Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சிறுகதை
அமெரிக்காவில் ஆறு வாரம்
- எல்லே சுவாமிநாதன்|பிப்ரவரி 2007||(1 Comment)
Share:
Click Here Enlargeஅல்ப சண்டைதான்.

அதனால் வெங்கட்டுக்கும், வேதாவுக் கும் மூன்று நாளாய்ப் பேச்சு வார்த்தை இல்லை. இருவருக்கும் ஒரு கார் தான் இருந்தது. அதனால் சேர்ந்தே ஆபீசுக்கு போனார்கள். திரும்பி வந்தார்கள்.

வேதா சமைத்ததை மேஜையில் வைப்பாள். இருவரும் ரோபாட் போல பேசாமல் சாப்பிடுவார்கள். வெங்கட் பாத்திரங்களைக் கழுவி வைப்பான்.

இரவில் படுக்கை நடுவே ஒரு தலையணை அவரவர் எல்லைகளைக் குறித்தது.

வேதா மசிவதாய் இல்லை. வெங்கட்டால் தாங்க முடியவில்லை.

இன்றைக்கு எப்படியாவது சமாதானம் செய்து கொண்டுவிட வேண்டும் என்ற முடிவில் இருந்தான்.

காலை உணவுக்கு மேஜையில் உப்புமா தயாராய் இருந்தது. இரண்டு தட்டுகள் போடப்பட்டிருந்தன.

வேதா தன் கையில் இருந்த செய்தித் தாளை ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருந்தாள்.

"அவர் வார்த்தையால் சுட்டார், நான் துப்பாக்கியால் சுட்டேன்... கோபித்த கணவனைச் சுட்ட மனைவி, போலீசுக்குக் கொடுத்த வாக்குமூலம்" என்று அவள் படித்துக் கொண்டிருக்கும் பேப்பரில் இருந்த செய்தித் தலைப்பு வெங்கட்டுக்கு பயமூட்டியது.

வெங்கட் அவள் எதிரில் அமர்ந்து தொண்டையைக் கனைத்தான். அவள் கண்டுகொள்ளவில்லை. தனக்குத் தேவையானதைப் போட்டுக்கொண்டு உப்புமா பாத்திரத்தை அவன் பக்கம் அலட்சியமாய்த் தள்ளினாள்.

வெங்கட் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "வேதா... குட் மார்னிங்... நம்ம சண்டை பேத்தல்னு எனக்குத் தோணுது... நீ என்ன நினைக்கிற?" என்றான்.

வேதா பதில் பேசாமல் உப்புமாவைத் தின்று கொண்டே பேப்பரைப் புரட்டினாள்.

"கம் ஆன், வேதா.. சே. .சம்திங்... நம்ம ஒரு ஏற்பாட்டுக்கு வருவோம்.. சரியா ?"

"என்ன ஏற்பாடு ?" என்பது போல வேதா அவனைப் பார்த்து புருவத்தை உயர்த்தினாள்.

"ஆபீஸ்ல வேலையில ப்ரோகிராம்ல ஒரு பிரச்னைனா நாம் எப்படித் தீர்க்கறோம்?

ஸ்டெப் பை ஸ்டெப்பா அனலைஸ் பண்றதில்லியா? அதைப்போல நம்ம பிரச்னையும் தீர்த்துப்போம்...."

"நெள? "

பையிலிருந்து ஒரு சிறு நோட்டை எடுத்தான்.

"இதப்பாரு. எல்லாம் நோட்டுல இருக்கு. மொத்தமா என் பாயிண்டுகளை எழுதி வெச்சிருக்கேன். ஒவ்வொண்ணா உணர்ச்சி வசப்படாம ஆராய்வோம். சரியா.."

அவள் பேப்பரை கீழே வைத்தாள். "சரி, பார்க்கலாம்" என்று சொல்லி காபியை குடித்தாள்.

படிங்க.... முதல் பாயிண்ட் என்ன?'

வெங்கட் நோட்டை ஒரு முறை பர்த்துவிட்டு சொன்னான்:

"எங்க அப்பா அம்மா ரெண்டு தடவை திருப்பதி, ஒரு தடவை திருவண்ணாமலை , ஒரு தடவை ஹைதராபாத் தவிர வெளியூருக்குன்னு சுற்றுப்பயணம் எதுவும் போனதில்ல. இங்க வந்தா மனசு அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும். இதுக்கு என்ன சொல்ற?"

"எங்க அப்பா அம்மா திருப்பதிக்குக் கூட போனதில்ல. திருவல்லிக்கேணியிலேயே வாழறாங்க.. இங்க வரது அவங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அடுத்த பாயிண்ட் என்ன"

அவன் முதல் பாயிண்டை பென்சிலால் அடித்தான்.

"எங்க அப்பாவுக்கு ஆஸ்துமா, டையாபிட்டீஸ் இருக்கு. அம்மாவுக்கு ஆர்த்ரைட்டிஸ். இங்க அழச்சிட்டு வந்தா வைத்தியம் பண்ணலாம்"

"நம்ம இன்ஷூரன்ஸ் அவங்களைக் கவர் பண்ணாது. அதுக்குனு அதிகமா செலவு பண்ணி இன்ஷூரன்ஸ் வாங்கணும். இங்க வைத்தியச் செலவு எக்கச்சக்கமா இருக்கும். நாம ரெண்டு பேரும் ஆபீஸ் வேலைல பிசியா இருக்கோம். டாக்டர், ஆஸ்பத்திரினு அலய முடியாது. இருக்கறது ஒரே காருதான். அவங்க ஊருலேயே வைத்தியம் பார்த்திட்டு இருக்கறதுதான் சரி. வேணுன்னா கொஞ்சம் பணம் அனுப்பிடலாம். என் அப்பா அம்மா இப்ப சத்தியா நல்லபடியா ஆரோக்கியமாகவே இருக்காங்க. அவங்க இங்க வரதுல பிரச்னை இருக்காது. நெக்ஸ்ட் பாயிண்ட்.."

வெங்கட் இரண்டாவது பாயிண்டை அடித்தான்.

"எங்க அம்மா இங்க வந்தா நமக்கு சமைச்சுப் போடுவாங்க... உனக்கு ரொம்ப உதவியா இருக்கும். வேலைலேருந்த வந்த உடனே கடையில வாங்கின காஞ்ச ரொட்டியத் திங்காம நல்ல சமையலா சாப்பிடலாம்."

"உங்க அம்மாக்கு சமைக்க தெரியும் சரி. ஆனால் அவங்க எனக்கு மாமியார். நான்தான் அவங்களுக்கு சமைச்சுப் போடணும்னு எதிர்பார்ப்பாங்க. என்னால முடியாதுன்னு சொல்ல முடியாது.. ஆபீசில வேலை நெட்டி முறிக்குது. காஞ்ச ரொட்டி இல்லாம நானே முழுநேர விருந்து சமையல்ல மாட்டிக்க தயார். ஆனா வேலைய விட்டுடணும் விட்டுடவா, சொல்லுங்க..."

வேதாவின் சம்பளம் கணிசமானது. பதவி உயர்வு, போனஸ் வரவும் வாய்ப்புண்டு. வெங்கட்டின் வேலை சற்று ஆட்டத்தில் இருந்தது. பிராஜக்ட் முடிந்தால் தொடர்வது சந்தேகம். ஆஃப் "ர், டவுன் ந..஢ங் என்று பேசிக் கொள்கிறார்கள். அவன் கை தன்னிச்சையாக மூன்றாவது பாயின்டை அடித்தது.

"வேற எதாச்சும் உண்டா?"

"நான் ஆண்பிள்ளை. நீ பெண். நான் கணவன், நீ மனைவி. அதுனால நான் சொல்வதைக் கேட்டு நீ கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்" என்று அவன் எழுதியிருந்த நாலாவது பாயிண்டைப் படிக்க பயமாக இருந்தது.

தர்ம அடி விழுவதோடு, எங்க படிக்கப் போயி சண்டை பெரிய யுத்தமாயிட்டா ? எனவே துணிந்து நோட்டை மூடி பையில் வைத்துவிட்டு சொன்னான்,

"இல்லை, வேதா, வேற ஒண்ணும் இல்ல"

"இப்ப நான் சொல்றதைக் கேளுங்க.... எனக்கு எழுதி வெச்சுப் பேசத் தேவையில்லை. எங்க அம்மா அப்பா இங்க வந்தா எனக்கும் உங்களுக்கும் ரொம்ப உதவியாயிருக்கும். எனக்கு சரியா சமைக்க நேரம் இல்லை. கடையில வாங்கற காஞ்ச ரொட்டியோட எனக்குத் தெரிஞ்சத சிம்பிளா பண்ணிப் போடறேன். எங்கம்மா அருமையா சமைப்பாங்க, சமயலைக் கவனிச்சிப்பாங்க. நான் ஒண்ணும் செய்ய வேண்டிய தேவையே இல்லை. மாப்பிளைனு ஆசையா உங்களுக்குப் பிடிச்ச மாதிரியும் பண்ணிப் போடுவாங்க. எங்கப்பா சும்மாவே இருக்க மாட்டார். ஏதாச்சும் வேலை செய்வார். ரூமை வாக்வம் பண்ணுவார்... காரை வாஸ் பண்ணிக் கொடுப்பார். பேங்க், தபாலாபீஸ், மார்க்கட்னு நடந்தே போயி எல்லாம் பார்த்துப்பார். துணிமணிய தோய்ச்சு இஸ்திரி போட்டுக் கொடுப்பார். இப்ப வராளே வாரத்துக்கு ஒரு தடவை வேலைக்காரி... மாசம் நூத்தி அம்பது டாலர் வாங்கிட்டு. அவளை நிறுத்திடலாம். காசு மிச்சம். நாம தற்காலிகமா 'எச்' விஷால வந்திருக்கோம். சம்பாதிக்கற காசை முடிஞ்சவரை சேத்துக்கறது புத்திசாலித்தனம். இதைப்போயி டாக்டர், ஆஸ்பத்ரின்னு விட்டிடக்கூடாது. என் தம்பி ந்யூயார்க்ல ஸ்டூடண்டா இருக்கான். எங்க அப்பா அம்மா டிக்கட் வாங்க அவனும் கொஞ்சம் கொடுத்தாலும் கொடுப்பான். நமக்கு செலவு குறைவு. முதல்ல எங்க மனிசாள் வந்துட்டு போகட்டும். அப்புறமா கிரீன் கார்டு வாங்கி, வீடு வாசலோட நாம செட்டிலாயிட்டா உங்க அப்பா அம்மா வந்துட்டு போகட்டும். நான் சொல்றது புரியுதா? உங்க அப்பா அம்மா ஊருல பெரிய தனி வீட்டுல ஆளு, படையோட வசதியா இருக்காங்க. எங்க அப்பா அம்மா ஊர்ல அண்ணன் அண்ணியோட சின்ன ஃப்ளாட்ல இருக்காங்க. இங்க வந்து கொஞ்ச நாள் வசதியா இருக்கட்டும்மே. சம்மதமா?"

வெங்கட் சம்மதம் என்று தலையசைத்தான்.

"காதுல விழல. இரைஞ்சு சொல்லுங்க. ஧. எஸ் ஆர் நோ"

"யெஸ்..யெஸ்..உன் இஷ்டப்படியே உங்க அப்பா அம்மா முதல்ல வரட்டும். வரச்சே அடையார் ஆனந்த பவன்ல ஸ்வீட்ஸ் வாங்கிட்டு வரச்சொல்லு. அப்படியே துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பும் வாங்கிட்டு வரச்சொல்லு. இங்க பருப்பு வெலை கன்னாபின்னானு ஏறி இருக்கு"

"சொல்றேன். உப்பு, புளி, மொளகா, ஊறுகா, வடாம், வத்தல் எல்லாம் கூட வரும். உங்க அல்பத்தனம் உங்களை விட்டு போகாதே. பார்த்தீங்களா?

இதை எல்லாம் யோசிச்சுதான் எங்க அப்பா அம்மா முதல்ல இங்க வரட்டும்னு மூணு நாள் முன்னால சொன்னேன். புரிஞ்சிக்காம அப்ப கத்து கத்துனு கத்தி சண்டை போட்டீங்க. இதைப்புரிஞ்சிக்க மூணு நாள் ஆயிருக்கு.. ஒரு நோட்டுல எழுதி டிஸ்கஷன் வேற..பாயின்ட்டாம்.. பாயிண்ட்"

"சரியா அனலைஸ் பண்ணியாச்சு. இதுக்குப் போய் எதுக்கு கோவிச்சிக்கிறே" என்றவாறு எழுந்து அவளை அணைக்க முயன்றான். அவள் அவன்பிடியில் சிக்காமல் எழுந்து "சீக்கிரம் சாப்பிட்டு முடியுங்க.. ஆபீசுக்கு நேரமாச்சு. எல்லாம் சாயங்காலமாய் வெச்சிக்கலாம்" என்று அவன் கன்னத்தைச் செல்லமாய்த் தட்டிவிட்டு உடை மாற்ற உள்ளே போனாள்.
எது எப்படியோ, தன் கட்சி தோற்றாலும் சண்டை சுமுகமாக தீர்ந்த மகிழ்ச்சியில் உப்புமாவை வாயில் அடைத்துக் கொண்டான்.

அடுத்த இரண்டு வாரத்தில் ஆறுமாத விசிட்டர் விசா வாங்கி வேதாவின் பெற்றோர் வந்து விட்டார்கள். வரும் வழியில் ந்யூயார்க்கில் இரண்டு நாள் பிள்ளையிடம் தங்கிவிட்டு வந்தார்கள்.

அவர்களுக்கு அமெரிக்க வாழ்க்கை பிடித்திருந்தது. சூப்பர் மார்க்கட்டு போய் சாமான் வாங்கி வருவது, கே மார்ட், வால் மார்ட், ஜேசி பென்னி, .஢யர்ஸ், மால் என்று கடைகளைப் பார்வையிடுவதில் பொழுது சுலபமாய்ப் போனது. மாமியாரின் கவனிப்பில் வெங்கட் சற்று பெருத்தே போனான். மாமனார் மாமியாருக்கு மிஞ்சிபோன சாப்பாடை ஃபிரிட்ஜில் வைத்து மறு நாள் சுடவைத்து உண்ணும் பழக்கம் பிடிக்கவில்லை. அதனால் தேவையான உணவை தினம் தினம் புதிசாய் சமைத்தார்கள். வார இறுதியில் பஜ்ஜி, போண்டா, பக்கோடா, முறுக்கு, வடை என்று மாமியார் அசத்த ஹோட்டல்களுக்குப் போகும் வழக்கம் அறவே நின்றது.

வெங்கட்டின் மாமனார் காரை கழுவிக்கொடுத்தார். வாக்வம் க்ளீனர் பயன்படுத்தி கம்பளங்களை சுத்தம் செய்தார். கடைக்கு நடந்தே போய் சாமான்கள் வாங்கி வந்தார். கம்ப்யூட்டரில் சில ஃபைல்கள் டைப் பண்ணிக் கொடுத்தார். பழைய செய்தித்தாள்களை கட்டுக்கட்டாகக் குப்பையில் எறிவது அவருக்கு வருத்தமாகவே இருந்தது. தொலைக்காட்சியில் அமெரிக்க அரசியல் பரபரப்பு இல்லாமல் இருந்தது அவருக்கு வியப்பாக இருந்தது. கால் பந்து, பாஸ்கெட் பால், பேஸ்பால் அவருக்கு பிடிக்கவில்லை. மாமனார் மாமியாருக்கு பாவமன்னிப்பு, திருவிளையாடல் என்று மலிவான பழைய விடியோ படங்கள் வாடகைக்கு எடுத்து வந்தான் வெங்கட்.

ஒரு மாதம் கழித்து வெங்கட்டின் நண்பர் ஒருவர் தன் பெண்ணின் பிறந்த நாளுக்கு எல்லோரையும் சாப்பிட அழைத்திருந்தார். வெங்கட்டிடம் குறிப்பாக "உங்க மாமனார் மாமியாரையும் அழச்சிட்டு வாங்க. அவங்க வயசில இன்னும் சில பேரு வருவாங்க.. பார்த்துப் பேச வசதியாயிருக்கும்" என்று சொல்லியிருந்தார். ஆனால் இருவது மைல் காரில் போக வேண்டியிருந்தது. "ஒரு சாப்பாட்டுக்கு இவ்ளோ தூரம் போகணூமா என்று மாமனாருக்கு சலிப்பு. விருந்து நன்றாக நடந்தது. உணவு, கேக், ஐஸ்கிரீம் எல்லாம் அவர்களுக்குப் பிடித்தது.

காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வெங்கட்டின் மாமியார் கலங்கிய கண்களோடு விசும்பலுடன் தன் கணவரிடம், "கேட்டீங்களா சேதிய... தாமரை கோமால இருக்காளாம்" என்றாள்.

அவர் திடுக்கிட்டு "அய்யோ.. அப்படியா.. என்னாச்சாம்.. நன்னாத்தானே இருந்தாள் நாம கிளம்பரச்சே?" என்றார்.

"தலையில கோயில் மணி அறுந்து விழுந்துடுத்தாம்"

"அடப்பாவமே.. அது வெண்கலம்... கனமான்னா இருக்கும்.. மண்டை உடைஞ்சிடுமே"

"அத்தோட இல்ல.. பொண்டாட்டி பேச்சு மூச்சில்லாம கிடக்கா. அவ புருஷன் ஜிஜே கடங்காரன் இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கப் போறானாம். யாரைத் தெரியுமா? தாமரையோட உயிர் சினேகிதி செல்வியை.. தாமரையோட அப்பாவும் இதுக்கு ஆதரவா இருக்காராம் "

"அடி செருப்பால.. பொண்டாட்டி மயங்கிக் கிடக்கா.. இவனுக்கு கல்யாணம் ஒரு கேடா? மாமனார் சொன்னாலும் மாப்பிளைக்கி அறிவு எங்க போச்சு?"

கார் ஓட்டிக் கொண்டிருந்த வெங்கட் திடுக்கிட்டான். "என்ன மாமா.. யாருக்கு என்னாச்சு? வேதா அம்மாகிட்ட கேளு" என்றான். வேதா முன் சீட்டிலிருந்து திரும்பி "யார் அம்மா? உனக்கு தெரிஞ்சவங்களா? யாரு சொன்னா சேதி? " என்று வினவினாள்.

"பார்ட்டிக்கு சன்னிவேல்லேருந்து வந்திருந்த கோமளா மாமி சொன்னா. ஆமா இந்த ஊருல சன் டிவி வரதாமே.. ஏன் நம்ம வீட்ல மட்டும் வரல?. ஆன்டென்னா எடுக்காதா? அப்பாவைக் கூரை மேல ஏறி உசரம்மாக் கட்டச் சொல்லவா?"

அவர்கள் பேசிக்கொண்டிருந்த விஷயம் சன் டிவியில் வரும் செல்வி மெகா தொடர் பற்றி என்பது வேதாவுக்கு ஒருவழியாய்ப் புரிந்தது. "கேபிள் போட செலவாகும். எங்களுக்கு பார்க்க நேரம் இல்லம்மா.. அதுனால.."

"போட்டா நாங்க பார்க்க மாட்டமா? நாளைக்கே போட ஏற்பாடு பண்ணு"

"அது வந்து..." வெங்கட் பேசுமுன் வேதா வெட்டினாள், "லீவ் இட் டு மி வெங்கட். ஐ வில் ஹாண்டில் இட்".

இரண்டு நாளில் சன் டிவி வந்து விட்டது.

"சட்ட சபையில் அடிதடி.... வெளிநடப்பு.. இரவுசெய்தியில் காணத்தவறாதீர்கள்" என்ற அறிவிப்பு வந்ததும் "இதுன்னா சட்ட சபை. ராத்திரி அவசியம் பார்க்கணும்" என்று மாமனார் மகிழ, "ஒன்பது மணிக்கு புதுத் தொடராம்" என்றாள் மாமியார். அவர்களுக்கு சன் டிவியால் பொழுது போனது. மெகா தொடர்களோடு மட்டுமல்லாமல் பகலில் உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக ஒளிபரப்பப்பட்ட பழைய தமிழ் படங்களைப் பார்த்து மகிழ்ந்தார்கள். கோவை முனியம்மாவின் நாட்டு விருந்து நிகழ்ச்சியில் கிடைத்த செய்முறையை வைத்து மாமியார் டிஃபன் பண்ணிப்போட்டதோடு,

"அவுத்திக்கீரை வடை சுட்டு வெச்சேன் மாப்பிள,
ஆசையோடு தின்னுங்க மாப்பிள
வவுத்து வேதனைகள் போயிடும் மாப்பிள
வக்கணையாய்த் தின்னுங்க மாப்பிள்ள"
என்று பாட்டும் கூடப் பாடி அசத்தினாள்.

அடுத்து வந்த நாட்களில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. திங்கள் நகைச்சுவை, செவ்வாய் காதல், புதன் காவியம், வியாழன் அதிரடி, வெள்ளி ஆக்ஷன் என்று தினமும் படங்கள், தொடர்கள் பார்த்ததில், வீட்டில் மாமியாருக்கு சமைக்க நேரம் இல்லாமல் போய்விட்டதால் உணவு அயிட்டங்கள் ரசம், அப்பளம் மட்டும் என்று எளிமையாயின. பரிமாறும் போது தொடர்கள் பார்க்க முடியாமல் போனதால், சமைத்ததை மேஜையில் வைத்து விட்டு மாமியாரும் மாமனாரும் டிவியில் ஆழ்ந்தார்கள். அவர்களுடன் விளம்பர இடைவேளையில் மட்டுமே பேச சுருக்கமாகப் பேச முடிந்தது.

ஒரு மாதம் கழிந்து மூன் டிவியில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மார்ட்டின் மார்க்கய்யா தலைமையில், "பண்டிகை விருந்துக்கு உகந்தது ஆமவடையா, உளுந்து வடையா" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கவிருப்பது அறிவிக்கப்பட்டது. "ஏங்க ஆட்டுக்கல்லை இவ்ளோ மெதுவா சுத்தறீங்கனு பொண்டாட்டி கேட்டுச்சு.. ஆமை வடைக்கில்ல மாவு அரைக்கிறேன்.. அதான் மெதுவா சுத்தறேன்னு சொன்னேன்" என்று ஒரு பட்டி மன்ற நட்சத்திரப் பேச்சாளர் சொல்லுவதை பட்டிமன்றப் பார்வையாளர்கள் ரசித்துக் கைதட்டுவது போல ஒரு துண்டுப் பதிவும் கூடுதலாகக் காட்டினார்கள்.

வெங்கட்டுக்கு பட்டி மன்றங்களில் ஒரு விசே" ஈடுபாடு உண்டு. ஆனால் பட்டி மன்றம் நடக்கவிருக்கும் தினம் அவனுக்கு வேலைநாள்.

"மாமா பட்டி மன்றம் பார்க்கணும்னு ஆசை. எனக்குப் படம் வராட்டி பரவாயில்ல. சவுண்டு கேட்டா போதும். என் டேப் ரிக்கார்டர்ல பதிவு செஞ்சிடமுடியுமா?" என்று மாமனாரிடம் கேட்டான். அவரும் சம்மதித்தார்.

அன்று மாலை வேதாவும் வெங்கட்டும் வந்த பிறகு "வேதா.. நானும் உங்கம்மாவும் நாளைக்கு அவசரமா ந்யூயார்க் போகணும்" என்றார்.

"அதுக்குள்ளயா... வந்து ஆறு வாரமாகல.... உங்களுக்கு விசா ஆறு மாசம் இருக்கே... மெதுவா போகலாமே" என்றாள் வேதா.

"இங்க இருக்கக் கசக்கறதா? ஆனா இப்ப முக்கியமா ஒரு வேலை இருக்கு. இந்தியால என் சினேகிதர் ஒருத்தரோட பெண் ந்யூஜர்சியில இருக்காளாம். உன் தம்பிக்கு கல்யாணம் பண்ணலாம்னு திட்டம். உன் தம்பியக் கேட்டால் இப்ப வேணாம், அப்ப வேணாம்னு சொல்லுவான். நேர்ல போயிட்டா சமாளிக்கறது சுலபம். அவசியம் போயாகணும்"

"ஒரு வாரத்தில வந்துடுங்க" என்று சொல்லி அரைமனதோடு அவர்களை ந்யூயார்க்குக்கு அனுப்பினார்கள். அடுத்த வாரம் அவர்கள் இந்தியா போய்விட்டதாக செய்தி வந்தது.

ஊருக்கு போன் போட்டு "என்னப்பா சொல்லாம கொள்ளாம போயிட்டீங்க?' என்று கேட்டாள்.

"இல்லம்மா. சில விவகாரங்கள் இங்க கவனிக்க வேண்டியிருக்கு. அதை எல்லாம் முடிச்சிட்டு மெதுவா அங்க வரோம். எவ்ளோ நன்னா இருந்துது அமெரிக்கா. மாப்பிள்ளை செளக்கியமா... இல்லம்மா இப்ப வேணாம்.. அப்புறமா நானே கூப்பிட்டு பேசறேன்.. அம்மா பிசியா இருக்கா... பெரிசா ஒண்ணும் இல்லம்மா.. டிவி பார்த்திட்டு இருக்கோம்.. இப்ப என்ன சொன்னா? உனக்கு மூளையே இல்லன்னா?.. அய்யோ வேதா, இல்லம்மா நான் உன்னைச் சொல்லலை.. தப்பா நெனச்சிக்காதே.. இங்க டிவில இப்ப ஓடிட்டிருக்கிற தொடர்ல நடிகை சொன்ன வசனம் எனக்கு சரியா காதுல விழல.. அம்மாகிட்ட அவ என்ன சொன்னாள்னு அந்த வசனத்தைக் கேட்டேன்... போனை வெச்சுடவா.. தொடர் முடிஞ்சப்பறம் நிதானமா பேசலாமே.."

வேதா, வெங்கட் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சன் டிவி இணைப்பை நீக்கிவிட்டார்கள். கடை ரொட்டி கூடுதலாக வாங்கி வைத்துக் கொண்டார்கள். இயல்பு வாழ்க்கை தொடங்கியது. வேதாவின் பெற்றோர் இருந்தபோது கிடைத்த வசதிகள் இப்போது இல்லாமல் போனது கஷ்டமாக இருந்தது. வெங்கட் தன் பெற்றோரை இங்கு வர அழைத்தபோது அவர்கள் வர மறுத்து விட்டார்கள். அன்று விடுமுறை நாள். டிவியைத் துடைத்துக் கொண்டிருந்த வெங்கட் கண்ணில் டேப் ரிகார்டர் பட்டது.

"ஆகா பட்டி மன்றம் ரிக்கார்டு பண்ணச் சொல்லியிருந்தேன் மாமாகிட்ட.. கேட்க மறந்தாச்சே.. வா வேதா கேட்கலாம்" என்று அதற்கு மின் இணைப்பு கொடுத்தான்.

சிறிது கொர கொர சத்தம்..

அதில் இருந்த ஒரு உரையாடல் அவன் காதில் கேட்டது. மாமியாரும் மாமனாரும் பேசினது அவர்களுக்குத் தெரியாமலேயே பதிவாயிருந்தது அதில்.

"ரூமை வாக்வம் பண்ணியாச்சா... குப்பையை சரியான தொட்டியில போட்டாச்சா... பேப்பர் குப்பை கருப்புக் கூடையில, கண்ணாடி, பிளாஸ்டிக் நீலக் கூடையில... இலை, தழை பச்சைக் கூடையில...

தரைய மெழுகு போட்டு துடைக்கணுன்னு சொல்லிட்டுப் போனா... அவள் பேன்ட்டை வாஷிங் மெஷின்ல ஜென்டில் ஷைக்கிள்ல போடணுமாம்"

"எல்லாம் பண்ணியாச்சு. காரையும் கக்கூசையும் கழுவறதுக்கா நான் அமெரிக்கா வந்தேன்? ஒரு ஆளை போட்டுத் தொலைக்க மாட்டாங்களோ? ரெண்டு பேரும் விழுந்து விழுந்து காசு பண்றாங்க இல்லியா? நல்ல வேளை இந்த ஊருல வீட்டில எருமைமாடு வெச்சுக்கறதில்லை. இருந்தா அதை மேய்ச்சு, குளிப்பாட்டி, தீனி வெக்கறதும் எனக்கு வேலையாயிடும். என் ஸ்கூட்டரையே ஆபீஸ் ப்யூனை விட்டு சுத்தம் பண்ணச் சொல்லுவேன். இங்க நான் பண்ண வேண்டியிருக்கு எல்லா வேலையும். ஒரு ஆட்டோ , பஸ், ஒண்ணும் இல்ல. எங்க போனாலும் லொங்கு லொங்குனு நடை. காலொடிஞ்சு போறது. வயசானவன்னு ஒரு கருணை வேண்டாம். இவங்களுக்கு வேலை செய்யவா நான் ரிட்டயர் ஆனேன்?"

"ஆமாம் பொண்ணே நம்மை மதிக்கல. ஒரு பேச்சுக்கு கூட ஒரு நாள் நான் சமைக்கிறேம்மான்னு சொல்ல மாட்டேங்கறா. பண்ணிப்போட்டா சட்டமா உக்காந்து சப்புக் கொட்டித் திங்கறா.. படிக்கற நாளிலயே சமயலறைப் பக்கம் வரமாட்டா ராணி... இப்ப ரொம்ப மோசமா இருக்கு. ஒரு துரும்பக் கூட எடுத்து போடறதில்ல.. மெட்ராஸ்லயாவது மருமகள் சமைப்பா.. உப்பு உறைப்பு கொஞ்சம் மின்ன பின்ன இருந்தாலும் பொங்கிக் கொட்டிடுவா. கூட மாட நான் ஏதாவது செஞ்சா போறும். அப்புறம் டிவி

பார்த்திட்டு கதையெல்லாம் பேசுவோம். இங்க நாம கேட்டு சண்டை போட்டுன்னா மூன் டிவி வந்துது?

இங்க மாப்பிளைக்கு வாய்க்கு தினுசு தினுசா வேண்டியிருக்கு. சீடை, முறுக்கு, தேங்குழல்னு பண்ணி மாளல. மிஷின் அரைக்கிற மாதிரி ஒரே நாளிலயே தின்னு ஒழிச்சிடறார்."

"ஆமாம் தீனிப்பண்டாரமாய் இருக்கான் மாப்பிளை. ஆமவடையா, உளுந்து வடையான்னு பட்டி மன்றம் கேக்கணுமாம். வெக்கக்கேடு... இஞ்சினீராம் இவன். நம்ம டக்குனு கெளம்பிடணும் இங்கேயிருந்து. என்ன சொல்ற?"

"ஆமாம். ஜூசும், ஐஸ்க்ரீமும் சாப்பிட்டுட்டு வீட்ல அடஞ்சி கெடக்க வேண்டியிருக்கு. ஃபர்ஸ்ட் கிளாஸ் ஜெயில் போல இருக்கு. பொண்ணும் மாப்பிளையும் காசு கொடுத்து அழச்சி வந்திருக்காங்க. நம்மை இப்ப போக விடுவாங்களா? விசா முடிய ஏகப்பட்ட காலம் இருக்கு. இங்க மூன் டிவி ஒண்ணுதான் வரது. மத்த டிவி நிகழ்ச்சி எவ்வளவு மிஸ் பண்றேன்.. கல்கி என்னாச்சுனு தெரியல.. ஜனனில பானுவுக்கு வயித்து வலி என்னாச்சுனு தெரியல.. இங்க அதெல்லாம் வராதாமே"

"நம்மகிட்ட ரிட்டர்ன் டிக்கட் இருக்கு. ந்யூயார்க்ல புள்ளைகிட்ட போறதா சாக்கு சொல்லிட்டு அங்கேருந்து ப்ளேன் ஏறி ஊருக்கு போயிரலாம். நம்ம சம்பந்திக்கு தான் அமெரிக்காவுக்கு முதல்ல வரலேன்னு பெரிய குறை. அவர்கிட்டயும் போனவுடனேயே சொல்லிடணும் இங்க நிலமை எப்படி இருக்குனு.

பட்டி மன்றத்தை ரிகார்ட் பண்ணச் சொல்லியிருக்கார் மாப்பிள்ளை. இந்த சனியன் பிடிச்ச ரிக்கார்டர்ல ஏகப்பட்ட பட்டன் இருக்கு. எந்த பட்டனை அமுக்கித் தொலைக்கணும்கிற விவரத்தை சரியா கேட்டுக்க வெச்சிக்க மறந்திட்டேன்... க்ளக்.. கொர்.. ர்ர்ர்ர்ர்.........."

எல்லே சுவாமிநாதன்,
லாஸ் ஏஞ்சல்ஸ்
Share: 
© Copyright 2020 Tamilonline