Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சிறப்புப் பார்வை | சின்னக்கதை | சமயம் | நூல் அறிமுகம் | சிறுகதை | பொது | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
கி. சாவித்திரி அம்மாள்
- அரவிந்த்|ஏப்ரல் 2022|
Share:
"சாவித்திரி அம்மாளின் எழுத்தில் எழுத்தாளர்களுக்கு வெகு சகஜமான அகங்காரம் என்கிற குற்றத்தைக் காண முடியாது. கருத்துக்கள் எல்லாம் வெறும் சித்திரத்துக்காக வரையப்படாமல் சந்தர்ப்பத் தொடர்பும் உண்மையும் பொருந்தி நன்றாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கும். படிக்கும்போதும் ஒரு கஷ்டமும் இல்லாமல் ஆற்றோட்ட நடையாக இருக்கும்" - 'வம்புப் பேச்சு' நூலின் முன்னுரையில் இப்படிப் பாராட்டுபவர் ராஜாஜி. "ஸ்ரீமதி சாவித்திரி அம்மாளது மொழிபெயர்ப்பில் இயற்கையோட்டம் இருக்கிறது. இந்தத் தமிழ்ப் புஸ்தகத்தை படித்துவிட்டு பிறகு இங்கிலீஷ் புத்தகத்தைப் படித்தால் அது இதன் மொழிபெயர்ப்பென்றுதான் தோன்றும்" சாவித்திரி அம்மாள் மொழிபெயர்த்த 'காலைப்பிறை' நூலின் முன்னுரையில் இப்படிப் புகழ்ந்துரைப்பவர் கி.வா.ஜ.

இப்படி அக்காலத் தமிழ்ச் சான்றோர்கள், எழுத்தாளர்கள் பலரது பாராட்டுதல்களைப் பெற்றவர் சாவித்திரி அம்மாள். இவர் மே 5, 1898ல் வி. கிருஷ்ணசாமி ஐயர் - பாலாம்பாள் தம்பதியினருக்கு நான்காவது மகளாகப் பிறந்தார். கி. பாலசுந்தரி அம்மாள், கி. பாலசுப்பிரமணிய ஐயர், கி. சுப்பலக்ஷ்மி அம்மாள் மூவரும் இவருக்கு மூத்தவர்கள். பிற்காலத்தில் எழுத்துலகில் முத்திரை பதித்த கி. சரஸ்வதி அம்மாள், கி. சந்திரசேகரன் இருவரும் இவருக்கு இளையவர்கள். தந்தை மயிலாப்பூரின் புகழ்பெற்ற வழக்குரைஞர். பாரதியின் 'சுதேச கீதங்கள்' நூல் அச்சாக உதவியவர். பின்னால் நீதிபதியாக உயர்ந்தவர். 'இந்தியன் வங்கி' உருவாகக் காரணமானவர்.

மயிலை ராணி விஜயநகரம் பள்ளியில் (தற்போதைய பெயர் - லேடி சிவசாமி ஐயர் மேல்நிலைப் பள்ளி) கல்வி பயின்றார் சாவித்திரி அம்மாள். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் மூன்றிலும் தேர்ந்தவரானார். பால்ய விவாகம் சகஜமாக இருந்த காலகட்டம் என்பதால் அக்கால வழக்கப்படி 1908ல் பட்டாபிராம ஐயருடன் திருமணம் நடந்தது. அப்போது சாவித்திரி அம்மாளுக்குப் பத்து வயது. மணமான பின்னும் பெற்றோர் குடும்பத்துடனேயே வசித்தார். மேற்கல்வியைத் தொடர்ந்தார். 11 வயது நடக்கும்போது தாயை இழந்தார். அடுத்த இரு ஆண்டுகளிலேயே தந்தையும் காலமானார். தத்தளித்த குடும்பத்தை அண்ணன் பாலசுப்பிரமணியனும் அக்கா பாலசுந்தரியும் பொறுப்பேற்று வழிநடத்தினர். சகோதர, சகோதரிகளின் கல்வி தடைப்படாமல் தொடர்ந்து பயில ஊக்குவித்தனர்.

தொடர்ந்த கல்வியும், வாசிப்பும் எழுத்தார்வத்தைத் தூண்டின. காளிதாசனின் சாகுந்தலமும், குமார சம்பவமும், ஜேன் ஆஸ்டினின் நூல்களும் எழுதும் உத்வேகத்தை அளித்தன. கணவரும் சிறப்பாக ஊக்குவித்தார். 'ஹேமலதை' என்ற நாவலை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார் சாவித்திரி அம்மாள். அதுதான் அவரது முதல் நாவல். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்நாவல் பற்றி அம்பை, "மிகவும் சிறிய வயதிலேயே எழுத ஆரம்பித்த இன்னொரு எழுத்தாளர் கி. சாவித்திரி அம்மாள். பதினாலு, பதினைந்து வயதிலேயே ஆங்கில துப்பறியும் நாவல் ஒன்றை 'ஹேமலதை' என்று தமிழில் மொழிபெயர்த்தவர். இது புத்தகமாகவும் வெளிவந்தது. மிகவும் மென்மையாகச் சில விஷயங்களைக் கூறியவர் சாவித்திரி அம்மாள்" என்கிறார். (உடலெனும் வெளி - பெண்ணும் மொழியும் வெளிப்பாடும், கிழக்கு பதிப்பகம், 2017) தொடர்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நிறைய எழுத ஆரம்பித்தார். ஆங்கில இதழான திரிவேணியிலும், தமிழ் இதழான கலைமகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிப் பரவலான வாசக கவனம் பெற்றன.



கலைமகளில் இவரது கதைகளை, மொழிபெயர்ப்புக்களைத் தொடர்ந்து வெளியிட்டு ஊக்கப்படுத்தினார் கி.வா. ஜகந்நாதன். F.W. Bain எழுதிய 'Digit of the moon' என்னும் நூலை 'காலைப்பிறை' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார் சாவித்திரி அம்மாள். கலைமகளில் தொடராக வெளியான அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. பின்னர் அது நூலாகவும் வெளியானது. தொடர்ந்து பெயின்ஸ் எழுதிய Bubbles of the Foam நாவலையும் 'நீர்க்குமிழி' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். பெயின்ஸின், Heifer of the Dawn என்ற நூலை அபராஜிதா எனத் தமிழில் தந்துள்ளார். தாகூரின் House and the World நாவலை 'வீடும் வெளியும்' என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்துள்ளார். கா.சி. வேங்கடரமணி ஆங்கிலத்தில் எழுதிய 'Murugan the Tiller' என்ற நாவலை 'கிருஷ்ணகுமாரி' என்ற புனைபெயரில் தமிழில் மொழிபெயர்த்தவர் சாவித்திரி அம்மாள்தான். இவர் எழுதிய 'வம்புப் பேச்சு' ராஜாஜியின் முன்னுரையுடன் வெளியானது. கலைமகள் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். இது சென்னைப் பாடநூல் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, 1950களில் நான்கு முதல் ஆறாம் பருவம் (IV to VI Form) பயிலும் மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டது.

சாவித்திரி அம்மாளின் முக்கியமான பங்களிப்பாகச் சொல்லப்படுவது வி.எஸ். ஸ்ரீநிவாஸ சாஸ்திரியார் ஆங்கிலத்தில் ஆற்றிய ராமாயணச் சொற்பொழிவைத் தமிழில் மொழிபெயர்த்ததுதான். சென்னை மயிலை சம்ஸ்கிருதப் பள்ளி வளாகத்தில் ஏப்ரல் 5, 1944 தொடங்கி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று சாஸ்திரியார் உரையாற்றினார். சுமார் எட்டு மாத காலம் நிகழ்ந்த அந்தச் சொற்பொழிவு ஆங்கிலத்தில் நூலாக வெளியானது (Lectures on the Ramayana). அதே நூலை, "ராமாயணப் பேருரைகள்" என்ற தலைப்பில் தமிழில் தந்தார் கி. சாவித்திரி அம்மாள். அந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தவர், சம்ஸ்கிருத அறிஞரும், சிறந்த கல்வியாளரும், எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், பேராசிரியருமான டாக்டர் வே. ராகவன் அவர்கள். நூலின் முன்னுரையில் அவர் சாவித்திரி அம்மாளை வெகுவாகப் புகழ்ந்துரைத்திருந்தார். கல்வியாளரும், சாகித்ய அகாதமியின் துணைத் தலைவராக இருந்தவருமான கே.ஆர். ஸ்ரீநிவாஸ ஐயங்கார், தனது சிறப்புரையில், "There is however no doubt that Savitri Ammal's Translation in simple but deep significant style will give the readers a feeling of fullness and happiness" என்று குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தார்.

சாவித்திரி அம்மாளின் படைப்புகள்
ஆங்கிலம்: 'Pride and Prejudice', 'Seetha and Draupati', 'On Choosing Names', 'Function of Literatue', 'Sumithra', 'Can we have stories without love?', 'Glowing Womanhood-Seetha', 'Rt.Hon'ble Sastri on the Ramayana', 'Hand of Destiny', 'Tendencies of the Modern Woman' etc.

தமிழ்: பழைய ஞாபகங்கள், திகம்பரன், கல்பகம் (சிறுகதைகள்); வம்புப்பேச்சு (கட்டுரைத் தொகுப்பு); ஹேமலதை, காலைப்பிறை, நீர்க்குமிழி, அபராஜிதா, வீடும் வெளியும், முருகன் ஓர் உழவன், ராமாயணப் பேருரைகள் (மொழிபெயர்ப்புகள்) மற்றும் பல.


கணவர் 1948ல் காலமானதால் தனது சகோதரர்கள் குடும்பத்தினருடன் வசித்தார் சாவித்திரி அம்மாள். 'திரிவேணி' இதழின் ஆலோசனைக் குழு உறுப்பினராக அறுபது ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தார். அதில் பல கட்டுரைகளை, மதிப்புரைகளை எழுதினார். முற்போக்குச் சிந்தனை அதிகம் உடையவர். பல சமூக நற்பணி இயக்கங்களுடன் தொடர்பில் இருந்து பணியாற்றியவர். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தாலும் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். தமிழின் குறிப்பிடத்தகுந்த நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியவர். பெண்களின் மன உணர்வுகளை, மிக இயல்பாக, எந்தவிதப் பாசாங்குகளுமின்றி தனது கதைகளில் இடம்பெறச் செய்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

கல்விக்காக இவர் ஆற்றியிருக்கும் சேவைகளும் குறிப்பிடத்தக்கன. மயிலை வித்யா மந்திர் பள்ளி, லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆயுர்வேதக் கல்லூரிக்கு லட்சக்கணக்கான ரூபாய்களை நன்கொடையாக அளித்திருக்கிறார். 1956 முதல் 1982 வரை லேடி சிவசாமி ஐயர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்தார். 1976 முதல் 1985 வரை மயிலாப்பூரில் உள்ள வித்யா மந்திரின் தலைவராக இருந்தார். சென்னை மயிலாப்பூரில் இருக்கும் 'சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் பள்ளி' இவரது நினைவாக உருவானதே

அக்டோபர் 16, 1992ல், தனது 94ம் வயதில் இவர் காலமானார். தமிழின் முன்னோடி எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான சாவித்திரி அம்மாள் என்றும் நினைக்கப்பட வேண்டியவர்.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline