Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | எங்கள் வீட்டில் | அஞ்சலி | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
கதவு தட்டப்பட்டது
மெகா மில்லியன்
- முத்து தங்கம்|நவம்பர் 2018|
Share:
கலிஃபோர்னியாவின் மேற்குக் கடற்கைரையை ஒட்டிய அழகிய ஆனால் ஆபத்தான 101 சாலையில் ரவி தனக்குப் பிடித்த சுபரு ஃபாரஸ்டரை (Subaru Forester) ஓட்டியபடியே, அருகில் இருந்த அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தான். அப்பா ராமசாமி அமெரிக்கா வந்தபின் பெயரை ராம் என்று சுருக்கிக்கொண்டார். வழியில் இருவரும் உலகப் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பேரா. செல்வராஜ் அவர்களின் ஆய்வுக்கூடத்திற்குச் சென்று வந்தனர். அவர் நியூ ஜெர்சி நண்பர் ராஜாவின் அண்ணா. சென்னையில் இருந்த நண்பர் ராஜாவின் மூலம் பழக்கம். பேரா. செல்வராஜ் தமிழகத்தின் குக்கிராமத்தில் பிறந்து மாட்டுவண்டியில் சென்று படித்து உலகின் கனவுக் கல்வி நிறுவனமான ஹார்வர்டு பல்கலைக்கு வந்தவர். ஹார்வர்டில் இருந்தபோது அவர் புற்றுநோயைத் தடுக்கும் T-செல்கள் பற்றிய ஆய்வுகளை உலகின் முதல்தர அறிவியல் ஏடுகளான Nature, Science ஆகியவற்றில் பிரசுரித்திருந்தார். அட்லாண்டா எமரி பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய பின் ஸ்டான்ஃபோர்டுக்கு வந்துள்ளார். அவருடைய காப்புரிமையின் அடிப்படையில் ஆரம்பிக்கப்படட நிறுவனம் நோய்த்தடுப்புச் சிகிச்சை (immuno therapy) மூலம் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிப் பாதையில் இருப்பது தெரியவந்தது. அதனை மக்களுக்குக் கொண்டுசெல்ல நிறையச் செலவாகும் என்பது தெரிந்தது. அந்த நல்ல உரையாடல் இன்னமும் ராமுவின் மனதுள்.

இரவுக்குள் ஒரிகனில் உள்ள மெட்றாஸ் நகருக்குச் செல்ல வேண்டும். அடுத்த நாள் முழுக் கிரகணம். மெட்றாஸில் ஓரிரு நிமிடங்களுக்கு முழுக் கிரகணம் நன்றாகத் தெரியும். "மெட்றாஸ் நல்ல மெட்றாஸ்" என்று மனது பாடியது. எளிமையான நல்ல மனிதர்கள், மெரினா, பல்லவனில் டிக்கெட் வாங்கும் வித்தியாசமான முறை என்று சம்பந்தமில்லாமல் சென்னைபற்றி ஏதேதோ நினைவுக்கு வந்தது.

சென்று கொண்டிருக்கும்போது மெகா மில்லியன் லாட்டரி விளம்பரம் 500 மில்லியனைத் தாண்டியதாகச் சொன்னது. அமெரிக்காவில் 'மெகா மில்லியன்', 'பவர் பால்' இரண்டு லாட்டரிகளும் தேசிய அளவிலானவை. வாரம் இருமுறை குலுக்கல் இருக்கும். எந்த எண்ணும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் அடுத்த வாரம், அதிகப் பணப் பரிசிலோடு தொடரும். அப்படித் தொடரும் ஒவ்வொரு வாரமும் முதல்பரிசின் அளவு நூறிலிருந்து இருநூறு மில்லியன் வரை சாதாரணமாக அதிகரிக்கும். ஓரிரு முறை 500 மில்லியனையும் தாண்டிவிடும். விளம்பரப் பலகையைப் பார்த்ததும், ராம் கூறினார், "ரவி வண்டிக்கு கேஸ் போடும்போது உன் கையால் இரண்டு மெகா மில்லியன் லாட்டரி வாங்கித் தாப்பா. உன் ராசியைப் பார்க்கலாம்".

"அப்பா, நான் லாட்டரி பற்றி நிறையப் படிச்சிருக்கேன். சிலருக்கு லாட்டரிப் பைத்தியம். வென்றவர்களில் நூத்துக்கு 90 பேர் இருந்த எல்லாப் பணத்தையும், நிம்மதியையும் இழந்து, குடும்பத்தையும் இழந்திருக்கிறார்கள். வேண்டாம்ப்பா" என்றான்.

ரவி சொல்வதிலும் நியாயம் இருப்பதை ராம் உணர்ந்தார். அதே சமயம் இந்த வயதில் எவ்வளவு முதிர்ச்சியான ஆழ்ந்த சிந்தனை என்றும் உள்ளுக்குள் பெருமை கொண்டார். "ராம், நீ சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஏன் நாம் வெற்றி பெறும் அந்தப் பத்து சதவிகிதமாக இருக்கமுடியாது? அதைப் பாதுகாக்க என்னிடம் வழி இருக்கிறது. அதே சமயம் உனக்குத் தெரியும், நான் எப்போதாவது தான் வாங்குவேன். இரண்டு காரணங்கள். ஒன்று, அப்படி நமக்கு முதல்பரிசு கிடைத்தால், நம் ஊரின் சேவைக்கு உதவலாம்.

கிராமங்களுக்கு மருத்துவ வசதிகள், CPR, AED பயிற்சி மற்றும் உபகரணங்கள் தரலாம். குளங்கள் தூர் வாரலாம். இப்படி எத்தனையோ திட்டங்கள். இரண்டாவதாக, நமக்குக் கிடைக்கவில்லை என்றால் லாட்டரியின் பெரும்பங்கு வரியாக இங்குள்ள மக்களுக்கு உதவும்" என்றார்.

ராமின் நீண்ட விளக்கம் ரவிக்கு ஆச்சரியத்தையம், சிறிது சந்தேகத்தையும் தந்தது. "சரி ஆகட்டும் பார்க்கலாம்" என்று காமராஜர் போலச் சொன்னான்.

பேசிக்கொண்டும், பாட்டு, நகைச்சுவை கேட்டுக் கொண்டும் பயணம் தொடர்ந்தது. வயிற்றில் பசியும், வண்டியின் எரிபொருள் பசியும் ஒன்றாகச் சேர்ந்ததால் வழியில் ஒரு எரிபொருள், உணவகம் சேர்ந்த இடத்தில் நிறுத்தினார்கள். ராம் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருக்க ரவி கழிவறைக்கு சென்றான். முடித்ததும், "ரவி, சாப்பிட ஆர்டர் பண்ணப்பா. நான் கழிவறை போய்ட்டு வந்தர்றேன்" என்று சென்றார். இருவரும் சாப்பிட்டு முடித்து இப்போது ராம் வண்டியை ஓட்ட ஆரம்பித்தார்.

சாப்பிட ரவி ஆர்டர் செய்யும்போது அப்பாவின் விருப்பத்துக்காக நான்கு லாட்டரிகள் (குடும்பத்தில் தலைக்கு ஒன்றாக) வாங்கியதை அப்பாவிடம் சொல்லவில்லை.

எல்லோரும் இவர்களைப் போலவே கிரகணம் பார்த்து ஊருக்கு ஒரே நேரத்தில் திரும்பவே, சாலையில் போக்குவரத்து நத்தைபோல ஊர்ந்தது. இப்போது ரவி வண்டியை ஓட்டினான். வாஸ் (Waze வழி காட்டி) மாற்று வழிகளைக் காட்டியது. வழியில் அழகான கிராமத்துச் சாலை, திராட்சைத் தோட்டங்கள், கம்பீரமான குதிரைகள் என்று ஒவ்வொன்றும் கவிதை சொன்னது. ராமுக்கு மனதுக்குள் ஏக்கம், நம் ஊரில் இதுபோன்ற வளங்களைப் பார்ப்பது அரிதாகி வருகிறதோ என்று தோன்றியது,

*****
அடுத்த நாள் அலுவலகத்தில் இருந்தபோது ராமுக்கு டாக்டர் அலுவலகத்தில் இருந்து ஃபோன். மருத்துவ அறிக்கை வந்துவிட்டது, உடனே பார்க்கவேண்டும் என்றார் டாக்டர். கொஞ்சம் கலவரமாக இருந்தது. உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கிறது. தினம் உடற்பயிற்சி, யோகம் என்று தவறாமல் செய்வதால் இதுவரை பிரச்சனை இல்லை. என்னவாக இருக்கும்?

வரவேற்பறையில் சிறிது நேரம் காத்திருந்த பின்னர் டாக்டர் அழைத்தார். டாக்டர் கோவைக்காரர், தமிழிலேயே உரையாடல் நடந்தது. "யாரும் உடன் வந்திருக்கிறார்களா?" என்றார்

"தனியாகத்தான்" என்றார் ராம். சற்று யோசித்துவிட்டு டாக்டர் சொன்னார், "பயப்பட வேண்டாம். உங்கள் PSA சற்று அதிகமாக இருக்கிறது. ஆரம்பக் கட்டமாக இருக்கலாம்" என்றார். ராமின் முகம் இருண்டது. கவலையுடன், "என்னவாக இருக்கும் டாக்டர்" என்றார் . "பரிசோதித்ததில் ப்ரோஸ்ட்டேட் (prostate) ஆக இருக்கலாம் என்று தோன்றுகிறது. பயாப்சி செய்து பார்க்க வேண்டும்" என்றார்.

வீட்டுக்குச் சென்றபோது ராம் கல்லூரியில் இருந்து வந்திருந்தான். அப்பா எப்போதும்போல் சாதாரணமாகச் சிரித்தாலும், கண்ணில் சோகம் ஒளிந்திருந்தது. அவரே சொல்லட்டும் என்று அப்போதைக்கு விட்டுவிட்டான்.

அடுத்த நாளே யாருக்கும் சொல்லாமல் பயாப்சிக்குச் சென்றார். உடனுக்குடன் சோதனை செய்ய Raman spectroscopy இருப்பதை டாக்டர் சொல்லியிருந்தார். முடிவு, பயப்பட்டதைப் போலவே. ஆரம்பக் கட்டத்தைச் சற்றுத் தாண்டியிருந்தது. ஓரளவு இதை எதிர்பார்த்திருந்ததால் ராமின் மனம் சற்றே விரைந்து ஏற்றுக் கொண்டது.

அங்கிருந்து அலுவலத்திற்குச் சென்று ப்ரோஸ்ட்டேட் புற்றுநோய் பற்றிய கண்டுபிடிப்புகள், தற்போது கிடைக்கும் சிகிச்சை முறை, மருந்துகள் பற்றி ஆராய்ந்தார். நோய்த்தடுப்பு மருத்துவமுறையும், ஜீன் தெரபியும், நோயுற்ற செல்களை மட்டும் தாக்கும் ஸ்மார்ட் மருந்து ஆராய்ச்சியும் இரண்டாம் கட்டத்தைத் தாண்டி, சோதனை மட்டத்தில் இருந்தது ஓரளவு ஆறுதலைக் கொடுத்தது. சில நாட்கள் முன்னர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் பேரா. செல்வராஜ் நோய்த்தடுப்பு மருத்துவமுறை குறித்து நம்பிக்கையுடன் சொன்னது நினைவுக்கு வந்தது.

அன்று மாலை கவலைகளை மனதுள் புதைத்துக்கொண்டு சாதாரணமாக வீட்டிற்குச் சென்றார். வீடு சற்று அசாதாரணமாக இருந்தது. ரவியும் மனைவியும் மிக மகிழ்ச்சியாக, அதே சமயம் சற்றுக் குழம்பியவர்களாக இருந்தனர். "என்ன விஷயம்?" என்று கேட்டு முடிப்பதற்குள் ரவி "அப்பா, உங்கள் கனவுகள் நனவாகும் வாய்ப்பு வந்திருக்கிறது. நம் ஊருக்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றிய ஊருக்கெல்லாம் நீங்கள் செய்ய நினைத்ததைச் செய்யலாம்" என்றான்.

அப்பா குழம்பியவராக ராமைப் பார்க்க, மனைவி பூசை அறையில் இருந்த மெகா மில்லியன் லாட்டரிச் சீட்டைக் காட்டி, "முதல் பரிசு விழுந்திருக்குங்க" என்றார். "நான் வாங்கலையே" என்று ராம் சொல்ல, ரவி " அப்பா, நாம சந்திரகிரகணம் பார்க்கப் போனப்ப உங்களுக்குத் தெரியாம நாலு லாட்டரி வாங்கினேன்பா. அதுக்குத்தான் விழுந்திருக்கு" என்றான் மகிழ்வுடன்.

லாட்டரியில் வந்த பணத்தின் ஆபத்து தெரிந்ததால் ரவி சொன்னான் "அப்பா, நம் பெயர் வெளியில் வராமல் இருக்கச் செய்ய வாய்ப்பிருக்கிறது. கவலை வேண்டாம்" என்றான். மகிழ்வதா அழுவதா என்று புரியவில்லை ராமுக்கு. ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.

மூன்று நாளில் எல்லாச் செய்திகளிலும் லாட்டரி முடிவு அறிவிப்பு வெளியாகின. யாருக்கு என்று வெளியில் தெரியாதென்றும், பணத்தில் பெரும்பங்கு நல்ல காரியங்களுக்கான நன்கொடையாகக் கொடுப்பதாகவும் எழுதி மிகவும் பாராட்டியிருந்தார்கள், அந்த பெயர் தெரியாத வள்ளலை. அதிலிருந்த அடுத்த வரி அவருக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் ஆனந்த அதிரிச்சியையும் கொடுத்தது. ஆம் குறிப்பிட்ட பெருந்தொகை புற்றுநோய்த் தடுப்பு (immuno therapy) ஜீன் தெரபி மருத்துவமுறை ஆய்வுக்கும் நோய்கொண்ட செல்களை மட்டும் தாக்கும் ஸ்மார்ட் மருந்து (smart medicines) ஆராய்ச்சிக்கும் என்றிருந்தது. அந்தச் செய்திகளைப் பார்த்துக்கொண்டே ரவியைப் பார்த்தார் ராம்.

ராம் சிரித்துக்கொண்டே அம்மா அருகில் இல்லாததை உறுதி செய்துகொண்டு, "அப்பா, உங்கள் முகத்தில் கவலை சில நாட்களாக இருந்தது. நீங்கள் சமீபத்தில் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றதால் அதன் முடிவு என்னவாக இருக்கும் என்று டாக்டருக்கு ஃபோன் செய்தபோது அவர் எதுவும் சொல்லாமல் மழுப்பினார். உங்கள் லேப்டாப்பில் பார்த்தால், கூகிள் குரோம் ஹிஸ்டரியில் நீங்கள் சமீபத்தில் தேடிய பக்கங்கள், எடுத்த குறிப்புகள் பற்றித் தெரியவந்தது. உங்கள் பயாப்சி ரிப்போர்ட்டும் பார்க்க நேர்ந்தது. ஆய்வுகள் முன்னேறிய நிலையில் இருப்பதால் உங்களுக்குச் சிகிச்சைக்கான வழி இருக்கிறது. நாம் கொடுக்கும் பணம் உங்களுக்கு மட்டுமல்லாமல் ப்ரோஸ்ட்டேட் மற்றும் மற்ற வகைப் புற்றுநோய் பாதித்த எல்லோருக்கும் பயன்படும். அதனால்தான் அறிவித்தேன், நம் வக்கீல் மூலமாக" என்றான் நிதானமாக.

என்னவெல்லாம் எப்படியெல்லாம் செய்யலாம் என்ற ஆலோசனை துவங்கியது அப்பாவுக்கும், மகனுக்கும்.

ப. முத்து தங்கம்,
நியூ ஜெர்சி
More

கதவு தட்டப்பட்டது
Share: 
© Copyright 2020 Tamilonline