Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | கவிதைப் பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | பொது
Tamil Unicode / English Search
நேர்காணல்
கவிஞர் சந்தர் சுப்ரமணியன்
- அரவிந்த் சுவாமிநாதன்|செப்டம்பர் 2019|
Share:
கவிஞர், கட்டுரையாளர், எழுத்தாளர், இதழாளர் எனப் பல திறக்குகளில் செயல்பட்டு வருபவர் சந்தர் சுப்ரமணியன். 'இலக்கிய வேல்' இதழின் ஆசிரியர். 'நினைவு நாரில் கனவுப் பூக்கள்' இவரது முதல் கவிதை நூல். 'அகத்தின் அகவல்', 'பனித்துளிக்குள் ஒரு பயணம்', 'நெஞ்சே அரனை நினை', 'நெஞ்சின் விளிம்பில்', 'புன்னகைப் பூக்கள்' போன்றவை இவரது பிற கவிதை நூல்கள். 'கண்ணதாசன் கவிநயம்' கண்ணதாசன் பாடல்களைப் பற்றிய திறனாய்வு நூல். 'பனித்துளிக்குள் ஒரு பயணம்' நூல், 'கவிதை உறவு' அமைப்பின் 2016ம் ஆண்டுக்கான, இரண்டாவது சிறந்த கவிதை நூல் விருதைப் பெற்றது. தனது இலக்கியப் பணிகளுக்காக சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் வழங்கிய 'இதழியல் செம்மல்' விருது, தாராபாரதி அறக்கட்டளை,திருவள்ளுவர் இலக்கிய மன்றம் இணைந்து வழங்கிய 'கவிஞாயிறு' விருது உள்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். திருக்குறள் வாழ்வியல் நெறிச்சங்கம் நடத்திய கவிதைப்போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும் வெள்ளிப்பதக்கத்தையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பெற்றவர். பொற்றாமரை கலை இலக்கிய இயக்கத்தின் பரிசையும் பெற்றிருக்கிறார். பல மாத/வார இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள பல்வேறு தமிழ் மன்றங்கள் நடத்தும் கவியரங்குகளில் தலைமை தாங்கியும், பங்கேற்றும் வருகிறார். ஃபேஸ்புக்கில் இவர் பகிரும் கவிதைகள் பலரது மனதைக் கவர்ந்தவை. வாருங்கள், கவிஞரோடு இலக்கியப் பாதையில் நடப்போம்...

*****


கே: இலக்கிய ஆர்வம் ஏற்பட்டது எப்போது, எப்படி?
சந்தர்: படிக்கும் ஆர்வம் எனக்கு சிறுவயதிலேயே இருந்தது. என்னால் தூக்கமுடியாத பைண்டு செய்த பெரிய புத்தகங்களைத் தலைமாட்டில் வைத்துக்கொண்டு படுத்தவாறு, வலது பக்கமும் இடது பக்கமும் திரும்பிப் படித்தது நினைவில் உள்ளது. அப்பாவும் புத்தகப்பிரியர். வீட்டில் நூற்றுக்கணக்கான நூல்கள் இருக்கும். சிறுவயதில் அத்தனையும் படிக்க முடியாத போதும், வளர, வளர எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். கல்லூரிக் காலத்தில், தமிழிலக்கியத்தில் பெருத்த ஆர்வம் உண்டாயிற்று. அதுவே எழுதவும் தூண்டியது. கல்லூரி நாட்களில் இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும், பணியின் பொருட்டு வட இந்தியா சென்றதால் எழுதுவது முற்றிலுமாக நின்றுவிட்டது. ஆயினும் படிக்கும் பழக்கம் தொடர்ந்தது. மீண்டும் சென்னை திரும்பியபின், இணையத்தில் நுழைந்து, எழுதும் பழக்கத்தைத் தொடர்ந்தேன்.கே: கவிதைகளின் மீது உங்கள் கவனம் சென்றது ஏன்?
சந்தர்: ஒரு மொழியின் உச்சம் கவிதைதான். சொல்லவருவதைச் சுருக்கமாகவும் நயம்படவும் சொல்வது கவிதை. அதுவே எனது தனிவிருப்பமாகவும் அமைந்துவிட்டது.

கே: அச்சில் வெளியான முதல் கவிதைப் படைப்பு, அதற்குக் கிடைத்த வரவேற்பு...
சந்தர்: எந்தப் படைப்பு முதலில் அச்சில் வந்தது என்பது நினைவில்லை. ஆனால் என் முதல் படைப்பு குறித்த சில நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறேன். ஆறாவதோ, ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தேன். ராஜாஜியின் சக்ரவர்த்தித் திருமகனை வாசித்திருந்தேன். ஏதோ உந்துதலில் இராமாயணத்தைக் கவிதையாக எழுதும் ஆசையில் நாலைந்து கவிதைகள் எழுதினேன். அதில் முதல் கவிதை மட்டும் இன்னமும் நினைவில் உள்ளது.
"மாபெரும் மன்னன் மனுகுல தசரதன்
கோசலம் என்னும் மண்ணினைத் தானே
விண்ணவர்க் காகப் போரினை நடத்தி
உன்னத நிலையின் உயர்வுடன் ஆண்டான்"
என்று வரும்.
அப்போது பாவகை, எதுகை, மோனை எதுவும் தெரியாது. ஆனாலும், இக்கவிதையில் ஆங்காங்கே மோனை பயில்வதையும் இப்பாடலின் அளவு சீராக இருப்பதையும் இப்போது என்னால் அறிந்துகொள்ள முடிகிறது. இதைப் படித்துவிட்டு என்னுடைய சித்தப்பா பாராட்டினார், தொடர்ந்து எழுது என்று கூறினார். ஆனால் அது தொடரவில்லை. என் நினைவில் உள்ள முதல் கவிதை முயற்சி இதுதான்.

கே: சிறுகதைகள், கட்டுரைகள் என நிறைய எழுதியிருக்கிறீர்கள் இருந்தாலும் கவிதைகளே அதிகம் அது ஏன்?
சந்தர்: முன்னரே சொன்னபடி, கவிதையின் சந்தமும், அதன் சுருக்கமான படிமமும் என்னை எப்போதுமே கவரும் அம்சங்கள் என்பதால், இயல்பாகவே என்னுடைய படைப்புகளில் அதிகம் கவிதைகள்தாம். நான் இதுவரை வெளியிட்டுள்ள எட்டு நூல்களில் ஏழு கவிதைத் தொகுப்புகளே. எட்டாவது நூல், கட்டுரைத் தொகுப்பு. அவையும் கண்ணதாசனின் திரையிசை, மரபிசைப் பாடல்களின் நயம் பாராட்டும் கட்டுரைகளே.கே: மரபுக் கவிதைகளும் உங்களால் எழுத முடிகிறது. புதுக்கவிதையும் சளைக்காமல் வருகிறது. 'கவிதை' என்பதை எப்படி நீங்கள் வரையறை செய்கிறீர்கள்?
சந்தர்: கவிதைகளில் மரபு என்றோ, புதுக்கவிதை என்றோ, நாட்டுப்புறக் கவிதை என்றோ நான் வேறுபாடு பார்ப்பதில்லை. அவை வடிவங்களே ஒழிய, கவித்துவம் என்பது வடிவம் தாண்டி, கவிதையினுள் அமைவது. இத்தகைய கவித்துவம் பலரது கட்டுரைகளிலும் பயில்வதை நாம் பார்க்கலாம். லா.ச.ரா.வின் கதைகளில் கவிதைத் தெறிப்புகளைக் காணலாம். வண்ணதாசனின் கதைகள் யாவும் கவிதைகளாகவே அமைந்திருப்பதைக் காணலாம். எனவே, கவிதை என்பதை நான் படைப்பின் உள்ளர்த்தமாகக் காண்பதால் என்னால், மரபிலும், நவீனத்திலும் ஒருசேரப் படைப்புகளை முயல முடிகிறது என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, கவிதை என்பது, காலம் கடந்தும், மொழி கடந்தும், படைப்போனையும் படிப்போனையும் ஒருபுள்ளியில் அமரவைக்கும் பொறி. உணர்வுகளை உரசி, காலம், இடம் மறுத்து, படைத்தோன் சிந்தித்த அந்தக் கணத்திற்கு, படிப்பவனைக் கொண்டுசெல்லும் வாகனமே கவிதை.

கே: மிக அருமையான விளக்கம். குழந்தைகளுக்கான கவிதைகளும் எழுதியிருக்கிறீர்கள் அல்லவா?
சந்தர்: ஆம். 'புன்னகைப்பூக்கள்' என்னும் பெயரில், வெவ்வேறு சந்தங்களில் அமைந்த மழலைப் பாடல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளேன். இந்த முயற்சிக்குக் காரணம், இன்னும் என் நினைவில் இன்னும் மறையாது தங்கும் 'பனைமரமே பனைமரமே' என்ற சிறார் பாடல்தான்..

கே: உங்களைக் கவர்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் யார்?
சந்தர்: கல்லூரி நாட்களிலிருந்தே என்னைக் கவர்ந்தவர் கவிக்கோ திரு அப்துல் ரகுமான். தமிழ்க்கவிதைகளில் அவர் பல்வேறு விதங்களில் புதிய முயற்சிகளுக்கு வித்திட்டுள்ளார். பின்னர் சந்தக் கவிமணி திரு தமிழழகன் அவர்களின் கவிதை நேர்த்தி என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவருடைய கவிதைகள் பொதுவாக இயற்கையைப் பற்றி அமைந்தனவாக இருந்தாலும், கவிதையின் ஒவ்வொரு சந்தமும், அதன் நேர்த்தி, கடைச்சீர்வரை விடாது கொண்டு வரப்பட்டுள்ளதைக் காணலாம். சமூகக் கவிதைகளைப் பொறுத்த மட்டில், தாராபாரதியின் கவிதைகள் என்னை ஈர்த்தன. மரபின் லாவகத்தில் இலந்தை திரு ராமசாமியும், புதுக்கவிதையின் முயக்கத்தில் திரு வண்ணதாசனையும் எனக்குப் பிடிக்கும். உரைநடையைப் பொறுத்தவரையில், ஈர்ப்பு என்னுள் மாறிக் கொண்டேயிருக்கும். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் ஆங்கில நாவலாசிரியர் திரு ஜெஃப்ரி ஆர்ச்சரைச் சொல்லலாம்.கே: 'இலக்கிய வேல்' இதழ் ஆரம்பித்ததன் நோக்கம் என்ன?
சந்தர்: அது தற்செயலாக நடந்த நிகழ்ச்சி. கவியோகி திரு வேதம் அவர்களுடன் ஒருநாள் பத்திரிகைகள் குறித்து உரையாடிக் கொண்டிருந்தபோது, தமிழில் இலக்கியத் தரத்தில் பத்திரிகை இல்லையே என்று பேசிக்கொண்டிருந்தோம். அந்தப் பேச்சு அப்படியே வளர்ந்து ஏன் நாம் தொடங்கக் கூடாது என்று கேள்வியில் நின்றது. பின்னர் திரு வேதமே இதழின் பெயரையும் தொடங்கப்படும் என்ற செய்தியையும் அறிவித்துவிட்டார். எனவே எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, திடீரெனத் தொடங்கப்பட்டதே இலக்கியவேல். இது நடந்து ஆறரை ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன.

கே: பல படைப்பாளிகளுக்குச் சிறந்த களனாக இருந்த 'இலக்கிய வேல்' இதழுக்கு சற்றே இடைவெளி விட்டதன் காரணம் என்ன?
சந்தர்: 'இலக்கியவேல்' இதழை ஆறரை ஆண்டுகளாக இடைவிடாது நடத்தி வந்துள்ளேன். அந்தப்பாதையில் சில நண்பர்களும் சில நிறுவனங்களும் பொருளாதார ரீதியாகப் பெரிதும் உதவிவந்தனர். சந்தாதாரர்களின் எண்ணிக்கையைவிட அதிகமான எண்ணிக்கையில் பலருக்கு நான் இதழின் பிரதியை இலவசமாக அனுப்பிவந்தேன். தமிழகமெங்கும் உள்ள பத்திரிகை விற்பனையாளர்களுக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அனுப்பிவந்தேன். இருந்த போதிலும், தற்போது பொருளாதார உதவி கிடைக்காத நிலையில் இடைவெளிவிட்டுள்ளேன். இலக்கியவேல் மீண்டும் புதுப்பொலிவுடன் வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது.

கே: நீங்கள் எழுதிய நூல்களைக் குறித்துச் சில வார்த்தைகள்...
சந்தர்: முன்னர் குறிப்பிட்டபடி, இதுவரை எட்டு நூல்களை வெளியிட்டுள்ளேன். இந்நூல்களில் 'பனித்துளிக்குள் ஒரு பயணம்' என்ற கவிதைத்தொகுப்பு மூன்று விருதுகளை வென்றது. 'எத்தனை தூரிகை' என்ற நூல் ஒரு விருதை வென்றுள்ளது. அத்தனை நூல்களையும் (ஒன்றைத்தவிர) என் சொந்தச் செலவிலேயே பதிப்பித்துள்ளேன். இலக்கியவேலைப் போலவே இலவசமாக அளித்ததுதான் அதிகம் என்பதையும் குறிப்பிடவேண்டியுள்ளது. இவற்றைத் தவிர இன்னும் நான்கு புத்தகங்கள் வெளியிடும் அளவிற்குப் படைப்புகள் உள்ளன.கே: நீங்கள் வடநாட்டில் எந்தெந்த ஊர்களில், எந்தெந்தத் துறைகளில் பணியாற்றினீர்கள்?
ப: நான் தில்லியிலும் இமாசலத்திலும் பணியாற்றினேன். நடுவண் அரசின் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றியபோது, தில்லி, ஃபரீதாபாத், டல்ஹௌசி ஆகிய நகரங்களில் இருந்துள்ளேன். பின்னர் அரசுப் பணியைத் துறந்து, பல்வேறு தனியார் நிறுவனங்களில் மென்பொருள் மேலாண்மையில், வெவ்வேறு பதவிகளில், தில்லி, சென்னை ஆகிய இடங்களில் பணியாற்றினேன். தற்பொழுது சென்னையில் தரக்கட்டுப்பாட்டைச் செயல்முறைப்படுத்தும் பணியில் உள்ளேன்

கே: உங்கள் குடும்பம் பற்றி, உங்கள் பணிகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் பற்றி...
சந்தர்: நான், என் பெற்றோர், என் மனைவி, என்னுடைய மகள், இதுவே எனது குடும்பம். மற்றபடி இலக்கியவேல் பணியில் கவியோகி திரு வேதம் அவர்கள் இதழ் பிழையில்லாமல் வெளிவர உதவியாக, உறுதுணையாக உள்ளார். இலக்கியவேலின் கட்டமைப்பு, வடிவாக்கம், விநியோகம் இவை யாவற்றையும் நானே செய்கிறேன்.

கே: இலக்கியச் செயல்பாடுகளாக என்னென்ன எதிர்காலத் திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?
சந்தர்: திட்டம் என்று பெரிதாக எதுவும் இல்லை. ஆயினும் இலக்கியத்தில் முழு நேரம் செலவழிக்கத் திட்டமிட்டுள்ளேன். அது எப்போது நிறைவேறும் என்று தெரியவில்லை. அதைத்தவிர, வகைக்கொன்றாக ஒரு படைப்பேனும் - ஒரு நூலேனும் வெளியிடவேண்டும் என்ற ஆவல் உள்ளது.

தென்றல் இதழுக்கு என் நன்றி, தென்றல் வாசகர்களுக்கு என் வணக்கங்கள்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

*****
சிற்றிதழ்கள் ஏன் நலிவடைகின்றன?
சிற்றிதழ்கள் நலிவடையச் சில காரணங்கள் உண்டு.
ஒவ்வொரு சிற்றிதழும், அதன் ஆசிரியரின் சிந்தனைக்கேற்பத் தன்னுடைய தனித்துவத்தை உருவாக்கிக்கொள்கிறது. ஒவ்வொரு சிற்றிதழின் தனித்துவத்தை நேசிக்கும் வகையிலான வாசகர்கள் தமிழகமெங்கும் பரந்து உள்ளார்கள். அத்தகையோரின் கரங்களில் தங்கள் இதழைக் கொண்டுசெல்லும் நிலை இதழாசிரியர்களுக்கு இல்லை. இதழின் தனித்துவம், தரம் இவை ஒரு பக்கம் இருந்தாலும், வணிகப்படுத்துதல் ஒரு தனிக்கலை.

இரண்டாவதாக, பல சிற்றிதழ்கள் அதன் ஆசிரியர்களின் படைப்பை, படைப்புத்திறனை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்தனவாகவே உள்ளன. அத்தகைய இதழ்கள் வாசகர்களைப் பெறுவது இயலாத காரியம். நூறு பக்க இதழில் ஆசிரியரின் படைப்புகளே ஐம்பது பக்கங்களை எடுத்துக்கொண்டால், வாசகனுக்குச் சலிப்புத்தான் தோன்றும்.

மூன்றாவது, ஏதோ பக்கங்களை நிரப்பியாகவேண்டும் என்ற நோக்கில்எதையோ இட்டுப் பதிப்பிக்கும் இதழ்களும் உள்ளன. இவையும் காலப்போக்கில் மக்களால் ஒதுக்கப்படும்.

நான்காவது, சில இசங்களுக்குள் அடங்கிக் கிடக்கும் சிற்றிதழ்கள், சொல்ப ஆதாயத்துக்காகத் தனித்துவத்தைத் தாரை வார்த்துவிடுகின்றன.

சிற்றிதழ்களுக்கு வரவேற்பு இருக்கிறது என்றாலும், வரவேற்கும் வாசகர்களின் கரத்தில் இதழைக் கொண்டுசேர்க்கும் யுக்திகள் மிகக்குறைவாக உள்ளன. பொதுநூலகங்கள் மட்டுமே இப்போது அதற்கான பாதையாக அமைந்துள்ளன. ஆனாலும், அப்பாதை சிற்றிதழ்களுக்கு எளிதாக அமைவது இல்லை.

- சந்தர் சுப்ரமணியன்

*****


இலக்கிய வேல் - கற்றதும், பெற்றதும்
'இலக்கிய வேல்' மூலம் நிறைய இலக்கிய யுக்திகளைக் கற்றேன்; நிறைய இலக்கிய நண்பர்களைப் பெற்றேன். பல பிரபலமான படைப்பாளிகள், என்னை அறியாத நிலையிலும், நான் அணுகியபோது என்னிடம் காட்டிய அன்பு வியக்கவைத்தது. நான் எப்போதும் நேர்காணல்களுக்கு வினாக்களைத் தயாரித்துக் கொண்டுதான் போவேனென்றாலும், பல கேள்விகள் பேசுகையில் எழுந்தவையே. அத்தகைய சில வினாக்கள், சில நேரங்களில் சில பிரபலங்களை எரிச்சல் படுத்தியதுண்டு. என்றாலும், அவற்றையும் மீறி, நான் நேர்காணல் மேற்கொண்ட ஒவ்வொரு படைப்பாளியுடனும் என் உறவு நீடித்து வருகிறது என்பதே உண்மை.

- சந்தர் சுப்ரமணியன்

*****


கிரேஸி மோகன் சொன்னது
அண்மையில் மறைந்த திரு கிரேஸி மோகன் நேர்காணலின்போது, அவரிடம், தொழில்நுட்பங்கள் மலிந்துள்ள இந்தக் காலத்திலும், இரண்டு ஒலிவாங்கிகளைத் தொங்கவிட்டு அதன் மூலமே பேசிக்கொண்டிருக்கும் வகையில் மேடை நாடகங்கள் அமைகின்றனவே, ஏன் மாற்றம் இல்லை என்று கேட்டேன். இன்றைக்கு மேடையின் பின்புலத்தை மின்பிம்பங்களால் அமைக்கும் யுக்திகள் உள்ளனவே, அவற்றை ஏன் பயன்படுத்துவதில்லை என்றும் கேட்டேன். முதலில் அவர் சலிப்புற்றார். ஆனாலும் அவர் கொடுத்த விளக்கம் சரியாகத்தான் இருந்தது. இத்தகைய வசதிகளை, நாடகம் நடத்தும் இடத்துக்கெல்லாம் எடுத்துச் செல்வதும், இயக்குவதும் கடினமான காரியம். எனவேதான் தன்னுடைய நாடகங்களில் சாதாரணமான நிலையிலேயே காட்சிகள் அமைக்கப்படுகின்றன என்றார் அவர்.

- சந்தர் சுப்ரமணியன்

*****


குட்டி அணில் குட்டி (சிறார் கவிதை)

கிளைதாவிக் குதிக்கின்றாய்!
குட்டி அணில் குட்டி! – நீ
தலைகீழேன் நடக்கின்றாய்?
குட்டி அணில் குட்டி!

முதுகின்மேல் மூன்றுவரி!
குட்டி அணில் குட்டி! – நீ
அதைஏனோ சுமக்கின்றாய்?
குட்டி அணில் குட்டி!

அடைமழையில் நனைகின்றாய்!
குட்டி அணில் குட்டி! – உன்
குடைவாலைப் பிடிக்கலையோ?
குட்டி அணில் குட்டி!

தொடவேண்டும் நானுன்னை!
குட்டி அணில் குட்டி! – தொட
விடுவாயோ சொல்லெனக்கு!
குட்டி அணில் குட்டி!

- சந்தர் சுப்ரமணியன்

*****


மழைக்கொலை

நடுநிசி வேளை,
கொக்கரிக்கும் தவளைகள்;

ஏதோ குடும்பத்தகராறு!

பெற்ற மகன் தற்கொலையால்,
ஒரு கிழட்டுத்தவளை
தலை குனிந்து நிற்கிறது;

சுற்றிக் குரல் கொடுத்து,
அக்கிழட்டுத் தவளையின் முகத்தில்
கரும்புள்ளி செம்புள்ளி குத்தி
காறி உமிழும் தவளைகள்!

"மழை வருமென்றதால்
ஒரு சிறுமிக்கு
என் தவளை மகனை
மணம் முடித்தது
மடத்தனம் தான்"
மனசுக்குள் அழும் கிழட்டுத் தவளை!

தூரத்தில், கிராமத்துப்பக்கம்,
அந்தச் சிறுமியின் வீட்டில்,
சாங்கியங்கள் முடித்து,
ஒன்றும் அறியாது
படுத்துறங்கும் சிறுமி!

சுற்றிலும்
தடபுடலாய் விருந்துண்ணும்
ஊர் மக்கள்!

- சந்தர் சுப்ரமணியன்

*****
Share: 


© Copyright 2020 Tamilonline