| 
											
											
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
	  | 
											
												ஓவியம், சிற்பம் இரண்டுமே நுண்கலைகள். இரண்டுக்குமே கூரிய கவனம் வேண்டும். சற்றுப் பிசகினாலும் படைப்பு குலைந்துவிடும். பெண்கள் ஓவியத் துறையில் வெற்றிகரமாக இயங்கி வந்தாலும், சிற்பக் கலையில் ஈடுபடுபவர்கள் மிக அரிது. ஆனால், "பெண்களின் வேலையே எப்போதும் கவனமாக இருப்பதும், செயல்படுவதும்தான். அப்படியிருக்க ஓவியம், சிற்பத்தின் நுட்பம் எங்களுக்குப் பிடிபடாதா என்ன" என்கிறார் ஓவியர் மற்றும் சிற்பியான ரீட்டா குலோத்துங்கன்.
  விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்த இவருக்குச் சிறுவயது முதலே ஓவிய ஆர்வம் உண்டு. பள்ளிப் பருவத்தில் அது அதிகமானது. ஓவியம், சாக்பீஸில் உருவங்கள் என்று ஆரம்பித்தவருக்கு, மேற்கல்வியை முடித்ததும் திருமணமானது. கணவர் குலோத்துங்கன் ஊக்குவிக்கவே தஞ்சாவூர் ஓவியம், நீர்வண்ணம், தைலவண்ணம் தீட்டுதல், செயற்கை நகைகள் தயாரிப்பது, உலோகக் கைவினைகள், அலுமினியத் தகட்டில் ஓவியம் எனக் கிட்டத்தட்ட 15 வகையான கைவினைக் கலைகளைக் கற்றார். புது மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டு படைக்க ஆரம்பித்தார். ஆதரவு வளர்ந்தது, வளர்த்தது. தமிழக அரசின் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் (பூம்புகார்) சார்பில் நடக்கும் மாவட்ட விருதுக்கான போட்டியில் பங்கேற்றார். பரிசுகள் குவிந்தன. | 
											
											
												| 
 | 
											
											
	  | 
											
												பிளாஸ்டிக் பாட்டில்களால் சிற்பம், மணல் சிற்பம், செம்பில் விநாயகர் சிற்பம் என இவர் ஓவிய, சிற்ப வேலைகளில் ஈடுபடுகிறார். ஓவியம், சிற்பம் மட்டுமல்ல; இலக்கியம், இதழியல், யோகம், ஹிந்தி ஆகிவற்றிலும் தகுதிகள் பெற்றுள்ளார். செப்புத்தகட்டில் சிற்பம் வடிப்பது இவரது சிறப்புத் திறன். ஒரு சிற்பத்தை உருவாக்க ஆறேழு மாதங்கள் ஆகுமாம். விநாயகர் சதுர்த்தியின் போது இவர் வடிக்கும் விநாயகர் சிற்பத்திற்கு நல்ல வரவேற்பு. கடந்த ஆண்டு புல்லாங்குழல் வடிவிலான விநாயகரை கொலிக் வோர்க் என்னும் பிளாஸ்டிக் தாள் கொண்டு சமைத்திருந்தார்.
  இவருக்குக் கலை பண்பாட்டுக் கழகம், விழுப்புரம் ரோட்டரி சங்கம், பாவேந்தர் பேரவை ஆகியவை விருதளித்துள்ளன. இவற்றின் மகுடமாகத் தமிழக அரசின் 'கலைசுடர்மணி விருது' வந்தது. தமிழக அரசின் 'தலைசிறந்த கைவினைஞர்' விருதும் பெற்றிருக்கிறார். கட்டணமின்றியே ஆர்வலர்களுக்கு இயற்கை ஓவியம், பழைய காகிதங்களைக் கொண்டு கூடை தயாரித்தல், காகிதப் பூக்கள், மூலிகைத் தைலம், மெஹந்தி போடுதல், பாக்கு மட்டையில் ஓவியம், நவதானியங்களில் அலங்காரத் தட்டு, அரச இலையில் வாழ்த்துமடல் போன்ற பயிற்சிகளைக் கற்பிக்கிறார். கணவரது பெயரில் 'ஆர்.கே. சோழன் ஆர்ட் அகாடமி' என்ற ஓவியப் பயிற்சி நிலையத்தை நடத்தி வருவதுடன், பள்ளி மாணவர்களிடம் ஓவிய ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஓவியப் போட்டிகளை நடத்தி வருகிறார்.
  ஸ்ரீவித்யா ரமணன் | 
											
											
												 | 
											
											
											
												 | 
											
											
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |