Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அனுபவம் | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
கவிஞர் சுரேஜமீ
- அரவிந்த்|ஆகஸ்டு 2022|
Share:
மஸ்கட்டில் பட்டயக் கணக்காளராகப் பணியாற்றும் 'சுரேஜமீ'க்கு சிறுவயது முதலே கவிதை மீது காதல். பாரதியும் வள்ளுவனும் கம்பனும் இவரது ஆதர்சங்கள் என்றால், கண்ணதாசன் உயிர்மூச்சு. சமூக அக்கறையும் தேசப்பற்றும் இவரது கவிதைகளில் வெளிப்படுவதைக் காணலாம். கதை, கவிதை, கட்டுரை என்று நூற்றுக்கணக்கான படைப்புகளைத் தந்திருக்கிறார். 'வல்லமை' போன்ற இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார். சமூகத்தைச் சரியான பாதையில் நகர்த்தக் கவிதையையே தனது ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் சுரேஜமீ, தனது வாழ்க்கைப் பயணம் குறித்து நம்மிடம் பேசுகிறார், கேட்போமா?

கே: கல்யாணசுந்தரராஜன், 'சுரேஜமீ' ஆனது ஏன்?
ப: புனைபெயரில் எழுதுவது 19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றமாக இருக்கும் என நினைக்கிறேன். அதற்கேற்ப எனக்கான ஒரு பெயர் தேடும்போது, அது தலைமுறையை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழ, குடும்பத்தில் சுந்தர் என்ற என் பெயர், மனைவி பெயரான ரேவதி; இரட்டை மகள்களின் குடும்பப் பெயர்களான ஜனனி, மீரா என்பவற்றன் முதல் எழுத்துகளைக் கோத்துச் சாத்திய மாலையே 'சுரேஜமீ'.

சமூகத்தின் மீதான எனது அவதானிப்பு இளம் பிராயத்தில் ஏற்பட்டிருந்தாலும், அதன் தாக்கம், அதற்கான பங்களிப்பு முழுமை பெற்றது வாழ்க்கையின் தேடல்களைச் சுருக்கிக் கொள்ளும் போதுதான்; அதற்கான நேரம் கனிந்தபோது, 'சுரேஜமீ' என்னுள் எழுந்தார்.

மஸ்கட்டில் பாரதி விழாகே: இளமைப் பருவம் குறித்துச் சில வார்த்தைகள்...
ப: தந்தை தொடக்கப் பள்ளி ஆசிரியர்; தாயார் தாயாராகவே இருந்தார். தந்தையின் குடும்பத்தில் அனைவரும் ஆசிரியர்களே என்பது கூடுதல் பெருமை. எனக்கு இரண்டு சகோதரர்கள், நானோ இருவர்க்கும் இடையில்.

பிறந்தது மதுரை; வளர்ந்தது முகவை. பள்ளிப் படிப்பு கிழக்கு முகவையில் உள்ள ஒரு கிராமமான கடுக்காய்வலசை. கல்லூரி மற்றும் பட்டயக் கணக்காளர் படிப்பு சென்னையில்.

அந்நாளில் ஆசிரியர்க்குச் சொற்ப சம்பளமே. அதில் குடும்பம் நடத்துவது என்பது பகீரதப் பிரயத்தனம். அந்தச் சூழலில் எதிர்காலக் கனவு என்பது கானல் நீரே; இருந்தாலும் விடவில்லை. முதல் இலட்சியமாகப் படிக்க வேண்டும். முதல் கனவு, ஆட்சிப் பணி அதிகாரியாக ஆசை இருந்தது, அது தணிந்து பட்டயக் கணக்காளன் ஆனதும் கனவின் நினைவே.

வாய்ப்புக்கு ஒரு வாழ்த்து
தென்றலெனத் தொட்டென் உள்ளத் தேடலதைச் செதுக்கி மெல்ல(ப்)
பொன்றிடாத வளமைப் பேறாம் பொங்குதமிழ்ச் சாறெ டுத்து
வென்றகதை கூறென் றென்னை விருப்பமொடு பணித்த 'தென்றல்'
என்றுமிங்கே உதயம்போல ஏற்றமுடன் புவியில் வாழி!

- சுரேஜமீ


மேல்நிலைத் தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்வு பெற்று மதிப்பெண் சான்றிதழைப் பெற்றவுடன், அன்றைய தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த எனது தந்தையின் பால்ய நண்பரான திரு. சு. ஈசுவரன் அவர்களைச் சந்தித்து மேற்படிப்புக்கான உதவியை நாட, அவர் தனது மகன் நடத்தும் சென்னை இராமகிருஷ்ணா பள்ளி மாணவர் விடுதிக்குப் பரிந்துரைத்து, அவரது மகனுக்கு உதவியாக இருந்து மேற்படிப்பைத் தொடர வழிவகுத்தார். அவரை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

வாழ்வின் பல சவால்களைத் தாண்ட மிகவும் உதவியவை குடும்பச் சூழலும், இளவயதில் சந்தித்த சில அவமானங்களும், தந்தையின் மந்திரச் சொற்களும், பெரியாரைத் துணைகோடல் எனும் வள்ளுவனின் வாக்கும், நல்ல சிந்தனையும், நண்பர்களும் என்றால் மிகையல்ல.

புரட்சிக் கவிஞனாக சுரேஜமீகே: இலக்கிய ஆர்வம் வந்தது எப்போது, எப்படி?
ப: இலக்கிய ஆர்வம் நினைவு தெரிந்த நாள் முதலே இருந்து வந்தது. தந்தையார் அந்நாளில் சிறப்புத் தமிழ் படித்தவர் என்பதால், எங்களை வாழ்த்துவதானாலும், திட்டுவதானாலும் இலக்கிய மேற்கோள்களையே சுட்டுவார். அதன் சந்த நயமும், உட்பொருளின் இனிமையும் என்னை இலக்கியத்தின்பால் ஈர்த்தது.

வாழ்க்கைக்கு அடிப்படையாகச் சொன்ன நான்கு குறள்களான, "சான்றோன் எனக் கேட்ட தாய்", "என்னோற்றான் கொல்எனும் சொல்", "தோன்றிற் புகழொடு தோன்றுக", "உள்ளத் தனையது உயர்வு" போன்றவையும், வாழ்வைச் செதுக்க அவ்வப்போது சொன்ன இலக்கிய மேற்கோள்களும், எங்களின் மகிழ்சிக்காகப் பாடிய கவியரசர் பாடல்களும் ஆர்வத்தை மென்மேலும் வளர்த்தன.

மஸ்கட் தமிழ்ப்பணிகள்
என்மீது அளப்பரிய அன்பு வைத்திருக்கும் மஸ்கட் தமிழ்ச் சமூகத்தை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. நான் ஒன்றும் ஒரு நிறுவனம் அல்லேன். எனக்குப் பிடித்த திருக்குறளை, நான் புரிந்துகொண்ட வகையில் புலனக் குழுவில் பகிர்வேன்; அவ்வளவே அப்படி ஏற்படுத்திய குழுவே 'திருக்குறள் பாசறை'

தமிழ்ப்பணிகள் என்ற அடிப்படையில்
* கிட்டத்தட்ட தொள்ளாயிரம் குறள்களுக்கு உரை எழுதிப் பகிர்ந்தது.
* பாரதியின் அயல்நாட்டுக் கனவை நினைவாக்கி மஸ்கட் நகரில் 'பாரதி யார்?' நாடகத்தை அரங்கேற்றியது (2018)
* போற்றுதலுக்குரிய சகோதரர் இசைக்கவி ரமணன் அவர்களை அழைத்து, சிறப்பு செய்து, 'வாழும் பாரதி' எனும் விருது வழங்கியது (2019)
* முதன்முதலில் இணைய வழியில் கம்பன் விழா கொண்டாடுவது (2020 முதல் ஆண்டுதோறும் தொடர்ந்து)
போன்றவற்றைக் குறிப்பிடலாம்

- சுரேஜமீ


கே: உங்களது ஆரம்பகாலப் படைப்பிலக்கிய முயற்சிகள் பற்றி...
ப: முதலில் நான் எழுதியது ஒருபக்கக் கதை. அது ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கண்ணாடி மூலம் படிக்கக் கூடிய வகையில் எழுத்துகளைத் திருப்பிப் போட்டு எழுதியது; அதைத் தொடர்ந்து புதுக்கவிதை வந்தது; அதுவும் சம்பவங்களின் தொகுப்பே.

குடும்பத்துடன் சுரேஜமீகே: புதுக்கவிதை எழுதிக் கொண்டிருந்த நீங்கள், மரபின் பக்கம் வந்தது எதனால்?
ப: திருக்குறள் என் வாழ்வின் வெற்றிக்கு அடித்தளமிட்ட ஒரு நூல். இலக்கியங்கள் என்பது ஏதோ மொழியின் வளர்ச்சிக்காக படைக்கப்பட்டதாக எண்ணும் இன்றைய வழக்கத்திற்கு மாறாக, அது நமக்கு வாழக் கற்றுக் கொடுப்பவை என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. அவ்வகையில், 'வள்ளுவ மாலை' எனத் திருக்குறளின் சிறப்பை எழுதிய ஐம்பத்து மூன்று புலவர்களை ஒட்டி, நான் ஒருவனே நூறு பாடல்களை வெண்பாவில் எழுத வேண்டும் என்ற முனைப்பே மரபின் பக்கம் என்னை நகர்த்தியது.

மரபு என்பது தொன்றுதொட்டு வருவது என்பதை நாம் அறிவோம். தொன்றுதொட்டு ஒன்று தொடர்கிறது என்றால், அதில் ஏதோ ஒரு இயல்பு படிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டதால்தான், இன்றும் தொடர்கிறது. என்னைப் பொறுத்த வரையில், இயல்பு என நான் கருதுவது, மரபு நம்மை வெகுவாக ஈர்க்கிறது; நினைவாற்றலை விருத்தி செய்கிறது; சந்த ஒழுங்கு உயிர்ச் சக்திக்குத் தூண்டுகோல் ஆகிறது; மனதை ஒருமுகப் படுத்தி எண்ணத்தைக் கட்டுக்குள் கொண்டுவருகிறது.

ஓமான் இந்திய தூதர் மேதகு இந்திரமணி பாண்டே வெளியிட்ட ட்விட்டர் பதிவுகே: உங்களைக் கவர்ந்த கவிஞர்கள் யார், யார், ஏன்?
ப: கவியரசர்தான் முதல்; பின்னர் அவர் வழியே பாரதி, கம்பன், வள்ளுவர்.

தமிழோடு விளையாடச் சொன்னவர் கண்ணதாசன்; சமூக எழுச்சியைத் தூண்டச் செய்தவர் பாரதி; கவிதையைக் கையாளும் வித்தையைக் கற்றுத் தருபவர் கம்பர்; வாழ்வின் வெற்றியைத் தீர்மானிப்பவர் வள்ளுவர்.கே: ஒரு பட்டயக் கணக்காளராக இருக்கும் உங்களுக்கு கவிதை எழுத, இலக்கியம் பேச எப்படி நேரம் கிடைக்கிறது?
ப: வெளிநாட்டில் இருப்பது ஒரு வசதி. எதிர்மறைச் செய்திகளே நிரம்பி வழியும் ஊடகங்களைப் பார்க்கும் பழக்கம் இல்லாதது; கிடைத்ததை வைத்துத் திருப்தியுடன் வாழும் எண்ணம், நல்ல மனைவி, குழந்தைகள், நண்பர்கள் எனக்கான நேரத்தைக் கூட்டி அக்கறையுடன் எழுதப் பணிக்கிறார்கள்.

கவிதை முயற்சிகள்
* கவிஞர் சுந்தரராஜன், கவிஞர் தில்லைவேந்தன், கவிஞர் அரசி பழனியப்பன், கவிஞர் முரளி கிருஷ்ணா, கவிஞர் விவேக்பாரதியுடன் இணைந்து நான் பாடிய பாரத தேவியைப் போற்றும் 'எல்லாம் இன்பமயம் ' என்னும் தலைப்பிலான 100 வெண்பாக்கள்.
* கவிஞர் அரசி பழனியப்பன், கவிஞர் முரளி கிருஷ்ணாவுடன் இணைந்து நான் பாடிய சிவனைப் போற்றும் நூறு அந்தாதிப் பாடல்கள்.
* சீனத் துரோகத்தைக் கண்டித்து கவிஞர் அரசி பழனியப்பன், கவிஞர் முரளி கிருஷ்ணா, கவிஞர் விவேக்பாரதியுடன் இணைந்து நான் பாடிய 100 கொச்சகக் கலிப்பாக்கள்.
* கட்டளைக் கலித்துறையில் பராசக்தியைப் போற்றி கவிஞர் அரசி பழனியப்பன், கவிஞர் முரளி கிருஷ்ணாவுடன் இணைந்து நான் பாடிய அந்தாதி 100 பாடல்கள்.
* கந்தனுக்கு கவிஞர் அரசி பழனியப்பன், கவிஞர் முரளி கிருஷ்ணாவுடன் இணைந்து நான் பாடிய கந்தன் நான்மணிமாலை.
* தமிழுக்கு இதுகாறும் யாரும் செய்திராத புதுமையாய் புலவர் இராமமூர்த்தி, அரசி.பழனியப்பன், முனைவர் இராஜ்குமார் ஜெயபால், நடராஜன், விவேக்பாரதி, வெ. விஜய், முரளி வெங்கட், நிறோஷ் ஞானச்செல்வம் இவர்களுடன் நானும் இணைந்து ஒன்பது கவிஞர்களாய்ப் பாடிய அன்னைத் தமிழ் நவரத்ன மாலை.
* அறிஞர்களை இணைத்து 300க்கும் மேல் ஈற்றடி வெண்பாக்கள் இயற்றும் முயற்சி தொடர்ந்துகொண்டிருக்கிறது.

- சுரேஜமீ


கே: ஆன்லைனில் கவிதை நிகழ்வுகள், பேச்சரங்குகளில் கலந்துகொண்டு வருகிறீர்கள். சமீபத்தில் கம்பன் விழாவை நேரடியாக நடத்தினீர்கள். அந்த முயற்சிகள் பற்றி விளக்குங்களேன்...
ப: என்னை இயக்கும் சக்தியாக இருப்பவளான பராசக்தியே, பாரத மாதாவே எனது செயல்களுக்குக் காரணமாகிறாள். சிறுவயதில் பள்ளி விடுமுறைக் காலத்தில் காரைக்குடியில் இருக்கும் எனது அத்தை வீட்டிற்குச் செல்வேன். அப்போது அவ்வூரில் நடைபெறும் கம்பன் விழாவைக் காணும் ஆவல் மிகுதியால், முத்தூரணியில் இருந்து கம்பன் மணிமண்டபம் வரை நடந்தே சென்று, கேட்டு, அனுபவித்த காலங்கள் எனக்குள் ஒரு வித்தாக அமைந்தன. வாழ்வின் தேடல்களால், அந்த மேடைகளில் பேசும் வாய்ப்புக் கிட்டவில்லை; ஆனால், அவ்வித்து விருட்சமாக வளர்ந்து, கம்பன் விழாவாக உருவெடுத்தது.கே: உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்?
ப: பாராட்டுப் பெறும் அளவிற்கான தகுதி எனக்கு வந்திருப்பதாக இன்றளவும் உணரவில்லை; இருப்பினும் சான்றோர்களின் சில அங்கீகாரங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவதாக, எனது தலைமையில் நடந்த பன்னாட்டுக் கவிஞர்கள் பங்குபெற்ற கவியரங்கமும் அதனை ஏற்று நடத்திய "பாரதத்தின் பெருமிதங்களைப்" பறைசாற்றும் அமைப்பின் அங்கமான "குறளின் வழி ஆளுமை" புலனக் குழுவின் வழிகாட்டி அன்புச் சகோதரர் இரவிக்குமார் ஐயர் மற்றும் முரளீ சுப்ரமணியன் அண்ணா ஏற்பாடு செய்தது.

இரண்டாவதாக, மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் கலைமாமணி சேயோன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கித் தொடர்ந்து மூன்று முறை அவர்களின் அமைப்பில் பேசியது; (இதுவரை இந்த வாய்ப்பு வேறு எவருக்கும் வழங்கப்படவில்லை என்பதே இதன் சிறப்பு)

இந்த அமைப்பிற்கு என்னை அறிமுகப்படுத்தியவர் என்மீது பேரன்பு கொண்ட நகைச்சுவை இமயம் மறைந்த பேராசிரியர் கண. சிற்சபேசன் அவர்கள் என்பது நினைவுகூரத் தக்கது.

இவை இரண்டும் எனக்கான பாராட்டாக நான் கருதுபவை.கே: இலக்கியம், கவிதை தவிர்த்து உங்களுடைய பிற ஆர்வங்கள் என்னென்ன?
ப: அரசியல், சினிமா (குறிப்பாகப் பழைய படங்கள்), நட்பு வளையங்களைப் பெருக்குவது, சான்றோர்களைச் சந்திப்பது, சித்தர் பீடங்களுக்குச் செல்வது, ஊர் சுற்றுவது என மனம் போகும் போக்கில் விரியும்.

கே: உங்கள் புத்தகங்கள் பற்றிச் சில வார்த்தைகள்...
ப: வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இலக்கியங்களே எனக்கான பாதையைத் தேர்வு செய்கின்றன. எனது முதல் புத்தகமே திருக்குறளின் மேன்மையைப் பறைசாற்றும் வகையில் எழுதிய 'நூறு வெண்பாக்கள்' ஆகும். இதற்கு அணிந்துரை எழுதிய தமிழறிஞர் திருவாளர் அவ்வை நடராஜன் அவர்கள் கூறிய வார்த்தைகள் இன்னமும் என் காதில் ஒலிக்கின்றன: "ராஜா… ரொம்ப நல்ல கருத்தாக இருக்கிறது… ஆனால் ஓசை காதுக்கு இனிமையாக இல்லை; செவிப்பறை கிழிகிறது. வெண்பா நயத்திற்கு இதனைத் திருத்தவேண்டும்" எனச் சொன்னார்; ஆனால், இன்னமும் இந்தப் புத்தகம் வெளிவராமல், வானதியில் எனக்காகக் காத்திருக்கிறது.

இரண்டாவது புத்தகம், கலைவாணரைப் பற்றிய கட்டுரையை 'வல்லமை' மின்னிதழில் எழுதும்போது, அதன் ஆசிரியரான அன்புச் சகோதரி திருமதி பவளசங்கரி அவர்கள், "உங்கள் கட்டுரை மிக நன்றாக இருக்கிறது; தொடர்ந்து எழுதுங்களேன்" என ஊக்கப் படுத்த, 28 வாரங்கள் எழுதிய கட்டுரையின் தொகுப்பாக வெளிவந்த 'சிகரம் தொடுவோம்' எனனும் புத்தகம். அதனை என் வீடுதேடி வந்து வற்புறுத்திப் பெற்றுக் கொண்டவர் என் இனிய நண்பர் ரவி தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம்.

மூன்றாவது புத்தகம் 'திருக்குறள் அறத்துப் பாலுக்கான புதுமை உரை'.

நான்காவது, எனது முதல் கவிதைத் தொகுதியை 'நூலேணி' என்னும் தலைப்பில் வெளியிட்டது கலைமகள் பதிப்பகம். எனது அன்புச் சகோதரர் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் அவர்கள் உங்கள் கவிதைத் தொகுப்பு கலைமகளில்தான் வரவேண்டும் எனக் கட்டளையிட்டு நிறைவேற்றினார்.

அன்னையர் தினக் கவிதை
அன்னையர் தினம் என்று அன்னியன் வைக்கின்றான்;
அதற்கும் நாமெலாம் அடிபணிந்து நிற்கின்றோம்
அன்னைக்கு ஏதொரு தினம்?
அனுதினமும் அவள்தினம்தான்!

அன்னை தந்தை வளர்த்தெடுத்தார்
அவனியில் நாம் மகிழ்கின்றோம்
அவர்தம்மைப் பிரிந்திருத்தல்
நாம் செய்த பாவமன்றோ
அவர்தம்மைப் பார்த்திருத்தல்
அன்னவரின் பெருமையன்றோ
அதுகிடைக்கா(து) எதுகிடைத்தும்
அருளில்லை இவ்வுலகில்
பெற்றவரைப் போற்றிடுவர்
பேரெல்லாம் பெற்றிடுவர்
பெருமைபட வாழ்ந்திடுவர்
பெருகிவரும் செல்வமெலாம்
வாழ்த்துதற்கு நாமென்ன வானவரா?
வணங்கிடுங்கள் தெய்வமதை
வளர்நாளும் வரலாறாய்
வாழ்ந்திடுங்கள் வாழ்த்துக்களால்!

- சுரேஜமீ


கே: உங்கள் முயற்சிகளுக்குத் துணை நின்றவர்கள் பற்றிச் சொல்லுங்கள்...
ப: முதலில் எனது தந்தை என்மீது கொண்ட நம்பிக்கை; எனது தம்பி என்னைத் தொடர்ந்து தன்னை நிலைநிறுத்தியது; மனைவியின் எவ்விதக் குறுக்கீடும் இல்லாத ஒத்துழைப்பு; மகள்களின் அளப்பரிய பெருமிதமும், நம்பிக்கையும்; சுற்றத்தாரின் மகிழ்வும் ஊக்கமும்; தமிழறிஞர்களின் தொடர்பும் ஆதரவும்; நல்ல நண்பர்கள் என்னைச் சுற்றி இருப்பது - இவைதாம் எனக்கு உற்ற துணை.

கே: உங்கள் குடும்பம் பற்றிச் சில வார்த்தைகள்...
ப: முன்னர் குறிப்பிட்டவாறு என் குடும்பம் மனைவி, இரட்டை மகள்கள் கொண்டது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற கவியரசரின் வாக்குக்குப் பொருத்தமானவள் என் மனைவி; குழந்தைகள் இருவரும் என்னைப் பின்பற்றி இலக்கிய ஆர்வமும், கவியரசரின்பால் அன்பும் கொண்டவர்கள். ஆசைகள் அதிகம் இல்லாத சாதாரணக் குடும்பம் என்பதே எங்கள் சமூகப் பணிகளுக்கு உந்துதலாக இருக்கிறது.

வலைத்தளம்:
kksr-aurosun.blogspot.com

முகநூல் பக்கம்:
facebook.com/Surejamee


கே: எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறீர்கள்?
ப: கம்பனை, வள்ளுவனை, பாரதியை அவர்கள் நடையில் அடுத்த தலைமுறைக்குக் காட்டுவது.

வாக்குக்கும் சொல்லுக்கும் இடைவெளி அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க முயல்வது.

இலக்கியத்தை வெறும் அலங்காரத் தமிழாகக் கொண்டாடுவதை விடுத்து அன்றாட வாழ்வியலுக்கான அடிப்படைக் கோட்பாடுகளாகக் கொண்ட தமிழ்ச் சமூகத்தை அடையாளப்படுத்துவது.
உரையாடல்: அரவிந்த்
Share: 


© Copyright 2020 Tamilonline