Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | புதிரா? புரியுமா? | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
நேர்காணல்
விஜய் அமிர்தராஜ்: தொட்டதெல்லாம் பொன்னாகும் (பகுதி - 2)
- உமா வெங்கட்ராமன்|அக்டோபர் 2004|
Share:
Click Here Enlargeசென்ற இதழில் தொடங்கியது இந்தச் சுவையான நேர்காணல். தனது டென்னிஸ் அகாடமி, திரைப்பட மற்றும் நடிப்பு ஈடுபாடுகள், ஐம்பதில் ஏற்பட்ட மாற்றம், மாதம் தோறும் இந்தியாவுக்குப் பறத்தல், ஐநா சமாதானத் தூதுவராக உலகம் சுற்றுதல் என்று தனக்கு ஏற்படும் பலவித அனுபவங்களைத் திறந்த மனத்தோடு பகிர்ந்துகொள்கிறார் இங்கே தென்றலுக்காக விஜய் அமிர்தராஜ். மேலே படியுங்கள்....

தெ: பிரிட்டானியா அமிர்தராஜ் டென்னிஸ் அகாடமி (BAT) பற்றிக் கூறினீர்கள். அது உங்கள் கனவின் விளைவா? ஏன் தொடரப்படவில்லை?

வி: அது இரு நண்பர்களின் ஆர்வத்தில் விளைந்தது. பதினெட்டு வருடங்கள் வெற்றிகரமாக நடத்தி வந்தோம். இதற்கு முக்கிய ஊக்கியாய் (driving force) இருந்த என் தாய், எட்டு இளைஞர்களைச் சிறந்த விளையாட்டு வீரர்களாய் உருவாக்கும் கடமையைச் செவ்வனே செய்து வந்தார். வயதின் காரணமாக அவரால் அதைத் தொடர்வது சிரமமாக இருந்ததால், ஆறு மாதம் முன்பு நிறுத்த வேண்டியதாயிற்று.

ஆசிய ஜுனியர் போட்டிகளில் வென்ற கெளரவ் நடேகர், ஆஸி·ப் இஸ்மாயில், ரோஹித் ராஜ்பால், மற்றும் விம்பிள்டன் ஜுனியர் போட்டியில் வெற்றி பெற்ற லியாண்டர் பயஸ் போன்றோரை உருவாக்கினோம். மேலும் பலர், அமெரிக்காவின் சிறந்த பல்கலைக் கழகங்களில் உதவித் தொகை பெற்றுக் கல்வி பெற அவர்களின் டென்னிஸ் உதவியது. ஒருவருக்கு வெள்ளை மாளிகையில் (White House) பயிற்சி பெறும் வாய்ப்புக் கூடக் கிட்டியது. எங்கள் கனவு வெற்றி பெற்ற நிறைவு இன்று இருக்கிறது.

தெ: இம்முயற்சியை ஏன் மற்றவர்கள் பின் பற்றவில்லை?

வி: அதற்கு ஊக்கமும், அயராத உழைப்பும் வேண்டும். எங்கள் திட்டம் ஆசியாவிலேயே இவ்வகையில் முதல் முயற்சி. இன்றும் கட்டணம் வசூலிக்கும் பல பயிற்சிக் கூடங்கள் இருக்கின்றன. எங்களது மட்டுமே முழுக்க முழுக்க உதவித் தொகையில் இயங்கிய தாகும். பிரிட்டானியா முதலீடு செய்தனர், நாங்கள் பயிற்சியளித்தோம். உலகிலேயே இது போன்று பதினெட்டு வருடங்கள் தொடர்ந்து எந்தவொரு பயிற்சிக் கூடமும் ஒரே ஆதரவின் கீழ் இயங்கியதில்லை. இது சாத்தியமென்று நாங்கள் செய்து காட்டியிருக்கிறோம், மற்றவர்களும் முன்வர வேண்டும்.

தெ: இத்தகைய சிந்தனையை ஊக்குவிப்பதில் எவ்வகையில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்?

வி: தென்றல் போன்ற பத்திரிகைகளிடம் பேசுவதின் மூலம் என் கருத்தைப் பரப்ப முயற்சிக்கிறேன்.

தெ: பிரிட்டானியாவின் தலைவர் போன்ற மேலும் சில நண்பர்களை நீங்கள் அணுகலாமே.

வி: என் கடமை முடிந்து விட்டது. நாங்கள் செய்து காட்டிவிட்டோம். மற்றவர்கள் பின்பற்ற வேண்டும்.

தெ: ஆம், நீங்கள் செய்து காட்டியது சாதாரண விஷயமல்ல; காலங்காலமாய் உயர்ந்து நிற்கும் சாதனையல்லவா! அது போன்று, இன்று பிரகாஷ் அமிர்தராஜ் இந்தியாவின் சிறந்த டென்னிஸ் வீரராய் விளங்கும் சாதனையிலும் உங்கள் பங்கு மேலோங்கியுள்ளது. அவரைப் போன்று இந்திய டென்னிஸ் வானில் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று வேறு யாரைக் கூறுவீர்கள்?

வி: நிறையச் சிறுவர்கள், இளைஞர்கள் முனைப்புடன் முன்னேறி வருகிறார்கள். இந்தியாவிற்கு ஒரு பிரகாசமான எதிர் காலத்தைப் பார்க்கிறேன்.

தெ: அவர்களிடம் உங்களிடமிருந்த உத்வேகத்தைக் காண்கிறீர்களா?

வி: என் வழிமுறைகள் இன்று சரிவரும் என்று கூற முடியாது. நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன - என் மகன் பிரகாஷிடம் என் விளையாட்டின் சாயல் இருப்பினும், அவனது விளையாட்டு என்னிலிருந்து வேறுபடுகிறது.

தெ: உங்கள் பெற்றோர்கள் உங்களைப் பயிற்றுவித்ததைப் போல், இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கிறார்களா? பிள்ளைகளும் விளையாட்டைப் பொழுது போக்காக எடுத்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா, அல்லது முழுமனதுடன் ஈடுபடுகிறார்களா?

வி: எங்கள் பெற்றோர் எங்களை டென்னிஸில் ஈடுபடுத்திய நோக்கமே வேறு. அன்று எங்களுக்கு முன்னோடிகளாகக் கருதத் தொழில்முறை ஆட்டக்காரர்கள் எவருமில்லை. இன்றைய குழந்தைகள் பல சாதனையாளர்களைத் தொலைக்காட்சியிலும், நேரிலும் கண்டு அவர்களை முன் மாதிரியாகக் கொண்டு முன்னேற்றம் காணலாம். வசதிகள் கூடி விட்டன.

தெ: ஆம், இன்று நம் வீடுகளிலிருந்து ஐந்து மைல் தொலைவிற்குள் பயிற்சிக் கூடங்களும் தரமான விளையாட்டு மைதானங்களும் வந்து விட்டன.

வி: மிகவும் சரி. எங்கள் காலத்தில் பள்ளியிலிருந்து ஒருமணி நேர விடுப்புகூடக் கிடைக்காது. எனக்கு நினைவிருக்கிறது, 1962ல் முதன் முதலாகச் சென்னையில் நடந்த டேவிஸ் கோப்பை மண்டல இறுதிப் போட்டி - இந்தியாவின் ராமநாதன் கிருஷ்ணனும் மெக்ஸிகோவின் ர·பேல் ஓஸ¥னாவும் (Rafael Osuna) ஆடியது. இந்தப் போட்டியைக் காணப் பள்ளியில் அனுமதி கிடைக்கவில்லை. ஜுரம் என்று சொல்லிப் பள்ளிக்குச் செல்லாமல் விளையாட்டைக் காணச் சென்றதால், பள்ளியிலிருந்து ஒரு வாரம் விலக்கி வைக்கப்பட்டேன்.

காலம் எவ்வளவோ மாறி விட்டது. நாங்கள் விளையாட ஆரம்பித்தபோது, விளையாட்டில் சிறக்க வேண்டும்; முடிந்தால் தேசிய அளவில் வெற்றி பெற வேண்டும்; ஒரு வங்கியிலோ, விமான நிறுவனத்திலோ நல்ல வேலையில் அமர வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தது. தொழில்முறை விளையாட்டு வீரராய் ஆக வேண்டும் என்ற முனைப்பு எதுவுமில்லை. அதெல்லாம் அந்தக் காலத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது, எங்கள் உந்துதலே வேறு. இன்று தொழில்முறையில் விளையாடும் நோக்குடனே பலர் பயிற்சி பெறுகின்றனர். பணம் சம்பாதிக்க விளையாட்டும் ஒரு நல்லவழி என்று உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அதை உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் கடைசிவரை தொடர வேண்டும். சிலசமயம் பெற்றோர்கள் குழந்தைகளை விடவும் முனைப்புடன் இருக்கிறார்கள். அது சரியல்ல, எல்லாருடைய ஒத்துழைப்பும் தேவை. முக்கியமாக அந்த உந்துதல் குழந்தைகளிடம் உருவாக வேண்டும்.

பிரகாஷ் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அவரின் முயற்சிகளுக்கு நான் நூறு சதவீதம் துணை நிற்கிறேன். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, டென்னிஸை அவர் ஒரு தவமாகவே நினைக்கிறார். ஒவ்வொரு இரவும் என்னுடைய போட்டிகள், கானர்ஸ், பெக்கர் போன்றோரின் ஆட்டத்தை வீடியோவில் பார்த்துக் கொண்டே தூங்கி விடுவார். அதைத் தவிர வேறு நினைவே கிடையாது. அவர் தூங்கியபிறகு நான் சென்று வீடியோவை அணைப்பது தினமும் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. அடுத்தது, அவரது கடும் பயிற்சி - நாளை என்பது இல்லாதது போல் ஒரு வெறியுடன் பயிற்சி மேற் கொள்வார். அவர் ஆட்டத்தை உயர்த்திக் கொள்ள எத்துணை கடும் பயிற்சியாய் இருந்தாலும் சளைக்காமல் ஈடுபடுவார். ஆர்வம், உத்வேகம், பயிற்சியில் கட்டுப்பாடு இவை அனைத்தும் ஒருவரிடம் ஒருங்கே காண்பது அரிது. இவற்றிற்கெல்லாம் பின்பே திறமை வருகின்றது. உதாரணத்திற்கு, லெண்டலின் திறமை பத்து சதம் என்றால், மெக்கென்ரோவின் திறமை, 95 சதம். மெக்கென்ரோ முப்பது நிமிடத்தில் சாதிக்கக் கூடியதைச் செய்து முடிக்க லெண்டல் பத்து நாட்கள் எடுத்துக் கொள்ளக்கூடும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், லெண்டல் தன்னிடம் இல்லாததைக் கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இட்டு நிரப்பி வெற்றியும் கண்டார்.

இந்தப் பற்று எந்தத் துறையானாலும், சாதிக்க விரும்பும் ஒவ்வொருவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் இருக்க வேண்டும். நண்பர்களை இழக்க நேரிடலாம்; சினிமாவுக்கு நேரமிருக்காது; வார இறுதி உல்லாசங்கள் என்னும் பேச்சுக்கே இடமிருக்காது. இத்தகைய தியாகங்களைச் செய்ய அந்தக் குடும்பங்கள் தயாராக இருக்க வேண்டும்.

தெ: எங்களின் அடுத்த கேள்விக்கு நீங்களே அடிக்கோடிட்டு விட்டீர்கள். நீங்கள் செய்த பல தியாகங்களை முழுமனதுடன் செய்தீர்களா? மறுமுறை வாய்ப்புக் கிடைத்தால் இவற்றை மாற்றியமைக்க விரும்புவீர்களா?

வி: டென்னிஸ், நான் நினைத்துக் கூடப் பார்க்காத சிகரங்களைத் தொட வைத்தது. நான் நடந்து வந்த பாதையை மாற்றிய மைப்பதற்குச் சாத்தியக்கூறே இல்லை. ஏனென்றால், அதுதான் எனக்கு வகுக்கப்பட்ட பாதை, அதை மிக்க நிறைவுடன் இன்று நினைத்துப் பார்க்கிறேன். நான் தியாகங்கள் செய்யவில்லை என்று அர்த்தமில்லை - அன்று எனக்கு நண்பர்களே கிடையாது. ஆனால் அப்பொழுது அவை தியாகங்களாய்த் தெரியவில்லை.

தெ: இவையெல்லாம், நீங்களே விரும்பி ஏற்றுக் கொண்டவைதானே.

வி: அந்த வயதில் தியாகம் செய்கிறோம் என்று தெரிந்து செய்வதில்லை. ஒன்றில் முன்னேற வேண்டுமென்றால் மற்றவை யெல்லாம் பின்தள்ளப்படுகின்றன. இன்று நான் என் மகனை நண்பர்களுடன் வெளியே செல்ல வேண்டாம் என்றெல்லாம் சொல்வதில்லை. ஆனால் அது அவசியமாகி விடுகிறது. அதனால் தான் எதைச் செய்தாலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். என்னுடைய இந்திய சாப்பாட்டு ஆர்வத்தை எடுத்துக் கொள்ளுங்களேன். எனக்குப் பிடித்த மற்ற உணவு வகைகளெல்லாம் நான்கு, ஐந்து, ஆறாவது இடங்களில்தான் இருக்கின்றன. முதல் ஒன்று, இரண்டு, மூன்றாம் இடமெல்லாம் நம் இந்திய உணவிற்கே. கஷ்டப்பட்டு ஒரு இருபத்து நான்கு மணி நேரமோ நாற்பத்து எட்டு மணி நேரமோ நம் உணவில்லாமல் என்னால் தாக்குப் பிடிக்க முடியும்; அதற்கு மேல் முடியவே முடியாது.

தெ: போஸ்னியா போன்ற இடங்களில் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

வி: ஓ... அதிகமாக எடை குறையும். ஐ.நா. சபையின் சமாதானத் தூதுவராக மேற்கொண்டுள்ள சேவைக்கு நான் செய்யும் தியாகம் அது.

தெ: இந்தப் பயணங்களில் உங்கள் மனைவி சியாமளாவும் உடன் வருவார்களா? அவரும் உங்கள் செயல்பாடுகளில் பங்கேற்கிறாரா?

வி: ஆம், என்னுடன் க்ரோயேஷியா, பாஸ்னியா போன்ற இடங்களுக்கு வந்திருந்தார். ஆனால் இந்தப் பணிகளில் நேரிடையாக ஈடுபட அவருக்கு அவகாசம் இருந்ததில்லை. குழந்தைகளையும், குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு மற்றவற்றிற்கு நேரம் ஒதுக்குவது கடினம்தான்.

தெ: உங்களின் நீண்ட டென்னிஸ் பயணத்திற்குப் பின் வாழ்க்கை எவ்வாறு அமைந்துள்ளது?

வி: டென்னிஸ் இருபது ஆண்டுகளுக்கு மேல் என் வாழ்க்கையை ஆட்சி செய்து நல்ல முறையில் வழி நடத்தியது. ஆனால் அது மட்டுமல்ல வாழ்க்கை. இப்போது என்னுடைய ஐம்பதாவது வயதில் வாழ்க்கையைப் பின்நோக்கிப் பார்க்கும்போது, பத்துப் பத்து ஆண்டுகளாகப் பிரித்துப் பார்க்கத் தோன்றுகிறது.

தெ: சுவாரசியமான பார்வை... சற்றே விளக்குங்கள்.

வி: நான் முன்னணி டென்னிஸ் போட்டிகளிலிருந்து 1990ல் சற்று ஓய்வெடுக்கும் தருவாயில் வேறு பல வாய்ப்புக்கள் கைகூடி வந்ததால் கடந்த பதினைந்தாண்டுகளில் என் வாழ்க்கை இன்னும் மும்முரமாக அமைந்து விட்டது. எனது பத்து வயது வரை வீடு, படிப்பு என்று கழிந்தது; அடுத்த பத்து வருடங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் சிறக்க முயற்சித்தேன்; அடுத்து, நான் எடுத்துக் கொண்ட விளையாட்டுத் துறையில் மேலும் பல சாதனைகள் நிகழ்த்த முயற்சித்து, ஓரளவு வெற்றியும் பெற்றேன்; பின் பத்து வருடங்கள் மனைவி, மக்கள், குடும்பம் என்னும் திசை நோக்கிப் பயணித்தேன். இவ்வாறாக வாழ்க்கையைப் பகுதிகளாகப் பிரித்துப் பார்த்தால், ஒவ்வொறு பகுதியுலும் ஒவ் வொன்று முக்கியத்துவம் வாய்க்கப் பெறுகின்றது. சற்றே நிமிர்ந்து பார்த்தால், அடடே, நாற்பது வயதாகிவிட்டதென்பதை உணர்கிறோம். ஐம்பது கூட நாற்பதைப் போல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
தெ: ஐம்பதில் பரபரப்பு குறைந்து விட்டதா?

வி: ஏனென்று தெரியவில்லை, நாற்பதில் நாம் செய்ய வேண்டிய கடமைகளெல்லாம் செய்து விட்டோமா என்று மனம் அலை பாய்ந்து ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது; பொறுப்புகள் அதிகமாவதுபோல் தோன்று கிறது. திடீரென்று இந்த உணர்வுகளெல்லாம் நம்மை ஆக்கிரமிக்கின்றன. ஐம்பதில் இவையெல்லாம் போய் ஓர் அமைதியை உணர்கிறேன்.

தெ: உங்களுடைய இன்றைய பல பரிமாணங் களில் நீங்கள் மிகவும் ரசிப்பது எதை?

வி: ஒரு தந்தையாகவும் என் மகன்களுக்குச் சிறந்த நண்பனாகவும் இன்று கடமையாற்றுவதற்கு ஈடு எதுவுமில்லை. அவர்களிடமிருந்து நான் நிறையக் கற்றுக் கொள்கிறேன். கல்லூரிகளில், பள்ளிகளில் சொற்பொழிவாற்றும்போது கேள்வி-பதிலுக்கு ஆவலுடன் காத்திருப்பேன். இளைஞர்களின் இன்றைய போக்கை, மனநிலையை அறிய எனக்குப் பாடமாய் அது அமைகிறது. நேற்றுதான் பிரகாஷ் ஒரு போட்டிக்குப் பின் கெண்டக்கியிலிருந்து திரும்பினார். அதைக் காரணம் காட்டி உடனே எல்லோரும் சினிமாவுக்குக் கிளம்பி விட்டோம்.

தெ: உங்கள் ·பர்ஸ்ட் ஸர்வ் எண்டர் டெயின்மெண்ட் (First Serve Entertainment) நிறுவனத்தைப் பற்றி - அது திரைப் படம், விளையாட்டு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கிறதல்லவா?

வி: அவற்றுடன் ஆசியாவிலும், இந்தியா விலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தயாரிக்கிறோம். இந்தியாவில் நுழைய விரும்பும் டிஸ்னி, இ.எஸ்.பி.என்., டர்னர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்க உதவுகிறோம். ஸ்ரீலங்காவில், பிரபலமான க்ரே விளம்பர நிறுவனத்துடன் இணைந்து உருவாகிய எங்களது க்ரே ·பர்ஸ்ட் ஸர்வ் நிறுவனம் அந் நாட்டின் இரண்டாவது பெரிய விளம்பர நிறுவனமாகும்.

தெ: உங்கள் வாழ்விலும், வளர்ச்சியிலும் சிறந்த பங்கு வகித்த உங்கள் பெற்றோர், இன்று பேரன்களின் வளர்ச்சியைக் கண்டு ஆனந்தப்படுவார்களல்லவா?

வி: நிச்சயமாக. என் தந்தை இப்பொழுதும் சென்னையில் என் நிறுவனத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். என் தாய் அவரது நிறுவன நிர்வாகத்தில் ஈடுபட்டிருக்கிறார். இன்றும் மிகச் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். மாதம் தவறாமல் அவர்களைச் சென்று பார்க்கிறேன்.

தெ: எப்படி முடிகிறது உங்களால் - மாதந்தோறும் நாடுவிட்டு நாடு பயணிக்க!

வி: ஆமாம், லாஸ் ஏஞ்சலஸிலிருப்பவரும், சான் ·ப்ரான்சிஸ்கோவிலிருப்பவரும் சந்திப்பதைவிட நான் என் பெற்றோர்களை அடிக்கடி சந்திக்கிறேன். வருடத்தில் மூன்று, நான்கு மாதங்கள் அமெரிக்காவிலும், இரண்டு, மூன்று மாதங்கள் இந்தியாவிலும், மற்ற நேரத்தை உலகின் பல பாகங்களிலும் செலவிடுகிறேன். ஆனால், வீட்டைவிட்டுச் சேர்ந்தாற் போல் ஒரு வார இறுதிக்குமேல் வெளியில் தங்க நேரிடாமல் பார்த்துக் கொள்வேன்.

என் சகோதரர்கள் ஆனந்த், அஷோக் எல்லோருமே ஒருவருக்கொருவர் பதினைந்து நிமிடத் தொலைவில்தான் வசிக்கிறோம். ஆனந்த், லாங் ஐலண்டில் 'அமிர்தராஜ் ஹெல்த் அண்ட் ராக்கட் க்ளப்' என்னும் நிறுவனத்தை இருபது வருடங்களாக நடத்தி வருகிறார். மேலும் பல வியாபாரங்களில் மிக வெற்றிகரமாக ஈடுபட்டிருக்கின்றார். அவர் மகன் ஸ்டீ·பனும், பிரகாஷ¤ம் இரட்டையர் ஆட்டத்தில் சேர்ந்து ஆடுபவர்கள். அஷோக் திரைப்படம் சார்ந்த துறையில் முழுவதுமாக ஈடுபட்டுள்ளார்.

தெ: உங்கள் பெற்றோருக்குப் பிறகு உங்களின் வழிகாட்டி என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?

வி: சிறுவயதில் பெற்றோரே மிகப் பெரிய தூண்டுகோலாக விளங்கினர். பிறகு என் முதல் பயிற்சியாளர் ராமாராவ் அவர்கள். அவருக்கு என் மனதில் எப்பொழுதும் நீங்காத இடமுண்டு. அவர் நீரிழிவு நோயால் மரணமடைந்தது என்னை மிகவும் பாதித்தது. அதனால்தான் நான் இன்றளவும் நீரிழிவு நோய் எதிர்ப்புத் தொடர்பான எல்லா முயற்சிகளுக்கும் என்னாலான உதவியைத் தவறாமல் செய்து வருகிறேன்.

கடந்த இருபது ஆண்டுகளாக என் மனைவி சியாமளாவும், குழந்தைகளும் என் வாழ்வில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். அவர்களிடமிருந்து நான் பலவற்றைக் கற்றிருக்கிறேன்; அதுபோல் அவர்களும் என்னிடமிருந்து கற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

தெ: உலகப் பிரஜையான நீங்கள் தமிழுடன் தொடர்பு வைத்திருக்கிறீர்களா?

வி: என்னைவிட என் மனைவி நிறையத் தமிழ் படிப்பார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவறாமல் பார்ப்பார். எனக்கிருக்கும் நேரத்தை நான் கவனமாகத் திட்டமிடுவது அவசியமாகிறது. தமிழில் பழைய திரைப்படங்கள், பாடல்கள் இவற்றின் பால் எனக்கு ஈர்ப்பு அதிகம். அவை மிகவும் அருமையானவை. பாரம்பரியம் மிக்க நம் தமிழின்பால் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. செப்டம்பரில் பிட்ஸ்பர்க்கில் நடக்கவிருக்கும் உலகத் தமிழ் மாநாட்டில் பேச அழைக்கப்பட்டிருக்கிறேன்.

தெ: தமிழில் பேசப்போகிறீர்களா?

வி: நம் வழக்குத் தமிழென்றால் பரவாயில்லை. மாநாடு, அரசியல் கூட்டம் போன்றவற்றில் பேசப்படும் தமிழைப் புரிந்து கொள்வது கூடக் கடினமாயுள்ளது. ஏன் அவர்கள் எளிமையைக் கடைப்பிடிக்க மாட்டேனென்கிறார்கள்!

தெ: எங்கள் தென்றல் வாசகர்களுக்கு நீங்கள் பிரத்யேகமாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

வி: முக்கியமாகப் பெற்றோர்களுக்கு - பரபரப்பான இந்த வாழ்க்கையில் உங்கள் குழந்தைகளுடன் முடிந்த அளவு நேரம் செலவிடுவதைத் தலையாய கடமையாகக் கொள்ளுங்கள். நம் பெற்றோர் நமக்கு முப்பது வருடம் முந்தையவர்; நம் பிள்ளைகளோ நமக்கு முப்பது வருடம் பின் வருபவர். ஆதலால், அவர்களிடமிருந்து ஓரளவே கற்றுக் கொள்ள முடியும். பள்ளிக்குச் சென்று நல்ல பெற்றோராய் உருவாகப் பயிற்சி பெறவும் முடியாது. அது வாழ்க்கை என்னும் பயிற்சிக் கூடத்தில் வாழ்நாள் முழுவதும் பயில வேண்டிய ஒன்று. அங்கு நாம் எல்லோருமே நிரந்தர மாணவர்கள். அப்பள்ளியில் நாம் கடைபிடிக்கும் செயல் பாடே நாம் நல்ல பெற்றோரா என்பதைத் தீர்மானிக்கும்; நம் குழந்தைகள் சிறந்த மனிதர்களாய் உருவாக வித்திடும்.

தெ: பல பரிமாணங்களில் சாதித்தவர் நீங்கள். நாளைய உலகம் உங்களை எவ்வாறு நினைவு கூற வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

வி: ஆண்டவனால் நமக்கு அளிக்கப்பட்ட திறமைகளையும், வாய்ப்புக்களையும் சிறப்புறப் பயன்படுத்த வேண்டும். அதை நான் ஓரளவு செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன். "He did what he could with what he had" (தன்னிடம் இருந்ததை வைத்து, தன்னால் முடிந்ததை அவன் செவ்வனே செய்தான்) என்று மக்கள் தன்னை நினைவுகூற வேண்டும் என்று அமெரிக்க உயர்நீதி மன்றத்தின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைமை நீதிபதி தர்குட் மார்ஷல் (Thurgood Marshall) விரும்பினார். அவ்வாறே நானும் பேசப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

"லவ்-ஆல்" என்று சிறுவயது முதலே வீட்டிலும் விளையாட்டு மைதானத்திலும் கேட்டுக் கேட்டு விஜய் அமிர்தராஜ் அதையே ஒரு வாழ்க்கை நெறியாகக் கொண்டு விட்டாரோ என்ற எண்ணமே அவருடன் பேசுகையில் தோன்றுகிறது. "A well furnished mind is as rare as a well lived life" (முழுமை பெற்ற அறிவு, முழுமை பெற்ற வாழ்க்கையைப் போலவே அரியது) என்று சொல்வார்கள். அரிய அவை இரண்டும் ஒருசேரப் பெற்றவர் விஜய். நல்ல மகன், நல்ல தந்தை, நல்ல குடும்பத் தலைவர், நல்ல இந்தியக் குடிமகன், நல்ல உலகப் பிரஜை என்று விளங்கும் விஜய் அமிர்தராஜை சந்தித்துத் திரும்பு கையில், 'இவர் ஒரு தமிழர்' என்னும் பெருமை மேலோங்கத்தான் செய்கிறது.

*****


நடிக்க ஆசைதான், நேரம்தான் இல்லை!

சினிமா என்னும் மாய உலகம் என்னை மிகக் கவர்ந்த ஒன்று. தினமும் சினிமாவுக்குச் செல்ல வேண்டு மென்றாலும் நான் தயார். அதுமாதிரி வேறு ஒருவராக சினிமாவில் உலா வரும் வாய்ப்பும் மிக்க மகிழ்ச்சி தருமொன்றாகும். சில மாதங்கள் முன்பு சக்குடன் (Chuck Norris) வாக்கர் டெக்ஸஸ் ரேஞ்சரில் மருத்துவராக நடித்தது வேடிக்கையான ஒரு அனுபவம். அழைப்பு வந்து கொண்டுதானிருக் கிறது, நேரம்தான் இருப்பதில்லை.

*****


"விளையாட்டுத் துறை அரசின் முக்கியப் பொறுப்பல்ல..."

அரசு, விளையாட்டுத் திடல்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம். தேவையானால், வெளிநாட்டு முன்னணி வீரர்களை வரவழைத்துப் பயிற்சி முகாம்கள் நடத்தலாம். மற்றவற்றை விளையாட்டு வீரர்கள் மற்றும் நிபுணர்களிடம் விட்டுவிட வேண்டும். விளையாட்டுத் துறையில் முதலீடு செய்வது அரசின் பிரதான கடமையல்ல. கல்வித்துறை, மருத்துவம், குழந்தைகள் முன்னேற்றம் போன்றவை மிக அவசியம். வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவது விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கு வதைவிட முக்கியம். கிராமங்களிலும் பஞ்சாயத்துக் களிலும் இருக்கும் பெருவாரியான ஏழை மக்களை மேம்படுத்துவதே அரசின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அதனுடன் கூட விளையாட்டு, உயர் தொழில் நுட்பம் (high technology) போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

*****


அமெரிக்க அதிபர்களுடன்...

நான்சி ரேகன் அவர்களது சமூக சேவைப் பணிகளுக்கு நிதி திரட்ட நான் டென்னிஸ் போட்டிகளில் விளையாடினேன். அதன் காரணமாக, என்னை வெள்ளை மாளிகை விருந்துக்கு அழைத்தனர். அப்போது அதிபர் ரேகன் பரிச்சயமானார். மிகவும் வசீகரமான மனிதர். ஒரு தந்தைக்குச் சமமானவர்.

தந்தை புஷ் உதவி ஜனாதிபதியாக இருந்த காலம் அது. அந்த விருந்தில் அவரது அறிமுகமும் கிட்டியது.

மிகத் திறமை வாய்ந்தவர். புஷ் 41 (நாற்பத்தோராவது அமெரிக்க அதிபராக இருந்ததால், தந்தை புஷ்ஷை 'புஷ் 41' என்று அழைப்பது வழக்கம்), ஜெப், ஜார்ஜ், நீல் (The Bushes - Jeb, George, Neil) எல்லோருமே இப்போது என் குடும்ப நண்பர்கள்.

கிளிண்டன் அவர்களையும் சில முறை சந்தித்திருக்கிறேன். அபாரமான மனிதர், அசாத்திய ஞாபக சக்தி. அவர் ஆர்க்கன்ஸா மாநில ஆளுனராக இருந்த போது நான் அங்கு ஆடிய டென்னிஸ் போட்டிக்கு வந்திருந்ததை நினைவு கூர்ந்தார். இதுபோல், பல தலைவர்களைச் சந்தித்திருக்கிறேன். ஐ.நா. சபையின் பொதுச் செயலர் சமீபத்தில் அளித்த ஒரு விருந்தில் பல்வேறு நாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.

சந்திப்பு: உமா & வெங்கடராமன்
புகைப்படம்: ஸ்ரீராம்
Share: 


© Copyright 2020 Tamilonline