Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
ரோபாட் ரகளையின் ரகசியம் - பாகம் 3
- கதிரவன் எழில்மன்னன்|ஏப்ரல் 2005|
Share:
Click Here Enlargeமுன் கதை:

சிலிகான் வேல்லியின் இளம் துப்பறியும் நிபுணர் சூர்யாவின் நண்பர் சுமிடோமோ, தன் ரோபாட் ஆராய்ச்சி சாலையில் எதோ பிரச்சனை, தீர்க்க சூர்யாவின் உதவி வேண்டும் என்று கோரவே, சூர்யாவும் கிரணும் அங்கே செல்கின்றனர். வரவேற்பறையில் ஓர் இளம் ஜப்பானியப் பெண் போன்ற ஒரு ரோபாட் அவர்களை வரவேற்று ஆச்சரியத்துக்குள்ளாக் கியது! சுமிடோமோ சூர்யாவையும், கிரணையும் ஆராய்ச்சி சாலைக்குள் அழைத்துச் சென்றார். அங்கு...

சுமிடோமோவின் ஆய்வுக்கூடம் கிரண் எதிர்பார்த்தது போலவே இல்லை. ஷாலினி வேலை செய்யும் ஆய்வுக்கூடம் போலப் பல அலுவலக அறைகளும், கருவிகள் நிறுவப்பட்ட சில லேப்களும் இருக்கும் என்று நினைத்தான். ஆனால் இதுவோ ஒரு பெரிய திறந்த வெளிக்குக் கூரை போட்ட வேர் ஹவுஸ் போல இருந்தது. அதன் நான்கு பக்கச் சுவர் ஓரங்களிலும், அலுவலக அறைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் நடுவிலோ ஒரே களேபரம்!

பல்வேறு விதமான ரோபாட்கள் ஓடித் திரிந்து கொண்டிருந்தன. வெள்ளைக் கோட் அணிந்த விஞ்ஞானிகள் அவற்றின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தனர். சில ரோபாட்கள் சினிமாவில் வந்த ஜானி-5 ரோபாட் போல பெல்ட்-சக்கரங்களின்மேல் நகர்ந்தன. இன்னும் சில இரண்டு கால்களால் நிதானமாகச் சற்றே தள்ளாடி நடந்தன. சில ரோபாட்கள் மனிதர்களைப் போன்ற உருவத்துடன் இருந்தன. இன்னும் சில செவ்வகப் பெட்டிகளுக்கு நிறையக் கை கால்கள் முளைத்தது போலிருந்தன. மேலும் சில ஒரே இடத்தில் பொருத்தப்பட்டு ரோபாட் என சொல்வதற்கில்லாமல் இயந்திரங்களாகவே இருந்தன.

இன்னும் வினோதமானது என்னவென்றால் ரோபாட்கள், விஞ்ஞானிகள் தவிர இன்னும் பல சராசரி ஆண்களும், பெண்களும் பல வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். சிலர் நடுவிலே இருந்த அடுப்புகளில் பலவித உணவுகளைச் சமைத்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் துணி துவைத்து உலர்த்தும் இயந்திரங்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் மருந்துக் குப்பிகளில் இருந்து ஸ்பூன்களில் மருந்தை அளவாக எடுத்து அருகில் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தவர்களுக்குப் புகட்டிக் கொண்டிருந்தனர். ஒரு அழகிய பெண் மஸாஜ் கூடச் செய்து கொண்டிருந்தாள்.

அவளைக் கண்டதும் கிரணுக்கு ஒரே கொண்டாட்டம். சுமிடோமோவிடம், "வேலைக்கு நடுவிலேயே மஸாஜா! ஜாலியா இருக்கே. நானும் செஞ்சுக்கலாமா?" என்று கேட்டான்.

சுமிடோமோ முறுவலுடன், "ஓ, தாராளமா செஞ்சுக்கலாம். ஆனா அதுக்கு முன்னாடி டெஸ்ட் ரிஸல்ட் எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துடறது நல்லது" என்றார்.

கிரண் குழப்பமடைந்தான். "டெஸ்டா? எதுக்கு?"

சுமிடோமோ பெரிதாகச் சிரித்தார். "அழுத்தம் சரியா இருக்கா, இல்லை எலும்பு உடையறா மாதிரி இருக்கான்னுதான். ஏன்னா, மஸாஜ் குடுக்கறது எங்க லேட்டஸ்ட் மாடல் ரோபாட். இன்னும் பேட்டா டெஸ்ட் கூட பண்ணியில்லை. நீ வேணும்னா இன்னிக்கு ஆல்·பாவா படுத்துக்கறயா, மஸாஜ் செஞ்சு டெஸ்ட் பண்ணச் சொல்றேன்?"

கிரண் ஆச்சர்யத்தால் வாய் பிளந்தான். "ரோபாட்டா? அவ்வளவு அழகா இருக்கு? டூ பேட்..." என்று வருத்தத்துடன் தலையசைத்துக் கொண்டான்.

சுமிடோமோ முறுவலுடன் அவன் முதுகில் ஒரு ஷொட்டுவிட்டார். "வருத்தப்படாதே கிரண். வேணும்னா அவளையே உனக்கு கேர்ள் ·ப்ரெண்டா மாத்தி ப்ரோக்ராம் செஞ்சு குடுத்துடறேன்."

கிரண் முகம் சுளித்து, போலியாகச் சிரித்து, பழித்துக் காட்டினான். "ஹா, ஹா. வெரி ·பன்னி டாக்டர் சுமிடோமோ. எனக்குச் சிரிப்பு தாங்க முடியலை."

அதற்குள் தலையில் உயரத் தொப்பியும் மேல் ஜாக்கெட் கோட்டும், நீளக் கோடுகள் போட்ட பேன்ட்டும் பள பளவென கண்ணாடி போல் மினுக்கிய கருப்பு ஷ¥க்களும் அணிந்த ஒருவன் வேகமாக வந்து பவ்ய மாகக் குனிந்து வணங்கி, பணிவாக நின்றான். அழகான இங்கிலாந்து உச்சரிப்புடைய ஆங்கிலத்தில், "ஹலோ, என் பெயர் ஜீவ்ஸ். நான் உங்களுக்கு எதாவது சாப்பிட அல்லது குடிக்கக் கொண்டு வரட்டுமா?" என்று உபசரித்தான்.

கிரண், "ஒரு டயட் பெப்ஸி கொண்டு வந்தா நல்லா இருக்கும்." என்றான்.

ஜீவ்ஸ் சூர்யாவிடம், "உங்களுக்கு?" என்றான். சூர்யா முறுவலுடன், "இப்போதைக்கு ஒண்ணும் வேண்டாம்.

என் கிட்ட பாட்டில் தண்ணி இருக்கு அது போதும்" என்றார்.

ஜீவ்ஸ் பவ்யமாகக் குனிந்து வணங்கி ஏற்றுக் கொண்டு, விடுவிடுவென விரைந்தான்.

சூர்யா லேசாகக் கைதட்டி சுமிடோமோவைப் பாராட்டினார். "பிரமாதம் சுமிடோ மோ-ஸான். வோட்ஹவுஸோட ஜீவ்ஸை அப்படியே கண் முன்னால ரோபாட்டாக் கொண்டு வந்து நிறுத்திட்டீங்க. அதுவும் அப்படியே பிரிட்டிஷ் உச்சரிப்பும் பணி விடை மேனர்ஸ¤ம். அட்டகாசம் போங்க."

கிரண் மீண்டும் வாய் பிளந்தான். "பட்லர் ரோபாட்டா? நாசமாப் போச்சு! நான் சுத்தமா ஏமாந்துட்டேன்" என்றான்.

சுமிடோமோவும் வியந்தார். "எப்படிக் கண்டு பிடிச்சீங்க சூர்யா? ஜீவ்ஸ் ரொம்ப ரொம்ப அட்வான்ஸ்ட் ரோபாட். ரொம்பக் குறைச்சலான வேலைகளைத் தான் செய்யும். ஆனா ஒரு மனிதனைப் போலவே உருவமும் நடை, பாவனை, பேச்சு, எல்லாம் இருக்கறா மாதிரி செஞ்சிருக்கோம். இது வரைக்கும் வேற யாரும் உடனே உங்களை மாதிரிக் கண்டு பிடிச்சதில்லை. நாங்க சொல்லித்தான் கண்டு பிடிச்சிருக்காங்க."

சூர்யா தலையாட்டினார். "ஓ, அது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை. உங்க ஆராய்ச்சி சாலையில நிறைய ரோபாட்கள் வேலை செஞ்சுகிட்டிருக்கு. மஸாஜ் செய்யறதும் ரோபாட்தான்னு இப்பதான் சொன் னீங்க. அதுவும் தத்ரூபமான மனித உருவமா இருக்கு. நீங்க உற்பத்தி செஞ்சு விக்கப் போறதும் வயசானவங்களுக்கு அவங்க வீட்டுல உதவி செய்யறத்துக்கான வீட்டு வேலை ரோபாட்னு எனக்கு முன்னமே சொல்லியிருக்கீங்க..."

சுமிடோமோ ஏமாற்றத்துடன் உதட்டைப் பிதுக்கினார். "அவ்வளவுதானா, அதை மட்டும் வச்சு சும்மா கெஸ் பண்ணிட்டீங்களா?"

சூர்யா தலையசைத்து மறுத்தார். "இல்லை சுமிடோமோ-ஸான். என் கணிப்பு அதுல ஆரம்பிச்சுது அவ்வளவுதான். இன்னும் இருக்கு. கலாச்சாரப் படியும், ஜீவ்ஸ் பிரிட்டிஷ் பட்லர் போல் கழுத்திலிருந்து மட்டும் தலை வணங்கி ஏற்றுக் கொள்ளாமல், ஜப்பானிய முறைப் படி இடுப்பிலிருந்து கீழாகக் குனிந்து வணங்கியதை கவனிச்சேன். நீங்க உங்க கலாச்சாரத்தை உங்களுக்கே தெரியாம பட்லர் ரோபாட்டுக்கு குடுத்திட்டிருக்கீங்க. இன்னும்..."

சுமிடோமோ கலகலவென சிரித்தார். "ஓ நோ! நான் கவனிக்கவே இல்லை. யூ ஆர் ரைட். அதைச் சரி செய்யணும். இன்னும் இருக்கா? என்ன?"

சூர்யா மேலும் விளக்கினார். "ஜீவ்ஸ் நடக்கும் போதும், திரும்பின போதும், சற்று தள்ளாடலும், கொஞ்சம் அதிர்வான அசைவுகளும் இருக்கறதையும் பார்த்தேன். முதல்லயே ரோபாட்டா இருக்கணும்னே நினைச்சுக்கிட்டுக் கூர்ந்து கவனிச்சதுனாலதான் தெரிஞ்சுது. சாதாரணமா பார்த்தா தெரிஞ்சிருக்காது. மேலும் அதே போல் ஜீவ்ஸ் பேச்சிலும் கொஞ்சம் எலக்ட்ரானிக் ஸ்பீச் ஸிந்தஸிஸ் வாடை லேசா அடிக்குது. அதுவும் ரொம்பக் கூர்மையா கவனிச்சாத்தான் தெரியுது. இன்னும், ஜீவ்ஸோட முதுகுல தோள் பட்டையே இல்லாம ரொம்ப தட்டையா தெரிஞ்சுது. கடைசியா, எல்லாத்துக்கும் மேல, பின் கழுத்துல கோட் கொஞ்சம் கீழே இறங்கி, ஒரு ஸிப்பரோட ஆரம்பம் லேசா தெரிஞ்சுது."

சுமிடோமோ கையைத் தட்டி பாராட்டினார். "சபாஷ் சூர்யா! மிக நுணுக்கமான விஷயங்களைக் கவனிச்சு கணிக்கற உங்க யூகத் திறமையை மீண்டும் காட்டிட்டீங்க. ஜீவ்ஸ் நம் தேவையெல்லாம் கவனிச்சுக்க நம்மோடயே தான் வருவான். அவனுக்கு இன்னும் என்னவெல்லாம் சரி செய்யணும்னு கவனிச்சு சொல்லுங்க."

கிரண் புகுந்து, "ஜீவ்ஸ் நம்ம தேவையெல்லாம் கவனிச்சுப்பானா? பலே! அப்ப எனக்கு லஞ்ச்சுக்கு நாலு இட்லி, ரெண்டு வடை, சாம்பார் தயார் செய்யச் சொல்லுங்க" என்றான்.

சுமிடோமோ சற்றும் அசராமல், "அதெல்லாம் இங்க சமைக்க முடியாது, வேணும்னா உடுப்பி ரெஸ்டாரன்ட் பக்கத்துலதான் இருக்கு, வாங்கிட்டு வரச் சொல்லட்டுமா?" என்றார்.
கிரண் ஆச்சரியத்துடன், "ஜீவ்ஸ் வெளியில போய் பேசி வாங்கவும் முடியுமா?" என்று வினவினான்.

சுமிடோமோ, "அதையும் செஞ்சிருக்கோம். ஆனா, நானும் இன்னும் சில பேரும் பக்கத்துலயே இருந்தோம்." என்றார்.

அப்போது இன்னொருவர் அங்கு வந்தார். அவருடைய நடை சற்று விறைப்பாக, நொண்டலாக இருந்தது. அவர் லேசான தலை வழுக்கையுடன், பல்வேறு கோணங்களில் நீளமாக வளர்ந்து கிடந்த தலை முடியுடன், லேப் கோட் போட்டுக் கொண்டு கண்ணாடியுடன் கையில் ஒரு நோட் புத்தகத்துடன் விஞ்ஞானி என்ற வார்த்தைக்கே உதாரணம் போல் இருந்தார்.

ஆனால் இந்த முறை கிரண் ஏமாறத் தயாராக இல்லை. வந்தவர் பேசுவதற்கு முன்பே, "ஹையா! நான் கண்டு பிடிச்சுட்டேன். வெறும் வேலை செய்யற ரோபாட்டா மட்டும் இல்லாம, விஞ்ஞானி மாதிரி கூட செஞ்சிட்டீங்களே சுமிடோமோ-ஸான். பிரமாதம்!" என்று பாராட்டினான். வந்த வரை ஒரு முறை சுற்றி வந்து கூர்ந்து கவனித்தான். ஸ்க்ரூ ஆணி, அல்லது மேல் தோலை விரித்துப் போட ஸிப்பர் எதாவது இருக்கிறதா என்று தேடினான். அப்படியே, வந்தவரின் மேல்தோலுக்கு அடியில் இருக்கும் உலோகத்தை ஸ்பரிசித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகச் சுட்டு விரலால் கையில் குத்திப் பார்த்தான்.

ஆனால் அந்தப் புது விஞ்ஞானியோ, கையில் இருந்த நோட்டைக் கீழே போட்டு விட்டு, "ஆவ்!" என்று வலிதாங்காமல் அலறினார். சுமிடோமோவைப் பார்த்து, "யார் இந்தக் கிறுக்கன்? என்னை ஏன் இப்படி சுத்திப் பார்த்து விரலால் குத்துகிறான்?" என்றார்.

சுமிடோமோவுக்கு சிரிப்புத் தாங்கவில்லை. ஆனாலும் அடக்கி விழுங்கிக் கொண்டு பரஸ்பர அறிமுகம் செய்து வைத்தார். "கிரண், சூர்யா: இவர்தான் என்னுடைய அருமை நண்பரும், இந்த ஆராய்ச்சி சாலையை முதல் நாளிலிருந்து கூட இருந்து ஆரம்பித்து இந்த அளவுக்கு வளர்க்க உதவிய பார்ட்னருமான ராபர்ட் மக்டானல்ட். மிகச் சிறந்த ரோபாடிக்ஸ் விஞ்ஞானி. அத்துடன் என்னிடமில்லாத நிர்வாகத் திறன் எல்லாம் படைத்தவர். இவர் மேற்பார்வை மட்டும் இல்லாவிட்டால் இங்கே ஒண்ணுமே ஒழுங்கா நடக்காது. ராபர்ட், ப்ளீஸ் மீட் மை டியர் ·ப்ரென்ட் சூர்யா. உங்களைக் குத்திப் பார்த்தது அவருடைய உதவியாளன் கிரண். ரெண்டு ரோபாட் களைப் பார்த்து நிஜ மனிதர்கள்னு ஏமாந்ததுனால, உங்களைப் பார்த்து ரோபாட்னு அனுமானிச்சிட்டான். பாவம், மன்னிச்சிடுங்க" என்று சொல்லி விட்டு அடக்க முடியாமல் பலமாகச் சிரித்தே விட்டார்.

ராபர்ட்டும் சிரித்துவிட்டு, "கவலைப்படாதே கிரண். இந்தத் தப்பை செஞ்ச முதல் ஆள் நீ இல்லை. சொல்லப் போனா, என்னுடை நண்பன் ஒருத்தன் சுமிடோமோவையே ஒரு ரோபாட்டுன்னு நினைச்சுட்டான்" என்று கூறிவிட்டு, சுமிடோமோவிடம், "என்ன, ஞாபகம் இருக்கா?" என்று கேட்டார்.

சுமிடோமோ இன்னும் பலமாகச் சிரித்தார். "ஆஹா, நல்லா ஞாபகம் இருக்கே. உங்க நண்பர் பீட்டர் தாம்ஸன் தானே? இந்த ரோபாட்டை ஜப்பானிலிருந்தே கொண்டு வந்தீங்களான்னு கூட கேட்டாரே!"

சூர்யா வானத்தில் சிரித்துப் பறந்து கொண்டிருந்தவர்களை மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்தார். "இதையெல்லாம் பார்க்க ரொம்ப ஆச்சரியமாத்தான் இருக்கு. எல்லாம் பிரமாதமா நடக்கறா மாதிரிதானே இருக்கு. இங்க நீங்க செய்யற ஆராய்ச்சியோட நோக்கம் என்ன, அது என்ன நிலைமைல இருக்கு, உங்க பிரச்சனைதான் என்னன்னு கொஞ்சம் விளக்குங்களேன்" என்றார்.

சிரிப்பால் மலர்ந்திருந்த சுமிடோமோவின் முகம் வாடியது. ராபர்ட் முகத்திலும் புன்னகை வறண்டது. "நம் பிரச்சனையைப் பற்றி இவர் ஏன் கேட்கிறார், இவருக்கு எப்படித் தெரியும்" எனும் ஒரு கேள்விக் குறியும் அவர் முகத்தில் விளைந்தது. சில நொடிகள் மெளனத்திலேயே கடந்தன. இறுதியாக ராபர்ட்தான் முதலில் பேச ஆரம்பித்தார். "நீங்க சொல்றது சரிதான் சூர்யா. இதெல்லாம் ரொம்பப் பிரமாத மாத்தான் தோணுது. எங்களுக்கும் கூடத் தான். ஆனா பிரச்சனை என்னன்னா, இங்க சரியா வேலை செய்யற ரோபாட்கள் நிஜ உலகுல போனா அப்பப்ப குளறுபடி செய்யுது, அதுதான். இதெல்லாம் பார்க்க வந்திருக்கற உங்களுக்கு அதைப் பத்தி கவலை வேண்டாம். நல்லா சுத்திப் பார்த்து என்ஜாய் பண்ணுங்க." என்றார்.

அதற்குள் சுதாரித்துக் கொண்ட சுமிடோமோ விளக்கினார். "இல்லை ராபர்ட். நம் பிரச்சனையை அலசிப் பார்த்து தீர்த்து வைக்க நான்தான் சூர்யாவை இங்க வரவழைச்சிருக்கேன். சூர்யா ஒரு சிறந்த துப்பறிவாளர். நம் மாதிரி பல பேரோட தொழில் சம்பந்தமான மர்ம முடிச்சுக்களை அவிழ்த்திருக்கார். பல வகையில முயற்சித்தும் நம்ம பிரச்சனைக்கு மூல காரணம் தெரியாததுனால நான்தான் அவரை உதவிக்குக் கூப்பிட்டேன்." என்றார்.

'ரோபாட்டிக்ஸ் பத்தி எல்லாமே தெரிஞ்ச நமக்கே புரியாதப்போ, அதைப் பத்தி ஒண்ணுமே தெரியாத இவர் எப்படி உதவ முடியும்?' என்ற கேள்வி ராபர்ட்டின் மனத்தில் எழுந்து ஒரு கணம் அவர் முகத்தில் சுளிப்பாகப் பிரதிபலித்தாலும், அடக்கிக் கொண்டு, "ஓ அப்படியா, ஸாரி, புரிஞ்சுக்காம பேசிட்டேன். இந்தப் பிரச் சனையை நிவர்த்திக்க உதவ முன்வந்ததுக்கு ரொம்ப நன்றி. அதுக்கு நாங்க உங்களுக்கு எப்படி உதவணும்?" என்றார்.

சூர்யா பதிலளித்தார். "நீங்க எதை சாதிக்க முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கீங்க, அது எந்த அளவுக்கு வளர்ந்திருக்கு, அதுல பிரச்சனை என்னன்னு கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா, அதுவே நல்ல ஆரம்பமா இருக்கும்."

ராபர்ட் பேசுவதற்குள் சுமிடோமோ முந்திக் கொண்டார். "ஆஹா, அதுக்கென்ன சொன்னாப் போச்சு. எங்க முயற்சியைப் பத்தி விளக்கறதுன்னா அது எனக்கு ஐஸ்க்ரீம் திங்கற மாதிரி. ஆனா அது உங்களுக்கு நல்லாப் புரியணும்னா ரோ பாடிக்ஸோட சரித்திரத்தைப் பத்தி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கணும். அதுல ஆரம்பிக்கிறேன்."

ராபர்ட் புன்னகையுடன் கண் சிமிட்டினார். "சுமிடோமோவுக்கு ரொம்பப் பிடிச்ச வேலையை அவருக்குக் குடுத்திருக்கீங்க. எப்படா சான்ஸ் கிடைக்கும்னு காத்துக் கிட்டிருந்தார். கேளுங்க - உங்களுக்கு எவ்வளவு மணி நேரம் இருக்கு?" என்றார்.

கிரண் புகுந்தான். "ரோபாடிக்ஸ் பத்தி கேட்க எவ்வளவு மணி ஆனா என்ன? நான் தயார். எடுத்து விடுங்க சுமிடோமோ- ஸான்."

சூர்யாவும், "ஆமாம், நேரம் ஆனா பரவாயில்லை. இந்த விஷயத்தோட பூர்வீகத்தை விளக்கமா தெரிஞ்சுக்கறதுதான் நல்லது" என்றார்.

ராபர்ட் முறுவலுடன் தோளைக் குலுக்கிக் கொண்டு, கையைத் தூக்கி விரித்துக் காட்டி "எனக்கென்ன, உங்கள் பாடு!" என்பது போல் போலி சரணாகதியாகச் சைகை காட்டி விட்டு, சுமிடோமோவுக்கு "உம், நடத்துங்க" என்பது போல் கையை ஆட்டினார்.

சுமிடோமோ கவனிக்கவில்லை. அதற்குள் தன் ரோபாட் கனவுலகுக்குச் சென்று விட்டிருந்தார். அங்கு உலாவிக் கொண்டே தனக்குள் ஊறிவிட்டிருந்ததை விவரிக்க ஆரம்பித்தார். "ரோபாட்-ங்கற வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா? அது உருவாக்கப்பட்டு நூறு வருஷம் கூட இன்னும் ஆகலை."

கிரண் ஆச்சரியத்துடன் இடை மறித்தான். "உருவாக்கப்பட்டா? அது பல நூற்றாண்டுக் காலமா தானே இயங்கற இயந்திரங்களுக்கான பேருன்னா நான் நினைச்சுக் கிட்டிருக்கேன்!"

சுமிடோமோ தலையசைத்தார். "அந்த வார்த்தை 1921-ஆம் வருஷந்தான் உரு வாச்சு. கேரல் சாபக் என்கிற செக் நாட்டு நாடக ஆசிரியர்தான், தன்னுடைய R.U.R (Rossum's Universal Robots)-ங்கிற நாடகத்தில் இந்த வார்த்தையை முதல்ல பயன்படுத்தினார். அந்த வார்த்தைக்கே பணியாள்னு தான் அர்த்தம். ஆனா அவர் நிஜமாவே ரோபாட்கள் உலகத்துல வரும்னு நினைக்கவே இல்லை. அந்த மாதிரி வந்தா உலகம் இயந்திரமயமாகி மனிதத் தனமே மறைஞ் சுடுங்கற மாதிரி எழுதினார். ஆனா ரோபாட்கள் இப்ப வந்தாச்சு, மனுஷங் களுக்கு மிக உதவியாத்தான் இருக்கு!"

கிரண் மீண்டும் புகுந்தான். "எனக்குத் தெரிஞ்சு ரோபாட்களைப் பத்தி நிறைய எழுதியிருக்கறது ஐஸக் அஸிமாவ்தான். அவருக்கும் முன்னாடி சாபக் நிறைய எழுதிட்டாரா?"

சுமிடோமோ மீண்டும் தலையசைத்து மறுத்தார். "இல்லை. சாபக் முதல்ல அந்த வார்த்தையை உருவாக்கினதோட சரி, அவ்வளவுதான். நிறைய எழுதலை. ரோபாட்களைப் பத்தி முதல்ல நிறைய எழுதினது அஸிமாவ் தான். ரோபாடிக்ஸ்-ங்க்ற வார்த்தையை உருவாக்கி ரோபாட்களைப் பற்றிய ஒரு தனி இயல்னு ஆக்கியதும் அவர்தான்."

கிரண் குதூகலித்தான். "அடி சக்கை! அஸிமாவோட ரோபாட் புத்தகங்கள் எல்லாம் நான் நிறைய படிச்சிருக்கேன். ரோபாட்களுக்கான பல சட்டங்களையே அவர் படைச்சிருக்காரே."

சுமிடோமோ முறுவலித்தார். "ஆமாம். நாலு ரோபாட் சட்டங்களைப் படைச்சிருக்கார்."

கிரண் குழம்பினான். "என்ன? நாலு சட்டங்களா? எனக்கு மூணுதானே தெரியும்."

சுமிடோமோ விளக்கினார். "நீ சொல்றதும் சரிதான் கிரண். முதல்ல மூணு சட்டங்கள் தான் எழுதினார்.

ஆனா அப்புறம் இன்னும் முதன்மையான அடிப்படையான சட்டம் ஒண்ணையும் எழுதினார். அதுக்கு ரோபாடிக்ஸின் பூஜ்ய சட்டம் - zeroeth law-ன்னு பேர் வச்சார். எல்லாத்தையும் விட அதுதான் முக்கியம்னு அர்த்தம்."

சூர்யா, "ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே? நான் கேள்விப்பட்டதே இல்லை. அந்த சட்டங்களைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க" என்றார்.

சுமிடோமோ அஸிமாவின் ரோபாட் சட்டங்களைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline