Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | குறுநாவல் | கவிதைப்பந்தல் | சமயம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
கோமகள்
- அரவிந்த்|மே 2018|
Share:
"ஒரு சமுதாயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கம்பனின் கனவு கம்பராமாயணம் ஆனதுபோல், ஒரு குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இவர்தம் நாவல்களில் அமைகின்றது. இனிமையான குடும்ப வாழ்வு, இந்தியப் பெண்மையின் உயர்குணம், தாய்மையின் தியாக வடிவம் ஏதோ ஒரு வகையில் இவர் புதினங்களில் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும்" - இப்படிப் புகழ்ந்துரைப்பவர் அகிலன். புகழ்ந்துரைக்கப்பட்டவர் கோமகள். இயற்பெயர் ராஜலட்சுமி. இவர் சீர்காழியைச் சேர்ந்த அளக்குடி கிராமத்தில் மே 22, 1933 அன்று பிறந்தார். பாட்டியிடம் கேட்ட கதைகளைச் சகமாணவர்களுக்குச் சொல்வதும், அதை நடித்துக் காட்டுவதும் இவருக்கு மிகவும் விருப்பம். இளவயதிலேயே எழுத்தார்வம் முளைவிட்டது. உயர்கல்வியை நிறைவு செய்தபின் பொறியாளர் ராமமூர்த்தியுடன் திருமணம் நிகழ்ந்தது. ஓய்வு நேரத்தில் சிறுகதைகள், நாவல்கள் எழுதத் துவங்கினார். கணவர் ராமமூர்த்தி அதற்கு ஆதரவாக இருந்தார். சகோதரரான டாக்டர் குருமூர்த்தியும் இவரது எழுத்தை ஊக்குவித்தார். எழுதிக் குவித்தார். பிரசண்ட விகடன், கல்கி, மங்கை, மணியன் மாத இதழ், தினமணி கதிர், தினமலர், ஜெமினி சினிமா எனப் பல இதழ்களில் இவரது சிறுகதைகள், தொடர்கள் வெளியாகின.

முதல் நாவல் 'பனிமலர்' 1964ல் வெளியானது. தன்மைக்கூற்றாகக் கோமகளால் எழுதப்பட்ட ஒரே புதினம் இதுதான். காதலையும், கலப்புமணத்தையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் விவரிப்பதாக இப்புதினம் அமைந்தது. இல்லற வாழ்வில் தோல்வியுற்றுச் சமூகத்தையே தனது குடும்பமாகக் கருதிச் சேவை செய்ய முற்படும் இளம்பெண்ணின் வாழ்வைச் சித்திரிக்கிறது இப்புதினம். அடுத்து வெளியான 'அன்பின் சிதறல்' பிரசண்ட விகடனில் தொடராக வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பெண்ணின் பெருமையை, அன்பை, குடும்பத்துக்காகவும், கணவனுக்காகவும் தன்னையே தியாகம் செய்ய முன்வரும் அவள் மனப்பாங்கை, நிகரற்ற விட்டுக்கொடுக்கும் பண்பை எடுத்துக்காட்டும் புதினமாக இது அமைந்திருந்தது. கல்கி இதழில் தொடராக வெளிவந்த 'இனிக்கும் நினைவுகள்' வெகுவாகப் பேசப்பட்ட புதினமாகும். காதல் தோல்விக்குள்ளான பெண், அதிலிருந்து மீண்டு, தன்னை மருத்துவ சேவைக்கு அர்ப்பணித்து, எல்லையில் காயமுற்ற ராணுவ வீரர்களுக்குத் தொண்டு செய்யச் செல்வதைச் சித்திரிக்கிறது இது. உண்மையில் இவர் முதன்முதலில் எழுதிய புதினம் 'இருவரில் ஒருவர்'. ஆனால், அது நான்காவதாகவே வெளியானது. இதில் மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்க்கையைக் காலவரிசைப்படி காட்சிப்படுத்தியிருக்கிறார் கோமகள். மாமியார்-மருமகள் தலைமுறை இடைவெளி, அதனால் ஏற்படும் சிக்கல்கள், ஆண்கள் இதில் அகப்பட்டு எதிர்கொள்ளும் போராட்டம் ஆகியவற்றை மிகையின்றிக் கூறியிருக்கின்றார்.

"இன்பம் கூடை கூடையாக இருந்தாலும் உதிரி மலர்களாகக் கிடந்தால் அவை துய்க்காமல் மடிவதுண்டு. ஒழுங்கும் ஒழுக்கமும் இருந்தால் தியாகத்தின் அடிப்படையில் வாழ்வு அமைக்கும் பயன்களைத் துய்க்கலாம்' என்ற உண்மையை தனது 'பூச்சரம்' படைப்பில் எடுத்து வைக்கிறார் கோமகள். இது சென்னைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. இவரது மற்றொரு குறிப்பிடத் தகுந்த படைப்பு 'அன்னை பூமி'. தமிழ் வளர்ச்சித் துறையின் 1982ம் ஆண்டிற்கான சிறந்தநூல் தேர்வில் இரண்டாம் பரிசு பெற்றது. ராணுவ வீரர்களின் வாழ்க்கையை, சேவை உணர்வை, தியாகத்தை மிகையின்றிப் பேசுகிறது. ராணுவ வீரர்களை மட்டுமல்லாது, சபர்மதி ஆசிரமத்தினரின் தொண்டுள்ளத்தையும், இரக்க உணர்வையும் உள்ளத்தை உருக்கும்படி சொற்சித்திரம் ஆக்கியிருக்கிறார் இதில் கோமகள்.

'சுநாதங்கள்', 'நிலவில் மலராத மலர்கள்', 'பெண் ஒரு மலர்', 'சந்தன மலர்கள்', 'மலர்கள் நடுங்குகின்றன', 'என் மனம் உனக்குத் தெரியாதா?', 'மேகச்சித்திரங்கள்', 'நிஜம் ஒரு நிறம், நிழல் பல நிறம்', 'தூரத்துக் கனவுகள்', 'மலரும் அரும்புகள்', 'இளமைக் கனவுகள்', 'நிலாக்கால நட்சத்திரங்கள்', 'பால்மனம்' போன்றவை இவரது குறிப்பிடத் தகுந்த புதினங்களாகும். தாய்மையும், கனிவுமே பெண்களின் அடிப்படைக் குணம் என்பதை தமது பல படைப்புகளில் முன்வைக்கிறார் கோமகள். மத்தியதர மக்களின் குடும்ப வாழ்க்கையை மிகையின்றிச் சொல்பவை இவரது படைப்புகள். வேலைக்குச் செல்லும் மகளிர் வேலை பார்க்கும் இடத்திலும், வீட்டிலும், சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை யதார்த்தமாக எழுத்தில் தீட்டியுள்ளார். அகிலன், நா. பார்த்தசாரதி, ந. சஞ்சீவி, சி. பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கோமகளின் படைப்புகளைப் பாராட்டியுள்ளனர்.

இவரது சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கன. 'கானல் நீர்' இவரது நுனித்து நோக்கத் தக்க சிறுகதை ஆகும். வயதானவர் ஒருவர் பூங்காவிற்குச் செல்கிறார். அங்கே காதலர்கள் இருவர் கொஞ்சி மகிழ்வதைக் காண்கிறார். உடனே அவருக்குத் தன் இளமைப்பருவ நாட்கள் நினைவிற்கு வருகின்றன. பெற்றோர் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுத்து அவர்கள் பார்த்து வைத்திருந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதையும், தன் வாழ்வில் இதுபோன்ற காதல் மகிழ்வுகள் இல்லாததையும் நினைத்து வருந்துகிறார். மனம் குமைகிறார். வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றை இழந்து விட்டதாக எண்ணுகிறார். அந்த இளஞ்சோடிகளை தன் மனதுக்குள் வாழ்த்துகிறார்.

ஆனால், கதை இங்கே முடியவில்லை. இங்கேதான் வருகிறது திருப்புமுனை. எந்த ஆணைப் பூங்காவில் கண்டாரோ அவருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் ஆவதைக் கண்டு அதிர்கிறார். அவர்களது காதல் முறிந்திருக்குமோ என்று நினைத்து வருந்துகிறார். சில வாரங்கள் கழிகின்றன. அன்றும் அவர் பூங்காவிற்குச் செல்கிறார். அதே பழைய காதல் ஜோடிகளை அங்கே காண்கிறார். ஒரு பெண்ணை மணமுடித்த பின்னரும், மற்றொரு பெண்ணைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் ஆணையும், அவனது திருமணத்தைக் கண்டுகொள்ளாமல் காதலைத் தொடரும் பெண்ணையும் பார்த்து அதிர்கிறார். தான் காதல் என்று நினைத்தது உண்மையில் காதலல்ல, வெறும் காமமே, கானல் நீரே என்ற உண்மை புரிகிறது. தனது திருமணத்தின் உயர்வும், மனைவியின் பெருமையும் புலப்படுகிறது. மன நிறைவுடன் இல்லம் திரும்புகிறார். இது கோமகள் எழுதிய முக்கியமான சிறுகதையாகும்.
மற்றொரு முக்கியமான சிறுகதை 'வடு.' அவனுக்குத் திருமணம். மணமேடையில் அமர்ந்திருக்கிறான். ஆனால், மணப்பெண்ணாக வந்து அமரவேண்டியவள் திடீரெனக் காணாமல் போகிறாள். திருமணம் நின்று போகிறது. அவனுக்கு அவமானமாகிறது. சிலமாத இடைவெளிக்குப் பின் அவள் வந்து அவனைச் சந்திக்கிறாள். அவனிடம் மன்னிப்புக் கோருகிறாள். மிகுந்த தயக்கத்திற்குப் பின் 'நான் ஏன் காணாமல் போனேன்' என்பதைச் சொல்கிறாள். இறுதியில் அந்தக் காரணத்தை அவன் ஏற்றுக் கொள்கிறான். உளவியல் அடிப்படையில் எழுதப்பட்ட முக்கியமான சிறுகதை இது. இது +1 மாணவர்களுக்கான துணைப்பாட நூலில் இடம்பெற்றது.

இவரது 'தாய்மை' மற்றொரு முக்கியமான சிறுகதை. மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், நான்காவது குழந்தையைச் சுமக்க விரும்பவில்லை. ஆனால் கணவனின் வற்புறுத்தலால் சுமக்க நேர்கிறது. மிகவும் துன்பப்படுகிறாள். கணவனோ மனைவியின் உடல் நலனையும், மனநலனையும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறான். அவர்களது இனிய இல்லறத்தில் இதனால் சிக்கல்கள். சண்டை, சச்சரவுகள் எழுகின்றன. கோபத்தில் குழந்தைகளை மனைவி அடிக்க, கணவன் அவளைக் கோபித்துப் பாராமுகமாக இருக்கிறான். பிரசவ நாள் நெருங்குகிறது. உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை. மனைவியின் அருமை அவனுக்கு அப்போதுதான் புரிகிறது. எப்படியாவது மனைவி பிழைத்தால் போதும் என்று வேண்டுகிறான். மனைவி பிழைக்கிறாள்; ஆனால் குழந்தை இறந்து விடுகிறது. அவன் அதைப்பற்றிக் கவலை கொள்ளாமல், மனைவி பிழைத்தாளே என்ற மகிழ்ச்சியில் இருக்க, மனைவியோ குழந்தையின் இறப்பு குறித்து மிகவும் மனம் வருந்துகிறாள். அழுகிறாள். அவள் உடல்நலம் சீர்கெடுகிறது. கணவன் ஆறுதல் சொல்ல, அவளோ இந்தத் துயர் நீங்க, மீண்டும் எனக்குக் குழந்தை வேண்டும் என்கிறாள். "துயரத்திற்கு மாற்று அதுவாகத்தான் அமைய வேண்டுமா? உலகம் உள்ளளவும், தாய்மை உள்ளளவும் அதுவே உயிர்களின் ஓங்க்காரச் சக்தியாக நிலவி வருமா? என்ன அதிசயமான மன அமைப்பு! என்ன விசித்திரத் தாய்மை! இந்தத் தாய்மைத் தத்துவத்தைப் பற்றிக் கடவுள்தான் விளக்கவேண்டும்' என்று எண்ணுகிறான். தாய்மை உணர்வு அவனுக்கு அப்போதுதான் புரிகிறது.

'முதல் சந்திப்பு', 'உயிரின் அமுதாய்', 'ஆறறிவின் திகைப்பு', 'கானல் நீர்', 'மனச்சந்ததி', 'ஒரு மெட்ரோபாலிட்டன் நகரில்', 'காஸ்மோபாலிட்டன் மனிதர்கள்', 'இந்தியா மீண்டும் விழித்தெழும்', 'சில நியதிகள் மாறுகின்றன', 'இந்த யுகம் பூத்து குலுங்குமடி' போன்றவை முக்கியமான சிறுகதைத் தொகுப்புகள். 'இந்த யுகம் பூத்து குலுங்குமடி' சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் முதுகலை பட்டப்படிப்பிற்கான துணைப்பாடநூலாக வைக்கப்பட்டது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவரது படைப்புகள் நாடகமாக ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன. 'சுடர்விளக்கு' வானொலியில் மாதர் பகுதியில் ஒலிபரப்பப்பட்ட புதினமாகும். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மும்மொழிகள் அறிந்தவர். இவரது சிறுகதைகள் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது 'மனச்சந்ததி' என்ற சிறுகதைக்கு கல்கி வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிப் பரிசு கிடைத்தது. கல்கி-பெர்க்கலி தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு 'பால் மனம்' என்ற படைப்புக்குக் கிடைத்தது. வி.ஜி.பி. வழங்கிய சந்தனம்மாள் நினைவுப் பரிசு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 'தமிழ் அன்னை' பரிசு, பாரத வங்கியும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டியில் பரிசு என எண்ணற்ற பரிசுகளைப் பெற்றுள்ளார்.

ஐந்தாம் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு, சாகித்ய அகாடமி நடத்திய இலக்கியக் கருத்தரங்கங்கள் உட்படப் பல கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். தமிழக அரசின் குடும்பநலத்திட்டப் பிரச்சாரம், மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றுக்கான நாடகங்களையும் நாடகக் குழுக்களையும் தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினராக இருந்திருக்கிறார். அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும், இந்திய எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

ஐம்பதுக்கு மேற்பட்ட புதினங்களையும், முப்பதுக்கு மேற்பட்ட குறுநாவல்களையும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் தந்திருப்பவர் கோமகள். சதா எழுத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். இரவும் பகலும் இவருக்கு எழுத்தே சிந்தனையாக இருந்தது. இரவில் படுக்கப் போகும்போது கூடத் தன்னுடன் லெட்டர் பேடையும், தாள்களையும், பேனாவையும் தலைமாட்டில் வைக்கும் பழக்கம் உடையவராக இருந்தார். அந்த அதீத சிந்தனையே நாளடைவில் மனப்பிறழ்வுக்குக் காரணமாகி இருக்கலாம். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் எழுதத் துவங்கியவர், வெறும் தாளில் கிறுக்கி அவற்றைப் படைப்பு என்று நம்பும் நிலைக்கு ஆளானார். நாளடைவில் நோய்முற்றிக் காலமானார்.

தான் வாழும் காலத்தில் பெண்களைப் பற்றி, அவர்களது உயர்வைப் பற்றியே சிந்தித்து அவற்றைத் தன் படைப்புகளில் முன்வைத்த கோமகள், பெண் எழுத்தாளர்களுள் முக்கியமானவர். மறக்கப்படக் கூடாதவர்.

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline