Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சிறப்புப் பார்வை | சின்னக்கதை | சமயம் | நூல் அறிமுகம் | சிறுகதை | பொது | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
விளம்பரம்
அகலாது... அணுகாது...
- அம்புஜவல்லி தேசிகாச்சாரி|ஏப்ரல் 2022|
Share:
வழக்கமான, அட்டவணை மாறாத ஒரு காலைப்பொழுது. சுந்து எழுந்திருக்க ஒரு பிடிவாதம், அடுத்து ஒவ்வொரு தினப்படி கடனுக்கும் நீட்டி நெளிதல் என்று பாடாய்ப் படுத்த, ஒருவாறு அவன் ஆட்டிவைத்த ஆட்டத்துக்கெல்லாம் ஈடு கொடுத்து, வெளியே வந்ததும் பாலை ஆற்றிக் கொடுத்தவாறே அவனது பள்ளிப் பையை ஆராய்ந்தாள் கோமதி. வேண்டிய பொருள் நாலு தொலைந்திருக்கும், வேண்டாதது இரண்டு சேர்ந்திருக்கும்; பள்ளியிலிருந்து ஆசிரியை 'அறிக்கை' விடுவார், வீட்டில் தர்ஷினி இவளை விடுவிடு என்று விடுவாள்!

"இந்தச் சட்னியை அரைச்சு, சாம்பாருக்குத் தாளிக்கக் கூடாதா கொஞ்சம்? என்னதான் பண்றீங்க அங்கே விடிஞ்சதிலேர்ந்து?" தர்ஷினியின் அதிகாரக் குரல் சமையற் கட்டிலிருந்து. போட்டது போட்டபடி விரைந்தாள் அடுப்படிக்கு.

இதற்குள் உறக்கம் கலைந்து அழுது ஊரைக்கூட்டிய குழந்தை சாதனாவை கொஞ்சிக் கெஞ்சி சமாதானப்படுத்தியபடி குளியலறைக்குக் கடத்திச் சென்றார் சாம்பசிவம்.

உணவருந்த உட்கார்ந்த மருமகன் விக்ரம் "என்ன இது, சட்னியில் உப்பே இல்லை; சாம்பாரில் ரெண்டு பங்கு" என்று முகத்தைச் சுளிக்க, "என்னம்மா, இதுகூடப் பார்த்துப் போடக்கூடாதா?" அம்மாவின்மேல் பாய்ந்தாள் தர்ஷினி.

"நான் திரும்பத் திரும்ப 'உப்பு போட்டாச்சான்னு கேட்டேன்; நீ ஃபோன் பேசிக்கிட்டே ஊம் ஊம்னு சொல்லவே, போட்டியாக்கும்னு இருந்துட்டேன். சட்னிக்குப் போட்டதா நினைச்சு, சாம்பாரில் போட்டிருக்கே போலிருக்கு" என்று பதிலிறுத்தாள்.

"எது கேட்டாலும் எடக்கு மடக்கா பதில் சொல்லுங்க" என்று கடுகடுத்தாள் மகள். முகம் சுண்டிப்போய் வெளியேறிய கோமதி "இவள் எனக்கு பதில் சொன்னாளா, ஃபோனுக்கு சொன்னாளான்னு தெரிய மாட்டேங்குது" என்று கணவரிடம் குறைப்பட்டுக் கொண்டாள். கண்ணாலேயே அவளைச் சமாதானப் படுத்தினார் சாம்பசிவம்.

ஒரு மாதிரியாகப் பேரன் பள்ளிக்கும், மருமகன் அலுவலகத்துக்கும் கிளம்பியதும் சற்று மூச்சு வாங்க உட்கார்ந்தாள் கோமதி.

"அம்மா, எங்க சேர்மன் வரார் இன்னிக்கு. முக்கியமான மீட்டிங். முடிஞ்சு வர நேரமாகும். ஒரு ஏழு மணிவரை பார்த்துட்டு ராத்திரிக்குச் சப்பாத்தி, குருமா செஞ்சுடுங்க" என்று கூறிவிட்டு வேலைக்குக் கிளம்பினாள் தர்ஷினி.

மணி ஏழாகியும் வராததால் குருமாவைச் செய்து, சப்பாத்தியும் செய்து முடிக்கையில் ஸ்விக்கி டெலிவரி ஆள் வந்து உணவை வைத்துவிட்டுப் போனார்! பின்னால் வந்த மருமகன், "நேரம் ஆகிவிட்டதால் சமைக்க வேண்டாமென்று ஆர்டர் செய்யச் சொன்னாள்" என்று விவரித்தார்.

அரை மணியில் வந்த தர்ஷினி, "என்னம்மா, சாப்பாட்டுக்குச் சொல்லியிருக்கையிலே சப்பாத்தி குருமா செஞ்சுவச்சிருக்கீங்க?" என்று அலுத்துக் கொண்டாள். "நீதானே காலையில் டிபன் செய்துடச் சொன்னே; வர நேரமாயிட்டுதே, பிள்ளைகளும் தூங்கிடுமேன்னு நான் சப்பாத்தியைச் செய்தேன். சாப்பாட்டுக்கு ஆர்டர் செய்ததை எனக்கு சொல்லியிருக்கக் கூடாதா?" என்று கேட்டாள். இதற்கிடையே மருமகன் "ஏன் தர்ஷி, ஸ்விக்கிக்கு ஆர்டர் செய்ய எனக்கு ஃபோன் செய்தபோதே மாமாவுக்கும் தெரிவித்திருக்கலாம்; இல்லை வீட்டுக்குத் தெரிவிக்கச் சொல்லி எனக்காவது சொல்லியிருக்கலாம் இல்லையா?" என்று கேள்வியை முன்வைக்க, "ஆளாளுக்கு கேள்வியாக் கேட்டு துளைச்செடுங்க. மீட்டிங்கில இருக்கை யிலே போன் செய்ய முடியுமா? நீங்கதான் வீட்டுக்கு சொல்லியிருக்கக் கூடாதா? நானேதான் எல்லாத்துக்கும் பொறுப்பு ஏத்துக்கணுமா? ஏம்மா. நீங்கதான் இன்னும் ஒரு அரைமணி பார்த்து சமைக்க ஆரம்பிக்கக்கூடாதா?" என்று எல்லாரிடமும் எரிச்சலைக் கொட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தாள். இதில் தன் குற்றம் என்ன என்று தெரியாமலே மௌனமாக வெளியேறினாள் கோமதி.

இது மகள் வீட்டில் சீராடும் இத்தம்பதியின் அன்றாட வாழ்க்கைமுறை.

தர்ஷினி நகரின் பிரபல நிறுவனம் ஒன்றில் மேலாளர். காலை எழுந்ததும் குளியலறைக்குக்கூட கைபேசியுடன்தான் செல்வாள். ஒன்று குறுஞ்செய்திகளை ஓட்டிப் படிப்பது அல்லது அனுப்புவது. 'செல் செய்தி பேசி, வருசெய்தி பதிலுரைத்து’ என்று இருபத்திநாலு மணியும் போதாத படுபிஸி பெண்மணி.

அப்படி இப்படி என்று ஒரு நாளுக்கு ஒருவித குறை கண்டுபிடிப்பு, விமர்சனம் என்று இந்த நாலு மாதங்களை இங்கு கழித்து முடித்தாயிற்று. அடுத்தது மதுரைக் காண்டம் (கண்டம்!). இவை அத்தனையும் அங்கும் உண்டு; வேறு விதங்களில்! இங்கு சரவெடி என்றால் அங்கு வாழைப்பழத்தில் ஊசி.

★★★★★


மதுரையென்றாலே தெரியும் ஆட்சி யாருடையது என்று! மகன் குரு மருமகள் ஜலஜா இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். சாம்பசிவம் தம்பதி இல்லாத நாட்களில் எப்படி வீடு, அலுவலகம் என்று இரண்டையும் சமாளிப்பார்களோ தெரியாது. இவர்கள் வந்துவிட்டால் அதிகாரம் தூள் பறக்கும். வராமல் ஒரேயடியாக விலகியிருக்கவும் முடியாது; 'பெண் வீட்டில் வருஷக் கணக்காகூட முகாம் அடிப்பார்கள், ஆனால் நமக்கு ஒத்தாசையா நாலு நாள் இருப்போமேன்னு தோணாது!’ என்று நிஷ்டூரப் பேச்சு கிளம்பும். அதற்கு இடம் கொடுப்பானேன் என்று இவர்கள் இங்கும் வந்து ஓரிரு மாதங்களைத் தள்ளிவிட்டுத் தங்கள் ஊரான திருச்சிக்குத் திரும்புவதை ஒரு சம்பிரதாயமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

"ரெண்டு நாளா வேலைக்கார மீனாவைக் காணோமே, என்ன ஆச்சு?" என்று மருமகளிடம் கேட்டாள் கோமதி.

"அவளை நிறுத்திட்டேன் அத்தை. சதா கடன் தொல்லை, பணம் வேணும்னு நச்சரிச்சா, பேராசைக்கு அளவேது? நிறுத்திட்டேன். நாலு பாத்திரத்தைக் கழுவி பெருக்கித் துடைக்கவே நாலு அஞ்சாயிரம் கேக்கறாங்க. நாமே செய்துக்கலாம்னு தீர்மானிச்சுட்டேன்" என்று பதில் வந்தது.

இதுவரை ஆறு வேலைக்காரப் பெண்மணிகள் வந்து போய்விட்டனர். இவளது கெடுபிடி, எதிலும் குறை காணும் சுபாவம் காரணமாக யாரும் நிலைப்பதில்லை. ஆக, வீட்டு வேலைகள் கோமதி தலையில் விழுந்தன.

சமைத்த, உணவருந்திய பாத்திரங்களை அவ்வப்பொழுதே தேய்த்துவிட்டால் வேலை சுலபமாகுமென்று பாத்திரங்களைக் கழுவிவிடுவாள் கோமதி. "நோகாது அடிச்சானாம், ஓயாது அழுதாளாம் என்கிற மாதிரி நாள்பூரா பாத்திரம் தேச்சுக்கிட்டே இருந்தா, தண்ணி வீணாகுதே. மோட்டார் போடறதால கரெண்ட் சார்ஜும் எகிறுது. ஒண்ணா சேர்த்து வெச்சு, பகலில் ஒருதரம், ராத்திரி ஒருதரம் தேய்ச்சுடுவோம்" என்று புதியதோர் விதி செய்தாள் ஜலஜா. சரியென்று இந்தப் 'பகல்பத்து, இராப்பத்து' நடைமுறை வழக்கமாயிற்று.

அன்றும் பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள் கோமதி. என்ன மனநிலையில் இருந்தாளோ, ஜலஜா மகனிடம், "உங்கம்மாவைப் பார்த்தீங்களா? சூளை பாத்திரம் தானே ராத்திரி தேய்க்க வேண்டியிருக்குன்னு உங்க முன்னாடி குவிச்சு வச்சு தேய்க்கிறாங்க. கையோட அப்பப்ப தேய்ச்சுட்டா உங்களுக்குத் தெரியாமப் போயிடும் பாருங்க" என்று கூற, அதைக் கேட்ட கோமதி வேலையை முடித்துவிட்டு கணவரிடம், "முன்னே போனா முட்டு, பின்னே போனா உதைங்கிற மாதிரி எது செய்தாலும் குத்தமாயிடுதே" என்று புலம்பினாள்.

அதற்கும் ஒரு கண் அமர்த்தல், தலை அசைப்பு , அவ்வளவுதான்!

உடன் பணிசெய்யும் சுதாவை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தாள் மருமகள். கோமதியைப் பார்த்ததும் அவள் நலம் விசாரிக்கவே, சற்று உரையாட வேண்டியிருந்தது. அதற்குள் உள்ளிருந்து வந்த ஜலஜா, "வந்தவளுடன் வார்த்தையாடிகிட்டு உட்கார்ந்துட்டீங்களே, குடிக்க ஏதாவது வேணுமான்னு கேட்கக்கூடாதா?" என்று நொடித்தாள்.

போன வாரம் உடன் வேலை செய்யும் அனுசூயாவை அழைத்து வந்திருந்தாள். கோமதி நலம் விசாரிப்புக்குப் பின் அவளுக்குத் தேநீர் கொணர்ந்து கொடுத்தாள். அவள் போனதும் "யார் உங்களை குடுகுடுன்னு அவளுக்கு டீ கொடுத்து உபசாரம் பண்ணச் சொன்னாங்க? அவ வீட்டுக்குப் போனால் பச்சைத்தண்ணி கூடத் தரமாட்டா. இனி இந்த மாதிரி பெருந்தனம் எதுவும் செய்யாதீங்க" என்று சிடுசிடுத்தாள். இன்றோ, இவள் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருந்தால் இந்தவிதமான பேச்சு!

"ரெண்டு குளியலறையிலும் குழாய் ஒழுகுது. ப்ளம்பரைக் கூப்பிட்டுச் சரிசெய்யக் கூடாதாப்பா?" இது மகன்.

"சரவணனைக் கூப்பிட்டேன், கிராமத்துக்குப் போயிட்டானாம்" என்று விடையிறுத்தார் சாம்பசிவம். "சரவணன் என்ன நம்ம ஆஸ்தான ப்ளம்பரா? அவர விட்டா ஊரில் யாருமே இல்லையா? தினம் தவறாம குருசாமி அங்கிள், எதிர்வீட்டுத் தாத்தான்னு திண்ணைக் கச்சேரிக்குப் போறாரே, பேச்சு வாக்கில் வேறு ப்ளம்பர் பற்றிக் கேட்கக் கூடாதா? அது எதுவும் நினைவுக்கு வராதே! வேணுமின்னா வேலியிலும் காய்க்கும்" என்று உள்ளிருந்து வந்தது விமர்சனம்!

பதிலே கூறாமல் பத்திரிகையில் ஆழ்ந்துவிட்டார் சாம்பசிவம்! இருவரும் வேலைக்குப் போனபின் மனம் தாங்காமல் கோமதி "இதென்ன பிழைப்புங்க; இடறுகட்டையாட்டம் எந்தப் பிரச்னையானாலும் நம் பக்கமே பாயறாங்களே" என ஆவலாதியுடன் அமர்ந்தாள்.

"நீதான் சொல்லுவியே அடிக்கடி, காய்ச்சமரம் கல்லடி வாங்கும்னு, அப்புறம் எதுக்குப் புலம்பறே?" என்ற சாம்பசிவம், "திருவள்ளுவருக்கு மகன், மகள் இருந்தாங்களான்னு தெரியலை. அப்படி இருந்து, அவரும் வாசுகி அம்மையாரும் அவர்களை அண்டி இருந்திருந்தால் அவர் குறளையே மாற்றி 'அகலாது, அணுகாது தீக்காய்வார் போல்வர் மகன், மகளைச் சார்ந்து வாழ்வார்' என்று எழுதியிருப்பார். எப்போதும் ஒட்டியும் ஒட்டாமல் தேனைத் தொட்டு நீரைத் தொட்டதுபோல இருந்து காலத்தைக் கடத்தி முடிச்சு, ஊரைப் பார்க்கப் போனால்தான் நிம்மதி" என்று மனைவிக்கு ஆறுதலும், அறிவுரையும் கூறினார்.

"தமிழ்ப் பண்டிதராச்சே, வள்ளுவரும், ஒளவையாரும் வந்திடுவாங்களே" எனச் சற்று லேசான மனத்துடன் கூறிவிட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்றாள் கோமதி.

ஒரு மாதிரியாக, மதுரை விட்டது. திருச்சி வீட்டில் வந்து விழுந்தாயிற்று. அங்கெல்லாம் ஒவ்வொரு நாளும் நத்தை வேகம், ஆமை வேகமாக நகர்வதுபோல் பிடித்துத் தள்ளிய காலம், நம் வீடு, நம் ஊர், தெரிந்தவர்கள், நட்பு என்று வருகையில் வாயுவேக, மனோவேகமாகப் பறக்கிறது.

இதோ, மகள், அடுத்து மகன் என்று அழைப்பு வரும். அதே செக்கு மாட்டு வாழ்க்கையில் நாட்களைக் கழிக்க வேண்டும் என்று எண்ணும்போதே அலுப்பாக வந்தது. ஆனால் சாம்பசிவம் இம்முறை ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

எதிர்பார்த்தபடியே வந்தது தர்ஷினியின் அழைப்பு. ஆனால் சாம்பசிவத்தின் பதில்தான் மாறி இருந்தது. "தர்ஷி, அம்மா அடிக்கடி மூட்டுவலியால் நடக்கவே சிரமப்படுகிறாள். அங்கு வந்தால் நீ பாவம் உன் ஆயிரம் வேலைகளுக்கிடையே அவளையும் கவனிக்க முடியாது. இங்கேயே நான் உதவியாக இருக்க ஒருமாதிரி காலம் தள்ளுகிறோம். அங்கெல்லாம் வரமுடியும்னு தோணலை" என்று நாசூக்காக மறுத்துவிட்டார். மகன் அழைப்புக்கும் எதையோ கூறித் தவிர்த்துவிட்டார்.

அம்மாவினால் உதவி இருக்காது என்று தெரிந்தவுடனே இருவரிடமிருந்தும் ஒற்றுமையாக, "நீங்க சொல்றதும் சரிதாம்பா. அங்கேயே தெரிந்த டாக்டர் இருக்கார், அவரிடமே வைத்தியம் பார்த்துக்கோங்க. நீங்களும் உடம்பைப் பார்த்துக்கோங்க" என்று பதில் வந்தது. பெரியவர்கள் இருவரும் கோயில், குளம், உறவினர் சந்திப்பு என்று நாட்களைக் கழித்தனர். அவ்வப்பொழுது தொலைபேசி நலம் விசாரிப்புகளுடன் இருபுறமும் நிறுத்திக்கொண்டு விட்டனர்.

ஒரு வருடம் போனதே தெரியவில்லை.

குருவுக்குப் பணி நிமித்தமாகத் திருச்சி வர நேர்ந்தது. அப்படியே பெற்றவர்களையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வீட்டுக்கு வந்தான். கூடத்தில் நாளிதழுடன் அமர்ந்திருந்த சாம்பசிவம், "அடடே, வாப்பா குரு. என்ன திடீர் விஜயம்? ஊரில் ஜலஜா சுகமா?” என்று ஆரவாரமாக வரவேற்றபடி, "கோமு, யார் வந்திருக்காங்க பார் இங்கே" என்று குரல் கொடுத்தார்.

வெளியே விரைந்து வந்த கோமதி, "வாப்பா, விடிகாலை வண்டியில் வந்தயா? ஜலஜா சவுக்கியமா?" என்று விசாரித்தாள். அம்மாவை உற்றுக் கவனித்த குரு, அவள் உடல்நலிவு ஏதும் இல்லாமல், முன்பு இருந்ததைவிடச் சற்றுப் பருத்து, ஆரோக்கியமாக இருப்பதைக் கவனித்தான். "இல்லம்மா, ஆபீஸ் விஷயமா நேற்றே வந்தேன்; ஆஃபீஸ் கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்தேன். சாயங்காலம் திரும்ப வேண்டும்" என்று பதிலிறுத்தபடி அமர்ந்தான்.

அவனுக்கு முதலில் காப்பி கொடுத்துவிட்டு, "கை, கால் கழுவிக்கிட்டு வாப்பா, டிபன் சாப்பிடுவயாம்" என்றாள் கோமதி.

வீட்டை ஒருமுறை சுற்றிப் பார்த்தவனுக்கு வியப்பாக இருந்தது. முன்பு வெறும் கட்டாந்தரையாக இருந்த வாசலில் அழகாகச் செங்கல் தடுப்புடன் பாத்தி கட்டி விதவிதமான பூச்செடிகள் சிரித்துக்கொண்டு நின்றன. வீட்டிலும் வேறு சிலர் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. உணவு மேஜையில் சுடச்சுட குழாய்ப்புட்டும் கிண்ணத்தில் தேங்காய்ப் பாலும் தயாராக இருந்தன.

"கல்யாணி அம்மா கை குழாப்புட்டுன்னா சாப்பிட எண்ணிக்கையே மறந்துடும். கைமணம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் அவங்க சமையல்தான்" என்று புகழ்ந்தவாறே, "கல்யாணிம்மா என் மகன் வந்துருக்கான். வாங்க, அறிமுகப்படுத்துறேன் என்று அழைக்க, அம்மா வயதோ ஒன்றிரண்டு மூத்தவராகவோ இருந்த பெண்மணி ஒருவர் வந்தார்.

அருமையான சிற்றுண்டியை வெகு நாட்களுக்குப் பின் ரசித்து உண்டு கொண்டிருந்தான். சாம்பசிவத்திடம் ஒரு வாலிபன் வந்து "சார், கல்யாணியம்மா சொன்ன மளிகையெல்லாம் இந்தப் பையில் இருக்கு. பஞ்சு மாமாவுக்கு மாத்திரை, இந்தாங்க" என்று கொடுத்தவனிடம், "சுரேஷ் தம்பி, டிபன் சாப்பிட்டுப் போயேம்பா; அதுக்குள்ளே பஞ்சுவும் வந்துடுவார்" என்றபடி அவனுடன் உள்ளே வந்தார் சாம்பசிவம்.

"இதுதான் என் மகன் குரு. மதுரையிலிருந்து வேலை நிமித்தமா வந்திருக்கான். குரு, சுரேஷ் எதிர்வீட்டில் இருக்கான், கல்லூரிப் படிப்புக்கிடையே எங்களைப்போல வயசானவங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்றான்" என்றவர் தொடர்ந்து, "நாங்க ரெண்டுபேரும் வெளியே போக நேர்ந்தபோது, தற்செயலாக கல்யாணி அம்மா, பஞ்சு சார், இன்னும் கந்தசாமி வாத்தியார் எல்லாரும் சந்தித்துக் கொண்டோம். எங்களுக்காவது தங்க வீடு, ஓய்வூதியம் என்று பொருளாதாரப் பாதுகாப்பு இருக்கு. கந்தசாமி வாத்தியார் மனைவியை இழந்து, தனியாக இருந்தவர்; அவருக்கு ஓய்வூதியம் வருகிறது. இது எதுவும் இல்லாமல் பெற்ற பிள்ளைகளும் ஆதரிக்காமல் விரக்தியிலிருந்த பஞ்சு தம்பதியுடன் சேர்ந்து, ஒருவருக்கொருவர் உதவியாக, ஒத்த வயதினர் ஒரு மரத்துப் பறவைகளாக இருக்கத் தீர்மானித்தோம்.

"கல்யாணி அம்மா நாராயணீயம் பாடுவதை இன்றைக்கெல்லாம் கேட்கலாம்னா, பஞ்சுசாரின் திருவாசகம், திருப்புகழ், பிரபந்தங்கள் நமக்கு சுவாமியிடமே நெருங்கிவிட்ட பரவசத்தைக் கொடுக்கும். அண்டை அயலிலுள்ள பெரியவர்களும், சில இளையவர், குழந்தைகளும் பஞ்சு சாரிடம் திருவாசகம், திருப்புகழ் கற்கவும், கல்யாணியம்மாவிடம் நாராயணீயம் கேட்கவும் வராங்க. தனிமை என்பதே இல்லை. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கு. கந்தசாமி அண்ணன் கை பட்டா மண்ணுக்கு அப்படி ஒரு குஷியாகி, பூவும் காயுமா கொழிக்கும். இதையெல்லாம் இத்தனை காலம் அனுபவிக்காமல் போயிட்டமேனு இருக்கு. நிம்மதியா இருக்கிறோம். வேண்டியபோது நீயும், தர்ஷினியும் வந்து தங்கி எங்களுடன் இருந்துவிட்டுப் போகலாம். யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாமலிருக்கும்" என்று கூறினார்.

தாங்கள்தான் பெற்றோரைத் தங்களுடன் வைத்துக்கொண்டு தாங்குவதாக எண்ணிக்கொண்டிருந்த குருவுக்கு, அவர்கள் நிம்மதி எங்கே உள்ளது என்பது பொட்டிலடித்தாற்போல் விளங்கியது. மனைவி, தங்கையிடம் இதைச் சொன்னபோது, "ஆமாம், பெற்ற பிள்ளைகள் குழந்தை குட்டியுடன் ஒரு பக்கமும், வேலை, வீடுன்னு மறுபக்கமும் அல்லாடும்போது உதவ மனசில்லயாம்; யார் யாரையோ இழுத்து வைத்துக்கொண்டு நிம்மதியைத் தேடுறாங்களாம்!" என்று ஒரே குரலில் விமர்சித்தார்கள்.

அவர்கள் மாறவே மாட்டார்கள்!
அம்புஜவல்லி தேசிகாச்சாரி,
சான் ஹோசே, கலிஃபோர்னியா
More

விளம்பரம்
Share: 
© Copyright 2020 Tamilonline