Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சிறுகதை
ஓடிப்போனவள்
அவுட் சோர்சிங்
- எல்லே சுவாமிநாதன்|ஜூன் 2004|
Share:
காரை வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே வந்த மோகன், கையில் இருந்த பெட்டியை சோபாவில் எறிந்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தான். சன்டிவியில் தொடர் பார்த்துக் கொண்டிருந்த மாலதி விளம்பர இடைவேளையில் மோகனைப் பார்த்தாள்.

"என்னங்க, கோட்டைக் கூட கயட்டாம அப்படியே உக்காந்தூட்டீங்க? ஆபீசுல ஏதாவது பிரச்னையா?" என்றாள்.

"வேலை போய்டும் போல இருக்கு" என்றான் மோகன்.

"ஏதாச்சும் தப்பு பண்ணீட்டிங்களா?"

"சே..சே. எங்கீழ வேல செஞ்ச எழுவது பேரையும் ஒரேடியாத் தூக்கிட்டாங்க"

"நீ உருப்பிடுவியா...நாசமாப்போவே..." என்ற மங்கள வசனத்துடன் தொலைக்காட்சித் தொடர் தொடங்க மாலதி தொலைக்காட்சியில் ஆழ்ந்தாள்.

மோகனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. ஆனால் என்ன சொன்னாலும் இப்ப அவள் காதில் விழாது. அடுத்த விளம்பர இடைவேளையில் மாலதி கேட்டாள். "என்ன சொன்னீங்க, உங்க கீழ இருந்தவங்க என்ன ஆனாங்க"

"வேலை போயி வீட்டுக்கு போயிட்டானுக.. உனக்கு டிவி தொடர் தான் முக்கியமா இருக்கு. உன்னைச் சுத்தி என்ன நடக்கறதுன்னு தெரியல. ஆச்சு ரெண்டு மாசத்துல நாமும் ஊருக்கு திரும்பி போயிடலாம். அங்க நிம்மதியா நீ தொடர், சினிமான்னு..."

மாலதிக்கு இப்பொழுதான் உறைத்தது. "என்ன சொல்றீங்க" என்றாள்.

"அவுட் சோர்சிங்" என்றான் மோகன்.

"அப்படின்னா"

"இங்க வேலை செய்து முடிக்க அதிகக் காசாகுதுன்னு அமெரிக்க கம்பெனிங்க தங்கள் வேலையை இந்தியக் கம்பெனிக்கு கொடுத்துடறாங்க. அங்க செஞ்சா இதே வேலை குறைஞ்ச செலவுல செய்ய முடியுது. என் கீழ வேலை செஞ்சவன் வேலையெல்லாம் சென்னைக்குப் போயிடுச்சு. இனிமே நான் மட்டும் எதுக்கு இங்க? யாரை மானேஜ் செய்யறது? ஒரு வாரத்துல என்னைத் தூக்கிடுவான்"

"போனா இன்னொரு வேலை தேடிக்க முடியாதா? சம்பளம் கொறச்சுக் கொடுத்தாலும் சரின்னு"

"அஞ்சு வருசமா மானெஜ்மெண்டுல வேலை செஞ்சு கோட்டு சூட்டைப் போட்டு காப்பி குடிச்சு பாஸ் சொன்னதுக்கெல்லாம் 'எஸ் பாஸ்'னு சொல்லி சொல்லியே நான் படிச்சதெல்லாம் மறந்திடுச்சு"

"உங்களுக்கு ஏதாவது வேலை கிடைக்குங்க. எவ்ளோ படிச்சிருக்கீங்க"

"என்ன பேத்தற? இங்க வேலையே இல்ல. எல்லாக் கம்பெனியும் இந்தியாவுக்கு வேலையைக் கொடுக்கறது வழக்கமாயிருச்சு. சென்னைக்குப் போனா ஏதாவது கிடைக்கலாம். கெடச்ச காசுல சிக்கனமாக் குடுத்தனம் பண்ண வேண்டியதுதான்"

"அய்யோ நான் போக மாட்டேன் இந்தியாக்கு. போயி உங்க அப்பா அம்மாவோட ரெண்டு பெட் ரூம் பிளாட்டுல... காலையில் எழுந்து காப்பி போடணும்... காலையில டிபன், மத்தியானம் சாப்பாடு, சாயங்காலம் டிபன், ராத்திரி சாப்பாடுன்னு சமச்சே என் உயிர் போயிடும். பாத்திரம் தேய்ச்சு தரை கழுவி வாணாம்பா ஊருக்கு போறது. குழந்தை படிப்பு கெட்டுரும். ஊருக்கு போனா தமிழ் தெரியுமாம்பாங்க..ரெண்டு கிளாசு கீழ தள்ளி சேத்துப்பாங்க".

"புள்ளைக்கு ஒன்பது வயசாகுது. மூணாங்கிளாஸ்தானே..இங்கிலீஷ் மீடியத்துல போட்டுரலாம். உனக்கு நிலைமை புரியல. எனக்கு வேலை இல்லைனா இங்க கைக்காச செலவழிச்சு தங்க முடியாது. பேங்குல இருபதாயிரம் டலர்தான் இருக்கு. இத வெச்சு எத்தனி மாசம் தள்ள முடியும்?"

"அப்பவே சொன்னேன். சம்பாதிச்சத சாமர்த்தியமா பேங்குல போட்டு வையுங்கனு. கேட்டீங்களா? அக்கா பொண்ணுக்குக் கல்யாணம், தங்கச்சிக்குப் பிரசவம், தம்பி காலேஜ்ல சேர லஞ்சம்னு காசை வாரி இறைச்சீங்க. அவங்களா இப்ப வந்து உங்களைத் தாங்கப் போறாங்க?"

"அதையேன் இப்ப கிளர்றே? ஏதோ கேட்டாங்க அனுப்பியாச்சு. இப்ப இருக்கறதை சேத்து ஊருக்குப் போகணும். உனக்காவது படிப்பு இருக்கா? பியூசில பெயில். படி படின்னு கல்யாணம் ஆன நாளிலேருந்து பத்து வருசமா சொல்லிட்டு வரேன். விசுவல் பேசிக், ஆரக்கிள் இப்படி ஏதாவது படிச்சிருந்தா நீயும் கொஞ்சம் சம்பாரிச்சு இருக்கலாம் இல்ல?"

"நீங்க சாப்பாட்டுக்கு காய்ஞ்சு போயி சமக்கத் தெரிஞ்ச பொண்ணு போதும்னு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தீங்க. எனக்குப் படிக்கப் புடிக்கல. ஏதோ வறுவல், பொறியல், கொழம்பு, சோறுன்னு எனக்குத் தெரிஞ்சதை ஆக்கி வெக்கிறேன். புள்ளய கவனிச்சுக்கறேன். அவனுக்கு சோறு போடணும். டிவியில கார்ட்டூன் பார்த்திட்டு இருக்கான் மாடியில. ரகு , அப்பா வந்தாச்சு, சாப்பிட வா"

மோகனுக்குப் பசி வந்து விட்டது. "சரி தட்டைப் போடு, மொகத்தைக் கழுவிட்டு வந்துர்ரேன்"

மாலதியின் சமையல் நன்றாக இருந்தது. "சாப்பாடு நல்லாவே இருக்கு" என்றான். மாலதி மகிழ்ச்சியுடன் "படிச்சு நான் வேலைக்குப் போனா இப்படி உங்களுக்கு வாய்க்கு ருசியாச் சமச்சு போட முடியுமா? ஒண்ணு செய்யலாமா? நான் ஒரு ஓட்டல் வெச்சுறவா" என்றாள்.

"வாணாம். நம்மூர்க்காரனெல்லாம் ஊரைப் பாக்கப் போறான். நாம ஓட்டல் வெச்சா யாரு வந்து சாப்பிடுவாங்க ? சமைக்கத் தெரிஞ்சா ஓட்டல் வெச்சுட முடியுமா? இட வாடகை, பாத்திரம் பண்டம், வேலை செய்ய ஆளு, விளம்பரம்... தவிர நம்ம கிட்ட காசில்ல பிசினசுக்கு"

அவள் தனக்கு உதவ முன்வருவது நெகிழ்ச்சியளித்தது. அவளை அருகில் அணைத்து அவள் தலைமயிரைக் கோதினான். அவள் அவன் பிடியிலிருந்து விலகினாள். ஏதோ நினைவு வந்தவள் போல "ஊருக்குப் போனா உங்க அம்மா என்னைத் திட்டுவாங்க, ஏன் முடியைச் சின்னதா வெட்டிட்டேன்னு"

அடுத்த இரண்டு நாட்களில் அவன் வேலை தேடுவதில் மும்முரமானான். எல்லா இடத்திலும் இதே கதைதான்... அவுட் சோர்சிங்... ஆள் குறைப்பு. உங்கள் தகுதிக்கேற்ற வேலை எங்களிடம் இல்லாமை குறித்து வருந்துகிறோம்.

புதன்கிழமை காலை ஆபீசுக்குப் போனவன் பத்து மணிக்கு வீட்டுக்கு திரும்பிவிட்டான் "வேலை போயிடுச்சு மாலு" என்றான் சோகமாக, கையில் பென்சில், நிறைந்த காப்பி கப்.

"எதுக்கு இந்த காப்பி கப்பு? தலய்யச் சுத்தித் தூக்கி எறிஞ்சிட்டு வராம? இந்தப் பென்சில் சனியன் எதுக்கு? புள்ளையே கம்ப்யூடர்ல எழுதி பிரிண்டு போடறான்... நீங்க ஆபீசிலெ எடுத்து வந்த பென்சிலை வெச்சு ஒரு பெனிசில் கடையே வெக்கலாம். ஒரு வேளை அதுனாலயே உங்களைத் தூக்கிட்டாங்களோ என்னவோ?

அவன் இதைக் காதில் வாங்காமல் உள்ளே நுழைந்தான்.

"உங்களுக்கு யாரோ காலையில் போன் பண்ணினாங்க. நம்பரைக் குறிச்சு வெச்சிருக்கேன்"

அவன் அதை வாங்கி அந்த எண்ணை தொலைபேசியில் டயல் செய்து பேசினான். அவன் முகம் மலர்ந்தது. போனை வைத்துவிட்டு, "மாலு ஒரு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஆனா அது கிடைக்க எம்பிஏ வேணுமாம். நான் முன்ன படிச்சேன். ஆனா முடிக்கல. எட்டு யூனிட்டு பாக்கி. அதை முடிக்கறதுக்குள்ள வேலை கிடச்சு இங்க வந்தாச்சு. இப்ப முடிக்கணும்னா நான் காலேஜுக்குப் போய் படிக்கணும். ரெண்டு மூணு மாசமாகும்"

"படிங்களேன்"

"அதான் செய்யப் போறேன். வேலைக்கு மூணு மாசம் கழிச்சு வரேன்னு சொல்லியிருக்கேன்"

"எங்க போயி படிக்கப்போறீங்க"

"டென்வர். அங்கதான் முன்ன படிச்சேன். அங்க போனாதான் சீக்கிரமா முடிக்கலாம். இங்க எங்க போனாலும் முதல்லேருந்து படிம்பான். ஒரு வருசத்துக்கு மேல ஆயிரும்"

"சரி போயிட்டு வாங்க. நா குழந்தயப் பார்த்திட்டு இங்க இருக்கேன்""

"உனக்கு செலவு பத்தி புரியில. கையில காசு கொஞ்சம் தான் இருக்கு. இதுல டென்வர்ல ஒரு குடித்தனம் இங்க ஒண்ணுன்னு வெக்க முடியுமா? இந்த அபார்ட்மெண்டை காலி பண்ணிட்டு டென்வர் போயிடலாம். திரும்பி வந்து வேற அபார்மெண்ட் எடுத்துக்கலாம். மானேஜர் கிட்ட சொல்லிட்டு வரேன்". அவன் எழுந்து போனான்.

மாலதிக்கு இதில் இஷ்டமில்லை. டென்வரில் ரெண்டு மூணு மாசத்துக்கு சன்டிவி கிடைக்குமா? டிவி தொடர்ல ஜானகிக்கு கல்யாணம் ஆகிற நேரம்? யாரைப் பண்ணிக்குவா? கோபுவையா ரமேஷயா? இப்பப் போயி. இதைச் சொன்னால் இவருக்குக் கோவம் வரும். புள்ளை படிப்பு கெட்டுருமே என்றால் ஒத்துக் கொள்ளமாட்டார். பெரிய பீ ஏ படிப்பா, மூணாங்கிளாஸ் தானேம்பாரு.

மோகன் திரும்பி வந்து "மாலு. இந்த அபார்ட்மெண்டை காலி பண்ண முடியாது. நமக்கு லீசு டிசம்பர்லதான் முடியுதாம். அதுக்குள்ள காலி பண்ணா நாலு மாசம் வாடகை நட்டமாகுமாம். நீ புள்ளயோட இங்கியே இரு. நான் மட்டும் டென்வர் போயி என் சினேகிதனோட தங்க முடியுமான்னு பார்க்கிறேன். ஆனா ஒரு விசயம், காசுல கெட்டியா இருக்கணும். ஒரு காசு வீணாகாம இருக்கணும். பக்கத்து அபார்ட்மெண்டுல நர்ஸ் சுமதி இருக்காங்க. ஏதாவது வேணுன்னா அவங்கள உதவச் சொல்லு. மாலு, சேலு, ஷாப்பிங்னு காசை விட்டுராதே".

மோகனுடைய நண்பன் டென்வரில் பெரிய வீட்டில் இருந்தான். அவன் மனைவி பிரசவத்துக்கு இந்தியாவுக்குப் போயிருந்தாள். மோகனுக்குத் தங்க இடம் கிடைத்து, டென்வர் யுனிவர்சிட்டியில் விட்ட எம்பிஏ படிப்பைத் தொடர்ந்தான். வாரம் ஒரு முறை தொலைபேசியில் மாலதியை அழைத்து விசாரிப்பான். "எப்படி இருக்க? பிரச்னை இல்லியே. என் படிப்பு நல்லா போயிட்டிருக்கு. நானும் ரகுவும் முடிஞ்ச வரையில ஏதோ பண்ணித் திங்கறோம்.. புள்ள ஸ்கூலுக்கு போறானா.. அவ்ளோதானே..." இதுக்கு மேல் பேச்சிருக்காது.

இரண்டு மாதம் ஓடியது. மோகன் வீடு திரும்பினான்.

"மாலதி...ஒரு நல்ல நியூஸ்..ஒரு கெட்ட நியூஸ்" என்றபடி உள்ளே நுழைந்தான்.

"என்ன நல்ல நியூஸ்?"

"நான் வகுப்பிலேயே முதல்ல தேறிட்டேன், எம்பிஏவில"

"வாழ்த்துகள். என்ன கெட்ட நியூஸ் ?"
"எனக்கு எம்பிஏ இருந்தா வேலை தரேன்னு சொன்ன கம்பெனிய நேத்திக்கு நஷ்டத்துல மூடிட்டாங்க"

"இப்ப என்ன செய்யப் போறீங்க?"

"என்ன செய்யறது? மூட்டயத்தூக்கிட்டு ஊருக்கு போலாம். கிடைக்கிற வேலையை வெச்சிட்டு அங்கயே..."

"இங்கியே இருந்துட்டா?"

"எத்தினி தடவை சொல்றது? மாசம் குறஞ்ச பட்சம் நாலாயிரம் டாலர் வேணும்மா? வீட்டு வாடகை, சாப்பாடு, காரு பேமண்டு, பெட்ரோல், இன்சூரன்ஸ்......"

"இது எத்தினி மாசம் காணும்" என்று கேட்டவாறு ஒரு பேங்கு பாஸ் புத்தகத்தை மேசையிலிருந்து எடுத்து அவனிடம் காட்டினாள். பச்சை அட்டையில் மாலதி மோகன் என்ற பெயரில் இரண்டு இலட்சம் டாலருக்கு மேல் இருந்தது அவனுக்கு வியப்பளித்தது.

"என்னா மாலதி? லாட்டரில அடிச்சியா"

"இல்ல"

"பின்ன இதை எப்படி சம்பாரிச்சே"

"அவுட் சோர்சிங்"

"என்ன சொல்ற நீ"

பேசாமல் அவன் கையில் ஒரு நோட்டீசைக் கொடுத்தாள். அதில் மேலே 'மாலதி ஸ்கூல் ஆப் கல்சுரல் ஸ்டடீஸ்' என்ற தலைப்பில் கீழ்க்கண்ட வாசகங்கள் இருந்தன.

"அமெரிக்காவில் வாழும் தமிழர்களே ! உங்கள் குழந்தைகளின் இசை, பரத நாட்டியப் பயிற்சிக்கு மாதாமாதம் ஏகப்பட்ட பணம் செலவழிக்கிறீர்களே அவர்களுக்கு அதில் ஏதேனும் தேர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா? அவர்களால் தமிழில் ஒரு முழுப்பாட்டு பாட முடியுமா? ஒரு பாட்டுக்கு பரத நாட்டியம் முழுதாக ஆட முடியுமா? அவர்களால் தமிழில் பேச, படிக்க, எழுத இயலுமா? இந்த அவலத்தை மாற்றச் சிறிது பணம் செலவழிக்க நீங்கள் தயாரா? அப்படியானால் கவலையே படாதீர்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு குறுகிய காலத்தில் திவீரமாக நடனம், இசை, தமிழ் கற்றுத்தர நாங்கள் ஒரு காம்ப் நடத்துகிறோம். இது சென்னையில் ஒருமாதம் நடக்கும். உங்கள் குழந்தைகள் ஓரிடத்தில் அவர்களுக்குப் பிடித்தமான உணவு, மேற்பார்வையுடன் தங்கியிருந்து இதில் பங்கேற்பார்கள். தினமும் திவீரமாக, தேர்ந்த ஆசிரியர்களால் சொல்லித் தரப்படும். ஒரு மாத முடிவில் அவர்கள் முழுதாக இரண்டு தமிழ் பாட்டுகள், ஒரு முழுப்பாட்டுக்கு அபிநயத்துடன் நடனம், தமிழ்ப்பாடங்கள் கற்பார்கள். இந்தியா போகாமல் அவர்கள் இங்கேயே இருந்தால் தங்கள் ஓய்வில் வன்முறைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்து கெட்டுப் போவார்கள். ஒரு குழந்தைக்கு இரண்டாயிரம் யு எஸ் டாலர். சில இடங்களே இருப்பதால் உங்கள் இடத்தைப் பதிவு செய்ய முந்துங்கள். நீங்கள் அணுக வேண்டியது: மாலதி மோகன், 38 லிங்கன் தெரு, அபார்ட்மெண்டு 15............"

"இத நீயா எழுதின?"

"ஐடியா என்னுது. பக்கத்து அபார்ட் மெண்டு சுமதி அக்கா கம்ப்யூட்டல அடிச்சுக் கொடுத்தாங்க. ரகுதான் பிரிண்டு போட்டுக் குடுத்தான். தமிழ்ச் சங்கத்துல, தென்றல்ல, இந்தியா அப்ராடுல விளம்பரம் கொடுத்தேன் "

"எத்தினி பேரு சேர்ந்தாங்க. எப்படி இந்தியால இதை..."

"இதுவரைக்கும் நூத்தி அஞ்சு குழந்தைங்க. இந்தியால எங்கக்கா டீச்சரா இருந்தவங்கதானே. அவங்களைவிட்டு ஒரு பெரிய வீட்ட வாடகைக்கு பிடிக்கச் சொன்னேன். மாசம் பத்தாயிரம் ரூவா சம்பளத்துல பாட்டு வாத்தியார், டான்ஸ் வாத்தியார், தமிழ் வாத்தியார் போட்டிருக்கோம். தினம் அஞ்சு மணி நேரம். ரெண்டு ஷிப்டு. இது வருசத்துக்கு ஒரு மாசம் காம்ப். இந்த காம்புல பத்து வருசம் படிச்சா பாட்டு, டான்ஸ் அரங்கேற்றம் பண்ணி டிப்ளமா கொடுப்போம். இங்க மாசாமாசம் பாட்டு. டான்ஸ் வாத்தியாருக்கு கப்பம் கட்ட வேண்டிய தேவை இல்லை. வருசத்து ஒரு மாசம் கேம்ப் போதும்"

"அப்படியா"

"ஹைஸ்கூல் படிக்கற பெரிய பொண்ணுங்களுக்கு இன்னொரு காம்ப் ஏற்பாடாயிட்டுருக்கு. அவங்களுக்கு காப்பி, டீ போட, பாஸ்டா, பிட்சா, வீட்டு வேலைன்னு சொல்லித்தர காம்ப் அது. ஒரு ஆளுக்கு மூவாயிரம் டாலர் ஒரு மாசத்துக்கு. இதுவரை எண்பது இடம் புக் ஆயிருக்கு. மனைவிக்கு மட்டும் வேலை இருக்க, அவுட் சோர்சிங்கல வேலை போயிட்ட ஆண்பிள்ளைங்களுக்கு தனியா ஒரு காம்ப் தொடங்கப்போறோம். இதுக்குப் பெரிய டிமாண்டு இருக்கும் போல இருக்குங்க"

"என்ன சொல்லிதரப்போறீங்க...ரீ டூலிங்ம்பாங்களே அது போல புதுசா டெக்னிகலா..ஜாவா.. வெப் சைட் டிசைன்னு ஏதாவது ஆண்களுக்குக் கத்துக் குடுக்கப் போறியா.."

"அதல்லாம் இல்ல. சும்மா வீட்டுல இருக்குற நேரத்துல பொண்டாட்டிக்கு உதவியா ஒழுங்கா ஒரு குழம்பு ரசம் வைக்க, பஜ்ஜி போண்டா போடக் கத்துக்கத்தான்"

மோகன் மனதால் கணக்கிட்டான். "அப்ப நான் வேலை செய்யவே தேவை இல்ல"

"யாரு சொன்னா? எனக்கு ஒரு மானேஜர் தேவைப்படுது. நீங்க அந்த பொறுப்பை எடுத்துங்க. சம்பளம் பாத்து போட்டுத்தரேன். இல்ல, என் சமயல் வேலையை நீங்க கவனிச்சாலும் சரி"

"கெட்டிக்காரி நீ. எம்பிஏ படிச்ச எனக்குத் தோணாத பிசினஸ் ஐடியா, உனக்கு எப்படி வந்துது "

"பிசினஸ் எல்லாம் படிச்சுக் கத்துக்கிறதில்லீங்க. எப்படியாவது வெற்றி பெறணும்னு மனசு வெச்சு திவீரமா முயற்சி பண்ணா தானே தோணுங்க".

"சொந்தமாய்த் தொழில் செய்யுங்கள்" என்ற தொடரை டிவியில் பார்த்ததை அவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற சிந்தனை அவள் மனதில் எழுந்தது.

எல்லே சுவாமிநாதன்,
லாஸ் ஏஞ்சலஸ்
More

ஓடிப்போனவள்
Share: 


© Copyright 2020 Tamilonline