Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | முன்னோடி | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
மாமா எவ்வழி மருமகன் அவ்வழி!
கிரிஜா...
- பிரீதி வசந்த்|மே 2019|
Share:
கிரிஜா அவள் வயதிற்கு மிகப்பாந்தமாக இருப்பாள். அழுக்குச் சுடிதாரிலும் அவளின் ஆளுமை என்னை மிரளவைக்கும். செய்கிற வேலையில் சற்று அசந்தால், அவளுக்கு வரும் கோபத்தை ரசிக்காமல் விட்டதில்லை நான்.

கிரிஜாவை நான் முதன்முதலில் அவள் 'அலுவலக' இடத்தில் வைத்துதான் சந்தித்தேன். அழுதுகொண்டிருந்தாள். சுற்றிக் கூட்டம். என்ன, ஏது என்று விசாரிக்க முடியாத அளவுக்கு 'சோ..ச்சூ' கொட்டும் வெற்றுக்கூட்டம். கூட்டத்தில் யாரோ ஒரு மீசைக்காரர், "அட போங்கப்பா எல்லாரும். வேலையப் பாருங்க" என்றுஅதட்டவும், மெல்ல நகர்ந்த இடைவெளியில்தான் கிரிஜாவின் அழுதழுது சிவந்த கண்களைக் காண நேர்ந்தது. பேசிக்கொண்டிருந்த பாடாவதி மீட்டிங்கைத் துண்டித்து, தானாகவே அவள்பின் சென்றன என் கைகளும் கால்களும்.

"யாரும்மா நீ?" என்று கேட்டு முடிப்பதற்குள் அவசர கதியில் ஒரு ரயில்வே போலீஸ்காரர் கிரிஜாவை வேறுபக்கம் இழுத்துச் சென்றுவிட்டார். பிறகு அவளை முழுதாக ஒரு வாரம் கழித்துதான் பார்த்தேன். ஆனால் போனமுறை பார்த்ததிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தாள் கிரிஜா. முன்பைவிடத் தெளிவாக, அதே அழகோடு மிக நேர்த்தியாக இருந்தாள்.

கண்முன்னே வேண்டுமென்றே பறந்து நம் கண்களைச் சுற்றவிட்டுப் பின் பறந்துபோகும் பட்டாம்பூச்சியைப் போல அங்குமிங்கும், முன்னும் பின்னும், என்று எங்கள் பெட்டியில் சுற்றிவந்து சில்லாப்பாய் பல வித்தைகளைக் காண்பித்த கிரிஜாவைச் சிரமப்பட்டு வாய்மூடிப் பார்த்தேன்.

கிரிஜா எங்கோ தொலைந்து இங்கே காணக் கிடைக்கப் பெற்ற, தாம்பரம்-பீச் மின்சார ரயில் ஒன்றில் பெயரில்லா பதின்பருவ இளவரசி. சிலசமயம் தனியாக வலம்வருவாள். பல நேரங்களில் தன் சக 'சிப்பாய்களோடு' வலம்வருவாள்.

"பாவம் எந்த ஊரோ? யார் பெத்த பிள்ளையோ? பொம்பளப்பிள்ளை இப்படிப் பிழைக்குதே!" என் எதிரே இருந்து சத்தமாக ஒரு பெரியவர் 'நக்கீரனில்' இருந்து வெளிப்பட்டு உச்சுக் கொட்டினார். இன்னொரு நாற்பது வயதுக்காரரோ கிரிஜாவை அங்கம்வாரியாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்துத் திரும்புவதற்குள் அவள் சட்டென என்னருகே வந்து "அரேய் சாரே" என்று கணீரென்று கூவினாள். அதுவரை அவளை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் இப்போது அடித்துப் போட்டதுபோல் பார்த்தோம்.

அவ்வளவுதான்! லாவகமாகப் பாவாடைக்குள் இருந்து, நான்காக மடித்து சடுதியில் பிரிக்கப்பட்ட ஒரு பெரிய வளையத்தில் தன்னிச்சையாக மாட்டிக்கொண்டு சுற்றிச்சுற்றி ஆடிப்பாடி வந்தாள். அதையே நாங்கள் கண்கொட்டாமல் பார்க்க, இரு கைகளையும் பின்னி பின்னால் கொண்டுபோய் வணக்கம் என்றாள். இப்போது 'நக்கீரர்' வாயில் ஜொள்.

அப்படியே பின்னால் வளைந்து தலையால் சுற்றிவந்து நிமிர்ந்து சலாம்போட்டு இடுப்பிலிருந்த ஒரு அழுக்குக் கைப்பையிலிருந்து ஒரு சுருக்குப்பையை எங்கள் அனைவரிடமும் மிடுக்காய்க் காண்பித்தாள். 'நக்கீரர்' முதலில் பாய்ந்து ஒரு ரூபாய் இட, அவளை அங்கம்வாரியாக நோட்டம் விட்டவரோ வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்.

நானோ இந்த இளம்வித்தைக்காரியின் மாயத்திலிருந்து மீளாமல் அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, நக்கீரப் பெரியவர் அதட்டும் தொனியில், "ஏன் சார், பார்த்துகிட்டேஇருக்கீங்களே. பாவம் ஏதாவது போடக்கூடாதா?" என்றார்.

"அடப் போங்க சார்! இப்போ இவ வருவா. அடுத்த ஸ்டேஷன்ல இவ ஆத்தா, அப்பன் வருவான். எல்லாருக்கும் போட்டுட்டே இருந்தா நாம எங்க போறது! ஏதோ வித்தையா, பாத்தோமா, போனோமான்னு இருந்துடணும். இதுதான் நம்ம பாலிசி!" என்று ஒரே மூச்சில் தன் அகவாழ்வின் தத்துவநெறியை எடுத்து விளக்கினார், இவ்வளவு நேரம் அவளைக் கண்கொட்டாமல் சகட்டுமேனிக்குப் பார்த்துத் தீர்த்த நல்லவர்.

இதெல்லாம் கிரிஜா காதில் ஏன் விழப்போகிறது! அவள் எங்களைக் கடந்துபோய் இதே வித்தையைச் சற்றும் களைப்பில்லாமல் அடுத்த இருக்கையில் காட்டத் துவங்கியிருந்தாள்.

கிரிஜாவின் வேலைநேரமும் என் அலுவலகப் பிரயாண நேரமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். தினம் நான் ஏறும் பெட்டியிலோ, அதில் ஏறும்போது இறங்கும்போதோ, என்னைக் கடந்து செல்லும்போதோ என அவளை எப்படியாவது ஒவ்வொரு நாளும் பார்த்துவிடுவேன். இத்தனைக்கும் நான் அவளோடு நேரிடையாகப் பேசியதே இல்லை. அவளுக்குத் தமிழ் தெரியாது. எனக்கு அவளது மொழியின் பெயரே தெரியாது. அதனால் இன்னும் இலக்கணத்தில் பெயரிடப்படாத ஒரு ஈடுபாட்டோடு அவளைத் தங்குதடையின்றி நுட்பமாகப் 'பார்வையிடத்' தொடங்கி இருந்தேன். அவளை எத்தனை முறை பார்த்தாலும் ஒரு ரூபாய்கூட நான் தர்மமிட்டதில்லை. ஏனோ அவளுக்குப் பணம்போட நெருடலாக இருந்தது. அதனால் அரும்பாடு பட்டு அவளது அண்மையைத் தவிர்த்துவிடுவேன்.

இப்படித்தான் சில மாதம் முன் திடீரென்று கண்முன்னே தோன்றி "சாரே" என்றாள். ஒரு நிமிடம் நானும் அவளும் நேருக்குநேர் சந்தித்துக் கொள்கிறோம். அவள் கண்களின் காருண்யம் நொடிக்கு நொடி இறங்கி, அறுபதாவது நொடியில் என்னைப்பற்றிய ஏளனமாக மாறி, படாரென்று விலகிச் சென்றாள். அன்று அவளைப் பின்தொடர்ந்து இரு சிப்பாய்கள் வேறு. அவர்களிடம் கிரிஜா என்ன சொன்னாளோ தெரியவில்லை! இரு சிப்பாய்களில் ஒருவன், என் காதருகே வந்து கடிப்பதுபோல் பாவனை பண்ணிவிட்டுத் தன் ஒட்டுப்போட்ட பின்புறத்தைக் காண்பித்து நக்கலடித்து விட்டு ஓடிவிட்டான். அப்போது நான் நெளிந்தாலும், இப்போது இதை எழுதும்போது சிரிப்பாகத்தான் இருக்கிறது. கிரிஜா என்னை மிகமட்டமாக நினைத்திருக்கக்கூடும்.எனினும் அவளுக்குக் காசிட என் மனம் உடன்பட மறுத்ததால் அலட்டிக்கொள்ளாமல் அவளை, அவளின் வருகையை, ரசித்துக் கொண்டிருந்தேன்

ஒரு பத்துப் பதினைந்து நாள் கழித்து அவளைப் பார்க்க நேர்ந்தது. முன்பைப்போல அவ்வளவு சூட்டிகை இல்லாமல், என்னவோ போட்டு இம்சிப்பது போல ஒருவித கலவரத்தோடு சுற்றிக்கொண்டிருந்தாள். பிறகுதான் கூர்ந்து கவனித்தேன். இதுவரை அவளின் கிழிந்த சுடிதார் மறைக்காத இடங்களை இழுத்துச் சொருகிப் பிடித்துக்கொண்டிருந்த ஒரே ஒரு ஊக்கும் வாய்பிளக்க எத்தனித்திருந்தது. இதுவரை நான் ரகசியமாக ரசித்துவந்த பதின்பருவச் சிறுமி இளம்பருவப்பெண் ஆகியிருக்கிறாள் என எனக்கு உரைத்ததும் சில திகிலான சிந்தனைகள் என் ஆழ்மனதை உலுக்கின.

இந்தப் பெருமாற்றத்தை இப்பெண் எவ்வாறு எதிர்கொள்கிறாள்? இவள் அருகில் யார் இருக்கிறார்கள்? ஆத்திரம் அவசரத்திற்கு இவள் யாரை நாடுவாள்? எப்படிக் காத்துக் கொள்வாள்? இவளைச் சுற்றி விமர்சிக்க ஆண்கள் இருப்பார்கள். ஆனால் விவரிக்கத் தோழிகள் உண்டா? மொத்தத்தில் இவள் யார்? இவளுடைய இடத்தில் என் மகளை வைத்து என்னால் நினைத்து... நினைக்கக்கூட முடியவில்லை. 'பேஸ்புக்'கில் வருகிற ஆயிரம் மீட்டெடுப்புச் சம்பவங்களுக்கும் விழிப்புணர்வுச் செய்திகளுக்கும் பதிலுக்குப்பதில் பத்தி எழுதிப் பரப்பும் மனது நிதர்சனத்தில் இப்படி மடிந்துபோக இருந்தது! ச... என்ன ஒரு விகார மனது!

"சார், கொஞ்சம் தள்ளுங்க"

"..."

"சார்" என்ற அதிகாரக் குரலில் என் சிந்தனையில் இருந்து மீண்டு குரல்வந்த திசை நோக்கினேன்.

"என்ன?"
"கொஞ்சம் தள்ளுங்க சார். உங்களதான்!"

நான் பரவலாக உட்காந்திருந்த இடத்தில் கொஞ்சம் மிச்சம் பிடித்து நகர்ந்துகொள்ள என் அருகில் அமர்ந்துகொண்டான் அவன். மடிக்கணினி, அலைபேசி, காதில் செருகிய இசைகேட்பான் என நவீனயுகத்தின் கவசகுண்டலங்கள் எதுவும் அணிந்திராத அதிசய இளைஞன் அவன். வெளியூர் வாசனை, சிநேகமான முகம், எப்போதோ குடித்து நிறுத்திய சிகரெட் பழக்கத்தின் கருத்த உதடுகள், கைப்பை, புத்தகம், சாப்பாட்டுக் கூடை எனப் பிரயாண இத்யாதிகள் எதுவுமில்லாத சீக்கிரத்தில் கண்டுகொள்ளப்படாத எங்கேயோ ஏறி எங்கேயோ இறங்கும் ஜனக்கூட்டத்தில் கலந்து காணாமல் போகும் அசாதாரண இளைஞன். வெகு சீக்கிரமே எங்களின் தினசரிப் பயணத்தில் சந்திக்கும் பெயர்தெரியாத, பரிச்சயமான முகவரிசையில் அவனும் இணைந்துகொண்டான். அவ்வளவு சீக்கிரத்தில் யாரிடமும் பேச்சுக் கொடுக்கமாட்டான். இத்தனை விஷயத்தில் மாறுபட்டு இருந்தாலும் அவன் ஒரு விஷயத்தில் எங்களைமாதிரி இருந்தான். அது - கிரிஜாவை ரசிப்பது!

முதல்முறை அவள் வித்தையைப் பார்த்தபோது என்னைப்போலவே கண்கொட்டாமல் பார்த்தான். என்னைப்போலவே காசிடாமல் நகர்ந்தும் கொண்டான். ஒவ்வொரு முறையும் அவளை மானசீகமாக எதிர்பார்க்க ஆரம்பித்தான். தினமும் அவள் வருகையை எதிர்பார்ப்பது போல அவன் கண்கள் தேடி அலைபாய்ந்ததைக் கவனித்தேன். திடீரென்று ஒருநாள் வித்தை முடிந்ததும் அவளுக்குக் காசிடுவதுபோல அவளின் மிருதுவான கைகளை என் கண்ணெதிரே ஸ்பரிசிக்கத் தொடங்கினான். என்ன ஒரு திமிர்... சுரீர் என்று ஏதோ சொல்லப்போகிறாள் என் கிரிஜா என்று நினைத்து அவளைப் பார்த்தால், வெட்கத்தில் நெளிந்தபடி ஓரிரு நொடிகளில் லாவகமாக ஆனால் மிருதுவாக, கைகளை விலக்கிக்கொண்டாள்!

அதுமுதல் இவன் அவளை யாருக்கும் தெரியாதென்று நினைத்துக் கண்ணால் ஜாடை பேசுவதும் அவள் கூச்சத்தில் நெளிவதும், திரும்பக் கண்மொழி பேசுவதும் தொடர்ந்தது.

நாளடைவில் கிரிஜா எங்கள் கம்பார்ட்மெண்டில் ஏறியதும் அவன் இருக்கிறானா என்பதை முதலில் நோட்டமிட்டுக் கொண்டு, அவன் இருந்தால் மிகப்பாங்காக அவனருகில் உட்காரத் தொடங்கினாள். இது எங்களுக்குள் தற்காலிக சலசலப்பை உண்டாக்குவதை உணர்ந்த அவள், ஒரு ஓரமாகக் கம்பியின் கடைசியில் நிற்க, இவன் அவளருகே நின்றுகொள்ள இருவரும் கைகோத்துப் பேசலாயினர்.

"என்ன கண்றாவிங்க இது?" நக்கீரர்.

"என்ன எழவோ! எது எதோட சேருதோ! ஒண்ணும் புரியல!" என்று அருகில் இருந்தவர் சொல்ல இன்னொருவர், "ஆட்டத்த நிப்பாடிட்டா பாத்தீங்களா?" என்றார்.

"ம்ம்... அந்தப் பொடியனுங்கள வேற காணோம். இவள எங்க காண்றது. ஆமா இந்தப் பய எங்க இறங்குறான்?" என்றதும் எல்லாரும் ஒருசேர என்னைப் பார்த்தார்கள்.

"எனக்குத் தெரியாதுங்க. நீங்க இறங்குன அடுத்த ஸ்டேஷன்ல நானும் இறங்கிடுவேன்" என்றதும் சப்பென்று ஆகிவிட்டது அவர்களுக்கு.

"சார் ரொம்பப் 'பார்த்தார்'. ஒண்ணும் வேலைக்கு ஆகல. நேத்தைக்கு வந்தவன் எப்படி ஜரூரா இருக்கான் பாத்தீங்களா?" என்று என்னைக் கண்ணடித்து நாற்பது வயதுக்காரர் சொல்ல, கமுக்கமான சிரிப்பலை பரவியது.

நான், "சார் என்ன பேசறீங்க? அந்த மாதிரி எல்லாம் இல்லை!" என்றதும் "ஹீ ஹீ.. சரிசரி.." என்று அவரவர் வேலையில் முழுகிப் போயினர் அனைவரும். எனக்கு என்னமோபோல் ஆகிவிட்டது! 'ச.. இனிமேல் இந்தப் பெட்டியில் ஏறவே கூடாது' என ஒருமனதாக முடிவெடுத்தேன். ஆனால் என் கிரிஜா.. கிரிஜாவைப் பார்க்காமல் எப்படி இருப்பது? இப்போது அவள் என்ன செய்கிறாள்? பார்த்தேன்... பார்த்ததும் அதிர்ந்து போனேன்.

தங்களை யாருமே கவனிக்கவில்லை என்கிற எண்ணத்தில், காற்றுப்புகா இடைவெளியில் கன்னாபின்னாவென்று அலைந்த அவளின் கூந்தல் மறைவில் காதல் செய்துகொண்டிருந்தனர் இருவரும்! மனம் கனத்துப்போய் குனிந்துகொண்டாலும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 'பளார்' என்றுஅவனைஅறைந்தால்? 'யார் சார் நீங்க?' என அவன் கேட்டுவிட்டால்? கேட்கட்டுமே. அறை வாங்கிய பின்தானே கேட்பான்? சுரீர் என்று உறைக்கட்டும். இப்படி அபலைப் பெண்களை ஆசை காட்டுவதை... 'அபலையா? மண்ணாங்கட்டி! நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்' என அவள் பாஷையில் கிரிஜா கூறினால்?

பல்வேறு காட்டமான சிந்தனைகளில் சிக்கிய மனது, அழுத்தம் தாங்காமல் வருகிற ஸ்டேஷனில் இறங்கிவிடலாமென எழுந்து கம்பியோரம் நின்றுகொண்டேன். கிரிஜா என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. எப்படிக் கண்டுகொள்வாள்? அவள் பார்வையில் நான் ஒரு மகா கஞ்சன், தேகம் நோக்குபவன், ஒரு சராசரி ஆண்! ச...! இவன் மட்டும் என்னை சிநேகமாகப் பார்த்தான்! ஆச்சரியமாக பதில்பார்வை பார்த்துவிட்டு வந்த இடத்தில் இறங்கிக்கொண்டேன் நான்.

கொஞ்ச நாளைக்கு அவளைப் பார்க்கவில்லை. பழைய கம்பார்ட்மென்டிலும் ஏறவில்லை. ஓரிரு மாதம் கழித்து என்னை அவ்வபோது அசௌரியமாக அரிக்கும் மனதின் லஜ்ஜையைப் போக்கப் பழைய இடத்தில் போய் அமர்ந்தேன். சண்டையிட்டு மீண்டும் திரும்பிய பங்காளியைப்போல நலம் விசாரிப்புகள் என்னை என்னவோ செய்ய, சற்றுநேரம் அவர்களோடு தினசரியில் என்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு இடைவெளிவிட்டு அவர்கள் இருவரையும் தேட ஆரம்பித்தேன். நான்கைந்து ஸ்டேஷன் வரையில் யாரையும் காணவில்லை!

அவனை, அவளை, அவளின் ஊர்க்காரர்களை... யாரையுமே காணவில்லை.

"சார்?"

"..."

"யாரத் தேடுறீங்க? அந்தப் பொண்ணையா?" என்றதும் கிளுக்கெனச் சிரித்தார் என் அருகில் இருந்தவர். நான் கோவமாகப் பார்த்ததும், "ஹி ஹி.. அவங்க ரெண்டு பேரையும் ரொம்பநாளா காணும் சார்."

"ரெண்டுபேரும் கல்யாணம் கில்யாணம் பண்ணியிருப்பாங்களோ!" என்றார் நக்கீரப் பெரியவர்.

"என்ன கிரகமோ!" என்று பொத்தாம் பொதுவாக உச்சுக் கொட்டியபின் யாரும் எதுவும் அதைப்பற்றி பேசாததால், அரைநொடி அமைதிக்குப் பின் அன்னியோன்மாக அரசியல் பேச ஆரம்பித்தனர். நான்மட்டும் அவளைத் தேடிக்கொண்டுதான் இருந்தேன்!

ஆறேழு மாதம் கடந்தது. கிரிஜாவையும் அவனையும் நான் கொஞ்சம் கொஞ்சமாக மறந்திருந்த சமயம். ஒருநாள் காலை அவசரகதியில் அடித்துப்பிடித்து முன்னால் இருக்கும் கம்பார்ட்மென்டில் ஏறி ஹப்பாடா என்று மூச்சு வாங்கினேன். அவ்வளவு கூட்டம்! கம்பியின் ஓரம் நின்றுகொண்டிருந்த நான் எங்கேயாவது இடம் கிடைக்குமா எனச் சுற்றிமுற்றிப் பார்த்து என் நேரெதிரே ஒரு பெரிய வட்ட இடைவெளி தென்பட்டது.

"என்ன சார் இது அவ்வளவு இடம் காலியா இருக்கு? கொஞ்சம் நகருங்க!" என்றேன் உரத்த குரலில்.

"காலியாவா? வந்து பாருங்க எசமான்!" என்று ஒரு இளைஞன் நக்கலடிக்க சிரிப்பலையில் மிதந்துபோய் அந்த இடைவெளியில் கலந்தேன். முன் நின்று கொண்டிருந்தவர்களை விலக்கிப் பார்த்தால் கம்பியின் அந்த ஓரம் ஒரு பச்சிளங் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அருகே தாய் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

"பாத்தீங்களா சார். ஏசி எஃபக்டுல தூங்குறா பாருங்க. எவ்வளவு சத்தம் போட்டும்... ஊஹூம், நகர மாட்டேங்கிறா. ஆர்.பி.எஃப். வந்தாதான் இருக்கு இவளுக்காக!" என்று ஒருவர் சொல்ல எனக்கு இடம் கிடைக்காத கோபத்தில், "ஏய்!" என்று அந்தப் பெண்ணை நோக்கிப் பெருங்குரல் கொடுத்தேன்.

சற்றும் அதிராமல், தலைநிமிர்த்தி ஒருகணம் என்னை எதிர்நோக்கிப் பார்த்து, புடவையைச் சரிசெய்துகொண்டு, பின் தன் குழந்தையைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு மீண்டும் சலனமில்லாமல் தூக்கத்திற்குப் போனாள்... அந்த அம்மா!

என் கிரிஜாவா அது!

பிரீதி வசந்த்,
லிட்டில் எல்ம், டெக்சஸ்
More

மாமா எவ்வழி மருமகன் அவ்வழி!
Share: 
© Copyright 2020 Tamilonline