Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
நூல் அறிமுகம்
ஆனந்த் எழுதிய நான் காணாமல் போகும் கதை!
- மனுபாரதி|பிப்ரவரி 2005|
Share:
2004 வசந்தகாலத் தொடக்கத்தில் யோஸமிட்டிக்குச் சென்றிருந்த போது அனுபவித்த அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியாது. மெர்சீட் ஓடை ஒரு புடவையின் அகலத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அருகில் மணற்படுகை. படுகையை அடுத்து முழங்கால்வரை வளர்ந்த கோரைப் புற்கள். போன கோடையில் காய்ந்தவைகளும், இந்த வசந்தத்தில் முளைத்தவையுமாகச் சேர்ந்து சாம்பல் மற்றும் பச்சை வண்ணங்களில் உயிர்ப்பின் இரு துருவங்களையும் உணர்த்திக் கொண்டிருந்தன. சுற்றிலும், சூழலின் அமைதியைக் காவல் காக்கும் ஊசியிலை மரங்கள். மரங்களின் அடர்த்திக்கு அப்பால் மலையுயர பிரம்மாண்டமான கரும்பாறைகள். அவற்றிலிருந்து மாவாய்க் கசியும் நீரருவிகள்.

மணற்படுகையில் ஓடையின் தடம் தவிர வேறு மனிதக் கால்களின் தடங்களே இல்லை. எப்பொழுதோ அடித்து வந்த மரத்தின் ஓர் அடித்துண்டு, ஓடும் நீர் இழைத்தெடுத்த வழவழப்புடன் படுகையில் ஒதுங்கியிருந்தது. அது நன்கு பருத்த அடிமரம். அதன் மேல் சென்று நானும் என் மனைவியும் ஓடையைப் பார்த்து அமர்ந்து கொண்டோம். ஓடைநீர் பளிங்கு போல் தெள்ளத் தெளிவாக இருந்தது. அதனடியில் விதவிதமான வடிவங்களில் இருந்த கோதுமை நிறக் கூழாங்கற்கள் வெங்கதிரில் மினுமினுத்தன. அவற்றின் மேல் நீர் பின்னிப் பின்னி ஓடிக்கொண்டிருந்தது.

நீரின் மெல்லிய சலசலப்பு. இளங்காற்றில் நனைந்திருக்கும் மரங்களின் சரசரப்பு. தூரத்தில் எங்கோ ஒரு பறவை ஒலி. உற்றுக் கேட்டால் காற்றைக் கிழித்திறங்கும் அருவி ஓசை. மௌனம்தான் இந்த ரம்மியத்தை மரியாதை செய்யும் என்னும் பாவனையோடு நாங்கள் பேச்சற்று அமர்ந்திருந்தோம்.

சிறிது நேரம் கழித்து எங்களது காருக்கு நடந்து போகும்பொழுது மெர்சீட் ஓடையருகே என்னை நானே புதிதாகக் கண்டது போல் உணர்ந்தேன். ஆனால் மறுகணமே அந்தப் புதிய 'நான்'-ஐ அங்கேயே ஓடையுடன் விட்டுவந்துவிட்டேன் என்றும் தோன்றியது.

மேற்கூறியதைப் போல் நம்மை நாமே தொலைத்துவிட்டு வரும் தருணங்கள் யாருக்கும் வரக்கூடியவைதாம். அவ்வாறு காணாமல் போகும் தருணங்களை, மனத் திரையை விலக்கி அசைபோட்டிருக்க மாட்டோம். அனந்த் இத்தருணங்களைக் கோர்த்துச் சிறிய புதினமொன்றைப் படைத்திருக்கிறார். 'நான் காணாமல் போகும் கதை' மென்காற்று புரட்டிப்போடும் புத்தகத்தின் பக்கத்தைப் போல, வரிசை துறந்து, ஆசிரியரின் அனுபவங்களை அடுக்கிக்கொண்டே போகிறது.

கடற்கரையில் மணலில் புதைந்தும் புதையாமல் கவிழ்ந்து கிடக்கும் சிப்பி சில சமயத்தில் நம் கவனம் கவர்ந்துவிடும். எடுத்து மணல் தட்டித் திருப்பிப் பார்த்தால், அதன் மேல் விதவிதமான வண்ணங்களில் கோலங்கள் கிடக்கும். சட்டென்று அரிய பொருளாய் நமக்குத் தோன்றிவிடும். அதுபோல அனந்தின் இப்புதினமும் தற் செயலாக நண்பரின் புத்தகக் களஞ்சியத்தில் கண்ணில் பட்ட அரிய நூல்.

இந்தப் புதினத்தில், கதை மாந்தர்கள், அவர்களின் குணாதிசயங்கள், நடத்தைகள், சம்பவக் கோர்வைகள், திருப்பு முனை அத்தியாயங்கள் என நாடகத்தின் கூறுகள் இல்லை. மனோரஞ்சகத்தை நோக்கமாக வைத்து, யதார்த்தத்தைத் துறந்து ஏதோ கற்பனை உலகில், காதலன், காதலியைச் சேர்வதும் பிரிவதுமான கதையும் இதில் இல்லை. இருந்தும் ஆசிரியர் முன்வைக்கும் அனுபவங்கள் சில நம் எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில் மிகவும் நெருக்கமாகி நம் ஆழத்தில் இறங்குவதுதான் இந்த நூலை அறிமுகப்படுத்தத் தூண்டியது. முதலில் சில அனுபவங்களைப் பார்ப்போம்.

கதாநாயகன் (என்று சொல்லலாம். அவனைத் தவிர குறிப்பிடும்படியாக வேறு யாரும் கதையில் இல்லை) சில நண்பர்களுடன் மலை ஒன்றில் ஏறுகிறான். பாறைகளைப் பிடித்துப் பிடித்து ஏறிச் செல்கையில் நடுவே ஜைன சிற்பங்கள் கொண்ட மடம் வருகிறது. அதனுள்ளே இரண்டடி உயரமுள்ள ஒரு துவாரம் தெரிகிறது. அங்கிருக்கும் குருக்கள் அது வேறு ஒரு குகைக்குப் படுத்தபடி போகும் பாதை என்கிறார். பயத்துடன் கதாநாயகனும் நண்பர்களும் பயணிக்கிறார்கள். இருளில் தவழ்ந்து தவழ்ந்து அவர்கள் சென்றடையும் இடத்தில் ஒரு சிறிய குகையறை இருக்கிறது. எங்கிருந்தோ அதனுள் ஒளி கசிகிறது. சுத்தமான காற்று அங்கே நிரம்பியிருக்கிறது. சந்தடிகளற்ற அமைதியான இடம் என்று புரிந்துவிடுகிறது. தியானம் செய்ய ஏற்ற இடம் என்று குருக்கள் முன்சொன்னதை நம்பமுடிகிறது. இந்தக் காட்சியை விவரிக்கும்போது தாயின் கர்ப்பப்பைக்குள் மீண்டும் பயணித்து அடைவதற்கு ஒப்பிடுகிறார். ஒப்பிடலின் பொருத்தத்தால் குகையறையை விட்டு அவர்கள் வெளியேறும்போது வாசிக்கும் நமக்கு அவர்கள் மீண்டும் பிறக்கிறார்களோ என்று கேட்கத் தோன்றுகிறது. இப்படிக் கேட்க இன்னொரு காரணம் குகைக்குள் சென்று அமைதியை உள்வாங்கித் தாயின் கருப்பைக்கு அதை ஒப்பிட்டவனை வெளியில் வரும்போது காணவில்லை.

ஊர் ஊராக பஸ்களில் பயணிக்கும்போது வழக்கமாகக் கண்ணில் படும் காட்சியை ஒரு பகுதியில் விவரிக்கிறார். கீழே சாலை. இரு பக்கமும் மரங்கள். மரங்களுக்கு அப்பால், வயல்கள், வீடுகள், வெட்ட வெளிகள், நகரக் கட்டடங்கள் எனக் காட்சிகள் வேகமாக மாறுகின்றன. தூரத்தில் முன்னேதொடு வானமருகில் சாலை ஒரு புள்ளியில் குவிகிறது. மரங்களும், வீடுகளும் வயல்களும் கூட. பஸ்ஸின் பின்னால் பார்க்கையில் அங்கும் வேகமாகப் பின்ன கரும் மரங்கள், வீடுகள், காட்சிகள். அங்கும் எல்லாம் தொடுவானத்தில் பின்னால் சென்று ஒரு புள்ளியில் குவிகின்றன. பயணிக்கும் பயணிக்காக உலகமே ஒரு புள்ளியில் தோன்றிப், பெரிதாகி, மற்றுமொரு புள்ளியில் சென்று குவிந்து மறையும் பாவனையே அந்தக் காட்சி. பயணம் நிற்கும்போது உலகம் அதன் நிலைப்புத் தன்மையை மீட்டெடுக்கிறது என்று இந்த அனுபவத்தை முடிக்கிறார் ஆசிரியர். யதார்த்த உலகின் பன்முகப் பரிமாணத்தில் நாம் பார்க்காத பக்கம் புலப்படுவதுபோல் தோன்றுகிறது.
நிகழ்வுகளை மட்டுமே வரிசைப்படுத்தாமல் கனவுகளிலும் நிறையத் திளைக்க வைக்கிறார் ஆசிரியர். பருந்து கதாநாயகனைக் குறிவைத்து அவன் தலைக்கு மேல் வட்டமிட்டபடி மெல்ல இறங்குவதும், அதுவே அன்னப் பட்சியாக மாறுவது போன்றும், சந்நியாசி மடத்தில் நெடுநாளாக அழைக்காத தலைமைச் சந்நியாசி அன்று கதாநாயகச் சந்நியாசியை அழைத்துப் பிரபஞ்சத்தின் மையத்தை உணர்த்துவது போன்றும் வித்தியாசமான கனவுகள். மேலும் சில கனவுக்குள் கனவுகள். அதில் ஒன்றில் நூலகம் முழுதும் தன்னுடைய கேள்விக்கு விடை தேடுகிறான் கதாநாயகன். பல நாட்களாக, ஒவ்வொரு புத்தகமாக எடுத்தெடுத்துப் பார்க்கிறான். தேடுவதற்கு எடுத்தவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ள, இடம் மாற்றாமல் மீண்டும் அதனிடத்திலேயே வைத்துவிடுகிறான். அன்று நூலகம் மூடும் நேரத்தில் அவ்வாறு வைக்கப் போகையில் அவனது கண்களில் ஒரு பழங்காலப் புத்தகம் படுகிறது. எடுத்துப் பிரித்தால் அதில் ஓரு பாடல். அதன் அர்த்தம் முதலில் அவனுக்குப் புரிய வில்லை. மீண்டும் மீண்டும் படிக்கையில் அவனது கேள்விக்கான பதில் அதுதான் என்று ஞானோதயம் பிறக்கிறது. கனவிலிருந்து வெளிக்கனவுக்கு வருகையில் ஓர் அமைதி அவனது மனதில் நிறைகிறது. வெளிக் கனவிலிருந்தும் மீண்டுவருகையில் அமைதி நிலைக்கிறது. ஆனால் என்ன கேள்விக்கு அப்படி விடை தேடினோம், விடை என்ன என்பவை மட்டும் மறந்து விடுகின்றன.

கனவு தவிர நினைவிருக்கும்பொழுதே சில கற்பிதங்கள் (fantasies) எழுகின்றன. அவற்றில் முக்கியமாக ஆசிரியர் விவரித்திருப்பது மரணதேவனுடனான சந்திப்பு. மரணத்திடம் மட்டுமே மரணம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று, தைரியமாக மரணத்தை அழைக்கிறார். அதனுடனான அவரது உரையாடல் மிகவும் ரசிக்கத் தக்கதாக இருக்கிறது. இன்னொரு கற்பிதத்தில் ஆசிரியரின் பிரதியாக இன்னொருவன் அவனுடனே வாழ்ந்து வருகிறான். அவனுக்குப் பிரபுதத்தன் என்று பெயரிடுகிறார். அவனோடு உரையாடுகிறார். சமயத்தில் அவனும் காணாமல் போகிறான்.

புத்தகத்தில் பதிவாகியிருக்கும் இப்படித் தொடர்பற்ற பல சிந்தனை இழைகளைப் பிரித்தும் கோர்த்தும் பார்த்தால் பெயரற்ற ஒரு தளத்தில் எல்லாம் உறவு கொண்டிருக்கின்றன என்று புரிகிறது. வழக்கத்திற்கு மிகவும் மாறுதலான புத்தகம்.

கண் மங்கிய வயோதிகனின் கை பிடித்து, வழியில் நடப்பதை விவரித்துச் சொல்லி அழைத்துப் போகும் சிறுமியைப் போல நம்மை ஆசிரியர் அவரது அனுபவங்களுக்குள் அழைத்துப் போகிறார். தெள்ளத் தெளிவான நடை நம்மைக் கவர்ந்திழுக்கிறது. நூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட சிறிய புத்தகம் என்பதும் வாசிக்க ஊக்கப்படுத்துகிறது.

புனைவின் வடிவ எல்லைகளையும், மரபுகளையும் தாண்டி, ஆழ்ந்த சுய பிரதி பலிப்பு எழுத்தாக இது மலர்ந்திருக்கிறது. ஆழ வாசித்தால் அந்தப் பிரதிபலிப்பில் வாசகனும் தன் முகத்தைப் பார்க்கலாம்.

நான் காணாமல் போகும் கதை
ஆனந்த்
ISBN 81-87477-46-6
காலச்சுவடு பதிப்பகம்
kalachuvadu@sancharnet.in


மனுபாரதி
Share: 
© Copyright 2020 Tamilonline