Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | முன்னோடி | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
அம்மா என்றால் அன்பு
- இரஜகை நிலவன்|செப்டம்பர் 2023|
Share:
சித்ரா ஸ்கூல் முடிந்து வந்ததும், முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அம்மா மல்லிகா எவ்வளவு சொல்லியும் காபி, டிபன் சாப்பிடவில்லை. அப்பா திரவியம் வருவதற்காகக் காத்திருந்தாள்.

"சித்ரா, எந்த விஷயமாக இருந்தாலும் அப்பா வந்த பிறகு பேசலாம். ஒழுங்கா அடை சாப்பிட்டுவிட்டு டியூசனுக்கு போ" என்றாள் மல்லிகா.

"எனக்கு அடையும் வேண்டாம். காப்பியும் வேண்டாம். நான் டியூசனுக்கும் போகமாட்டேன்."

"ஏன்?"

"உனக்கு எதுவுமே தெரியமாட்டேன் என்கிறது. நான் எல்லாத்துக்கும் டியூசன் டீச்சரிடமும் அப்பாவிடமும்தான் கேக்க வேண்டியிருக்கிறது. எங்க டீச்சர் கீதாவிற்கு எல்லாம் தெரிகிறது. அவர்கள் எவ்வளவு அழகான நுனிநாக்கு இங்லீஸ் பேசுவார்கள் தெரியுமா?"

"சித்ரா, நான் படிக்கவில்லை என்பதால்தானே கண்ணே உன்னை நன்றாகப் படிக்கவேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன்."

"எனக்குப் படிக்கத் தெரியும். நான் ஒன்றும் டியூசனுக்குப் போகவில்லை."

"ஏன் உடம்புக்குச் சரியில்லையா?"

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை." மல்லிகா குழந்தையின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். "காய்ச்சல் எதுவுமில்லையே, ஏன் டியூசன் போகவில்லை?" என்றாள் பரிவோடு.

அவள் கையைத் தட்டி விட்டவள் "நான் எல்லாம் அப்பா வந்த பிறகு பேசிக் கொள்கிறேன்" என்றாள் சித்ரா.

"சரி, யூனிஃபார்மைக் கழற்றித் துணி மாற்றிக்கொண்டு உட்கார்."

"நான் ஒன்றும் செய்யமுடியாது" என்ற சித்ராவை அவள் விருப்பப்படி விட்டுவிட்டுச் சமயலறைக்குச் சென்று மற்ற வேலைகளைக் கவனித்தாள் மல்லிகா.

திரவியம் வீட்டிற்கு வந்து, டையை உருவிப் போட்டு விட்டு, ஷுவைக் கழற்றி போட்டுவிட்டு திரும்பிப் பார்த்தால் சித்ரா கோபத்தில் அமர்ந்திருப்பது புரிந்தது. "என்னடா? சித்ரா குட்டி, என்னாச்சு?" என்று அருகில் வந்து தலையை ஆதரவாகத் தடவினான்.

அவள் மறுபக்கம் திரும்பி அமர்ந்து கொண்டாள். டீ கொண்டு வந்த மல்லிகா, இன்றைக்கு டிபன் வேண்டம், காபி வேண்டாம். டியூசன் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள். என்ன என்று கேட்டால் கோபத்தில் பேச மறுக்கிறாள்" என்றாள்.

"சரி, சரி. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று டீயை வாங்கிக்கொண்டு "சித்ரா குட்டிக்கு என்னம்மா ஆச்சு?" என்றான் திரவியம்.

"நீங்கள் ஏன் படிக்காத இந்த அம்மாவைக் கல்யாணம் செய்துகொண்டீர்கள் அப்பா?" என்று சித்ரா கோபமாகக் கேட்டபோது திரவியத்திற்குத் தூக்கிவாரிப் போட்டது. "என்னம்மா சொல்கிறாய்!" என்று அதிர்ச்சியோடு கேட்டான்.

"நீங்கள், எங்க கீதா டீச்சர் மாதிரி படிச்ச பெண்ணாக்க கட்டியிருந்தால் நான் எதற்கெடுத்தாலும் டியூசன் டீச்சரிடம் போய்க் கேட்க வேண்டிய அவசியம் வராதில்லையா?"

"அது வந்து... சித்ரா..."

"இல்லையப்பா, எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்றாங்க. இந்த அம்மா சரியில்லே, பாருங்க ஸ்டைலா பேசத் தெரியவில்லை. எங்க கீதா டீச்சர் எவ்வளவு அழகாக நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவர்கள் தெரியுமா? தமிழில்கூட அழகாகத்தான் பேசுவார்கள். காட்டன் சேலையை எவ்வளவு நறுவிசாகக் கட்டிக் கொண்டு வருகிறார்கள் தெரியுமா?"

"அது சரி சித்ரா, எல்லாரும் கீதா டீச்சர் மாதிரி இருக்க முடியுமா? நம்முடைய அம்மா அளவிற்கு அவர்களுக்கு சமைக்கத் தெரியுமா?"

"சமைக்கிறது ஒரு பெரிய விஷயமாப்பா?"

"இல்லைன்னா இவ்வளவு ருசியா நமக்குச் சாப்பாடு போடமுடியுமா? உங்க கீதா டீச்சருக்கு இந்த அளவுக்கு சமைக்கவோ, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவோ நேரம் இருக்காது. நம்முடைய அம்மா எவ்வளவு அழகாக வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள்! உன்னைத் தினமும் விடியற்காலம் எழுப்பி, துணி இஸ்திரி போட்டு, பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த அளவுக்கு உன் கீதா டீச்சரால் முடியாது சித்ராம்மா."

"போங்கப்பா, உங்களுக்கு ஒன்றும் தெரியாது. கீதா டீச்சர் மாதிரி நம்ம அம்மா கிடையாது."

"சரி, சரி யூனிஃபார்மைக் கழற்றிவிட்டு டியூசனுக்கு ஓடு" என்றவன் மல்லிகா கண்ணீர் விடுவதைப் பார்த்து "சீ, அசடு சின்னக்குழந்தை ஏதோ சொல்கிறது. அதைக் கேட்டு நீயும் அழுது கொண்டிருக்கிறாயே" என்றான்.

"இல்லைங்க, உங்க படிப்புக்கு நீங்க படிச்ச பொண்ணப் பாத்து கல்யாணம் செய்திருக்கலாம்."

"சரியாப் போச்சு. இன்னைக்கு அம்மாவுக்கும் பொண்ணுக்கும் என்னாச்சு" என்றவாறு டீயைக் குடிக்க ஆரம்பித்தான்.

★★★★★


சிலநாட்கள் கழிந்தன. திடீரென்று சித்ராவுக்கு பயங்கரமான டைஃபாய்டு காய்ச்சல். அவளால் பள்ளிக்குப் போக முடியவில்லை. ஒரு வாரம் படுத்த படுக்கையாக் கிடந்தாள்.

மல்லிகாவுக்கு இரவு பகல் தெரியவில்லை. டாக்டர் சொன்ன மருந்துகளை வேளா வேளைக்குக் கொடுப்பாள். சித்ரா சுகமாவதற்காக பகவானைப் பிரார்த்தனை செய்தாள். பூஜை புனஸ்காரங்கள் செய்து, உபவாசமிருந்து பத்துப் போட்டாள். மல்லிகாவின் உலகமே சித்ராதான்.

சித்ரா கொஞ்சம் கொஞ்சமாகத் தேறினாள்.

அன்று அலுவலகத்திலிருந்து வந்த திரவியம் மெதுவாக சித்ரா அருகில் போய் "இப்போது எப்படி கண்ணம்மா இருக்கிறது? நாளையிலிருந்து ஸ்கூலுக்குப் போகிறாயாம்மா?" என்று கேட்டார்.

"ஆமாப்பா."

இந்நேரம் "உங்கள் கீதா டீச்சர் மாதிரி அம்மா இருந்திருந்தால் உன்னைப் போட்டுவிட்டு ஸ்கூலுக்குப் போயிருப்பார்கள் அல்லவா? அம்மா மாதிரி ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு உன்னை அவர்களால் அருகிலிருந்து கவனிக்க முடியுமா?"

சித்ரா ஒரு நிமிடம் யோசித்தாள். "ஆமாப்பா, நம்ம அம்மா மாதிரி நல்ல அம்மா யாரும் கிடையாது" என்று அருகில் நின்ற மல்லிகாவைப் பிடித்து கட்டிக் கொண்டாள்.

"இனி எப்போதும் அம்மா மனதை நோகடிக்கக் கூடாது. என்ன சித்ரா?" என்று திரவியம் கேட்க, "சாரி, அம்மா" என்று மல்லிகாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் சித்ரா.
கவிஞர். இரஜகை நிலவன்,
மும்பை
Share: 




© Copyright 2020 Tamilonline