Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சிறுகதை
ஆருத்ரா தரிசனம்
- ஷமிலா ஜானகிராமன்|பிப்ரவரி 2005|
Share:
அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு, குச்சி ஐஸை நக்கியபடி சிதம்பரம் நடராஜர் கோயிலை நெருங்கிக் கொண்டிருந்த சிறுமியான என் மனதில் இருந்ததெல்லாம் சந்தோஷம். சந்தோஷம் மட்டும்தான். பத்து வயதுவரை இந்தக் கோலாகலத்தைப் பார்த்து ரசித்த நான் அந்த பாக்கியம் மறுபடியும் எப்படிக் கிடைக்கும் என்று ஏங்கினேன். வருடா வருடம் திருவாதிரை சமயம் எங்கு இருந்தாலும் என் சிதம்பர நடராஜரையும் அவர் ஆடிவரும் காட்சியையும் மனதில் நிறுத்தி வணங்குவேன். இப்படியே எனக்கு வயது அறுபது ஆகிவிட்டது.

எனக்குப் பத்து வயது இருக்கும்போது அப்பாவுக்கு வேலையில் மாற்றம் ஆகி நெல்லூர் சென்றோம். பதினோரு வயதில் திருமணம். சென்னையில் வாசம். என் பெற்றோர் மறுபடியும் சிதம்பரம் சென்றனர். என் திருமணத்தின் போது நடந்த குழப்பத்தினால் எங்கள் இரு குடும்பத்திற்கும் ஆகாமல் போய்விட்டதுதான் என் துர்ப்பாக்கியம்.

எனக்காக என் தந்தை, இலவம் பஞ்சினால் செய்து கொடுத்த மெத்தையைக்கூட என் மாமியார் ஏற்றுக்கொள்ளவில்லை. அது பல காலம் பரண் மேல் தனியாகத் தூங்கிற்று. போதாதற்கு என் புகுந்த வீட்டார் வீர வைஷ்ணவர்கள். பிள்ளையார் கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லை. மற்ற உறவினர்களோடு அப்படியே சென்றாலும் கோயில் தேங்காய்க்கு வீட்டில் இடம் இல்லை.

இருவீட்டாருக்கு மத்தியில் நிறையப் போக்குவரத்தும் இல்லை. பெற்றோரையும் தம்பியையும் அழைத்துச் சந்தோஷமாக விருந்து உபசரணை செய்யலாம் என்றால் அதற்குச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. பேரப் பிள்ளைகளைக் கொஞ்சும் வாய்ப்பே இல்லாமல் என் மாமனாரும், பல வருடங்கள் கழித்து என் மாமியாரும் பரந்தாமன் அடி சேர்ந்தார்கள்.

சுற்றத்தாரும் உற்றாரும் தந்த அன்பினால் தனிமையே என்ன என்று உணராமல் சென்னையில் வசித்து வந்தோம். என் கணவரும் நானும் ஓய்வு ஊதியத்தைக் கொண்டு வாழ்ந்த நாட்களில் என்னை அவ்வப்போது சிதம்பரம் அழைத்துச் சென்றார் அவர். நான் பிறந்து வளர்ந்த வீட்டில் சுற்றிச் சுற்றி வந்தேன். ஆனால் ஏனோ திருவாதிரை சமயத்தில் மட்டும் செல்லக் கூடி வரவில்லை. என் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக இயற்கை எய்தினர்.

உடல்நலம் சரியில்லாமல் போகவே என் கணவர் மிகவும் சங்கடப்பட்டார். அவருக்குப் பிறகு என்னை யார் கவனித்துக் கொள்வார்கள்? அவரைப் பற்றி நானும் இதே கவலையைத்தான் பட்டேன். எனக்காவது என் தம்பி இருந்தான். அவருக்கோ கூடப்பிறந்தவர் என்று சொல்ல எவரும் இல்லை.

சில மாதங்களுக்கு முன் ''வா, நாம் சிதம்பரத்திற்கே போகலாம். எனக்கு உடம்பு முடியவில்லை. உன்னை உன் தம்பி குடும்பத்துடன் இணைக்க இதுவே வழி..'' என்றார் என் கணவர்.
வீட்டுச் சாமான்களை வண்டியில் ஏற்றி விட்டுக் காரில் சில உறவினர்களோடு சென்று சிதம்பரம் அடைந்தோம். என் தம்பி அவன் வீட்டின் அருகேயே ஒரு வசதியான வீடு ஏற்பாடு செய்து இருந்தான். நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று உணர்ந்த என் கணவர் என்னை விட்டுச் சென்றார். எல்லாம் முடிந்துவிட்டது, ஆறு மாதங்களுக்கு முன்பே.

வருட இறுதியில் வந்தது திருவாதிரைப் பண்டிகை. முதல் நாள் ராத்திரி தூக்கம் பிடிக்கவில்லை எனக்கு. ஆட்டோ ஒன்று சொல்லி வைத்துவிட்டேன் - காலையில் என்னை நடராஜர் கோயிலுக்கு அழைத்துச் செல்ல. இரவே பூஜைக்கு வேண்டிய பழம், வெற்றிலை, பாக்கு, பூ, கற்பூரம், ஊதுபத்தி எல்லாம் கூடையில் எடுத்து வைத்தேன். இந்த முறை ஆருத்ரா தரிசனம் செய்யும் வாய்ப்பை விடுவதாய் இல்லை நான்.

காலையில் எழுந்து நீராடிவிட்டு அவசரம் அவசரமாகக் கிளம்பினேன். கும்பல் கூடுவதற்கு முன்பு சென்றடைய வேண்டும். ஆனால் நான் எதிர்பார்க்காத நிலைமை. நான் பார்க்க ஓடி வந்த ஆருத்ரா தரிசனம் அன்று இல்லாமல் போகும் என்று சிதம்பரத்து மக்களே நினைக்கவில்லை. கோவிலை விட்டுத் தேரில் புறப்பாடு நடத்த வேண்டிய சிவபெருமான் அன்று தன்னை அழைக்க வரவேண்டிய மாமனார் வீட்டார் வரவில்லை என்று உள்ளேயே இருந்துவிட்டார்.

மாமனார் வீட்டார் எப்படி வருவர்? தங்கள் குடும்பத்தில் கணவரைக் காணவில்லை, பிள்ளையைக் காணவில்லை, மனைவியைக் காணவில்லை என்று அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்களே அவர்கள். முன்பொரு காலத்தில் மீனவப் பெண்ணை மணந்து சிவபெருமான் திருவிளையாடல் புரிந்ததனால் மீனவர்கள்தாம் மாமனார் வீட்டார். திருவாதிரை தினத்திற்கு முதல் நாள்தானே கடல் பொங்கி எழுந்து அவர்கள் வாழ்க்கையைச் சின்னா பின்ன மாக்கி விட்டதே! அவர்கள் துயரப்படுகையில் ஏது விழா?

பல வருடங்களுக்குப் பின் ஆருத்ரா தரிசனத்தைக் காணும் ஆசையோடு வந்த நான் மனம் நொந்து வீடு திரும்பினேன். மனம் நொந்ததற்கு ஆருத்ரா தரிசனம் கிடைக்காதது மட்டும் காரணமல்ல.

ஷமிளா
Share: 




© Copyright 2020 Tamilonline