Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர்கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
விழியின் வெம்மை
- விந்தியா|செப்டம்பர் 2021|
Share:
"அச்சுதம் வீட்டுக் 'கும்பி'கள் எப்போதுமே பலே ஷோக்கு" என்பது எங்கள் வட்டாரத்திலே பெரியவர்கள்கூட மொழியும் புகழுரை. அவர்கள் வீட்டிற்கு ஐந்தாறு வீடு தள்ளி எங்கள் அகம். அவர்கள் அகத்திற்கு ஆண்டுதோறும் என்னைக் கவர்ந்தது இழுத்த அம்சம் 'கும்பி' வாணம். ஆனால் ஆண்டு நெடுக அங்கு என்னை ஈர்த்தவன் கேசவன்.

கேசவனின் கண்களில் ஒளி இல்லை. அந்த வெள்ளை விழிகளில் பார்வை கிடையாது. ஆனால், கை விரல்களில் தெய்வீக இசையும் இன்னொலியும் குடிகொண்டிருந்தன. அவனுடைய கேசம் நரைத்திருக்கிறது. ஆனால் எழில் விரல்களின் மென்மையும் இனிமையும் இளம்பெண்ணுக்குக்கூட இருப்பது அரிது. ஒரு குறையும், அதற்கு ஈடு செய்த ஒரு பெருமையும் கேசவனிடம் இருந்தன.

'அந்தப் பிள்ளை கேசவன் பிடில் கற்றுக்கொள்கிறான்' என்று எங்கள் அகத்தில் பேசிக்கொண்டார்கள். அப்போது நான் சிறுவன். பிடில் தந்திகளின் ஒலி இன்னமும் இனிமை பெறவில்லை; ஆரம்பப் பாடந்தானே? ஆனால் கேசவன் பிடிலைக் கற்ற வழி என் உள்ளத்தில் பதிந்தது. என் தாய் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்ததுதான் காரணம்.

"வாத்தியாரும் குருடராம். அதுதானே ஆச்சரியம்? துடை வலிக்கிறாப்போல் தாளம் போட்டுக் காட்டுகிறாராம், கேசவனின் காதில் விழவேண்டும் என்று. வாத்தியார் ஒரு ஸ்வரம் வாசித்துக் காட்டுகிறார். அந்த ஒலியைக் கேட்டுத்தான் கேசவன் விரல் வைக்கிறான். பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கிறார் அப்பா. வில் போடும் விதம், கை வைக்கிற முறை, பிடிலைப் பிடிக்கும் பாணி முதலியவற்றைத் திருத்தித் திருத்தித் தருகிறார்; கம்பியில் விரல் வைத்துக் கொடுக்கிறார், வாத்தியாரைப் பார்த்துப் பார்த்து; எத்தனை சிரமம். வாத்தியாராவது கண்ணுடையவராய் அகப்படக்கூடாதா இந்த ஊரில்?" என்று என் அன்னை சொல்லிச் சொல்லி அதிசயப்பட்டாள்; என் ஆவலைத் தூண்டினாள். நானும் போவேன். கண்கொட்டாமல் பார்ப்பேன்.

நல்ல ஞானம், சுத்தமான கை என்று கண்ட பெற்றோர், கடவுளின் கருணையை நம்பி, கேசவனை ஒரு சங்கீதக் கல்லூரியில் சேர்த்தார்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் கேசவன், இளம் வித்துவான், பிறவி மேதை என்னும் புகழுடன் திரும்பினான். கேசவனின் ஞானமும் தேர்ச்சியும் அற்புதம் என்று ஊரில் எங்கும் பேச்சு.

தம்பிகள் உண்டு கேசவனுக்கு. பெரிய தம்பி என்னைவிட மிகவும் பெரியவன், காலேஜில் படிக்கிறவன். இன்னொரு தம்பி என்னைவிட மிகவும் சிறியவன். மெட்ரிக்குலேஷன் பரீட்சை கொடுக்க இருந்த எனக்கு அவர்கள் இருவருமே ஈடு எனப் படவில்லை. இசையின்பம் பருக எத்தனையோ அன்பர்கள் கேசவனின் வீட்டுக்குத் தினமும் போய் வருவார்கள். காலை, மாலை இருபொழுதுகளிலும் கேசவன் பயிற்சி தவறமாட்டான். அந்தச் சமயங்களில் நானும் போய்ச் சற்று நேரம் நின்றுவிட்டு ஓடி வந்துவிடுவேன்.

★★★★★


அந்த வருஷம் வந்த தீபாவளியின் போதுதான் உள்ளம் உருக்கிய அந்த நிகழ்ச்சியை நான் நன்றாகக் கவனிக்க நேர்ந்தது. என் கண்களும் என் அறிவும் புலன்களும் அன்றைக்குத்தான் கேசவனுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரை முதல் முறையாகச் சிந்திக் கதகதத்தன.

அச்சுத ராமையா வீட்டுக் 'கும்பி'கள் பலே ஷோக்கு அல்லவா? அவற்றை அவர்கள் வீட்டுவாசலில் கொளுத்தும் நேரம் இரவு பத்து மணி. தீபாவளிப் பண்டிகையின் குதூகலத்தை அவர்கள் வீட்டில் அந்தச் சமயத்தில் காண்பதற்காக வழக்கம்போல் சென்றேன். சிறியவர், பெரியவர் என்ற வேறுபாடின்றி எல்லோரும் 'ஹோ'வென்று உற்சாகமாக வாண வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். இத்தகைய வாண வேடிக்கையைத் தஞ்சாவூரில் கல்யாண ஊர்வலங்களின் போதுதான் காணலாம் என்று அம்மா அடிக்கடிக் கூறுவாள். இந்தத் தெலுங்கு தேசத்திலோ தீபாவளியின்போது வீடுதோறும் காணலாம். தெருவுக்குத் தெரு பார்த்துப் பிரமிக்கலாம். இத்தனைக்கும் அவரவர் வீட்டுச் சொந்த உற்பத்தி

கம்பி மத்தாப்புகள் இரண்டு விதம் உண்டு. அதுபோலவே இருவகைக் கும்பிகள் உண்டு ஆனால் அவற்றுள்ளேயே பலவகைப் பூமாரி, அழகழகான இலைகள், மொக்குகள் தென்படும். மருந்துத் தூளை நிரப்பிக்கொண்டிருக்கும் மண் குப்பியின் குவிந்த வாயில் தீ இடவேண்டியதுதான். உடனே, மந்தாரக் கும்பியானால் பொன்னிறப் புஷ்ப ஊற்று, பத்தடி உயரமோ சற்று ஏறத்தாழவோ, எழும்பி ஒளிவீசி மெல்ல மெல்ல அடங்கிப்போகும். மத்தாப்புக் கும்பியானால் வெண்ணிற ஜோதி எழும்பும். மருந்துத் தூள் கலவையின் சூட்சமத்தினால் அந்த ஒளிக்கற்றைகளில் நீல மணிகள் தோன்றி மறையும், சில சமயம் ஆலிலை போலப் பெரிய பெரிய பொன்னிறத் தகடுகள் தோன்றி மறையும். இடையிடையே ஜாதி முல்லை போல நீள நீளமான வெண்ணிற அரும்புகள் உதிரும். ஜம்மென்று இரண்டு ஆள் உயரத்திற்கு ஒளிக்கற்றை எழும்பிவிட்டதோ, அந்தக் கும்பியை அடைத்தவனின் முகத்திலும் ஒளிவீசும்.

"ஒஹோஹோ, என்ன உயரம் பார்! இதுதான் உயர்ந்தது!" என்று ஒரு குரல் துள்ளிற்று. எல்லோரும் வாயைப் பிளந்தபடி பார்த்துக்கொண்டிருந்தோம். கூவின பிள்ளையைப் பார்த்து அச்சுத ராமையா, "ஏண்டா, நீ அடைத்ததாடா?" என்று கேட்டார்.

"தெரியவில்லை; பேர் ஒட்டியிருந்ததைப் பார்க்க மறந்துவிட்டேன் அப்பா" என்றான் கேசவனின் தம்பி.

"அடுத்ததைக் கவனமாய்ப் பார்த்துவிட்டுக் கொளுத்துங்கள்" என்ற குரல் கேட்டது. சொன்னவன் கேசவன்!

'ஆஹா' எனக் கலங்கிற்று என் மனம். கேசவனுக்கு இந்த வாணங்களைப் பார்க்கும் பேறு இல்லை. அதற்காக அவன் வருந்தவும் இல்லை.

ஒதுக்கமாக உட்கார்ந்து வாணவிழா பார்த்துக்கொண்டிருந்த பெண்டிர் குழுவில் என் அன்னையும் இருந்தாள். இந்தச் சமயத்தில் அம்மா, கேசவன் தாயை ஒரு கேள்வி கேட்டாள். "நல்ல வெயிலோ வெளிச்சமோ இருந்தால் கொஞ்சம் ஏதோ தெரிகிறமாதிரி இருக்கிறது என்று முன்னே சிறு வயசில் கேசவன் சொல்லுவானாமே! இப்போது அப்படித் தெரிகிறதோ?" என்று கேட்டாள்,

"அப்படி ஏதோ சொன்னானே என்றுதான் நைப்பாசைப்பட்டு ஆபரேஷனும் வைத்தியமும் பார்த்தோம். அப்புறம் அதுகூடப் போய்க் கும்மிருட்டு வந்துவிட்டது. பகவானுடைய சித்தம் மாறவில்லை" என்றாள் அந்த அம்மாள்.

கூர்மையான செவிபடைத்த கேசவன் கேட்டுவிட்டான் இந்தப் பேச்சை. "இப்போதும் அந்த மாதிரி கொஞ்சம் தெரிகிறதம்மா" என்றான்.

"அப்படியா?" என்றாள், என்னைப் பெற்றவள். கேசவனின் தாய் பேசவில்லை.

"கையில் ஒரு விஷ்ணு சக்கரம் தந்து பாருங்கள்" என்றாள் என் தாய்.

நான் உடனே கேசவனின் தம்பியிடம் ஓடிச் சொன்னேன். கேசவன் விஷ்ணு சக்கரம் பிடிக்கும் காட்சியைக் காண யாவரும் தயாராகிவிட்டோம்.

சக்கரத்தைப் பற்ற விட்டுக்கொண்டே, "கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டே இரு. நிமிர்ந்து நில். அப்போதுதான் ஒழுங்காய்ச் சுற்றும்" என்றான் தம்பி. கேசவன் அப்படியே செய்தான். சக்கரம் ஒளிவீசிச் சுற்றிச் சுழன்று மங்கி ஓய்ந்தது.

"கீழே போட்டுவிடு" என்றார் அப்பா. போட்டான்.

"வெளிச்சம் ஏதாவது தெரிந்ததோடா, கேசவா?" என்று கேட்டுக்கொண்டு அவன் அன்னை எழுந்து வந்தாள்.

"ஓ! தெரிந்ததே!" என்றான் மைந்தன்.

"நிஜமாவா?" என்றாள் ஆர்வத்தோடு.

"ஏண்டா, தெரிகிறதா வெளிச்சம்?" என்று தந்தையும் கேட்டார் இப்போது.

"ஆமாம் அப்பா; தெரிந்தது."

"என்ன தெரிந்தது? எப்படி இருந்தது?"

"சூடாயிருந்தது."

"சூடா ஆ..." தந்தையின் வருத்தம் தோய்ந்த சொல் இது. தாயோ, தன் பேதைமையை எண்ணிப் பின்சென்று பதுங்கினாள்.

சூடும் ஒளியும் வேறு வேறு என்பதை அறியாத பேதையன்று கேசவன். விஷயங்களை அறிந்தவன்தான். பார்வை தனக்கு இல்லை; பிறரைப்போலச் சினிமாவும் தோட்டமும் துரவும், பூப்பிஞ்சுகளும், பாரினில் நிரம்பியிருக்கும் வேறு அழகுகளையும் தான் உள்ளது உள்ளபடி காணவில்லை என்பதை நன்கறிவான். அன்பிற் சிறந்தவரைப் பார்க்க முடியவில்லை, அவர்கள் தன்னையும் உலகத்தையும் பார்க்கிறார்கள் என்பதும் அறிவான். ஆனால் அவன் சூடாயிருந்தது என்றானே, ஏன்? வாணங்களைப் பிறர் ஒளியாகக் கண்டால், கேசவன் அவற்றை வெம்மையாகக் கண்டான், இதுதான் உண்மை.

பார்வையில் ஒளியில்லாவிட்டாலும், கேசவனின் பகுத்தறிவில் மின்சாரம் இருந்தது; ஒளியாகவும் ஒலியாகவும் பலவித சாதனங்களைப் புரியும் மின்சாரம். ரேடியோவில் வரும் பாட்டும் பேச்சும் நாடகமும் கேட்கும் நம்மைப்போல, கேசவன் வாழ்க்கையில் நடக்கும் விந்தைகளைக் கேட்டான்; அறிந்தான். வீட்டில் இருக்கும் ரேடியோவைக் கேசவன்தான் அதிகமாகப் பயன்படுத்துவான். ஒரு நிலையம் பிசகாமல் திருப்பிக் கொடுப்பான். தினமும் மாலையில் வீதியிலே உலாவப் போகவேண்டும் என்பது கேசவனின் கண்டிப்பு. தந்தையின் துணையோடு கிளம்பிவிடுவான். அவர்தாம் மைந்தனின் பெருந்துணை. தோள்மேல் கைபோட்டு உலாவக் கூட்டிப் போவார். பிடில் வாசிக்கும் பிள்ளையினருகே தம்புரா மீட்டுவார். வெளியூர் கச்சேரிகளின் போது உடன் செல்வார். இருவராகப் போய் வருகிற அவசியம் ஏற்பட்டதனால் சன்மானத் தொகையில் மிச்சமும் லாபமும் சொற்பம்தான். ஆனால் புகழ் அல்லவா கிடைக்கிறது? மூப்புற்ற தந்தை, கண்ணற்ற குமரன் - இருவருக்கும் ஊர் அலைச்சலினால் சிரமந்தான். ஆனால் தந்தையை மிஞ்சின துணை யார் கேசவனுக்கு?

கேசவனின் கையில் நாதம் குறைவு என்று சொல்வார்கள். உடலுரம் போதவில்லை என்று மருந்துகள், கோழி முட்டை, பால் முதலியன அருந்தச் செய்வார்கள். ஆனால், கை விரல்களின் மென்மையும் லலிதமும் மாறவில்லை. அதனால் கேசவனின் கச்சேரிகள் ரேடியோவில் வெகு கம்பீரமாகச் சோபிக்கும். மைக் வைத்தாலும் கச்சேரிகள் அற்புதமாக இருக்கும். உள்ளூர்க் கச்சேரிகளில் மைக் ஏற்பாடு சில சமயந்தான் உண்டு. அதனால் கேசவனுக்குப் பெயரும் புகழும் வெளியிடங்களில்தான் முழங்கின. அதன் விளைவாக அலைச்சலும் வளர்ந்தது.

எந்த ஊர் போனாலும் 'மதராஸ் ஓட்டல்' போகவேண்டும் என்பானாம் கேசவன். சிறு தீனியில்தான் சற்று நாட்டம். வீட்டில் கொள்ளும் அன்னம் இரண்டு வயசுக் குழந்தையின் சாப்பாடு. ஒருநாள் எங்கள் அகத்தில் சாப்பிட அழைத்திருந்தோம். இலையில் பரிமாறியிருந்த உண்டிகளுக்காக அந்தக் கோல விரல்கள் துழாவின காட்சி கண்ணராவி! அன்பும் அநுதாபமும் எத்தனை இருந்தாலும் வயசின் இயல்பினால் தந்தைக்குச் சில சமயம் அலுப்பும் சிடுசிடுப்பும் உண்டாகுமாம். பயண அலுப்புத் தீராமல் ஊர் சுற்றி 'மதராஸ் ஓட்டல்' தேடி இருநேரமும் அதை நாடிப்போக அவருக்குச் சிரமமாக இருக்குமாம். அவரோ ஒடுங்கின சாப்பாட்டுக்காரர். ஆனால் கஷ்டமோ நஷ்டமோ அவர்தாம் போவார். மற்றப் புதல்வர்களுக்குப் படிப்பு இல்லையா? ஊர் திரிய முடியமா? கண்ணுங் கோலுமாக விளங்கி, மைந்தனுக்காகச் சிரமப்பட்டார் தந்தை. பிடில் வாசிக்கும் கைக்கு மோதிரம்; வில்போடும் கைக்குத் தங்கத் தோடா; பிடிலைத் தாங்கும் தோள்களுக்கும் மார்பிற்கும் சரிகை அங்கவஸ்திரம், ஞானம் பொங்கும் நெஞ்சுக்குப் பொற்சங்கிலி - இத்யாதி அலங்காரங்களைக் கேசவன் கண்டதில்லை; கேட்கவும் இல்லை. ஆனால் தந்தை பார்த்தார்.

'தமிழ்நாட்டு வித்துவான்களுக்குக் கலையையும் புகழையும் பொருளையும் பேணத் தெரிகிறது' என்ற வியப்பு அவருக்கு. கேசவனுக்கும் அத்தகைய அணிகள் பூட்டி மைந்தனின் இசைக்கலையை மதித்து மகிழ்ந்தார். கருநிற மூக்குக்கண்ணாடிக்குத் தங்கச் சட்டம் போட்டார். நிலையில்லாது மேலும் கீழும் புரளும் வெள்ளை விழிகளை, கேசவன் வீட்டிலிருக்கும் போதுதான் காணலாம்.

சிறுவயசில் எனக்கு இசையின் இனிமைதான் தெரிந்திருந்தது. சாஸ்திர ஞானம் தெரியாது. ஆனால் இடைக்காலத்தில் எனக்கு ஓர் ஆசை கிளர்ந்தது. உள்ளூரில் இருந்த ஒரு நாலாந்தர மிருதங்க வாத்தியக்காரரிடம் கொஞ்சம் பயிற்சி பெற முனைந்தேன். வீட்டில் அக்காள் வாய்ப்பாடு கற்றாள். அவள் கற்றபோது கேட்டதனால் அவளைவிட எனக்கே இசையறிவும் ஆர்வமும் அதிகம் உண்டாயின. (இது அக்காளின் வாத்தியாரே கூறும் பாராட்டு!) கேசவனுக்கு மிருதங்கம் வாசித்துப் பழகவேண்டும் என்ற ஆசை மேலிட்டது. நானும் பெரியவனாகிவிட்டேன் என்ற ஒரு நம்பிக்கையும் இணைந்தது. அனுமதி கேட்டேன். "பேஷாக வாயேன்" என்ற வரவேற்பு அன்புடன் கூடி வந்தது. பெரும்பகுதி நாட்கள் கேசவன் ஊர் தங்குவதில்லை; அந்தச் சொற்ப நாள் அங்கே போய்விட்டு வருவேன்.

கேசவனுக்குப் பூணூல் போட்டார்கள். சந்தனக் கட்டையினாலான ஊதுவத்தி தாங்கி ஒன்று நண்பன் ஒருவன் மூலம் வரவழைத்துப் பரிசளித்தோம். நாசியினால் உணரக்கூடிய பொருள் அல்லவா?

"என்ன இருந்தாலும் தமிழர் மூளையும் அவர்கள் கலையுணர்ச்சியும் அபாரந்தான்! இத்தனை பரிசு வந்ததே, இந்தப் பரிசுப் பொருளுக்கு உள்ள அழகும் அர்த்தமும் வேறு எதற்கு இருக்கிறது?" என்று கேசவனின் தந்தை தம் மனைவியிடம் பளிச்சென்று சொன்ன சொல் இன்னமும் என் காதில் ஒலிக்கிறது. ஆம், அந்த முதியவரின் பாராட்டு மொழிகளை நான் மறக்கவில்லை. தமிழகத்து இசை வல்லுநர்க்கு ஈடு இணை இந்த வையத்தில் இல்லை என்று அவர் புகழ்ந்திருந்த பெருந்தன்மையையும் என் தமிழ் நெஞ்சு மறக்கவொண்ணாது. அவருடைய குடும்பத்தினர் அவரை எத்தனை பக்தியுடன் நினைக்கின்றனரோ, அத்தனை பக்தி எனக்கும் உண்டு.

ஆம், அவர் விஷயம் நினைவுதான் ஆகிவிட்டது. மைந்தனின் தோள்மேல் கையிருத்தித் துணை சென்ற பெரியவர் மைந்தனைப் பிரிந்த நிகழ்ச்சி ஒரு சோகச்சித்திரம்.

விஜயவாடா ரேடியோ நிலையத்தில்தான் கேசவனுக்குக் கச்சேரிகள் கொடுப்பது வழக்கம். கர்நாடக இசைக்கும் கலைகளுக்கும் நிலைக்களனான சென்னைக்குப் போய்க் குடித்தனம் போடவேண்டும், கேசவன் சென்னை நிலையத்தினின்று கச்சேரிகள் செய்யவேண்டும் என்ற எண்ணமும் ஏற்பாடும் உருவாகிக்கொண்டிருந்தன, அந்தக் குடும்பத்திலே. அதற்குள்ளே மூண்டது துன்பம்.

விஜயவாடா நிலையத்தில் கச்சேரி செய்துவிட்டு ஊர் திரும்பப் பயணமானார்கள் இருவரும். "வண்டிவர ஒன்றரை மணி நேரம் தாமதம் எனத் தெரிந்தது" என்று அலுத்துக்கொண்ட தகப்பனார், ஒதுக்குப்புறமாகப் பெட்டி படுக்கையை வைத்துவிட்டு மைந்தனும் தாமுமாக உட்கார்ந்தார். கேசவன் தன் இயல்புக்கு ஏற்றபடி ஏதேதோ கேள்வி கேட்டதற்கு நறுக் நறுக்கென்று பதிலளித்தார். அடுத்து மீண்டும் ஏதோ வினவ, "சும்மா இரேண்டோ! சற்றே பதில் சொல்லுகிறதற்குள் பிராணன் போகிறது! நச்சாதே என்னை. உடம்பை என்னவோ பண்ணுகிறது. மறுபடியும் வந்துவிட்டது இந்தப் பாழும் மார்வலி" என்று சொல்லியிருக்கிறார். அப்பாவுக்குக் கோபம் வருகிறது என்று அறிந்ததும் கேசவன் வாயை மூடிக்கொண்டு விட்டான். ஒரு கேள்வியும் கேட்கவில்லை. நெடுநேரம் கழித்து, "அப்பா, குடிக்க ஜலம் வேண்டும்" என்று கேட்டபோது மறுமொழி வரவில்லை. எங்கேயாவது போயிருப்பார் என்று நினைத்துக் கால்மணி நேரம் காத்திருந்தான்.

வண்டி ஏதோ கடகடவென வந்து நின்றது. சுற்றுப்புறத்தில் சலசலப்பும் உண்டாகியது. "நாம் போகவேண்டிய வண்டி இதில்லையே அப்பா?" என்று கேட்டான் கேசவன். அப்போதும் பதில் இல்லை. அடுத்தாற்போல வர இருக்கும் தங்கள் வண்டிக்கு ஜன்னல் திறந்திருப்பார்கள், டிக்கெட் வாங்கப் போயிருப்பார் என்று தோன்றிற்று கேசவனுக்கு, கொஞ்சம் எழுந்து நிற்கவேண்டும் போல் இருக்கவே எழுந்தான். அப்போது யாரோ ஒருவர், "ஐயா, இங்கே இப்படி ஒரு துக்கமா?" என்று கேட்டுக்கொண்டே கேசவனின் கையைப் பிடித்து, "நீங்கள் கண் தெரியாதவரா?" என வினவினார்.

"ஆமாம்; நீங்கள் ரெயில்வே அதிகாரிதானே? இந்த வண்டி எங்கே போகிறது?" என்று கேசவன் கேட்டான்.

"பக்கத்தில் படுத்திருக்கிறவர் யார்?" என்று வியப்பும் குழப்பமுமாக அதிகாரி கேட்டார்.

"தெரியாதே!" என்று கேசவன் கூறினதும், "ஆஹா! உங்களுக்குத் துணை வந்தவர் யார்?" என்று கேட்டார் அவர்.

"அப்பாதான் வந்திருக்கிறார். டிக்கெட் வாங்கப் போயிருக்கிறார்" என்று சொன்னான் கேசவன்.

கொஞ்ச நேரம் கசமுசவென்று பேச்சு. பிறகு கேசவனின் ஊர், பேர், அங்கு வந்திருக்கும் காரணம் முதலியவற்றை விசாரித்தார்கள். "யாராவது ஏதாவது குடிக்கக் கொடுத்தார்களா? உடம்பைப் பற்றி அப்பா ஏதாவது சொல்லிக்கொண்டிருந்தாரா?" என்று கேட்டார்கள். ரேடியோ நிலையத்தினின்று வந்த பிறகு என்ன நடந்தது என்பதைச் சொல்லச் சொன்னார்கள்.

கூடிய மட்டும் தெரிவித்தான் கேசவன். "மார்வலி எப்பொழுதாவது வரும். இன்றைக்குக்கூட அதுதான் சொன்னார். அதெல்லாம் பார்த்தால் நடக்குமா? எனக்குத் துணை அவர்தாம் வரவேண்டியிருக்கிறது!" என்று கேசவன் முடித்தான்.

"ஐயோ, பாவம்! ரொம்பக் கஷ்டம்; உங்கள் அப்பா உங்களைத் தனியாக விட்டுப் போய்விட்டார். அப்படியென்றால் என்னவென்று தெரியுமோ இல்லையோ?" என்று கேட்டார், அதிகாரி.

"என்ன! அப்பா செத்துப் போய்விட்டாரா? எங்கே? எப்படி?" என்று கேசவன் பதறினதும் அவர், கண்ணிழந்த புத்திரனின் ஒரு கையைப் பிடித்து, ஆவி பிரிந்து கிடந்த தந்தையின் உடலைத் துழாவச் செய்தார்.

"நிஜமாவா? இது அப்பாதானா? வெறுமனே தூங்குகிறாரோ என்னவோ! ராத்திரி கொசுக் கடியினால் தூக்கம் சரியில்லை என்று சொன்னார்" என்று கேசவன் ஐயுற்று. "அப்பா, அப்பா!" என்று அழைத்து எழுப்ப முயன்றான்.

ரெயில்வே ஊழியர்களும் மற்ற ஜனங்களும் இரங்கினார்கள். ரேடியோ நிலைத்தாரை விசாரித்துக் கேசவனுக்கு அடைக்கலம் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். கேசவனின் குருவிற்கு போன் செய்தி போயிற்று. ஊரில் எதிர்பார்த்திருக்கும் குடும்பத்தினருக்குத் தந்தி பறந்தது. தந்தியைப் படித்த புதல்வன் கிணற்றில் விழ ஓடினானாம். ஊர் திரும்பும் பிள்ளைக்கும் கணவருக்கும் பிடித்தமான உணவு சமைத்து கொண்டிருந்த தாய், ஏதோ கச்சேரி விஷயமான தந்தி' என்று கருதினாள். பையன் ஓடும் கோலங்கண்டு துடித்துப் பின்தொடர்ந்து பிடித்துக் கொண்டாளாம். பிறகு அந்த இல்லத்தில் ஓலமும் இருளும் துயரும் கவிந்து கொண்டன.

கேசவனை அழைத்து வரப் பெரிய தம்பி போவதில் தாய்க்கு ஆட்சேபம் இருந்ததாம். ரெயிலடியில் விழுந்து விடுவானோ என்ற பயம்! ஆனால் அவன்தான் போனான். "நான்தானே அம்மா இனிமேல் கேசவனுக்குத் துணை? உயிரை விட்டுவிட மாட்டேன். இந்த உயிருள்ளவரை அண்ணாவுக்கே நான் அர்ப்பணம்!" என்று முழக்கினானாம். போய் அண்ணனை அழைத்து வந்தான். தந்தையின் உடல் வரவில்லை. பூணூல் போட்ட மூத்த பிள்ளை அங்கேயே இருந்தானல்லவா? "அப்பாவின் உடம்பைப் பார்த்தபோது சீக்கிரமே நடத்தி விடட்டும் என்றே எனக்கும் தோன்றிவிட்டதம்மா" என்று சொல்லி அழுதானாம். "கேசவா, நம்மைப் பெற்றவர் போய்விட்டாரே! நெருப்பை வைத்துவிட்டாயேடா அப்பாவுக்கு. உனக்கு ஒன்றுமே தெரியவில்லையே! பார்க்க முடியவில்லையே! அப்பாவை நீ கண்ணால் கண்டதே இல்லையே!" என்று அண்ணனைக் கட்டிக் கொண்டு அவன் புலம்பினபோது கேசவன் சிறிது நேரம் பேசவில்லையாம். பிறகு மெல்லிய குரலில், "தெரிந்ததே, சூடாயிருந்ததே!" என்று பதிலளித்தானாம்.

தந்தையின் உருவத்தைக் கேசவன் பார்த்ததில்லை. அவருடைய உயிரும் உடலுந்தான் அவனுடன் உறவாடின. அந்த இரண்டும் மறைந்துவிட்டன. ஆனால் மற்றவர்களைவிடச் கேசவன்தான் தெம்பாக இருக்கிறான். அரூபமாகத் தந்தையை அன்று கண்டதுபோலவே இன்றும் காண்கிறான் அன்றோ?

"அப்பாவின் போட்டோ பெரிது பண்ணி வந்திருக்கிறது. பார்" என்றான் கேசவன், என்னிடம், தலைநிமிர்ந்து பார்த்தேன். பூமாலை சூட்டியிருந்த படத்தில் அச்சுத ராமையா உயிர்க்களையுடன் தோன்றினார்.

"நேரில் பார்க்கிற மாதிரியே இருக்கிறது; அவர் போய்விட்டார் என்று இப்போதும் சில சமயம் நம்பவே முடியவில்லை" என்று என் மனநிலையைச் சொன்னேன்.

"எல்லோருக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அவர் போயிருக்கிற ஊருக்குப் போகப் போகிறோம், சேர்ந்து கொண்டு விடுவோம் என்றுதான் தோன்றுகிறது. அவர் வரமுடியாத போது நாங்கள் போகவேண்டியதுதானே?" என்று தனியான சோகச் சிரிப்புடன் கேசவன் பகர்ந்தான்.

'நாங்கள்' என்றான். 'நாம்' என்றால் நான் தவறாக நினைத்துவிடுவேன் என்றுதான்!

இசை ஞானம், வேதாந்த பரமான ஞானம், உலக ஞானம் - இத்தனையும் கண்ணுள்ள பேருக்கு ஏது? அதுவும் இந்த வாலிபப் பருவத்தில்!

கண்களில் குளிர்ச்சி இருக்கவேண்டும் என்பார்கள். ஆனால், கேசவனின் ஒளியற்ற வெள்ளை விழிகளில், உள்ளத்து ஞானச்சுடரின் வெம்மைதான் தெரிகிறது. அந்தக் கண்களில் அழகு இல்லை. ஒரு துளி நீர் சுரப்பதில்லை. ஆனால் காண்போர் கண்களில் ஒரு சொட்டு நீர் கொணரும் பெருமை சேகவனின் விழிகளையே சாரும். அந்த விரல்களுக்குக் கூடப் பெருமை அடுத்தபடிதான்.
விந்தியா
Share: 


© Copyright 2020 Tamilonline