Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சமயம்
எமனுக்கு ஒரு தனிச் சந்நிதி
- அலர்மேல் ரிஷி|ஏப்ரல் 2005|
Share:
Click Here Enlargeஎங்கே உயிர் போனால் முக்தி கிடைக்கும்? அதற்கொரு தலம் இருக்கிறது. காசியை விடப் பல மடங்கு புகழ் வாய்ந்தது. காசி வடக்கே இருக்கிறது என்றால் தெற்கே காவிரிக் கரையில் இருக்கின்றது புகழ் வாய்ந்த அவ்வூர். அதுதான் திருவாஞ்சியம் என்ற பெருமை மிக்க ஊர். பார்வதியும் சிவபெருமானும் உகந்த ஊர்.

வரலாறு

பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென் திசைக்கு வந்தனர். அப்போதுதான் காவிரிக் கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்கவடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டுவிட்டனர். கும்பகோணம்-நன்னிலம் பாதையில் அச்சுதமங்கலத்தின் தெற்கே உள்ளது திருவாஞ்சியம் என்னும் இப்புனிதத் தலம்.

வாஞ்சையோடு வந்து வேண்டுவோர் வேண்டியவற்றை எல்லாம் கொடுக்கும் நாதர் என்ற பொருளில் வாஞ்சிநாதர் என்ற திருநாமத்துடன் இறைவன் இங்கு கோயில் கொண்டுள்ளார். தேவியின் பெயர் மங்களாம்பிகை. இங்குள்ள தலவிருட்சம் சந்தன மரம். காடுகளாக சந்தன மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ள காரணம் பற்றி இத்தலம் 'கந்தாரண்யம்' (கந்தம் - சந்தனம்; ஆரண்யம் - காடு) என்றும் அழைக்கப் படுகிறது.

தீர்த்தம்

மற்றவர் பாவங்களைத் தன்னிடம் நீராடித் தீர்த்துக் கொள்வதால் அப்பாவத்தைப் போக்கிக் கொள்ள கங்கை நதி வாஞ்சி நாதரிடம் வேண்ட, அவரும் திருவாஞ்சியத்தில் தனது சூலாயுதத்தால் உண்டாக்கிய புண்ய புஷ்கரணியில் சென்று மறைந்து விடுமாறு அருள, கங்கையும் அவ்வாறே மறைய அதுவே இத்தலத்தில் 'குப்தகங்கை' (மறந்த கங்கை) என்ற பெயர் பெற்றுப் புண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது.

எமனுக்கென்று தனியாகச் சந்நிதி

காலன் என்றொரு பெயரும் எமனுக் குண்டு. குறித்த காலத்தில் வந்து உயிரைக் கவர்பவன் என்பது பொருள். நீண்ட காலத்திற்குப் பிறகு பிறந்த வாரிசு, வயதில் சிறியவர், பெற்றோர்க்கு ஒரே பிள்ளை, வாழ்க்கையை இன்னும் அனுபவிக்கவேயில்லை என்று இப்படியெல்லாம் எந்தக் காரணத்திற்காகவும் சலுகை காட்டமல் கண்ணை மூடிக்கொண்டு குறித்த நேரத்தில் வந்து உயிரைப் பறிப்பதனால் 'கண்ணிலி' என்றும் 'அந்தகன்' என்றும் அழைக்கப் படுகிறான் எமன். அவனை 'எமதர்மராஜன்' என்று இதனால்தான் அழைக்கின்றனர். உயிரைக் கவர்வதில் தர்மம் தவறாதவன்.

ஒருமுறை, கணக்கற்ற உயிர்களைத் தான் கவர்ந்திருப்பதற்காக வருத்தப்பட்டு வாஞ்சி நாதரைக் குறித்துப் பல காலம் வேண்ட, இறைவனும் எமன் வேண்டியவாறே அவனைத் தன் வாகனமாகக் கொண்டார். ஆண்டு தோறும் கார்த்திகை மாத பரணி தீப நன்னாளில் சிவ பார்வதி எமன் வாகனத் தில் ஊர்வலம் வருகின்றனர். வேறெங்கும் காணக் கிடைக்காத ஓர் ஊர்வலம்.

எமவாகனம் மட்டும் புதுமையல்ல. இங்கு இறப்பவர்க்கு உடனே முக்தி கிடைக்கும். இத்திருக்கோயிலில் யமனுக்கென்றே தனிச் சந்நிதி அமைக்கப் பெற்றுள்ளதும் இக்கோயிலின் தனிச்சிறப்பு. முக்தி தரும் தலங்கள்பற்றித் தருமபுர ஆதீனத்தின் முதல் தலைவர் குருஞான சம்பந்தர் அவர்கள் ஒரு பட்டியலே தந்திருக்கின்றார்.

தில்லைவனம் காசி திருவாரூர் மாயூரம்
முல்லைவனம் கூடல் முதுகுன்றம் - நெல்லைகளர்
காஞ்சி கழுக்குன்றம் மறைக்காடு அருணை காளத்தி
வாஞ்சியம் என முக்தி தரும்

என்று அவர் குறிப்பிட்டுள்ளவற்றில் திருவாஞ்சியம் இடம் பெற்றுள்ளது.
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் மாணிக்கவாசகர் ஆகிய சைவசமயக் குரவர் மற்றும் அருண கிரிநாதர் ஆகியோர் இத்தலப் பெருமையைக் குறித்துப் பாடியுள்ளனர்.

திசைபாய்ந்த பத்ம தடவய
லியில்வேந்த முத்தி யருள்தரு
திருவாஞ்சியத்தி லமரர்கள் பெருமாளே

என்பது அருணகிரி திருப்புகழ்.

திருவாஞ்சியச் சிறப்பு

இத்தலத்திற்குப் புராண இதிகாசத் தொடர்புடைய பெருமைகள் பலவுண்டு:

1. திருமாலுக்கும் திருமகளுக்கும் இடையே ஏற்பட்ட ஊடலைத் தீர்த்தவர் இவ்வூர் இறைவன்.
2. அத்திரி முனிவரும் மனைவி சுயஞ்யையும் தம் பிள்ளையில்லாக் குறையை வாஞ்சிநாதரிடம் முறையிட அவரருளால் தத்தாத்ரேயன் என்னும் மகனைப் பெற்றனர்.
3. அகலிகை சாப விமோசனம் பெற்றது இங்குதான்.
4. தட்சன் செய்த யாகத்துக்குத் துணை நின்ற சூரிய பகவான் அதற்காகப் பெற்ற சாபம் நீங்கப் பெற்றதும் இத்தலத்திலே தான்.
5. மகிஷாசுரனைக் கொன்று துர்க்கையானவள் தேவர்களைக் காத்தது இங்குதான்.
இவ்வாறு திருவாஞ்சியப் பெருமை சொல்லி மாளாது. நேரில் சென்று தரிசித்து மகிழ வேண்டும்.

முனைவர் அலர்மேலு ரிஷி
Share: 
© Copyright 2020 Tamilonline