Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | முன்னோடி | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
அலமாரி
சோதனையில் வெற்றி
- உ.வே. சாமிநாதையர்|செப்டம்பர் 2023|
Share:
கும்பகோணம் ஸ்டேஷனில் இறங்கி இரவு பத்துமணிக்கு நான் நேரே தியாகராச செட்டியார் வீட்டை அடைந்தேன். மாணாக்கர்களிடம் பேசிக்கொண்டிருந்த செட்டியார் அப்போதுதான் அவர்களுக்கு விடையளித்து விட்டு ஆகாரத்துக்குச் செல்ல எழுந்தார். அவ்வளவு சீக்கிரத்தில் அவர் என்னை எதிர்பார்க்கவில்லை. ஆதலால் என்னைக் கண்டவுடன் ஆச்சரியமடைந்து, "ஏது? இதற்குள் உங்களை அனுப்ப ஸந்நிதானத்துக்கு மனம் வந்ததா?" என்றார்.

"ஆம், இன்று நல்ல நாளாக இருந்தமையால் என்னை அனுப்பினார்கள். திதியென்று சொல்லி நீங்கள் அவசரமாக வந்தீர்களே. சரியான காலத்தில் அது நடந்ததா?" என்று கேட்டேன்.

செட்டியார் செய்த தந்திரம்
அவர் சிரித்துக் கொண்டே, "திதியும் இல்லை; ஒன்றுமில்லை. ஸந்நிதானத்துக்கு உங்களிடமுள்ள பிரியத்தை நன்கு அறிவேன். நான் அங்கே தங்கியிருந்தால் திடீரென்று வேறு எதையாவது நினைத்து உங்களை அனுப்ப முடியாதென்று சொன்னாலும் சொல்லக்கூடும். அந்தப் பயத்தால், அவர்கள் வாக்களித்தவுடன் புறப்பட்டுவிட்டேன், திடீரென்று புறப்படுவதற்குக் காரணமாகத் திதியென்று ஒரு பொய்யைச் சொன்னேன். நல்ல காரியம் செய்வதில் பொய் சொன்னால் தோஷமில்லை. 'பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்' என்னும் குறள் அதைத்தானே சொல்லுகின்றது" என்றார்.

பிறகு அவர் ஆகாரம் உட்கொண்டு சிறிது நேரத்தில் வந்தார். அப்பால் நானும் அவரும் நெடுநேரம் பேசினோம். சுப்பிரமணிய தேசிகர் எனக்கு அளித்த சால்வை முதலியவற்றை எடுத்துக் காட்டினேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தார். தாம் வேலைக்கு வந்த வரலாற்றையும், தம் வேலையை எனக்குச் செய்விக்க நினைந்து இரண்டு வருஷங்களாக முயன்று வந்ததையும் அவர் எடுத்துச் சொன்னார். காலேஜின் பெருமை, அங்குள்ள ஆசிரியர்களின் இயல்பு, பாடம் சொல்லவேண்டிய முறை முதலிய பல உபயோகமான விஷயங்களையும் கூறினார். அன்றிரவு அவர் வீட்டிலேயே தங்கினேன்.

புஸ்தகக் கட்டுகள்
மறுநாள் சனிக்கிழமை காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துக்கொண்ட பிறகு செட்டியார் தம் பீரோவிலிருந்து ஏறக்குறைய நூறு புஸ்தகங்களை எடுத்து மூன்று சவுக்கங்களில் பிரித்து மூன்று கட்டாகக் கட்டினார். அவரிடமிருந்த ஒற்றை மாட்டு வண்டியில் அவர் அவற்றை வைத்து அதில் என்னை ஏறச்செய்து தாமும் ஏறிக்கொண்டார். வண்டி புறப்பட்டது.

"உங்கள் திறமையை இந்தக் காலேஜ் ஆசிரியர்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா? அதற்காகத்தான் உங்களை அழைத்துப் போகிறேன்" என்றார் செட்டியார்.

"கோபால ராவ் அவர்களைப் பார்க்கவா?" என்று கேட்டேன்.

"அவர் மூலமூர்த்தி. அவரைப் பார்ப்பதற்கு முன் பரிவார தெய்வங்களைப் பார்க்கவேண்டும்" என்றார் அவர்.

காலேஜில் பிரின்ஸிபாலுக்கு அடுத்த பதவியை வகித்த ஸாது சேஷையர் வீட்டுக்குச் சென்று இறங்கினோம். புஸ்தகங்களை அவர் வீட்டு மெத்தையில் அவர் உள்ள இடத்திலிருந்த ஒரு பெரிய வட்ட மேஜையின் மேல் வைக்கச் செய்தார். சேஷையர் எங்கோ வெளியில் சென்றிருந்தார். செட்டியார் ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்து "என் வேலைக்கு நான் குறிப்பிட்டவரை இங்கே அழைத்து வந்திருக்கிறேன். நீங்கள் இவ்விடம் வந்து நேரில் பரீக்ஷை செய்து நான் அவரைப்பற்றிச் சொன்னது உண்மைதானா வென்பதைத் தெரிந்து கொள்ளலாம்" என்று எழுதி ஓர் உறையிலே போட்டுக் காலேஜ் ஆசிரியர்களாகிய ஆர்.வி. ஸ்ரீநிவாஸையர் முதலியவர்களிடம் காட்டி வரும்படி ஒருவரை அனுப்பினார். அவற்றையெல்லாம் கவனித்த எனக்குச் செட்டியார் ஏதோ ஒரு பெரிய சபை கூட்ட ஏற்பாடு செய்வதாகத் தோன்றியது.

சிறிது நேரத்தில் ஆர்.வி. ஸ்ரீநிவாஸையர் வேறு ஆசிரியர்கள் சிலருடன் அங்கு வந்து சேர்ந்தார். புறத்தே சென்றிருந்த சேஷையரும் வந்துவிட்டார். வந்தவுடன் தமது மேஜையின்மேல் உள்ள மூட்டைகளைக் கவனித்து, "இவை என்ன?" என்று கேட்டார்.

"எல்லாம் தமிழ்ப் புஸ்தகங்கள்" என்றார் செட்டியார். பிறகு என்னையும் அறிமுகம் செய்வித்தார்.

வந்த ஆசிரியர்களுள் ஒருவர் "தமிழ்ப் புஸ்தகங்கள் இவ்வளவு உள்ளனவா?" என்று கேட்டார்.

செட்டியார், "இன்னும் எவ்வளவோ உண்டு. அச்சில் வாராத ஏட்டுப் புஸ்தகங்கள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன" என்று கூறி அவருடைய வியப்பைப் பின்னும் அதிகமாக்கினார்.

வேறொருவர், "இவை என்ன என்ன புஸ்தகங்கள்? எதற்காக இவ்வளவு?" என்று கேட்டார்.

"கந்தபுராணம், கம்பராமாயணம், பாரதம், நைடதம் முதலிய காவியங்களும், பல பிரபந்தங்களும், ஸ்தல புராணங்களும், நன்னூல் முதலிய இலக்கணங்களும் உள்ளன. இப்புஸ்தகங்களில் யார் யாருக்கு எது எது இஷ்டமோ அதைப் பிரித்து எடுத்து இவரிடம் கொடுத்து விஷயத்தையும் சந்தர்ப்பத்தையும், பொருளையும் கேட்டால் இவர் திருத்தமாக விடையளிப்பார். அதிலிருந்து நான் முன்பு சொல்லியது உண்மை யென்பது விளங்கும்" என்று செட்டியார் சொன்னார்.

ஆதீன வித்துவான்
உடனே செட்டியார் என்னை நோக்கி, எனக்குப் பண்டார சந்நிதிகள் அளித்த யோக்கியதா பத்திரத்தைக் காட்டும்படி சொன்னார். நான் எடுத்துக் கொடுத்தேன். அதை அவர் வாங்கி, B. ஹனுமந்தராவ் என்னும் ஆசிரியரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அவர் அவ்வாறே வாசிக்கத் தொடங்கி, 'இப்பத்திரிகையில் எழுதப்பட்டிருக்கிற சாமிநாதையர் நமது ஆதீன வித்துவான்' என்று வாசித்து நிறுத்தி மற்றவர்களுடைய முகங்களைப் பார்த்தார். முற்றுப்புள்ளியே இல்லாமல் எழுதியிருந்த அந்தப் பத்திரிகையில் வாக்கியங்களை எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம். சுப்பிரமணிய தேசிகர், "நமது ஆதீன வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் ஆறு வருஷ காலம் இலக்கண இலக்கியங்கள் நன்றாய் வாசித்ததுமன்றி" என்று அச்சிறப்பைப் பிள்ளையவர்களைச் சார்த்தி எழுதுவித்திருந்தார். ஹனுமந்தராவ் வாசித்தபோது, "சாமிநாதையர் நமது ஆதீன வித்துவான்" என்று நிறுத்தியது எனக்குப் பெரிய அனுகூலத்தை உண்டாக்கியது. என்னையே ஆதீன வித்துவானாக எல்லோரும் எண்ணி வியப்புற்றார்கள். இதைக் கவனித்த நான், "ஊழ்வினையின் பலம் இது" என்று எண்ணி மிகவும் மகிழ்ந்தேன்.

பரீக்ஷை
அப்பால் அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு புஸ்தகத்தைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டனர். முதலில் ஒருவர் பிரபுலிங்கலீலையை என்னிடம் பிரித்துக் கொடுத்து நடுவில் ஒரு செய்யுளைக் காட்டிப் பொருள் கூறும்படி சொன்னார். நான் அதை ராகத்தோடு வாசித்துச் சந்தர்ப்பத்தை விளக்கிப் பொருளையும் விரிவாகச் சொன்னேன். அப்போது சிவராமையரென்ற ஆசிரியர், "நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இவரைப் பரீக்ஷை செய்து கொள்ளுங்கள்; என்மட்டில் திருப்தியே. சங்கீத ஞானம் இவருக்கு இருக்கிறது. பாட்டைக் காதுக்கு இனிமையாகப் படிக்கிறார்" என்றார்.

"படிக்கும்போதே நிதானமாக நிறுத்தி அர்த்தம் விளங்கும்படி படிக்கிறார்" என்றார் மற்றொருவர்.

பிறகு சாது சேஷையர் திருவிளையாடற் புராணத்தில் சில பாடல்களை எடுத்துக் கொடுத்தார். அவற்றைத் தக்கபடி படித்துக் காட்டிப் பொருளும் சொன்னேன்.

நன்னூலில் மிக நுட்பமான கேள்விகள் சிலவற்றை ஆர்.வி. ஸ்ரீநிவாஸையர் கேட்டார். எல்லாவற்றிற்கும் திருப்தியாக விடையளித்தேன். இவ்வாறு ஆசிரியர் ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோற்றியபடி கேள்வி கேட்டுத் திருப்தியுற்றனர்.

செய்யுள் இயற்றல்
அப்பால் செட்டியார், "நூதனமாகப் பாடல்களை இயற்றும் பழக்கமும் இவருக்கு உண்டு" என்று சொல்லி நான் இயற்றிய பாடல்களில் சிலவற்றைச் சொல்லும்படி கூறவே, நான் சொன்னேன். ஸ்ரீநிவாஸ ஐயர், "பாடம் சொல்லும் சக்தி இருக்கிறதாவென்று நாம் கவனிக்க வேண்டுமே ஓழியச் செய்யுளியற்றும் வன்மையைப் பற்றிக் கவனிக்க வேண்டுவதில்லை" என்றார்.

"அந்தச் சக்தி இருந்தால் வேண்டாமென்பீர்கள் போல் இருக்கிறதே?" என்று செட்டியார் சொல்ல, எல்லோரும் சிரித்தார்கள்.

ஓர் ஆசிரியர், "இப்போது அப்படிப் பாடுவாரா?" என்று கேட்டார்.

செட்டியார், "ஏதேனும் ஒரு விஷயத்தை எடுத்துக் கொடுத்தால் விரைவில் அதை அமைத்துப் பாடுவார்" என்றார்.

எந்த விஷயத்தைப் பற்றிப் பாடச் சொல்லலாமென்று எல்லோரும் யோசிக்கையில், செட்டியார் சேஷையர் விஷயமாகச் செய்யலாமென்றார். சேஷையரோ ஆராவமுதன் விஷயமாக இருக்கட்டுமென்றார். மற்றொருவர் "ஆராவமுதன் விஷயமாக ஒரு பழைய பாடலைச் சொன்னாலும் சொல்லிவிடலாம்" என்று சொல்லிவிட்டு, ஸ்ரீநிவாசையர் விஷயமாகச் செய்யலாமென்றார். ஸ்ரீநிவாசையர், "இங்கே இருப்பவர்களுக்கெல்லாம் தமிழாசிரியர் செட்டியாரவர்கள். அவர்கள் விஷயமாகச் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்" என்றார். சேஷையருள்பட எல்லாரும் அதற்குச் சம்மதித்தார்கள்.

"கடைசியில் என்னிடமே தள்ளிவிட்டீர்களா? சரி. என்ன விஷயத்தை அமைக்க வேண்டுமோ அதையும் சொல்லி விடுங்கள்" என்றார் செட்டியார்.

அப்போது ஸ்ரீநிவாசையர், "மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் நீங்கள் முதலிற் படித்தவர்கள். நான் பின்பு படித்தவன். இதனால் ஜேஷ்ட, கனிஷ்ட முறை நம் இருவருக்கும் உண்டு. இந்த முறையால் நீங்கள் இதுவரை பார்த்து வந்த வேலையை எனக்குச் செய்விக்க வேண்டும். இந்தக் கருத்தை வைத்து ஐந்து நிமிஷங்களில் அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தமொன்று இயற்றிச் சொல்ல வேண்டும்" என்று சொன்னார்.

நான் சொன்ன பாடல்
எல்லோரும் மௌனமாக இருந்தார்கள். செட்டியார் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் கவலைக்குறி படர்ந்தது. நான் விஷயத்தை வாங்கிக்கொண்டு மனத்துக்குள் பாடலை அமைத்து வந்தேன். செட்டியார் என்மேல் வைத்தகண் வாங்கவில்லை. நான் பாடுவேனோ மாட்டேனோ என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது போலும். நான்கு நிமிஷங்கள் ஆயின. ஐந்தாவது நிமிஷத்தில்,

"வாய்ந்தபுகழ் படைத்திலங்கு மீனாட்சி
சுந்தரநா வலவன் பாலே
ஏய்ந்ததமிழ் ஆய்ந்தமுறைக் கியைவுறநீ
இதுகாறும் இனிதின் வேய
ஆய்ந்தவள நகர்க்குடந்தைக் காலேஜில்
நின்னிடமெற் களித்தல் நன்றே
வேய்ந்ததமிழ் முதற்புலமைத் தியாகரா
சம்பெயர்கொள் மேன்மை யோனே"


என்று கூறி முடித்ததுதான் தாமதம், செட்டியார் குதித்து எழுந்து, "என் வயிற்றில் பாலை வார்த்தீரையா!" என்று சொல்லிக் குதூகலம் அடைந்தார். மற்றவர்களும், "சபாஷ்" என்றனர்.

நான் பாட்டுக்குப் பொருள் சொன்னேன். செட்டியார், "அந்த 'வாய்ந்த' என்ற வார்த்தையைக் கண்டு சந்தோஷப்பட வேண்டும். இந்த அவசரத்தில் அந்தமாதிரி சொல்லுவதற்கு ஐயா அவர்களிடம் படித்துப் பழகினவர்களுக்குத்தான் தெரியும். தானே வந்து வாய்ந்த புகழைப் படைத்து விளங்குமென்று அர்த்தம்" என்று மற்றவர்களைப் பார்த்துச் சொன்னார்.

பொருள் கூறி முடிக்கையில் 'தியாகராசப் பெயர்கொள் மேன்மையோனே' என்பதற்கு உரை கூறிவிட்டு, "அந்தப் பெயருக்கு ஏற்றபடி எனக்கு வேலையை அளித்தால்தான் உங்கள் பெயர் நிலைக்கும்; இல்லாவிட்டால் நிலைக்காது" என்றேன்.

"இவ்வளவு விஷயங்களையும் பொருத்திச் சீக்கிரத்தில் அமைத்தது ஆச்சரியந்தான். நான் சொன்ன கருத்தை 'ஏய்ந்த தமிழாய்ந்த முறைக்கு இயைவுற' என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறார்" என்று ஸ்ரீநிவாசையர் சந்தோஷமுற்றார்.

யாவரும் தங்கள் தங்கள் திருப்தியைத் தெரிவித்துக்கொண்டனர்.

"சாயங்காலம் கோபாலராவ் அவர்களைப் பார்க்கவேண்டும். இங்கேயே தங்கியிருங்கள். நான் வந்து அழைத்துப் போகிறேன்" என்று சொல்லிவிட்டுச் செட்டியார் தம் வீடு சென்றார். மற்றவர்களும் தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.

(உ.வே. சாமிநாதையர் எழுதிய என் சரித்திரம் நூலில் இருந்து ஒரு பகுதி)
உ.வே. சாமிநாதையர்
Share: 




© Copyright 2020 Tamilonline