Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | முன்னோடி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
சிறுகதை
மனிதம் என்பது!
பெருந்தன்மை
- லக்ஷ்மி சங்கர்|ஜூன் 2021|
Share:
அறுபத்தைந்து வயது இளைஞிகள் நால்வரும் பார்க்கில் விறுவிறுவென்று நடந்தபின் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல அரட்டைக் கச்சேரி. எல்லோருடைய பெண், பிள்ளைகளும் வீட்டைவிட்டுப் போயாகிவிட்டது. யாருக்கும் வீட்டுக்கு அவசரமாகத் திரும்பிப்போய்க் கிழிக்க வேண்டியது ஒன்றுமில்லை.

பத்மா கேட்டாள், "ஏம்ப்பா, ஒங்களுக்கெல்லாந் தெரியுமா பில் கேட்ஸோட பொண்ணுக்குக் கல்யாணம்னு?" அவளுக்கு எப்பொழுதும் செலிப்ரிடி அரட்டையில் நாட்டம் அதிகம்.

மற்றவர்கள் பதிலுக்காகக் காத்திருக்காமல் அவளே தொடர்ந்தாள். "பையன் எகிப்துக்காரனாம். அவனோட அப்பா அம்மா. குவைத்தில் இருக்காங்களாம். யாரும் அந்தப் பையன் பணத்துக்காக இந்தப் பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிறான்னு சொல்லமுடியாது. கேட்ஸ்தான் தன் சொத்துல கொஞ்சந்தான் கொழந்தைங்களுக்குத் தரப்போறதாவும் பாக்கி எல்லாம் தர்மத்துக்குன்னும் சொல்லிட்டாரே!".

"ம்... அவரப்போல வருமா? இப்படிச் செய்ய எப்பேர்ப்பட்ட மனசு வேணும்? பெருந்தன்மைன்னா இதுதான்" என்றார்கள் ஷ்யாமளாவும், இந்துவும்.

"என்ன சுதா? ரொம்ப கொயட்டா இருக்கே? என்னாச்சு?" மற்றவர்கள் கேட்டார்கள்.

"ஒன்னுமில்ல. மழை வராப்ல இருக்கே? எனக்குக் கொஞ்சம் கண்ணுல கேடராக்ட் சதை வளர்ந்துக்கிட்டிருக்கு. மழ வந்து டிரைவிங் கஷ்டமாறதுக்குள்ள வீடு போய்ச் சேரணும். அதான்" என்றாள்.

"நாளைக்கு மழை இல்லேன்னா வழக்கம்போல இங்கயே மீட் பண்ணி நடக்கலாம். எல்லாரும் மெசேஜ் செக் பண்ணிட்டுக் கிளம்புங்க" என்று சொல்லிவிட்டுக் காரை நோக்கி நடந்தாள்.

வீட்டுக்கு வரும் வழியில் யோசித்துக்கொண்டு வந்தாள். கேட்ஸ் தர்மவான்தான். இப்படிப் பில்லியன் பில்லியனாக இல்லாவிட்டாலும், ஒன்றுமே இல்லாவிட்டால்கூடத் தன்னுடைய கூழை அடுத்தவனுக்குக் கொடுப்பவனும் தர்மவான்தான். பெருந்தன்மை மிகுந்தவர்கள் ஏழைகளிலும் இல்லையா? அவர்களை அடையாளம் காட்டுபவர்கள்தான் யாருமில்லை.

அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி நினைவு வந்தது அவளுக்கு.

சுதாவின் அப்பா வேலையிலிருந்து ஓய்வுபெற்றுச் சென்னை மாநகரத்தின் புறநகர்ப் பகுதி ஒன்றில் குடி புகுந்திருந்தார். ஓட்டமும் பதட்டமும் இல்லை. நிம்மதியாயிருந்தார். வீட்டுக்காரருக்கும் சந்தோஷம். குடித்தனம் வந்திருப்பது இருவர்தான். பிக்கல் பிடுங்கல் இல்லை. எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில் சுதாவின் கணவன், ஜபல்பூரில் பேராசிரியராயிருந்தவன், பல்கலைக்கழகங்களில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவுக்குப் போனான். முதல் குழந்தைக்கு மூன்று வயது. இரண்டாவது குழந்தைக்கு ஒரு வயது.

"நீங்க திரும்பி வரவரைக்கும் நான் போய் எங்கப்பாம்மா கூட இருந்துட்டு வறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்னைக்குப் போய்விட்டாள். இவள் வந்து இறங்கிய ஒரு வாரத்திற்குள், வீட்டுக்காரர் முகத்தைத் தூக்க ஆரம்பித்தார். "இரண்டு பேர்தான் குடித்தனம் இருப்போம்னு சொன்னேள். நம்பி வாடகைக்குவிட்டால், இப்போ பொண்ணு, பேரன், பேத்தின்னு எல்லாரையும் கூட்டிண்டு வந்துட்டேளே?"

அப்பா பொறுமையாகச் சொன்னார். "சுதாவோட புருஷன் இப்போ அமெரிக்கா போயிருக்கார். நாலு மாசத்துலத் திரும்பி வந்துடுவார். அதுவரைக்குந்தான் அவள் இங்க இருப்பாள்."

இவர்களுக்கென்று மொட்டை மாடியில் ஒரு தண்ணீர்த் தொட்டி இருந்தது நீரை ஏற்றப் போடவேண்டிய மோட்டார் சுவிட்ச் வீட்டுக்காரரிடம் இருந்தது. அவர் அதை இரண்டு நிமிடத்துக்குமேல் போட மறுத்தார். முக்கால்வாசி நேரம் கிணற்றிலிருந்து நீர் இறைக்க வேண்டியிருந்தது.

வீடுகளில் தொலைபேசியே இல்லாத காலம் அது. அப்பா அதற்கு விண்ணப்பித்திருந்தார் தொலைபேசித் தொடர்பு கிடைக்க இரண்டு வருடம் ஆகும். இரண்டாயிரம் அமெரிக்க டாலர் கொடுத்தால் இணைப்பு உடனே கிடைக்கும் என்றார்கள்.

சுதாவின் கணவன் "அமெரிக்காவில என் அறைத் தொலைபேசி எண்ணைத் தறேன். நீ போஸ்ட் ஆஃபீஸ் போய்க் கலெக்ட் கால் போட்டுப் பேசு" என்று சொல்லிவிட்டுப் போனான். அதேபோல எழுதி அனுப்பியிருந்தான்.

கிணற்றில் நீர் இறைத்துக் குழந்தைத் துணிகளைத் துவைத்து உலர்த்திவிட்டு, போஸ்ட் ஆஃபீஸுக்கு விரைந்தாள். கால் புக் பண்ணிவிட்டுக் கைப்பையைத் திறந்து அந்த வாரப் பத்திரிகையை எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள். லைன் கிடைக்க ஒரு மணி நேரமாவது ஆகும்.

"அம்மா!" யாரோ கூப்பிட்டார்கள். கூப்பிடுவது யார்? நிமிர்ந்து பார்த்தாள். கூலி வேலை செய்வது போலிருந்த ஒரு பெண் "அம்மா! இந்த மணியார்டர் பாரம் ஒண்ணு எளுதிக் கொடுக்குறீங்களா? ஊருக்குப் பணம் அனுப்பணும்" என்றாள்.

சுதா எழுதிக்கொடுத்தாள். அந்தப் பெண்ணின் பெயர் அஞ்சலை என்று தெரியவந்தது. அவள் இன்னொருத்தியைக் கூப்பிட்டாள். "இந்தம்மா எலவசமா பாரம் எழுதிக் குடுக்கறாங்க. இங்கன வா." நான்கு, ஐந்து மணியார்டர் ஃபாரங்கள் பூர்த்தி செய்திருப்பாள்.

அவளுடைய காலும் வந்தது. பேசிவிட்டு வீட்டுக்குப் போனாள்.

அடுத்த வாரமும் இதேபோல் நடந்தது. இரண்டு மூன்று கடிதங்கள்கூட எழுதிக்கொடுத்தாள்.

மூன்றாவது வாரம் அப்பாவும் அவளுமாகப் போனார்கள். அருகிலிருந்த வங்கியில் அவருக்கு வேலை இருந்தது. திரும்பி வந்தவர் சுதா கடிதம் எழுதிக்கொடுப்பதில் மும்முரமாயிருந்ததால் பக்கத்தில் இருப்பவரிடம் பேச்சுக் கொடுத்தார்.

அதிலிருந்து அப்பாவுக்குத் தெரிந்த விவரம், அவருடன் பேசியவர் பெயர் தணிகாசலம். தனியார் கம்பெனியில் எழுத்தராக இருந்து ஓய்வு பெற்றவர். போஸ்ட் ஆஃபீஸ், ரிஜிஸ்திரார் ஆஃபீஸ், போன்றவற்றின் முன்னே உட்கார்ந்து கடிதம் எழுதிக்கொடுத்துப் ஃபாரங்கள் பூர்த்தி செய்து சம்பாதிப்பவர்.

வீடு திரும்பும் வழியில் அப்பா சொல்லிக்கொண்டு வந்தார். "சுதா, ஒன்னால அவருக்கு வருமானம் கொறஞ்சு போச்சு". "ஐயோ, எனக்குத் தெரியாதே? நா எதையும் கவனிக்கல. யாரும் வந்து கேட்டா எழுதிக் கொடுத்துக் கிட்டிருந்தேன். அவரும் ஒண்ணும் அப்ஜக்ட் பண்ணல்லியே".

அடுத்த வாரம் போஸ்ட் ஆஃபீஸ் போய்க் கால் புக் செய்தாள். அப்பா அடையாளம் காட்டியவர் இருக்கிறாரா என்று தேடினாள். அவர் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார். அவர் வருமானத்தைக் கெடுத்ததற்கு மன்னிப்புக் கேட்டாள்.

பழுப்பேறியிருந்த வெள்ளை வேட்டியும், சட்டையுமாயிருந்த அவர் சொன்னார். "அய்ய, என்னம்மா இது பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு? ஏழ சனங்களுக்கு அம்பது பைசா, ஒரு ரூபா, இப்படி நான் சார்ஜ் பண்றதக் கொடுக்க வேண்டாம்னா நல்லதுதானே? நீங்க என்ன, ஒரு ஒண்ணரை, ரெண்டு மணி நேரந்தானே இங்க இருக்கீங்க? அதுவும் வாரத்துக்கு ஒரு தபா" என்றார்.

அன்று மழையாயிருந்ததால் வேலை இல்லையோ என்னவோ, கூலியாட்கள் யாரும் தபால் அலுவலகத்துக்கு வரவில்லை.

சுதா மேலும் அவரைப் பற்றித் தெரிந்துகொண்டாள். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் எழுத்தராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். ஒரே மகன். அவன் சரியாகப் படிக்கவில்லை. வியாபாரம் செய்கிறேன் என்று சொல்லிப் பெட்டிக்கடை வைத்துப் பணத்தை விரயம் செய்தான். இரண்டு வருடமாக அவன் எங்கே இருக்கிறான் என்றே தெரியவில்லை. மனைவி சீக்காளி. இவருடைய தினசரி சம்பாத்தியம் காய், மளிகை வாங்க உதவுகிறது.

அடுத்த நான்கு வாரங்கள் இவள் தபால் அலுவலகத்துக்குப் போகவில்லை. கணவன் அமெரிக்காவிலேயே வெவ்வேறு இடங்களுக்குப் போகப் போவதாகச் சொல்லிவிட்டான்.

கணவனுக்குக் கடிதம் எழுதிப் போட்டாள். ஒரு விதத்தில் நிம்மதியாகக் கூட இருந்தது. தணிகாசலத்தின் பிழைப்பில் மண்ணைப் போடவில்லை என்று.

பக்கத்து வீட்டு ஆச்சி பத்திரிகை கடன் வாங்க வந்திருந்தாள். அவளுடைய கணவர் அந்தக் காலத்தில் மலேசியா போய் சம்பாதித்தவர். அவருக்கு அங்கே ஏதோ தொடுப்பு இருப்பதாக மற்றவர்கள் சொன்னார்கள். "ஏம்மா, சுதா! ஒங்க வீட்டுக்காரரோடப் போன் போட்டுப் பேசினியா? அந்தக் காலத்துல நாங்கல்லாம் வெளிநாடு போன ஆம்பளைக்குக் காயிதந்தான் எழுத முடியும். கப்பல்ல போகும். அதுவும் போய்ச்சேர நாளாவும். அங்க அவங்களுக்குந் தனிமைதான். நமக்காவது இங்க வீட்டுல நெறய ஆளுங்க."

"இல்ல. இப்ப அவரு அமெரிக்காவுலயே வெவ்வேற எடத்துக்குப் போய்க்கிட்டிருக்காரு. நானும் ஒரு மாசமா காயிதந்தான் எழுதிக்கிட்டிருக்கேன்."

ஆச்சி போன பிறகு, அம்மா முகத்தில் ஒரு கலக்கம் தெரிந்தது. சுதாவுக்குப் புரிந்தது. தனியாக இருக்கும் சுதாவின் கணவனும் என்ன செய்வானோ என்று அம்மாவுக்குப் பயமென்று.

இதற்கிடையில் அப்பாவும் வேறு வீடு பார்க்கத் துவங்கிவிட்டார். இதென்ன, பெண் பிள்ளையெல்லாம் ஒரு அமயா சமயமென்றால் வரமுடியாதென்றால்?

அப்பாவும் அவளும் அம்மாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டு ஒரு வீடு தோதாகுமா என்று பார்க்கப் போனார்கள். போகும் வழியில் ரேஷன் கடை கியூவில் தணிகாசலத்தைப் பார்த்தார்கள். அவரும் தன் பின்னால் இருந்தவரிடம் தான் இரண்டு நிமிஷத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு வந்து இவர்களிடம் பேச்சுக்கொடுத்தார்.

"என்ன சுதாம்மா! ஒங்கள தபால் அலுவலகத்துல நாலு வாரமாக் காணோம்?"

"அவரு அங்க அமெரிக்காவுலேயே வெவ்வேற காலேஜ்ல லெக்சர் பண்ணப் போய்க்கிட்டிருக்காரு. நெலயா ஃபோன் நம்பர் இல்ல. நான் கலெக்ட் கால் போட்டுக் கூப்புட முடியாது."

"ஓ அப்புடியா. நா வீட்ல யாருக்கும் ஒடம்பு சொகமில்லையோனு நெனச்சேன்."

"ம். அப்புறம் தபால் அலுவலகம் இருக்குற மெயின் ரோட்ல தோண்டிப் போட்டு சாக்கட கட்டிக்கிட்டிருந்தாங்க இல்லியா? அந்த வேலை முடிஞ்சிருச்சு. கூலி ஆளுங்க இனிமே இந்த போஸ்ட் ஆபீஸ் பக்கம் வரமாட்டாங்க. இனிமே பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஏதோ வேல நடக்கும் போல இருக்கு. அந்தப் பக்கம் ஒரு சின்ன போஸ்ட் ஆபீஸு இருக்குல்ல, நான் அங்க போய் ஒக்காரப் போறேன்."

அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வீடு பார்க்கப் போனோம். வீடு பிடித்துப் போனது. இரண்டு வாரங்களில் குடி மாறிவிட்டோம்.

என் கணவரும் அமெரிக்காவிலேயே நிரந்தரமாக வேலை எடுத்துக்கொள்ளப் போவதாகச் சொன்னார். நான் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்தேன். இடையில் ஜபல்பூர் போய் வீட்டைக் காலி செய்துவிட்டு வந்தேன். போஸ்ட் ஆஃபீஸ் போக நேர்ந்தபோது தணிகாசலத்தைப் பார்க்கவில்லை. ஒருவழியாக விசா கிடைத்து அமெரிக்காவும் வந்துவிட்டேன்.

2 வருடம் கழித்து நான் விடுமுறைக்கு இந்தியா சென்றபோது அப்பாவிடம் தணிகாசலத்தைப் பற்றிக் கேட்டேன். அப்பா அவரைப் பற்றிச் சுத்தமாக மறந்துவிட்டிருந்தார். அவரை நான் கோயில், கடைவீதி எங்கும் பார்க்கவில்லை. யாரிடம் விசாரிப்பது என்றும் தெரியவில்லை.

ஆனாலும் நினைவில் நின்றுவிட்டார்.
லக்ஷ்மி சங்கர்,
அட்லாண்டா, ஜார்ஜியா
More

மனிதம் என்பது!
Share: 




© Copyright 2020 Tamilonline