Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம் | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
- கதிரவன் எழில்மன்னன்|ஆகஸ்டு 2020|
Share:
பாகம்-16g

முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

★★★★★


கேள்வி: (சென்ற இதழ் தொடர்ச்சி) நான் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளேன். என் நண்பன் ஒருவனும் அதே நிறுவனத்தில் இருந்தான். ஆனால் சமீபத்தில் திடீரென வேலையை விட்டுவிட்டு, ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளான். அப்போதிலிருந்து என்னையும் தன்னோடு வந்து நிறுவனனாகச் சேர்ந்துகொள், நிறுவனத்தில் சமபங்கு தருகிறேன் என்று அரிக்கிறான். நான் வேண்டாம் என்றாலும் விட்டபாடில்லை. எனக்கும் இப்போது அவனோடு சேர்ந்து, உழைத்து நிறுவனத்தை வளர்த்துச் சாதிக்கலாம் என ஆர்வம் உண்டாகியுள்ளது. ஆனால் நல்ல வேலையையும் சுளையான சம்பளத்தையும் லேசில் உதறித்தள்ள இயலவில்லை. ஒரே குழப்பம், இருதலைக் கொள்ளி எறும்பு நிலை. நான் என்ன முடிவெடுக்க வேண்டும்?

கதிரவனின் பதில் (தொடர்ச்சி): சென்ற பகுதிகளில், பெருநிறுவனங்களில் வேலை நிலையானது என்று எண்ணி அதனால்மட்டும் ஆரம்பநிலை நிறுவனத்தில் சேராமலிருப்பது சரியாகாது என்றும் பல விதமான காரணங்களால் பெருநிறுவன வேலையை இழக்க நேரலாம் என்றும் விவரித்தோம். அதே சமயம், பெருநிறுவன வேலையிலிருந்து விலகி சிறு நிறுவனங்களுக்கு செல்வதற்கான காரணங்களையும் கண்டோம்.
இப்போது இரண்டு விதமான காரணங்களையும், குறும்பட்டியலிட்டுக் காண்போம். அதன்பின் நீங்கள் எப்படி முடிவெடுக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம்.

பெருநிறுவனத்தில் வேலை நிரந்தரம் என்று எண்ணிவிட முடியாது என்பதற்கான காரணங்கள்:
நிறுவனம் லாபம் குறைந்து தத்தளிக்கக் கூடும்
உங்கள் வணிகக் குழுவை (business unit) அல்லது நிறுவனத்தையேகூட விற்கலாம்
உங்கள் நிறுவனம் அமைப்பு மாற்றம் (reorganization) நடக்கக்கூடும்.
நீங்கள் சார்ந்துள்ள திட்டப்பணி (project) நிறுத்தப்படலாம்
உங்கள் உயரலுவலருடன் கருத்து வேறுபாடு இருக்கலாம்
உயரலுவலர் மாற்றப்பட்டு புதியவருக்கு உங்களைப் பிடிக்காமல் போகலாம் அல்லது தனக்கு முன்பிடித்த குழுவையே தக்கவைத்துக் கொள்ளலாம்
அலுவலக அரசியலால் உங்களை இழித்துப் பேசி நீங்க வைக்கலாம் (இது மிகவும் சாத்தியமே!)
உங்கள் வேலைக்குள்ள எதிர்பார்ப்பின் அளவுக்கு உங்களால் பலன் தர முடியாமல் போகலாம் (இதுவும் சாத்தியமே!)
பெருநிறுவன வேலை நிரந்தரமோ இல்லையோ, பலர் அத்தகைய வேலையை உதறிவிட்டுச் சிறு நிறுவனத்தில் சேர்ந்து கொள்ள உந்தும் காரணப் பட்டியல்:
முதலும் மிக முக்கியமுமான காரணம், தானே சில சகாக்களுடன் ஒரு நிறுவனத்தை உருவாக்கினோம் என்ற சாதனை உணர்வு
நிறுவனம் ஓரளவாவது வெற்றியடைந்தால் அதில் தனக்கான பங்குகளின் மதிப்பால் செல்வம் கிடைக்கும் வாய்ப்பு
பலப்பல வருடங்கள் பெருநிறுவனத்தில் சம்பாதித்த காரணத்தாலும், குடும்பத்தில் நிதித் தேவை சில வருடங்களுக்குப் பின் குறைவதாலும் வேலையிழப்பு பற்றிக் கவலையற்ற நிலை
பெருநிறுவனத்தில் பதவி உயர்வு வாய்ப்புக் குறைந்து பல வருடத் தேக்கநிலை அடைவதால் சிறு நிறுவனத்தின் தலைவராகவோ, உபதலைவராகவோ பதவியடையும் வாய்ப்பு

இந்த இருவிதமான காரணங்களையும் ஆர அமற ஆராய்ந்து பார்த்தால் நீங்கள் சிறு நிறுவனத்துக்கு மாறத் தயாரா என்று தெரியவரும்.

ஆனால் ஒன்று, அப்படி எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு, சரி போய்த்தான் பார்ப்போமே என்ற முடிவுக்கு வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சபாஷ்! நல்ல முடிவுதான். ஆனால் இறுதியாக ஒன்றை நீங்கள் மனத்தில் உறுதியாக இருத்தி யோசித்துப் பார்த்துவிட்டு முடிவு சரிதானா என்று கணித்துக்கொள்வது நல்லது!

என்னடா இது அத்தனை பட்டியலிட்டுவிட்டு இன்னொன்றைக் கணிக்கவேண்டும் என்கிறேனே என்று முணுமுணுக்கிறீர்களா, இது அந்தக் காரணங்களில் சேராது. இது உங்கள் உள்மனம் என்ன சொல்கிறது என்பது.

சிறு நிறுவனங்களின் நிலைமை பெருநிறுவனங்களைப் போல் சாதாரணமாக சமநிலையில் இருப்பதில்லை! சில சமயம் பெருவெற்றிகளால் பரபரப்புடன் உயரத்தில் மிதப்பதுபோல் இருக்கும். சிலசமயம் தோல்விகளைச் சந்திக்க நேரும். விற்பொருள் சந்தைச் சேர்வு (product-market-fit) ஆகும்வரை இரு உணர்வுகளுக்கிடையில் பலமுறை ஊசலாடுவீர்கள்.

மேலும் உங்கள் திட்டத்தைப் பலமுறை மாற்றி முயல வேண்டியிருக்கும். பெருநிறுவனங்களில் அத்தகைய மாற்றங்கள், நிறைய தகவல்களுடன் பெரும் ஆலோசனைக்குப் பிறகே செய்யப்படும். ஆனால் ஆரம்பநிலை நிறுவனத்தில் குறைவான தகவல்களை வைத்து வேகமாக முடிவெடுக்க வேண்டியிருக்கும். சரியான முடிவா என்பதில் மிக அதிக நம்பிக்கை இருக்காது. மனோதிடத்துடன் முயன்று முடிவு சரியாகாவிட்டால், மீண்டும் திட்டத்தை மாற்றி முயற்சிக்க வேண்டும்.

பெருநிறுவனத்தின் பழக்க வழக்கங்களில் ஊறிவிட்ட சிலர் இத்தகைய நிலைகளைத் தாங்கிக்கொள்ள இயலாமல் திரும்பவும் பெருநிறுவனத்தின் பாதுகாப்புக்கே ஒடுகிறார்கள். அல்லது மனநிலை பாதிப்படைகிறார்கள்.

அதனால், உங்கள் உள்மனம் என்ன சொல்கிறது என்பதை நன்கு யோசியுங்கள். எது நேர்ந்தாலும் சமாளித்து வெவ்வேறு வழிகளை முயற்சிக்கும் ஆரம்பநிலை நிறுவன மனப்பாங்கு உள்ளதா? நிறுவனத்தை எப்படியாவது வெற்றியடையச் செய்வேன் என்னும் வெறி (fire in belly) உள்ளதா?

வெறுமனே பங்கு நிதி வாய்ப்புக்கோ, அல்லது பதவி உயர்வு வாய்ப்புக்காகவோ மட்டும் நல்ல வேலையை விட்டுவிட்டு ஆரம்பநிலை நிறுவனத்துக்குத் தாவி விடாதீர்கள். அந்நிறுவனம் மேற்கொண்டுள்ள சவாலை உங்களுடையதாக மனப்பூர்வமாக சுவீகரித்து அதையே உங்கள் முழுவாழ்க்கையாக ஏற்றுக்கொள்ள முடிந்தால் மட்டுமே அத்தகைய மாற்றத்தைச் செயல்படுத்துங்கள்.

அவ்வாறு யோசித்து. திடமாக முடிவெடுத்து ஆரம்பநிலை நிறுவனத்தில் சேர்ந்தபின்னர், முடிவு சரிதானா என்று மீண்டும் மீண்டும் கவலைப்படக் கூடாது. முன்பு கூறியபடி எது வந்தாலும் சந்தித்து, சமாளித்து வெற்றிகொள்ளும் மனோதிடத்துடன் முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்!

அடுத்து வேறொரு ஆரம்பநிலை யுக்தியைக் காண்போம்

(யுக்தி-16 முடிந்தது)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline