Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நிதி அறிவோம் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
நேர்காணல்
எழுத்தின் மூலம் சமுதாய மாற்றம் உண்டாடக்குவது எளிதல்ல - சல்மா
பின்னோக்கிப் பார்ப்பதே எதிரியாக அமையலாம் - ஏஞ்சல் முதலீட்டாளர் எம். ஆர். ரங்கஸ்வாமி
- சந்திரா போடபட்டி, மதுரபாரதி|ஜூலை 2007|
Share:
Click Here Enlargeசந்திப்பு : சந்திரா போடபட்டி (CEO, eGrabber Inc.)
தமிழில் : மதுரபாரதி

'MR' என்று பரவலாக அறியப்படும் 'மாதவன்' ஆர். ரங்கஸ்வாமி சான் ஃப்ரான்சிஸ்கோவில் உள்ள Sandhill Group நிறுவனத்தின் இணை-நிறுவனரும் அதன் இயக்குநரும் ஆவார். மென்பொருள் துறையில் செல்வாக்குச் செலுத்தும் 200 பேர் பங்குபெறும் பிரபலமான ENTERPRISE மாநாட்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார். தவிர SOFTWARE மாநாட்டைத் தொடங்கிப் பின்னர் அதை மாநாடுகள் ஏற்பாடு செய்யும் மகத்தான நிறுவனமான CMPக்கு விற்று, மேலும் சிறப்பாக அதை நடத்தி வருகிறார். இந்த மாநாடு நிறுவனத் தலைவர்கள், உப தலைவர்கள், தொழில்முயற்சி முதலீட் டாளர்கள், ஊடகங்கள் ஆகியவற்றிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ஈர்க்கிறது. இவரைப் பற்றி 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' முதல் பக்கத்தில் எழுதியுள்ளது. கணினித் துறையின் செல்வாக்குள்ள 25 நபர்களுள் ஒருவர் என இவரை 'Computer Reseller News Magazine' வர்ணிக்கிறது.

Forbes பத்திரிக்கை வெளியிட்ட, தொட்டதைப் பொன்னாக்கும் 'மைதாஸ் 100' முதலீட்டாளர் பட்டியலில் இவரது பெயர் இரண்டு ஆண்டுகள் இடம்பெற்றது. இந்த இடத்துக்கு இவர் போய்ச் சேர்ந்தது எப்படி? இதோ அவர் சொல்வதைக் கேளுங்கள்...

கே: தொழில்ரீதியாக உங்களை நீங்கள் எப்படி அறிமுகம் செய்து கொள்வீர்கள்?

ப: எனது தொழில் முதலீடு செய்வதும், மென்பொருள் துறைக்கு ஆலோசனை கூறுவதும். நான் தொடக்க நிலை நிறுவனங் களில் முதலீடு செய்கிறேன், ஒரு ஏஞ்சல் இன்வெஸ்டராக. ஒரு கம்பெனியின் நிறுவனரிடம் நல்ல தொழிலுக்கான எண்ணம் இருக்கிறது என்றால் அந்த உத்தியை வளர்த்தெடுத்தும், நிதி முதலீடு செய்தும் நான் உதவுகிறேன். பிறகு நிர்வாகக் குழுவை அமைத்தல், அதிகப்படி முதலீடு, வாடிக்கையாளர்களைக் கண்டறிதல், வணிகத்தை வளர்த்தல் போன்றவற்றைச் செய்ய உதவு கிறேன். எனது பணத்தையும் நேரத்தையும் நான் ஆரம்ப நிலையில் முதலீடு செய்கிறேன்.

நான் செய்யும் மற்றொரு தொழில் மென்பொருள் துறைக்கு ஆலோசகராக இருப்பது. அதற்காகத்தான் நான் Sandhill.com என்பதை அமைத்துள்ளேன். மென்பொருள் துறை நிர்வாகிகளுக்கான வலையகம் இது. நான் மென்பொருள் மாநாடுகளை நடத்து கிறேன். அந்தத் துறையின் பிரச்னைகள், போக்குகள் போன்றவற்றை விவாதிக்க வழி வகுக்கிறேன்.

கே : உங்களது கல்விப் பின்னணி யைச் சொல்லுங்கள்...

ப : நான் சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் படித்தபின் லயோலாவில் பி.காம். படித்தேன். அதன் பிறகு சென்னை சட்டக் கல்லூரியில் பொதுச் சட்டம் பயின்றேன். 1976-ல் கென்ட் ஸ்டேட் பல்கலையில் MBA கற்க வந்தேன். எனக்குத் தொழில்நுட்பப் பின்புலமும் கிடையாது, நான் ஐ.ஐ.டி.யி லிருந்து வந்தவனும் அல்ல.

கே: நீங்கள் தொழில்நுட்பத் துறையில் நுழைந்தது எப்படி?

ப: நான் முதலில் ஹ¥ஸ்டனில் உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என் நண்பன் ஒருவன் மென்பொருள் துறையில் நுழைவது நல்லது என்று கூறினான். நானும் விண்ணப்பித்தேன். நான் மென்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறேன் என்ற காரணத்துக்காகவே எனக்கு வேலை கொடுக்க ஒரு மென்பொருள் கம்பெனி தயாராக இருந்தது! எனக்குத் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் வேலை கிடைத்தது.

கே: சுவாரஸ்யமாக இருக்கிறதே... அப்புறம்?

ப: தரக்கட்டுப்பாட்டிலிருந்து வாடிக்கையாளர் உதவிப் பிரிவுக்கும், அங்கிருந்து விற்பனைப் பிரிவுக்கும் மாறினேன். எனக்கு விற்பனை மிகவும் விருப்பமானது. அதையும் விட்டு இன்னொரு கம்பெனியில் நிர்வாக ஆலோசகராகச் சென்றேன். என்னுடைய முக்கியமான மாற்றம் 1988-ல் வந்தது. எனது பழைய மேலாளர் ஒருவர் என்னிடம் 'லேரி எலிஸன் ஆரக்கிளில் (அப்போது அது சிறிய கம்பெனி) மென்பொருள் நிரல் எழுதப் போகிறார், நீயும் வருகிறாயா?' என்று கேட்டார். அவர்களுடைய ERP மென் பொருளை விற்க அங்கே நான் துணைத் தலைவராகப் போய்ச் சேர்ந்தேன். அப்படித் தான் நான் இத்துறையில் வளர்ச்சி அடைந்தது.

நான் பி.காம். படித்துவிட்டு ஒரு கணக் காளராகப் போயிருக்கலாம். 18 வயதில் கல்லூரியில் படிக்கும் போது எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அந்தச் சமயத்தில் பெற்றோர்கள் 'அதைச் செய், இதைச் செய்' என்று சொல்வார்கள். ஆனால், மென்பொருள் விற்கும் பாதையை எட்டும் வரை எனது ஆர்வம் இதில்தான் என்பது புரியவில்லை. நாம் ஒரு சிமிழுக்குள் அடங்கிவிடக் கூடாது. முயற்சி செய்தபடி இருக்க வேண்டும். எதைச் செய்ய உங்களுக்குத் தீராத தாகம் இருக்கிறதோ அதைக் கண்டுபிடிக்கும் வரை முயற்சி செய் என்பதுதான் என் அறிவுரை.

கே: பள்ளிப் பருவத்திலேயே உங்கள் ஆர்வம் தலைகாட்டியதா?

ப: இல்லை. அப்போது இல்லை. இங்கே வந்து முதல் வேலையில் அமர்ந்த பிறகுதான் நான் உணரத் தொடங்கினேன். தொழில் நுட்பம் மக்களையும் குழுமங்களையும் எப்படி பாதிக்கிறது, அவர்களது செயல்பாட்டை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதைப் பார்த்தேன். அது எனக்குள் உற்சாகத்தைத் தந்தது.

கே: சட்டம் பயின்ற பின் இந்தியாவில் வேலை பார்த்தீர்களா? எப்படி அமெரிக்காவுக்கு வந்தீர்கள்?

ப: என் அண்ணா இங்கே இருந்தார். சென்னையில் வழக்கறிஞராகும் முயற்சியில் நான் அதிக கவனம் செலுத்தவில்லை என்பதை அவர் புரிந்து கொண்டிருந்தார். அவர்தான் இங்கே வந்து MBA படிக்கச் சொன்னார்.

கே: ஆரக்கிள் நிறுவனத்தில் துணைத் தலைவர் பதவியை அடைய மிகவும் கடுமையாக உழைத்து, விரைவாக முன்னேறி இருக்க வேண்டுமே...

ப: உண்மைதான். ஒரு வாரத்துக்கு 80 மணி நேரம் உழைத்ததோடு 3 அல்லது 4 நாட்கள் பயணம் செய்யவும் வேண்டியிருக்கும். அடுத்து நான் சேர்ந்த பான் (Baan) என்ற டச்சு நிறுவனத்தில் முதல் ஆண்டிலேயே 300,000 மைல் நான் பயணம் செய்திருந்தேன். ஒவ்வொரு வாரமும் இரண்டு கண்டங்களுக்காவது போவேன். எனது பயணச் செலவுக் கணக்கைச் சமர்ப்பிக்கும் போதுதான் வாரத்தில் இரண்டு நாட்களாவது விமானத்தி லேயே இரவைக் கழித்திருக்கிறேன் என்பது தெரிந்தது. மீதி மூன்று நாட்கள் ஹோட்டல் அறையில். இது அதிர்ச்சியைத் தந்தது. எனக்குத் திருமணமாகி அப்போது 4 ஆண்டுகளாகி இருந்தன. ஆனால் எனது தொழில்முறை வாழ்க்கை, குடும்ப அபிவிருத்திக்கு உகந்ததல்ல என்பதை நான் உணர்ந்தேன்.

அது என்னை யோசிக்க வைத்தது. என் வாழ்க்கையில் மாற்றம் தேவை என்று உணர்ந்தேன். 1996-ல் ஒரு தீவிர மாற்றத்தைச் செய்தேன். அதைச் செய்ய ஓரளவு நிதி வசதி நன்றாக இருக்க வேண்டும். நான் பான் நிறுவனத்திலிருந்து விலகினேன். வேலைக்குப் போவதில்லை என்று தீர்மானித்தேன். எனக்கு 'ஸ்டாக் ஆப்ஷன்' இருந்தது. அந்தப் பங்கு 50 டாலருக்கு விற்றுக்கொண்டிருந்தது. எனக்குத் தரப்பட்ட விலையோ 25 சென்ட் தான். அதில் நான் ஏராளமாகப் பணம் ஈட்டி இருக்கலாம். ஆனாலும், இது எனக்குத் தேவையில்லை என்று தீர்மானித்து வேலையை விட்டேன்.

எனது முடிவுக்கு ஒரு காரணம் என் தந்தையார் இறக்கும்போது எனக்கு 10 வயதுதான் என்பதும். எனவே நான் என் குடும்பத்துடன் இருப்பதே முக்கியம் என்று நினைத்தேன். குடும்பத்தை விருத்தி செய்ய வேண்டும், குழந்தைகளோடு நல்ல நேரம் செலவழிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஒரு ஏஞ்சல் முதலீட்டாளராவதே இதற்குச் சிறந்த வழி என்று தீர்மானித்தேன். அப்போது நான் என் வீட்டிலிருந்தபடியே தொழில் செய்ய முடியுமே.

இப்போதும் வாரத்தில் மூன்று நாட்கள் என் வீட்டில் மாடியில் இருக்கும் எனது அலுவலகத்துக்குச் செல்கிறேன். மற்ற இரண்டு நாட்களில் சிலிகான் வேலியில் உள்ள, நான் முதலீடு செய்துள்ள நிறுவனங்களுக்கோ, முதலீட்டாளர்கள் அல்லது பிறரைச் சந்திக்கவோ போகிறேன்.

கே: மிகத் துணிச்சலான முடிவுதான். இப்படிச் செய்ய பலரால் முடியாது.

ப: அதை இப்படிப் பாருங்கள்: அப்போது ஒரு பக்கம் எனக்குப் பணம் தேவையாக இருந்தது, மறுபக்கம் பார்த்தால் அது பேராசையோ என்று தோன்றியது.. இன்னும் மூன்று ஆண்டுகள் வேலையில் தொடர்ந் திருந்தால் stock options மூலம் ஏராளமாகப் பணம் பண்ணியிருக்கலாம். கடினமான முடிவுதான். ஆனால் நான் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக அதைச் செய்தேன்.

கே: சரி, மீண்டும் விட்ட இடத்தில் தொடங்கலாம். 1996-ல் நீங்கள் வேலையை விட்ட போது உங்கள் குழந்தைகளுக்கு என்ன வயது?

ப: வேலையை விட்ட பிறகுதான் முதல் குழந்தையே பெற்றோம்.

கே: 1996க்கு மீண்டும் போக முடியுமானால், நீங்கள் வேறு விதமாகச் செய்வீர்களா? உங்கள் தீர்மானத்தில் ஏதாவது மாற்றம் இருக்குமா?

ப: இல்லை. பழைய முடிவுகளைக் கேள்விக்கு உள்ளாக்குவது எளிது என்பதால் பின்னோக்கிப் பார்ப்பதே உனக்கு எதிரியாக அமையலாம். செய்து முடித்ததை மாற்ற முடியாது. நான் பின்னோக்கிப் பார்ப்ப தில்லை.

கே: டாட்காம் களம் பெரிதும் மாற்ற மடைந்துள்ள சென்ற ஐந்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க முதலீடு ஏதாவது செய்திருக்கிறீர்களா?

ப: டாட்காம் குமிழி வெடித்தபின் நான் BDNA நிறுவனத்தை மற்றொருவரோடு இணைந்து மே, 2000-இல் தொடங்கினேன். அதுதான் தொடங்க நல்ல நேரம் என்று எனக்குத் தோன்றியது. அது ஓரளவு நன்றாகத்தான் நடந்து வருகிறது. இன்னும் 3, 4 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளேன். அதில் ஒன்று இணைய விளம்பர நிறுவனம், மற்றொன்று வலைப் பாதுகாப்பு நிறுவனம். இந்தியாவிலுள்ள ஒரு எ·குக் கம்பெனியிலும் முதலீடு செய்திருக்கிறேன். சராசரியாக ஓராண்டில் நான் 2 நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறேன்.

கே: ஏஞ்சல் முதலீட்டாளர் என்ற முறையில், தேர்ந்தெடுத்த சிலருடன் தான் பேசுவீர்களா; இல்லை, பிறருக்கும் ஆலோசனை கூறுவீர்களா?

ப: ஒரு வாரத்துக்கு என்னிடம் சுமார் 2 அல்லது 3 வர்த்தகத் திட்டங்கள் வரும். அவை நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவே வரும். சென்ற பத்தாண்டுகளில் நான் பெரிய அளவில் தொடர்புகளை வளர்த்துள்ளேன். மற்றும், நான் வாரத்தில் ஒரு தொழில் முனைவோரை (Entrepreneur) சந்திப்பேன். ஆக ஓர் ஆண்டில் என்னிடம் வரும் சுமார் 200 திட்டங்களில் ஒன்று அல்லது இரண்டில் மட்டுமே முதலீடு செய்கிறேன்.

கே: நீங்கள் சில குறிப்பிட்ட துறைகளை மட்டுமே விரும்புகிறீர்களா?

ப: இல்லை. நான் எல்லாவற்றையும் பார்க்கிறேன். சிலவற்றைப் பிற முதலீட்டாளர் களுக்கும் பரிந்துரைக்கிறேன். நான் முதலீடு செய்யாவிட்டாலும் உதவி செய்ய முயற்சிப்பேன். அவர்கள் கனவுகளுடனும் ஆர்வத்து டனும் வருகிறார்கள். எனவே சரியான நபரிடமாவது அனுப்பி வைப்பேன்.

சில சமயம் வழி காட்டுவேன். நான் முதலீடு செய்யாமல் இருக்கலாம். ஆனாலும் ஊக்குவிப் பேன். பல மறுப்புகளைச் சந்திக்கும் தொழில் முனைவோர் மனம் சோர்ந்து விடலாம். அதனால்தான் நான் உதவிகரமாக இருப்பது.

கே: நீங்கள் சமூக நிகழ்ச்சிகளிலும் ஈடுபடுகிறீர்கள். வாழ்க்கையில் ஒரு சமநிலையை வைத்துக்கொள்வதில் இதுவும் ஒன்றா?

ப: ஆமாம், சற்றே வினோதமான ஒன்று. ஒருவகையில் அது சுயநலமானதும் கூட. இந்த மென்பொருள் மாநாட்டைத் தொடங்குவதற்கு முன்னால் நான் என் ஆலோசகர்களிடம் என் திட்டத்தைக் காண்பித்தேன். அவர்கள் அதைக் கிழிகிழியென்று கிழித்தனர். 'உன் மாநாட்டுக்கு எதற்காக யாரும் வரவேண்டும்?' என்று கேட்டனர். அவர்கள் என் நண்பர்கள் தாம். இந்த மாநாட்டை எப்படி வித்தியாசமான ஒன்றாக்குவது என்று நான் யோசித்தேன். அந்த மாநாட்டை 'என்டர்ப்ரைஸ்' என்று அழைப்பது என்றும், அதன் வருவாயை முழுவதுமாக நற்பணிகளுக்கு நிதியாகக் கொடுப்பது என்றும் தீர்மானித்தேன். அதே ஆலோசகர்கள் இந்த திட்டத்தை உடனே வரவேற்றார்கள்.

கே: உங்கள் மாநாட்டுக்குப் பெரிய பெரிய ஆட்களெல்லாம் வருகிறார்கள்.

ப: ஆமாம். அது ஒரு திறவூற்று (open source) நிகழ்ச்சி. மாநாட்டில் பங்கேற்பவர்களே எந்த அமைப்புக்கு நிதி கொடுக்கலாம் என்பதையும் சொல்கிறார்கள். அவர்கள் அந்த அமைப் போடு தொடர்பு கொண்டவர்களாகவும், அந்த அமைப்பின் பணியைப் பற்றி அறிந்தவர் களாகவும் இருக்கிறார்கள். அதனால் அவர் களுக்கு நமது மாநாட்டில் ஈடுபாடு வருகிறது.

நான் ஒருவன் மட்டும் நிதியுதவி செய்வது என்பது மாறி, இப்போது இந்த மாநாட்டில் பங்கு பெறும் அனைவரும் இந்த அமைப்புகளுக்கு நிதியும் அறிவுரையும் வழங்குகிறார்கள். தம்மால் முடிந்த வேறு வகைகளிலும் அவற்றுக்கு உதவி செய்கிறார்கள்.

கே: ஓராண்டில் இப்படி நீங்கள் எவ்வளவு நிதியுதவி செய்கிறீர்கள்?

ப: ஒரு மில்லியன் டாலரில் ஒரு நிதிக் கட்டளை தொடங்குவது எனது இலக்கு. இந்த ஆண்டு அடுத்த மாதம் அந்த இலக்கை எட்டுவேன். நாங்கள் 250,000-300,000 டாலர் வரை வழங்கி உள்ளோம்.
கே: இந்தியாவுக்கும் நீங்கள் நிதி வழங்குவது உண்டா?

ப: கொடுத்திருக்கிறோம். ஒரு குறுநிதி (Micro Finance) நிறுவனத்துக்கு முதலில் நாங்கள் கொடுத்தோம். இப்போது அவர்களுக்கு பெரிய நிறுவனம் (Sequoia Capital) ஒன்றும் நிதி கொடுத்துள்ளது. 'Project Concern', 'Room-to-Read' போன்ற அமைப்புகளுக்கு உதவியுள்ளோம். எங்கள் மாநாட்டுக்கு வருபவர்களில் பலர் சிலிகான் வேலியைச் சேர்ந்தவர்கள். எனவே சிலிகான் வேலி, பன்னாட்டு அமைப்புகள் என்று இரு கூறாக உதவுகிறோம்.

கே: ஒரு சமயத்தில் ஜப்பானிய கலாசாரத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தது. இன்றைக்கு இந்தியா வும் சீனாவும் அந்த இடத்தைப் பிடித்து விட்டன, இல்லையா?

ப: ஆமாம். ஒருநாள் என் மகள் என்னிடம் 'இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் பிரமாதம் என்கிறார்களே. எனக்கு அங்கு படிக்க வேண்டும்போல் இருக்கிறது' என்றாள். போய் 3 மாதம் இந்தியாவில் தங்கி அவளை அங்கே பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாம் என்றுகூட ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்.

கே: இந்தியாவில் நடப்பவற்றை கவனித்து வருகிறீர்களா? தகவல் தொழில் நுட்பம் குறித்த அவர்களது கொள்கைகளை எப்படி அறிய வருகிறீர்கள்?

ப: TCS உட்படப் பல இந்திய நிறுவனங்கள் எனது மாநாடுகளில் பங்கேற்கின்றன. டி.சி.எஸ்.ஸின் ராமதுரை மற்றும் பிற குழுமங் களின் நிர்வாகிகளுடன் நான் பேசுகிறேன். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பக் கொள்கைகளின் மீது தாக்கம் செலுத்தம் பெரிய நபர்களை நான் அறிவேன். இந்த ஆண்டு நடந்த Software 2007 மாநாட்டுக்கு இந்தியாவின் Nasscom (National Association of Software and Service Companies, India) அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்றை அழைத்து வந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவிலிருந்து ஒரு மாநாட்டுப் பிரதிநிகளை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் CEOக் களுக்கு அறிமுகப்படுத்தினேன். என்னால் ஆனதை இந்தியாவுக்குச் செய்து வருகிறேன்.

கே: ஏதாவது இந்தியக் கம்பெனியில் முதலீடு செய்யும் எண்ணம் உண்டா? அங்கே நிறைய வாய்ப்புகள் தென்படுகின்றனவே.

ப: ஒரு எ·குத் தொழிற்சாலையில் செய்திருக்கிறேன். இந்தியாவில் தற்போது ஒரு சிறிய குமிழி ஏற்பட்டிருப்பதாக எண்ணுகிறேன். அதனால் மிக கவனமாக இருக்கிறேன். வருடத்தில் மூன்று முறையாவது இந்தியாவுக்குப் போகிறேன். அங்கு தொழில் முனைவோரைச் சந்திக்கிறேன். நிச்சயமாக அங்கிருப்போருக்கு இங்கிருப்போரைவிடத் தற்போது அதிக உதவி தேவைப்படுகிறது. ஆனால், 12000 மைல் தொலைவில் இருக்கும் ஒருவருக்கு வழிகாட்டுவது மிகக் கடினம்.

ஒன்றிரண்டு திட்டங்களைப் பரிசீலித்து வருகிறேன். அநேகமாக இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் முதலீடு செய்வேன்.

கே: தமிழ்நாட்டுக்குத் தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் வேலை உங்களிடம் கொடுக்கப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

ப: தமிழ்நாட்டில் தொழிற்சாலை வைப்பதன் அனுகூலங்களைப் பறைசாற்றுவேன். அங்கே வந்து தொழிற்சாலை நிறுவுவதை எளிதாக்குவேன். ஒரு கம்பெனி வந்தவுடன் அங்கே ஒரு இடம், உள் கட்டமைப்பு, தொலைத்தொடர்பு ஆகியவை கிடைப்பதற் கான ஒரு வசதியை ஏற்படுத்துவது நல்லது. அமெரிக்காவுக்கு வந்து இங்கிருக்கும் தமிழர் களோடு தொடர்பு கொள்வேன்.

கே: ஓர் ஆண்டில் 30,000 மைல் பறந்ததாகச் சொன்னீர்கள். 'ஜெட்லேக்'ஐ எப்படிச் சமாளிக்கிறீகள்?

ப: உள்ளூர் நேரத்தை அனுசரிப்பதன் மூலம். அது கஷ்டம்தான். அதிலும் வயதாக ஆக இன்னும் கஷ்டம். ஆனால் அதற்காக மருந்துகளை எடுத்துக் கொள்வதில்லை. உள்ளூர் நேரம் காலை 4 மணிக்கு ஓரிடத்துக்குச் சென்றால், இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குவேன். பிறகு, இரவு 9 ஆகும் வரை விழித்திருப்பேன். ஆனால் அமெரிக்காவுக்குத் திரும்பி வரும்போது இதைச் செய்வது சிரமமாக இருக்கிறது.

கே: இங்கே பள்ளி, கல்லூரி படிக்கும் நமது குழந்தைகளில் பலர் நிறுவனங்களில் தொழில்முறைப் பயிற்சிக்காக நிறுவனங்களை அணுகுகிறார்கள். அதனால் பயன் உண்டா? எப்படி அணுகுவது?

ப: நிச்சயமாகப் பயன் உண்டு. இந்தியர்கள் மூலம் அணுகுவது நல்லது. கோல்ட்மான் சாக்ஸ், மார்கன் ஸ்டேன்லி, ஆரக்கிள், மைக்ரோசா·ப்ட் என்று எங்கே போனாலும் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்பு கொள்வது நல்லது. சமீபத்தில் அப்படித்தான் ஒரு சூட்டிகையான பெண் ணைப் பற்றிய விவரங்களை ஐந்தாறு முதலீட்டு வங்கியாளர்களுக்கு அனுப்பி வைத்தேன். அவரை ஒருவர் வேலைக்கு எடுத்துக் கொண்டுவிட்டார். நான் முதலீடு செய்துள்ள கம்பெனி ஒன்றிலும் ஒரு நிதித்துறைப் பட்டதாரியான இந்தியரைக் கணக்குத் துறையில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

கே: 2012-ல் உங்களுடன் பேசினால், முக்கிய விஷயமாக எது இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

ப: சுற்றுச் சூழல். நமது மிகப் பெரிய பொறுப்பு அதுதான். 20-25 ஆண்டுகளுக்குப் பின்னால் நம் குழந்தைகளுக்கு நல்ல வாழிடம் அமைய வேண்டுமென்றால் சூழலில் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் முக்கிய விஷயமாக இருக்கும்.

கே: அல் கோர் அதிபராவதற்கு நீங்கள் ஆலோசகர் ஆகலாம் போலிருக்கிறதே?

ப: அரசியல் ரீதியாக நான் நடுநிலைமை வகிக்கிறேன். டெமாக்ரட்டுகள் ரிபப்ளிகன்கள் யாரானாலும், ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை எனக்குப் பிடித்தால் அவருக்கு உதவுகிறேன். சூழலில் கவனம் செலுத்த காரணம், விரயங்களைத் தடுத்து, பாதுகாக்க வேண்டும் என்பதை மக்களுக்குச் சிறிய வகையில் புரியவைக்கத்தான்.

கே: வெளியெடுப்பு (off-shoring) பற்றிச் சில வார்த்தைகள்...

ப: சீனா, வியட்நாம், தைவான் எல்லோருமே இந்தக் களத்தில் போட்டியிட்டாலும் அடுத்து வரும் பத்தாண்டுகளில் இந்தியாதான் இதில் முன்னணியில் இருக்கும்.

கே: அப்படி இருக்க வித்தியாசமாக என்ன செய்வார்கள்?

ப: Apple-இன் Macintosh-க்கு மென்பொருள் தீர்வுகள் தயாரிக்க என்றே ஒரு புதிய பிரிவைத் தொடங்கி உள்ளதாக இன்றைக்கு TCS அறிவித்திருக்கிறது. ஆளனுப்பிக் கொண்டிருந்த காலம் மாறி வருகிறது. தவிர, எல்லா நிறுவனங்களும் பிற நிறுவனங்களை வாங்கிச் சேர்த்துக் கொள்வதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதைப் பார்க்கலாம்.

கே: இந்திய நிறுவனங்களையே வாங்குவார்களா?

ப: இல்லை, உலக அளவில் - அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும். முக்கிய வாடிக்கையாளர்களைக் கைப்பற்றுவதற்காக உள்ளூர் நிறுவனங்களை வாங்குவார்கள். மற்ற நாடுகள் இதில் இன்னும் பின்தங்கி உள்ளன.

கே: இந்தியாவில் TCS, HCL, Infosys போன்ற பெரிய நிறுவனங்களில் சேரவே பல இந்திய மாணவர்கள் விரும்பு கிறார்கள். பெரிய நிறுவனமா, சிறியதா - எது நல்லது?

ப: பெரிய கம்பெனி மிகச் சிறப்பாகப் பயிற்சி தருகிறது. ஒரு புதிய பட்டதாரி நல்ல பயிற்சி பெறவே விரும்புகிறார். சவால்களை எதிர் கொள்ள ஒரு தயாராக இருந்தால் அவர் சிறிய நிறுவனங்களில் சேர வேண்டும் என்று நான் சொல்வேன். ஆனால், இந்தியக் கலாசாரம் இதற்கு மாறானதாக இருக்கிறது.

கே: உங்களுடைய Sandhill-30 குறியீட்டெண்ணில் சில இந்தியக் கம்பெனிகளையும் பார்க்கிறோம். நாளாவட்டத்தில் அதில் மாறுதல் ஏற்படுமா?

ப: ஆமாம். சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தத் துறையில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தேன். அதனால்தான் 'New Big Five' என்ற ஒரு பிரிவைப் ஏற்படுத்தினோம். அமெரிக்காவில் big-5, big-8 என்றெல்லாம் பட்டியல் இடுகிறார்களே அதைப்போல, நாங்கள் உலகளாவில் இந்தியாவின் மிகச் சிறந்த 5 குழுமங்களைத் தேர்ந்தெடுத்தோம். அவை 30-40% பங்கு விலையில் வளர்ச்சி பெற்றுள்ளன.

கே: ஒரு கிரேக்க அமெரிக்கரைத் திருமணம் செய்ததை உங்கள் குடும்பம் ஏற்றுக்கொண்டதா?

ப: முதலில் வரவேற்பு இல்லைதான். நான் கொஞ்சம் அவர்களைத் தேற்ற வேண்டியிருந்தது. பின்னால் சரியாகி விட்டது. இப்போது என் மனைவியைக் குடும்பம் மிகவும் நேசிக்கிறது. அவருக்கும் பிற மருமகள்களுக்கும் இப்போது எந்த வேறுபாடும் இல்லை. என் குழந்தைகளும் இந்தியாவை விரும்புகிறார்கள்.

கே: உங்களோடு இங்கு வசிக்கும் தமிழர்கள் மற்றும் தொழில் முனைவோர் உங்களை, எப்படித் தொடர்பு கொள்ளலாம்?

ப: எனது வலை தளத்துக்கு போய் அங்கிருந்து மின்னஞ்சல் செய்யலாம்.

கே: இளைய தலைமுறைக்கும் புதிய தொழில் முனைவோருக்கும் உங்கள் அறிவுரை என்ன?

ப: நிராகரிப்புகளால் மனம் தளராதீர்கள். ஒன்று, இரண்டு, மூன்று முறை கூடத் தோல்வி அடைந்தாலும் நான்காவது முறை மீண்டும் உங்களுக்கு முதலீடு வரும். அதை சிலிக்கான் வேலி போதிக்கிறது. இந்தியாவில் அப்படிச் செய்ய மாட்டார்கள். நானே தோல்வியுற்ற முயற்சிகளில் மீண்டும் முதலீடு செய்திருக்கிறேன். அதுதான் மிகப் பெரிய அறிவுரை. முயற்சி செய்தபடியே இருங்கள்.

தென்றல் நன்றி கூறி விடை பெறுகிறது.

*****


இந்தியாவுக்குச் செல்லுங்கள்!

இந்தியாவில் வளமான எதிர்காலம் காத்திருக்கிறது. நான் அங்கு வளர்ந்த காலத்தில் இருந்ததை விட வாழ்க்கைத் தரம் மிகவும் உயர்ந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வந்திருந்தால் நான் நிச்சயம் போயிருப்பேன். குறைந்தபட்சம், அதைப் பற்றித் தீவிரமாக யோசியுங்கள் என்று சொல்லுவேன். நான் போகா விட்டாலும் என் குழந்தைகள் இந்தியாவில் வேலை கிடைத்துப் போய்விடும் வாய்ப்புகள் அதிகம். அடுத்த 10-15 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அங்கே அதிகம் என்று யூகிக்க முடிகிறது. நான் அடிக்கடி இந்தியாவுக்குப் போய் வருகிறேன். என் மனைவி கிரேக்க அமெரிக்கர் என்பதால் இந்தியாவுக்குப் போய் நிரந்தரமாக வசிப்பது எனக்குக் கடினமான விஷயம்.

*****


தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு முன்னேற...

வருகின்ற நிறுவனங்களைத் திறந்த மனதோடு அவர்கள் வரவேற்க வேண்டும். கம்பெனிகளை ஈர்ப்பதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவ்வாறுதான் பிற மாநிலங்கள் செய் கின்றன. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பலம் அதன் பொறியியல் பட்டதாரிகள்தாம். எந்தவொரு மாநிலத்தையும் விட அவர்கள் அதிகமாக அங்கே காணப்படுகிறார்கள். தமிழ்நாடு தன்னை IT மாநிலம் என்று அடையாளப்படுத்த முடியும். பெங்களூரிலும் திறமை இருக்கிறது ஆனாலும் அங்கே விலைவாசி மிக அதிகமாக இருக்கிறது, ஆள் கிடைப்பதில்லை. இதைத் தமிழ்நாடு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

சந்திப்பு : சந்திரா போடபட்டி (CEO, eGrabber Inc.)
தமிழில் : மதுரபாரதி
More

எழுத்தின் மூலம் சமுதாய மாற்றம் உண்டாடக்குவது எளிதல்ல - சல்மா
Share: 




© Copyright 2020 Tamilonline