Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
மரத்தடிக்கடவுள்
- தி.ஜ. ரங்கநாதன்|மார்ச் 2004|
Share:
வா மகனே, இப்படி வா! அடடா! மழையிலே இப்படித் தவிக்கிறாயே! பாவம்! ஆமாம். இதுதான் என்ன உக்கிரமான மழை! நகரத்தை நரகமாக்கும் மழை அல்லவா இது? ஜலதாரையை ஒளித்து நவநாகரிக நகரத்தை நிர்மாணிக் கிறான் மனிதன். மனிதன் ஒளித்ததை இந்த மழை அம்பலமாக்கி விடுகிறதே! அடேயப்பா! இந்த மழையின் சரவீச்சிலே வேதனை தாளாத மண்ணாந்தை மாதிரி கட்டிடங்களெல்லாந்தான் எப்படி நெளி கின்றன! வெல்வெட்டு ஆடை போர்த்த முதலைகள் மனித குலத்திலேதான் உண்டு என்று நினையாதே; இதோ என்னைப் பார் என்பது போல, ரஸ்தாக்களெல்லாம் தார் உரிந்து கரடு முரடான கப்பிக் கற்களைக் காட்டி நிற்கின்றன. மதுவுண்டு வெறிகொண்டு ஆடிற்று. விழப்போகும் வீரர்கள் ரணகளத்திலே ஆடுவது போல ஆடுகின்றன இந்த மரங்களெல்லாம். வானும் மண்ணும் பொரும் போரோ இது? அல்லது பிரளயந்தானா? இப்படியெல்லாம் நீ அஞ்சுகிறாய் அல்லவா? அல்ல மகனே, அல்ல; இதுதான் தேவர்கள் உலாவரும் நேரம்; விளையாடும் நேரம்; பேசும் நேரம்; அதனால்தான் நான் உன்னோடு பேசுகின்றேன். ஆனால் உலா வந்த தெய்வம் அல்ல; சிறைப்பட்ட தெய்வம்.

எங்கே பார்க்கிறாய்? இடிபடும் மேக மின்னலின் நடுவே இருக்கிறேன் என்றா? மரத்தினூடே ஏன் பார்க்கிறாய்? உச்சாணிக் கிளையிலே உட்கார்ந்திருக்கும் குரங்கல்ல நான். கிளைக் குரங்கு என்னைவிடப் பாக்கியசாலியாயிற்றே! குரங்காட்டியின் குரங்கைப் போல்தான் இன்று என்னையும் மனிதன் ஆட்டி வைக்கிறான். நான் தெய்வம், கடவுள், அப்பா, கடவுள்! ஹஹ்ஹா! இன்னும் என்னை நீ கண்டுபிடிக்க வில்லையா? அடேடே! ஏன் ஓடப் பார்க்கிறாய்? பயமா? என்ன பயம் வந்தது என்னிடம்? உடல் நனையக் கால் வலிக்க மனம் பதைக்க மூச்சு வாங்க ஓடாதே. இங்கே இந்த மரத்தடியிலே தங்கு; இதோ பார்; ஒரு சிறு மாடம் மாதிரி கட்டிய பொம்மை வீட்டில், சந்தனப் பொட்டு மஞ்சளும் குங்குமமும் பூசிச் செங்கல் உருவமாய் அமர்ந்திருக்கிறதே, அந்தக் கடவுள் நான்தான். ஏன் ஆச்சரியப் படுகிறாய்? கிராமபோன் கத்தினால் நீ ஆச்சரியப்படவில்லை; ரேடியோ குழறினால் ஆச்சரியப்படவில்லை. ஜடத்தை மனிதன் பேசவைக்க முடியும்; கடவுள் பேசவைக்க முடியாதா? நான் கடவுள். கடவுள் செங்கல் அல்ல; செங்கல்லுக்குள் இருக்கும் கடவுள்!

ஆ! இதுதான் சரி. அப்படி உற்றுக்கேள். உன் கதையைச் சொல்லுகிறேன். நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த கதையைச் சொல்லுகிறேன். தெய்வங்களுக்கும் பிறப்பு உண்டு; வளர்ச்சி உண்டு; வாழ்வு உண்டு; சாவும் உண்டு; அப்படியானால் தெய்வம், அது வேதாந்தம். வேதாந்தத்தின் முடிவு சூன்யம். விவகாரத்திலே நீயும் நானும் ஒன்றுதான். இனிக் கேள் என் கதையை. கொஞ்ச நாளைக்கு முன் ஒரு நாள் மாலையில் இந்த ரஸ்தாவில் ஒரு குடும்பத்தார் வந்து கொண்டிருந்தார்கள். மனிதக் குடும்பந்தான். கடற்கரையில் காற்று வாங்க எத்தனையோ பேர் வருகிறார்கள் அல்லவா? இவர்களும் அந்தக் கும்பலோடு கும்பலாகத் தான் வந்து கொண்டிருந் தார்கள். ஒரு வாலிபன; அவன் மனைவி; அவர்களுடைய இரண்டு குழந்தைகள். மூத்தது ஐந்து வயசுப் பெண். அடுத்தது மூன்று வயசு மழலைமொழிச் சிறுவன். இன்னுங்கூட அவன் வாயில் பால்மணம் மாறவில்லை. பெண்தான் பேசினாள். தாய் மகனைக் கைபிடித்து அழைத்துச் செல்ல முயல்வாள். குழந்தை ஒரு நிமிஷம் சிரித்துக் கொண்டே தள்ளாடித் தள்ளாடி இரண்டடி நடப்பான். பிறகு, ''ஊ ஊ! தூக்கு... தூக்கு'' என்று கைககளை அகல விரித்து விடுவான். தகப்பன் நகைப்பான். தாய் உள்ளம் பூரித்தாலும் முகம் சிணுங்கி, ''பொல்லாது பொல்லாது'' என்று முணுமுணுத்தபடியே சிறுவனை வாரி எடுத்துக் கொள்வாள். அதோ பார், அந்தப் பாலத்துக்குப் பக்கத்தில் ஒரு மரம் இருக்கிறதே, அதன் அடியில் இவர்கள் சென்று கொண்டிருந்த போது, ''சுந்தா, சுந்தா!'' என்ற ஒரு குரல் ரஸ்தாவின் மறுபக்கத்திலிருந்து கேட்டது. அது இந்த வாலிபனின் ஆபீஸ் தோழன் அழைத்த குரல்தான். அவனும் அவனுடைய புதிய மனைவியும் இவர்களிடம் வந்தார்கள். புருஷனும் புருஷனும், பெண்ணும் பெண்ணும் பேசத் தொடங்கினார்கள். குழந்தைகள் என்ன செய்வார்கள்? அவர்கள் விளையாடத் தொடங்கினார்கள்.

மரத்தடியில் ஒரு செங்கல் கிடந்தது. அதைக் கையில் எடுத்தாள் கமலி. இதுதான் அந்தப் பெண் குழந்தையின் பெயர். அவளுடைய சட்டைப் பையிலே சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், ஊதா, வெள்ளை இப்படிப் பல வர்ணச்சாக்குக் கட்டிகள் இருந்தன. அவள் அவற்றை எடுத்து, அந்தக் கல் மீது குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள் கிழித்தாள். இப்படியும் அப்படியும் சாய்ந்து, ஆனந்தம் பொங்க, ''ஊ... ஊ... ஊ...'' என்று முனகிக் கொண்டேயிருந்தான்.

கிறுக்கி முடிந்தது. சிறுமி என்னை - ஆம். என்னைத்தான் மகனே! அந்தக் குழந்தைகளின் கள்ளமற்ற ஆனந்தத்திலே நான் பிறந்துவிட்டேன்; அந்தக் கல்லிலே சாந்நித்தியம் ஆகிவிட்டேன். குழந்தைகள் உங்கள் உலகத்திலே - மானிட உலகத்திலே - இருப்பதாக நீங்கள், மானிடர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் கள் உங்களுக்கு நடுவே இருந்தாலும், அற்புதக் கனவு உலகத்திலே வாழ்கிறார்கள். அவர்களுடன் கல்லும் மண்ணும் மரமும் பேசும். அவறறினுள் இருக்கும் ஆண்டவனே அவர்களுடன் பேசுகிறான். மரப்பாச்சியுடன் குழந்தை பேசும்போது அது உங்களுக்குப் பித்துக்கொள்ளித்தனமாய்த் தோன்றலாம். மரப்பாச்சி உண்மையிலேயே குழந்தை யோடு பேசுகிறது. ஏனென்றால், தேவர்களே குழந்தையோடு விளையாடுகிறார்கள். கூடிப்பேசிக் குலவுகிறார்கள். மந்திரத்தை முணுமுணுத்தால், தேவர் வருவாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள். மந்திரச்சொல் உண்டு. ஆனால், பார்வதி பரமேசுவரர் போல, அந்தச் சொல்லிலே பொருள் இணைபிரியாது இழையும்போது தான் அதில் மந்திர சக்தி ஏறுகிறது. வறட்டுச் சொல்லுக்கு தேவர்கள் கட்டுப்பட மாட்டார்கள். தெய்வீகக் கனவு உலகத்திலே வாழும் நிஷ்களங்கமான குழந்தைகளுக்குச் சொல் என்கிற சாதனம் எதற்கு? கமலி என்னைக் கையிலே வாரி எடுத்தாள். இடுப்பிலே அணைத்துக் கொண்டாள். ''கோபால கிருஷ்ணுடு! கோவிந்த ராமுடு!'' என்று குதலை மொழியில் பாடினாள். எதிரே நின்ற சிறுவனும் அதற்கு ஏற்றபடி குதித்துக் குதித்து ஆடினான். நான் அந்தக் கல்லிலே சான்னித்தியம் ஆகிவிட்டேன்.

அந்தக் குழந்தைகளின் பாட்டும் ஆட்டமும் என்ன இன்பமாக இருந்தன! அவற்றிலே நான் லயித்துக் கிடந்தேன். ஆடிக் கொண்டேயிருந்த சிறுவன், ''ஊ...ஊ'' என்று கையை நீட்டி என்னைத் தொட்டான். மெத்தென்று பட்ட அந்த விரலின் ஸ்பரிஸம், புளகாங்கிதம் உண்டாக்கியது. சிறுமி அசைந்து திரும்பி, அவன் கைப்பிடியிலிருந்து என்னைப் பிடுங்கினாள். சிறுவன் அழுதான். அந்த அழுகையும் ஓர் அழகாய்த் தான் இருந்தது. தாய் திரும்பிப் பார்த்தாள். சிடுசிடுப்புடன், ''இதோ கமலி குழந்தையை அழவிடாதே. அந்தக் கல்லை அதனிடம் கொடு. இல்லாவிட்டால் அடிப்பேன்'' என்று சொல்லி, மீண்டும் தன் பேச்சிலே ஈடுபட்டாள். இவ்வளவுதான்! அந்தச் சின்னஞ்சிறு கமலிக்குத்தான் என்ன பயம்! அவள் உடனே என்னைச் சிறுவனின் கையிலே கொடுத்தாள். சிறுவன் என்னை வாங்க முடியாமல் வாங்கினான். அவனால் தூக்க முடியவில்லை என்றாலும் என்னைக் கைவிடவில்லை. கத்திக்கொண்டே என்னையும் போட்டுக் கொண்டு, தானும் விழுந்தான். என் மீது சிறுமி போட்ட வர்ணக் கோடுகளையெல்லாம் சிறுவன் அழிக்கத் தொடங்கினான்.

''இந்தாடா, கண்ணா, ஸ்வாமியை அழிக்காதேடா! அப்புறம் கண்ணைக் குத்திப்புடும்'' என்று சொல்லிக்கொண்டே, கமலி சிறுவனின் கையைப் பிடித்துக் கொண்டாள். ஆகா! அவர்களின் விளையாட்டும் பேச்சும் சண்டையும் அழுகையும் இந்த அத்தனையுமே எனக்கு மிக்க இன்பமாக இருந்தன. சிறுவன் சிரித்துக் கொண்டு, ''தூ..தூ...தூ...'' என்ற சிறுமியின் மீது எச்சிலை ஊதினான். இந்தச் சமயத்தில், பெரியவர்களின் பேச்சு முடிந்தது. புறப்பட்டார்கள். ''அட சனியனே! இந்தக் கல்லை ஏன் தூக்கி கொண்டு வருகிறாய்?'' என்று எரிந்து விழுந்து, என்னை அந்தத் தாய் பிடுங்கி எறிந்தாள். அவர்கள் போய்விட்டார்கள்.
நான் அந்த மரத்தடியிலேயே கிடந்தேன். அன்றிரவு இரண்டு மூன்று ஆட்கள் அந்தப் பக்கமாக வந்தார்கள். அவர்கள் அரை குறையான கள்மயக்கத்தில் கியாஸ் பாடிக்கொண்டே வந்தார்கள். நிலா வெளிச்சத்தில் அவர்களின் ஒருவன் கண்ணில் நான் தென்பட்டேன். என்மீது இருந்த கோடுகளைக் கண்டதும், ''அடே சாமிடா!'' என்று அவன் கத்தினான். உடனே அவனோடு பிறரும் சேர்ந்து கொண்டார்கள். என்னை அந்த மரத் தடியிலேயே குத்திட்டு நிறுத்திப் பிரதிஷ்டை செய்தார்கள். என் முன்னே விழுந்து விழுந்து கும்பிட்டார்கள். இரண்டொரு நாள் சென்றதும், என் யோகம் வலுத்துவிட்டது. என் பக்தகோடி பெருத்துவிட்டது. தினந்தோறும் இரவிலே ரஸ்தாவின் சந்தடி அடங்கியதும், பலர் கூடி என்னை வணங்கினார்கள். பூ, குங்குமம், மஞ்சள், சந்தனம், வெற்றிலை பாக்கெல்லாம் கொண்டு வந்து எனக்கு அலங்கார உபசாரங்கள் நடத்தினார்கள். உடுக்கும் கையுமாய் ஒரு பூசாரியும் வந்து சேர்ந்தான்.

மகனே, உங்கள் உலகத்தில் எதற்கெடுத்தாலும் பூசாரி வந்து தோன்றி விடுகிறானே, இது ஏன்? வியாபாரம் என்றால் தரகன் உருவம் எடுக்கிறான் அந்தப் பூசாரி, அரசியல் என்றால், அவன் பெரிய தலைவனுக்குப் பக்கத்திலே சிஷ்யகோடி உருவமெடுக்கிறான். இலக்கியத்துக்கு விமரிசகன் பூசாரி. சட்டத்துக்கு வக்கீல் பூசாரி. சாஸ்திரத்துக்குப் பண்டிதன் பூசாரி. ஜனநாயகத்துக்கு முதலாளி பூசாரி, சுயமரியாதைக்குக் கலைவிரோதி பூசாரி. புரட்சிக்கு நாஸ்திகன் பூசாரி. அப்பப்பா! எதற்கெடுத்தாலும் ஒரு பூசாரி தேவையா யிருக்கிறான்! உழைப்பவனின் வாயிலே மண்ணைத் தெள்ளிப் போடத் தரகன் வந்தால், நீதியை ஆழக் குழி வெட்டிப் புதைக்க வக்கீல் வருகிறான். கவிஞனின் கவிதையைச் சமாதி செய்து கோரி கட்டி, தன்னைப் பார்த்து மக்கள் கன்னத்தில் போட்டுக் கொள்ளச் செய்கிறான் இலக்கியப் பூசாரி. தெய்வத்துக்குத் திரைகட்டி மறைத்து வைக்கிறன் கோயில் பூசாரி. எனக்கும் இப்படி ஒரு பூசாரி வந்து சேர்ந்தான். பாட்டும் பூஜையும் ஆட்டமும் வலுத்தன. கரகம் எடுக்க ஆரம்பித்தார்கள். கோழிகளின் தலைகளையும் என் முன்னே திருகிப் போட்டார்கள். ரஸ்தாவின் பாதிவரையில் கூட்டம் அடைத்துக் கொள்ளத் தொடங்கியது.

என்ன மகனே, அங்கே பார்க்கிறாய்? என் கதை பிடிக்கவில்லையா? புறப்பட்டுப் போகலாம் என்று என்னை எண்ணுகிறாயா? ஓ! மழை வெளிவாங்கி விட்டது. இனிக் கிளம்பலாம் என்ற எண்ணமா? சற்றுப் பொறு. புயலுக்கு முன்னே அமைதி நிலவும். இன்னொரு பாட்டமும் மழை பலமாக அடித்துவிட்டே நிற்கப் போகிறது. அதற்குள்ளே என் கதையைச் சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுகிறேன். அதைத்தான் நான் எவ்வளவோ சுருக்கிவிட்டேனே. உன்னை ஓர் உதவி கேட்பதற்காகத்தான் உனக்கு நான் இத்தனை கதையையும் சொல்லுகிறேன். இன்னும் கொஞ்சம் பொறுமையாய்க் கேள். சில நிமிஷ நேரம். உனக்கு ஒரு சந்தேகம். இல்லையா? அதோ அந்த பாலத்தடி மரத்தின் கீழே அல்லவா இவ்வளவும் நடந்ததாகச் சொன்னேன்? அங்கே கிடந்த நான் இங்கே எப்படி வந்தேன்? இது உன் சந்தேகம்; நியாயமான சந்தேகம். ஒருநாள் கூட்டம் மகா பலமாக இருந்தது. என் எதிரே அலங்கரித்த மதுக்குடங்களும் படையல் குவியல்களும் இருந்தன. ''மழை மேகம் போலே போலே'' என்று பாடித் தலையைப் பலமாக ஆட்டி உடுக்கை அடித்தான் பூசாரி. இந்த நேரத்திலே தடிகளுடன் சில போலீஸ் ஜவான்கள் அங்கே வந்தார்கள். ரஸ்தாவின் வண்டிப் போக்குவரத்துக்குக் கேடாக இருப்பதாகச் சொல்லி, இந்தக் கூட்டம் உடனே கலைய வேண்டுமென்று அவர்கள் கட்டளை போட்டார்கள். அந்தக் காலம் கொஞ்சம் பரபரப்பான காலம் - அரசியல் பரபரப்பு. போலீஸ்காரர்கள் என்ன செய்தாலும் கேட்பாரில்லை. அவர்கள் அப்போது சர்வாதிகாரிகள். ஜனங்கள் ஓட்டம் எடுத்தார்கள். பூசாரி உடுக்கையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினான். ஜவான்கள் என்னைத் தூக்கி வீசி எறிந்தார்கள். அடப்பாவிகளா! அவர்களுக்குத்தான் என்ன துணிச்சல்! ஆனால், அவர்களை நான் என்ன செய்ய முடியும்? ஜில்லா கலெக்டர் துரை கண்ணைத் திறந்து பார்த்து, அவர்களைத் தண்டிக்கமாட்டாரா என்று பிரார்த்திக் கொண்டே நான் ஆகாயத்தில் பறந்தேன். என் சொந்த பலத்தால் நான் பறக்கவில்லை. ஜவான் களின் புஜபுலம் எனக்குள் பொழிந்த சக்தியாலேயே பறந்தேன். அப்போது இந்த மரத்தடியிலே ஒரு குப்பை முட்டு இருந்தது. கணக்காய் அதைக் குறிபார்த்து வந்து விழுந்தேன். இல்லாவிட்டால் நான் உடைந்து சுக்குநூறாய்ப் போயிருப்பேன். அப்படித்தான் தொலைந்தேன்! பின்னால் இப்படி என் நிம்மதி குலையாமல் தப்பியிருப்பேனே! யாருக்குத்தான் அழிய மனம் வருகிறது? கழியை ஊன்றிக் கூனிக் குறுகி ஒவ்வோர் அடியிலும் ஒடிந்து விழுவது போல் நடக்கும் கிழமுங்கூட உலகத்திலே சாசுவதமாய் இருக்கத்தான் விரும்புகிறது. அழிவு; அப்பாடா! அது மகா பயங்கரமானது!

நான் இந்த மரத்தடியிலே வந்து விழுந்தேனா; பூசாரி மெல்ல மறுபடியும் என்னிடம் வந்து சேர்ந்தான். ஓர் உண்டியல் பெட்டியும் தயாரித்து என் முன்னே வைத்தான். ஒரு கொத்தனை அழைத்து, எனக்கு ஒரு சிறு மாடம் கட்டினான். குதிரை வண்டிக்காரர்கள், ரிக்ஷாக் காரர்கள், கடைசியில் டாக்ஸிக் காரர்களுங் கூடத்தான் உண்டியலில் காசு போடத் தொடங்கினார்கள். பழையபடி உடுக்கடியும் பூஜைகளும் ஆரம்பித்துவிட்டன. இப்போது நான் பலமாய் ஸ்தாபிதமாகிவிட்டேன். எனக்கு நடந்த வைபவங்களெல்லாம் எனக்கே சற்று வேடிக்கையாய் இருந்தன. கொஞ்சம் சநதோஷம், சிறிது வேதனை எல்லாம் கலந்திருந்தன. இந்த இடம் வண்டிப் போக்குவரத்துக்கு அவ்வளவு இடைஞ்சல் இல்லையோ அல்லது போலீஸ்காரர்களின் சர்வாதிகாரத்துக்குச் சிறிது வீழ்ச்சி ஏற்பட்டதோ, எது காரணமென்று தெரியவில்லை. ஜவான்கள் இப்போது குறுக்கிடவில்லை. இப்படியாக நான் பிறந்து ஐந்தாறு மாத காலம் ஆகிவிட்டது. என்னோடு ஒரே காளவாயில் வெந்த சகோதரக் கற்களை யெல்லாம் பற்றிச் சிந்தித்துப் பார்த்தபோது என் மனம் பூரித்தது. பாவம்! அவற்றில் சில, கட்டிடச் சுவரிலே இடித்து நெருக்கி நின்று ஓர் உத்தரத்தைத் தாங்கிக் கொண்டிருந்தன. மற்றும் சில மாடிப் படிக்கட்டிலே மனிதர்களின் காலடி பட்டுத் தேய்ந்து கொண்டிருந்தன. கொத்தர்கள் ஒரு வண்டியிலேயே என் சகோதரக் கற்களோடு என்னையும் ஏற்றிக்கொண்டு போனபோது, தறிகெட்டுக் கீழே விழுந்த நானோ இதோ என்ன கோலாகலத்துடன் வாழ்கிறேன்! 'ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் ராஜா' என்பது உண்மை மகனே, உண்மை! ஆனால் இப்போது இப்படி நான் நினைக்கவில்லை. அப்போது நினைத்து மகிழ்ந்தேன்.

நான் பிறந்து ஐந்தாறு மாதகாலம் ஆகிவிட்டது என்று சொன்னேன் அல்லவா? நான் எப்படிப் பிறந்தேன்? குழந்தைகளின் நிஷ்களங்கத்திலே பிறந்தேன் என்பதுதான் உனக்குத் தெரியுமே! முதலிலேயே சொல்லியிருக்கிறேனே, படைப்பின் ரகசியமே இதுதான். அறிவாராய்ச்சியிலே படைப்பு எதுவும் நிகழ்வதில்லை. அணுவைப் பிளக்கும் ஆயுதம் விஞ்ஞானியின் கற்பனையிலே பிறக்கிறது. கவிஞனின் கனவிலே பிறக்கிறது கவிதை. பிரம்மத்தின் மாயையிலே பிறக்கிறது பிரபஞ்சம். பக்தன் குழந்தையாகும்போது பிறக்கிறது தெய்வம். குழந்தையின் விளையாட்டே உன்னதமான பக்தி. என் பிறப்புக்குக் காரணபூதமான அந்தக் குழந்தைகளைப் பின்னால் வெகுநாள் வரையில் காணவில்லை.

வழக்கம்போல் நேற்றிரவு எனக்குப் பூஜை நடத்திக் கொண்டிருந்தான் பூசாரி. சுற்றிலும் பல ஜனங்கள் சூழ்ந்திருந்தார்கள். கூட்டத்தின் ஓரத்திலே, அந்த வாலிபன், கமலியின் தகப்பன் வந்து நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கையைப் பிடித்துக் கொண்டு, அந்த அழகிய சிறுமி கமலியுந்தான் நின்றாள். அவளைக் கண்டதும், எனக்கு ஒரு குதூகலம் உண்டாயிற்று. அன்று போல மீண்டும் அவள் கையிலே போய் கொஞ்ச வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. 'கோபால கிருஷ்ணுடு, கோவிந்த ராமுடு' என்ற தேவகானத்தை மீண்டும் கேட்க வேண்டும்போல் ஒரு வேட்கை எழுந்தது. ஆம்; இதோ அவளும் என்னைக் கண்டு கொண்டாள். அவள் கிழித்த சில வர்ணக் கோடுகள் ஆறு மாதமாகியும் அழியாமல், புடைத்த நரம்புகள்போல் என் மீது விளங்கியதைத்தான் கண்டாளோ? அந்தக் கோடுகளைத்தான் அழியவொட்டாமல், மீண்டும் அவற்றின் மேல் கொட்டி வர்ணச் சாயம் பூசியிருக்கிறானே பூசாரி, அவற்றைத்தான் அவள் கண்டிருப்பாள். ''அப்பா! என் கல்லு என் சாமி!'' என்று இதழ் விரிந்த மலர்ச் சிரிப்புடன், கண்ணை அகல விழித்துக் கொண்டே கமலி கத்தினாள். தகப்பனின் கையைத் திமிறிக் கொண்டு, என்னை எடுக்கக் கூட்டத்துக் குள்ளே பாய்ந்தோடி வந்தாள். குழந்தைக்கு ஏதோ சாமி ஆவேசம் வந்துவிட்டது என்று எண்ணி, கூட்டங்கூட வழி விலகிக் கொடுத்தது.

குழந்தை உள்ளே வந்துவிட்டாள். என்னை அவள் கைவிரல் நுனிகூடத் தீண்டிவிட்டது. ஆஹா! என்ன சுகமாயிருந்தது அது! ஆனால், பூசாரி விடுவானா? ''போ அப்பாலே!'' என்று உறுமி, அந்தக் கையை முரட்டுத்தனமாய்த் தள்ளிவிட்டான், ''சாமி உனக்கா இப்படி ஏற்பட்டது?'' என்று கத்தினான் பூசாரி, சாமி பூசாரிக்காக அல்லவா ஏற்பட்டது? அவனது உண்டியல் பெட்டி நிறைவதற்காக அல்லவா ஏற்பட்டது?

குழந்தை மூர்ச்சித்து விட்டாள். அவளால் அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. பூசாரி தள்ளியது அதன் காரணமல்ல. அன்றொரு நாள் எனக்கு உயிர் கொடுத்து என்னை விளையாடிக் கொஞ்சிய என் தாய் அவள். இன்று நடுவிலே முளைத்த ஒரு பூசாரி, அவள் என்னைத் தொடவும் கூடாதென்று தடுத்ததால் அவளுடைய உள்ளத்திலே ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. அவள் மூர்ச்சித்தாள். தெய்வக்கோளாறு என்றார்கள் மூட ஜனங்கள். எனக்குக் கற்பூர தீபாராதனை எல்லாம் காட்டினார்கள். அவள் அதையெல்லாம் பார்க்கவில்லை. வாலிபன் அவளைத் தோளிலே சாய்த்து வீட்டுக்குத் தூக்கிச் சென்றான். அவளுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. அதே பூசாரியை அழைத்துத் 'துண்ணூறு' போடச் செய்திருக்கிறார்கள். அவன் அங்கேயும் உண்டியல் பெட்டி சகிதம் போய்க் காலை, மாலை இருவேளையும் உடுக்கடித்துத் 'துண்ணூறு' போட ஆரம்பித்துவிட்டான். அவன் 'துண்ணூறு' போடும் வரையில் சிறுமியின் காய்ச்சல் தீராது. மகனே, குழந்தையைக் காப்பாற்ற ஒரே ஒரு வழிதான் உண்டு. அது அந்த பூசாரியைத் தொலைப்பதுதான்.

ஆனால், ஐயோ, நான் என்ன செய்ய முடியும்! ஊர் ஜனங்களின் கண்ணைக் குத்த என்னால் முடியும். பூசாரியை நான் ஒன்றும் செய்ய முடியாது. பாவிக்கும் பக்தர்களை நான் ஆட்டி வைத்தருள முடியும். என் அருளையே விலைக்கு விற்கும் தரகனை நான் என்ன செய்ய முடியும்? முதலைக்குத் தண்ணீர் பலம். பூசாரிக்கு நான் பலம். நான் தொலைந்தால் பூசாரிக்கு வேலை இராது; ஆகையால் மகனே, நீ எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும். உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. இப்படியே என்னைப் பெயர்த்தெடு. நேரே கிழக்கே போ, அதோ பார் அங்கே ஆரவாரமாக ஆர்ப்பரித்துப் பொங்கும் கருங்கடல். அதன் நடுவே என்னை வீசியெறிந்து விடு. இதுதான் மகனே, நான் உன்னைக் கேட்கும் வரம்.

தி.ஜ. ரங்கநாதன்
Share: 




© Copyright 2020 Tamilonline