Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கவிதைபந்தல்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
முத்தாலங்குறிச்சி காமராசு
- அரவிந்த்|ஜனவரி 2022|
Share:
எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர், வரலாற்றாய்வாளர், நாடக ஆசிரியர், நடிகர் எனப் பல வெளிகளிலும் தன் சிறகை விரித்திருப்பவர் முத்தாலங்குறிச்சி காமராசு. நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கி, பத்திரிகையாளர், எழுத்தாளர், ஆய்வாளர், பதிப்பாளர் என உயர்ந்திருப்பவர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள முத்தாலங்குறிச்சி கிராமத்தில், சங்கரசுப்பு - சொர்ணம்மாள் இணையருக்கு, அக்டோபர் 8, 1966ம் நாளன்று மகனாகப் பிறந்தார். உள்ளூரிலேயே பள்ளிக்கல்வியை முடித்தார். உயர்கல்வியை பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியிலும், கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். இளவயதிலேயே எழுத்து மற்றும் நாடக ஆர்வம் இருந்தது. பள்ளி நாடகங்களில் நடித்தார். படிப்பை முடித்த பின் பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். எழுத்தார்வத்தால் பத்திரிகைகளுக்குச் சிறு சிறு படைப்புகளை எழுதி அனுப்பினார். முதல் படைப்பு, மார்ச் 6, 1987ல் 'தேவி' வார இதழில் வெளியானது. தொடர்ந்து பல இதழ்களில் சிறு சிறு கட்டுரைகள், துணுக்குகள், சிறுகதைகளை எழுதி வந்தார். குடும்பச்சூழல் காரணமாகச் சிலகாலம் மும்பைக்குச் சென்று வேலை பார்க்க நேர்ந்தது. மும்பையிலிருந்து வெளியாகும் 'மராத்திய முரசு', 'போல்டு இந்தியா' போன்ற் இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. சில ஆண்டுகளுக்குப் பின் சொந்த ஊருக்குத் திரும்பினார். மதுரை தினத்தந்தியில் பிழை திருத்துநர் பணி கிடைத்தது. சில காலத்திற்குப் பின் குடும்பச்சூழல் காரணமாக அதிலிருந்து விலக நேர்ந்தது. செங்கல் சூளை பணி உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டார். ஓய்வு நேரத்தில் வானொலி கேட்பது முக்கியப் பொழுதுபோக்கானது. வானொலி நாடகங்கள் இவரை ஈர்த்தன.

காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ விஜயேந்திரருடன்முத்தாலங்குறிச்சியில் 'தேன்கூடு இளைஞர் மன்றம்' சார்பாக நடந்த இரண்டு நாடகங்களில் பெண் வேடமிட்டுக் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து கதாநாயகனாகவும் நடித்தார். அந்த அனுபவத்தில் அகில இந்திய வானொலி நிலையத்தில் நடந்த நடிகர் தேர்வுக்குச் சென்றார். குரல்வளம், உச்சரிப்பு சரியில்லை என்று நிராகரிக்கப் பட்டார். அதற்காக மனம் சோரவில்லை. விடாமுயற்சி கொண்டு நாடகங்களை எழுத ஆரம்பித்தார். அவை சுற்று வட்டார கிராமங்களில் அரங்கேறி இவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தன. அதே உற்சாகத்தில் வானொலிக்கு நாடகங்கள், உரைகளை எழுதத் தொடங்கினார். வானொலியில் 'இளையபாரதம்' நிகழ்ச்சியில் இவரது சிறுகதை, உரை போன்றவை ஒலிபரப்பாகின. அக்டோபர் 3, 1988ல் இவரது 'குருவை மிஞ்சிய சீடர்' என்னும் உரை ஒலிபரப்பானது. பின்னர் 'கண்டிஷன் கண்டிஷன்' என்னும் நாடகம் ஒலிபரப்பானது. தொடர்ந்து இவரது நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகின. நாளடைவில் நெல்லை வானொலியின் முக்கிய நாடக எழுத்தாளர்களுள் ஒருவரானார் முத்தாலங்குறிச்சி காமராசு.

வேலூர் நாராயணி பீடம் சக்தி அம்மாவுடன்இக்காலகட்டத்தில் பேருந்து நடத்துநர் பணிவாய்ப்பு வந்தது. எஞ்சிய நேரத்தில் பத்திரிகைகளுக்குக் கதை, கட்டுரை எழுதினார். பகுதிநேரப் பத்திரிகை நிருபராகவும் பணி புரிந்தார். 1996-ல் இவருக்குப் பொன் சிவகாமியுடன் திருமணம் நிகழ்ந்தது. அதுமுதல் வாழ்க்கையில் உயர்வு உண்டானது. 1996 முதல் 1999 வரை சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மணிநாடாரிடம் உதவியாளராக வேலை செய்தார். அதில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றார். அவற்றை எழுத்தில் வடிக்கத் தொடங்கினார். இவரது எழுத்தின் பாதையை ஆன்மீகத்தின் பக்கம் திருப்பினார் மனைவி. தமிழ் முரசு இதழில் 'வல்லநாட்டுச் சித்தர் சாது சிதம்பர சுவாமிகள்' தொடரை எழுதினார். அது பரவலாக வாசிக்கப்பட்டது. நல்ல வரவேற்பும் கிடைத்தது. அந்த நூலைத் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் புத்தகமாக வெளியிட்டனர். அதுதான் இவரது முதல் நூல். அன்று ஆரம்பித்த ஆன்மீக எழுத்துப் பயணம் சித்தர்கள், ஆலயங்கள், சிறு தெய்வங்கள், ஜமீன்கள் என்று பரந்து விரிந்து இன்றைக்கு தென்தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மிக, வரலாற்றாய்வாளராக இவரை உயர்த்தியிருக்கிறது. இவரளவுக்கு யாரும் சித்தர்களை, ஜமீன்களை, புனித மலைத் தலங்களைப் பற்றி எழுதவில்லை என்னுமளவுக்கு நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

முன்னாள் முதல்வருடன்இவர் எழுதிய முக்கிய நூல்களுள் ஒன்று 'தலைத் தாமிரபரணி.' இது முதலில் 'நதிக்கரையோரத்து அற்புதங்கள்' என்ற தலைப்பில் நெல்லை தமிழ் முரசு நாளிதழில் தொடராக வெளியானது. பின்னர் காவ்யா பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டது. இந்த நூல் பற்றி காமராசு ஒரு நேர்காணலில், "இந்த நூலில் பொதிகை மலையில் இருந்து மேலச்செவல் என்னும் ஊர்வரைதான் எழுதியிருந்தேன். மீதியை இடைத்தாமிரபரணி, கடைத்தாமிரபரணி என எழுத வேண்டும் என ஆசைப்பட்டேன். அதற்கான பணியும் நடந்து வருகிறது. குறிப்பாக, இடைத்தாமிரபரணிக்காக கோபாலசமுத்திரத்தில் இருந்து சீவலப்பேரி வரை, மும்பையில் இருந்து வெளிவரும் 'வணக்கம் மும்பை' என்னும் வார இதழில் தொடராக எழுதி வருகிறேன். தூத்துக்குடி மாவட்டத் தாமிரபரணிக் கரை வரலாற்றை 'கடைத்தாமிரபரணி' என, நான் துவங்கிய "வணக்கம் ஸ்ரீவை" என்ற வார இ-பேப்பரில் எழுதி வருகிறேன். இரண்டு வருடத்தில் தாமிரபரணி பணியை முடித்து விடுவேன் என்ற நம்பிக்கையோடு பணியை தொடர்கிறேன்" என்கிறார்.

பாரதி புரஸ்கார்1000 பக்கங்கள் கொண்ட 'தலைத்தாமிரபரணி' நூல், தாமிரபரணி நதியின் சிறப்பை, அதன் பெருமையை, அதனை ஒட்டியுள்ள மக்களின் வாழ்வியலை, ஆலயங்களை, விழாக்களைப் பற்றிப் பேசுகிறது. குறிப்பாக, 'தாமிரபரணி மகா புஷ்கரம்' என்ற ஒரு விழா நடந்ததே இல்லை என்ற கருத்து சிலரால் முன் வைக்கப்பட்ட நிலையில், அந்தக் கூற்றை மறுத்து, விழா கொண்டாடப்பட்டதற்கான ஆதாரத்தை இந்த நூல் முன்வைத்தது. முத்தாலங்குறிச்சி காமராசுவின் மற்றொரு குறிப்பிடத்தகுந்த நூல், 'நவீன தாமிரபரணி மகாத்மியம்' என்பதாகும். இந்த நூலில் தாமிரபரணிக் கரையில் இருக்கும் 144 தீர்த்தக் கட்டங்களுக்கும் நேரில் சென்று படமெடுத்து, வரலாற்றை எழுதியிருக்கிறார். இந்த நூல் மகாபுஷ்கரத்தின் இறுதி நாளில், வேலூர் பொற்கோயில் சுவாமிகள் வெளியிட, வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர் உள்படத் தமிழகத்தில் உள்ள முக்கிய ஆதீனங்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்த நூலை எழுதியதற்காக, காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், அப்போதைய அமைச்சர் கடம்பூர் ராஜு, காமராசுவுக்கு 'இலக்கிய கலைச் செம்மல்' என்ற விருதை அளித்துச் சிறப்பித்தார்.தென்பகுதி ஜமீன்தார்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி இவர் எழுதியிருக்கும் 'தென்னாட்டு ஜமீன்கள்' நூல் மிக முக்கியமானது. கிட்டத்தட்ட 1000 பக்கத்துக்கு மேல் கொண்ட அந்த நூலில் ஊர்க்காடு ஜமீன்தார், சிங்கம்பட்டி ஜமீன்தார், எட்டையபுரம் ஜமீன்தார், சிவகிரி, சொக்கம்பட்டி, ஊத்துமலை, சாப்டூர், சேத்தூர், கடம்பூர், சாத்தான்குளம், நட்டாத்தி, குளத்தூர் ஜமீன் என சுமார் 18 ஜமீன்தார்களின் வாழ்க்கை, வரலாறு, முக்கிய நிகழ்வுகள், மக்கள் பணிகளை ஆவணப்படுத்தியிருக்கிறார். நூலின் முன்னுரையில், டாக்டர் காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள், "முத்தாலங்குறிச்சி காமராசு தென்னாட்டுக்குக் கிடைத்த வரம்" என்று புகழ்ந்துரைக்கிறார். சிறுகதைகள், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகங்கள், ஆன்மீக நூல்கள், ஆய்வு நூல்கள், மலர்கள், தொகுப்பு நூல்கள், பத்திரிகைத் தொடர்கள் என்று இதுவரை 150க்கும் மேலான நூல்களை எழுதியுள்ளார் முத்தாலங்குறிச்சி காமராசு. 33 வருடங்களில் இவர் படைத்திருக்கும் ஒட்டுமொத்தப் படைப்புகளின் எண்ணிக்கை 3000த்துக்கும் மேலாகும்.திரைப்படங்களிலும் இவரது பங்களிப்பு உண்டு. 'எட்டுத்திக்கும் மதயானை', 'புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்' போன்ற படங்களில் நடித்துள்ளார். 'அப்பாவின் மீசை' உள்ளிட்ட சில படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. 'பொருநை சுடர்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நிறையப் பங்களித்துள்ளார். இவரது படைப்புகளைப் பற்றி எம்.பில். மற்றும் பிஎச்.டி. பட்டங்களுக்காக மாணவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆதிச்சநல்லூர் நாகரீகத்தை வெளிக்கொண்டு வர உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்து வெற்றி கண்டவர். இவரது பணிகளைப் பாராட்டி, தமிழக அரசு 'தமிழ்ச்செம்மல்' விருது வழங்கியது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் 'தமிழ் ரத்னா' விருது பெற்றிருக்கிறார். திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய 'தமிழ்க்கலைசெல்வர் விருது', காஞ்சி மடம் வழங்கிய 'தண்பொருநை கலைச்செல்வர்' விருது, பாரதி கலை இலக்கிய மன்றம் வழங்கிய 'சிறந்த எழுத்தாளர்' விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கம் அளித்த 'நாட்டுப்புறவியல் மேதை' விருது மற்றும் 'தமிழ்மாமணி' விருது, 'பொருநை புதல்வன்', 'பதிவுச்செம்மல்' விருது, 'எஸ்.டி. ஆதித்தனார்' விருது, 'எழுத்து சித்தர்' பட்டம் உள்பட பல்வேறு சிறப்புகளும் பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், தாயின் மீது மிகுந்த அன்புடையவர். மறைந்த தன் தாயை தினந்தோறும் வணங்கிவிட்டே எச்செயலையும் செய்யும் வழக்கமுள்ளவர். தாயின் பெயரில் பொன்சொர்ணா ஸ்டூடியோ என்ற நிறுவனத்தை நடத்தி வருவதுடன், பொன்சொர்ணா என்னும் தனது பதிப்பகத்தின் மூலம் நல்ல பல நூல்களை வெளியிட்டு வருகிறார். மகன் அபிஷ் விக்னேஷ், மகள் ஆனந்த சொர்ண துர்கா, மருமகள் நந்தினி மற்றும் சீடர் சுடலைமணி செல்வன் உதவியுடன் கீழ்க்கண்ட யூட்யூப் சேனல்களை நடத்தி வருகிறார்.முத்தாலங்குற்ச்சி காமராசு எழுதிய நூல்கள்
சித்தர் வரலாறுகள்: வல்லநாட்டுச் சித்தர் சாது சிதம்பர சுவாமிகள், தாமிரபரணிக் கரையில் சித்தர்கள், சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை, அத்ரி மலை யாத்திரை, தோரணமலை யாத்திரை, அருள்தரும் அதிசயச் சித்தர்கள் மற்றும் பல.
ஜமீன் வரலாறுகள்: நெல்லை ஜமீன்கள், குளத்தூர் ஜமீன் கதை, சேத்தூர் ஜமீன் கதை, சிங்கம்பட்டி ஜமீன் கதை, தேரிக்காட்டு ஜமீன்தார்கள், தென்னாட்டு ஜமீன்கள், கரிசல் காட்டு ஜமீன்தார்கள் வரலாறு மற்றும் பல.
தாமிரபரணி பற்றிய நூல்கள்: தாமிரபரணி கரையினிலே, தலைத்தாமிரபரணி, பொதிகை மலை அற்புதங்கள், தரணிபோற்றும் பரணி நதி, நவீன தாமிரபரணி மகாத்மியம் (உலக நதிகள் வரலாற்றில் முதல் வீடியோ டிஜிட்டல் நூல்) மற்றும் பல.
ஆலய வரலாறுகள்: நெல்லை வைணவத் தலங்கள், நெல்லை சைவக் கோயில்கள், நெல்லை பெண் தெய்வங்கள், சீவலப்பேரி சுடலை, ஸ்ரீகுணவதியம்மன் அற்புதங்கள், ஸ்ரீபெரும்படை சாஸ்தா வரலாறு, குலசேகர நத்தம் கரும்புளி சாஸ்தா வரலாறு, செய்துங்கநல்லூர் சுந்தர பாண்டிய சாஸ்தா வரலாறு, ஜமீன் கோயில்கள், நெல்லைக் கோயில்கள் மற்றும் பல.
நாடகங்கள்: முடிச்சு மேலே முடிச்சு, முத்தாலங்குறிச்சி காமராசுவின் நாடகங்கள்
நாவல்கள்: என்னுயிரே விட்டுக் கொடு, கொன்றால்தான் விடியும், முத்துகிளி
சிறுகதைத் தொகுப்புகள்: கண்ணாடி மாப்பிள்ளை மற்றும் பல
பிற நூல்கள்: பொருநை பூக்கள், என் கிராமத்தின் கதை, நம்ம ஊரு அதிசயம், ஆதிச்சநல்லூர் ஆய்வுகள், பனி மலையும் அபூர்வ கண்டமும், நெல்லை துறைமுகங்கள், நெல்லை வரலாற்று சுவடுகள், படைப்புலகில் முத்தாலங்குறிச்சி காமராசு, எனது பயணங்கள், தென் பாண்டி சீமையிலே (இரண்டு பாகங்கள்) மற்றும் பல.


Media Kirukkan
Kamaraj Muthalankurichi

இணையதளம்: www.muthalankurichikamarasu.com
அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline