Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | பொது
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | அஞ்சலி | விலங்கு உலகம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
விலங்கு உலகம்
சேண்ட்ஹில் கிரேன்கள்
- சற்குணா பாக்கியராஜ்|டிசம்பர் 2019|
Share:
அலாஸ்கா, கனடா, சைபீரியா ஆகிய நாடுகளை உறைவிடமாகக் கொண்ட மணற்குன்றக் கிரேன்கள் (Sandhill cranes - Antigone canadensis), குளிர்காலம் தொடங்கும்போது உணவுக்காகவும் குளிரைத் தவிர்க்கவும் தெற்கு நோக்கி டெக்சஸ், நியூ மெக்ஸிகோ போன்ற மாநிலங்களுக்கும் மெக்ஸிகோ நாட்டுக்கும் ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வலசை போகின்றன.

ஏன் நெப்ராஸ்கா?
குளிர்காலம் முடியும் காலம், வடக்கே இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லும்போது களைப்பைக் குறைக்கவும் நீண்ட பயணத்துக்குத் தேவையான சக்தியைச் சேமித்துக் கொள்ளவும் தேவை ஏற்படுகிறது. போகும் பாதையில் இளைப்பாறச் சாதகமான இடமும் உண்ண உணவும் நீரும் கிடைத்தால் பயணத்தின் சிரமம் குறையும் அல்லவா?

நெப்ராஸ்காவிலுள்ள கீயர்னியில் (Kearney) ஆழமற்ற ப்ளாட்டே நதியும் அதன் மத்தியில் உள்ள மணல் திட்டுகளும் அறுவடை முடிந்த வயல்வெளிகளும் இந்தப் பறவைகளுக்குப் புகலிடம் கொடுக்கின்றன. இரவில் ஆழமற்ற நதியிலுள்ள மணல் திட்டுகளில் இவை அடைகின்றன. ஏனென்றால், இவற்றைத் வேட்டையாட வரும் நரிகள், கயோட்டி (coyote என்னும் ஒருவகை ஓநாய்) போன்றவை நீரில் இறங்கும்போது ஏற்படும் சலசலப்பால் எச்சரிப்படைந்து தப்பித்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது.ஒவ்வொரு வருடமும் மழை, புயல், குளிர், பனி எதுவானாலும் சரி, பிப்ரவரி முதல் ஏப்ரல்வரை ஏறக்குறைய 500,000 முதல் 600,000 சேண்ட்ஹில் கிரேன்கள் தத்தம் இருப்பிடத்துக்குத் திரும்பிச் செல்லும் வலசைப் பாதையில் நெப்ராஸ்கா மாநிலத்தில் தங்கி இளைப்பாறி, உணவுண்டு எடையை அதிகரித்துக்கொண்டு புதுத் தெம்புடன் பயணத்தைத் தொடருகின்றன. உலகத்திலுள்ள சேண்ட்ஹில் கிரேன்களில் 80% இங்கு வருவதால் இவற்றின் வருகை, வட அமெரிக்காவின் மாபெரும் வலசையாகக் கருதப்படுகிறது.

வானில் ஓர் அதிசயம்
கீயர்னியின் ப்ளாட்டே நதி மணல் திட்டுகளில் சேண்ட்ஹில் கிரேன்கள் ஆயிரக்கணக்கில் ஆரவாரத்தோடு வானிலிருந்து மாலையில் இறங்குவதும் பொழுது விடியும் நேரம் பெருங்குரல் கொடுத்துக் கூட்டமாக எழும்பிப் பறப்பதும் பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கும் அற்புதக் காட்சிகளாகும். இவற்றைக் காணவென்றே பறவை ஆர்வலர்களும் ஆராய்ச்சியாளர்களும் உலகத்தின் பல பாகங்களிலிருந்து வருகின்றனர். பொழுதுபுலர்கையில் பறக்கத் தயாராகும் சேண்ட்ஹில் கிரேன்கள், இரவு தங்கிய இடங்களிலிருந்து பறந்து சென்று சுற்றுப்புறத்தில் உள்ள அறுவடை முடிந்த வயல்களில் இரை தேடுவதுடன், பகல்நேரத்தில் ஓய்வெடுத்துக் கொள்கின்றன.

மணற்குன்று கிரேன்கள்
உலகில் கிரேன்களில் மட்டுமே 15 வகைகள் உள்ளன. இவைகளில் ஹூப்பிங் கிரேன், சேண்ட்ஹில் கிரேன் என்ற இரண்டு வகைக் கிரேன்கள் மட்டுமே வட அமெரிக்காவில் காணப்படுகின்றன. சேண்ட்ஹில் கிரேன்கள் காலத்தை வென்றவை. பறவைகளில் மிகப் பழமையானவையான இவற்றை வட அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, சைபீரியா, கியூபா போன்ற நாடுகளில் பார்க்கலாம். கிரேட்டர் சேண்ட்ஹில் கிரேன்கள் (greater sandhill cranes), லெஸர் சேண்ட்ஹில் கிரேன்கள் (lesser sandhill cranes) என்ற இரண்டு இனங்கள் மட்டும் வலசை போகின்றன. சிலவகை சேண்ட்ஹில் கிரேன்கள் கலிபோர்னியா, ஃப்ளோரிடா, மிசிஸிப்பி மாநிலங்களில் நிரந்தரமாக வாழ்கின்றன.கலிஃபோர்னியாவின் லோடை (Lodi) பகுதியில் வாழும் இந்தவகைக் கிரேன்கள், நீர்க் கரையோரமாக நடமாடும் பறவை இனத்தைச் சார்ந்தவை. இவற்றை நன்னீர்ப் புலங்களிலும் சதுப்பு நிலங்களிலும் மெதுவாக ஓடும் நதிக் கரையோரங்களிலும், ஆழமற்ற நீரோடைகள், குளங்கள், குட்டைகள் அருகிலும் வயல்வெளிகளிலும் கூட்டமாகவோ ஜோடியாகவோ காணலாம்.

சேண்ட்ஹில் கிரேன் சுமார் 3 முதல் 4 அடி உயரமும் 7 முதல் 14 பவுண்டு எடையும் கொண்டதாக இருக்கும். தோற்றத்தில் பால் வேறுபாடு தெரியாது. ஆண் பறவை, பெண் பறவையைவிடச் சற்றுப் பெரியது. கழுத்தும் கால்களும் நீண்டு மெலிந்திருக்கும். இறகுகள் இளஞ்சாம்பல் நிறத்திலும் கன்னங்கள் வெண்மையாகவும் வளர்ந்த பறவையின் நெற்றிப்பகுதியில் சிவப்புநிறத் தோல் வளர்ச்சியுடனும் காணப்படும். சில சேண்ட்ஹில் பறவைகள் இறகுகளை இரும்புச்சத்து நிரம்பிய மண்ணைக் கொண்டு கோதுவதால் இவை பழுப்புக் கலந்த சாம்பல் நிறத்தில் காணப்படும். கொக்கு, நாரையிலிருந்து வேறுபட்டது கிரேன் பறவை. கால்களிலுள்ள பின்விரல் குறுகி இருப்பதால் மரக்கிளையைப் பற்றி இதனால் அமரமுடியாது. இனப்பெருக்க காலத்தில் மரங்களில் கூடு கட்டுவதில்லை.

இணை பிரியாதவை
மணற்குன்று கிரேன்கள் இணை பிரியாதவை! ஒருமுறை இணை சேர்ந்துவிட்டால் பிரிவதில்லை. துணைப் பறவை இறந்தால் மாத்திரமே வேறு துணையை நாடும். முன்பு இணைந்த பறவைகள், ஒவ்வோர் ஆண்டும் தங்கள் உறவைப் புதுப்பித்துக் கொள்கின்றன. முழு வளர்ச்சியடைந்த சேண்ட்ஹில் கிரேன்கள் வசந்த காலத்தில், தங்கள் பிறப்பிடத்தில் இணைந்து நீர்க்கரை ஓரமாக நிலத்தில் புல், தழை, குச்சிகளைக் கொண்டு கூடு கட்டி, இரண்டு முட்டைகளை இட்டு அடைகாக்கும். ஆண், பெண் பறவைகள் அடைகாப்பதிலும் குஞ்சுகளை வளர்ப்பதிலும் சமமாகப் பொறுப்பு எடுத்துக் கொள்கின்றன. பொதுவாக ஒரு குஞ்சு மாத்திரமே உயிரோடு எஞ்சும். சேண்ட்ஹில் பறவையின் குஞ்சுகளை colt என்று அழைப்பர்.


குஞ்சு பொரியும்போது அதன் கண்கள் திறந்திருக்கும். பொரிந்த சில மணி நேரத்தில் பெற்றோரின் பின்னே சென்று நீந்தவும் உணவு தேடவும் தொடங்கும். பொரிந்து இரண்டு, மூன்று மாதங்களில் பெற்றோரிடமிருந்து பறக்கவும் நடனமாடவும் கற்கின்றன. குளிர்காலம் ஆரம்பிக்கும்போது ஒன்பது அல்லது பத்து மாதங்களே நிரம்பிய இளம்பறவை பெற்றோருடன் சேர்ந்து கடினமான நீண்ட வலசைப் பயணத்தை மேற்கொள்ளும். முழு வளர்ச்சியடைய இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாகின்றன. முழு வளர்ச்சியடைந்த பின்பு, இளம்பறவைகள் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனித் தொகுதிகளாக வாழ்கின்றன. சேண்ட்ஹில் கிரேன்களின் வாழ்நாள் 20-30 ஆண்டுகள் ஆகும்.

பறவை வரும் பின்னே, எக்காளம் கேட்கும் முன்னே!
சேண்ட்ஹில் கிரேன் ஒரு மைல் தொலைவில் வரும்போதே எக்காளம் ஊதுவது போன்ற அதன் குரலைக் கேட்கலாம். பறக்கும் குரல் (flight call), எச்சரிப்புக் குரல் (guard call), இணைப்பறவைகளின் குரல் (Unison call) என்று இவை எழுப்பும் குரல்கள் பலவகையாகும். அடையும் வேளையில் கூட்டத்தில் குடும்பத்தைத் தவற விட்டால், பெற்றோர் பறவைகளும் இளம்பறவைகளும் அழைப்புக் குரல் கொடுத்து இணைந்து கொள்கினறனசேண்ட்ஹில் கிரேன்களின் நடனம்
கிரேன்களின் நடனம் உலகப் பிரசித்தி பெற்றது. இனப்பெருக்க காலத்தில், இணையைக் கவரவும் முன்பு இணைந்த பறவைகள் தம் உறவைப் புதுப்பித்துக் கொள்ளவும் நடனமாடும். எதிரிகளை எச்சரிக்க, மன அழுத்தம் குறைய, மகிழ்ச்சியை வெளிக்காட்ட என இவற்றின் நடனத்துக்கு வேறு காரணங்களும் இருக்கலாம். இணையைத் தேர்ந்தெடுக்கும் போது, துணைப் பறவையின் முன் நின்று பலவிதக் குரல்கள் எழுப்பிக் குதித்தும் ஓடியும் தாவியும் தலை வணங்கியும் சிறு குச்சிகளைத் தூக்கி எறிந்தும் நடனமாடுகின்றன. கிரேன்கள் துணையைத் தேர்ந்தெடுத்த பின் அல்லது உறவைப் புதுப்பித்துக்கொண்ட பின் இரு பறவைகளும் அருகருகே நின்று குரல் கொடுப்பது Unison call எனப்படும்.

இவை அறுவடை செய்யப்பட்ட நிலத்திலிருந்து தானியங்களையும் (முக்கியமாகச் சோளம்) புழு, பூச்சிகளையும் தின்று கொழுக்கின்றன. இந்தச் சமயத்தில் இளம்பறவைகள் துணைப் பறவைகளைத் தெரிந்தெடுக்கவும் பெற்றோர் பறவைகள் தங்கள் உறவைப் புதுப்பித்துக் கொள்ளவும் செய்கின்றன.

1974ஆம் ஆண்டு நெப்ராஸ்காவின் கீயர்னியில் இந்தப் பறவைகளையும் பிற காட்டுயிர்களையும் பாதுகாக்க Audubon's Rowe Sanctuary உருவாக்கப்பட்டது. ஆடுபான் சங்கத்தினரும் தன்னார்வத் தொண்டர்களும் சேர்ந்து ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இந்தப் பறவைகளின் வருகையைக் கொண்டாடுகின்றனர். இங்கே பறவை ஆர்வலர்கள் மறைவிடத்திலிருந்து பறவைகளைப் பார்த்து மகிழ வசதியும் வழிகாட்டலும் உண்டு.சில சேண்ட்ஹில் கிரேன்கள் கலிஃபோர்னியா, அரிசோனா மாநிலங்களுக்கு அக்டோபர், நவம்பர் மாதங்களில் வலசை சென்று ஃபிப்ரவரி மாதத்தில் இருப்பிடம் திரும்புகின்றன. ஆனால் இவற்றின் எண்ணிக்கை, நெப்ராஸ்காவில் காணப்படுவதைவிடக் குறைவு. மணற்குன்று கிரேன்களும் சூழலில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இவை உணவிற்காக மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன.

2015ம் ஆண்டு மார்ச் மாதம், சேண்ட்ஹில் கிரேன்கள் நெப்ராஸ்காவிற்கு வலசை வரும்போதும், 2019ஆம் ஆண்டு ஜனவரியில் கலிஃபோர்னியாவிலுள்ள லோடை சரணலாயத்தில் காணக் கிடைத்ததையும் மறக்கமுடியாத அனுபவங்களாகக் கருதுகிறேன்.

எழுத்து, படங்கள்: சற்குணா பாக்கியராஜ்,
சான்ட கிளாரா, கலிஃபோர்னியா
Share: 
© Copyright 2020 Tamilonline