Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நிதி அறிவோம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | இலக்கியம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
தீர்வு
- |அக்டோபர் 2006|
Share:
Click Here Enlargeவேதவல்லிக்கு காலையிலிருந்தே வேலை ஒன்றுமே ஓடவில்லை. இன்று மட்டும் தான் என்றில்லை. சில மாதங்களாகவே இப்படித்தான். ஏனோதானோவென்று ஒரு பிடிப்பில்லாமல் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள்.

வேலை ஒன்றுமே இல்லையா என்ன? ஒன்றா? இரண்டா? தலைக்கு மேலே ஆயிரெத்தெட்டு வேலைகள் காத்துக் கொண்டு இருக்கின்றன. விடியற்காலையில் சூரியோதயம் ஆவதற்கு முன்பே திருப்பள்ளிஎழுச்சியாகி விட்டது. கண் முழித்தவுடன் அப்படியே படுக்கையிலிருந்து எழுந்து ஓடிவிட முடியுமா என்ன? அம்மாவின் கட்டளைப்படி வழக்கம் போல, ஑இன்னிக்காவது கணக்கு வாத்தியார்கிட்டே திட்டு வாங்காம இருக்கனும். அம்மா நான் ரொம்ப நாளா கேட்கிற புது சைக்கிளை வாங்கித் தரணும்...ஒ மேற்கொண்டு என்னென்ன வேண்டிக் கொள்ளலாம் என்று யோசிப்பதற்குள் அம்மாவின் குரல் அவளைக் கலைத்தது. ஑என்னடி, இன்னுமா எழுந்துக்க மனசு வரலை? சீக்கிரம் எழுந்துக்கோ. காபி போட்டு அடுப்பு மேலே வைச்சிருக்கேன். பல் தேய்ச்சுட்டு எடுத்துக் குடி. அப்புறமா குளிச்சிட்டு ஸ்கூலுக்கு ரெடியாயிட்டு நில்லு. நான் வந்து இட்லி பண்ணித்தரேன். தேங்காயைத் துருவி வைச்சிருக்கேன். பச்சை மிளகாய், உப்பு, புளி, பொட்டுக் கடலை எல்லாம் தனியா எடுத்து ஒரு தட்டிலே வைச்சிருக்கேன். எல்லாத்தையும் சேத்து அரைத்து வைச்சுடு. நேத்திக்கு மாதிரி திரிதிரியா அரைக்காம, நன்னா நைசா அரைச்சு வை. அரைக்கறதுக்கு முன்னாலே ஆட்டுக் கல்லை நன்னா
அலம்பு. அப்புறம் நீ குளிச்சு முடிச்சுட்டு தோய்க்க வேண்டிய எல்லாரோட துணியையும் சோப்பு தண்ணியில முக்கி வை. சாயம் போற துணியெல்லாம் போன தடவை மாதிரி சேர்த்து முக்காதே. எல்லாத்தையும் திரும்பி சரி பண்றதுக்குள்ள என் பிராணனே போயிடுத்து. அப்புறம் ரொம்ப முக்கியமா...ஒ அம்மாவின் கட்டளைகள் நீண்டு கொண்டிருப்பதற்குள், பல் தேய்த்துவிட்டு, காபி குடிப்பதற்காக சமையலறைக்குள் வந்தாள்.

நான் சொன்னதெல்லாம் காதுல வாங்கின்டியா? நான் பக்கத்து தெரு காய்கறி கடை வரைக்கும் போய்ட்டு வந்துடரேன். சீக்கிரமே போனாதான் நல்ல காயா பார்த்து வாங்க முடியும். நவராத்திரி வேறே வந்துன்டிருக்கு. பொம்மையெல்லாம் வெளியில எடுத்து எந்தெந்த பொம்மைக்கு கால், கை, தலை எல்லாம் போயிருக்குன்னு பார்க்கணும். பொம்மைகள் போறலைன்னா புதுசா கொஞ்சம் வாங்கணும். இந்த வருஷமாவது ஒரு கல்யாண செட் வாங்க முடியறதான்னு பார்க்கனும். அப்பாடி, என்ன விலை சொல்றான்! பக்கத்தாத்து மாமி கூட கடைக்கு வரேன்னு சொல்லிண்டுருந்தா. ஆச்சு, கொலு முடிஞ்சதுன்னா, தீபாவளி கடை ஆரம்பிச்சுடும். உங்கப்பாவுக்கு இந்த வருஷம் எவ்வளவு போனஸ் வர்றதுன்னு கேக்கணும். நிறைய வேலை இருக்கு. சரி, சரி, நான் முதல்ல காய் வாங்கிண்டு வர்ற வழியைப் பார்க்கறேன். நானும் காலைல எழுந்ததிலேர்ந்து கடைக்குக் கிளம்பிண்டு இருக்கேன்.ஒ பேசியபடியே போகும் அம்மாவைப் பார்த்தபடியே, காபியைக் குடித்து முடித்து அவசர அவசரமாக குளிக்கவென நீரிறைக்க கிணற்றடிக்கு ஓடினாள். வழக்கம் போல, ஒரு வாளி தண்ணீரை தொழுவத்தில் அசை போட்டுக் கொண்டிருந்த மாடுகளுக்காகத் தொட்டியில் ஊற்றினாள். மாட்டுத் தொழுவம் சுத்தமாக சாணம் போட்டு
கழுவப்பட்டு அழகான கோலம் போடப்பட்டிருந்தது. கோலம் அம்மாவின் நேர்த்தியான வேலையைப் பறை சாற்றியது. வழக்கம் போல் கோலத்தை ரசித்துக் கொண்டே, தண்ணீர் வாளியை எடுத்துக் கொண்டு மீண்டும் கிணற்றடிக்கு வந்து நீர் இறைக்கத் தொடங்கினாள். இந்த பரபரப்பான சென்னையிலே கிராமத்து அழகு கெடாமல் ஒரு வீடு.


வேதம், வேதம் என்றழைத்தபடியே அருகில் வந்தார் அவளுடைய கணவர் சங்கரன். அந்த பிரம்மாண்டமான ஏரியிலே வெகு தொலைவில் சென்று கொண்டிருந்த விசைப் படகைப் பார்த்துக் கொண்டிருந்தவாறு அமர்ந்திருந்த வேதம் தன்னுடைய சுய நினைவுக்கு வந்தவளாக, அந்த பிரம்மாண்டமான ஏரியை நோக்கிப் போடப்பட்டிருந்த நாற்காலியிலிருந்து எழுந்து கொண்டே கணவரை நோக்கினாள். அவர் ஆஸ்ப்பத்திரிக்குக் கிளம்பி விட்டார் என்று தெரிந்தது. இருந்தாலும், ஆஸ்ப்பத்திரிக்குக் கிளம்பியாச்சா? என்று கேட்டாள். இதோ ஒரே நொடியிலே காபி போட்டுக் கொண்டு வரேன் அவளுடைய அவசரம் இவ்வளவு நேரமாக அவள் கணவர் கிளம்புவது கூட தெரியாமல் வேறொரு உலகத்தில் இருந்ததற்கு ஈடு செய்யும் விதமாக இருந்தது.
அவருக்கா தெரியாது? முடிந்த வரைக்கும் அவளைப் புரிந்து கொண்டவராயிற்றே? இருக்கட்டும். நான் உன்னைக் கூப்பிட்டுப் பார்த்தேன். உன்னிடமிருந்து மூச்சுப் பேச்சு இல்லை. சரி, மகாராணி அம்மா, வழக்கம் போல நகர்வலம் காண போய் விட்டார் அப்படின்னு நானே காபி போட்டு குடிச்சுட்டு உனக்கும் போட்டு வைச்சிருக்கேன். போய் எடுத்துக்கோ. எனக்கு டைம் ஆயிடுத்து. இன்னிக்கு ஒரு முக்கியமான சர்ஜரி இருக்கு. நேத்திக்கே உன்கிட்டே சொன்னேனே, வர வர நீ ரொம்ப பகல் கனவு காண்கிறாய். பார்த்துக்கோ. இது எல்லை மீறி போச்சுன்னா அப்புறம், மருந்து, மாத்திரைன்னு கொண்டு போய் விட்டுடும். சரி, நான் சர்ஜரி முடிஞ்சதும் போன் பண்றேன். ஆகாஷ் போன் பண்ணினான்னா சொல்லு என்றவர் கார் எடுத்துக் கொண்டு கராஜ் கதவை மூடிக் கொண்டு போகும் சத்தம் கேட்டது வேதத்திற்கு.

ஒரு சிறிய குற்ற உணர்வுடன் எழுந்து கொண்ட வேதவல்லி முதலில் சமையலறை சென்று ஆறி போய்க் கொண்டிருந்த காபியை எடுத்துக் குடித்தாள். குடித்து முடித்தவுடன், மீண்டும் ஜன்னலருகில் வந்து அந்த விசைப் படகு இன்னும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிகிறதா என்று பார்த்தாள். அந்த படகைக் காணவில்லை. அந்த படகிற்குப் பதிலாக இன்னொரு படகுதான் கண்ணிற்குத் தெரிந்தது. அந்தப் படகிற்கும், எனக்கும் என்ன சம்மந்தம்? அதைப் போய் இவ்வளவு நேரம் கழித்துக் கூட ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறேனே? இப்படித்தான் நம்முடைய வாழ்க்கையில் சில சிறிய அளவு ஞாபகங்கள், சில பெரிய அளவு ஞாபகங்கள், சில மிகப் பெரிய அளவு ஞாபகங்கள் நம்மைத் துரத்துகின்றனவா? வேதவல்லியைப் பொறுத்தவரையில் அவளுக்கு அவளுடைய பால்ய கால நாட்கள் தான் மிகப் பெரிய ஞாபகங்கள். அதுவும் வயது ஏற, ஏற அந்தக் கால நாட்கள் ரொம்பவுதான் அவளைத் துரத்துகின்றன. காபியைக் குடித்த பின்னர் வழக்கப்படி, எழுந்து குளித்து முடித்து விட்டு, தோட்டத்தில் வித விதமாக, பல வித வர்ணங்களிலும் பூத்திருந்த மலர்களைப் பறித்து வந்து பூஜையை முடித்த பின்னர் அடுத்தடுத்த வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.


இந்த அமெரிக்காவில் அப்படி என்ன வெட்டி முறிக்கும் வேலை இருந்து விடப்போகிறது அவளுக்கு? அவளுடைய அம்மா மாதிரியா? எதையும் யோசிப்பதற்கு கூட நேரம் இல்லாமல், இரவு படுக்கப் போகும் வரையில் வேலை இருந்து கொண்டே இருக்கும். அவளும் சிறிது கூட அலுப்புத்தட்டாமல் எல்லா வேலைகளையும் மிக நேர்த்தியாகச் செய்து கொண்டேயிருப்பாள். அந்த வேலைச் சுமைதான் அம்மாவை மிகவும் ஆரோக்கியமாக, சந்தோஷமாக வைத்திருந்ததோ? இங்கே வேதத்திற்கு தினப்படி சமையல் செய்வதே பிரதான வேலை. மற்றபடி வீடு மற்றும் தோட்டத்தை சுத்தம் செய்யவதற்கென்றே வாரம் ஒரு முறை இரண்டு குழுக்கள் அவளுடைய வீட்டிற்கு வருகை தரும். அன்று மட்டுமே வீடு கலகலவென்று ஒரே சத்தமாக இருக்கும். அது அவர்கள் பேசிக்கொள்ளும் சத்தம் அல்ல. அவர்கள் தங்களுடன் கொண்டு வரும் மிஷின்களின் சத்தம் மட்டுமே. அவர்கள் ஒருவொருக்கொருவர் அநாவசியமாகவோ, அவளிடம்கூட தேவையில்லாமலோ பேசி அவள் பார்த்ததேயில்லை. அவளிடமிருந்து சம்பளம் தவிர வேறு எதையுமே எதிர்பார்க்காமல், வேலையை முடித்து விட்டு சென்று கொண்டே இருப்பார்கள். வேலையும் படு சுத்தமாக இருக்கும்.

வேதவல்லி சமையலை முடித்து விட்டு மீண்டும் அந்த ஏரியை நோக்கியவாறு போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டாள். மனமாகிய குரங்கு மீண்டும் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது.

நான் தப்பு செய்து விட்டேனோ? இந்த ஊருக்கு வந்தே இருக்கக் கூடாதோ? அவளுடைய கணவர் மேற்படிப்பு முடித்தவுடன் அவர் இந்தியா திரும்பிப் போகலாமா என்று கேட்ட போது எந்த காரணத்தினால் போக மறுத்தேன்? எதனால் திரும்பிப் போக தைரியம் வரவில்லை? அச்சமயம் ஆகாஷ் கூட மிகச் சிறிய குழந்தை. மிகவும் எளிதாகத் திரும்பிப் போயிருக்கலாம். அப்போது இந்த ஊர் தந்த பிரமிப்பு அடங்காததினாலா? தான் அறிந்த இந்தியர்கள், தன்னுடைய தோழிகள், தன் கணவருடன் வேலை பார்த்த மற்ற இந்திய டாக்டர்கள் யாருமே திரும்பிப் போகாததாலா? அல்லது இந்தியாவிற்கு திரும்பிப் போனவர்கள் எல்லோரும் ஏதேதோ சாக்கு போக்குச் சொல்லிக் கொண்டு மறுபடியும் இங்கு திரும்பி வந்ததாலா? இல்லை விடுமுறைக்கு இந்தியாவிற்கு செல்லும் பொழுது சுற்றங்களிடம் பீற்றிக் கொள்ள முடியாமற் போகும் என்பதாலா? அவளுடைய கணவருக்கு படிப்புக்கேற்ற வேலை இங்குதான் உள்ளது என்று நம்பியதாலா? இல்லை இவையெல்லாமே சேர்ந்து மொத்தமாக ஒரு காரணமா? எது எப்படியோ, அவர்கள் இந்தியாவிற்குத் திரும்பிப் போகவில்லை. அவளுடைய கணவரும் படிப் படியாக பதவி உயர்வு பெற்று, சமூகத்தில் அவர் ஒரு ராசியான சர்ஜன் என்ற அந்தஸ்தையும் அடைந்து,
சிகாகோ நகரின் மையப் பகுதியில் கொழுத்த பணக்காரர்களால் மட்டுமே கட்டுபடியாகக் கூடிய இந்த பிரம்மாண்டமான ஏரிக்கரை வீட்டை வாங்கி, ஆகாஷையும் தன்னுடைய நண்பர்கள் சுற்றங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு நன்றாகப் படிக்க வைத்து, மிகப் பெரிய பல்கலைக்கழகத்தில் படிக்க வைத்து, தமிழ் சொல்லிக் கொடுத்து, பண்டிகைகளில் எல்லாம் அவனையும் ஈடு படுத்தி, இந்தியாவில் கூட இவ்வளவு நன்றாக பிள்ளை வளர்த்திருக்க முடியாது என்று அவளுடைய சுற்றங்களிடமே பாராட்டுப் பெற்று... ஆயிற்று இன்னும் ஒரு பேரனையோ, பேத்தியையோ பார்த்து விட்டால் போதும். இந்த ஊர் அளித்த பிரமிப்பு அடங்க இவ்வளவு வருடங்கள் பிடிக்கின்றனவா? இவ்வளவு இருந்தும், மனதில் ஒரு வெறுமை. ஏன்? தனக்கு மிகப்பெரிய கவலைகள் எதையுமே கடவுள் இது வரை கொடுக்காததாலா?

வேதவல்லியைத் தொலைபேசி மணி கலைத்தது. அவளுடைய கணவர்தான். வேதம், இன்னிக்கும் சர்ஜரி பெரிய சக்ஸஸ். வழக்கம் போல எனக்கு பாராட்டு மழைதான். சரி, நீ சாப்பிட்டியா? இன்னிக்கு சாயங்காலம் கோவில் போணும்னு சொன்னியே. ரெடியாயிரு. நான் வேலையைச் சீக்கிரமா முடிச்சிட்டு வரேன். அப்புறம், ஆகாஷ் போன் பண்ணினா?

வேதவல்லிக்குக் கணவரின் திறமையில் இம்மியளவு கூட சந்தேகம் கிடையாது. அதனால், சர்ஜரி ஸக்ஸஸ் என்று கேட்ட பொழுது அவளிடமிருந்து புதிதாக எந்த மாற்றமும் இல்லை.

இன்னமும் ஆகாஷ் போன் பண்ணலையே. அவனிடமிருந்து போன் வந்தவுடன் உங்களுக்கு போன் பண்ணிச் சொல்றேன். ஆமாம், இன்னிக்கு கோவில் போகனும்னு சொன்னேன்ல. எனக்கே மறந்து போயிடுத்து

சரி, நான் கிளம்பினவுடன் உனக்கு போன் பண்றேன், என்றபடி போனை வைத்த சங்கரனுக்கு ஸர்ஜரி மிகப் பெரிய ஸக்ஸஸ் என்ற சந்தோஷத்தைவிட வேதத்தைப் பற்றிய கவலைதான் தலை தூக்கியது. அவர் அவளைப் புரிந்து கொண்டவரை, வேதம் பகல் கனவு காணும் ரகம் தான். ஆனால் இந்த அளவுக்கு நிலைமை மோசமானதில்லை. இப்போதெல்லாம், கூப்பிட, கூப்பிட பதிலே இருப்பதில்லை. எங்கோ நினைவாய் இருக்கிறாள். இத்தனைக்கும் அனைத்து தமிழ் கலாசார விழாக்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவள். இந்தியாவிலிருந்து வரும் அனைத்து கலைஞர்களுக்கும் தன்னுடைய வீட்டில் விருந்தோம்பல் செய்தவள். இந்திய தமிழ் சமூகத்தில் ஒரு முக்கியப் புள்ளி. இந்த ஏரியைப் பார்த்தவாறே அவளுடைய வாழ்க்கை முடிந்து விடுமோ? இந்த வித்தியாசமான ஆன்மீக வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளுமளவுக்கு அவள் பக்குவப்பட்டவளா? இப்பொழுதும் இந்தியா திரும்பி மருத்துவ தொழிலை தொடங்க சங்கரன் தயாராக இருக்கிறார். ஆகாஷை விட்டுப் பிரிந்து போக வேதத்திற்குதான் மனமில்லை. அதற்கு இந்த ஏரியும், நாற்காலியுமே மேல் என்கிறாள். முன்பு இந்தியா திரும்பிப் போக முடிந்திருக்கும். ஆனால் போக மனமில்லை. இப்பொழுது
திரும்பிப் போக மனம் ஏங்குகிறது. ஆனால் போக முடியவில்லை. பெற்ற பாசம் தடுக்கிறது. ஒரு பெருமூச்சுடன் தன்னுடைய பணிகளில் மூழ்கினார் சங்கரன்.

கணவரின் அன்புக் கட்டளை வேதத்தை உடனே சாப்பிட வைத்தது. சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்தவளை மீண்டும் தொலைபேசி அழைத்தது.

அம்மா, நான் ஆகாஷ் பேசறேம்மா, ஆகாஷ் இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்து படித்தாலும், வீட்டில் அம்மா, அப்பாவுடன் தமிழிலேயே பேசும் பழக்கத்தைக் கொண்டிருந்தான்.

என்னப்பா? எப்படியிருக்கே? உன்னோட போனைத்தான் நானும், அப்பாவுமா ரொம்ப நாளா எதிர் பார்த்துண்டிருக்கோம். அதுவும் அப்பா உன்னைப் பத்தி கேட்டுண்டேயிருக்கார். மாமா எப்படியிருக்கார்? உனக்கு வேலை எப்போ முடியறது? திரும்பி எப்போ இங்கே வரே? கேள்விகள் நீண்டு கொண்டிருந்தன.

அகாஷ் தன்னுடைய வேலை விஷயமாக சென்னைக்குப் போயிருக்கிறான். அவன் சென்னை சென்று ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது. இப்பொழுது தான் போன் செய்கிறான். சென்னையில் மாமா வீட்டிலிருந்தபடி - வேததின் பெரிய சகோதரன் - தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டிருக்கிறான். வேதத்தின் அண்ணா இப்பொழுது இருப்பது வேதம் பிறந்து வளர்ந்த அதே வீட்டில். அவர் அந்த வீட்டில் எந்த மாற்றமும் செய்யாமல், பரபரப்பான சென்னை மாநகரில், அதே கிராமத்து அழகுடன், அதே மாடுகளின் சந்ததிகளுடன் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அம்மா, நான் ரொம்ப நன்னா இருக்கேன். இங்கே எல்லாரும் நன்னாயிருக்காம்மா. என்னோட வேலையைச் சீக்கிரமா முடிச்சிண்டிருக்கேன். அம்மா, எனக்கு இந்த ஊர் ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த ஊர் மனிதர்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த ஆபிஸ் ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த கடைத்தெரு, கோவில் எல்லாமே ரொம்பப் பிடிச்சிருக்கு. எல்லாத்தையும் விட... சிறிது இடைவெளிக்குப் பிறகு மெதுவாக, எனக்கு மாமா பெண் பெரியநாயகியை ரொம்ப பிடிச்சிருக்கும்மா

அத்தை, சட்னியை கல்லுரலில் போட்டு அரைச்சுட்டேன். இட்லி வைச்சுடட்டுமா? என்றபடி வந்த பெரியநாயகியிடமிருந்து பேரனை வாங்கி கட்டி அணைத்துக் கொண்டாள் வேதவல்லி. அத்தை, அப்புறம், நவராத்திரி வர்றதே. எந்தெந்த பொம்மைக்கு கால், கை, தலை எல்லாம் போயிருக்குன்னு பார்த்துட்டேன். பொம்மைகள் போறலைன்னா புதுசா கொஞ்சம் வாங்கணும்னு சொன்னேளே.

ஆமாம்மா. உங்க மாமா ஆஸ்பத்திரிக்குக் கிளம்பற நேரமாச்சு. ஆகாஷும் ஆபிஸுக்குக் கிளம்பியாகனும். இட்லி வைச்சுடு. ஆமாம். நவராத்திரி வர்றது போலிருக்கே. உங்க பாட்டிக்கு ரொம்ப நாளா ஒரு கல்யாண செட் வாங்கி கொலுவில் வைக்கனும்னு ஆசை. இன்னிக்கு சாயங்காலமா, மாமாவும், ஆகாஷும், ஆபிஸிலிருந்து வரட்டும். நம்ப காரை எடுத்துண்டு மயிலாப்பூர் வரைக்கும் போயிட்டு வரலாம். ஏதோ ரிவர்ஸபிள் பட்டுப் புடவை வந்திருக்காமே. இந்த வருஷ தீபாவளிக்கு நம்ப ரெண்டு பேருக்கும் ரிவர்ஸபிள் பட்டுப் புடவைதான்னு உங்க மாமா கிட்டே சொல்லிட்டேன். அப்புறம் என்னென்ன ஸ்வீட், காரம் பண்ணனும்னு பார்க்கணும். நிறைய வேலை இருக்கு. இந்த வாரம் அண்ணாவை - உங்கப்பாவை வேறே போய்ப் பார்க்கணும். மாடு கன்னுகுட்டி போட்டிருக்குன்னு சொன்னார். இப்படியே உக்காந்துண்டு இருந்தா ஒரு வேலை ஆகாது என்றபடி எழுந்த வேதத்தைப் பார்த்த சங்கரனுக்கு மனதில் ஒரு நிறைவு.

ஆம். வேதவல்லி இப்பொழுது தன் கணவர், பிள்ளை, மருமகள் மற்றும் பேரப்பிள்ளையுடன் வசிப்பது சிங்காரச் சென்னையிலே.

பிருந்தா,
டெட்ராய்ட், மிச்சிகன்
Share: 
© Copyright 2020 Tamilonline