Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப்பார்வை | முன்னோடி | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
வெளிச்சம்
இறுதி முடிவு
- கலாநிதி. நாகலிங்கம் சிவயோகன்|ஜூலை 2024|
Share:
நாளை விருந்தினர்கள் வருகிறார்கள், சற்று வேளைக்கே வந்துவிடுங்களென கோசலா தனது மகள்கள் கௌரிக்கும் உமாவிற்கும் முதல்நாளே அழைப்பு எடுத்துக்கூறிவிட்டாள். அவளினிரு பெண்களுக்கும் நீண்டநாள் திருணம் முடிக்க, தகுந்த துணையைத் தேடினாலும் தமிழர் யாரும் கிடைக்கவில்லை. நாளாக நாளாக மகள்மாரே தமக்கு உகந்தது என்று இரு வெள்ளையினத்தவரைத் திருமணம் செய்துகொண்டனர். மனதுள் பெரிதாக இணக்கம்மில்லாவிடினும் மகிழ்ச்சியாக தெரிந்தவர்களையெல்லாம் அழைத்து திருமணத்தை கோலாகலமாக நடத்திவைத்தனர்.

வந்திருந்த வெள்ளையின மருமக்களும் மிகவும் அருமையானவர்கள். குடும்பத்துடன் ஐக்கியமாகி மனைவியரை நன்றாகவே கவனிப்பதாகத் தோன்றியது. மூன்றாவது மகள் பிரியா பற்றிய கவலை மனதுக்குள் இருந்தாலும் அவள் இப்போது உயர்தர வகுப்பிற்குச் செல்வதால் உடனடியாகக் கவலைப்படும் நிலையிலவள் இல்லை. அவர்களின் திருமணங்கள் முடிந்து நண்பர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கும் சந்தர்ப்பம் பெரிதாக அமையவில்லை. அண்மையில் புதியவீடும் வாங்கிக் குடிபுகுந்துள்ளதால் இந்தச் சந்தர்ப்பத்தில் நண்பர்களை அழைத்திருந்தனர்.

காலையிலிருந்து விருந்தினருக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் கோசலாவும் கணவன் கணேசனும் மும்முரமாக ஈடுபட்டனர். தேவையான சாமான்களைக் கடைக்குச் சென்று வாங்கிவந்தனர். வீட்டிலிருந்த மகள் பிரியா தனக்குப் பரீட்சைக்குப் படிக்க வேண்டும் எனத் தனது அறைக்குச்சென்றாள். மதியநேரம் விருந்தினர் வரத்தொடங்கிவிட்டனர்.

ஆனாலும் மூத்தமகள்கள் இன்னும் வந்துசேரவில்லை. நேரமாக மனதுள் ஏதோ அரித்தது. தொலைபேசியில் அழைத்து ஏன் வரவில்லையெனச் சற்றுக் கோபத்துடன் கேட்டாள். வெளிக்கிட்டோம், விரைவில் வந்துவிடுவோமென்று இருவரும் சிரித்தபடி கூறினர்.

மதியநேரம் நெருங்க விருந்தினர்கள் வரத்தொடங்கினர். விருந்தினர்களின் முதல் கேள்வி எங்கே பிள்ளைகள் என்பதுதான். பதில்சொல்லியே கோசலா களைத்துவிட்டாள். பிள்ளைகள் வந்ததும் அனைவருக்கும் சாப்பாடு கொடுக்கலாமென்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். ஒருமாதிரி இரு மகள்மாரும் சற்றிடைவெளியில் மதியம் ஒருமணியளவில் வந்துசேர்ந்தனர். மனதுக்குள் சற்று கோபமிருந்தாலும் அவர்களை வரவேற்று விருந்தினரை அறிமுகம் செய்துவைத்தாள். அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒவ்வொருவருடனும் உரையாடியபடி உணவை உண்டனர். அதன்பின் இனிப்புப் பலகாரங்களையும் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் வட்டமாக அமர்ந்து மகிழ்ச்சியாக அளவளாவத்தொடங்கினர்.

கோசலாவின் பிள்ளைகள் மாத்திரம் சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் தமது கணவன்மாருடன் அமர்ந்து குசுகுசுத்தபடி பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் தனியாகப் பிரிந்திருப்பது கோசலாவுக்கு சற்று வேதனையைக் கொடுத்தது. ஆயினும் விருந்தினர் அனைவரும் தமது தாய்மொழியில் பேச மருமக்களுக்கு தமிழ்மொழி புரியாததால் சேர்ந்திருந்து அளவளாவ முடியவில்லையென்பது புரிந்தது. வந்திருந்த விருந்தினர்களும் அவர்களைப் பலமுறை அழைத்தனர். ஆனால் அவர்கள் தனியாக இருக்கவே விரும்பினர். வந்திருந்த விருந்தினரின் பிள்ளைகள் சிலர் அவர்களுடன் சற்றுநேரம் உட்கார்ந்து பேசினார்கள். பின்னர் அவர்கள் தம்பாட்டில் விளையாடச் சென்றுவிட்டனர். அவர்களும் என்னசெய்ய. திருமணமாகிச் சில மாதங்களேயான இளஞ்சோடிகளுடன் சிறுவர்கள் எதைப்பற்றி நீண்டநேரம் பேசுவது!

முன்னரும் ஒருமுறை மருமக்களின் உறவினரினர் ஒருவரின் இரவு விருந்துக்கு சென்றிருந்தனர். அங்கும் வந்திருந்த விருந்தினருடன் கோசலாவுக்கும் கணேசனுக்கும் ஒட்டவில்லை. தனியாகவே சற்றுத்தூரத்தில் அமர்ந்து பேசியபடி இருந்தனர். பெற்றோர் தனியாகவிருப்பதை அவதானித்த மகள்களும் அவர்களருகில் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த நினைவும் கோசலாவுக்கு வந்து அவள் மனதைக் குளப்பியது. இருவினங்கள் திருமண பந்தத்தால் இணையும்போது முதல் பரம்பரையினருக்கு இணைவது சிரமமெனப் புரிந்தது. இரண்டாம் தலைமுறையினர் இணைவார்களா இல்லையாவென்பதும் தெரியவில்லை.

ஈழத்தில் 35 வருடம் நடந்த கடும்போரினால் புலம்பெயர்ந்து அமெரிக்கா வந்த முதல் பரம்பரையினர் இவர்கள். அடுத்த பரம்பரையினரைக் காண உயிருடன் இருக்கவேண்டும். ஆனால் அவைபற்றி கவலைப்படும் நிலையில் கோசலா இல்லை. அவளின் எண்ணமெல்லாம் அவளின் மூன்றாவது மகள் பிரியாவைப் பற்றியதாக இருந்தது. பிரியாவாவது தமிழின வாலிபனை மணக்க வேண்டுமென முடிவெடுத்தாள். ஆனால் தமிழின வாலிபர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அவர்கள் வசித்த இடத்தில் கிடைப்பது மிகவும் அரிது. அதற்கு இருக்கும் ஒரேவழி ஈழத்திற்குச் சென்று சிலகாலம் வசித்து, பொருத்தமான துணையைத் தேடுவது அல்லது தெரிந்தெடுக்கவிடுவதெனக் கோசலா மனதுள் உறுதியான முடிவொன்றை எடுத்தாள்.

விருந்தினர்கள் சென்றபின்னரே மகள்மாருடனும் மருமக்களுடனும் ஆறவமர்ந்து பேச முடிந்தது. மருமக்கள் பாத்திரங்களைக் கழுவிவைத்தனர். வீட்டையும் சுத்தம்செய்து தளபாடங்களையும் அடுக்கிவைத்தனர். அவர்களின் இயல்பு கோசலா மனதில் மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது. ஊரில் சென்று தேடினாலும் இப்படி அருமையான மருமக்கள் கிடைப்பார்களா என்பது சந்தேகமேயென அவள் மனது கூறியது.

இரவில் கோசலா கணேசனுடன் அமர்ந்திருந்தபோது தனது மனக்குளப்பத்தைக் கூறிக் கவலைப்பட்டாள். அவள் கூறுவதை அமைதியாகக் கேட்ட கணேசன் சற்று நிதானமாகவே பதில்கூறினார். மனிதன் என்ன, எல்லா உயிரினங்களின் பிறப்பின் நோக்கமே இனப்பெருக்கம்தான். யாரும் தாம் சோ்க்கும் சொத்துகளை மேலே செல்லும்போது கொண்டுபோகப் போவதில்லை. இருக்கும் காலம் மட்டும் அனுபவித்துவிட்டு இறக்க வேண்டிதுதான். எங்களைப் பற்றிய நினைவுகள் 100 அல்லது 150 வருடங்களுள் மறைந்துவிடும். நாடொன்றின் தலைவராக இருந்தவரோ அல்லது மிகவும் பிரபலமான ஒருவரோ நாடொன்றின் சரித்திரத்தின் வரியொன்றிலாவது இடம் பிடிப்பர். அப்படிப் பார்த்தால் எமது வாழ்வு நின்றுநிலைக்கும் சாத்தியமே மிகவும் குறைவு.

எனவே இந்தச் சின்ன விடயங்களைப் பற்றிலெ்லாம் சிந்திக்காமல் வாழ்க்கை தனது பாதையைத் தேர்ந்தெடுத்துச் செல்லவிடு என்று அமைதியாகக் கூறினார். அவரின் பேச்சைக் கேட்டவளின் மனது ஆறுதல் அடைந்தது. நாம் தலைகீழாக நின்றாலும் நடக்கவிருப்பதைத் தடுக்க முடியாது. இருமனங்கள் மனமொத்து மகிழ்வுடன் வாழ்ந்து தமது இனத்தைப் பெருக்கினாலே போதுமானது எனுமெண்ணம் வலுப்பெற கோசலா கணேசனை அணைத்தபடி அமைதியாகத் தூங்கிளாள்.
கலாநிதி. நாகலிங்கம் சிவயோகன்,
வடகரோலினா
More

வெளிச்சம்
Share: 
© Copyright 2020 Tamilonline