Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
பூவை எஸ்.ஆறுமுகம்
- அரவிந்த்|அக்டோபர் 2020|
Share:
"பூவை சொல்லவந்ததை நயமாகச் சொல்கிறார்; நேராகச் சொல்லுகிறார்; படிப்பவர்களின் மனதில் பதியும் வண்ணம் சொல்கிறார். அவர் சொல்லுக்காகவோ, சொல்வதற்காகவோ தவிப்பதை அவருடைய எந்தக் கதையிலும் காண முடியவில்லை. அவருடைய எழுத்தாண்மைக்கு இது சிறப்பான சான்று தானே?" இப்படிக் கேட்பவர் எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம். "எவருடைய உள்ளத்தையும் புண்படுத்தாமல் அவர் (பூவை ஆறுமுகம்) இதுவரை இலக்கிய, இலக்கண மரபையொட்டி எத்தனையோ கதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய கதைகள் அனைத்தும் வாழ்க்கையோடு ஒட்டியவை. ஆங்கிலக் கதைகளைப் படிக்கும்போது நமக்கு உண்டாகும் அவஸ்தை தோழர் ஆறுமுகத்தின் கதைகளைப் படிக்கும்போது உண்டாவதில்லை" இப்படிப் பாராட்டுபவர் எழுத்தாளர் விந்தன். "ஆறுமுகத்தின் கதைகளிலே தென்றலின் இனிமையை ஒத்த நடை ஓடும். சுழிகளின்றி நிர்ச்சலனமாகப் பாயும் நதியைப் போன்றது இவரது கதை அமைப்பு" இப்படிப் புகழ்ந்துரைக்கிறார் எழுத்தாளர் மாயாவி. இன்னும் கொத்தமங்கலம் சுப்பு, நா. பார்த்தசாரதி, தி.ஜ.ரங்கநாதன், அகிலன், பி.எம்.கண்ணன் வாசவன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களால் பாராட்டப்பட்டவர் 'பூவை' என்று அழைக்கப்படும் பூவை எஸ். ஆறுமுகம். இவர், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் உள்ள பூவுற்றக்குடி கிராமத்தில், ஜனவரி 31, 1927ம் நாளன்று அரு. சுப்பிரமணியம் - வள்ளியம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார். உயர்கல்வியை நிறைவுசெய்த பின்னர், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். கல்லூரி பல வாசல்களைத் திறந்துவிட்டது. வாசிப்பார்வம் அதிகமானது.

'கல்கி'யின் நூல்கள் இவருக்குள் எழுத்தார்வத்தைத் தோற்றுவித்தன. நாளுக்கு நாள் எழுதும் ஆர்வம் உந்தவே ஒரு சிறுகதையை எழுதி சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார். 'தளர்ந்த நெஞ்சம்' என்னும் தலைப்பிலான அச்சிறுகதை அதில் வெளியானது. தேர்ந்தெடுத்தவர் பிரபல எழுத்தாளர் சாண்டில்யன். அப்போது ஆறுமுகத்துக்கு வயது 20! அதுமுதல் தீவிரமாக எழுதத் தொடங்கினார். ஆரம்பத்தில் 'எஸ். ஆறுமுகம்' என்ற பெயரிலேயே கல்கி உள்ளிட்ட பல இதழ்களில் சிறுகதைகள் வெளியாகின. 'கல்கி' இவரது பெயருடன், ஊர்ப்பெயரையும் இணைத்து பூவை எஸ். ஆறுமுகம் ஆக்கினார். அதுமுதல் அந்தப் பெயரிலேயே எழுதிய ஆறுமுகம், நாளடைவில் 'பூவை' என்றே அழைக்கப்பட்டார்.

பட்டப்படிப்பை முடித்த இவருக்கு வங்கியில் பணி கிடைத்தது. ஆனால், எழுத்தின்மீது கொண்ட ஆர்வத்தால், அரு. ராமநாதன் நடத்திய 'காதல்' இதழில் உதவியாசிரியராகச் சேர்ந்தார். இதழியல் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். தொடர்ந்து, விந்தன் ஆசிரியராக இருந்து நடத்திய 'மனிதன்' இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து முருகு சுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த 'பொன்னி' இதழில் உதவியாசிரியராகப் பணியேற்றார். இவரது குறிப்பிடத் தகுந்த சில கதைகள் இவ்விதழில் வெளியாகின. தொடர்ந்து ஏலக்காய் வாரியத்தில் லயஸன் ஆபிஸராக கிடைத்த பணிவாய்பை ஏற்றுக்கொண்ட பூவை, ஓய்வுநேரத்தில் கலைமகள், அஜந்தா, அமுதசுரபி, தினமணி கதிர், ஆனந்தவிகடன், குமுதம், இதயம் பேசுகிறது, அலிபாபா, காவேரி, நவயுவன், காண்டீபம், தமிழ், கங்கை, விந்தியா, நண்பன், வினோதன் எனப் பல இதழ்களில் நூற்றுக்கணக்கில் சிறுகதைகளை எழுதினார். நாடகங்கள், தொடர்கதைகளும் நிறைய எழுதியிருக்கிறார். 'பிறைசூடி', 'கதைச்சிற்பி கார்த்திகைபாலன்', 'இளையபிரான்', 'மறைநாயகன்' போன்றவை இவரது புனை பெயர்களில் சில.முதல் சிறுகதைத் தொகுதி 'கடல்முத்து' 1951ல் வெளியானது. 1961ல், இவரது ஓரங்க நாடகமான 'மகுடி'யை ஆனந்தவிகடன் சிறந்த நாடகமாகத் தேர்ந்தெடுத்து, முதல் பரிசு அளித்தது. 1966ல், 'பூவையின் சிறுகதைகள்' என்னும் நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான முதல் பரிசு கிடைத்தது. 'தாயின் மணிக்கொடி' என்ற இவரது சிறார் நாவலுக்கு அப்போதைய தமிழக முதலமைச்சர் எம். பக்தவத்சலம் முன்னுரை வழங்கிப் பாராட்டினார். ஒரே ஆண்டில் நாடகம் (இதோ ஒரு சீதாப்பிராட்டி), சிறுகதைத் தொகுப்பு (தெய்வம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது) என இரண்டிற்கும் சிறந்த படைப்பாளிக்கான தமிழக அரசின் விருது பெற்ற பெருமை இவருக்கு உண்டு. 'இதோ ஒரு சீதாப்பிராட்டி' நாடகம், 'இன்னொரு சீதை' என்ற தலைப்பில் சென்னைத் தொலைக்காட்சியில் தொடராகப் பதினேழு வாரங்கள் வெளியானது.

நூற்றுக்கணக்கான சிறுகதைகளைப் பூவை எழுதியிருக்கிறார் இவரது சிறுகதைகள் சில ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. வானொலியிலும் இவரது நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. இவரது 'தெம்மாங்கு தெய்வானை' என்ற வானொலி நாடகத்தைக் கேட்டு மனமுவந்து பாராட்டிய கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், அதை விரிவான நாடகமாக எழுதித் தருமாறும், தான் அதற்குப் பாடல்கள் எழுத ஆர்வம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அம்முயற்சி நிறைவேறுவதற்குள் பட்டுக்கோட்டையார் காலமாகிவிட்டார். "அவர் மறைந்திராவிட்டால் அது ஒரு திரைப்படமாக வெளிவந்திருக்கக் கூடும்" என்று குறிப்பிட்டிருக்கிறார் பூவை எஸ். ஆறுமுகம். "சமுதாயம் ஒரு சைனாபஜார்" என்பது மணிக்கொடி இதழில் இவர் எழுதிய தொடர். எம்.ஜி.ஆர்.- சிவாஜி இணைந்து நடித்த 'கூண்டுக்கிளி' படத்திற்கு, கதாசிரியர் விந்தனுக்கு உதவியாக இவர் வசனப் பங்களிப்பு செய்துள்ளார்

ஜி. உமாபதி நடத்திய 'உமா' மாத இதழின் துணையாசிரியராகச் சுமார் பதினோராண்டு காலம் பணிபுரிந்தார் பூவை. அக்கால கட்டத்தில் கதை, கட்டுரை, நேர்காணல், திறனாய்வு, நாடகம் எனப் பல சிறந்த பங்களிப்புகளை அளித்து இதழை உயர்த்தினார். பல்வேறு இலக்கியப் பரிசோதனை முயற்சிகளையும் மேற்கொண்டார். எழுத்தாளர் வாசவன் ஒரு நாவலின் முதல் அத்தியாயத்தை எழுதி ஆரம்பித்து வைக்க, தொடர்ந்து வல்லிக்கண்ணன், சரோஜா ராமமூர்த்தி, கிருஷ்ணா, சி.ஆர். ராஜம்மா, நெடுமாறன், எல்லார்வி, ஏ.எம். மீரான், சி.சு. செல்லப்பா, பி.வி.ஆர் ஆகியோர் தொடர்ந்து எழுத, இறுதி அத்தியாயத்தை எழுதி நிறைவு செய்தார் பூவை. 'ஆடும் தீபம்' என்பது அந்நாவலின் தலைப்பு. தமிழில் அதுவரை இல்லாத வித்தியாசமான இம்முயற்சி பலராலும் பாராட்டப்பட்டது. எழுத்தாளர்களின் புனைபெயர் எப்படி வந்தது என்பதைப் பற்றியும், அவர்களது முதல் சிறுகதை வெளியான தருணங்கள் பற்றியும் அந்த எழுத்தாளர்களிடமே கேட்டு எழுதிய கட்டுரைகள் கொண்ட நூல் 'புனைபெயரும் முதல் கதையும்.' இது 'உமா'வில் தொடராக வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான். 'கல்கி முதல் அகிலன் வரை', 'ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை' போன்ற திறனாய்வு நூல்களும் உமாவில் தொடராக வெளியானவையே!
தமிழில் முதன்முதலில் ஏலக்காய் பற்றி விரிவாக ஒரு கட்டுரை நூலை எழுதியவரும் பூவைதான். 'ஏலக்காய்' என்ற தலைப்பில் வெளியான அந்த நூலில் ஏலக்காயின் இயல்பு, விதைப்பதற்கேற்ற நிலம், விதைக்கும் காலம், உரமிடுதல், களையெடுத்தல், காய் பறித்தல், விலை, ஏற்றுமதி போன்றவற்றைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். 'ஏலக்காய்' என்ற சிற்றிதழுக்குத் துணை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.

பூவையின் படைப்புகளில் சில
சிறுகதைத் தொகுதிகள்: 'கடல்முத்து', 'அமிர்தம்', 'காதல் மாயை', 'விளையாட்டுத் தோழி', 'ஆலமரத்துப் பைங்கிளி', 'அந்தித் தாமரை', 'கால்படி அரிசி ஆத்மா', 'இனிய கதை', 'தாய்வீட்டுச் சீர்', 'திருமதி சிற்றம்பலம்', 'முதல் காளாஞ்சி', வேனில் விழா, 'மகாத்மா காந்திக்கு ஜே', 'அமுதவல்லி', 'நிதர்சனங்கள்' மற்றும் பல.

கட்டுரைத் தொகுதிகள்: 'கல்கி முதல் அகிலன் வரை', 'ஜெயகாந்தன். முதல் சிவசங்கரி வரை', 'புனைபெயரும் முதல் கதையும்', 'நலம் தரும் நாட்டு மருந்துகள்', 'அன்னை தெரேசா', 'கவிஞரைச் சந்தித்தேன்', 'பிரசவ கால ஆலோசனைகள்', 'பேறு காலப் பிரச்சனைகள்', 'உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்', 'உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்', 'உயிரில் கலந்தது', 'தரை தட்டிய கப்பல்', 'தமிழ்நாட்டு காந்தி' மற்றும் பல நூல்கள்.

நாவல்கள்: 'பத்தினித் தெய்வம்', 'மருதாணி நகம்', 'அவள் ஒரு மோகனம்', 'அன்புத் தாய் மேகலை', 'உயிரில் கலந்தது', 'கதாநாயகி', 'பத்தினிப் பெண் வேண்டும்', 'கரை மணலும் காகித ஓடமும்', 'களத்து மேடு', 'கன்னித்தொழுவம்', 'காணி நிலம் வேண்டும்', 'சமுதாயம் ஒரு சைனாபஜார்','தாய் மண்', 'சொல்லித் தெரிவதில்லை', 'அன்னக்கிளி', 'சீதைக்கு ஒருபொன்மான்', 'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன', 'தேவலோகப் பாரிஜாதம்', 'நித்தியமல்லி', 'நிதர்சனங்கள்', 'நீ சிரித்த வேளை', 'பூ மணம்', 'பொன்மணித் தீபம்', 'இலட்சிய பூமி', 'விதியின் நாயகி', 'விதியின் யாமினி', 'வெண்ணிலவு நீ எனக்கு', 'ஜாதி ரோஜா' மற்றும் பல.

குறு நாவல்கள்: 'இங்கே. ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்', 'மழையில் நனையாத மேகங்கள்', 'ஊர்வசி', விளையாட்டுத் தாலி' மற்றும் சில.

சிறார் நாவல்கள்: 'தாயின் மணிக்கொடி', 'அந்த நாய்க்குட்டி எங்கே?', 'இளவரசி வாழ்க', 'மாஸ்டர் உமைபாலன்', 'ஓடி வந்த பையன்', 'சீதைக்கு ஒரு பொன்மான்', 'பாபுஜியின் பாபு', 'பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு' மற்றும் பல.

சிறார் சிறுகதை: 'ஒளி படைத்த கண்ணினாய் வா.. வா..', 'தாஷ்கண்ட் வீடு' மற்றும் சில.

நாடகங்கள்: 'மகுடி', 'இதோ, ஒரு சீதாப்பிராட்டி', 'தெம்மாங்கு தெய்வானை' மற்றும் சில.


கிறிஸ்துவ இலக்கியச் சங்கத்தின் சிறந்த எழுத்தாளருக்கான விருது, லில்லி தேவசிகாமணி விருது ('கடல் முத்து' சிறுகதைத் தொகுப்பு) தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது (இதோ ஒரு சீதாப்பிராட்டி), காஞ்சி காமகோடி பீடத்தின் சிறந்த எழுத்தாளருக்கான விருது, டாக்டர் ஜி. உமாபதி அறக்கட்டளையின் சிறப்பு விருது உள்பட பல்வேறு பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்றிருக்கிறார். கிராமியச் சூழல்கொண்ட, மண்ணின் மணம் மிக்க கதைகளை அதிகம் எழுதியவர். தான் வாழ்ந்த கிராமத்தையும் மனிதர்களையும் அந்த வாழ்க்கையையும் மிகவும் நேசித்து அவற்றைத் தன் சிறுகதைகளில், நாவல்களில் பதிவு செய்திருக்கிறார். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், சிறார்களுக்கும் பெரியோர்களுக்குமான நாவல்கள், கட்டுரைகள், திறனாய்வு நூல்கள், வாழ்க்கை வரலாறு, மருத்துவம் சார்ந்த நூல்கள், நாடகங்கள் நிறைய எழுதியிருக்கிறார். இவரது படைப்புகளுக்காக என்றே சென்னை கன்னிமாரா நூலகத்தில், அலமாரி ஒன்றின் தனிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதிலிருந்தே இவர் எழுதிக் குவித்த நூல்களின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளலாம்.

பூவையின் விதவிதமான படைப்புளை வாசிக்கும்போது, "தனித்த வேகமும் புனைவியற் பாங்கும் கொண்ட அவரது நடையின் மாயக்கவர்ச்சியில் யாரும் மயங்காமல் இருக்க முடியாது. பொருளையும் மறக்கச்செய்து நம்மை அப்பாலுக்கு அப்பால் இழுத்துச் சென்றுவிடுகிறது அவரது மொழிநடை" என்று பாராட்டும் பேராசிரியர் டாக்டர் எழில்முதல்வனின் வார்த்தைகள் மிகையில்லை என்றுதான் தோன்றுகிறது.

பூவை எஸ். ஆறுமுகம் 2003ல் மறைந்தார். இவரது மறைவிற்குப் பின் தமிழக அரசால் இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. பூவையின் புதல்வர் பூவை மணியும் ஓர் எழுத்தாளரே. நாடகங்கள் பலவற்றை எழுதியிருக்கிறார். தந்தையின் நினைவாக 'பூவை பதிப்பகம்' என நடத்தி வருகிறார். வெகுஜன இலக்கியத்திற்கும் தீவிர இலக்கியத்திற்கும் பாலமாகத் திகழ்ந்து, சிறந்த பல படைப்புகளைத் தந்த படைப்பாளியாகப் பூவை எஸ். ஆறுமுகத்தை மதிப்பிடலாம்.

அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline