Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2003 Issue
ஆசிரியர் பக்கம் | கவிதைப்பந்தல் | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
லே ஆஃப்
Tamil Speaking Dog
- எல்லே சுவாமிநாதன்|பிப்ரவரி 2003|
Share:
வாசலில் நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அரவிந்தனும், ராஜனும்.

"ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் ஏனையது
தன்னேர் இலாத தமிழ்" னு பாடியிருக்காங்க என்றான் அரவிந்தன்.

"எதுல வருதுங்க?" என்றார் ராஜன்.

"தண்டியலங்காரத்துல. மலையில் தோன்றி உயர்ந்தோரால் தொழப்பட்டு உலகத்து இருளை அகற்றுவது ரெண்டுதான்.

ஒண்ணு சூரியன் இன்னொண்ணு தனக்கு நிகரில்லாத தமிழ்"

"தன்னேரில்லாத தமிழ். ஆகா. நல்ல வேளையா அவங்கல்லாம் செத்துப் பூட்டாங்க. இன்னித்தமிழ் நெலமையப் பாத்தா மனசு

ஒடஞ்சு போயிருப்பாங்க".

"ஆமா. இப்ப என்ன ஆயிட்டிருக்கு. எல்லா புள்ளையும் இங்லிலீசு பள்ளிக்கூடம் போகுது"

"வேதனைதான். தமிழ் சோறு போடாதுன்னு நெனக்கிறாங்க"

"மதுரையில் ஒரு இங்கிலீசு பள்ளிக்கூடத்துல இங்கீலிசிலதான் பேசணுமாம். தப்பித்தவறி தமிழுல பேசிட்டா ஒரு வார்த்தைக்கி இவ்ளொன்னு அபராதம் கட்டணுமாம். ஒரு பொண்ணு தாகம் தாங்காம 'தண்ணி வேணும்'னு தமிழ்ல கேட்டுதாம். அது கழுத்துல "தமிழ் பேசும் நாய்னு" எழுதி பள்ளிக் கூடத்தை சுத்தி சுத்திவாடின்னு சொன்னாங்களாம். அது மயங்கி விழுந்துருச்சாம். செய்தி படிச்சீஙகல்ல"

"ஆமா. தமிழ் வளர்த்த மதுரையிலதானே"

அவர்கள் பேசிக் கொண்டிருக்குபோது தெருவில் இரண்டு பேர் திடுதிடுவென ஓடினார்கள். அரவிந்தன் கலக்கத்துடன் அவர்களை விசாரித்தான்.

"எங்கய்யா ஓடறீங்க. எங்க என்னாச்சு"

'தமிழ் பேசும் நாய்'னு சொன்னாராமே" என்று பேசிக்கொண்டே விரைந்தார்கள். அரவிந்தன் ஓடிபோய் அவர்களை நிறுத்தினான்..

"அய்யா நில்லுங்க. எங்க சொன்னாங்களாம்? மதுரையில நடந்ததுதானே?"

"இல்லீங்க. நம்ம ஊருப் பள்ளிக் கூடத்துலதான். நேத்திக்கு"

"யார் சொன்னாங்களாம் அங்க?"

"தமிழ் வாத்தியார் வடிவேலுவாம்".

அதிர்ச்சியில் உறைந்தான் அரவிந்தன்.

"என்னாது. தமிழய்யா வடிவேலுவா? அவருக்கு மூளை இல்ல? இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மையா? இப்படி தமிழ் வாத்தியாரே சொன்னா கொழந் தைங்க எப்படி உருப்படும்? எவன் தமிழ் படிப்பான்?"

அரவிந்தனுக்கு சினம் தலைக்கேறியது.

"ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு மனிசனையே கடிக்க வர மாதிரி, இப்ப இந்த ஊருக்கே வந்தாச்சா.

"எட்றா கழிய, இன்னிக்கு போயி இதை விசாரிச்சு மண்டையில ரெண்டு தட்டாம விட்றதில்ல".

"வேணாங்க. வம்பாயிரும். காலம் அப்படி ஆயிடுத்து. யாரை நோகறது? நாம தும்பை விட்டுட்டு இப்ப வாலைப்புடிச்சிட்டு எதுக்கு தொங்கணும்" என்றார் ராஜன்.

"பாத்தியா. இது மாதிரி நாம ஒதுங்கி போறது னாலதான் திமிர் புடிச்சு தமிழப் பழிக்கிறானுக."

"சொல்றதக் கேளு. கம்பெல்லாம் வேணாம். போய் பள்ளிக்கூடத்துல போய் வெசாரிப்போம்"

அரவிந்தன் சற்று அமைதியடைந்து "சரி வாங்க" என்றான்.

பள்ளி நடந்து கொண்டிருந்தது. வாசலில் ஒரு சிறு கூட்டம். அரவிந்தன் அவர்களை விசாரித்ததில் யாருக்கும் சரியாக விவரம் தெரியவில்லை.

"இருங்க ராஜன். உள்ளபோய் வாத்தியார் வடி வேலுவை பார்த்திட்டு வரேன்" என்றான் அரவிந்தன்.

"அரவிந்தன். வெகுளி காக்க. வம்பு பண்ணி டாதீங்க"

வடிவேலு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

'வள்ளி வளைக் கரத்தால் வாழையிலை போட்டாள்'

'அறிவாளி அரிவாளால் அழிப்பானோ'

என்று அவர் சொல்ல மாணவர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். வாசற்படியில் அரவிந்தன் நிற்பதைப் பார்த்து,

"அட. அரவிந்தனா. பசங்களுக்கு ல/ள/ழ வித்தியாசம் சரியா தெரியல. அதான் எல்லாரையும் எழுத வெச்சிட்டு இருக்கேன். இதெல்லாம் எழுதினாத்தான் பழகும். வாங்க. உங்களுக்கு என்னா வேணும்?"

"அய்யா உங்ககிட்ட ஒண்ணு தனியா பேசணும்"

"கொஞ்சம் இருங்க. பசங்களா எழுதுங்க.

'மூத்தது மோழை, இளையது காளை, யாருக்கு மாலை'

'மோர் தரவோ, உரியில் தயிர் உறைந்ததோ'

இதை பத்து தடவை எழுதுங்க. இப்ப வந்துடறேன்" என்று சொல்லி வெளியே வரண்டாவுக்கு வந்தார்.

வாத்தியாரிடம் நேரடியாகக் கேட்க அரவிந்தனுக்கு தயக்கமாக இருந்தது.

"அய்யா பள்ளிக்கூடம் எப்படிப் போயிட்டிருக்கு?" என்றான் பொதுவாக.

"வர வர தமிழ் சொல்லித்தறது கடினமா யிட்டிருக்கு. சினிமா டிவியோட தாக்கம் அதிகமாருக்கு. 'ஊற வெச்ச சோறு'ன்னு

எழுதச்சொன்னா, 'உப்புக்கருவாடுடன் ஓடி வந்து உறவாடு'ன்னு ஒரு வரி சேத்துக்கறான். சவரம் பண்ணிக்கிட்டபோது கன்னத்துல வெட்டுச்சுன்னு பிலாஸ்திரி போட்டுக்கிட்டு வந்தா, 'கன்னத்தில் என்ன காயமோ, வண்ணக்கிளி செய்த மாயமோ'ன்னு பாடாறானுக. ஓளவையார்னு தப்பா எழுதறாங்க. ஓ இல்லடா 'ஒ' போட்டுதான 'ஒள' எழுதணும்னா, எவ்ளோ பாட்டு எழுதியிருக்காங்க அவங்களுக்கு ஓ போட்டா என்னாங்கறான்.

இன்னிக்கி என்ன கிழமைன்னா இன்று காதல் செவ்வாய், நாளை காவிய புதன்னு சொல்றானுக. எனக்கே 'போனால் போகட்டும் போடா'ன்னு ஆயிருச்சு. 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே'ன்னு இருக்கேன். சொல்லுங்க அரவிந்தன், என்ன விசயமா வந்தீங்க?"

இவரா தமிழ் பேசும் நாய் என்று திட்டியிருப்பார்? தயக்கத்துடன் கேட்டான், "அய்யா, 'தமிழ் பேசும் நாய்'னு நீங்க சொன்னதாச் சொன்னாங்க. யாரை இப்பிடிச் சொன்னீங்க?"

"யாரைச் சொல்வாங்க? நாயைத்தான்"

"நாயையா?"
"ஆமா. ரெண்டுநாள் முன்னாடி தமிழ் இலக்கணத் துல உடம்படுமெய் பாடம் நடத்தினேன். படிச்சிட்டு வாங்கடான்னேன். மறுநாளக்கி கேள்வி கேட்டேன், வருமொழி முன்னால் உயிரும் நிலைமொழி ஈற்றில் இ, ஈ, ஐ தவிர வேறு உயிர் இருந்தால் எந்த உடம்படுமெய் வரும்னு.

பதிலே இல்லை. மொதல் நாள் ராத்திரி ரஜினி படம் பாத்தானுகளாம் படிக்கலையாம். அப்ப வாசல்ல நாய் கொலைச்சிது"

இப்பொழுதும் ஒரு நாய் குலைப்பது கேட்டது.

"அட, அதே நாய்தான். இங்க பாருங்க" சன்னல் வழியே சந்தில் நிற்கும் ஒரு நாயைக் காட்டினார் வடிவேலு.

"என்ன சொல்லுது கேட்டீங்களா, அரவிந்தன்?"

அரவிந்தனுக்கு வடிவேலு வாத்தியாரின் மண் டையில் மரை கழண்டிருப்பதாகப் பட்டது.

"புரியலின்ங்க. வவ் வவ் வவ்வும்னு தான் கொலைக்குது"

"அதுக்கு என்னா அருத்தம்?"

"இதுக்கெல்லாம் அருத்தம் உண்டுங்களா?"

"என்ன அரவிந்தன்? நன்னூல் சூத்திரம் மறந்து போயிடுச்சா?

இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை

உயிர்வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும்

உயிர்வரின் உடம்படும் மெய்யென்றாகும்.

பூ + இரண்டு = பூவிரண்டு

வவ் வவ் வவ்வும்னா உங்களுக்கு வகரம் நெனைவுக்கு வரலே"

"ஆமாய்யா, நீங்க சொல்றது சரிதான்"

"நாய் கொலைச்சப்ப பசங்ககிட்ட சொன்னேன்.

'வவ் வவ் வவ்வும்'. பாருங்கடா வகரம் வரும்னு நாயே சொல்லுது. நாய்க்கு தெரிஞ்ச தமிழ் உங்களுக்கு தெரியலையான்னேன்.

இதப் பத்த வெச்சுட்டாங்க நாய் தமிழ் பேசுது, நன்னூல் படிச்சிருக்குன்னு. நல்ல விசயம் சொன்னா விட்டுருவானுக. வேடிக்கயா ஏதாவது சொன்னா புடிச்சிட்டு தொங்குவாங்க. இன்னிக்கி இதைக் கேக்கற மூணாவது ஆளு நீங்க"

நாயின் குரைப்பில் கூட தமிழைக் காணும் இவரைப் பற்றி தவறாக எண்ணினோமே.

அரவிந்தன் பணிவோடு சொன்னான், "அய்யா மன்னிச்சிருங்க. மதுரையில ஆங்கிலப் பள்ளியில நடந்தது தெரியுமில்ல. அதுமாதிரி இங்க ஏதாவது ஆயிருச்சோன்னு..."

"அவங்க கெடக்காங்க முட்டாப்பசங்க. கொழந்தைங்க இங்கிலீசுல மட்டும் பேசணூம்கிற ஆர்வத்துல மடத்தனமா ஏதோ பண்ணாங்க. பாக்கப்போனா இங்க தமிழ் பள்ளிக்கூடத்துல இருந்துகிட்டு தமிழ் படிக்காத பயலுகளுக்கு என்னாமாதிரி எழுதி மாட்டலாம்னு யோசிக்கிறேன்."

"காலம் கெட்றுச்சு அய்யா".

"எல்லாம் வாத்தியார் பாடுன்னு விடாம வீட்லயும் பசங்க படிக்கறாங்களான்னு அப்பா அம்மா தினசரி கண்காணிக்கணும். அதைவிட்டுட்டு அப்பா, அம்மா, புள்ளைங்க எல்லாம் ஒக்காந்துகிட்டு ராத்திரி பூரா சினிமா, பாட்டு, தொடர்னு பார்த்தா, அதுங்க எப்படி படிக்கும்?"

"ஆமாங்க. ஆனா நாட்டில இது பரவிடுச்சு. தடுக்க முடியாது"

"ஏன் முடியாது? 'உலகிலேயே முதன்ன்ன்ன்ன் முறையாக' தமிழ் நாட்டில் ஒரு நாளைக்கி ஒரு மணி நேரம்தான் தொலைக்காட்சி ஒலிபரப்புன்னு சட்டம் கொண்டுவந்தா சரியாய்டும்"

"போனவர் மீண்டு வருவாரோ, புதுவாழ்வு தரு வாரோ" என்ற பாட்டு வகுப்பிலிருந்து ஒலித்தது.

"வேலை இருக்கு அரவிந்தன். வகுப்புக்கு போறேன். நான் வகுப்புல இருக்கறபோதே பசங்க லொள்ளு பண்ணுவானுக. இப்ப இல்லைன்னா கேக்கவாணாம். அப்புறமா வீட்டுப் பக்கம் வாங்க. நிதானமா உட்கார்ந்து பேசலாம்" என்று சொல்லி,

'சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்'

என்ற பாடலை முணுமுணுத்தபடி ஆசிரியர் வகுப்பு நோக்கி நடந்தார்.

எல்லே சுவாமிநாதன்
More

லே ஆஃப்
Share: