ராஸ்கல்"
சின்னவன் பாரதி அப்படியே அரண்டு போய் நின்றான். "நான் இல்லேப்பா.. அம்மா தான்.."
அடுக்களையிலிருந்து பார்வதி வந்தாள். இப்பம் என்ன ஆயிட்டுதுன்னு இந்தக் கூப்பாடு போடுறீக என்று கேட்கிற தோரணையில் வந்தாள்.
"இதையெல்லாம் பழைய பேப்பரோட சேர்த்து கடையில போடச் சொன்னியா நீ-ம்?"
"சும்மா இடத்தை அடச்சுக்கிட்டுக் கிடக்கேன்னு நாந்தாம் போடச் சொன்னேன், என்ன இப்ப?" ஓங்கி ஓங்கி தலையில் அடித்துக் கொண்டார். "போங்க அப்பாலே" என்று எல்லோரையும் விரட்டிவிட்டு அவைகளை எடுத்து அலமாரியிலும் மேஜையிலுமாக மறுபடி அடுக்கி வைத்தார்.
ஆனால் மூத்த மகள் கண்ணம்மாவின் கல்யாணம் வந்தபோது மீண்டும் எல்லா வற்றையும் மறந்து பணத்துக்காக அலைந்து கொண்டிருந்தார். தினசரி வெயிலைத் தின்று உதடுகள் வெடிக்க புழுதி அப்பிய கால் களுடன் பணம் புரளாமல் மனம் சுருண்டு திரும்பிக் கொண்டிருந்தார். அந்தச் சமயம் வீட்டை ஒழித்துத் துப்புரவு செய்து வெள்ளை அடிக்கும் வேலையை பிள்ளைகளைக் கொண்டு தடபுடலாய் நடத்திக் கொண்டிருந் தாள் பார்வதி. மேஜையையும் அலமாரியையும் அடைத்துக் கொண்டிருந்த அந்தப் பழங் குப்பைகளை ஑அந்த மனுஷன் கூப்பாடு போடுவாரே" என்று அஞ்சி ஒரு பழைய டிரெங்க் பெட்டிக்குள் பத்திரமாக அள்ளிப் போட்டு மூடி பழைய பூட்டு ஒன்றையும் மாட்டி பரண் மேல் போட்டு வைத்தாள். பணத்துக்கு அலைந்து - மண்டபத்துக்கு அலைந்து - சமையல்காரனுக்கு அலைந்து பாத்திரங்களுக்கு அலைந்து என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருந்த போதும் "சண்டாளி...பழைய தகரப் பெட்டிக்குள் அள்ளிப் போட்டு அடைத்து விட்டாளே' என்று மனசில் ஒரு மூலையில் இருந்து கொண்டுதானிருந்தது. இந்தக் கல்யாண அலைச்சல் எல்லாம் ஓயட்டும். கொஞ்சம் ஒழிந்த நேரத்தில் உட்கார்ந்து எல்லாம் சரி செய்துவிடலாம் என நினைத்தார். அப்புறம் எங்கே ஒழிந்தது? மெதுவாக தூசு தட்டி ஒரு டைரியைப் பதனமாகப் பிரித்தார். மூர்த்தியைப் போலீஸ் தேடுகிறது. அவன் வீடு மயானம் போலக் கொடூரமான மெளனத்தில் மூழ்கிக் கிடக்கிறது. அவன் அம்மா அழுது கொண்டே இருக்கிறார்கள். என்ன ஆறுதல் சொல்வ தென்று எனக்குத் தெரியவில்லை. வெள்ளை காரன் போய் ரெண்டு வருஷம் ஆகி விட்டாலும் அந்தக் கெடுபிடியும் இறுகின சூழலும் போனது போல போய் திரும்பவும் வந்துவிட்டது. ஆனால் ஜனங்கள் என்னவோ ரொம்ப திருப்தியுடன் இருப்பதுபோல கிராமபோன் பாட்டுக் கேட்டுக் கெண்டும் கூட்டம் கூட்டமாய் டாக்கி சினிமா பார்த்துக் கொண்டும் நிம்மதியாய் இருக்கிறார்கள். அப்பா ரொம்பவும் என்னைக் கண்காணிக் கிறார். அந்த மூர்த்திப் பையனோட போகாதே என்று அம்மா நித்தமும் எச்சரிக்கிறாள். மூர்த்தி.. நீ எங்கேடா இருக்கே? எங்கிட்டகூட சொல்லாம போயிட்டே...

அவர்கள் ரெண்டு பேரும் உயிர்த் தோழர் களாக இருந்தாலும் ரெண்டு பேரின் குடும்பச் சூழ்நிலையும் மனநிலையும் வேறு வேறு. அது ஒரு தறுதலை என்று மூர்த்தியின் அப்பா அவனை எப்பவோ கைகழுவி விட்டிருந்தார். ஆனால் மணியின் அப்பா அப்படியல்ல. மிகப் பெரிய நம்பிக்கைகளை அவன் மீது வைத்திருந்தார்.

"இருக்கிற வேலையைக் காப்பாத்திக்காம ஏண்டா இப்படி அலையறே" என்கிற மூர்த்தியின் அம்மாவைக்கூட 'பச்சு' என்று லேசாய் அவனால் ஒதுக்கிவிட முடியும். ஆனால் மணிக்கு அப்படி முடியாது. அதிர்ந்து பேசக்கூடத் தெரியாது. ஒருத்தர் மனம் வருந்தும்படி நடந்து கொள்ள முடியவே முடியாது. மூர்த்தியை போலீஸ் தேடுவதாகக் கேள்விப்பட்ட மறுநாளே மணியின் அப்பா பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார். அடுத்த மாதமே பட்டுப்புடவை சரசரக்க மெட்டி ஒலி இசைக்க கையில் பால் தம்ளருடன் பார்வதி வந்துவிட்டாள்.

...ஜெயிலிருந்து மூர்த்தி வந்துவிட்டான். நேரே என்னைப் பார்க்கதான் வந்தான். ரொமப் மெலிந்துவிட்டான். முகமெல்லாம் தாடி. ஆனால் கண்களும் முகமும் முன்னை விடவும் பிரகாசமாய்... பேச்சு முன்னைவிட உற்சாகமாய் இருக்கிறான். கவிதைக்கு முழுக்குப் போட்டுவிட்டு நேரடி அரசியலில் குதிக்கப் போவதாகச் சொல்கிறான். அவன் செய்வான். எதிலும் சீக்கிரம் முடிவெடுக்கவும் அதை செயல்படுத்தவும் அவனால் முடியும். சிறையில் இருந்த இந்த நாலு மாதத்தில் சந்தித்துப் பழகிய பெரிய பெரிய தலைவர் களையெல்லாம் தோழர் எஸ்.பி. தோழர் கே.வி. என்று ரொம்ப உரிமையுடன் குறிப்பிட்டுப் பேசினான். எனக்குப் பெறாமையாக இருந்தது. பேசிக் கொண்டி ருந்த போது பார்வதி இருவருக்கும் காபி கொண்டு வந்தாள். பேச்சை நிறுத்திவிட்டு அவன் அர்த்தமுடன் என்னைப் பார்த்துச் சிரித்தான். கேள்விப்பட்டேன் என்று சொல்லிவிட்டு என் முதுகை செல்லமாகத் தட்டினான். எனக்கு உடம்பெல்லாம் கூசிற்று. உயர்ந்த லட்சியங்களுக்காக நிற்கும் அவன் எங்கே? நான் எங்கே?

அன்றைக்கு மூர்த்தி போனதும் மணியை அப்பா கூப்பிட்டு ரகசியமாகச் சொன்னார். "... அப்பிடி பலதையும் மனசில வச்சித்தான் சொல்றேன். அவன் சகவாசத்தை இன்னி யோட விட்டுடு. உனக்குன்னு குடும்பம் வந்தாச்சி. உன்னை நம்பி ஒரு உயிர் இருக்கு." அவன் சொன்னவிஷயத்தைவிட அவர் சொன்னவிதம் - தவிர சின்ன வயசிலிருந்தே கஷ்டங்களில் உழன்று மெலிந்து வற்றிய உடம்பும் முகமும் - அருகாமையில் நின்று ரொம்ப அக்கறை யுடனும் வாஞ்சையுடனும் குரலில் ஒருவித நடுக்கத்துடனும் அவர் சொன்னபோது அவனால் எதையும் மறுத்துப் பேச முடியவில்லை.

ஆனால் மறுநாள் சாயந்திரம் "மணீ.. மணி இருக்கானா.." என்று மூர்த்தி வந்தபோது மறுபேச்சு பேசாமல் சட்டையை மாட்டியும் மாட்டாத படிக்கே உற்சாகத்துடன் வெளியே கிளம்பிவிட்டான். உயர்ந்த லட்சியங்களின் - உயர்ந்த எண்ணங்களின் - மகத்தான உணர்வுகளின் சின்னமாக மூர்த்தி, மணியின் நெஞ்சில் நின்றான்.

஑மணி இந்தத் தலைவர்கள் மேலே எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காங்க நம்ம ஜனங்கள்.. கயவாளித்தனம் பண்றாங்க ளேடா.. ஜனங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் பண்றாங்களேடா பாவிங்க.."

தினசரி ராப்பாடி மாதிரி நேரகாலம் இல்லாமல் மூர்த்தியோடு ரயில்வே ஸ்டேஷன் சிமிண்டு பெஞ்சிலும் அங்கும் இங்கும் என பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்து கதவைத் தட்டுவது பற்றி பார்வதி நித்தமும் வழக்குப் பண்ணினாள். அழுதாள். குமுறினாள். வெறுத்துப் பேசினாள். என்னை ஏன் கட்டிக்கிட்டே தாலியை அறுத்து வீட்டுக்கு அனுப்பு என்றாள்.

இதுப்பற்றி மூர்த்தியிடம் பேச வேண்டும் என தினமும் நினைப்பான். ஆனால் அவனிடம் பேச ஆரம்பித்ததும் ஑இதெல்லாம் நாட்டில் ஒரு பிரச்சனையா' என்று தோன்றிவிடும். ஆனால் பார்வதி உயிரைக் கொடுத்துப் போராடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு இது வாழ்வா சாவா என்கிற பிரச்சனை என்று எப்படியோ பிடிபட்டி ருந்தது. "நாங்க சொல்றதெல்லாம் சொல்லிப் பார்த்துட்டோ ம். இனி உன்பாடு உன் புருசன் பாடு" என்று மணியின் அப்பா அம்மாவும் வேறு இது ரொம்பப் பெரிய சிக்கல் போல அவளைப் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். எனவே அவள் ரொம்ப தீவிரமாக சண்டை போட்டாள். தனக்குப் போட்டியாக வந்திருக்கும் எதிரிகளாகவே மூர்த்தியையும் புத்தகக் குப்பைகளையும் நினைத்தாள். தன் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு வார்த்தையையும் மணியைத் தன் வசப்படுத்து வதற்காகவே பயன்படுத்தினாள்.

மணி,
உன் கடிதம் எனக்கு வருத்தமளிக்கிறது. உன் மனைவி அன்று என்னை விரட்டி விட்டது குறித்து ரொம்பவும் மனம் உடைந்து எழுதியிருக்கிறாய். அது ஏன்? உன்னை எனக்குத் தெரியாதாடா? நான் இங்கு வந்து குடியேறிவிட்டேன். இனி இதுதான் என் இடம். அடிக்கடி கடிதம் எழுது. அடிக்கடி வந்து போ. உன் மனைவியுடன் நம் விஷயங்கள் பற்றி நிறைய பேசு. நாம் பேசுகிற - படிக்கிற - எழுதுகிற செய்கிற விஷயங்கள் எல்லாம் ரொம்ப உயர்வானவை. சுவாசிக்கும் காற்றைப் போல நமக்கு ரொம்ப அவசிய மானவை என்று அவர்களைப் புரிந்து கொள்ளச் செய். இல்லாது போனால் நரகம்தான்...
ரொம்பச் சரியாக மூர்த்தி எழுதியிருந்தான். அப்புறம் கடிதம் எழுதக்கூட முடியாது போய்விட்டது அவனுக்கு. மணிக்கும்தான்.

தினமும் ஒரே வட்டப்பாதையில் ஓடிச் சலிக்கிற வாழ்க்கையாய் இருக்கிறது. ராத்திரிப் படிப்பு என்பது அறவே போச்சு. தூக்கம். தூக்கம்...

இன்று காலை 9 மணிக்கே ஆபிஸ் போய்விட்டேன். வருடாந்திர இன்ஸ்பெக்ஷன் இன்று. பரீட்சைக்குப் போகிற மனநிலைதான் இன்று பூராவும். வேலையில் குற்றம் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் ஆபிஸர் பாராட்டுதலாக ஒரு வார்த்தைகூட சொல்லாமல் போனது வருத்தம்தான். மகள் கண்ணம்மா பெரிய மனுஷியாகி விட்டாள். ஒன்றுமே புரியவில்லை. வாழ்க்கை இப்படி ஓடிக் கொண்டிருக்கிறது. அவளுக்கு தலைக்குத் தண்ணீர்விட எல்லோரும் வந்திருக்கும் போது பார்வதி வயிற்றைத் தள்ளிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்தது எனக்கு ரொம்பக் கூச்சமாக இருந்தது. இதுதான் கடைசி என்று மனதில் உறுதி செய்து கொண்டேன்.

மூன்றாவதாக பையன் நேற்று சுகமாய்ப் பிறந்துவிட்டான். என்னை அப்படியே உரித்து வைத்தது போல இருக்கிறான். பாரதியின் பெயர்தான் அவனுக்கு. இந்த முறை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பாரதிதான் பெயர் என்று முன்பே முடிவு செய்திருந்தேன்.

இன்று சரியான மழை. நனைந்து கொண்டே வீடு வந்தது மூக்கு அடைத்துக் கொண்டு மூச்சு இறைக்கிறது.

சேலை - 3
ஜம்பர் - 4
சராய் - 2
சி.சர்ட் - 6
அண்டிராயர் - 2
தாவணி - 3

குற்ற உணர்வு மனசைக் கவ்வ அத்துடன் டைரிகளை ஒதுக்கிவிட்டு கவிதை நோட்டுகளை
எடுத்தார். முழங்கால் மூட்டில் வலி கண்டது. இவ்வளவு நேரம் மடக்கியே இருந்ததில் பிடித்துக் கொண்டது. நீவி விட்டபடி கவிதைகளைப் புரட்டினார்.

பிரசுரமாகிய சில கவிதைகள், பிரசுரமாகாத கவிதைகள் நூற்றுக்கணக்கில் சுத்தமான கையெழுத்தில். பக்கங்கள் புரண்டன. புரளப்புரள காலமும் புரண்டது. மனம் பலப்பலவான உணர்வுகளில் ஆட்பட்டுத் தவித்தது. கவிதைகள் மட்டுமின்றி கவிதைப் பாணியிலான கோஷங்களும் நிறைய இருந்தன. உணர்ச்சிக் கொந்தளிப்பாய் வெடித்த கவிதைகளும் கோஷங்களும்.

"கீழைப்பறவைகள் சிறகுகளசைத்தன
செக்கர் வானில் கதிரவன் உதித்தான்
நோக்குக நோக்குக
நிமிர்ந்து நேராய் நெஞ்சினையுயர்த்தி
ஒளி மிகு விடியலை நோக்குக நோக்குக
பனிக்குகை இருட்டு விலங்குகள் தகர்ந்தன
தீயை அணிவோம் தீயை அணிவோம்
March on. March on. லெப்ட் ரைட். லெப்ட் ரைட். தீம் தக தீம் தக. இப்போதுதான் எழுதி முடித்த கவிதையை வாசிப்பது போல திரும்பத் திரும்ப உணர்ச்சியுடனும் பாவத்துடனும் உரக்கச் சத்தமிட்டு வாசித்தார். அவர் அறியாமலேயே வலது கை முஷ்டி முறுகியது.

..அந்தக் கவிதையை மணி எழுதி முடித்த போது இரவு ரொம்ப நேரமாகிவிட்டிருந்தது. கீச் கீச் என்ற பூச்சிகளின் ஓசையன்றி வேறு சத்தமில்லை. கவிதையை எழுதி முடித்ததும் கூட மனசில் பொங்கிய உணர்வலைகள் அடங்கவில்லை. அந்தக் கவிதை போத வில்லை. எழுந்து அறையில் அங்கும் இங்குமாக ஒரு படை வீரனைப் போல அந்த கோஷங்களைச் சொல்லியபடி மிதித்து நொறுக்கிக் கொண்டு நடந்தான்.

அன்றைக்கு மாலையில் இருட்டுகிற நேரத்தில் தான் ரொம்ப பரபரப்புடன் மூர்த்தி மூச்சிறைக்க ஓடிவந்து மணியிடம் சொன்னான். கப்பல் படையில் புரட்சி வெடித்துவிட்டது. பம்பாய் துறைமுகத்தில் நமது வீரர்களின் பீரங்கிகள் வெள்ளைக் காரனை அடிந்துத் தகர்த்துக் கொண்டிருக் கின்றன. நகரங்கள் தோறும் வேலை நிறுத்தங்களும் பிரம் மாண்டமான பேரணிகளும் ஆர்ப்பாட்டங் களும் முழங்கிக் கொண்டிருக்கின்றன.
மூர்த்தி சொல்லி முடிப்பதற்குள் அடக்க முடியாத சிரிப்பு. நெஞ்சு வெடித்துவிடும் போல இடியெனக் கிளம்பியது. ஹாஹ் ஹாஹ் ஹாஹா என்று கண்ணீல் நீர் வழியச் சிரித்தார்கள். என்னமோ ஏதோ என்று பயந்து போய் மணியின் அப்பாவும் அம்மாவும் அறைக்கு ஓடிவந்தார்கள். 'கபக்' என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கண்களில் சிரிப்பு பிறிட ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர். உடனே மூர்த்தியின் மாடிக்குக் கிளம்பினார்கள். இச் செய்தியை கனல் கக்கும் கவிதை வரிகளாக மாற்றி மணி நடந்து கொண்டே சொல்லச் சொல்ல சிகப்பு மையினால் வெள்ளைத்தாளில் - சுவரில் ஒட்டுவதற்காக - மூர்த்தியும் மற்ற தேழர்களும் எழுதித் தள்ளினார்கள். அதே வேகத்தோடு பசைவாளியைத் தூக்கிக் கொண்டு இருட்டில் பதுங்கி பதுங்தி தானாக்காரன் பார்வையில் படாமல் வேக வேகமாய் போஸ்டர்களை ஊரெங்கும் ஒட்டிவிட்டு - எல்லோரும் கடைசியாக ஒரு பீடி அடித்துவிட்டு - நாளை ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்து பிரிந்தார்கள். அப்புறம் - அறைக்கு வந்த பிறகும் பொங்கி வந்த உணர்வுகள் அடங்காமல் தீம்தக தீம்தக என்று மனம் குதித்துக் கொண்டிருந்தது மணிக்கு.
ஊர்வலத்திற்கு கோஷங்கள் எழுதி முடித்த பிறகும் நாடி நரம்புகளெங்கும் மின்னல் பாய்ந்து கொண்டிந்தது.

எவ்வளவு நாள் போச்சு! எவ்வளவு நாள் போச்சு என்று மனம் பதறப்பதற பக்கங்களைப் புரட்டினார். எத்தனை உணர்ச்சிகரமான மணியை இப்படித் தூசு படிய - பழுபேறியத் துகளாகத் தகரப் பெட்டியில் போட்டுப் பூட்டிவிட்டான். மணி என் இளம் கவிஞனே என மனம் அரற்றியது. டிரங்குப் பெட்டியை முழு மூச்சாகக் குடைந்த போது எல்லாத் துக்கம் அடியில் இன்னும் புத்தம் புதுசாக ஒரு புத்தகம் கிடந்தது. மூர்த்தியின் கவிதைத் தொகுப்பு. "பாரதியைப் போல் வீறு கொண்டு எழப்போகும் என் உயிர் தோழன் ராஜா மணிக்கு" என்று முதற் பக்கத்தில் சமர்ப்பணம் செய்திருந்தான். கூடவே சிறு கடிதம். - என்னை அவ்வப்போது கவிதை எழுதத் தூண்டி உணர்வூட்டியது நீதான். சில தேவைகள் கருதி நான் எழுதியவற்றைத் தொகுப்பாக்கியிருக்கிறேன். இத்தொகுப்பு உன்னை மீண்டும் எழுத்துக்கு இழுத்துவர ஒரு தூண்டுகோலாக அமைய வேண்டும். அதுவே என் மகிழ்ச்சி. மணி - என் உயிர் நண்பனே நீ எத்தனை பெரிய கவிஞன். ஒரு புயற்பறவை சிறகொடுக்கி அடுப்படியில் குளிர்காய எப்படியடா முடியும்? உடனே - இப்பவே அவனுக்கு பதில் எழுத மனம் துடித்தது. மூர்த்தி - நான் எழுதுகிறேன். நிச்சயம் எழுதுகிறேன். ஆனால்.. விரல்கள் கவிதைத் தொகுப்பின் பக்கங்களைப் புரட்டின. படபடக்கும் நெஞ்சுடன் ஒவ்வொரு கவிதையையும் மூர்த்தி எழுதிய போது நிகழ்ந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தபடி வாசித்துக் கொண்டிருந்தபோது - 26ம் பக்கத்து முனையில் ஒரு ஞாபக மடிப்பு.

சுரீரென நினைவில் தட்டியது. மணி உட்கார்ந்து படித்த கடைசி புத்தகம் அதுதான். அதை வாசித்துக் கொண்டிருக்கும் போது வெளித்திண்ணையில் ஏறி விழுந்து சின்னவன் பாரதி மண்டையை உடைத்துக் கொண்டு அலறினான். "உங்ககிட்டயா மனுஷன் படிக்க.." என்று கடும் எரிச்சலுடன் அந்தப் பக்கத்து முனையை மடித்து மூடிவைத்துவிட்டு வாசலுக்கு ஓடியது.

இப்பவும் அதே 26 ஆம் பக்கம்! பார்வதி அழைக்கிறாள். "எத்தனை தரம்தான் கூப்பாடு போடறது. வந்து சாப்பிட்டு போயித்தான் அதைப் புரட்டுங்களேன்" அதே மடிப்பை திரும்பவும் மூடி வைத்துவிட்டு அவசரமாக எழுந்து போய் சாப்பிட்டார். ஆனால் வழக்கமான நிதானத்துடன் அல்ல. முன்பு மூர்த்தியைச் சந்திப்பதற்காக ஓடும்போது அந்த மணி சாப்பிடுவானே அப்படி உட்கார்ந்தும் உட்காராமல் உருட்டி உருட்டி நாலுவாய் எறிந்துவிட்டு மறுபடி அறைக்கு ஓடிவந்தார்.

கவிதைத் தொகுதியை எடுத்து மடியில் விரித்து அன்றைக்கு மடித்த 26ம் பக்கத்து மடிப்பை - ஆழமாய் விழுந்துவிட்ட மடிப்பை - நிமிர்த்திவிட்டு அந்தப் பக்கத்தை வாஞ்சையுடன் - கண்ணில் நீர்பனிக்க - நீவி நீவிவிட்ட போது பதற்றத்தில் விரல்கள் நடுங்கின.

ச.தமிழ்ச்செல்வன்
Share: 
© Copyright 2020 Tamilonline