Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | கவிதைப்பந்தல்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
பங்கீடுகள்
- வீர. வேலுசாமி|பிப்ரவரி 2005|
Share:
அந்தப் பாதையில் பெரியவர்களுடன் குட்டியும் குருமான்களும் கூட்டமாக அலுமினியத் தூக்குச்சட்டி, தகர வாளிகள் சகிதம் விரைவதைப் பார்த்த போது மரத்தடியில் நீட்டமுடியாத, நீட்டினால் மடக்க முடியாத முழுக்காலைத் தடவிக் கொண்டு அமர்ந்திருந்த சுப்பா நாயக் கருக்கும் ஆசை அலைமோதியது மனசில்.

இது இரண்டாவது கோஷ்டி, பொழுது புறப்படாமல் செங்கமங்கலாக இருக்கும் போதே பத்துப் பதினைந்து பேர் கிளம்பிப் போய்விட்டார்கள். அப்போ நாயக்கர் குப்பைக் கிடங்குப் பக்கம் இருந்து கொண்டே அவர்கள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டார். ரகசியம் பேசுவதைப் போல கிசுகிசுப்பு. அந்தக் கூட்டத்தில் சன்னாசியும் திருப்பதியும் தெளிவாகத் தெரிந்தனர். இருவரும் கையில் ஆளுக்கொரு இறைவெட்டி வைத்திருந்தார்கள். முன்னால் போன ஆள் கிட்னையா மாதிரி தெரிந்தது. எதையோ நீளமாகச் சுற்றிக் கையில் வைத்திருந்தான். இன்ன சோலிக் குத்தான் போகிறார்கள் என்று நிதானிக்க முடியவில்லை அவர்கள் போக்கிலிருந்து.

இப்போ எல்லாம் வெளிச்சமாகிவிட்டது.

போன வருசம் குத்தகைக்கு எடுத்த சவளைக்காரன் சல்லடையாய்ச் சலித்த பிறகு அதில் என்ன மிச்சம் இருக்கும்? மழையே இல்லையே. தண்ணி உருளப்பெய்த ஒண்ணு ரெண்டு காட்டுத் தூறல்தான். வரத்து மீன் வருவதற்கும் மார்க்கமில்லை. குளத்து மீன் அதுக்குள்ளே என்ன கெலிச்சிருக்கும்?

செங்குளத்து மீனைப்பற்றி நினைக்கும் போதே நாயக்கருக்கு வாயில் நீர் சுரந்தது. அந்தக் கம்மாய்க் கெளுத்திக்கு தனி ருசிதான். மூணாம் வருடம் மறுகால் போனது, அதே வருடம் கோடையிலும் மழை சக்கைப்போடு போட்டது. தண்ணீர் வற்றவே இல்லை, போன வருஷ கோடைவரைக்கும், மீன் பாசி குத்தகைக்கு எடுத்தவன் பாடு யோகம்தான்.

கைத்தண்டி கைத்தண்டி கெளுத்தி மீன்கள், கூடை கூடையாக சிவகாசிக்கும் விருதுநகருக்கும்தான் போனது விற்பனைக்கு.

உள்ளூரில் பிரியப் பட்டவங்களுக்குக்கூட கிடையாது. கேட்டவர்களுக்கெல்லாம் 'மொத்தமாக் காண்ட்ராக்டாப் பேசிட்டோம்' என்று சொல்லிவிட்டான் குத்தகைக்காரன். விருதுநகரிலும் சிவகாசியிலும் சொன்ன விலை கிடைக்கும். இங்கே கிலோ பதினைஞ்சு ரூபாய் போட்டு வாங்கு வாங்களா, வலி எடுத்த முழங்காலை நீவிவிட்டுக் கொண்டார் நாயக்கர்? வலது முழங்கால் சிப்பி தெரியாமல் மொந்தையாக வீக்கம். பத்து வருஷமா இப்படித்தான். பார்க்காத பண்டுதம் கிடையாது. இப்போ வாரத்துக்கொரு தரம் வெள்ளாவிப் பொதியிலே முழங்காலை ஒத்தி ஒத்தடம் கொடுக்கிறதிலே கொஞ்சம் மட்டுப்படுகிறது.

மெல்ல மெல்ல கம்மாய்ப் பக்கம் நகர்வோமா என்று சபலப்பட்ட போது தன் சம்சாரம் கேப்பை காயப்போடச் சொன்னது ஞாபகத்துக்கு வரவே வீடு திரும்பினார்.

இடக்குப் பண்ணுகிற காலை என்னதான் மெதுவாக நகர்த்தினாலும் சளுக்கிடும் போதெல்லாம் வலி உசிர்போகிறது.

''நேத்து அழுக்கெடுத்த ஏகாலிகிட்ட வெள்ளாவி என்னிக்குன்னு கேட்க மறந்துட்டது... போனதும் ஞாபகமாகக் கேட்கணும்'' என்று முணுமுணுத்தபடியே அடியெடுத்து வைத்தார் நாயக்கர்.

பின்பக்கம் தொலைவில் இரைச்சல் கேட்டமாதிரி இருந்தது. கண்களை இடுக்கிக் கையை விரித்து நெற்றிப் புருவங்களுக்கு நிழலாக வைத்துக்கொண்டு பார்வையை எட்டுகிற மட்டும் நீட்டினார் கிழவர்.

குளத்து வாகரையிலிருந்த கூட்டம் சத்தம் போட்டுக் கொண்டே ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

''நாயக்கர் கொஞ்ச நேரம் நின்றார்.

வாய்க்கு வந்தபடி புலம்பிக்கொண்டு வெறும் சட்டிகளையும் வாளிகளையும் வீசிக்கொண்டு வந்தனர். நாயக்கர் மரத்தடியில் உட்கார்ந்திருந்த போது போனவர்கள்தான் இவர்கள்.

''இவங்களுக்குத்தான் சொந்தமோ...?''

''இவங்க ஆத்தா புருஷன்மாரா குளம் வெட்டினாங்க...''

''இவங்கதான் திங்கணுமோ...''

ஒரு இளவட்டம் கொதித்து எழுந்து ''போங்கடா பொசை கெட்ட பயல்களா, இங்கிட்டு வந்து குரைக்கிறீர்களே, என்கூட ஒருத்தன் நில்லுடா... அந்த பத்து படவாக்களையும் சமாதி வைப்போம்னேன் கேட்டீங்களா...'' என்று எரிச்சல்பட்டான். அந்தக் கூட்டத்துக்கு ஒதுங்கி வழிவிட்டு ஒருவனிடம் விசாரித்தார் நாயக்கர்.

கண்மாயில் தண்ணீர் ரெண்டு வெட்டுக் கிடங்கில் மட்டும்தான். விடியும் முன்பு போனவர்கள் அந்த ரெண்டு கெடங்குகளையும் காத்துக்கொண்டனர். தண்ணீரை இறை வெட்டி போட்டுக் கடத்திக் கொண்டிருக்கும்போது இந்த ரெண்டாவது கோஷ்டி இறங்கியிருக்கிறது. அவர்கள் காத்துக் கொண்ட கிடங்குகளில் இவர்களை இறங்கவிடவில்லை. இதுதான் விஷயம்.

''அதில்லே... தாத்தா! அங்கேயும் சங்கதி ஒண்ணுமில்லே. உழைச்ச கூலிகூட தேறாது. மொத்தத்திலே குறுணி மீன் கூடக் கிடைக்காதுன்னு தெரிஞ்சுது. இதுக்குப் போய் சண்டை போட்டுக்கிட்டு...'' என்று காரணம் சொல்லி சமாதானப்பட்டுக் கொண்டே போனான் ஒருத்தன். நாயக்கர் இருபது வருஷத்துக்கு முந்தின கதையை நினைத்துக் கொண்டார்.

இதே குளம்தான். அப்போ சர்க்கார் மீன்பாசி கிடையாது. ஊருக்குப் பொதுவில் வலைக்காரனுக்கு சம்பளம் கொடுத்து வீசுவார்கள்.கிடைச்சதைத் தலைக் கட்டுக்கு இவ்வளவுன்னு சமமாகக் கூறுபோட்டுக் கொடுப்பார்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் அவிரை... கெளுத்தி.. வெராலுகூட கிடைக்கும். ஆராமீன்... ஆங்... ஆரா மீன்.. மூஞ்சி ஊசியாய் நெளுநெளுன்னு இருக்கிற அந்த ஜாதி மீன் ருசியே தனிதா, அதை இப்போ காணவே முடியலை. அதுமட்டுமா... குரவைகூட... இந்தப் பக்கம் அதிசயமாகி விட்டது!

இப்போ கிடைக்கிற கடல் மீனும் சிலேப்பிக் கெண்டையும் வெக்கோலைத் தின்னமாதிரி சவசவன்னு ஒரு ருசியுமில்லே மண்ணு கணக்கா...

அதிலும் நாயக்கருக்கு ரெட்டை யோகம். கீழ்த் தெருவிலே பொன்னம்மான்னு ஒருத்தி. புருஷன் அவளை விட்டுவிட்டு செங்கத்துக்குப் போனவன் வரவேயில்லை. அந்த பொன்னம்மாவோட கொஞ்சம் 'இது' உண்டு நாயக்கருக்கு, நித்தமும் சாமத்திலே போய் கதவைச் சுரண்டுவார். கோழி கூப்பிட்ட பிறகுதான் வீடு திரும்புவார்.

அந்த நேரத்திலும்கூட ரெண்டு பேரும் ''பேசி'' முடிந்த பிறகு அடுப்பு மூட்டி களியைக் கிண்டி.. சுடச்சுடக் களியும் மீன்குளம்பும், இப்ப நினைச்சாலும் மனசு கிளுகிளுக்கிறது. இந்தக் கிளுகிளுப்பு மீன்குளம்பு, ருசிக்கா, செக்கச் செவந்த கிண்ணென்று திமிசுக்கட்ட மாதிரி மார்புகளுடன் கட்டுக்குலையாதிருந்த பொன்னம்மாவுக்காவா?

ஒருநாள் திடீரென்று அவள் புருஷன் வந்து அவளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் போய்விட்டான். நாயக்கர்தான் வண்டி கட்டி ரெயில் கெடியில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தார்.

ஒரு வருஷம் பக்கத்துப் பட்காரர்களும் வலைகளை எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள் கம்மாய்க்கு. சங்கதி தெரிந்து இங்கே வீட்டுக்கு ஒரு ஆள் வீதம் ஊர் பூராவும் திரண்டு சுத்தி, கம்புகளுடன் கரையில் நின்றுவிட்டார்கள். கலகமாகி கொலைவரைக்கும் போய்விட்டது. பிறகு ஏழு பஞ்சாயத்து நடந்து மீன்பிடி பாத்தி யத்தை இந்த ஊர்க்காரர்களுக்கே என்று ஆகி விட்டது.

எதிரிகளும் சும்மா விடவில்லை. சர்க்காருக்கு எழுதிப்போட்டு மீன்பாசி குத்தகைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

நினைவுகளை அசை போட்டுக்கொண்டே மெதுவாக நடந்த நாயக்கரை உரசிக் கொண்டு ஒரு பொடிப்பயல் வேகமாக ஓடினான். அவன் கக்கத்தில் ஈரமான ஒரு பொட்டணம், மேல் துண்டால் போர்த்து மறைந்திருந்தான். லேசாக மீன் வாடை. மூட்டையில் மீன்தான். பையன் முக ஜாடையை வைத்து அடையாளப்படுத்திப் பார்த்தார். யாரென்று பிடிபடவில்லை.

வீட்டுக்கு வந்ததும் நார்ப்பெட்டியிலிருந்த கேப்பையை எடுத்தார். அரைப்படி கேப்பைத் தான். முன்னெல்லாம் வசமான குழம்பு இருந்தால் இந்த அரைப்படி கேப்பை திரித்த மாவில் களி கிண்டினால் இவர் சம்சாரம் ஒருத்திக்கே காணாது. தீனி விஷயத்தில் இப்பவும் கிழவி கெட்டிதான். இன்னிக்கும் நயமான குழம்போ வெஞ்சனமோ இருந்தா அவளுக்கு புருஷன் நெனைப்புக்கூட வராது.

'அவக்காச்சி பிடிச்ச மூதி...' என்று அடிக்கொருதரம் நாயக்கரிடம் பேச்சு வாங்கிக் கட்டிக் கொள்வாள்.

கட்டிலைத் தூக்கி முற்றத்திலே போட்டு மேலே பழைய சேலையை விரித்து கேப்பையை விரவினார். ஒரு காலை மெல்லப் பூப்போல நீட்டிவிட்டு, அருகில் இருந்த உரலில அமர்ந்தார். கையில் நீளமான சோளத்தட்டை, காக்கா குருவிகளை விரட்ட.

சுகமான உப்பங் காற்று. கண்கள் லேசாகக் சொருகின. உட்கார்ந்தபடியே ஒரு கோழித் தூக்கம் போட்டிருப்பார். அதற்குள் எதிர் வீட்டு மறைசலில் சத்தம் கேட்டது. கொண்டய்யா உடம்பைக் கழுவிக் கொண்டிருந்தான்.

நாயக்கருக்கும் சிய்யென்று யாரையாவது பேச்சுக்கு இழுக்க வேண்டும்போல இருந்தது.

''கொண்டூ ... என்ன வேலைக்குப் போனே...?''

''வேலை ஒண்ணுமில்லே மாமா... வேலைக்குப் போனாலும் போயிருக்கலாம். அந்தப் பாவி சன்னாசி மாமன் பேச்சை கேட்டு... இறவெட்டி போட்டு புசமெல்லாம் நமட்டுது வலி... ஒழக்கு மீனு கூடதே தேறலை...''

''ஓகோ... நீ அதுலே சேர்ந்தவனா... வெள்ளங் காட்டி பத்துப் பேர் இறவெட்டி கொண்டு போனீகளே... என்ன வளந்தானா... கெளுந்தியா... அயிரையா... வெராலா..?''

''வெளியே சொன்னா வெக்கக்கேடு... மாமா. வெராலுக்கு எங்கே போக... எவனோ... மாட்டுக்காரப் பயக சொன்னான்னு முழுத்த ஆம்பிளைக பத்துப்பேரு இறை வெட்டி பிடிச்சதுதான் மிச்சம்... ஆளுக்கு அரைக்கிலோகூடக் கிடைக் கலை... இதுவே களவாணித் தனம் வேறே...''

கிழவருக்கு பேச்சு வளரத் தோதாக இருந்தது.
''எல்லாம் அந்தக் கிட்னையாதான்... நாங்க சேத்திலேயும் சகதியிலேயும் மல்லுக் கட்டிக்கிட்டிருக்கோம்... ஒரு வாளி... தனிக்கெளுத்தியாப் பெறக்கி துணியிலே மூட்டை கட்டிக் கஞ்சி கொண்டு வந்த சன்னாசி மாமன் மகன்கிட்டே கொடுத் தனுப்பிட்டான்".

''சன்னாசி மகன் கொண்டு போனா... கிட்னையாவுக்கு என்ன கிடைக்கும்?''

''எல்லாம் கோளாறுதான். அவன்கிட்டே உங்க வீட்லே பாதியும் எங்க வீட்லே பேர் பாதியும் கொடுத்திருன்னு சொல்லியனுப்பியிருப்பான்...''

''..ச்சே... அசிங்கம்! நீங்க யாரும் இதைக் கண்டுக்கிடலையா?''

''நா பார்த்தேன்... மாமா... சந்தேகப்பட்டேன். பெறகும் சண்டைக்கு வருவானேன்னு பேசாம இருந்துட்டேன்...''

இப்போ விசாரிச்சா குட்டு வெடிச்சிருச்சு...

கொண்டு வேட்டியைக் கட்டியவாறே புறப்பட்டான்.

கொஞ்ச நேரம் கழித்து நடுத்தெருவில் கூச்சல் பலமாகக் கேட்டது.

கொண்டுவின் மகள் சின்னப் பெண் அழுதுகொண்டே ஓடி வந்தாள்.

''தாத்தா... தாத்தா... எங்கய்யாவை அடிக்கிறாங்க... அடிக்கிறாக தாத்தா," 'ஓ' வென்று கண்ணை கசக்கிக்கொண்டே கதறினாள்.

நாயக்கர் கால் வலியை மறந்து நடுத் தெருவுக்கு வேகமாக விரைந்தார்.

கொண்டய்யாவுடன் நாலைந்து பேர் ஒருபுறம்... எதிர்ப்புறம் சன்னாசி கிட்னையாவும் அவன் சம்சாரமும். வாய்ச்சண்டை மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.

கொண்டைய்யா தொண்டை கிழியக் கத்தினான்.

''மானங்கெட்டபய... களவாண்டு திங்கிறதுக்குப் பதிலா பொண்டாட்டியைக் கூட்டி விட்டுப் பொழைக்கலாண்டா ..த்தூ''

''எலே...எம் பேச்சை எடுத்தே வெளக்கமாறு பிஞ்சி போகும் பிஞ்சு...'' என்று விளக்கு மாற்றைத் தூக்கிக் காட்டினாள் கிட்னையா மனைவி.

''...ஆமா.. மா... நீ படிதாண்டா பத்தினி... போனமாசம் பட்டப் பகல்லே பெரிய ஓடையிலே ஆவஞ்செடி மறவுக்குள்ளே நடந்த சங்கதி தெரியாதா... ஆட்டுக்காரங்ககிட்ட வெரட்டுப் பட்டது மறந்து போச்சா...'' கொண்டு கட்சிக்காரன் ஒருத்தன் அவளை மடக்கினான்.

பாம்பாட்டி வேரைக் காட்டினதும் பம்மி ஒடுங்குகிற பாம்பைப் போல பின்வாங்கி மறைந்தாள் இந்த அஸ்திரத்துக்கு.

சுப்பா நாயக்கருக்கு முந்தியே அங்கே கூடிவிட்ட நாலைந்து பெரியவர்கள் சண்டையை விலக்கிவிட்டார்கள். சண்டை என்ன.. எல்லாம் மீன் விவகாரம்தான். கிட்னையாவும் சன்னாசியும் செய்த கடத்தல் அம்பலத்துக்கு வந்துவிட்டதன் விளைவு தான்.

காயப்போட்டிருந்த கேப்பை ஞாபகத்துக்கு வந்ததும் காலை இழுத்துக் கொண்டு ஓடினார் நாயக்கர். விளக்க வைக்கிறபோது வந்த நாயக்கர் சம்சாரத்துக்கு அரவம் ஒடுங்கிறவரைக்கும் வேலை சரியாக இருந்தது.

மாவைத் திரித்து களியைக் கிண்டி கீரையைக் கடைந்து வைத்தாள். தொகில் கீரை புளி போட்டுக் கடைந்தது என்றால் கிழவிக்கு உயிர்.. நாயக்கருக்கும் பிடிக்கும்.

வெங்கலக் கும்பாவில் களியைப் போட்டு கீரையை ஊற்றி கிழவரைச் சாப்பிட உட்கார்த்திவிட்டு வென்னீர்ப் பானையுடன் பின் பக்கம் இருந்த மறைசலுக்குப் போனாள் கிழவி.

சூடான களியும் கீரைக் குழம்பும் தேவாமிர்தம் போல இருந்தது. வயிறு விம்மப் பிடித்தார் கிழவர்.

சாப்பிட்டதும் ஏற்படுகிற 'சொக்கு' கலையும் முன்பே படுக்கையில் விழவேண்டும் நாயக்கருக்கு. முன்னமேயே தயாராகப் போட்டி ருந்த கட்டிலில் உடம்பைச் சாய்த்தார்.

கிழவி இன்னும் குளித்துக் கொண்டுதான் இருந்தாள். அருகே இருந்து பார்த்தால் அவள் குளிக்கிறாளா வென்னீர் ஒத்தடம் கொடுக்கிறளா என்ற சந்தேகம் வரும்.

பிராயத்தில் அவளுக்குப் பல நாட்கள் முதுகு தேய்த்து விட்டிருக்கிறார் நாயக்கர். கிழவி இப்போ சொல்கிறமாதிரி 'காமக் கோட்டி பிடித்து அலைஞ்ச காலம்' அது.

முதலில் வென்னீரை முழங்காலுக்குக் கீழே கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, பிறகு தொடைகள் இடுப்பு, மார்பு, பின்பு முதுகு, முன்கை, தோள்பட்டை என்று வரிசைக் கிரமமாக மாற்றி மாற்றி போகணி போகணியாக ஊற்றுவாள். இப்படியே பெரிய கூடவாத்த தண்ணியைக் காலி பண்ணுவாள். என்ன இப்படின்னு கேட்டால்...'ம்... அந்த சொகம் ஒங்களுக்கென்ன தெரியும்... சும்மாவா சொல்லியிருக்கு சொலவம் உண்டானவனுக்கு நெய்யுஞ் சோறும் இல்லாதவனுக்கு வென்னித் தண்ணீன்னு' என்பாள்.

கண் இமைகள் கனத்து மூடினபோது வாசலில் சத்தம் கேட்டது.

''அத்தை ... அத்தை..''

குரல் கேட்டு அரை மனதுடன் கட்டிலை விட்டு எழுந்தார் நாயக்கர்.

சன்னாசி மனைவி லட்சுமி முற்றத்தில் நின்றுகொண்டிருந்தாள்.

''மாமோ..வ்.. அத்தை எங்கே?''

''மேலுக்கு ஊத்திக்கிட்டிருக்கா உங்க அத்தை... என்ன வெசயம்?''

லட்சுமி, கிழவிக்கு தூரத்து உறவு... நல்ல மனசுக்காரி, வெள்ளாந்தி.

''அது என்ன லட்சுமி கையிலே..''

'ஒண்மில்லே மாமா... கொஞ்சம் மீன் கொழம்பு... வெறுங்கொழம்பு மட்டும்தான்... அத்தைக்கு மீன் கொழம்புன்னா உசிருன்னு கொண்டாந்தேன்.''

''....''

''நாலு மீன் போட்டுக்கொண்டு வரணும்னுதான் நெனச்சேன்... எங்க வீட்லே ஒருத்தி... நாக்கு நீண்டவ... அவதான் என் நாத்தனார்காரி... கடேசி ஆளுக்குகூட இல்லாம அரிச்சி தின்னுட்டா... ருசி பார்க்கக்கூட ஒரு துண்டு கிடைக்கலை... இதைச் சொன்னா என் வாய்தான் பெரிசாப் போகும்...''

''ஆமா... அதென்ன தெருவிலே ஒரே சண்டைக்காடு..'' கிழவர் மெதுவாகச் சீண்டினார்.

''...வெக்கக்கேடு... எல்லாம் அந்த கிட்னையாவாலே வந்த வினை... பங்கு போடறதுக்கு முந்தியே ஒத்த வாளி மீனை எம்மவன் சின்னவன்கிட்டே கொடுத்தனுப்பியிருக்கான்... எங்க வீட்டுக்காரருக்குத் தெரியாது சத்தியமா, இப்படி வேலைக்கு அவரு சம்மதிக்கமாட்டாரு. கூட இருந்தவங்களுக்குத் தெரிஞ்சு போச்சு. விடுவாங்களா... நடுத் தெருவிலே நாண்டுக்கிட்டுச் சாகிறாப் பல கிழிகிழின்னு கிழிச்சிட்டாங்க எங்களுக்கும் சேர்த்துத்தான் வசவு... எல்லாம் காலக் கொடுமை...''

''செய்வான்.. செய்வான் கிட்னையா... கை சும்மா இருக்காது...''

''அது மட்டுமா.. எம் மவன் ஒரு துப்புக் கெட்ட பய... அம்புட்டு மீனையும் கிட்னையா சம்சாரத்துக்கிட்டே கொண்டுபோய் கொடுத்திருக்கான்... அவ ஒத்த வாளி மீனையும் அமுக்கிக்கிட்டு ஒரு குத்து கெண்டையை மட்டும் கொடுத்தனுப்பிட்டா... பயலைப் போட்டு அடி அடின்னு அடிச்சேன். அந்த களவாணிப்பய கொடுத்தான்னா இவனுக்கு புத்தி எங்க போச்சு..? என்ன மாமா... பேசாம இருக்கீக..?''

''சரிதான் ... சொல்லு.. சொல்லு''

''நானும் சும்மா விடல்லே.. அந்த சிறுக்கியை... 'ஏட்டி எம் புள்ளையை திருட்டு மீனைச் சுமக்க வச்சதுமில்லாம.. அவிசாரி புத்தியை இதுலேகூடவா காட்டணும்...னு நறுக்கென்னு கேட்டேன். புருசன் பெஞ்சாதி ரெண்டு பேரும் மூச்சு விடல்லே...'' படபடன்னு பொரிந்துவிட்டுக் கிழவி குளித்துக்கொண்டிருந்த மறைசல் பக்கம் நகர்ந்தாள் லட்சுமி.

குழம்புக் கிண்ணத்தை அடுப்படியில் அட்டளைமீது வைத்து விட்டு திரும்ப வந்து படுத்துக்கொண்டார் கிழவர். கிழவி குளிப்பு முடிந்து அடுப்படிக்குப் போனதும் மீன் குழம்புக் கிண்ணத்தைப் பார்த்தாள்.

''மீன் கொழம்பு இருக்கு... இன்ன ஒரு வாய் சாப்புடுறீகளா..?'' அடுப்படியில் இருந்த படியே கேட்டாள் கிழவி.

கிழவர் பதில் பேசவில்லை. அசையாமல் கிடந்தார். தூக்கம் வந்துவிட்டால் அவரை யாரும் எழுப்பமுடியாது லேசில்.

கிழவி கும்பாவில் களியைப் போட்டுக் கொண்டு மீன் குழம்பு கிண்ணத்தை எடுத்தாள். விரலைக் கிண்ணத்தில் விட்டுக் கலக்கினாள். குழம்பு நீர்த்துப் போயிருந்தது. ஒரு துண்டு மீன்கூட காணவில்லை. சந்தேகம் வந்துவிட்டது.

மெல்ல எழுந்து வாசல் பக்கம் கட்டிலை நோக்கி அடி எடுத்து வைத்தாள். அருகே போய் நின்றுகொண்டு கட்டில் சட்டத்தில் கையை ஊன்றிக் குனிந்து முகர்ந்து பார்த்தாள் கிழவி. வேற்று மூச்சு முகத்தில் பட்டதும் நாயக்கர் லேசாக நெளிந்தார் படுக்கையில்.

''ஒண்ணுமில்லே.. பொடிமட்டை இருக்கான்னு பார்த்தேன்..." என்று முணு முணுத்துக்கொண்டே அடுப்படியை நோக்கி நடந்தாள் கிழவி.

வீர. வேலுசாமி
Share: 
© Copyright 2020 Tamilonline