Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2024 Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | குறுநாவல் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
எ. ஜோதி
- தென்றல்|நவம்பர் 2024|
Share:
தமிழின் குறிப்பிடத்தகுந்த சிறார் எழுத்தாளர்களுள் ஒருவர் எ.ஜோதி என்னும் எத்திராஜு ஜோதி. 'எ. சோதி' என்று தனித்தமிழ்ப் பெயரில் எழுதிவரும் இவர், சிறார்களுக்காகவென்றே 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்தவர். இவர் ஜூலை 07, 1950 அன்று தமிழ்நாட்டின் திருக்கோவிலூரை அடுத்துள்ள கீழையூரில் எத்திராஜு - அம்மா பொண்ணு இணையருக்கு மூன்றாவது மகவாகப் பிறந்தார். தந்தை காவல்துறையில் பணியாற்றினார். தந்தையின் பணி நிமித்தம் ரிஷிவந்தியம், மரக்காணம், மருங்கூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி எனப் பல இடங்களில் உள்ள பள்ளிகளில் எ. ஜோதி பள்ளிக்கல்வி கற்றார். அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் பயின்று தமிழில் இளங்கலைப் பட்டத்தை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அண்ணாமலை பல்கலைக் கழகம் மூலம் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். புதுவை பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டம் பெற்றார். தாகூர் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி 2004-ல் ஓய்வு பெற்றார். பத்து ஆண்டுகள் என்.சி.சி. பயிற்றுநராகப் பணியாற்றினார்.



சோதி, கல்லூரியில் வகுப்பு நடத்தும் போது ஏற்பட்ட அனுபவத்தினால் எழுத ஆரம்பித்தார். சிறார்களுக்காக எழுதுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்தவர், தினமணி, ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் தொடங்கி தமிழின் அனைத்து முன்னணி இதழ்களிலும் சிறார்களுக்கான பல கதைகளை எழுதினார். அவை மாணவர்களால் விரும்பி வாசிக்கப்பட்டன. 30-க்கும் மேற்பட்ட இதழ்களில் சோதியின் படைப்புகள் வெளியாகியிருக்கின்றன.

“சிறுவர்கள் எதிர்காலத் தூண்கள். அவர்களை நெறிப்படுத்தி நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதே என்னுடைய கொள்கை” என்ற உறுதிப்பாட்டுடன் சிறார்களுக்காக எழுதத் தொடங்கினார். சிறுவர்களுக்கு மகிழ்ச்சியையும், மூளைக்கு வேலை கொடுக்கும் ஆற்றலைப் பெருக்கும் நோக்கத்திலும் பல புதிர்க் கதைகளை எழுதினார். முதல் நூலான புதிர்க் கணக்குகள் 1984ம் ஆண்டு வெளி வந்தது. தொடர்ந்து புதிர்க்கதைகள், நகைச்சுவைக் கதைகள், சிந்தனைக் கதைகள், பரமார்த்த குரு கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், நன்னெறிக் கதைகள், சாமர்த்தியக் கதைகள், வேடிக்கை மந்திரக் கதைகள், புகழ்பெற்ற கதைகள், சிறுவர் களஞ்சியம், நாடகங்கள் என்று 250-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.



'தனக்காக வாழ்வது நரகம், பிறர்க்காக வாழ்வது சொர்க்கம்' என்ற கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை 'சொர்க்கம் நரகம்'. இதுபோன்ற கருத்துகக்ளை மையமாக வைத்து வெளியான தொகுப்பு 'சொர்க்க நரகம். பல்வேறு கதைகளைத் திரட்டி நூல்களாக வெளியிட்டுள்ளார். இவர் படைத்த 'சிறுவர்களுக்கு நற்பண்பை வளர்க்கும் கதைகள்' என்ற நூலின் தலைப்பே அதன் நோக்கத்தைச் சொல்கிறது. இதில் கல்வி, அன்பு, ஒற்றுமை, பொறுமை, பேச்சு, தன்னம்பிக்கை, உழைப்பு, உண்மை, நேர்மை போன்ற கருத்துக்கள் அடங்கிய கதைகள் இடம்பெற்றுள்ளன. கடலில் அலை ஏற்படுவது ஏன், எதிரொலி என்பது எதனால் ஏற்படுகிறது என அறிவியல் கருத்துக்களை எளிய மொழியில் விளக்கும் பல கதைகளை எழுதியுள்ளார். நீதிநெறிக் கருத்துக்கள், சமுதாய சீர்த்திருத்தக் கருத்துக்கள், ஆத்திசூடிக் கருத்துக்கள், திருக்குறள் கருத்துக்கள், அற இலக்கிய நூல் கருத்துக்கள், ஆன்மீகக் கருத்துக்கள் அடங்கிய பல கதைத் தொகுப்புகளை சோதி வெளியிட்டார். சங்க இலக்கியப் பாடல்களில் உள்ள சிறுகதை அமைப்புகளைக் கண்டறிந்து அவற்றை நூல்களாக எழுதியுள்ளார். எண்ணிக்கையின் அடிப்படையில் 5000-த்திற்கும் மேற்பட்ட கதைகளைச் சோதி எழுதியுள்ளார்.



தனது நூல்களை வெளியிடுவதற்காகவே 'நன்மொழிப் பதிப்பகம்' என்பதனைத் தொடங்கி அதன்மூலம் பல நூல்களை வெளியிட்டார். எ. சோதி எழுதிய பதினேழு சிறுவர் கதை நூல்கள் மதுரை மகாத்மா கல்வி நிறுவனங்களில் 2016-17 ஆம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புவரை துணைப்பாட நூல்களாக வைக்கப்பட்டன. சிங்கப்பூர் தேசிய வாசிப்பு இயக்கம் எ. சோதியின் நூல்கள் பலவற்றை வாங்கியுள்ளது. சிறந்த நூலுக்கான தமிழ்நாடு அரசின் பரிசினை இருமுறை பெற்றவர். ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வழங்கிய சுவாமி விவேகானந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். 'கதைக்கடல்' என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கமலாத்மானந்தர், ஊரன் அடிகள், புதுவை முதல்வர் ரங்கசாமி, ம.லெ. தங்கப்பா உள்ளிட்ட பலரது பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் பெற்றவர் எ.சோதி.

'நல்ல கருத்துக்களைக் கூறி, சிறுவர்களை மேன்மேலும் சிந்திக்க வைப்பதே எனது நோக்கம்' என்ற உறுதிப்பாட்டுடன் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் எ. சோதியின் வாழ்விடம் புதுச்சேரி. மனைவி அமுதவள்ளி. இவர்களுக்கு ஒரு மகன், மகள்.

எ. சோதியின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் ஜா. பூரணி எழுதியுள்ளார். கலைஞன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

தென்றல்
எ. சோதியின் நூல்களில் சில...
புதிர்க் கதைகள், தத்துவப் புதிர்க் கதைகள், புகழ் பெற்ற புதிர்க் கதைகள், கம்ப்யூட்டரை மடக்க ஒரு கேள்வி , இன்னும் சில புதிர்கள் கதைகள், மேலும் சில புதிர்க் கதைகள், புதிர்க் கணக்குகள், கணக்குப் புதிர்கள், விடுகதைகள் - புதிர்கள் 250, கொல்லும் ! கொல்லாது! (புதிர்க்கதை), சின்னச் சின்ன நன்னெறிக் கதைகள், கதைப் புதிர்கள், சிறுவர்களுக்கு அறிவால் வென்றவர் கதைகள், சிறுவர்களுக்குப் புதிர் கதைகள், சிறுவர்களுக்கு மந்திரக் கதைகள், சிறுவர்களுக்கு தேவதைக் கதைகள், சிறுவர்களுக்கு வேதாளம் சொன்ன புதிர் கதைகள், மனிதனைத் தேடிய சிங்கம் (சிங்கக் கதைகள்), வம்பை வாங்கிய குரங்கு (குரங்குக் கதைகள்), வேடிக்கை மந்திரக் கதைகள், புகழ் பெற்ற மந்திரக் கதைகள், மகிழ வைக்கும் மந்திரக் கதைகள், சிரித்து மகிழ வேடிக்கைக் கதைகள், வியக்க வைக்கும் வேடிக்கைக் கதைகள், சிறுவர் புதினங்கள், அஞ்சா நெஞ்சனும் அதிசயக் குதிரையும், குட்டி யானையும் சுட்டி முயலும், காட்டுக்குள் புரட்சி, கெட்டிக்கார வேலன், சிலேடை சின்னசாமி, நல்ல கேள்வி! நல்ல பதில்!, கதை கதையாம் காரணமாம், வயிறு குலுங்கச் சிரிக்க ஜோக், சிரிக்க சிந்திக்க சிலேடைகள், ஆசிரியர் மாணவர் நகைச்சுவை, முட்டாள் ஜோக்ஸ் - 1, முட்டாள் ஜோக்ஸ் - 2, எங்கும் அறிவொளி, அறிவுள்ள கோமாளிகள், மறதி மன்னார்சாமி, மணமக்களுக்கு இனிய கதைகள் (திருமணப் பரிசு நூல்), அறிவுக்கு விருந்தாகும் சாமர்த்தியக் கதைகள் , கெட்டிக்காரன் கதைகள், சாமர்த்தியக் கதைகள், எத்தனுக்கு எத்தன், புதிர்போடும் சிறுவன், சிறுவனின் தீர்ப்பு , வால் முளைத்த இளவரசி , கரும்பு தின்னக் கூலி!, சிரித்து மகிழ முட்டாள் கதைகள், மூடன் மட்டி மடையன் கதைகள், முட்டாள் கதைகள், கல் வீசு! நரி ஓடும் !, கஞ்சன் கருமி கதைகள், நரி காக்கை, சாமர்த்திய நரி, முட்டாள் தரி, கெட்டிக்கார நரி, எலி, எலி முயல் கதை, ஓநாயை வென்ற நரி, தந்திர நரியும் ரொட்டி மனிதனும், அறிவுள்ள நரியும் ஏமாந்த சிங்கமும், தென்னாலிராமன் கதைகள், அப்பாஜி பீர்பால் கதைகள், மரியாதை ராமன் கதைகள், பரமார்த்த குரு கதைகள், ஈசாப் நீதிக் கதைகள் , விக்கிரமாதித்தன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மதனகாமராசன் கதைகள், மற்றும் பல

தகவல் உதவி: 'எ. ஜோதி', எழுத்தாக்கம் முனைவர் ஜா. பூரணி, கலைஞன் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2015
Share: 




© Copyright 2020 Tamilonline