Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | வாசகர்கடிதம் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
போரை வெறுத்தவன்
- பூவை அமுதன்|நவம்பர் 2023|
Share:
தம் நாட்டுப் படை பலத்தால் மற்ற நாடுகளையும் வென்று அடக்கி ஆள்வது ஆற்றல் மிக்க அரசர்களுக்கு அழகு என்று கருதப்பட்டு வந்தது. தம் ஆட்சியைப் பரப்பவும் தம் புகழைப் பெருக்கவும், பிற நாடுகளின் மீது படையெடுத்துப் போர் செய்வார்கள். சில சமயங்களில், வேறு நாடுகளில் நிலையான ஆட்சியை ஏற்படுத்தவும், மக்கள் முன்னேற்றத்துக்கு வழி செய்யவுங்கூடப் போர் புரிவது உண்டு.

போரில் ஏற்படுகின்ற வெற்றி, மன்னர்களுக்குப் பேரையும் புகழையும் கொடுத்து மேலும் மேலும் அவர்களைப் போரில் ஈடுபட ஆர்வத்தை உண்டாக்கிவிடும். வெற்றிமேல் வெற்றி குவிக்கின்ற அரசர்கள் போரினால் ஏற்படும் இழப்புகளையும் இன்னல்களையும் பொருட்படுத்த மாட்டார்கள்.

ஆனால் போரிலே பெருவெற்றி அடைந்த ஒரு பேரரசன். இனி போரே செய்வதில்லை என்று மனத்தில் உறுதி எடுத்துக் கொண்டு, அதற்குப்பின் ஆயுதத்தையே தொடவில்லை என்றால் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? போரில் தோல்வி கண்டவன் துவண்டு போகலாம்; ஆனால் வெற்றி கண்டவன் போரை வெறுப்பானேன்? அப்படி வெற்றிக்குப் பிறகு, போரை வெறுத்தவன் யார்?

அவன்தான் அசோகச் சக்கரவர்த்தி! கலிங்க நாட்டின்மீது படையெடுத்து அசோகன் பெருவெற்றி அடைந்தான். என்றாலும் அவன் வெற்றிக் களிப்பில் திளைத்துப் போய்விடவில்லை. அதற்கு மாறாக அவன் உள்ளம் பெருந் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது.

'ஆயிரக்கணக்கான வீரர்கள் இரண்டு பக்கங்களிலும் உடலில் காயங்களை ஏற்கின்றனர். உறுப்புகளை இழக்கின்றனர்; உயிரை விடுகின்றனர். போர்க்களத்திலே இரத்தம் ஆறாகப் பாய்கிறது. ஓ! எவ்வளவு கொடுமை! வாழவேண்டிய உயிர்கள் துடித்துச் சாகின்றன. நாட்டுப் பொருள்கள் எவ்வளவு நாசமாகி விடுகின்றன!'

எண்ணிப் பார்த்தான் மாமன்னன் அசோகன். போர்க்களத்திலே உயிரிழந்த போர் வீரர்களையும், உறுப்பிழந்த போர் வீரர்களையும், குதிரைகளையும், யானைகளையும் அவைகளின் மரண ஓலங்களையும் வேதனையான முனகல்களையும் எண்ணி எண்ணிப் பெருந்துயரில் அழுந்தினான் அசோகன்.

'நாட்டில் போரை உண்டாக்கித்தான் புகழ் அடைய வேண்டுமா? நாட்டில் அமைதியான ஆட்சி நடத்திப் புகழ் அடைய முடியாதா ஆயுத பலத்தைக் கொண்டுதான் மக்களை அடக்கி ஆள வேண்டுமா? அறிவு பலத்தைக் கொண்டு அவர்களை ஆளமுடியாதா?'

பலமாகச் சிந்தித்தான்!

சிந்தனையின் முடிவாக, அவன் உள்ளத்திலே நல்ல தெளிவு பிறந்தது.

'போரினால் பெறும் வெற்றியைவிட அன்பினால் அடையும் வெற்றியே சிறந்தது. அன்பு வழியில் ஆட்சி நடத்துகின்றவர்களையே அனைவரும் விரும்புவர்' என்ற எண்ணம் அவன் உள்ளத்திலே உயர்ந்து நின்றது.

உடனே அசோகன் தன் உடைவாளையும் போர்க்கவசங்களையும் களைந்து எறிந்தான். 'இனி ஆயுதத்தையே தொடுவது இல்லை!' என்று சபதம் எடுத்துக் கொண்டான்.

அன்று முதல் அவன் ஆட்சியிலே, அனைவரும் விரும்பும் வகையில் ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்டது. முன்பு இருந்ததைவிட அதிக அளவுக்குப் பலம் பொருந்திய சேனையைத் திரட்டினான். போருக்காக அல்ல! பொதுப் பணிகள் புரிவதற்காக! நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்வதற்காக அந்தப் பெருஞ்சேனையைப் பயன்படுத்தினான்.

மக்களை நல்வழிப்படுத்த, அவர்கள், உள்ளங்களில் நல்ல எண்ணங்களைப் பதிய வைக்க, அவர்களுக்கு நீதிகளைப் போதிக்க, அறநெறியாளர்களை அமர்த்தினான். அவர்கள் நாடெங்கிலும் சென்று நல்லறத்தைப் பரப்பினார்கள். நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற நெறிமுறைகளை விளக்கினார்கள். மக்கள், அவர்கள் தொண்டினால் நல்ல பயன் அடைந்தார்கள்.

மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நீதிகளை நிலையாக நிறுத்த வேண்டிக் கற்றூண்களிலும் கற்பாறைகளிலும் அவற்றை வாசகங்களாகச் செதுக்கி வைத்தான்.

'உயிர்களைத் துன்புறுத்தாதே!'

'பெரியவர்களிடம் பணிவாய் நடந்துகொள்க!'

'மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதை மறக்க வேண்டாம்! எவரிடமும் இழிவாகப் பேசாமல், இறக்கத்துடன் நடந்து கொள்க!'

'மற்றவர் கருத்துகளையும் கொள்கைகளையும் மதித்து ஒழுகுக.'

இத்தகைய கொள்கைகளைக் கொண்ட புத்த மதத்தை அசோகன் ஆதரித்தான். இந்தக் கொள்கைகளைத் தன் நாட்டில் மட்டுமன்றிப் பிறநாடுகளிலும் பரவச் செய்தான்.

இன்று அசோகனை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அன்பினால் ஆட்சி செய்து அவன் அனைத்துலகமும் புகழும் பேறு பெற்றான்.

இவ்வாறு அசோகன் பேரும் புகழும் சீரும் சிறப்பும் பெறுவதற்கு அவனுடைய ஆசிரியரும் காரணமாக இருந்தார் என்பதை நாம் அறியும்போது ஆசிரியப் பெருமக்களின் பெருமை நமக்குப் புரிகிறது.

புகழ்பெற்ற மன்னன் சந்திர குப்தனுக்குப் பேரனாகவும், பிந்துசாரனுக்குப் புதல்வனாகவும் பிறந்த அசோகனுக்கு ஆசிரியராக இருந்த நல்லவரின் பெயர் அம்ரசர் என்பதாகும்.

அம்ரசர் அசோகனுக்கு எல்லாக் கலைகளையும் கற்பித்து வல்லவனாக்கினார். அசோகன் அரசனாகி வல்லவனாக இருப்பதோடு அமையாமல் நல்லவனாகவும் விளங்கவேண்டும் என்பது நல்லாசிரியர் அம்ரசரின் நல்லெண்ணம்.

அதற்கேற்ப, அசோகனுக்கு ஆர்வமூட்டி, முன்னோர் பெருமைகளையும், பின் நாளில் அவன் ஈட்ட வேண்டிய புகழினையும் எடுத்து விளக்கி அவனை அறிவும் ஆற்றலும் மிகுந்தவனாக ஆக்கினார்.

"அசோகா! உன் பாட்டனார், பெருவீரர் சந்திரகுப்தரின் பெருமைகளுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நீ தகுதிகள் மிகுதியும் பெற்ற மன்னனாக விளங்க வேண்டும். உன் அறிவையும் ஆற்றலையும் இந்த அகிலமே வியந்து போற்ற வேண்டும். உன் புகழ்க்கொடி எட்டுத் திக்கிலும் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும்" என்று அம்ரசர் அசோகனுக்கு நினைவூட்டிக்கொண்டே இருந்தார்.

ஆசிரியரின் நல்லெண்ணங்களைத் தவறாது நிறைவேற்றுவதாக அவரிடம் அசோகன் இளமையிலேயே உறுதிமொழி அளித்திருந்தான்.

"இந்த உலகத்தையே நான் வெற்றி கொள்வேன்" என்று ஆசிரியர் அம்ரசருக்கு அசோகன் அளித்த வாக்குறுதி பொய்த்துப் போகவில்லை. அது நிறைவேறிவிட்டது. அசோகன் அன்பினால் இந்த உலகத்தையே வென்றுவிட்டான் அல்லவா?

ஆசிரியரின் அறிவுரைகளை ஏற்று நடக்கின்ற மாணவர்களை அகிலமே போற்றும் என்பதற்கு அசோகன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறான்.

ஆசிரியர் அறிவுரை ஏற்றால்

அகிலம் உன்னைப் போற்றும்!
பூவை அமுதன்
Share: 




© Copyright 2020 Tamilonline