Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | முன்னோடி | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஓவியர் மணிகண்டன்
- அரவிந்த்|செப்டம்பர் 2023|
Share:
சுவரோவியம் தொடங்கி பென்சில் ஓவியம், நீர்வண்ண ஓவியம், எண்ணெய் வண்ண ஓவியம், தெய்வ உருவங்கள், இயற்கை என விதவிதமாக ஓவியங்கள் வரைகிறார், 24 வயதான இளம் ஓவியர் மணிகண்டன். பி.காம். பட்டதாரி. சுயமாக ஓவியம் கற்றவர். தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை விருது, சர்வதேசத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர். சமீபத்தில் இவர் வரைந்த ஐயப்பன் ஓவியம், இணையத்தில் மிகப் பரபரப்பாகப் பகிரப்பட்டது. அவரது ஓவிய வாழ்க்கை குறித்துப் பேசுவோமா?

★★★★★




கே: உங்கள் குடும்பம், இளமைப்பருவம், கல்வி குறித்துச் சொல்லுங்கள்....
ப: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் பேரையூர் சொந்த ஊர். இங்கு பிறந்து வளர்ந்தேன். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டதால், பல இன்னல்களுக்கு இடையே படித்து, முன்னேற வேண்டியிருந்தது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர மிகவும் சிரமமாக இருந்தது. அம்மா சண்முகவள்ளி கிடைத்த வேலைகளைச் செய்து என்னையும் தம்பியையும் படிக்க வைத்தார். அம்மாவின் கஷ்டத்தைப் போக்க நானும் எட்டாவது படிக்கும்போது வேலைக்குப் போய்விட்டேன். தெருவில் சுவரோவியங்கள் வரைவது, கட்சிகளின் சின்னங்களை வரைவது, விளம்பரங்கள் எழுதுவது போன்ற வேலைகளைச் செய்தேன். இதில் பெரிதாக வருமானம் இல்லை. இந்தத் துறையை விட்டு விடலாம் என்றுகூட அப்போது சில நேரம் தோன்றும். ஆனாலும் நம்பிக்கை தளராமல் துறையில் பயணத்தைத் தொடர்ந்தேன்.

ஓவியம் வரைந்து பழகினேன். முதலில் பென்சில், மரக்கரியில் கோட்டோவியங்கள் வரைந்தேன். பிறகு வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங், அக்ரிலிக் முயற்சிகள் தொடர்ந்தன. தலைகீழாக வரைவது, எழுத்துகளில் வரைவது என்று வித்தியாசமான முயற்சிகளை முன்னெடுத்தேன். எனக்கு குரு என்று யாரும் கிடையாது. எல்லாம் நானே சுயமாகக் கற்றுகொண்டதுதான். ஆனால், எல்லாமே எனக்குச் சிறப்பாகக் கைகூடியது. என் முதல் ஓவியமாக என் அம்மாவை வரைந்தேன், அப்பா இறந்தபிறகு அந்த வலி தெரியக்கூடாது என்று அம்மா என்னை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டே வியாபாரம் செய்திருக்கிறார். அதைத் தத்ரூபமாக வரைந்தேன். பரவலான பாராட்டு கிடைத்தது.

அப்படிப் பாராட்டும்போது சிலர், 'உன் அப்பாவை மாதிரியே வரையறடா' என்று சொன்னார்கள். அப்போதுதான் என் அப்பா ஒரு சைன்போர்டு ஆர்ட்டிஸ்டாக இருந்தார் என்பதே எனக்குத் தெரியவந்தது. அதனால் எனக்குள் இயல்பாக ஓவியக்கலை இருந்திருக்கிறது. பிறகு பி.காம். படித்தேன். அதே நேரம், ஓவியத்தை முறையாகக் கற்க நினைத்தேன். அதனால் தமிழ்நாடு ஓவியத் தொழில் பயிற்சி மையம் மூலம் ஓவியம் கற்றேன். தொடர்ந்து திருத்தணி தொழிற்பயிற்சி மையத்தில், 'டிப்ளமா இன் ஃபைன் ஆர்ட்ஸ்' கோர்ஸ் படித்தேன். அடுத்து, 'டிப்ளமா இன் டெம்பிள் ஆர்ட்' தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முடித்தேன். சான்றிதழ் பெறவே இவற்றைப் படித்தேன்.



கே: ஆரம்பத்தில் எந்த வகை ஓவியங்களை வரைந்தீர்கள், வரவேற்பு எப்படி இருந்தது?
ப: சிறுவயதில் இருந்தே கோவில் பணிகளுக்கு மிகுந்த ஆர்வத்துடன் செல்வேன் . அதற்கான விரதமுறைகளைக் கற்று, காலப்போக்கில் கடவுளின் உருவங்களை வரைவதில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது.

ஆனால், ஓவியத்தை நான் கலையாகக் கற்கவில்லை. வறுமையில் இருந்து குடும்பத்தைக் காப்பாற்றவும், என்னை நானே மேம்படுத்திக் கொள்ளும் பயிற்சியாகவுமே கற்றேன். அந்த வகையில், நான் ஓவியக்கலை மூலமாக வறிய வாழ்க்கையைப் பல்வேறு வண்ணங்களால் நிரப்பிக்கொண்ட, புதுமைக் கலைஞன் நான். வறுமையை வெல்ல அடுத்தவர்கள்தான் உதவவேண்டும் என்பதில்லை. நாமேகூட நம் வாழ்க்கையை வண்ணங்களால் அழகாக்கலாம். அதற்கு நானே ஓர் உதாரணம்.

பென்சில் ஓவியம் வரைவேன். கோட்டோவியமும் வரைவேன். சுவரோவியம், அக்ரிலிக் பெயிண்ட் ஓவியம், ஆயில் பெயிண்ட் ஓவியம், தத்ரூப ஓவியம், நீர் வண்ண ஓவியம் என எல்லா விதமான ஓவியங்களையும் வரைந்து பழகி இருக்கிறேன். கடவுள் ஓவியங்கள் மற்றும் சுவர் ஓவியங்கள் எனது தனித்துவம் எனப் பலர் என்னிடம் சொல்லியுள்ளனர்.

மணிகண்டனின் மாணாக்கர் தம் படங்களுடன்



கே: நவீனத் தொழில்நுட்பங்களை, கணினி போன்றவற்றைப் பயன்படுத்தி வரைகிறீர்களா?
ப: நான் பாரம்பரிய முறையில் கையால் வரைவதை மட்டுமே இதுவரை செய்து வருகிறேன். நவீனத் தொழில்நுட்பம் வேண்டிய ஒன்றுதான். ஆனால், எனக்கு அதில் பெரிதாக ஆர்வம் இல்லை. நான் கணினி மற்றும் டிஜிட்டல் முறையில் இதுவரை வரைந்ததில்லை. முற்றிலும் தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆனால், மாற்றம் என்பது உறுதி.

ஓவியமும் நானும்
என் கிராமத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச ஓவிய வகுப்புகள் எடுத்தேன். பொதுவாக, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஓவிய ஆசிரியர்கள் இருப்பார்கள். ஆனால், நடுநிலைப் பள்ளிகளில் இருக்கமாட்டார்கள். அப்பள்ளியினர் என்னை அழைத்து ஓவியம் கற்பிக்கச் சொல்வார்கள். அழைக்கும் பள்ளிகளுக்குச் சென்று ஓவியம் கற்றுத் தந்தேன்.

அங்குள்ள குழந்தைகளை உலக சாதனை செய்யத் தயார்படுத்தினேன். அதாவது, தலைகீழாக வரைவது, எழுத்துகளை வைத்து வரைவது என்று அவர்களை இந்தியன் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸுக்குத் தயார்செய்தேன். நிறையக் குழந்தைகள் ஆர்வமாகக் கற்றுக் கொண்டார்கள். அச்செயலைப் பாராட்டி எனக்குப் பல விருதுகள் கிடைத்தன.

- ஓவியர் மணிகண்டன்


கே: பத்திரிகைகளுக்கு ஓவியம் வரைந்ததுண்டா?
ப: பத்திரிகை வாய்ப்புகள் தேடி இருக்கிறேன். பெரிய வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை. காரணம், தற்போது டிஜிட்டல் முறையில் வரைவதற்கு அதிக மதிப்பு இருப்பதால், பாரம்பரிய ஓவியங்களுக்கு வரவேற்பில்லை. அதில் எனக்கு வருத்தம் உண்டு. கதைப் புத்தகம், அட்டைப்படம், ஆன்மீக மலர்கள் சிலவற்றிற்கு வரைந்து கொடுத்து வருகிறேன்.



கே: யாருடைய ஓவியங்கள் உங்களைக் கவர்ந்தவை, பாதித்தவை?
ப: அண்மையில் அமரரான மூத்த ஓவியர் மாருதி அவர்களுடைய படைப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். மாருதி அவர்களிடம் இருந்து பெண்ணழகு போன்றவற்றைக் கற்றேன். மதுரையைச் சேர்ந்த ஓவியர் தெய்வா அவர்களின் படைப்புகளைப் பார்த்து எனக்கு மிக வியப்பாக இருக்கும். அவர்களுடைய ஓவியத்தில் சிலவற்றை மாதிரியாகக் கொண்டு பயிற்சி செய்துள்ளேன். குறிப்பாக, பல ஓவியர்களின் படைப்புகளைப் பார்த்து, அவர்களின் தனித்துவத்தை அறிந்து என்னை நானே மேம்படுத்திக் கொண்டதுண்டு.

அதேசமயம், கலைத்துறை என்றாலே சமூகத்தில் ஒரு சில தவறான கருத்துகள் இருப்பதால், இத்துறையைத் தேர்ந்தெடுத்ததால் எனக்குப் பல பாதிப்புகள் ஏற்பட்டன. பொருளாதார ரீதியாகவும், குரு இல்லாமல் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டதாலும் பல பாதிப்புகளைச் சந்திக்க நேரிட்டது. வழிகாட்ட, ஊக்குவிக்கத் தந்தை இல்லாமையால் கலைத்துறையில் மிகக் கடினமான பாதைகளைக் கடந்துவர நேரிட்டதுண்டு.

கே: உங்களைக் கவர்ந்த உங்கள் ஓவியங்கள் யாவை?
ப: கோவில் டிசைனிங், அரசியல் ரீதியான சுவரோவியங்கள், எழுத்துக்கள் இவற்றைப் பார்த்து வளர்ந்ததால் அவற்றில் எனக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உண்டு. கடவுள் ஓவியங்கள் எப்போதுமே எனக்குப் பிடிக்கும். பாரம்பரியமான கேரளா மியூரல் (சுவர்சார் சித்திரம்), தஞ்சாவூர் பாணிமீது எனக்கு மிகவும் ஈர்ப்பு உண்டு. நவீன பாணி ஓவியங்களை முற்றிலும் தவிர்க்கிறேன். மரபுவழி ஓவியங்களிலேயே எனக்கு மிகவும் ஆர்வம்.

ஆன்லைனில் அதிகம் பகிரப்பட்ட படம்



கே: மறக்க முடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்?
ப: ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியர்களிடமிருந்து கிடைத்த பாராட்டு. அது எனக்குக் கிடைத்த எதிர்பாராத பாராட்டு. கொரோனா காலத்தில் ஆன்லைனிலும், நேரிலும் ஓவியப் பயிற்சி அளித்தேன். முற்றிலும் இலவசமாகச் செய்தேன். எதிர்பாராத விதமாகச் சில அமைப்புகளில் இருந்து பாராட்டுக்கள் மற்றும் விருதுகள் கிடைத்தன. அப்போதைய ராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அழைத்து வாழ்த்துத் தெரிவித்தார். தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் எனப் பலர் என்னைப் பாராட்டினர்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார். அவரது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் என்னை அறிமுகம் செய்து வாழ்த்துத் தெரிவித்தார். இது என்னால் மறக்கவே முடியாத ஒன்றாகும்.

பாரதத்தின் கலைப் பண்பாட்டின் அடிப்படையில், பாரம்பரியத்தையும், விரத முறையையும் பின்பற்றிக் கடவுளர் ஓவியங்களை வரைகிறேன். சமீபத்தில் நான் வரைந்த ஐயப்பன் ஓவியத்தை இணையவாசிகள் பலரும் பாராட்டினர். நிறைய வாழ்த்துக்கள் குவிந்தன. குறிப்பாக கேரள, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பலரும் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர். ஐயப்பன் மட்டுமல்ல, நிறைய கடவுள்களைத் தத்ரூபமாக வரைந்திருக்கிறேன். குறிப்பாக, கோவில் கர்ப்பக்கிரகங்களில் இருக்கும் சுவாமி சிலைகள் பலவற்றை வரைந்திருக்கிறேன். என்னுடைய தெய்வ ஓவியங்களைப் பலர் வீட்டில் பூஜைக்குப் பயன்படுத்துவதை மிகவும் பெருமையாக உணர்கிறேன்.

ஓவியர் மணிகண்டன் பெற்ற விருதுகள்
தமிழக அரசு வழங்கிய கலை ரத்னா விருது
சர்வதேசத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்
சர்வதேச கலைத் திலகம் விருது
காமராஜர் கல்விச் செம்மல் விருது
கலாம் உலக சாதனை விருது
இந்தியன் உலக சாதனை விருது
இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு விருது
சிறந்த ஓவியருக்கான விருது
சட்டமன்ற உறுப்பினர் அளித்த மாவட்டத்தின் சிறந்த ஓவியர் விருது

உள்பட 20க்கும் மேற்பட்ட விருதுகள்


கே: தற்போது என்னவெல்லாம் செய்கிறீர்கள்?
ப: தற்போது நான் சென்னையில் வசிக்கிறேன். பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். ஊரில் இருந்தபோது, சரியான வேலைவாய்ப்பு இல்லாததால் தமிழக அரசிடம் ஓவிய ஆசிரியர் பணிக்கான வாய்ப்புக் கேட்டுக் கோரிக்கை வைத்தேன். அது நடக்கவில்லை. அதனால் ஒருகட்டத்தில் ஏன் நாமே நமக்கான பணிகளை முன்னெடுக்கக்கூடாது என்று தோன்றியது. ஓவியப்பள்ளி தொடங்க நினைத்தேன். கலை இயக்குநராக முயற்சி செய்யவும் தோன்றியது. வாய்ப்புத் தேடி சென்னைக்கு வந்தேன்.

சில அமைப்புகளுக்கு இலவசமாக வகுப்புகள் எடுத்து வருகிறேன். ஓவியம் கற்றுக்கொள்ள மாதம் மூவாயிரம், நான்காயிரம் என்று வாங்கும் காலத்தில் நான் ஐநூறு, அறுநூறு ரூபாய்க்கு ஓவிய வகுப்பு நடத்துகிறேன். பள்ளி வளாகங்கள், பொது இடங்களில் பிரம்மாண்ட சுவரோவியங்களை வரைந்து வருகிறேன். ஓவியத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, குழந்தைகளை உலக சாதனைக்குத் தயார் செய்வது போன்ற பணிகளைச் செய்து வருகிறேன். இதற்காக 'நடனலோகா' என்ற ஓவியப் பயிற்சிக் கூடத்தை ஒருங்கிணைத்து, அதன்மூலம் ஓவியக் கலையில் ஆர்வமுள்ள ஏழைக் குழந்தைகளுக்கு வரையக் கற்றுக்கொடுத்து வருகிறேன்.



கே: உங்கள் லட்சியம் என்ன?
ப: என் வாழ்க்கை மூலம் பல ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையை நம்பிக்கையால் நிரப்ப இருக்கிறேன். அவர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவத் திட்டமிட்டிருக்கிறேன். நான் நல்ல நிலைக்கு வரும்போது அனைவருக்கும் இலவச வகுப்புகள் நடத்த வேண்டும். இன்றுவரை எங்களுக்காக ஓடிக்கொண்டே இருக்கிற அம்மாவை உட்கார வைத்து நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஓவியத்தில் ஒரு கின்னஸ் சாதனையை நிகழ்த்த வேண்டும். கலை இயக்குநராக ஆக வேண்டும். இவை என் குறிக்கோள், லட்சியம். இவற்றை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். சீக்கிரமே இந்த எண்ணமெல்லாம் நிறைவேறும்.

குரலில் நம்பிக்கை, முகத்தில் புன்னகை துளிர்க்கப் பேசுகிறார் ஓவியர் மணிகண்டன். அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துகள் கூறி விடைபெறுகிறோம்.

உரையாடல்: அரவிந்த்
ஓவியர் மணிகண்டனின் சமூக ஊடகத் தளங்கள்
மின்னஞ்சல் | வலைமனை | இன்ஸ்டாகிராம் | முகநூல் | முகநூல் | கூகுளில் தேட
Share: 




© Copyright 2020 Tamilonline