Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2024 Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | குறுநாவல் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
குறுநாவல்
நோவா, என் மகனே!
- கனலி விஜயலட்சுமி|நவம்பர் 2024|
Share:
அவள் அந்த இருபத்தி நான்கு மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடி மேலிருந்து கீழே பார்த்தாள். பூமிக்கு வெளியே இருந்து பூமியைப் பார்ப்பதுபோல், அல்லது விமானத்தின் ஜன்னல் வழியாக நிலத்தைப் பார்ப்பதுபோல் ஒரு பிரமை தோன்றியது. இரவு பத்து மணி இருக்கும். மலைகளோ குன்றுகளோ எதுவும் இல்லாமல் பறந்து விரிந்த பூமியும் குடை பிடித்து ஆகாயமும், கண்ணுக்கெட்டியவரை விண்ணுயர்ந்த கட்டிடங்களும் கண்ணைக் கவரும் மின்விளக்குகளும் அலங்காரங்களும் மின்னல் வேகத்தில் பாயும் ஆயிரக்கணக்கான கார்களும் நிறைந்த இந்த அமெரிக்கா அவளுக்கு ஆச்சரியத்தையோ மகிழ்ச்சியையோ தரவில்லை. மாறாக வேற்றுக் கிரகத்தில் வந்து அகப்பட்டுப் போன ஒரே ஒரு மனுஷியைப் போல் அந்நியத்தன்மையும் விரக்தியும் பிரிவின் ஆற்றாமையும்தான் ஏற்பட்டன. ஏனோ அவளையும் அறியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது. கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள்.

இன்று மாலை அலைபேசியில் அவளது இளையமகன் "அம்மா வேலையும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். இன்னைக்கே புறப்பட்டு வாங்க. எனக்கு உங்களை இப்பவே பாக்கணும்போல இருக்கு" என்று சிறு குழந்தைபோல மனதின் ஆழத்திலிருந்து கூறியபோது, அதைக் கேலி செய்து "நீ பதினெட்டு வயதான பெரிய பையன். இப்படி அம்மா பையனாக இருப்பதை யாராவது கேட்டால் சிரிப்பார்கள்" என்றெல்லாம் சொல்லி ஆறுதல் படுத்தினாலும், இப்போது மனம் வலித்தது.

"நான் மட்டுமல்ல, அண்ணனும் அப்பாவும்கூட இப்படிச் சோகமாகத்தான் இருக்கிறார்கள். உங்களை நாங்கள் ரொம்ப மிஸ் பண்றோம்மா. அப்பா பழைய மாதிரி பேசிச் சிரிக்கவே மாட்டேங்குறாரு. வந்துருங்க அம்மா. நம்மளுக்கு அந்த வேலை எல்லாம் வேண்டாம்" என்று திரும்பத் திரும்ப அவளை மனதை மாற்றி ஊருக்கு வரச் சொல்வதிலேயே குறியாக இருந்தான்.

"எதைச் சாப்பிட்டாலும் நீங்க செஞ்சு தந்ததெல்லாம் ஞாபகம் வருதுமா. ப்ளீஸ்மா" என்று அலைபேசியை வைக்க விடாமல் திரும்பத் திரும்ப அவன் கெஞ்சியபோது, அவனைச் சீண்டுவதற்காக, தான் இங்கு அனைத்து வசதி வாய்ப்புகளோடு இருப்பதாகவும் அதை விட்டுவிட்டு வந்த வேலை முடியாமல் இடையில் அங்கு வரப் போவதில்லை என்றும் சொல்லி அவனை வெறுப்பேற்றி அலைபேசியைத் துண்டித்தாள்.

பேசி முடித்த பிறகும் அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் பிணைந்து ஒரு பெரும் பாம்பைப்போல் வளர்ந்து அவள் கழுத்தைச் சுற்றி நெரிப்பது போல் இருந்தது. அவளையும் அறியாமல் கழுத்தைத் தொட்டுப் பார்த்தாள் உண்மையிலேயே பாம்பு ஏதாவது இருக்கிறதா என்று.

அதிலும் அவன் சொன்ன, தான் பெரியவனாகித் தனிக்குடித்தனம் போய்விட்டாலும்கூட, கொஞ்ச தூரத்திலாவது அவள் இருக்க வேண்டும் என்றும், தனக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஓடி வந்து அவளைப் பார்க்க வேண்டும், அம்மா பைத்தியம் என்று யாராவது சொன்னால் தனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை என்றும் அவன் சொன்ன வார்த்தைகள் காதில் ரீங்கரித்தன.

போதாததற்குப் பெரியவனும் சற்று நேரத்தில் அழைத்து, இன்று அவளைக் குறித்து ஒரு கனவு கண்டதாகவும் அதில் அவள் ஊருக்கு வந்துவிட்டதாகப் பார்த்ததாகவும், சந்தோஷமாக விழித்து எழுந்தபோது அவள் இல்லை என்று தெரிந்து வருந்தியதாகவும் சொல்லி மீண்டும் அவளைச் சங்கடப்படுத்தினான்.

"என்ன ஆனாலும் இன்னொரு வருடத்திற்கு அங்கு வர முடியாது. இப்படித் தினமும் என்னைக் கூப்பிட்டு உணர்வு ரீதியாகத் தொல்லை செய்தால், இனி உங்கள் இருவரிடமும் பேசவே போவதில்லை" என்று பெரியவனிடம் சற்றுக் கறாராகக் கூறி அலைபேசியை வைத்துவிட்டாள்.

இதற்கெல்லாம் காரணம் கடந்த வாரம் எதிர்பாராமல் நடு இரவில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அவர்களிடம் சொன்னதுதான். அப்போதிலிருந்து அவர்கள் பயந்துவிட்டார்கள். அதை அவர்களிடம் சொன்னது தவறாகப் போய்விட்டது என்று இப்போது நினைத்துத் தன்னையே நொந்து கொண்டாள்.

அவள் இருக்கையில் அமர்ந்தபடி, தான் இருந்த வீட்டை நோட்டமிட்டாள். விலை உயர்ந்த சோபா. அரைச்சுவரை மறைக்கும் அளவு பெரிய தொலைக்காட்சிப் பெட்டி, வீடு மொத்தமாகக் குளிரூட்டப்பட்டு இருந்தது. அவளே உள்ளே அமரலாம் போல மிகப்பெரிய குளிர்சாதனப் பெட்டி. பலவகையான அடுப்புகள், அவன்கள். அதிநவீன சமையலறை. தேவையான அனைத்துப் பொருட்களும் இருந்தன. திரைப்படங்களில் காணும் படுக்கையறை போல் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு அலங்காரமாக இருந்தது. குளியலறையில் படுத்துக் கொண்டே குளிக்கும் வசதி. ஆடம்பரமான வீட்டுக்குத் தேவையான எல்லாம் இருந்தன. ஆனால் இந்தப் பொருட்கள் எல்லாம் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.

அந்த வீட்டுக்குள் இருந்தபோது பிராண வாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல்தான் ஏற்பட்டது. கண்ணாடி போட்டு நிரந்தரமாக அடைக்கப்பட்ட ஜன்னல்கள் திறக்கும்படியாக இல்லை. சற்று நேரம் அறைக்குள் அங்கும் இங்கும் நடந்து பார்த்தாள். ஆனாலும் மன உளைச்சல் மாறுவதாக இல்லை. மூச்சு முட்டுவது போல் இருந்தது. சொற்பாம்புகள் கழுத்தை இறுக்கின. அதிலும் சின்னவன் ஏக்கத்திலேயே ரொம்ப இளைச்சுப் போயிட்டான் என்று வேலைக்காரி சொன்னதை நினைத்தபோது வேலையை விட்டுத் திரும்பிப் போய் விடலாமா என்றுகூட நினைத்தாள். பலமுறை ஆழமாக மூச்சை இழுத்து விட்டுப் பார்த்தாள். ஆனால் அவளுக்கு நிம்மதியாக மூச்சுவிட்ட திருப்தி ஏற்படவில்லை. எங்காவது மொட்டை மாடியின் திறந்தவெளியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

நேராக லிஃப்டுக்கு போய் இருபத்தி நான்காவது மாடிக்குப் போகப் பொத்தானை அழுத்தி, அங்கு போய் இறங்கினாள். இதற்கு முன்பு இத்தனை உயரமான கட்டடத்தில் மொட்டை மாடிக்குப் போனதே கிடையாது. அங்கு இறங்கிய போதுதான் தெரிந்தது, அதற்கு மேலே உள்ள மொட்டை மாடிக்குப் போகும் கதவு அடைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்புப் பலகை இருந்தது.

எப்படியாவது மொட்டை மாடிக்குப் போயே ஆக வேண்டும். என்ன செய்வதென்று தெரியவில்லை. மெல்லக் கதவை இழுத்துப் பார்த்தாள். அதற்கு ஒரு சாவியைப் போன்ற அட்டை தேவைப்பட்டது. அந்த அட்டையை உரசினால் அந்தக் கதவு திறக்கும். அது அந்தக் குடியிருப்பின் பாதுகாப்பு அதிகாரியிடமோ அல்லது அலுவலர்களிடமோதான் இருக்க வாய்ப்புள்ளது.

சற்று நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் வராந்தாவில் இருந்த நாற்காலியில் அமர்ந்து யோசித்தாள். இப்போதும் அவளுக்கு மூச்சு முட்டிக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் சிரமப்பட்டு மூச்சை உள்ளே இழுத்து விட்டுக்கொண்டிருந்தாள். மூச்சுத் திணறல் போன்று ஒரு மோசமான அனுபவம் வேறு எதுவும் இருக்க முடியாது. மொட்டை மாடிக்குப் போகாவிட்டால் மூச்சு முட்டிச் செத்துப் போய்விடுவேனோ என்று ஒரு பயம்கூட ஏற்பட்டது.

வழக்கமாக இரவில் மொட்டை மாடியில் உள்ள மிகப்பெரிய தண்ணீர்த் தொட்டியின் குழாய்களை அடைப்பதற்கோ திறப்பதற்கோ போகும் அந்த அதிகாரி மிக இயல்பாக வந்து அந்த அட்டையை உரசிக் கதவைப் படார் என்று இழுத்துத் திறந்தார். கதவுக்குப் பக்கத்தில் இடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த அவள், கண் மூடி விழிப்பதற்குள் ஓடி வந்து கதவு மீண்டும் அடைவதற்கு முன் உள்ளே நுழைந்து விட்டாள். மெல்லப் படிக்கட்டில் ஏறினாள்.

அவள் பூனைபோலப் பெருவிரலை ஊன்றி, சத்தமின்றி அந்த அதிகாரியைப் பின்தொடர்ந்தாள். படிக்கட்டு சற்று இருட்டாக இருந்ததாலும் இதற்கு முன் இப்படி யாரும் அவரைப் பின்தொடர்ந்து வந்த அனுபவம் இல்லாததாலும் அவர் மிக இயல்பாக மேலே போய் அவரது பணிகளில் கவனம் செலுத்தினார்.

அந்த அதிகாரி தண்ணீர்த் தொட்டியின் பின்னால் போன அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவள் மெல்ல எதிர்த் திசையில் ஓடி, அங்கிருந்த ஒரு திட்டின் பின்னால் ஒளிந்து கொண்டாள். சற்று நேரம் எந்தவித அசைவும் இன்றி, மூச்சைக்கூட மிக மெதுவாக விட்டுக்கொண்டு, அதிகாரி போய் விட்டாரா என்று கவனித்தாள்.

அவர் அந்தக் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குத் தண்ணீர் வினியோகம் செய்யும் மொட்டை மாடியின் பகுதி இடத்தை அடைத்துக் கொண்டிருந்த தண்ணீர்த் தொட்டியில் உள்ள தண்ணீரின் அளவைப் பரிசோதித்து, தேவையான தண்ணீர் உள்ளது என்பதை உறுதி செய்து, குழாய்களை அடைத்தார். அவர் ஏதோ ஒரு ஆங்கிலப் பாட்டைப் பாடிய வண்ணம் தனது பணியை முடித்துக் கொண்டு படபடவென்று இறங்கி, கீழே கதவைப் படார் என்று அடைத்து விட்டுச் சென்றுவிட்டார்.

அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. அவள் மறைந்திருந்த இடத்திலிருந்து மெல்ல வெளியே வந்து சுதந்திரமாக ஆகாயத்தையும் பூமியையும் பார்த்தாள். ஒரு நிமிடம் தான் இங்கு வருவதற்குச் செய்த சாகசத்தை நினைத்துத் தன்னையே மெச்சிக்கொண்டாள்.

இந்த வீட்டுக்கு வந்து சில மாதம் கழிந்தும் ஒருநாள்கூட ஏன் இங்கு வந்து பார்க்கத் தோன்றவில்லை என்று யோசித்தாள். அதையெல்லாம் அவள் பொருட்படுத்தவில்லை. சற்று ஆசுவாசமாக மூச்சுவிட முடிந்தது. எதிர்பார்த்ததைவிட மிகவும் குளிராக இருந்தது. குளிர்காற்று சுவாசக் குழாயின் சுவர்களை சிலிர்ப்படையச் செய்து உள்ளே போவதை அவளால் உணர முடிந்தது. குளிருக்கு அணிய ஒரு மேல் கோட்டை எடுத்துக்கொண்டு வராததன் முட்டாள்தனத்தை நினைத்து நொந்து கொண்டாள்.

வேறொரு மனநிலையிலாக இருந்திருந்தால் அவளது மனதில் உள்ள கவிஞி சிலிர்த்தெழுந்து கவிதை மழை பெய்திருப்பாள். ஆனால் இன்று அதை எல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை அவள். சற்றுநேரம் அமைதியாக மொட்டை மாடியின் தரையில் மல்லாந்து படுத்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இதேபோல் ஓர் இரவில் அறிமுகம் இல்லாத நாட்டில் வாழ்வாதாரம் தேடி வந்த ஒரு கவிஞன் தன்னைப் போலவே குளிரில் நடுங்கிக் கொண்டு, ஆகாயத்தை நோக்கி, அவனது ஊரை நோக்கிச் சென்ற நாரையிடம், "நாராய் நாராய் செங்கால் நாராய்" என்று அழைத்து, என் வரவுக்காகக் காத்துக் கண் பூத்து, பசித்திருக்கும் என் ஏழை மனைவியைக் கண்டு, குளிரிலிருந்து தப்பிக்க ஓர் ஆடைகூட இல்லாமல் எனது கையையும் காலையுமே போர்வையாகப் போர்த்திப் பேழைக்குள் ஒடுங்கி இருக்கும் பாம்புபோல் சுருண்டு கிடக்கும் என்னைப் பார்த்ததாகப் போய்க் கூறு எனத் தூதுவிட்ட அந்த வறுமையான பாடகனை ஏனோ அவள் நினைத்துக் கொண்டாள்.

ஏதோ ஒரு வகையில் தானும் அந்தச் சங்கக் கவிஞனைப் போல வாழ்வாதாரம் தேடித்தானே கண்டம் தாண்டி, தொலைதூரத்தில் வந்து, அதேபோல் ஆகாயத்தை நோக்கி இந்தக் கடும் குளிரில் படுத்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தபோது அவளையும் அறியாமல் ஒரு சுய இரக்கம் தோன்றியது. தொண்டைக்குள் ஏதோ ஒன்று அழுத்தியது. ஒருவேளை துக்கமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.

இங்கு தூதுவிட நாரை கொக்குகள்கூட இல்லை. அதற்குப் பதிலாக ஒவ்வொரு நிமிடமும் தலைக்குமேல் பறந்து செல்லும் விமானங்கள்தாம் இருக்கின்றன. ஒருவேளை தான் பாடினால் "விமானமே விமானமே" என்றுதான் பாட வேண்டும் என்று நினைத்தபோது வருத்தத்தையும் மீறிச் சிரிப்பு வந்தது.

மெதுவாக எழுந்து நீண்டு கிடந்த மொட்டை மாடியின் ஒரு மூலைக்குச் சென்று கீழே பார்த்தாள். போக்குவரத்து எறும்புபோல ஊர்ந்து கொண்டிருந்தது. மரங்களைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. என்னதான் மனதை ஒருநிலைப்படுத்தி இந்தக் காட்சிகளில் கவனம் செலுத்த முயற்சித்தாலும் தன் மகன் கூறியவற்றையே மீண்டும் மீண்டும் மனது அசைபோட்டு சஞ்சலப்பட்டது. இளையவனை அதிகச் செல்லம் கொடுத்துக் கெடுத்து விட்டேனோ என்று கேட்டுக் கொண்டாள். குட்டி போட்ட பூனைபோல் தன் பின்னால் எப்போதும் சுற்றிக்கொண்டு ஏதாவது வம்பு இழுக்கும் இரண்டு மகன்களையும் நினைத்தபோது மீண்டும் தொண்டை அடைத்தது.

ஏதேச்சையாகத் திரும்பிப் பின்னால் பார்த்தாள் சற்று தூரத்தில் யாரோ நிற்பது தெரிந்தது. ஒரு வினாடி அவளுக்குப் பகீர் என்றது. அங்கு விளக்கு இல்லாததாலும் நிலா வெளிச்சத்தில் சரியாக உருவம் தெரியாததாலும் அது ஆணா பெண்ணா என்றுகூட ஊகிக்க முடியவில்லை. மட்டுமல்ல, அமெரிக்காவில் ஆடை ஆபரணங்களை வைத்தோ, முடியலங்காரத்தை வைத்தோ ஒருவரது பாலினம் எதுவென்று கூறமுடியாது. ஏன் அவரது வயதைக்கூட ஊகிக்க முடியாது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் அந்த மிகப்பெரிய அபார்ட்மென்ட்டில் வந்தது யாரென்று அவளால் அடையாளம் தெரிந்து கொள்ள முடியவில்லை.

நானே இப்படித் திருட்டுத்தனமாக வந்திருக்கிறேன், இந்த நபர் எப்படி இங்கு வந்தார் என்று தீவிரமாக யோசித்தாள். பொதுவாக இங்கு யாரும் யாரோடும் பேசிக்கொள்ளாத இந்தச் சூழலில் வலிந்து போய் என்ன பேசுவது என்று நினைத்து அவளும் திரும்பிக் கொண்டாள். ஏதோ ஒரு வகையில் இரவு பதினோரு மணிக்குத் தனியாக நிற்பதைவிட அறிமுகம் இல்லாத நபராக இருந்தாலும் அங்கு ஒருவர் இருக்கிறார் என்பது மனதிற்கு ஆறுதலாகவே இருந்தது.

திடீரென்று அவளது உடலுக்குள் ஏதோ ஒன்று புகுந்ததுபோல் உணர்ந்தாள். தலையை உலுப்பி என்னவாக இருக்கும் என்று யோசித்தாள். பிரமையோ என்று நினைத்தாள். சற்று நேரத்தில் தன் தலையில் இருந்து ஏதோ ஒரு பகுதி உருகி வெளியே ஒழுகிப் போவது போல் தோன்றியது. உடலுக்குள் வேறொரு மனித உடல் புகுந்தது போன்ற வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. மெல்லத் திரும்பிப் பார்த்தாள். சற்றுமுன் அவள் பார்த்த அந்த நபர் அங்கு இல்லை.

ஒருவேளை அது பேயாக இருக்குமோ? அந்தப் பேய்தான் தனது உடலுக்குள் புகுந்து விட்டதா? அவளது மூளை உருகிக் காது வழியாக ஒழுகி வெளியே போவது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது. கையெடுத்து இரண்டு காதுகளையும் அடைத்துக் கொண்டாள். வேகமாகத் தலையை உலுக்கிப் பார்த்தாள். ஒன்றும் உதவவில்லை. மூச்சு விடுவதற்குச் சிரமமாக இருக்கவே, ஒரு திறந்த வெளிக்கு வர நினைத்துத்தான் சாகசம் எல்லாம் செய்து மொட்டை மாடிக்கு வந்தாள். ஆனால் இப்போது ஏதாவது ஒரு வங்குக்குள் போய் ஒளிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது.

திரும்பி நடக்க முயன்றாள். அவளது உடம்பு இத்தனை பாரமாக எப்படி மாறியது? ஒரு காலைக்கூட எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியே அந்தச் சுவரைப் பிடித்துக்கொண்டு மெல்ல அமர்ந்துவிட்டாள்.

எப்படி உடம்பு இவ்வளவு பாரமானது? தனக்குள் ஏதோ மாற்றம் நிகழ்வதை அவள் உணர்ந்தாள் ஆனால் அதற்கு முன்பு இப்படியான ஒரு அனுபவம் இல்லாததால் என்ன நடக்கிறது என்று உறுதியாக அவளால் கணிக்க முடியவில்லை. அவளை யாரோ இறுக்கமாக அணைத்துக் கொண்டதுபோல, உடலோடு ஒட்டி இருப்பதுபோல, ஒரு பெட்டியை அதைவிடச் சற்றுப் பெரிய பெட்டிக்குள் இட்டு மூடுவதுபோல, இவள் உடலுக்குள் அதைவிடச் சற்று சிறிய உடலை இட்டு அடைத்தது போல... எப்படி இந்த உணர்வைச் சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் என்னவோ தனது உடலுக்குள் நடக்கிறது என்பதை மட்டும் உணர முடிகிறது.

வாய்விட்டுக் கத்த நினைக்கிறாள். ஆனால் யாரும் வரப்போவதில்லை. நாளை காலையில் பாதுகாப்பு அதிகாரி வந்தால்தான் உண்டு. இவள் போடும் சத்தம் நிச்சயமாகக் கண்ணாடி வைத்து அடைத்த கீழ்மாடிகளுக்குப் போய்ச் சேராது. இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே!



இல்லை... குழந்தைகளைப் பற்றி யோசித்துக் கொண்டு இருந்த மன உளைச்சலின் காரணமாக இப்படி ஏதோ தோன்றியிருக்கலாம். அடுத்த வினாடியே அதற்கு எதிரிடையாக மனது 'இல்லை... அது அப்படி அல்ல' என்பதை நிரூபிப்பதற்குக் காரணங்களைக் கொண்டு வந்து கொண்டிருந்தது.

இப்படி இருந்தால் சரியாகாது. எப்படியாவது எழுந்து மெல்லக் கீழே இறங்கிப் போகவேண்டும் என்று அனைத்து பலத்தையும் ஒன்றிணைத்து மெல்லச் சுவரைப் பிடித்தபடி எழுந்தாள். கதவை நோக்கி இரண்டடி வைத்திருப்பாள். தன் பாரத்தைத் தூக்கிக்கொண்டு அவளால் நடக்க இயலவில்லை. ஆகாயம் பூமி எல்லாம் கரகரவென்று சுற்றின. அப்படியே கவிழ்ந்து விழுந்தாள்.

விழுந்த வேகத்தில் முன்நெற்றி தரையில் இடித்துக் காயம் ஆனது போன்ற உணர்வு ஏற்பட்டது. திடீரென்று அவளது உடல் அந்த வித்தியாசமான உணர்விலிருந்து விடுபட்டு ஏதோ ஒன்று அவளது பிறப்புறுப்பு வழியாக நழுவி வெளியே போனது போன்ற உணர்வு தோன்றியது.

தான் நொந்து பெற்ற முதல் குழந்தை பிறந்தபோது ஏற்பட்ட அதே அனுபவம். அதே உணர்வு மார்பின் காம்புகள்கூடத் துடித்தன. உண்மையிலேயே தனக்குக் குழந்தை ஏதாவது பிறந்து விட்டதா? அவசரமாக அவள் தனது உள்ளாடையை நீக்கி பிறப்புறுப்புப் பகுதியைத் தொட்டுப் பார்த்தாள்.

இல்லை. அப்படி எதுவும் இல்லை. அது வெறும் பிரமையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் எப்படி விழித்திருக்கும்போதே ஒரு கனவு வர முடியும்? இல்லை, இது கனவு இல்லை. இதை நான் உணர்ந்தேன். அது எப்படிப் பொய்யாக முடியும்?

என்னைச் சுற்றி என்ன நடக்கிறது. நான் இந்த உணர்வுகளைச் சொன்னால் கேட்பவர்கள் சிரிப்பார்கள். குழந்தை பிறந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என்றும் பால் சுரந்தது போன்ற எண்ணம் தோன்றியது என்றும் கூறினால் சிரிக்காமல் என்ன செய்வார்கள்! ஆனால் அது பொய்யல்ல நூறு சதவிகிதம் உண்மை. தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டாள்.

நெற்றியில் உறைந்த காயத்தில் லேசாகக் கனிந்து கொண்டிருந்த ரத்தத்துளி ஒன்று திரண்டு மெல்லக் கீழ்நோக்கிப் பயணத்தைத் தொடங்கி மூக்குப் பாலம் வழியாக இறங்கி, அவளது மூக்கின் நுனியில் ஒரு பெரிய ரத்தத்துளியாகத் திரண்டு கீழே விழவா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது.

அவள் அதை வலது கைச் சுண்டு விரலில் எடுத்துச் சற்று நேரம் இருட்டில் பார்த்துவிட்டு சுண்டித் தெறித்தாள். மெல்லத் திரும்பி அங்கு நின்றிருந்த நபர் இருக்கிறாரா என்று பார்க்க முயன்றாள். இல்லை அந்த நபர் இப்போது இல்லை. எப்படி திடீரென்று தோன்றி திடீரென்று மாயமாக முடியும்? யாராக இருக்கும்? ஒருவேளை கற்பனையாக இருக்கலாம்.

மெல்ல எழுந்து எப்படியாவது தனது அபார்ட்மென்ட்டுக்குப் போய்விட உறுதி செய்துகொண்டு இரண்டு கையையும் நிலத்தில் ஊன்றி மெல்ல எழுந்திருக்க முயன்றாள். உடல் பஞ்சு போலவும் தலைமட்டும் மிகப்பெரிய பாறாங்கல் போலவும் கனத்தது. மீண்டும் ஒருமுறை தலை சுற்றிக் கீழே விழுந்தாள். இந்த முறை வீழ்ச்சி சற்று கடினமானதாக இருந்தது. அந்த அதிர்ச்சியில் அவளது நினைவு தப்பியது.

மொட்டை மாடியில் அனாதையாகக் கிடக்கும் ஒரு பெண் உடலைக் கண்ட அதிகாரி அதிர்ந்து போனார். ஒருவேளை தற்கொலையோ என்று நினைத்தார். இங்கு அது அடிக்கடி நடப்பதுதான். ஓடிவந்து மூக்கில் கை வைத்துப் பார்த்த போது சீராக மூச்சு போய் வருவதைக் கவனித்த பிறகுதான் அவருக்கு நிம்மதியானது. உடனே 911ஐ அழைத்து அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் கொண்டு வரும்படிக் கூறிவிட்டு, கீழே ஃப்ரண்ட் டெஸ்க்கில் உள்ள நபர்களுக்குச் செய்தி சொன்னார்.

சற்று நேரத்தில் அந்த மாடி ஆட்களின் சலசலப்பில் நிறைந்து இருந்தது. "ஹலோ வேக் அப். ப்ரொஃபசர் வேக் அப். கமான் ப்ரொஃபசர்" என்று சற்று அக்கறையோடு யாரோ கூறுவது கேட்டது. எழுந்து பார்த்தபோது அவளைச் சுற்றி நிறையப்பேர் நின்று இருந்தது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. எப்படி இவர்கள் எல்லாம் இங்கு வந்தார்கள்? பிறகுதான் கவனித்தாள் இப்போது காலை நேரமாகி சூரியன் முகத்தில் அடித்துக் கொண்டிருப்பதை.

எதைச் சொன்னாலும் யாரும் நம்பப் போவதில்லை என்பதை உணர்ந்து அவள் "சும்மா மொட்டை மாடி பார்க்க வந்தேன்" என்று மட்டும் கூறினாள்.

"பரவாயில்லை இனிமேல் இப்படி வராதீர்கள். இது தடை செய்யப்பட்ட பகுதி என்று எழுதி இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று அன்போடு விளக்கினார் அந்த அதிகாரி.

தவறு செய்தவர்களை இப்படிக்கூட நடத்த முடியுமா ஓர் அதிகாரியால் என்று ஆச்சரியப்பட்டாள். ஒருவேளை அமெரிக்காவில் இதுதான் முறையாக இருக்குமோ? எது எப்படியாக இருந்தாலும், தடை விதிக்கப்பட்ட இடத்தைக் கவனிக்காமல் அத்துமீறி மொட்டை மாடிக்கு வந்ததற்குத் தண்டனை ஒன்றும் தராமல் விட்டார்களே, அந்த அளவு மகிழ்ச்சி என்று நினைத்துக் கொண்டாள்.

★★★★★


அந்த வித்தியாசமான வடிவம் கொண்ட விண்கலத்தினுள் படுக்கை போல் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அவன் படுக்க வைக்கப்பட்டு இருந்தான். அவனுடைய தலையில் சிறிதும் பெரிதுமான பலவகை மின் இணைப்புகள் தொடங்கி, அவை ஒரு பெரிய கணினியோடு இணைக்கப்பட்டிருந்தன.

அவனது உடல் மனித உடல்போல இருப்பினும் தலை கட்டெறும்பின் தலைபோல வித்தியாசமாக இருந்தது. எறும்புக்கு இருப்பதுபோல வாயின் இரு பக்கங்களிலும் இரண்டு சிறிய கொம்பு போன்ற வடிவம் காணப்பட்டது. வாய் மிக அகன்று கண்கள் இரண்டும் வெளியே மின்விளக்குகளை போலத் தள்ளி நின்றன. வளைந்த மூக்கு. காதுகள் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு ஓட்டைகள் மட்டும் காணப்பட்டன. மனிதர்களைப் போலவே வலுவான கைகளும் கால்களும் இருந்தன.

திடீரென்று பார்த்தால் மனிதராகத் தோன்றினாலும் உற்றுப் பார்க்கும்போது மனித இனம் அல்ல இது, வேறெதுவோ என்று தோன்றும்படியான வடிவம் அது. அவனது இருக்கைக்குச் சற்றுத் தள்ளி வேறு ஒரு இருக்கையில் வேறொருவன் கிடத்தப்பட்டு அவன் தலையிலும் இதுபோன்ற மின் இணைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன.

கிடத்தப்பட்டிருந்த அந்த நபர்களைவிடச் சற்று வயதில் முதிர்ந்தவர் என்று தோன்றும்படியான ஒருவர் உள்ளே வந்து கரகரப்பான குரலில் அவர்களது மொழியில் "இன்று என்ன மாதிரியான தகவல்கள், தரவுகள் சேகரித்து வந்தீர்கள்? நோவா, நீ முதலில் சொல்" என்று கேட்டார்.

"நான் இன்று சந்தித்தது ஓர் ஆசிரியரை என்று நினைக்கிறேன். அவரது உடலில் புகுந்து அவருடைய நினைவுத் தரவகத்திலிருந்து அவருக்கே தெரியாமல் தரவுகளைப் பதிவிறக்கம் செய்து கொண்டு வந்தேன். அது பெரும்பாலும் இலக்கியங்களாகவும், அவர்கள் நாட்டின் சட்டங்களாகவும், தத்துவங்களாகவும், பழங்குடிகள் வாழ்வியல் சார்ந்த செய்திகளாகவும் இருக்கின்றன" என்றான்.

"பழங்குடிகளா? இங்கு காணும் மனிதர்களே பழங்குடிகள்தானே, அவர்களுக்குள் என்ன வித்தியாசம்?" என்றார் அவர் புரியாமல்.

"இல்லை சனோ. இந்த பூமியில் வாழும் மனிதர்கள் அப்படித்தான். ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துத் தாங்கள் பிறரைவிடப் பெரியவர்கள், சிறந்தவர்கள், நாகரீகமானவர்கள், அழகானவர்கள் என்றெல்லாம் சொல்லி ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொள்வார்கள். இது அவர்களின் வழக்கம். கடந்த பத்து நாட்களில் பூமியின் பல இடங்களில் நான் சேகரித்த தரவுகளில் இருந்து இதை நான் புரிந்து கொண்டேன். இந்த ஒரு குறிப்பிட்ட தரவை நாம் அழித்து விட்டுப் பிற பயனுள்ள தரவுகளை நமது கிரகத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இது போன்றவற்றைக் கொண்டு செல்லக்கூடாது" என்றான் நோவா உறுதியாக.

"இந்த ஆசிரியரிடமிருந்து நீ பதிவிறக்கம் செய்த இலக்கியத்தரவுகள் நமக்குப் பயன்படும் என்று நினைக்கிறாயா? அவை வெறும் கற்பனை சார்ந்தவை அல்லவா?"

"இல்லை சனோ. இலக்கியம் கற்பனை சார்ந்தது மட்டுமல்ல, அது ஒரு செவ்விய சமூகத்துக்கான ஏக்கமும்கூட. எனவே அதிலிருந்து நிறையச் செய்திகள் நமக்குப் பயன்படும். உயரிய ஒரு சமூகத்தை அமைப்பது குறித்து கனவு காணும் நமக்கு அவை உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. ஐம்பதுக்கு மேற்பட்ட நபர்களிடமிருந்து நான் சேகரித்த தரவுகளைவிட இந்தத் தரவுகள் மிகவும் பயனுடையதாக இருப்பதை நான் உணர்கிறேன். இன்னும் ஒன்று சொல்லவேண்டும். சரி, வேண்டாம். அது அவ்வளவு முக்கியமானது அல்ல" என்று எதையோ சொல்ல வந்து சொல்லாமல் பகுதியிலேயே முடித்தான்.

"என்ன நோவா ஏதோ சொல்ல வந்து, அதை ஏன் பகுதியிலேயே நிறுத்தி விட்டாய்?" சனோ கேட்டார்.

"இல்லை சனோ. எனக்கு அறிவு சார்ந்த தரவுகள் அல்லாமல் சில உணர்வு சார்ந்த தரவுகளும் அவரிடம் இருந்து பதிவிறக்கம் ஆகிவிட்டன. பிற தரவுகளைக் கணினிக்கு என்னிடமிருந்து பதிவிறக்கம் செய்து மாற்றுவதுபோல அந்த உணர்வு சார்ந்த தரவுகளை என்னால் நீக்க இயலவில்லை. அவை எனக்கு ஒரு வித்தியாசமான உணர்வைத் தருகின்றன."

"நோவா, நீ சொல்வது எனக்குப் புரியவில்லை. என்ன வகையான உணர்வு என்று புரியும்படி விளக்கமாகச் சொல்" என்றார் சனோ.

நான் பிறந்து சில நாட்கள் மட்டுமே தாயிடம் இருந்தபோது ஏற்பட்ட ஒரு வகையான அந்த உணர்வு எனக்கு இப்போது மீண்டும் தோன்றுகிறது. நமது கிரகத்தில் குழந்தை பிறந்து சில நாட்கள்வரை தாயிடமிருந்து குழந்தை பிரிந்து சென்றுவிடும். பிறகு அந்தத் தாய் யார் என்பதைக்கூட மறந்து விடுவது வழக்கம். ஆனால் எனக்கு இப்போது மீண்டும் பிறந்தது போன்ற உணர்வும், என் தாயைப் பார்க்க வேண்டும் என்ற உத்வேகமும் ஏற்படுகின்றன. அந்த உணர்வில் இருந்து என்னால் விடுபட முடியவில்லை. அதைத்தான் நான் கூறினேன்."

"அது எப்படிச் சாத்தியமாகும். குழந்தை பிறந்து சில நாட்களுக்குள் தன்னிச்சையாக தனது வாழ்வைத் தொடங்கிவிடும் சூழலில் தாய் அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? அவர்களுக்குள் அப்படி என்ன உறவு ஏற்பட்டு விட முடியும்?"

"நான் தரவு எடுத்த அந்த ஆசிரியர் நான் தரவு பதிவிறக்கம் செய்யும்போது அவரது குழந்தைகளை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார் என்று தோன்றுகிறது. எனவே தரவுகளோடு அந்த உணர்வுகளும் பதிவிறக்கம் ஆகிவிட்டன என்று நினைக்கிறேன். அதுதான் என்னால் அந்த ஒரு உணர்விலிருந்து வெளியில் வர முடியவில்லை. அவற்றைக் கணினிக்கு அனுப்பவும் முடியவில்லை.

சனோ.... நாளை நான் மீண்டும் அவரைப் பார்க்கப் போகிறேன். என்னால் இந்த உணர்வில் இருந்து வெளிவர முடியவில்லை அது என்னை என்னவோ செய்கிறது."

"உன் தாயை உனக்கு நினைவு இருக்கிறதா?"

"இல்லை சனோ... எனக்கு என் தாய் என்று நினைக்கும்போது அந்த ஆசிரியர்தான் நினைவுக்கு வருகிறார். உடனடியாக அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதனால்தான் நான் அவரைப் பார்க்க வேண்டும் என்று கூறினேன்."

"இந்த உணர்வு சார்ந்த விஷயங்கள் நமக்குப் பயன்படுமா? அதீதமான வசதி வாய்ப்புகள் இருப்பினும் நல்லதொரு சமூகத்தைக் கட்டமைக்கும் தரவுகளுக்காகத்தானே நாம் இங்கு வந்து, மனிதர்களிடமிருந்து அவர்களுக்கே தெரியாமல் தரவுகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட தரவுகளுக்கு இந்த உணர்வுகள் ஏதாவது வகையில் பயனளிக்கும் என்று உனக்குத் தோன்றுகிறதா?"

"தாய்மை என்ற உணர்வு இந்த மனிதர்களிடம் அதிகப்படியாக இருக்கிறது. அனைத்து வேற்றுமைகளையும் மறந்து மனிதர்களை ஒன்றிணைக்கும் ஓர் உணர்வு இது என்பதை என்னால் உணர முடிகிறது. ஒரு குழந்தை பிறந்து இறக்கும்வரைகூட அந்தக் குழந்தையின் தாய் தன் குழந்தைமீது அன்பாகவும் பாசமாகவும் அக்கறையாகவும் நடந்து கொள்கிறார். இது நமக்கு மிகவும் புதியதொரு அனுபவம்.

அந்தப் பாசத்தையும் அக்கறையையும் ஒவ்வோர் அணுவிலும் என்னால் உணரமுடிகிறது. இதை நாம் நமது கிரகத்திற்கு நிச்சயமாகக் கொண்டு போய் உணர வைக்க வேண்டும். நான் இப்போது அனுபவிக்கும் இந்த உணர்வு அதிர்வலைகளை நமது சக விரோன்களும் அனுபவித்து அறிய வேண்டும்."

"இந்தத் தாய்மை உணர்வை உன்னால் வேறொரு விரோனுக்கோ, கணினிக்கோ பதிவேற்றம் செய்ய முடியுமா?"

"இல்லை அதைத்தான் நான் காலையிலிருந்து முயன்று கொண்டிருக்கிறேன். தரவுகளைப் பதிவேற்றம் செய்வதுபோல என்னிடமிருந்து இந்த உணர்வுகளைக் கடத்திவிட இயலவில்லை. ஆனால் இது நமது கிரகத்திற்குக் கொண்டு போகக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை."

"அப்படியானால் ஒன்று செய். நீ அந்த ஆசிரியரை இங்கு கொண்டு வந்துவிடு. நாம் நாளை முதல்கட்டப் பயணத்தை முடித்துக் கொண்டு நமது கிரகத்திற்குப் பயணம் தொடங்குகிறோம் அல்லவா? அப்போது அவரையும் நம்மோடு அழைத்துச் சென்றுவிடுவோம். அவரிடமிருந்து பிற விரோன்கள் இதை நேரடியாகவே உணர்ந்து கொள்ளட்டும்" என்றார்.

"சனோ... இது... இது மிக நல்ல முடிவு. நான் இன்று மாலை எப்படியாவது அவரைப் போய்ப் பார்த்து அங்கிருந்து அவரைக் கொண்டு வந்து விடுகிறேன். அவரைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் எனக்கு ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இனிமேல் அவர் நம்முடன்தான் இருக்கப் போகிறார் என்று கேட்டபோது எனக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. நான் உடனே புறப்படுகிறேன்" என்று ஆர்வத்தோடு கூறினான்.

நோவாவிற்கு இதுவரை அவனது வாழ்வில் அனுபவித்தறியாத ஒரு மகிழ்ச்சியும் சிறு குழந்தை போன்றதொரு குதூகலமும் தோன்றியது. அவசரமாகத் தன்மீது பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்புகளைப் பறித்தெறிந்து விட்டு அவள் தங்கியிருந்த குடியிருப்பிற்குக் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து சேர்ந்தான்.

★★★★★


அவன் வந்தது ஒரு மாலை மயங்கும் நேரம். அவள் குடியிருந்த அந்தக் கட்டடம் மொத்தமாகக் குளிரூட்டப்பட்ட கட்டடமாக இருந்ததால் எந்த ஜன்னலும் திறக்க முடியாதபடிக் கண்ணாடியிட்டு மூடப்பட்டிருந்தது. ஒவ்வொரு அறை ஜன்னல் கண்ணாடி வழியாகவும் அவளைத் தேடிக்கொண்டே ஏறக்குறைய ஐநூறுக்கும் மேற்பட்ட அறைகளைப் பார்த்துவிட்டான். கண்டுபிடிக்க முடியவே இல்லை.

அவன் பார்த்து வந்த வரிசையில் இறுதி அறையை அவன் சற்று நிராசையோடு எட்டிப் பார்த்தபோது அங்கு அவள் மிகச் சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்த்தான். என்னவென்று சொல்லத் தெரியாத ஆனந்தம் அவனைத் தொற்றிக் கொண்டது. ஓடிப்போய் அப்படியே அவளைக் கட்டிக்கொள்ள வேண்டும்போல் தோன்றியது. ஆனால் அவனால் காற்றுக்கூடப் போக முடியாத அந்த அறைக்குள் போக இயலவில்லை.

அன்று வந்ததுபோல் மொட்டை மாடிக்கு அவள் வந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் எண்ணினான். அவள் நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்குப் பெரிய ஒரு பேண்டேஜ் ஒட்டப்பட்டு இருந்தது. இவ்வளவு சோகமாக அமர்ந்திருக்கும் அவள் நிச்சயமாகத் தன்னிச்சையாக மொட்டை மாடிக்கு வரப்போவதில்லை என்பதை உணர்ந்தான். அவள் இவன் இருக்கும் ஜன்னலைப் பார்த்தால் அவளது கண் வழியாகத் தனது எண்ணத்தை அவளுக்குள் திணித்து விடலாம் என்று பலமுறை முயன்றான். ஆனால் அவள் ஜன்னலைப் பார்ப்பதாக இல்லை.

ஜன்னல் அருகில் இருந்த அந்த மரக்கிளையில் இருந்து ஒரு சிறு கிளையை ஒடித்து ஜன்னலில் அடித்தான். அவன் உருவமற்று இருந்தாலும் அந்த இலை தன்னிச்சையாக ஜன்னலை அடிப்பதன் சத்தம் கேட்டு எதேச்சயாக அவள் அங்கு திரும்பிப் பார்த்தாள். ஓர் ஒடிந்த கிளை மட்டும் எப்படி ஜன்னலை வந்து தட்டிக் கொண்டிருக்கிறது என்று அவள் ஆச்சரியத்தோடு கண்ணைத் திறந்து உன்னிப்பாகப் பார்த்தாள்.

அப்போது அவளுக்குத் திடீரென்று மொட்டை மாடிக்குப் போகவேண்டும் என்ற உள்ளுணர்வு ஏற்பட்டது. அதன்கூடவே அந்த அதிகாரி சொன்ன எச்சரிக்கையும் ஞாபகம் வந்தது. நிச்சயமாக மொட்டை மாடிக்குப் போகமுடியாது என்று மனது கூறினும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்து விடுவோம் என்ற எண்ணமும் ஏற்பட்டது.

விறுவிறு என்று புறப்பட்டு லிஃப்டுக்குப் போய் இருபத்திநான்காவது மாடிக்குப் போவதற்கான பொத்தானை அமர்த்தினாள். அங்கு போய் முந்தைய நாள் அமர்ந்திருந்த அதே இருக்கையில் அமர்ந்து கொண்டாள். இரவு மணி பத்து ஆவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. சற்று நேரத்தில் அந்த அதிகாரி வருவார் என்று காத்திருந்தாள். எக்காரணத்தைக் கொண்டும் அவர் கண்ணில் படக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தாள்.

எதிர்பார்த்தது போலவே அவர் வந்து மாடிக்குப் போகும் கதவைப் பாதுகாப்பு அட்டை வைத்து உரசித் திறந்தார். அவர் மேலே போகக் கதவினுள் நுழைந்த உடனேயே அவள் ஓடிவந்து ஒரு காகித அட்டையைக் கதவு முற்றிலும் அடைக்காமல் இருக்க அடை வைத்தாள். உள்ளிருந்து பார்க்கும் போது கதவு முற்றிலும் அடைத்துவிட்டது போன்று தோன்றும். ஆனால் பூட்டு விழவில்லை என்பது மிக அருகில் இருந்தால் மட்டுமே உணரமுடியும். மேலே போன அதிகாரி கதவு அடைத்து விட்டதா என்று உறுதி செய்யத் திரும்பிப் பார்த்தார். நேற்றைய அனுபவம் அவர் மனதில் இருந்தது. கதவு அடைந்து விட்டதைப் பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டு தண்ணீர்த் தொட்டி இருக்கும் இடத்தை நோக்கி நடந்தார்.

அதிகாரி போய்விட்டதை உறுதி செய்துவிட்டு அவள் மெல்லக் கதவைத் தள்ளித் திறந்து வழக்கம்போல் மிக மெதுவாகப் போய் நேற்று அமர்ந்திருந்த இடத்தில் திட்டுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டாள். சற்று நேரம் கழித்து அதிகாரி வேலைகளை முடித்துக் கொண்டு கீழே போய்க் கதவடைக்கும் சத்தம் கேட்டது. ஒரு நிமிடம் அவளுக்கு அது நிம்மதியாக இருந்தாலும் அடுத்த நிமிடம் எதற்காக இத்தனை சாகசங்கள் செய்து இங்கு வந்தோம் என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

எதிர்பாராமல் திடீரென்று அவளுடைய மகன்கள் அவளைச் சுற்றிலும் வரும்போது ஏற்படும் ஓர் உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. சுற்றுமுற்றும் பார்த்தாள். யாரும் இருப்பது போல் தோன்றவில்லை. இந்த மொட்டை மாடியில் ஏதோ ஒரு அதீதமான சக்தி இருப்பதாக அவளுக்குப் பட்டது. இங்கு இருப்பது சரியல்ல என்று அவள் உள்மனதிற்கு ஓர் எச்சரிக்கை தோன்றியது. சரி போய்விடலாம் என்று அவள் எழுந்தபோது, "வேண்டாம், நீங்கள் போகவேண்டாம் இங்கேயே இருங்கள்"

என்று கரகரப்பான ஒரு குரல் கேட்டது.

அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. சுற்றிலும் பார்த்தாள், யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. உடலின் ஒவ்வோர் அணுவிலும் பயம் ஆதிக்கம் செலுத்த, மயிர்க் கூச்செறிந்தது.

"இங்கு யார் என் அருகில் இருப்பது? தயவுசெய்து என்னைப் பயப்படுத்த வேண்டாம்.வெளியே வாருங்கள்" என்று கெஞ்சுவதுபோல் கூறினாள்.

அரை இருட்டில் அவள்முன் நோவா தோன்றினான். அவள் வாய்விட்டுக் கத்தத் தொடங்கினாள். நோவா ஓடிவந்து அவள் வாயை அடைத்து,

"நான் உங்களை ஒன்றும் செய்யப்போவதில்லை. தயவுசெய்து பயப்பட வேண்டாம். உங்களைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. அதனால்தான் இங்கு வந்தேன். நிச்சயமாக நான் உங்களை ஒன்றும் செய்யமாட்டேன்," என்று மிக அமைதியாகத் தமிழில் பேசினான்.

வித்தியாசமாகத் தெரிந்த அவன் தலையையும் முகத்தையும் பார்த்தபோது ஹேலோவீன் கொண்டாட்டக் காலத்தில் வரும் குழந்தைகள் வைத்திருப்பது போன்ற ஏதோ ஒரு முகமூடியை அணிந்த இளைஞன் தன் முன்னால் நிற்பதுபோல அவளுக்குத் தோன்றியது.

"தயவுசெய்து உன் முகமூடியைக் கழட்டு. நான் உன் முகத்தைப் பார்க்க வேண்டும். யார் நீ? எப்படி இங்கு வந்தாய்? என்னை எப்படி உனக்குத் தெரியும்? நேற்று இரவு இங்கு வந்தது நீதானா? என்னை எதற்குப் பார்க்க வேண்டும்? நீ யார்?" எனக் கேள்விக்கு மேல் கேள்வியாக அடுக்கிக்கொண்டே போனாள்.

"நான் ஒரு விரோன். நான் எந்த முகமூடியும் போடவில்லை. இதுதான் என் இயல்பான முகம். என் பெயர் நோவா. நாங்கள் வெரோனிகா என்ற கிரகத்திலிருந்து வருகிறோம். நாங்கள் எங்கள் சமூகத்தைச் சீரிய முறையில் கட்டமைக்கத் தேவையான தரவுகளைத் தேடி விண்கலத்தில் இந்தப் பிரபஞ்சத்தைச் சுற்றிக் கொண்டிருந்தபோது ஏதேச்சையாக இந்த பூமியையும் இங்கு வாழும் மனிதர்களையும் பார்த்தோம். அவர்களிடமிருந்து அவர்களை அறியாமலேயே தரவுகளைத் தரவிறக்கம் செய்து எங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்ள முயற்சி செய்தோம். அதனால் மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படப் போவதில்லை.

"அப்படி நான் நேற்று வந்தபோதுதான் உங்களைப் பார்த்தேன். உங்களிடமிருந்து தரவுகளை நான் பதிவிறக்கம் செய்தபோது சில உணர்வுகளையும் சேர்த்துப் பதிவிறக்கம் செய்துவிட்டேன். நான் பதிவிறக்கம் செய்து கொண்டிருந்தபோது நீங்கள் உங்கள் மகன்களை நினைத்து வருந்திக் கொண்டிருந்த காரணத்தால் அதுவும் சேர்ந்து என்னிடம் வந்துவிட்டது. இப்போது உங்களைப் பார்க்கும்போது என் தாயைப் போன்ற உணர்வுதான் எனக்கு ஏற்படுகிறது. என்னால் உங்களைப் பிரிந்து இருக்க முடியவில்லை. தயவுசெய்து என்னுடன் வந்துவிடுங்கள். நீங்கள் ஆசைப்படும் அனைத்து வசதிகளையும் நான் செய்து தருகிறேன்," என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

அவள் ஒருமுறை தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். வேற்றுக் கிரக மனிதர்கள் குறித்த பலவகையான வேடிக்கைக் கதைகளை அவள் படித்திருக்கிறாள். ஆனால் இப்படி ஒரு விரோன் தன் முன்னால் வந்து தன்னைத் தாய் என்று கூறும் அளவுக்கு நடக்குமா என்று அவளே தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

"நீ என்ன பேசுகிறாய் என்று எனக்குப் புரியவில்லை? இதெல்லாம் ஒரு கனவுபோல் எனக்குத் தெரிகிறது. என்னை ஏமாற்றுவதற்கு யாராவது முயற்சி செய்கிறார்களா? அல்லது, நான் என் குடும்பத்தைப் பிரிந்து இருக்கும் மன உளைச்சலால் மனதின் சமநிலை பிறழ்ந்து விட்டதா? நோவா, நீ என்ன உளறுகிறாய்? நான் எப்படி உன் தாயாக முடியும்? நீ வேற்றுக் கிரகத்தில் பிறந்து வளர்ந்தவன் என்கிறாய். மனிதப் பிறவியான என்னோடு எப்படி உனக்குத் தாய் அன்பு தோன்றும்?"

"எங்கள் கிரகத்தில் எல்லா வகையான வசதி வாய்ப்புகளும் இருக்கின்றன. இன்னும் நீங்கள் பல நூறு வருடங்கள் கழித்துக் கண்டுபிடிக்கப் போகும் அறிவியல் கருவிகளை எல்லாம் நாங்கள் இன்று சாதாரணமாகப் பயன்படுத்தி வருகிறோம். இவ்வளவு இருந்தும் எங்கள் விரோன்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. சொல்லப்போனால் மகிழ்ச்சி என்றால் என்னவென்றே தெரியாது. மிக இயந்திரத்தனமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்கு ஒரு குரு இருக்கிறார். அவர்தான் விரோன்களை மகிழ்ச்சியாக வைப்பதற்கு உதவும் சில தரவுகள் வேற்றுக் கிரகங்களில் இருப்பதாகத் தனது சிந்தனை பலத்தால் கண்டறிந்து சொன்னார். அதைத் தேடித்தான் நாங்கள் இங்கு வந்தோம்.

"நான் உங்கள் பாதத்தைத் தொடலாமா? என்னை வாரி அணைத்து உச்சி முகர்ந்து என் நெற்றியில் ஒரு முத்தம் தருவீர்களா? நான் ஒரு நிமிடம் உங்கள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்ளட்டுமா?" என்று சிறு குழந்தை போல ஆசைகளைச் சரமாரியாகக் கொட்டினான்.

அவனைப் பார்த்தபோது அவளுக்குப் பயம் எதுவும் ஏற்படவில்லை. மாறாகத் தனது குழந்தைகளைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வுதான் ஏற்பட்டது. தன் மூத்த மகனைப்போல் இருபத்தியோரு வயது இருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அவளது அறிவு முன்பின் தெரியாத ஒரு வேற்றுக் கிரக மனிதனோடு எப்படி என்னால் இயல்பாக ஒரு மகனைப்போல் எண்ணிப் பழக முடியும் என்று கேள்வி கேட்டது.

"இல்லை நோவா. என்னால் அப்படியெல்லாம் செய்ய இயலாது. ஆனால் உன்மீது எனக்கு என்னையும் அறியாமல் ஒரு பாசம் தோன்றுவது என்னமோ உண்மைதான். அதுகூட நீங்கள் செய்யும் ஏதாவது மாய வித்தையாக இருக்குமோ என்று நான் பயப்படுகிறேன். நீ என் அருகிலேயே கொஞ்ச நேரம் அமர்ந்திரு. எனக்கு அது ஆறுதலாக இருக்கிறது," என்று தன் மனநிலையைக் கூறினாள்.

அப்போது நோவாவின் கையில் கட்டி இருந்த ஒரு கடிகாரம் போன்ற கருவியிலிருந்து கரகரப்பான ஒரு சத்தம் வந்தது. உடனே ராணுவ வீரன் போருக்குத் தயாராவது போல் துள்ளி எழுந்து, "புறப்படுங்கள், போக நேரமாகிவிட்டது," என்று கூறினான்.

"நோவா, என்ன உளறுகிறாய்? எங்கு போகப் போகிறோம்? நான் எங்கும் வரப்போவதில்லை," என்றாள் அவள் அவசரமாக எழுந்து நின்று.

அவளது அனுமதிக்குக் காத்திருக்காமல் அவளது இடது கையைப் பிடித்துக் கொண்டு, அவனது உடலில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கருவியின் பொத்தானை அழுத்தினான்.

அவள் கண்மூடித் திறப்பதற்குள் அவர்கள் இருவரும் அந்த இடத்தில் இருந்து மாயமாக மறைந்தனர். அவள் ஏதோ கேட்பதற்காக வாய் திறந்து மூடுவதற்குள் வேறோர் இடத்தில் இருவரும் தோன்றினர்.

அவள் சொல்ல வந்ததை மறந்து அதிசயமாகத் தன்னைச் சுற்றி இருப்பவற்றைக் கவனித்தாள். அது திரைப்படங்களில் மட்டுமே அவள் பார்த்து இருந்த ஒரு விண்கலம் போலக் காணப்பட்டது. நிறைய மெஷின்கள், கணினித் திரைகள் என வேறு ஏதோ ஓர் உலகத்திற்கு வந்ததுபோல் அவளுக்குப் பட்டது.

"நாம் எப்படி நோவா இங்கு வந்தோம்? இது என்ன மாயமா?" என்று கேட்டாள்.

"இது மாயம் அல்ல, அறிவியல்தான். இன்று நீங்கள் மொபைல் ஃபோன்களில் புகைப்படங்களை அனுப்புகிறீர்கள் அல்லவா? அதுபோலத்தான். அந்தப் புகைப்படம் பைனரி டிஜிட்டல் தரவாக மாற்றி, என்கோடு செய்து, மின்காந்த அலைகளின் ஊடாக அனுப்பப்படுகிறது. அதைப் பெற்றுக் கொள்ளும் ஃபோன் மீண்டும் டிகோடு செய்து புகைப்படமாக்கி மொபைல் திரையில் காட்டுகிறது.

"இந்த அறிவியல் முறையின் ஒரு மேம்பட்ட வடிவம்தான் நாம் இப்போது செய்தது. நமது உடலையே பைனரியாக மாற்றி என்கோடு டிகோடு எல்லாம் செய்து சஞ்சரிக்கும் ஒரு கண்டுபிடிப்பு. இதுபோல் நூற்றுக்கணக்கான அதிசயமான கருவிகள் எங்களிடம் உள்ளன. நிச்சயமாக உங்களுடைய எல்லாத் தேவைகளையும் என்னால் நிறைவு செய்யமுடியும். வரமாட்டேன் என்று மட்டும் பிடிவாதம் பிடிக்காதீர்கள்."

"எப்படி என் மொழியில் எங்கள் வார்த்தைகள் எல்லாம் நீ பேசுகிறாய்? நீ என்ன சொன்னாலும் நான் வரப்போவதில்லை."

"உங்கள் தரவகத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களும் எனக்கு இப்போது அறிமுகமாகி இருப்பதால் நீங்கள் எப்படி யோசிப்பீர்கள் என்பதுகூட எனக்குத் தெரியும். என் வேண்டுகோளை மறுக்காதீர்கள்."

இருவரும் பேசிக்கொண்டே அந்த விண்கலத்திற்குள் சற்றுத் தூரம் நடந்தனர். ஒரு கருத்தரங்க அறை போன்ற இடத்திற்குப் போனபோது சற்று இருட்டாக இருந்தது. அங்கு நிறைய விரோன்கள் இருந்தனர். அதைப் பார்த்து அவளுக்கு அதுவரை தோன்றாத ஒரு பயம் தோன்றிப் பகீர் என்றது. நோவாவின் தோளுக்குப் பின்னால் மறைந்து அவனது புஜத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். நோவா அருகில் இருப்பது அவளுக்கு ஏதோ ஒரு மன நிம்மதியையும் தைரியத்தையும் தந்தது.

பொதுவாக மகன்களோடு போகும்போது குறிப்பாக மூத்தவனோடு போகும்போது குத்துச்சண்டை வீரனான அவனது கை புஜத்தைப் பற்றிக்கொண்டு நடப்பாள். அப்போது தோன்றுவது போன்ற ஒரு பாதுகாப்பு உணர்வு அவளுக்கு இப்போதும் ஏற்பட்டது. அவள் தனக்குள்ளேயே குழம்பினாள். உண்மையிலேயே என் மூத்த மகன்தான் என் அருகில் நிற்கிறானோ என்று சந்தேகப்பட்டாள். 'இல்லை, இது நோவா. வேற்றுக் கிரகத்து மனிதன். இவன் எப்படி என் மகனாக முடியும்?' வெடுக்கென்று கையை எடுத்தாள்.

சயோன் நோவாவை நோக்கி மெல்ல நடந்து வந்தார். "நீ சொன்ன அந்த ஆசிரியர் இவர்தானா? பரவாயில்லை, நீ சரியான நேரத்திற்கு வந்து விட்டாய். நமது திட்டப்படி இன்னும் இரண்டு மணி நேரத்தில் இங்கிருந்து கிளம்ப வேண்டும். இன்னும் சில விரோன்கள் திரும்ப வரவேண்டி இருக்கிறது. அவர்களுக்கு சமிக்ஞை அனுப்புங்கள். உடனடியாக விண்கலத்திற்கு வரும்படி கூறுங்கள்," என்று திரும்பி அவரைச் சுற்றி இருந்தவர்களிடம் உத்தரவுகளைப் பிறப்பித்தபடியே அவளை ஏற இறங்க சயோன் பார்த்தார்.

"நோவா, இவரை நீ நமது பாதுகாப்பு அறையில் கொண்டு போய் விட்டுவிட்டு வா. அந்த அறையில் வேறு சில விரோன்கள் கொண்டு வந்த நாய், பூனை, முயல், கிளிகள் போன்ற விருப்ப மிருகங்களும் அழகிய பூச்சட்டிகள் போன்றவையும் இருக்கின்றன. இவையும் நமது விரோன்களை மகிழ்ச்சியாக வைக்க உதவும் என்று தரவுகள் கொண்டு வந்தனர். அவற்றையும் பத்திரமாக வை," என்று நோவாவிடம் உத்தரவிட்டார்.

"அப்படியே ஆகட்டும்," என்று கூறிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு பாதுகாப்பு அறையை நோக்கி நோவா நடந்தான்.

அவளுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. சத்தம் போட்டுக் கத்தினால்கூட வெளியில் கேட்காது. யாரிடம் உதவி கேட்டு இதிலிருந்து தப்பிப்பது என்றும் புரியவில்லை. அவர்கள் பேசிய மொழிகூட இப்போது அவளுக்குப் புரியத் தொடங்கி விட்டது. நிச்சயமாக அவர்கள் கொண்டு போய் விடுவார்கள் என்று உறுதியாகிவிட்டது.

"நோவா, நான் சொல்வதைக் கேள். தயவுசெய்து என்னைக் கொண்டு போகாதே. எனது வீடு, குடும்பம், உலகமெல்லாம் இங்கிருக்கும்போது நான் எப்படி முன்பின் தெரியாத ஒரு கிரகத்திற்கு வரமுடியும்? தயவு செய்து என்னைத் திரும்பக் கொண்டு விட்டுவிடு. உன்னைக் கையெடுத்துக் கும்பிடுகிறேன். என்னை நீ அம்மா என்று கூப்பிட்டது உண்மையானால் தயவுசெய்து உன் அம்மாவின் ஆசையை நிறைவேற்று," என்று கெஞ்சிக் கேட்டாள்.

"வரமாட்டேன் என்பதைத் தவிர வேறு எது வேண்டுமானாலும் சொல்லுங்கள், நான் செய்யக் காத்திருக்கிறேன். இந்தத் தாய்ப்பாசம் எனக்குப் பிடித்திருக்கிறது. நீங்கள் என் அருகே இருக்கும்பொழுது ஒரு நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படுகிறது. அதற்கு காரணம் எல்லாம் எனக்குத் தெரியவில்லை அது அப்படியே இருக்க வேண்டும் என்று என் மனது ஆசைப்படுகிறது. தயவுசெய்து அதைக் கெடுத்து விடாதீர்கள்," மிக அன்போடும் அதே சமயம் ஒரு குழந்தையின் பிடிவாதத்துடனும் அவன் கூறினான்.

தனது சின்ன மகன் கூறிய அதே வார்த்தைகள். அதே நெகிழ்வு. அவளால் ஒன்றும் பேசமுடியவில்லை. அழவேண்டும் போல் இருந்தது ஆனால் முடியவில்லை. இப்படிப் பிடிவாதம் பிடிக்கும் இந்தப் பையனிடம் எப்படி நான் சொல்லிப் புரியவைப்பேன்? இன்னும் சற்று நேரத்திற்குள் விண்கலம் கிளம்பப் போகிறது என்பது அவளுக்குத் தெரிகிறது.

"ஐயோ நான் என்ன செய்வேன்? என்ன செய்வேன்?" என்று புலம்பிக் கொண்டிருக்கும் போதே மிக சொகுசாக இருந்த ஒரு அறையில் அவளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு நோவா போய்விட்டான்.

அந்தக் கதவு மிகப்பெரிய வங்கியின் பாதுகாப்பு அறைக் கதவுபோல அசைக்க முடியாததாக இருந்தது. அவள் அதைத் தட்டித் திறக்க முயற்சி செய்தாள். அவள் கத்திய சத்தம் அவளுக்கு மட்டுமே கேட்டது. அவளது புத்தியின் அனைத்துச் செல்களையும் உயிரூட்டி, எப்படித் தப்பிப்பது என்று ஆலோசித்தாள். ஒன்றும் புலப்படாமல் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

திடீரென்று விண்கலம் அசைந்தது. ஐயோ... கடவுளே! அவர்கள் விண்கலத்தைக் கிளப்புகிறார்கள் என்று புரிந்து கொண்டாள். ஐயோ... ஐயோ... இங்கிருந்து நான் போய்விட்டால் நிச்சயமாக ஒரு நாளும் திரும்பி வரமுடியாது என்பது அவளுக்குப் புரிந்துவிட்டது.

"நோவா... நோவா..." என்று உயிரைக் கொடுத்துக் கத்தினாள். அந்த அறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக அவள் எட்டிப் பார்த்தபோது பூமியின் ஒவ்வொரு பொருளும் மிகத் தூரமாகப் போய்ப் புள்ளியாகிக் கொண்டிருந்தது. ஆனாலும் அவள் நம்பிக்கை விடாமல் நோவா... நோவா... என்று கத்திக் கொண்டிருந்தாள்.

திடீரென்று அறைக் கதவு திறந்தது. நோவா வந்து அவளை ஆதரவாகப் பிடித்து படுக்கையில் அமரச் செய்தான். "அம்மா ஏன் பிடிவாதம் பிடிக்கிறீர்கள்? நான் உங்கள் மகன் இருக்கிறேன் அல்லவா? போதாதா? எதற்காக இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்?" என்றான்.

"நோவா, தயவுசெய்து என்னைக் கொண்டுபோய் விட்டுவிடு. இன்னும் சற்று நேரத்தில் பூமியை விட்டே நீங்கள் போய்விடுவீர்கள். தயவுசெய்து என்னைக் கொண்டுபோய் விட்டுவிடு. எனக்கு வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை," என்று கெஞ்சினாள்.

"இல்லை அதைத் தவிர எதைக் கேட்டாலும் நான் செய்யத் தயாராக இருக்கிறேன். நீங்கள் நிம்மதியாகப் படுத்து உறங்குங்கள்," என்று சொல்லிவிட்டு அவன் எழுந்து கதவை அடைக்கப் போனான்.

"நோவா... ஒரு நிமிடம் நில். ஒரே ஒருநாள் பார்த்த என்னை அம்மாவாக ஏற்றுக் கொண்டு என்னைப் பிரிய முடியவில்லை என்று நீ பிடிவாதம் பிடிக்கிறாயே? நான் சுமந்து பெற்றுப் பாலூட்டி வளர்த்து இருபத்தியிரண்டு வருடங்கள் என்னோடு வாழ்ந்த என் குழந்தைகள் எப்படி என்னைப் பிரிந்து வாழ்வார்கள் என்று ஒரு நிமிடம் நீ யோசித்தாயா? ஒரு வருடம் கழித்தாவது நான் அவர்களைப் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தேன். இனி நான் என்ன நம்பிக்கையில் வாழ்வேன் என்று ஒருமுறை சிந்தித்தாயா? இதுதான் உன் தாய்ப்பாசமா? தாய்ப்பாசம் என்பது உனக்குப் பிடித்ததைச் செய்வதல்ல. தாய்க்குப் பிடித்ததைச் செய்வதுதான் தாய்ப்பாசம்.

"எனக்கு இந்த பூமியை விட்டுவர விருப்பமில்லை. அதுதான் என் ஆசை. தயவுசெய்து என்னைக் கொண்டு போய் விட்டுவிடு. ஒரு தாயின் பரிதவிப்பைப் புரிந்து கொள்ளாத ஒருவன் எப்படி மகனாக முடியும்?" என்றாள்.

கதவுக்குப் பக்கம் போன நோவா ஒன்றும் பேசாமல் திரும்ப வந்து அவளது கையை இறுக்கமாகப் பிடித்து முன்பு செய்ததுபோல் ஒரு பொத்தானை அழுத்தினான்.

இப்போது இருவரும் மொட்டை மாடியில் நின்றிருந்தனர். அவள் அவனை இறுதி அணைத்து உச்சி முகர்ந்து அவன் நெற்றியில் பாசம் மேலிட ஒரு முத்தம் வைத்தாள். அவன் ஒரு நிமிடம் கண்ணடைத்து அதை அனுபவித்து உணர்ந்தான். மெல்லக் குனிந்து அவளது பாதங்களைத் தொட்டு நெற்றியில் வைத்துக் கொண்டு "அம்மா நான் போகிறேன் விடை கொடுங்கள்," என்றான்.

"ஏன் இப்படி அபசகுனமாகச் சொல்கிறாய்? போய்விட்டு வருகிறேன் என்று சொல்," என்றாள் நா தழுதழுக்க.

அவன் அதற்கு ஒன்றும் சொல்லாமல் கை அசைத்தான். ஓரிரு வினாடி எதையோ அவளிடம் இருந்து எதிர்பார்ப்பது போல் நின்றான். அவ்வளவுதான், அவன் காணாமல் போய்விட்டான்.

தன் உடலின் ஒரு பகுதியை யாரோ பறித்தெடுத்துக் கொண்டு போனது போலப் பரிதவித்து அங்கு நின்றாள். என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. மெதுவாக மாடியிலிருந்து இறங்கி அவளது அறைக்கு வந்து சேர்ந்தாள். இதெல்லாம் கனவா அல்லது நிஜமா? நோவாவை நான் இனி ஒருநாளும் பார்க்க முடியாதா? இறுதியில் அவன் ஏதோ எதிர்பார்ப்பது போல் சற்று நின்றானே எதற்காக இருக்கும்? எழுந்து வந்து அவள் ஜன்னல் வழியாக ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

திடீரென்று நோவா திரும்பி வந்துவிடக் கூடாதா? அவனையும் தன் மகன்களோடு சேர்த்து பார்த்துக் கொள்ளலாம்தானே? நிச்சயமாக என் கணவரும் மகன்களும் ஏற்றுக் கொள்வார்கள். நோவா நீ வந்திருக்கலாமே என்னோடு? ஐயோ! நான் அப்போது அதை அவனிடம் சொல்லவில்லையே! எவ்வளவு பெரிய மடத்தனம்! ஒருவேளை அவனை இங்கிருக்கும்படி நான் சொல்வேன் என்று எதிர்பார்த்தானோ? அப்படிச் சொல்லி இருந்தால் ஒருவேளை அவன் இருந்திருப்பானோ?

ஆம் இருந்திருப்பான். அவனுக்கு அந்த கிரகத்தில் அப்படி ஓர் உணர்வு ரீதியான உறவு இல்லை என்பது அவன் சொன்னதிலிருந்தே தெரிந்ததே. அடக்கடவுளே நான் இவ்வளவு சுயநலவாதியா? மகன் செய்ய வேண்டியதைச் சொன்ன நான் தாய் செய்ய வேண்டியதை ஏன் செய்யவில்லை?

ஒரே ஒருமுறை நான் சொல்லியிருக்க வேண்டும். நீ போக வேண்டாம் இங்கே என்னோடு இருந்துவிடு என்று. ஐயோ நோவா! என் மகனே, நான் சொல்வது உனக்குக் கேட்கிறதா என்று புலம்பிக் கொண்டிருந்தாள். மனதில் நினைப்பதை எல்லாம் உணரும் அதீத சக்தி படைத்த நோவா என் மகனே, உண்மையிலேயே உன்னைப் பிரிந்ததில் நான் வருந்துகிறேனடா. இந்த வருத்தத்தை நீ உணர்வாயா? வாய்விட்டுக் கதறினாள்.

நோவா தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் படுத்திருந்தான். பிற விரோன்கள் சத்தம் போட்டுத் தங்களது அனுபவங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சிலர் கருவிகளை இணைத்துத் தரவுகளைப் பதிவிறக்கம் செய்து கொண்டிருந்தனர். எதிலும் கவனம் இல்லாமல் நோவா எழுந்து அமர்ந்தான். அவளது அழுகையின் அதிர்வலைகள் எந்த அறிவியலின் துணையும் இன்றி அவனை அடைந்தன. அவனையும் அறியாமல் வாழ்வில் முதல் முறையாக அவன் கண்களில் கண்ணீர் வழிந்து வந்து மூக்கின் முனையில் ஒரு திவலையாகத் தங்கி நின்றது. படிமம் போன்ற அந்தத் திவலையில் அவளது முகம் பிரதிபலித்தது.

அவசரம், ஆபத்து என்று அவனருகில் இருந்த கணினி சத்தமிட்டது. எல்லோரும் ஓடிவந்தனர். நோவாவின் கண்களில் உப்புச்சுவை மிகுந்த ஒருவகை திரவம் வடிகிறது. இதற்கு முன்பு இப்படி ஒரு திரவம் எந்த ஒரு விரோனுக்கும் வந்ததில்லை. அவசரம், ஆபத்து என்று மின்விளக்குகள் மின்னி மறையக் கணினி சத்தமிட்டது.

மூக்கு நுனியில் தேங்கி நின்ற நீர்த்திவலை கீழே விழுந்தது. அதைத் தரையில் விழாமல் தனது உள்ளங்கையில் தாங்கி, கையை நாம்பி அடைத்து, நெஞ்சோடு வைத்துக் கொண்டு, "இதற்குப் பெயர்தான் கண்ணீர். தாயைப் பிரியும்போது ஒரு மகனுக்கு ஏற்படும் உணர்வின் வெளிப்பாடு இது. ஆபத்து எதுவும் இல்லை" என்றான். நிதானமாக.
கனலி விஜயலட்சுமி,
ஹூஸ்டன், டெக்சஸ்
Share: 




© Copyright 2020 Tamilonline