Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | நூல் அறிமுகம் | குறுநாடகம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம்
- சீதா துரைராஜ்|ஜூலை 2019|
Share:
தமிழ்நாட்டில் சேலம் செல்லும் சாலையில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக அருள் பாலிக்கிறார்.

தலப்பெருமை
கோவில் புராணப் பெருமை உடையதாகும். விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மர், ஆஞ்சநேயர்-லட்சுமி தேவிக்கு முன் தோன்றி தரிசனம் தருகிறார். கோவிலில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் கையில் சாளக்கிராம மாலையுடனும் இடுப்பில் கத்தியுடனும் மேலே கோபுரம் இன்றி வெட்டவெளியில் நின்று காட்சி அளிக்கிறார். ஸ்ரீ சீதா தேவியை இலங்கையில் தேடுவதற்காகக் கடலைக் கடக்கும் முன் ஸ்ரீ ஆஞ்சநேயர் எடுத்த விஸ்வரூபத்தின் சின்னமாக இந்த மூர்த்தி அமைந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ஆஞ்சநேய மூர்த்தி நாமக்கல் ஆஞ்சநேயர் தான்.

ஒரு சமயம் கண்டகி நதியில் (நேபாளம்) ஆஞ்சநேயர் நீராடிய போது ஒரு சாளக்கிராமக் கல் அவருக்குக் கிடைத்தது. விஷ்ணுவின் வடிவமாகப் போற்றப்படும் அந்தக் கல்லை எடுத்துப் பூஜை செய்ய ஆஞ்சநேயர் ஆகாயத்தில் பறந்து வந்து கொண்டிருந்தார். இந்தத் தலத்தில் நீராடுவதற்காக இறங்கியவர், கமல தீர்த்தத்தைக் கண்டார். சாளக்கிராமக் கல்லை கீழே வைக்க முடியாதே என்ன செய்யலாம் என நினைத்தபோது, தீர்த்தக்கரையில் மகாலக்ஷ்மித் தாயார் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். அவளை வணங்கிய ஆஞ்சநேயர், அவள் கையில் சாளக்ராமத்தைக் கொடுத்துவிட்டு, நீராடிவிட்டு, வந்து வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். லக்ஷ்மி தேவியும், "சொன்ன நேரத்திற்குள் வந்து வாங்கிக் கொள்ளாவிடில் சாளக்ராமத்தைத் தரையில் வைத்து விடுவேன்" என்று கூறினார். ஆஞ்சநேயரும் ஒப்புக் கொண்டார். ஆனால், அவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வரமுடியாமல் தாமதமாகிவிட்டது. லக்ஷ்மி தேவி சாளக்ராமத்தைக் கீழே வைத்து விட்டார். நேரம் ஆகித் தாமதமாக வந்த ஆஞ்சநேயர், சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். அது பெரிய மலையாக உருவெடுத்தது. அம்மலையில் நரசிம்மர் தோன்றி தாயாருக்கு அருள் செய்தார். ஆஞ்சநேயரும் இங்கேயே தங்கிவிட்டார். தாயாருக்கு அருள் செய்ததால் நரசிம்மர், "லக்ஷ்மி நரசிம்மர்" என அழைக்கப்பட்டார்.

Click Here Enlargeகோவில் அமைப்பு
கோவில் நுழைவு கோபுரத்துடன் தூண்கள் சூழ்ந்து அமைந்துள்ளது. ஆஞ்சநேயர் சந்நிதி, நேர் எதிரில் வலதுபுறம் நரசிம்மர் சந்நிதி 430 அடி கீழே மலை அடிவாரத்தில் உள்ளது. ஆஞ்சநேயர் சிலை, ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து ஒரே கல்லில் வடிக்கப்பட்ட பழம் பெருமை வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஆஞ்சநேயர் சிலைக்கு மேலே கூரை கிடையாது. குடவரை நரசிம்மர் சிற்பம் கூர்மையான நகங்கள் உடன், அரக்கனை சம்ஹாரம் செய்து அதன் அடையாளமாக உள்ளங்கையில் ரத்தக்கறையுடன் காட்சி தருகிறது. இது ஒரு அதிசயமாகும். அருகில் சனகர், சனாதனர், சூரியன் சந்திரன் பிரம்மா உள்ளனர்.

பிரம்மாவிடம் வரம் பெற்ற ஹிரண்யகசிபு தேவர்களைப் பலவாறாகத் துன்புறுத்தி வந்தான். அவனை மனிதர்கள், தேவர்கள் உள்பட யாரும், தண்ணீரிலோ, பூமியிலோ, காட்டிலோ கொல்ல முடியாத வரம் பெற்றிருந்தான். அவனுடைய மகன் பிரகலாதன், சிறந்த விஷ்ணு பக்தன். ஹிரண்யகசிபு தன் மகன் பிரகலாதன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விஷ்ணு இங்கு இருப்பின் இந்தத் தூணில் இருந்து வருவாரா என வினவ, விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து, சிங்க முகத்துடன் தோன்றி அசுர வதம் செய்தார். குடவரை மூர்த்தி என்பதால் நரசிம்மருக்குத் திருமஞ்சனம் கிடையாது. உற்சவருக்குத் திருமஞ்சனம் நடக்கிறது. சந்நிதியின் பக்கவாட்டுச் சுவர்களில் உள்ள அஷ்டபுஜ நரசிம்மர், வைகுண்டப் பெருமாள், வராக, உலகளந்த பெருமாள் சிற்பங்கள் யாவும் பார்க்க மிகச் சிறப்புடன் உள்ளன.
கோயிலில் தினசரி நான்கு கால பூஜை நடைபெறுகிறது. கோவில் இந்து சமய அறநிலையக் கட்டளை நிர்வாகத்திற்கு உட்பட்டது. பொதுவாக, நரசிம்மரின் மடியில் தாயார் இருந்தால் லக்ஷ்மி நரசிம்மர் என அழைக்கப்படுவார். ஆனால், இங்கு லக்ஷ்மி அவரது மடியில் இல்லாமல் மார்பில் உள்ளார். தாயார் பிரகாரத்தில் வடக்கு நோக்கியிருக்கிறார். தாயாரை வழிபட்டால் கணிதத்தில் புலமை பெறலாம் என்பது நம்பிக்கை. திருமணத்தடை புத்திர பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்கப் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றுகின்றனர். கோவிலில் பங்குனி மாதம்-பங்குனி உத்திரத் திருவிழா வீதிவலம் ஊர்வலத்துடன் சிறப்புற நடைபெறுகிறது. காலை மூலஸ்தானத்தில் உள்ள நரசிம்மர் தாயார் சந்நிதிக்கு எழுந்தருளி சேர்த்தியாகக் காட்சி தருகிறார். விசேஷ அபிஷேகம் நடந்து பின்னர் இருவரும் முன் மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர். அந்த ஒரு நாள் மட்டுமே சுவாமி தாயார் இருவரையும் ஒன்றாகத் தரிசிக்கலாம். மறுநாள் தேர்த் திருவிழா நடைபெறுகிறது.

ஆஞ்சநேயர் சக்தி பெற்று விளங்குவதால், யாத்ரீகர்களை, பக்தர்களைக் கவரும் விதத்தில் இத்தலம் பிரசித்தி அடைந்துவருகிறது. அனுமனை தரிசித்து அருள் பெறுவோமாக!

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline