Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஹரன் பிரசன்னா
- அரவிந்த்|நவம்பர் 2020|
Share:
'நிழல்கள்' கவிதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர் ஹரன் பிரசன்னா (இயற்பெயர் :ஹரிஹர பிரசன்னா). அதற்கு முன்பே 'மரத்தடி' யாஹூக் குழுவின் மூலம் இணைய உலகில் பிரபலமானவர். புனைவு எழுத்தாளர், விமர்சகர், கட்டுரையாளர் எனப் படைப்பின் பல களங்களிலும் தனது சிறகை விரித்திருப்பவர். 'வலம்' இதழின் ஆசிரியர்களுள் ஒருவர். தனது இதழியல் பணிகளுக்காக 'சந்தேஷ் புரஸ்கார்' விருது பெற்றிருக்கிறார் சமீபத்தில் வெளியான இவரது 'மாயப் பெரு நதி' நாவல் பரவலான வாசக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இவரது வலைதளமான 'ஹரன் பிரசன்னா' மிகச் சுவையான கதம்பம். பல்வேறு மொழித் திரைப்படங்களின் விமர்சனங்கள், கிரிக்கெட், ஆன்மீகம், சென்னை புத்தகக் கண்காட்சி என்று விதவிதமான பிரிவுகளில் நையாண்டி நக்கல் தீவிர சிந்தனை கலந்த எழுத்துகள் வாசிக்கத் திகட்டாதவை. எல்லாவற்றிலும் ஹரன் பிரசன்னாவுக்கென்று தனிப் பார்வையும் பாணியும் இருப்பதைப் பார்க்க முடியும். வாருங்கள் அவரோடு பேசிக்கொண்டே நடக்கலாம்...

இளமை நாட்கள்
நான் பிறந்தது திருநெல்வேலியில். பின்பு சேரன்மகாதேவியில் சிறிது நாள் வசித்தோம். குடும்பச்சூழல் காரணமாக மதுரையில் சிறிது நாட்கள். மீண்டும் திருநெல்வேலி சென்றோம். படித்தது மதுரையிலும் திருநெல்வேலியிலுமாக. பிரபல ம.தி.தா. ஹிந்து கல்லூரியில் வேதியியல் இளங்கலை படித்தேன்.

சந்தேஷ் புரஸ்கார் - ஹரன் பிரசன்னா இடது ஓரத்தில்



வறுமைச் சூழலும் வாசிப்பும்...
வீட்டில் வாரப் பத்திரிகைகளைப் படிக்கும் வழக்கம் இருந்தது. இவற்றில் வரும் சில தொடர்கதைகளை பைண்ட் செய்து வைப்பார்கள். ஆனால் பெரிய படிப்பார்வம் என்றெல்லாம் யாருக்கும் இல்லை. முக்கியமான காரணம் வறுமை. தினமும் வயிற்றுப் பாட்டைப் பார்ப்பதே பெரும்பாடு என்னும்போது எங்கிருந்து படிப்பது? நான் மூன்று அல்லது நான்காம் வகுப்புப் படிக்கும்போதே குழந்தை நாவல்களைப் படித்த நினைவிருக்கிறது. தொடர்ந்து நூலகங்களுக்குப் போய் ரத்னபாலா, கோகுலம், பாலமித்ரா வாசித்தேன். வீட்டில் பைண்ட் செய்து வைத்திருந்த புத்தகங்களில் சாண்டில்யனின் வெகுஜன நாவல் ஒன்றை வாசித்தேன். பெயர் மறந்துவிட்டது. 'புயல் வீசிய இரவில்' என்று ஏதோ ஒன்று. பின்பு கே. பாலசந்திரின் 'மூன்று முகம்' வாசித்தேன். இதைப் பார்த்த அம்மா, இனி புத்தகங்கள் படிக்காதே என்று தடை போட்டுவிட்டார். இப்படிப்பட்ட புத்தகங்கள் கல்விக்குத் தடையாக இருக்கும் என்பது கருத்து.

வீட்டில் அனைவரும் அதை அப்படியே ஆமோதித்துவிட்டார்கள். பின்பு மீண்டும் நான் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியது பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னர்தான். வாசிப்பார்வம் என்னுள் இயல்பாகவே இருந்தது. பாலகுமாரனில் தொடங்கி சுஜாதா, ஜெயகாந்தன் என விரிந்து ஜெயமோகன், சுந்தர ராமசாமி மூலம் தீவிர இலக்கியத்திற்குள் வந்தது.

அச்சில் வந்த முதல் கதை
முதலில் பிரசுரமான கதை என்றால், நான் பதினேழு வயதாக இருந்தபோது 'தினகரன்' திருநெல்வேலி தீபாவளி மலரில் எழுதிய கதை. கதையின் பெயர் சரியாக நினைவில்லை. 'ஒரு எழுத்தானின் மரணம்' என்ற என்னவோ ஒன்று. அதற்குப் பரிசு கொடுத்தார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. சிலர் தினகரன் தீபாவளி மலரில் என் போட்டோவைப் பார்த்துவிட்டு, நீயா என்று கேட்டார்கள். பரிசு தரப்பட்ட நாளில் என் கல்லூரி தமிழ்ப் பேராசிரியை வந்திருந்து என்னைப் பார்த்து, "வேதியியல் மாணவனான நீ கதையெல்லாம் எழுதுவாயா?" என்று கேட்டார். வேறு எதுவும் நடக்கவில்லை.

தொடர்ந்து எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்துத்தான் 'மரத்தடி' யாஹூ குழுமத்தில் ஒரு சிறுகதையை எழுதினேன்.

இருக்கை
எனக்கு முன்னுள்ள இருக்கையில்
முதலில் ஒரு பட்டாம்பூச்சி வந்தமர்ந்தது
பின்பு ஒரு பெருநோய்க்காரன் வந்தமர்ந்தான்
ஒரு விபசாரி வந்தமர்ந்தாள்
யோகிபோல் வேடமணிந்த
சிறு குழந்தை ஒன்றமர்ந்தது
யாருமற்ற பெருவெளியில்
தனித்திருக்கும்
அவ்விருக்கையில்
நான் சென்று அமர்ந்தபோது
என் வெளியேறுதலுக்காகக்
காத்திருக்கிறது பெருங்கூட்டம்

- ஹரன் பிரசன்னா, ('நிழல்கள்' கவிதைத் தொகுப்பிலிருந்து)


சிரமமில்லாத கவிதைகள்
எழுதச் சிரமமில்லாதது என்பதால் கவிதைகள் எழுதினேன். அதாவது அதிகம் எழுதவேண்டாம் அல்லவா? அதற்காக! கையில் எழுதுவது பிடிக்காது. 2000 வாக்கிலேயே கணினியில் எழுதுவதுதான் பிடித்திருந்தது. முதலில் எதுகை, மோனை கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தவன், சட்டென நவீன கவிதையின் வடிவத்துக்கு மாறினேன். தொடர்ந்து கவிதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன். இதழ்களுக்கெல்லாம் அனுப்பும் ஆர்வம் இருந்திருக்கவில்லை. அனுப்பினாலும் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது மனப்பதிவாக இருந்தது. எது எழுதினாலும் பிரசுரித்துக்கொள்ள யாஹூ குழுமங்கள் இருந்தன. இதழ்களைவிட அதிக கவனம் கிடைத்தது. காத்திருக்கும் அவசியம் இல்லை. நிராகரிக்கப்படும் தொல்லை இல்லை. எது தேறுமோ அதுவே நிலைக்கும் என்ற விதிக்குள் இயங்குவது எளிதானதாக இருந்தது. ஒரு கவிதையை எப்போதோ கணையாழிக்கு அனுப்பி இருந்தேன். அது வெளிவந்ததே எனக்குச் சில மாதங்கள் கழித்துத்தான் தெரியும்.

'மரத்தடி' யாஹூ குழுமத்தில் வரும் சிறுகதைகளை வாசித்துவிட்டு, 'குப்பை', 'மொக்கை' என்று கருத்துச் சொல்வேன். அதைப் பார்த்த சிலர், நீ எழுதுவாயா என்று கேட்டார்கள். அதாவது எழுதிப் பார் தெரியும் என்று சொன்னார்கள். முதல் கதையை எழுதினேன். வீம்புக்காகத்தான் எழுதினேன். தொடர்ந்து எழுதும் இலக்கெல்லாம் அப்போது இருந்திருக்கவில்லை. இது நடந்தது தோராயமாக இருபது ஆண்டுகளுக்கு முன்பு. 'தட்டான்' என்ற சிறுகதை அது. பலர் பாராட்டினார்கள். சவால் விட்டவர்கள்கூடப் பாராட்டினார்கள். அப்படியே தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

தமிழ் எழுத்தாளர்கள்
தனியே யாரையும் குறிப்பிட்டுச் சொல்வது சரியாக இருக்குமா எனத் தெரியவில்லை. எத்தனையோ பேர் எழுதிக் குவித்திருக்கிறார்கள். நிறையப் பேரை வாசித்திருக்கிறேன். பலரையும் பிடிக்கும். தி. ஜானகிராமனின் சிறுகதைகளை வியந்திருக்கிறேன். அவரது நாவல்களும் எனக்குப் பிடித்தவையே. அசோகமித்திரனின் எழுத்துகளை மறக்கமுடியுமா? சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே. சில குறிப்புகள்', ஜெயமோகனின் 'ரப்பர்', 'பின் தொடரும் நிழலின் குரல்' ஆகியவற்றை வாசித்தபோது ஏற்பட்ட பிரமிப்பெல்லாம் இன்னும் அப்படியே இருக்கிறது. தற்காலத்தில் வெளிவரும் பலரின் நூல்களை வாசிக்கிறேன். லக்ஷ்மி சரவணகுமாரின் 'உப்புநாய்கள்' மிகவும் பிடித்திருந்தது.

மறக்கமுடியாத எழுத்தாளர் என்றால் வெங்கட் சாமிநாதனைத்தான் சொல்லவேண்டும். சொல்லுக்கும் எழுத்துக்கும் இடையே இடைவெளி இல்லாமல் வாழ்ந்துவிட்டுச் சென்றதற்காக. மனதில் நினைப்பதையே சிறிதும் பாசாங்கு இல்லாமல் எழுதிவிட்டுச் சென்றதற்காக.

ஆதர்ச எழுத்தாளர் வெங்கட் சாமிநாதனுடன் ஹரன்



சில நேரங்களில் சில விமர்சனங்கள்
வெங்கட் சாமிநாதன் 'சாதேவி' நூலுக்கு எழுதிய விமர்சனம், விருட்சம் இதழில் வெளிவந்த 'சொக்கலிங்கத்தின் மரணம்' கதையைப் படித்துவிட்டு வண்ணதாசன் எழுதியிருந்த கடிதம் இவை இரண்டுமே மறக்க முடியாதவை. ஒவ்வொரு சிறுகதைத் தொகுப்பையும் படித்துவிட்டு எஸ். ராமகிருஷ்ணன் நேரில் பார்க்கும்போது சொல்லும் வார்த்தைகளும் மறக்கமுடியாதவைதான்.

ஹரன் பிரசன்னாவின் நூல்கள்
இவரது கவிதைத் தொகுப்பு 'நிழல்கள்.' சிறுகதைத் தொகுப்பு 'சாதேவி'. அதன் பின்னர் அடுத்த தொகுப்பு 'புகைப்படங்களின் கதைகள்' என்ற தலைப்பில் வெளியாகியிருகிறது. சிறார்களுக்காக எழுதியது 'மூத்தாப்பாட்டிகளின் கதைகள்'. சமீபத்தில் 'மாயப் பெரு நதி' என்னும் முதல் நாவல் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது. தமிழ் சினிமா விமர்சனங்களின் தொகுப்பு 'நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள்' என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக வெளி வந்திருக்கிறது. இவர் நூல்களை அமேசானில் வாங்கலாம்.


என்னுள் பாதிப்பு ஏற்படுத்திய படைப்புகள் பல உள்ளன. சட்டென நினைவுக்கு வருவது 'அம்மா வந்தாள்'. மறக்கமுடியாத புதினம். மிகப்பெரிய உச்சம் ஒன்று மிக மெல்லியதாக நிகழும் தருணம் தந்த பாதிப்பும், அதிர்ச்சியும் இன்னும் மனதில் உள்ளது.

படைப்பாளி என்று பார்த்தால், என் பார்வையையே மாற்றிய எழுத்தாளர் என்று அரவிந்தன் நீலகண்டனைத்தான் சொல்லவேண்டும். அவர் எழுதிய கட்டுரைகள், நூல்களே என்னைப் புரட்டிப் போட்டவை. அவரைக் குறிப்பிடாவிட்டால் நன்றியற்றவனாகிவிடுவேன். அரவிந்தன் நீலகண்டனின் 'ஹிந்துத்துவச் சிறுகதைகள்' என்னும் சிறுகதைத் தொகுப்பு, பிரசாரத்தையும் இலக்கியத்தையும் சரியாக ஒருங்கிணைக்கும் அட்டகாசமான நூல். அதேபோல் 'ஆழி பெரிது' காலம் தாண்டி நிற்கும் அற்புதமான படைப்பு. இவையெல்லாம்தான் என் சிந்தனையை ஒருமுகப்படுத்தியது.

வாசிப்பில்லாத சமுதாயம்?
எங்கும் எப்போதும் வாசிக்கும் ஒரு சமூகம் இருந்துகொண்டேதான் இருக்கும். வாசிப்பது என்பது இல்லாமல் ஒரு சமூகம் என்றும் வாழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. எதை எப்படி வாசிக்கிறோம் என்பதில் மட்டுமே மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். மற்றபடி வாசிப்பு இருந்துகொண்டேதான் இருக்கும். இந்த வகையில் பதிப்புச் சூழலின் எதிர்காலம், புத்தக வடிவில் இருப்பதில் சவால்கள் உருவாகலாம். ஆனாலும் புத்தக வடிவில் இருக்கும் வாசிப்பு உடனடி எதிர்காலத்தில் இல்லாமலே போய்விடும் என்று சொல்வதை நான் நம்பவில்லை. கொஞ்சம் குறையலாம், ஆனால் நிச்சயமாக இல்லாமல் போய்விடாது. இதற்கு இணையாகக் கணினிவழி வாசிப்பு உருவாகி வரலாம். கூடுதலாகக்கூட ஆகலாம். ஆனால் வாசிப்பு என்பது இருந்துகொண்டுதான் இருக்கும்.
ஹரன் பிரசன்னா


வார்த்தை முதல் வலம் வரை
'வார்த்தை' இதழில் எனது பங்களிப்பு எடிட்டிங் மற்றும் இதர வேலைகள் சார்ந்தது. அதன் உள்ளடக்கத்தை முடிவு செய்தது நானல்ல. கோபால் ராஜாராம் மேற்பார்வையிலான குழு. அதே சமயம் அதன் உள்ளடக்கம் சார்ந்து என் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லும் சுதந்திரமும் எனக்கு இருந்தது. நான் சொன்ன கருத்துகளை மிகக் கவனமாகக் கேட்டார்கள். 'வார்த்தை' இதழில் நான் எழுதியவை என்று எனக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை. ஒரே ஒரு கட்டுரையை, அதுவும்கூட அதன் தகவல்களை மட்டும் நான் மொழிபெயர்த்த நினைவு வருகிறது. இட ஒதுக்கீட்டுச் சிறப்பிதழில் வெளியான 'க்ரீமி லேயர்' தொடர்பான ஒரு கட்டுரை அது. மற்றபடி 'வார்த்தை' இதழுக்கென்று எதுவும் எழுதினேனா என்று நினைவில்லை. வார்த்தையின் முதல் ஆறு இதழ்கள் வரையில் மட்டுமே என் சிறிய பங்களிப்பு இருந்தது. அதுவும்கூட எழுத்து சார்ந்து அல்ல, மெய்ப்புப் பார்ப்பது, மிகக் குறைவாக எடிட் செய்வது என்ற வகையில் மட்டுமே.

கிழக்கு பதிப்பகத்தில் சேர்ந்தபோது என் பிரதான பங்களிப்பு, நேரடி விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் என்று ஆனது. ஆனாலும், இங்கேயும் எடிட்டிங் சார்ந்து, நூலின் உள்ளடக்கம் சார்ந்து, எந்த நூலைக் கொண்டுவர வேண்டும் என்பது சார்ந்து, என் கருத்துக்களைச் சொல்லும் முழுமையான சுதந்திரம் தரப்பட்டது. கிழக்கின் செயல்பாடு இப்படித்தான் இருக்கும். கிழக்கில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை வெளிப்படையாகச் சொல்லலாம். பத்ரி சேஷாத்ரி தொடங்கி எடிட்டோரியலில் இருந்த பா. ராகவன், மருதன் உள்ளிட்ட அனைவரும் காது கொடுத்துக் கேட்பார்கள். பதில் சொல்வார்கள். எடிட்டோரியல் கூட்டங்களில் நெருப்பு பறக்கும். அரசியல் கருத்துகள் கடுமையாக முன்வைக்கப்படும், அலசப்படும். இப்படியெல்லாம் பேசிக்கொள்வார்களா என்று வெளியே இருப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு வெளிப்படையாகவும் விரிவானதாகவும் கூட்டங்கள் இருக்கும். கிழக்கில் பல புத்தகங்களை என் ஆர்வத்தால் எடிட் செய்திருக்கிறேன். நானாகக் கேட்டு வாங்கிச் செய்தவை அவை. பல நாவல்கள், சில அபுனைவுகள் எனச் செய்திருக்கிறேன். என் முக்கியக் கவனம் விற்பனைதான் என்றாலும் இவற்றையெல்லாமும் செய்ய எனக்கு முழு அனுமதியும் தரப்பட்டது, தரப்பட்டிருக்கிறது.

'வலம்' இதழைப் பொருத்தவரை, அது என் கொள்கைப் பிடிப்பில் கொண்டு வரப்பட்ட பத்திரிகை. முழுக்க முழுக்க என் தனிப்பட்ட ஆர்வத்தில் வருவது. அரவிந்தன் நீலகண்டனும், ஜடாயுவும் நானும் எடிட்டர்கள். 'வலம்' இதழில் சில கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். எனது மிக முக்கியமான கட்டுரைகள் வலம் இதழில் வெளியாகி இருக்கின்றன. அக்டோபர் 2020ல் வலம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பல முக்கியமான கட்டுரைகளை வலம் இதழ் வெளியிட்டிருக்கிறது. எவ்விதக் காழ்ப்பும் இன்றி, யார்மீதும் வன்மம் பரப்புதலைச் செய்யாமல், உண்மையை, நியாயத்தைச் சொல்லவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு வலம் தொடங்கப்பட்டது. இன்றுவரை அதிலிருந்து விலகாமல் பயணிக்கிறது. இனியும் இப்படித்தான் தொடரும்



நாவல்: மாயப் பெரு நதி
நாவலுக்கான பின்புலம், சென்னை புத்தகக் கண்காட்சி தொடர்பானது. அதற்கு இணையான, நூறாண்டுகளுக்கு முன்பான பின்னணி, மடம் சார்ந்தவர்களின் வாழ்க்கையில் இருந்து உருவாகி வந்தது. இரண்டையும் வலுக்கட்டாயமாகப் பிணைக்காமல், அதே சமயம் இரண்டுக்குமான தொடர்பை உருவாக்குவதில் மட்டுமே நான் கவனம் செலுத்தினேன். இரண்டையும் தனித்தனியான நாவலாக எழுதி இருக்கலாம் என்று சிலர் சொன்னார்கள். அப்படி எழுதி இருந்தால் இரண்டுமே கவனிக்கப்படாமல் போயிருக்கலாம்.

இப்போது நாவலுக்குள் நிகழ்ந்திருக்கும் ஒரு ஆர்வம், தனித்தனியாக எழுதியிருந்தால் இல்லாமல் போயிருக்கும். அந்த வகையில் 'மாயப் பெரு நதி' சரியாகவே முகிழ்த்திருப்பதாக நான் நம்புகிறேன். நீண்ட நாளாகவே எழுத நினைத்திருந்த நாவல். இந்த இரண்டு காலம் என்பது மனதில் இருந்தது. ஆனால் இப்போது உருவாகி வந்திருக்கும் அதே வகையில் யோசித்திருக்கவில்லை. எழுத எழுத இந்த வடிவம் உருக்கொண்டது. மற்றபடி பெரிய திட்டங்கள், உந்துதல் என்றெல்லாம் தனியே எதுவும் இல்லை.

கோவிட் காலத்தில் பதிப்புத் துறை
கோவிட் காலத்தில் மிகவும் சிக்கலான சூழல் நிலவுகிறது. இந்தக் காலத்தில் யாரெல்லாம் தொழிலைக் கைவிடாமல் பிடித்து நிற்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள். எப்படியும் கோவிட் தொற்று ஒழியும்போது பதிப்புத் தொழில் மற்ற எல்லா தொழில்களையும்போல நிமிர்ந்து எழும். அதுவரை இதைக் கடந்தாக வேண்டும். படித்தே தீரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லாததால், இதில் பெரிய பாதிப்பு ஏற்பட்ட தொழில்களில் பதிப்புத் துறையும் ஒன்றாக இருக்கிறது. உலகம் முழுக்க எதிர்கொள்ளும் பெருந்தொற்றுக் காலத்தில் யாரையும் குறை சொல்ல முடியாது. தலைவிதி என்றுதான் தாண்டிப் போகவேண்டும். 2021 ஏப்ரலுக்குப் பிறகு நிலைமை சீராகும் என்று நினைக்கிறேன்.
ஹரன் பிரசன்னா


எது இலக்கியம்?
இரட்டை நிலை எடுக்காமல் இருப்பதும், இலக்கியத்துக்கென்று ஒரு நாக்கும், வாழ்க்கைக்கென்று ஒரு நாக்கும் இல்லாமல் இருப்பதுமே இலக்கியம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அதனால்தான் வெங்கட்சாமிநாதனைக் குறிப்பிட்டுச் சொன்னேன். இதைச் செய்யாத எந்த ஒரு இலக்கியமும் இனி எனக்குள் ஊடுருவிச் செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இது சரியா தவறா என்பதைவிட, இப்படித்தான் எனக்கு இன்று நம்பத் தோன்றுகிறது என்பதை மறைக்க விரும்பவில்லை.

மின்வலைத் திருட்டுகள்
நன்மையோடு தீமையும் கலந்தே இருக்கும் என்பது உலக நியதி. இதை ஒன்றுமே செய்யமுடியாது என்பது யதார்த்தம். அரசு நினைத்தால் ஏதேனும் செய்யலாம். ஆனால் அரசு செய்தே தீரவேண்டிய முதன்மையான பல விஷயங்கள் இருக்கும்போது அவர்கள் கவனம் இதன் பக்கம் திரும்புமா என்பதுகூடத் தெரியவில்லை. சிறிய, பெரிய, முதன்மையான, முதன்மையற்ற விஷயங்கள் என்றில்லாமல் எல்லாவற்றையும் பரிசீலுக்கும் அரசு அமையுமானால் இதெல்லாம் நிகழலாம். உலகிலேயே இப்படி ஒன்று நடக்க வாய்ப்பில்லை என்னும்போது, அந்தக் கற்பனை அரசு நம் ஊரிலும் அமையப்போவதில்லை. கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்வதைப் போல, இந்த திருட்டுடனும் வாழப் பழகிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

ஹரன் பிரசன்னாவின் வலைதளத்திலிருந்து...
தற்செயலாக கூகிள் ப்ளே புக்ஸில் மேய்ந்துகொண்டிருந்தபோது ஆங்கிலப் புத்தகத்தை இப்படிக் கேட்கும் வசதி இருப்பதைக் கவனித்தேன். இந்திய ஆங்கில உச்சரிப்பில் கேட்கலாம். ஆங்கிலப் புத்தகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு 40 நிமிடம் நடையில் 40 பக்கங்கள் கேட்டால், ஒரு வாரத்தில் ஒரு புத்தகத்தைக் கேட்டு முடித்துவிடலாம். முக்கியமான மூன்று புத்தகங்களை இரண்டு மாதங்களில் கேட்டு முடித்தேன். ஆங்கிலத்தில் இருக்கிறது, தமிழில் இருக்காதா என்று தேடியதில், அப்டேப் செய்யப்பட்ட ஆண்ட்ராய்ட் வெர்ஷனில் தமிழிலும் அது பேச ஆரம்பித்தது. தமிழ்ப் புத்தகங்கள் கேட்க ஆரம்பித்தேன். நமக்குத் தேவையான அளவுக்கு வேகத்தையும் pitchஐயும் வைத்துக்கொள்ளும் வசதி ஆண்ட்ராய்டில் இருக்கிறது. யூ ட்யூப்பிலும் இந்த வசதி உண்டு. எனவே எளிதாகக் கேட்க முடிந்தது. சில உச்சரிப்புப் பிரச்சினைகள் நிச்சயம் இருக்கும். - என்று இருந்தால் அடிக்கோடு அடிக்கோடு அடிக்கோடு என்று வாசிக்கும். 🙂 புள்ளி வந்தால் ஒரு நொடி நிறுத்தி வாசிக்கும். இனிஷியலுக்குப் பிறகு வரும் புள்ளியாக இருந்தாலும்! சூப்பர்ஸ்க்ரிப்ட்டில் எண் கொடுக்கப்பட்டிருந்தால், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல் அந்த எண்ணையும் வாசிக்கும்! இத்தனையையும் மீறி 90% அட்டகாசமாக இருக்கும். நிறைய கேட்க ஆரம்பித்தேன்.

முழுவதும் வாசிக்க
தொகுப்பு : அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline