Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | அனுபவம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
நேர்காணல்
சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத்
- அரவிந்த் சுவாமிநாதன், திரு. பிரகாஷ் சுப்பிரமணியன்|டிசம்பர் 2021|
Share:
அது ஓர் இசைக்கச்சேரி. திரளான ரசிகர்கள் குழுமியிருக்கிறார்கள். "கண்ணை மூடிண்டு கேட்டா எம்.எல்.வி.யே பாடற மாதிரி இருக்கு. என்ன பாவம், என்ன உச்சரிப்பு, என்ன ஒரு அற்புதமான குரல் ஆஹா, ஆஹா!" இப்படிப் பாராட்டுகிறார் ரசிகர் ஒருவர். "எனக்கென்னவோ வசந்தகோகிலமே திரும்ப வந்து பாடற மாதிரி இருக்கு. ரொம்ப ஸ்பஷ்டமான உச்சரிப்பு. அருமையான சாரீரம்" என்று சிலாகிக்கிறார் இன்னொருவர். இப்படிப் பலதரப்பட்ட ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருபவர் இளம் இசைக்கலைஞர் சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத். பி.டெக். பட்டதாரி. சென்னைப் பல்கலையில் பரதநாட்டியத்தில் முதுகலைப் பட்டம் (M.A) பெற்றவர். சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியில் சம்ஸ்கிருதம் முதுகலை பயின்றிருக்கிறார். நாமசங்கீர்த்தனத்தில் தேர்ந்தவர். ஓவியத்தில் வல்லவர். இதோ, சிவஸ்ரீ பாடுகிறார்... இல்லை... பேசுகிறார், கேட்போமா?

கே: உங்களுக்கு இசையார்வம் வந்தது எப்போது?
ப: எங்கள் குடும்பமே சங்கீதக் குடும்பம். அப்பா ஜெ. ஸ்கந்த பிரசாத் மிருதங்க வித்வான். அப்பாவழித் தாத்தா சீர்காழி ஆர். ஜெயராமன் கர்நாடக சங்கீத வித்வான். பாட்டி சாந்தி ஜெயராமன், சீனியர் பரதநாட்டியக் கலைஞர்களுக்கெல்லாம் பாடியவர். அம்மாவழித் தாத்தா தென்னாங்கூர் மடாதிபதியாக இருந்த சுவாமி நாமானந்தகிரி சுவாமிகள். பாட்டி நாமசங்கீர்த்தனத்திற்கு உதவியாக இருந்தவர். ஆக, அப்பா வழி கர்நாடக சங்கீதம், அம்மா வழி நாம சங்கீர்த்தனம் என சிறுவயது முதலே நான் வளர்ந்தது முழுக்க இசைச் சூழலில்தான். அதைத் தாண்டி வேறு சிந்தனையே இருந்ததில்லை. மூன்று வயதில் இசை கற்க ஆரம்பித்தேன். அப்பாதான் முதல் குரு. என் வளர்ச்சிக்குக் காரணம் அப்பாதான்.கே: உங்கள் இசை அரங்கேற்றம் எங்கு நிகழ்ந்தது?
ப: பால பாடத்தை நான் அப்பாவிடம் கற்றுக் கொண்டேன். எனது தற்போதைய குரு திரு. ஏ.எஸ். முரளி அவர்களிடம் அப்பா சேர்த்துவிட்டார். 10 வயது முதல் அவரிடம் கற்று வருகிறேன்.

எனது இசை அரங்கேற்றம் நான்கு வருடங்களுக்கு முன்பு, ஹனுமந்தபுரத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஆராதனை தினத்தன்று நடந்தது. அந்த சன்னிதானத்தில், பெரிய பக்கவாத்தியங்களுடன் எனது முதல் கச்சேரி நடந்ததை நான் ஒரு மிகப்பெரிய ஆசிர்வாதமாக நினைக்கிறேன்.

குருநாதர்களிடம் கற்றதும் பெற்றதும்
என்னுடைய முதல் குரு, என் அப்பா சீர்காழி திரு. ஜெ. ஸ்கந்தப்ரசாத். மிருதங்க வித்வான். அவர் எனது மூன்றாவது வயதில் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து, வர்ணம் வரைக்கும் பயிற்றுவித்தார். தினமும் அகார சாதகம் பண்ண வைப்பார். என்னுடைய குரல் இன்றைக்கு இப்படி அமைய முழுக்காரணம் அப்பாதான். அதன் பிறகு ஏ.எஸ். முரளி அவர்களிடம் குருகுலம். அவர்தான் எனது பரதநாட்டிய அரங்கேற்றத்திற்குப் பாடினார். குரு முரளி அவர்கள் எனக்கு மேலும் பல கிருதிகளையும், வர்ணங்களையும் சொல்லிக்கொடுத்து, என்னை மேடையேற்றினார்.

என் அப்பாவும் சரி, குருவும் சரி, என்ன சொல்லுவார்கள் என்றால், அந்தப் பாட்டின் ட்யூனோ, தாளமோ, நாம் பாடுவதோ அதெல்லாம் இரண்டாம் பட்சம். சாகித்யத்தின் பாவத்தை, கேட்டுக் கொண்டிருப்பவர்களிடம், நாம் எப்படிக் கொண்டு போகிறோம் என்பதில்தான் நாம் குறியாக இருக்க வேண்டும்; அதில்தான் நமது கவனம், முயற்சி எல்லாம் இருக்க வேண்டும் என்பார்கள்.

அடுத்து, மேடை ஏறிப் பாடும்போது ஒரு கலைஞர் பணிவாக இருக்க வேண்டும்; அந்தப் பணிவுதான் ஒரு கலைஞனுக்குக் கடைசிவரை இருக்கக்கூடிய ஆசிர்வாதம் என்றெல்லாம் நல்ல பல விஷயங்களை எனது இரண்டு குருநாதர்களிடமிருந்தும் நான் கற்றிருக்கிறேன். பெரிய வித்வான்கள் எல்லாம் ஆசிர்வாதம் பண்ணுமளவுக்கு என் குரு என்னைத் தயார் செய்திருக்கிறார். அதற்கு நான் ரொம்பக் கொடுத்து வைத்திருக்கிறேன்.

சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத்


கே: இனிமையான குரல் உங்களுக்குக் கிடைத்த வரம். அதைப் பேண, பாதுகாக்க நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் என்ன?
ப: தினமும் சாதகம் செய்வது முக்கியம். அதற்காக அதிக ஸ்ட்ரெயின் செய்யவும் கூடாது. ஏனென்றால் குரல்நாண் மிகவும் நுட்பமான தசை. ஓரளவுக்கு மேல் நாம் அதைச் சிரமப்படுத்தக் கூடாது. சாதகம் செய்யும்போது இதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

குரலையும் குரல்நாணையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்வது மற்றொரு முக்கியமான விஷயம். அதிகக் குளிர்ச்சியான, காரமான, புளிப்பான உணவு வகைகளைத் தவிர்ப்பது, முடிந்தவரை எளிய உணவுகளை உண்பது, மிதமாகச் சாப்பிடுவது, அதிக வெப்பம் சூடு இல்லாமல் மிதமான வெப்பத்தில் உண்பது, வெந்நீர் குடிப்பது - என்று தனக்குத் தகுந்த மாதிரி செய்துவர வேண்டும். இது ரொம்ப ரொம்ப முக்கியம். இதைப் பின்பற்றினாலே, குரல் அதுபாட்டுக்கு இயல்பாகப் போய்க் கொண்டிருக்கும்.கே: சீரியல், மாடலிங்கில் இருந்து இசை மற்றும் நாட்டியம்தான் நம் வாழ்க்கை என்று நீங்கள் தீர்மானித்தது எப்போது?
ப: சீரியல், மாடலிங் எல்லாம் எனக்கு விவரம் தெரிவதற்கு முன்னால், சிறு பெண்ணாக இருந்தபோது செய்தது. அந்த முடிவு பெற்றோர் எடுத்தது. பிறகு இசை, நாட்டியப் பயிற்சிகள் அதிகமான பிறகு, அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிடலாம் என்று நினைத்தார்கள். எனக்கும் பாடுவதிலும் நாட்டியத்திலும்தான் அதிக ஈடுபாடும், மகிழ்ச்சியும் இருந்தது. அதனால் அதன் பிறகு வந்த வாய்ப்புகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், சீரியல், மாடலிங் செய்யக்கூடாது என்பதெல்லாம் இல்லை. I was always interested. ஆனால், இசைக்கும் நாட்டியத்துக்கும் முழுக்கவனம் வேண்டியிருக்கிறது. அப்போதுதான் அதில் வெற்றி அடையமுடியும். எல்லாவற்றிலும் போய், எல்லாவற்றிலும் நடுத்தரமாக இருப்பதை விட, குறிப்பிட்ட துறையை எடுத்துக்கொண்டு, அதில் திறமையை இன்னும் மெருகேற்றிக் கொள்வதில்தான் கவனத்தைக் குவிக்க வேண்டும். இது எனக்கு இயல்பான தேர்வு. அதனால் நான் இசை, நாட்டியம், ஓவியத்தில் மட்டும் கவனம் செலுத்துகிறேன்.கே: கடினமான திருப்புகழ்ப் பாடல்களையும் சரளமாகப் பாடுகிறீர்களே. அது எப்படி?
ப: மிகச்சிறிய வயதிலிருந்து செய்வதற்கெல்லாம் உண்மையில் நான் credit எடுத்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால், அறியாத வயதில் என்னுடைய முயற்சி குறைவாகத்தான் இருந்திருக்கும். Awareness குறைவாக இருந்திருக்கும். பெரியவர்கள் சொன்னதைக் கேட்டுச் செய்வது மட்டும்தான் எனக்குத் தெரிந்திருக்கும். சரளமான தமிழ் உச்சரிப்பு எனக்கு வந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் என் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி இவர்கள்தான். ஏனென்றால், அவர்கள் தினந்தோறும் ஸ்லோகம், பாராயணம் என்று சொல்லிச் சொல்லிப் பயிற்சி பெற்றவர்கள்.

எனக்கு நினைவு தெரிந்த வரையில் எங்கள் பாட்டி ஸ்லோகங்களையும், துதிகளையும், பாடல்களையும் பாடிப் பாடித்தான் எங்களைத் தூங்க வைப்பார். அதனால் இதற்கான complete credit அவர்களுக்குத்தான் போகவேண்டும். சிறு வயதில் எதைச் சாதித்தாலும், சாதிக்க முடிந்தாலும் அதற்கு முக்கியமான காரணம் நமது முன்னோர்கள்தான். பெற்றோர்கள்தான். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அவர்களுக்கும் முன்னால் இருந்த முன்னோர்கள் செய்த பூஜைகள், பாராயணங்கள் அவற்றின் பலனைத்தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.கே: மிகவும் புகழ்பெற்ற, பாரம்பரியமான மயிலை வீதி பஜனையில் உங்கள் பங்கேற்பு பற்றிச் சொல்லுங்கள்.
ப: மார்கழி வீதி பஜனையுடன் எனக்கு இதயபூர்வமான தொடர்பு உண்டு. நான் தஞ்சை சாஸ்த்ரா பல்கலையில் படித்தேன். அந்தக் காலகட்டத்தில் என்னால் இந்த பஜனையில் பங்கேற்க முடியவில்லை. அப்போது அப்பா, "இவளுக்குக் கொஞ்சம் விவரம் தெரிந்தவுடன் இவளை மார்கழி வீதி பஜனைக்கு அழைத்துப் போகவேண்டும். அந்த அனுபவம் இவளுக்கு வேண்டும்" என்று தீர்மானித்தார். நான் படிப்பை முடித்து வந்தவுடன் ஒருநாள் என்னை அங்கு அழைத்துப் போனார்.

'சரி. ஒரு சின்னப் பெண் வந்திருக்கிறாளே' என்று ஞானானந்த மண்டலி குழுவினர், மார்கழி மாத மயிலை வீதி பஜனையில், மாட வீதியில் பாட எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தனர். அந்த வீதி பஜனையில் கலந்து கொள்வதே ஆசிர்வாதம். அதில் பாட வாய்ப்புக் கிடைப்பது இன்னும் பெரிய பிளெஸ்ஸிங். அதற்கு எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதைவிட ஒரு தெய்வீக அனுபவம் இருக்கமுடியுமா? மார்கழி மாதம் விடியற்காலையில், கோவிலைச் சுற்றி வந்து குழுவினரோடு பாடுவது சாதாரண வாய்ப்பா? அதை ஒரு தெய்வீக வாய்ப்பாக நினைத்துப் பணிவோடு பாடினேன்.

அந்த வீடியோ மிகப்பெரிதாக வைரல் ஆனது. அதற்கு முழுக் காரணம் ஞானானந்த மண்டலி குழுவினர்தான். ஏனென்றால், அவர்கள்தான் எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தார்கள். குரு அனுக்கிரகமும் சுவாமி அனுக்கிரகமும்தான் எல்லாவற்றிற்கும் காரணம். மார்கழி வீதி பஜனை என் இதயத்துக்கு மிக நெருக்கமானது. அது தெய்வீக அனுபவம். அங்கே யார் பாடினாலும் அவர்களுக்கு அது விசேஷ அனுபவமாக இருக்கும். அதுதான் மார்கழி வீதி பஜனையின் சிறப்பு.கே: உங்கள் 'சிவாலயம்' பள்ளியில் நீங்கள் என்னவெல்லாம் சொல்லித் தருகிறீர்கள்?
ப: 'சிவாலயம்' மூலம் தொடக்கநிலை, நடுநிலை கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுக்கிறேன். 'அபங்கம்' கற்பிக்கிறேன். பரதநாட்டியம் சொல்லிக் கொடுத்தேன். 'கோவிட்' வந்தபிறகு எல்லாம் ஆன்லைன் ஆக மாறியது. ஆனால், ஆன்லைனில் நடனம் சொல்லித் தருவதில் எனக்குப் பெரிய அபிப்பிராயமில்லை. நடனத்துக்குத் தாளம் ரொம்ப முக்கியம். நான் இங்கே பாடி, அவர்கள் அங்கே ஆடவேண்டும் என்னும்போது, அது சரியாகாது. நமக்கும் அவர்கள் சரியாகச் செய்கிறார்களா என்பது தெரியாது. அதனால் அதைக் குறைத்திருக்கிறேன்.

பரத நாட்டியத்தை நேரடியாகச் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்பது என் எண்ணம். பாட்டு, அபங்கம்தான் இப்போது கற்பிக்கிறேன். 'சிவாலயம்' மூலம் இன்னும் நிறையக் கலைகளைக் கற்றுத்தர ஆசை. சுவாமி அனுக்கிரகத்தில் எல்லாம் நடக்கும்.

கே: உங்கள் கச்சேரிகளில் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்...
ப: பாராட்டு ஒன்று, இரண்டு என்று சொல்லமுடியாது. பெரிய பெரிய பாகவதாள், பெரிய வித்வான்கள் நிறையப் பேர் பாராட்டியிருக்கிறார்கள். ஆசிர்வாதம் செய்திருக்கிறார்கள். எந்தக் கச்சேரிக்கு யார் வந்தாலும், "அப்படியே பாவபூர்வமா; இருந்ததும்மா. இப்படியே கண்டினியூ பண்ணிண்டிரு. சுவாமி அனுக்கிரகம் உனக்குப் பரிபூரணமா இருக்கு. இன்னும் நிறைய இளைய தலைமுறை inspire ஆகிப் பாடணும்" என்று சொல்வார்கள். இதைப் பாராட்டுக் கலந்த அறிவுறுத்தல் என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் சொன்னதை நான் பின்பற்றி வருகிறேன். அவர்களுடைய ஆசிர்வாதத்தால் நிறையக் கச்சேரி வாய்ப்புகள் எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.கே: ஓவியத்திலும் மிகத் தேர்ந்தவராக இருக்கிறீர்கள் அந்த ஆர்வம் பற்றிச் சொல்லுங்கள்.
ப: சிறுவயது முதலே பெயின்டிங்கில் ஆர்வம் உண்டு. பெயின்டிங் எனக்கு மிக மிகப் பிடிக்கும். முன்பு ஆர்வத்தினால் செய்து கொண்டிருந்தேன். இப்போது கொஞ்ச காலமாக ஆர்டர் எடுத்துச் செய்கிறேன். இதெல்லாம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். பள்ளியில் படிக்கும் காலம் முதலே செய்து வருகிறேன். பள்ளியிலும் என்னை வெகுவாக ஊக்குவித்தார்கள். அதை விடாமல் தொடர ஆசை.

கே: உங்களது பிற பொழுதுபோக்குகள் என்ன?
ப: குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. பாடிக் கொண்டிருக்கிறேன். அதிலிருந்து கொஞ்சம் பிரேக் வேண்டுமென்றால் பெயின்டிங். இல்லையென்றால் டான்ஸ். இப்படித்தான். இது விட்டால் அது, அது விட்டால் இது என்று போகிறது. பிற ஆர்வங்கள் என்றால், சமைக்க ரொம்ப ரொம்பப் பிடிக்கும். மிகவும் ஈடுபட்டுச் செய்ய வேண்டிய விஷயம் அது. எல்லா வகை சமையலும் செய்யப் பிடிக்கும். எல்லாவற்றையும் முயல்வேன். வீட்டிலும் எனக்கு சப்போர்ட்தான். அதைத் தாண்டி யோகப் பயிற்சி செய்வேன், சைக்கிள் ஓட்டுவேன்.கே: இசை நிகழ்ச்சிகளில் நடந்த மறக்க முடியாத அனுபவங்கள் ஏதேனும் இருப்பின் எங்களுடன் பகிர்ந்து கொள்ள இயலுமா?
ப: ஒவ்வொரு கச்சேரியும், ஒவ்வொரு தயாரிப்புமே புது அனுபவம்தான். ஒரு கலைஞருக்கு அதைச் செய்ய ஆரம்பிக்கும் முன் உள்ளுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும்; டென்ஷன் இருக்கும்; பதற்றம் இருக்கும். எப்படி கரெக்டா பண்ணனும், எப்படி ரிசீவ் பண்ணப் போறாங்க, தப்புத் தவறு வராமப் பண்ணனும் என்ற நினைப்பு இருந்துகொண்டே இருக்கும். ஆனால், மேடை ஏறி உட்கார்ந்து தம்புராவைத் தொடங்கியதும், அல்லது டான்ஸ் என்றால் இறைவணக்கம் முடிந்து மேடையில் நுழைந்ததும் எல்லாம் மறந்து போய்விடும். ஒரு தெய்வீக உணர்வுதான் இருக்குமே தவிர வேறெதுவும் இருக்காது. அது ஒரு கலைஞருக்குக் கிடைக்கும் பிரத்தியேக அனுபவம், மற்றவர்களுக்குக் கிடைக்காது. ஆக, அதைவிடப் பெரிய அனுபவம் இருக்க முடியுமா என்று தெரியவில்லை.

தயக்கத்துடன் மேடை ஏறியிருந்தாலும் சரி, ரொம்ப தைரியமாக ஏறியிருந்தாலும் சரி, மேடை ஏறும் வரைதான். ஏறியதும் எல்லாவற்றையும் பரமாத்மாவிடம் விட்டுவிடுவேன். எல்லாம் இறைவன் சித்தம். என்னிடம் கேட்பவர்களிடமும், என் மாணவர்களிடமும் நான் சொல்வது இதுதான். "நாம் செய்கிறோம் என்ற 'தான்' என்ற எண்ணத்துடன் எதையுமே செய்யக்கூடாது." அந்த எண்ணத்தை நாம் கொண்டுவந்தால் ஒரு கட்டத்தில் அது ஒரு நம் இயல்பான எண்ணமாக மாறும். அதுவே பெரிய அனுபவம்.

சாதகமும் சாதனையும்
எவ்வளவு பெரிய சீனியர் ஆர்டிஸ்ட்டாக இருந்தாலும், தினந்தோறும் சாதகம் செய்வது ரொம்ப முக்கியம். ஒரு சில நாட்கள் முடியாமல் போகலாம். குறைந்தது ஒரு மணி நேரமாவது சாதகம் செய்யவேண்டும். எந்தக் கருவியாக இருந்தாலும் நாம் அதை எப்படி ஒழுங்காகப் பராமரிக்கிறோமோ அதுபோலத்தான் நம்முடைய குரலும். ஆகவே பயிற்சி மிக அவசியம். அப்பா எனக்கு மிகச் சிறப்பான பயிற்சிகளை அளித்திருக்கிறார். விவரம் தெரிந்த நாள்முதல் என்னைச் சாதகம் பண்ண வைத்தார். அப்படி அப்போது செய்த சாதகம் இன்றைக்கும் எனக்கு உதவிக் கொண்டிருக்கிறது.

இசை கேட்பதும் ஒரு முக்கியப் பயிற்சி. பெரிய வித்வான்கள், பழைய வித்வான்கள், பாரம்பரிய இசைக் கலைஞர்களின் கச்சேரிகளை நிறையக் கேட்க வேண்டும். அதன் மூலமும் நிறையக் கற்கலாம். எப்போதும் இசையும் நடனமும் சிந்தனையில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். 'சாதகம்' என்பது சிந்தனை, கேட்பது, பாடுவது என்ற மூன்றுமே சேர்ந்ததுதான்.

பரதநாட்டியத்துக்கு உடலின் தாக்குப்பிடிக்கும் திறனை (stamina) வளர்க்க வேண்டும். வலி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். லாகவமாகச் செய்வது ரொம்ப முக்கியம். ஆக, இதற்கும் பயிற்சி முக்கியம். நாள் முழுவதும் அதையே சிந்தித்துக்கொண்டு, அதையே செய்துகொண்டு இருக்க வேண்டும்.

சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத்


கே: கோவிட்-19 நாட்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள், என்ன செய்தீர்கள்?
ப: மேடையேறிப் பாடிக் கொண்டிருந்த எல்லாக் கலைஞர்களுக்குமே கோவிட்-19 ஆரம்பித்ததிலிருந்து வாய்ப்பில்லாமல் போய்விட்டது. என்னைப் பொறுத்தவரைக்கும், என்ன புண்ணியம் செய்தேன் என்று தெரியாது - இந்த பெருந்தொற்றுக் காலம் முழுவதும் என்னுடைய அட்டவணை நிரம்பி இருந்தது. Facebook live, YouTube live, மற்றவர்கள் page-ல் பாடுவது, என்னுடைய page-ல் பாடி அவர்கள் page-ல் பகிர்வது என்று விதவிதமாக live போயிருக்கிறேன், தொடர்ந்து கச்சேரிகள் வந்துகொண்டே இருந்ததால், நிறையக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருந்தது. கர்நாடக சங்கீதத்திலும், நாம சங்கீர்த்தனத்திலும், பரதநாட்டியத்திலும் இந்தக் கோவிட் நாட்களில் நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது. வெளியில் போய் எதையும் செய்யமுடியாத சூழலில், நம்மை எப்படி ஆயத்தம் செய்துகொள்வது என்பதை இந்த நாட்கள் கற்றுக்கொடுத்தன.கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: ஒன்றே ஒன்றுதான். அடுத்தடுத்து வரும் தலைமுறைகள் எல்லாமும் நம் இந்தியக் கலாசாரத்தை நன்கு கடைப்பிடித்து, கலைகள் எல்லாவற்றையும் நன்கு கற்றுக்கொண்டு, அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் அவற்றைக் கடத்தும்படியாக, நான் இந்தக் கலைகளைக் கற்றுக்கொண்டு, அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் நான் கொஞ்சம் கொஞ்சமாக 'சிவாலய'த்தை டெவலப் செய்து கொண்டிருக்கிறேன். இந்தக் கலைகளைப் பேணிக் காப்பதுதான் என் எதிர்காலத் திட்டம்.

இந்தக் கலைகளை எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். வயது ஒரு தடையல்ல. அறிவை விருத்தி செய்துகொண்டே இருக்கலாம். அதற்காக முயற்சி எடுக்கவேண்டும். கர்நாடக சங்கீதம் மட்டும் பாடிக் கொண்டிருந்தால் போதாது. ஒரு பாரதம் தழுவிய அடுத்த தலைமுறையை இதில் கொண்டு வரவேண்டும் என்றால், பிற கலை வடிவங்களும் தெரியவேண்டும் என்பதற்காக, ஹிந்துஸ்தானி இசை கற்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். குரு திரு மகேஷ் காலே (Mahesh Kale) அவர்களிடம் கற்கிறேன். இப்போது ஆரம்பநிலைதான்.

"அப்பா வழி கர்நாடக சங்கீதம், அம்மா வழி நாம சங்கீர்த்தனம் என்ற சூழல் எனக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது. குமாரி கமலா, ஸ்ரீமதி ராதா, ஸ்ரீமதி வனஜா நாராயணன் எல்லாம் தூரத்து உறவினர்கள். ஆக, பரத நாட்டியமும் பரம்பரையாக எனது மரபணுவில் இருக்கிறது. ஒரு முழுமையான கலைஞராக நான் ஆக வேண்டும் என்பதில், எல்லாருடைய ஆசிர்வாதமும் இருக்கிறது. நமஸ்காரம்" என்று சொல்லி அழகாகப் புன்னகைக்கிறார் சிவஸ்ரீ. அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துக் கூறி விடை பெறுகிறோம்.

சிவஸ்ரீ - சில குறிப்புகள்
மூன்று வயதுமுதலே பாடி வரும் சிவஸ்ரீ, பரதநாட்டியத்தை கலைமாமணி ஸ்ரீமதி கிருஷ்ணகுமாரி நரேந்திரன் மற்றும் ஆச்சார்ய சூடாமணி ஸ்ரீமதி ரோஜா கண்ணனிடம் கற்றுத் தேர்ந்தார்.
சிறுமியாக இருந்தபோது மர்மதேசம் (இயந்திரப் பறவை) சீரியலில் நடித்திருக்கிறார்.
தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும் நிறையக் குரல் கொடுத்துள்ளார்.
2008ல் க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனையில் பங்கேற்றார்.
மியூசிக் அகாடமி, கிருஷ்ண கான சபா, நாரதகான சபா, பிரம்ம ஞான சபா போன்ற சென்னையின் புகழ்பெற்ற சபாக்களில் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.
இசையில் 'யுவ சம்மான் விருது', நாட்டியத்தில் 'பரத கலா சூடாமணி' பட்டம் பெற்றிருக்கிறார்.
பரதநாட்டியம் மற்றும் கர்நாடக இசையை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதற்காக 'சிவாலயம்' என்ற பள்ளியை நடத்தி வருகிறார்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் அறிந்தவர்.
யூட்யூப் | இன்ஸ்டாக்ராம்
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
உதவி: திரு. பிரகாஷ் சுப்பிரமணியன்,
நங்கநல்லூர் கர்நாடக சங்கீத சபா
Share: 
© Copyright 2020 Tamilonline