Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சிறுகதை
சாருமதியின் தீபாவளி
சிறகடிக்க ஆசை
- அருணா|அக்டோபர் 2003|
Share:
அபிராமி கண்களிலிருந்து சிறுவாணி அணை உடைந்தது போல் கண்ணீர். நாளை விடிந்தால் தமிழ்ப் பரீட்சை. அப்புறம் வரிசையாகப் பரீட்சைகள்தாம். என்னதான் ஸ்டடி ஹால்ஸில் படித்திருந்தாலும், பரீட்சைக்கு முந்தின நாள் ஒரு முறை, அட்டை-டு-அட்டை படித்தால்தான் நல்ல மதிப்பெண் பெறமுடியும். ஆனால், மனம் இன்னும் நேற்று நடந்ததையே நினைத்து அழுதுகொண்டு இருக்கிறது.

நேற்று ஸ்கூலில் ஹால் டிக்கெட் விநியோகம் செய்தார்கள். முன்பே பேசி வைத்திருந்தது போல் பிரண்ட்ஸ் எல்லோரும் 11 மணியளவில் ஸ்கூல் ஸ்டோருக்கு முன் வந்து கூடினர். "நீ அடாமிக் பிஸிக்ஸ் படிச்சுட்டியா?", "நான் இன்டெக்ரல் கால்குலஸ் முடிச்சுட்டேன் யார்" போன்ற எக்ஸாம் ஜுரப் பினாத்தல்கள் எல்லா திசைகளிலும் ஒலித்துக் கொண்டிருந்தன. அவற்றோடு கூடவே, அமிர்கான் டைரக்ட் செய்து கொண்டிருக்கும் ஹிந்திப் படம் பற்றியும், ஜோஜோ டிவியில் 'நீங்களும் அழகியாகலாம்' நிகழ்ச்சித் தொகுப்பாளினி சுஷ்மாவும், 'டேக் ஆ·ப் டு அமெரிக்கா' இசை ஆல்பம் வழங்கிய கிருஷ்ணாவும் ரகசியமாக சென்னையின் அவுட்டோர்களில் சந்தித்துக் கொள்வது பற்றியும், ஆங்காங்கே சினிபிட்களும் ஒலித்துக் கொண்டிருந்தன.

அப்போது, அவுட்டோர் கோ ஆர்டினேட்டர் ஹரிப்ரியா, திடீரென்று ஞாபகம் வந்தவள் போல், "ஏய், எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் நம்ம கேங் எல்லாரும் பெங்களூர் டூர் போலாமா, ரெண்டு நாள்? அங்க என் கஸின் வேலை செய்யறா, அவ நம்ம தங்கறதுக்கு, சுத்தி பார்க்கறதுக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணுவா... யார், யார் வர்றீங்க?"என்று கேட்டதுதான் தாமதம், சிறிதும் யோசிக்காமல் அத்தனை பேரும் "சூப்பர் ஐடியா", "கிரேட்", "ஒய் நாட்?", என்று வரிசையாக ஆமோதித்தனர். அபிராமியும் தான்.

ஹால் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாய், "அம்மா, அம்மா" என்று அழைத்த வண்ணம் போனாள் அபிராமி. பின்பக்கம் வாசலில், வீட்டு வேலை செய்யும் பிரேமாவிற்குப் பாத்திரங்களை ஒழித்துப் போட்டுக் கொண்டிருந்த அம்மா "என்னடா? என்ன இத்தனை வேகம்?" என்று கேட்டார். "அம்மா, அம்மா, நீங்கதான்ம்மா எப்படியாச்சும் அப்பாட்ட பர்மிஷன் வாங்கிக் குடுக்கணும். எக்ஸாம்ஸ் எல்லாம் முடிஞ்சதும், வகுப்புலே எல்லாரும் சேர்ந்து ரெண்டு நாள் பெங்களுர் டூர் போறாங்கம்மா. ஹரிப்ரியாவோட பெரியம்மா பொண்ணு அங்க வேலை பார்க்கறாங்க. அவங்க எங்களுக்கு ஹோட்டல் புக் பண்றதுக்கு, சுத்திப் பார்க்கறதுக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணுவாங்கம்மா. ஒண்ணும் பயமே இல்லம்மா. ப்ளீஸ்ம்மா, ப்ளீஸ்" என்று அம்மாவின் சேலைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.

அம்மா, ஒருமுறை நிமிர்ந்து பிரேமாவைப் பார்த்துவிட்டு, "வெயில்ல போய்ட்டு வந்திருக்க, லெமன் ஜூஸ் கலந்து வச்சிருக்கேன் ·பிரிட்ஜ்ல, பிரேமாவுக்கு ஒரு டம்ளர் ஊத்திக் குடுத்துட்டு, நீயும் குடி. நான் கைவேலையை முடிச்சுட்டு வந்து பேசறேன்" என்றார்.

லெமன் ஜுஸை பிரேமாவிற்குக் கொடுத்து, தனக்கும் எடுத்துக் கொண்டு வந்து, ஹாலில் சேரை இழுத்து ·பேனுக்கு நேராகப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து, ஜூஸை உறிஞ்சினாள் அபிராமி. சிறிது நேரத்தில் முந்தானையில் கைகளைத் துடைத்துக் கொண்டே உள்ளே வந்த அம்மா, "ஹால் டிக்கெட் வாங்கிட்டியா அபி? மேத்ஸ் மிஸ்ஸைப் பார்த்தா என்னவோ டவுட் கேக்கணும்னியே, கேட்டியா?" என்று கேட்ட வண்ணம் சோபாவில் அமர்ந்தார்.

"அதெல்லாம் இருக்கட்டும்மா, நானும் டூருக்குப் போறேம்மா" என்று அம்மா இது பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பது போல் தெரிகிறதே என்று மனதிற்குள் தோன்றிய சிறு பதட்டத்தை மறைத்தவளாக மறுபடியும் ஆரம்பித்தாள் அபி.

"கண்ணம்மா, நான் சொல்றதை நல்ல அர்த்தத்தில எடுத்துக்கோ, நீ இங்கே கோயமுத்தூர்லயே அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போறேன், இந்தப் பொண்ணு வீட்டுக்குப் போறேன், சினிமாவுக்குப் போறேன்னு எல்லாம் கேட்டப்ப, நானே அப்பாட்ட சொல்லி உனக்கு பர்மிஷன் வாங்கித் தந்திருக்கேன். ஆனா, பெங்களுர் போறதெல்லாம் விளையாட்டு இல்லை".

"இங்க கோயமுத்தூருக்குள்ளேயே போறதுக்கும், இதுக்கும் என்னம்மா டி·பரன்ஸ்?

ஹரப்ரியாவோட அக்கா எங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்கம்மா" என்று கொஞ்சலாக இழுத்தாள். "தங்கற ஹோட்டல்ல நைட் திடீர்னு ஏதாச்சும் ஒரு பிரச்சனை, சுத்திப் பார்க்கப் போற இடத்துல ஒரு பிரச்சனைன்னா நீங்க தானே சமாளிச்சாகணும்? காலைல போய்ட்டு சாயந்திரம் வீடு வந்து சேர்ந்திடறதுல ஆபத்துக்கு வாய்ப்பு குறைவும்மா, புரிஞ்சுக்கோ".

"கீர்த்தி அக்கா மட்டும் மெல்போர்ன் சுத்திப் பார்க்கப் போறேன், சிட்னில மேட்ச் பார்க்கப் போறேன்னு சொல்றாளே, அதெல்லாம் ஓவர்-நைட் ஸ்டே இல்லாம என்னவாம்? அவளை மட்டும் ஏதாச்சும் கேள்வி கேக்கறீங்களா? அவளுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா?".

"அவளுக்கு வயசு என்ன பதினேழா? அவளும் உன்னை மாதிரி ஹைஸ்கூல் ஸ்டேஜ் தாண்டி, 4 வருஷம் காலேஜ் தாண்டி, இன்னிக்கு எம்.ஸ். படிக்கப் போயிருக்கா. அவ வயசுக்கும், அனுபவத்துக்கும் தகுந்த பக்குவம் அவளுக்கும் வந்திருக்கும், அவளைப் பார்க்கறவங்க பார்வையிலயும் வித்தியாசம் இருக்கும்" மறுபடியும் அம்மாவைக் கத்தரித்தாள் அபிராமி "பக்குவம் எப்படி வரும், பழகப் பழகத் தானே வரும்? அங்க போகாத, இங்க போகாதன்னு உங்க கன்ட்ரோலுக்குள்ளயே வச்சிருந்து, திடீர்னு ஒரு நாள் பக்குவம் வரணும்னா எப்படி வரும்?"

"உன்னை எங்கயுமே போகாதேன்னு சொல்லலியே நான், ஹோட்டல்ல ஸ்டே பண்ணி ஊர் சுத்தறதுக்கெல்லாம் உங்களுக்கு வயசு பத்தாது; 16, 17 வயசுல இதெல்லாம் தேவையில்லாத வம்புன்னுதான் சொல்றேன். ஜுவாலஜில பட்டாம்பூச்சியோட லைப் சைக்கிள் படிக்கற இல்ல, பட்டுப்புழு பட்டாம்பூச்சி ஆகறதுக்கு நடுவுல எத்தனை பருவம் இருக்கு, அந்தப் பருவமெல்லாம் ஒவ்வொண்ணா தாண்டி, அந்தந்தப் பருவத்துக்குட்பட்ட வளர்ச்சி மட்டுமே அடைஞ்சா தான், அது ஆரோக்கியமான, நார்மலான பட்டாம்பூச்சியா இருக்க முடியும். பட்டுப்புழுலேர்ந்து, அது நேரா சிறகடிச்சுப் பறக்க முயற்சி பண்ணா, அதோட சிறகுகள் சரியா வளராம, கீழ விழுந்து சிதைஞ்சு தான் போகும். நீயும் அது மாதிரி ஒரு அழகான பட்டுப்புழு, ஒவ்வொரு பருவத்தையும் நிதானமா, முழுமையா கடந்து போனீன்னா, பட்டாம் பூச்சி ஆனதும் ஆனந்தமா சிறகடிச்சுப் பறக்கலாம். இப்பவே பறக்க நினைக்காத, நீ இன்னும் அதுக்கு தயாரகல..." அம்மா பேசிக்கொண்டே இருக்கும் போதே அபிராமி விக்கலும், கேவலுமாய் மாடிக்கு ஓடி, தன் இயலாமையை எல்லாம் கதவின் மேல் காட்டினாள்.

அந்தக் கணம் அழுது வடிய ஆரம்பித்த அவளது அழகு முகம், இன்னும் அழுது கொண்டே இருக்கிறது. அக்கா கீர்த்தி கொடுத்து வைத்தவள், அதான் ஆஸ்திரேலியாவிற்குப் படிக்கறேன் பேர்வழி என்று ஜூட் விட்டு விட்டாள். எப்ப படிப்பது, என்ன படிப்பது, எப்ப ஊர் சுத்துவது, எங்கே சுத்துவது, எல்லாம், எல்லாமே அவள் இஷ்டம். அவள் வாழ்க்கை அவள் வாழ்கிறாள். ரெடி இல்லையாம், ரெடி... அதை முடிவு செய்ய இவர்கள் யார்?

காலடி அரவம் கேட்க, கண்களை அவசரம், அவசரமாகத் துடைத்துக் கொண்டு, புத்தகத்துக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
அன்று தான் கடைசிப் பரீட்சை, பயாலஜி. பட்டாம்பூச்சியின் லைப் சைக்கிள் பற்றிய கேள்விக்கு பதில் எழுதும்போது அம்மாவின் முகம் வந்து போனது.

பரீட்சை முடிந்து, மராத்தான் ரேசில் ஓடிக் களைத்தவர்கள் போல் அனைவரும் அங்கங்கே நின்று, தேங்கி, நகர்ந்து, ஊர்ந்து கொண்டிருந்தனர். ஹரிப்ரியா தன் தொழிலை கவனிக்க ஆரம்பித்தாள். "யார், யார் எல்லாம் வர்றீங்க, எந்தெந்த டேட்ஸ் ஒகே?"

எல்லோரும் ஏதேதோ சொல்ல, எதிலும் ஈடுபாடு இல்லாதவளாய் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அபிராமி. பானு "என்னடா, ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று தோளை உசுப்ப, "ம், ஒண்ணுமில்ல, நான் வரலை, எங்க வீட்டில ஓவர்-நைட் ஸ்டே எல்லாம் கூடாதுன்னுட்டாங்க" என்றாள்.

ஒரு கணம் நிலவிய அமைதியை சுஜாதா கலைத்தாள், "ஏய், நம்ம எல்லாரும் சேர்ந்து போற கடைசி ட்ரிப் இது. அடுத்த வருஷம் யார் யாரு, எந்தெந்த காலேஜோ? ஏன் நம்ம எல்லோரும், அபியும் வர்ற மாதிரி பக்கத்துலேயே எங்கியாச்சும், ஒரு நாள்ல போய்ட்டு வரக்கூடாது?" என்று கேட்க, "பைன் வித் மீ" என்று உடனே ஹரிப்ரியா மோதிக்க, அத்தனை பேரும் "சம்மதமே", என்ற ரீதியில் பார்க்க, வரும் ஞாயிறன்று மலம்புழா போகலாம் என்று முடிவானது; வேன், சாப்பாடு என்ற அத்தனை பொறுப்புகளையும் ஹரிப்ரியாவே எடுத்துக் கொண்டாள், அவள் அப்பா டிராவல்ஸ் வைத்திருக்கிறார்.

அன்று இரவு அபிராமி சாப்பிட்டுவிட்டு, வாஷ்பேசினில் கைகழுவிக் கொண்டு, பொத்தாம் பொதுவில், "என் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் எனக்காக ஒரு நாள் ட்ரிப்பே போகலாம்னு முடிவு பண்ணி, ஞாயிற்றுக்கிழமை மலம்புழா போகப் போறோம்; ஓவர்-நைட் ஸ்டே எல்லாம் கிடையாது; இதுக்கு ஒண்ணும் பட்டுப்புழு-பட்டாம்பூச்சி தத்துவம் எல்லாம் சொல்ல மாட்டீங்களே?", என்றவளாய் அம்மாவின் பதிலுக்குக் கூட காத்திராமல், ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பின்வாசலுக்கு நகர்ந்தாள்.

"உன்னை டூருக்கு அனுப்பக்கூடாதுன்னு நாங்க ஒன்னும் கங்கணம் கட்டிக்கலை அபி, உன் நல்லதுக்குத் தான் நாங்க சொல்றோம்" என்று ஏதோ சொல்ல வாயெடுத்த இந்திரா, அவள் போன திசையையே ஒரு நிமிடம் பார்த்து விட்டு 'ரொம்பவும் முறுக்கினா கயிறு அந்துரும்; அவ போக்கிலயே விட்டுப் பிடிப்போம். ஹோட்டல், பெங்களுர்னு அடம் பிடிக்காம, இந்த வரைக்கும் ஒத்துக்கிட்டாளே, அது வரைக்கும் உத்தமம்' என்று நினைத்துக் கொண்டு, கணவனை எப்படி சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

மலம்புழாவின் தொங்கு பாலத்தின் நட்ட நடுவில் நின்று கொண்டு, 'குரங்கு' சுனிதாவை ஆடுறா ராமா, ஆடுறா ராமா, என்று ஆட வைத்து, அபிராமியும், மற்றவர்களும் அவளை ரவுண்டு கட்டி, விசிலடித்து, பசங்களுக்கு சமமாக நாங்களும் இதெல்லாம் செய்வோம் என்று நிரூபித்து அலாதி திருப்தி அடைந்தார்கள். இன்னொரு பக்கம் பூங்காவில் ஊஞ்சலும், சீசாவும் ஆடி அவர்களுக்குள் இருந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டார்கள்.

போட்டிங்கில் எதற்கு, என்ன என்றே இல்லாமல், திடீர், திடீரென்று "ஊஊஊஊஊஊ....", "ஊஊஊஊஊ...." என்று கத்தி, சுற்றி இருந்த அத்தனை பேரையும் கவர்ந்தார்கள். பள்ளிப் பருவத்தையும், கல்லூரிப் பருவத்தையும் கடந்து, கணவன், குழந்தையெனெ இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்ட பெண்கள், இவர்களை எரிச்சலோடு பார்த்து, "இந்தக் காலத்துப் பிள்ளைங்க ரொம்பத்தான் கெட்டுப் போயிருச்சுங்க; விவஸ்தையே இல்லாம அதுங்க சிரிப்பையும், ஆட்டத்தையும் பாருங்களேன்" என்றவாறே, அவரை அடிக்க மாட்டாம சுவரை அடிச்ச கதையா, "ரோட்டைப் பார்த்து நடங்கடா" என்று பிள்ளைகளின் மேல் எரிந்து விழுந்தார்கள்.

இவர்களின் ஆட்ட பாட்டங்களைப் பார்த்தே களைத்துப் போய், சூரியன் விடைபெற்றுச் செல்ல, அமாவாசை நெருங்குவதால் தேய்ந்து போன சந்திரன் ஈனஸ்வரத்தில் 'ஹை!' சொல்லி உள் நுழைந்தான். ஒருவழியாய், அரை மனதோடு எல்லோரும் வேனில் அமர கோவையை நோக்கி வண்டி புறப்பட்டது.

இன்னும் களைப்புத் தட்டாத அந்த இளம் குமரிகளெல்லாம், மிச்சம் மீதி எனர்ஜியையும் அந்தாக்ஷரியில் கரைத்துக் கொண்டிருந்தார்கள். அரைமணி நேரம் கூட சென்றிருக்காது, வேன் டட்டட்டட்ட..ட் என்ற வினோதமான சத்தம் எழுப்பி வேகம் குறைய, டிரைவர் வண்டியை ஓரம் கட்டினார். ஹரிப்ரியா "என்னாச்சுண்ணா?" என்று கேட்டாள். "ஒண்ணும் இருக்காது அம்மணி, 2 நிமிஷத்தில சரி பண்ணிடலாம்" என்று, இறங்கி இன்ஜினை நோட்டம் விட்டு விட்டு வந்து சீட்டுக்கடியில் இருந்து, ஸ்பானர் செட்டை எடுத்துக் கொண்டு போனார். போனவர் போனவர் தான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் ஆரவாரம் எல்லாம் அடங்கிப்போனது. களைப்பும், பயமும் ஆட்கொள்ள ஆரம்பித்தது. டிரைவர் அண்ணா வந்து "பாப்பா, நீ£ங்களெல்லாம் வண்டிக்குள்ளேயே இருங்க, நான் இந்தப் பக்கம் போற வண்டி எதுவும் வந்தா லிப்ட் கேட்டு, அடுத்த டவுனுக்குப் போய், யாராச்சும் மெக்கானிக் கிடைச்சா கூட்டிட்டு வர்றேன்" என்று சொன்னார். சரி என்றும் சொல்ல முடியாமல், வேண்டாம் என்றும் சொல்ல முடியாமல், இவர்களெல்லாம் அமைதியாய் இருக்க, அவர் வண்டி எதுவும் வருதா என்று பார்க்க ஆரம்பித்தார்.

டிரைவர் யாரோ ஒருவரோடு டபிள்ஸ் ஏறிப் போய், ஒரு மணி நேரத்திற்கு மேல் இருக்கும். ரோட்டில் போன வாகனங்களில் இருந்த மனிதர்கள் இவர்களை ஒரு விதமாகப் பார்த்துக் கொண்டு சென்றனர். அந்த நடமாட்டமும் குறைய ஆரம்பித்தது. என்ன செய்வது என்று கூட எதுவும் தோணாமல், எந்நேரம் எவள் அழ ஆரம்பிப்பாளோ என்று, எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, காற்றைக் கிழித்துக் கொண்டு அவர்களைத் தாண்டிப் போனார்கள் 5, 6 பைக்கர்கள். அந்த நிசப்தத்தில், தேய்பிறையின் இருட்டில், அத்தனை பைக்குகளின் ஒட்டு மொத்த சப்தமும் அவர்களுக்குள் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது. பத்தும் பத்தாததற்கு, அந்த பைக்கர்கள் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே கொஞ்ச தூரம் போய், வண்டியைத் திருப்பிக் கொண்டு வந்து இவர்கள் வேன் பக்கத்தில் நிறுத்தினர். அத்தனை பேரின் முகத்திலும் பேயறைந்தது போன்ற ஒரு பயம். ஒருவர் கையை மற்றவர் கை அனிச்சையாய்ப் பற்றிக் கொண்டது. அபியின் மண்டைக்குள், அவள் பார்த்திருந்த தமிழ், ஹிந்தி சினிமாக்களின் க்ளைமாக்ஸ் சீன்கள் எல்லாம் மின்னி, மின்னி மறைந்தன.

அவர்களில் ஒருவன், ஹெல்மெட்டைக் கழட்டிக் கொண்டே வேனை நோக்கி வர, ஹரிப்ரியா ஒருமாதிரியாக சுதாரித்துக் கொண்டு வண்டியிலிருந்து இறங்கி அவனருகில் தயங்கி, தயங்கிச் சென்றாள். "வாட் ஹாப்பன்ட்?" என்று அவன் கேட்க ஹரிப்ரியா சன்னமாக விவரித்துக் கொண்டிருந்தாள். இப்போது கொஞ்சம் தைரியம் பெற்ற இன்னும் சிலர் அவளுக்குப் பக்கத் துணையாக அருகில் சென்று நின்று கொண்டனர்.

"எல்லாரும் கோயமுத்தூரா?" என்று அவன் கேட்க "ஆமாம்" என்றாள் அபிராமி. "ஏன் இந்த இருட்டுல ஆள் நடமாட்டம் அவ்வளவா இல்லாத இடத்துல தனியா நின்னுக்கிட்டு இருக்கீங்க? வண்டியை ரிப்பேர் பண்ணி எடுத்துட்டு வாங்கன்னு டிரைவர்கிட்ட சொல்லிட்டு நீங்க இந்தப் பக்கப் போற ஏதாச்சும் ஒரு பஸ்ஸை நிறுத்தி ஏறிப் போயிருக்கலாமே? இங்கேர்ந்து ஸ்டிரெய்ட் பஸ் கிடைக்காட்டியும் பாலக்காடு போய் மாறிப் போயிருக்கலாமே? கோயமுத்தூர் பஸ் ஸ்டாண்டு போய்ட்டா, வீட்டுக்கு போன் பண்ணி யாரையாச்சும் வரச்சொல்லி இந்நேரம் வீடு போய் சேர்ந்திருக்கலாம் நீங்கள்ளாம். உங்க வீட்டுல இருக்கறவங்களும் இந்நேரம் என்ன ஆச்சோ, ஏதாச்சோன்னு தேடிட்டு இருக்க மாட்டாங்க?" என்றான். எல்லோரும் பேந்தப்பேந்த விழிக்க, "சரி, எல்லாரையும் வரச் சொல்லுங்க, வர்ற பஸ்ஸை நிப்பாட்டுவோம், நாங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி டிரைவரைப் பார்த்துச் சொல்லிட்டுப் போறோம்" என்று அவன் சொல்ல, தலையாட்டிக் கொண்டே எல்லோரையும் அழைக்கப் போனாள் ஹரி.

எல்லோரும் தத்தம் ஹாண்ட்பேக்கோடு பஸ் ஹெட்லைட் ஏதும் தெரிகிறதா என்று தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தனர். அபிராமியின் மனதில் அம்மாவின் வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன. 'சிந்திக்கக் கூடத் தெரியாம கதிகலங்கி நின்னுட்டிருந்தோமே. இந்த ஆளுங்க எவ்வளவு அழகா இந்த சிச்சுவேஷனை ஹாண்டில் பண்றாங்க. ஏன் எங்க யாருக்குமே இது தோணலை? வயசுக்குத் தகுந்த பக்குவம் தானே இருக்கும்? சிறகு முழுசா முளைக்கறதுக்கு முன்னாடி பறக்க நினைச்சா, கீழ விழுந்து சிதைஞ்சு தான் போகும். இந்த ஆளுங்களுக்கு பதிலா வேற எதாச்சும் பொறுக்கிங்க கண்ணுல பட்டிருந்தோம்னா, சிதைஞ்சு போனாலும் போயிருப்போம். நம்ம அம்மா, அப்பா எல்லாம் செஞ்ச புண்ணியம் தான் சேதமின்றி தப்பிச்சுக்கிட்டோம்.'

தூரத்தில் பஸ் வருவது தெரிய, சிந்தனையிலிருந்து மீண்டு வந்தாள். அவர்கள் நல்ல நேரம், அந்த பஸ் கோவைக்கே நேராகச் செல்லும் பஸ்ஸாக அமைந்தது. அவர்களுக்கு நன்றி சொல்லி விடை பெற்றனர்.

பஸ் ஸ்டாண்டுக்கு மிக அருகிலேயே வீடு இருந்தது அந்நேரத்துக்கு மிகச் சௌகரியமாக இருந்தது. அம்மா வாசலிலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தார். இவள் தலையக் கண்டதும் "காலா காலத்தில சீக்கிரம் வீடு வந்து சேர்றதில்ல? என்ன பொண்ணு, கொஞ்சம் கூடப் புரிய மாட்டேங்குது?" என்று பின் தொடர்ந்தார். அப்பா இன்னும் வந்திருக்கவில்லை போலும். உடை மாற்றி, முகம் கழுவிக் கொண்டு அமைதியாய்ச் சாப்பிட்டாள். மாடிக்குச் செல்லும் வழியில், டி.வி பார்த்துக் கொண்டிருந்த அம்மாவிடம் நின்று, "அம்மா, யோசிச்சுப் பார்த்தா, நீங்க சொல்றது சரின்னு தாம்மா தோணுது. சிறகு முழுசா முளைக்கறதுக்கு முன்னாடி பறக்க நினைச்சா, சிதைஞ்சு போக வாய்ப்பு அதிகம் தான்" என்று சொல்லிவிட்டு மாடிப்படிகளை இரண்டாய், நாலாய் கடந்து போனாள்.

என்ன நடந்திருக்கும் மலம்புழாவில் என்று ஒரு நிமிடம் திகைத்துப் போன இந்திரா "எதுவும் மிகுந்த விபரீதமாய் நடந்திருந்தால், கண்டிப்பாக அபி இவ்வளவு அமைதியாய் இருக்க மாட்டாள். இருந்தாலும், என்ன தான் நடந்தது என்று அவளிடமே கேட்டு விடலாமே" என்று நினைத்தவராய் இரண்டு படி ஏறிவிட்டு, பின்பு மனதை மாற்றிக் கொண்டார். "வேண்டாம், எதா இருந்தாலும், அது கற்றுத் தந்திருக்கும் பாடம் விலை மதிப்பில்லாதது. அது என்ன என்று நான் கேட்கப் போய், அந்தச் சுமையை என் மேல் இறக்கி வைத்து விட்டு அவள் அது கற்றுத் தந்த பாடத்தை மறந்து விடலாம். சுமையை அவளே சுமக்கும் வரை பாடத்தை மறக்க மாட்டாள்" என்று நினைத்துக் கொண்டு டி.வி. பார்க்க ஆரம்பித்தார்.

ரமணா
More

சாருமதியின் தீபாவளி
Share: 
© Copyright 2020 Tamilonline