Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | முன்னோடி | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | பொது
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
கனவு மெய்ப்பட வேண்டும்
- முனைவர் ஜெயந்தி நாகராஜன்|நவம்பர் 2017|
Share:
திலகம் பத்திரிகைக்கு அடுத்த வாரம் அனுப்பவேண்டிய சிறுகதையை மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது 'அம்மா! உங்களுக்குப் போன்' என்றபடி தொலைபேசியை என்னிடம் பணிப்பெண் கொடுத்தாள். மறுமுனையில் அண்ணா நகரில் மிகப் பிரபலமான பள்ளித் தலைமை ஆசிரியர் என்னை அவர்கள் பள்ளிவிழாவுக்கு அழைக்கும் சேதியையும், தேதியையும் உறுதிப்படுத்தி எனக்கு நினைவூட்டினார்.

நானும் அப்பள்ளி விழாவில் கலந்துகொண்டு என் எழுத்துலக அனுபவங்கள் சிலவற்றை அவர்கள் முன் எடுத்து வைத்தேன். '21ஆம் நூற்றாண்டில் நாம் இருக்கிறோம். இருந்தும் இன்னும் ஒரு காந்தியையோ, ஒரு விவேகானந்தரையோ நாம் பெறவில்லை' என்ற என் ஆதங்கத்தைப் பெருத்த கரவொலியுடன் பதிவு செய்துவிட்டு அமர்ந்தேன்.

அப்போது ஒரு மாணவன் கூட்டத்திலிருந்து எழுந்து மெதுவாக என்னருகில் வந்தான். 'அம்மா! உங்கள் கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன். என் கருத்தை அங்கிருந்தபடியே உரத்த குரலில் கூறி எல்லோர் கவனத்தையும் என் பக்கம் திருப்பியிருக்க முடியும். ஆனால் அது உங்களைக் காயப்படுத்திவிடும்.' என்று பேசிய அச்சிறுவனை வியப்புடன் பார்த்தேன். மேலும் அவன் பேசலானான். "காந்தியைப் பெற்றெடுத்தவர் புத்லி பாய். விவேகானந்தரைப் பெற்றெடுத்த புண்ணியவதி புவனேஸ்வரி. இதனை இப்படியும் சொல்லலாம் அல்லவா? இன்னும் ஒரு புத்லி பாயோ, ஒரு புவனேஸ்வரியோ இன்று நம்மிடையே இல்லாததால்தான் காந்தி, விவேகானந்தர் பிறக்கவில்லை அல்லவா?" என்றான்.

அக்குழந்தையின் கேள்வி என்னை அசரவைத்தது. உடனே எழுந்து நன்றி கூறி அவன் கருத்தை அரங்கில் கூறினேன். அப்பனுக்குப் பாடம் சொன்ன முருகன்போல் நிற்கும் அவனைப் பார்த்து, உன் பெயரென்ன என்று கேட்க விரும்பினேன். அதற்குள் அவனே தன் பெயர் ஆனந்தன் என்று சொன்னான். "ஆனந்தனின் அறிவாற்றல் என்னைப் பிரமிக்க வைக்கிறது. ஆனந்தன் என் கண்களுக்கு விவேகானந்தராகவே தெரிகிறான்" என்று பாராட்டி விடைபெற்றேன்.

அன்று முழுவதும் என்னை ஆனந்தனே ஆக்கிரமித்துக் கொண்டான். மறுநாள் அவன் பள்ளிக்கே சென்று அவனைப் பற்றிய விவரங்களை முதல்வரிடம் கேட்டறிந்தேன். உள்ளம் துடிதுடித்தேன். எமனின் பினாமியாய் வந்த சுனாமி அலை அவன் குடும்பத்தைச் சுருட்டிக்கொள்ள ஒற்றை ஆளாய் அவன் மட்டும் தப்பி இங்கே கரை சேர்ந்ததைக் கேட்டதும், "அவனை வளர்க்கும் பொறுப்பை நான் ஏற்கிறேன். அவன் சம்மதத்தைக் கேட்டுச் சொல்லுங்கள்" என்றேன்.

இதோ! இப்போது ஆனந்தன் என் பிள்ளை. அவனது ஒழுக்கம், பரந்துபட்ட சமுதாயப் பார்வை, அவனது தேடல் என அனைத்தையும் என்னால் முடிந்தவரை மேலும் மெருகேற்றி வருகிறேன். நான் பேசப்போகும் இடங்களுக்கு அவனும் வருகிறான். அன்று நான் ஒரு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குச் சென்றிருந்தேன். இளம் சிறார்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கையில் என் இதயம் கனத்தது. 'இதற்கு யார் காரணம்?' எனும் கேள்வி என்னைத் துளைத்தெடுத்தது.
அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது ஆனந்தன், "அம்மா! நான் இவர்களுடன் பேச ஆசைப்படுகிறேன்" என்றான். அதிகாரியின் சம்மதத்தைப் பெற்ற பிறகு அவன் அவர்களிடம் பேசலானான். மிகவும் இயல்பாக உரையாடி வந்தவன் திடீரென ஆசிரியரின் சிறப்புக்களைப் பற்றிப் பேசலானான்.

"ஓர் ஆசிரியர் சொன்னார் என்பதற்காகத் தாடகை எனும் பெண்ணைக் கொன்றான் இராமன்; ஓர் ஆசிரியர் கேட்டுக்கொண்டார் என்பதால் தன் மகனைக் காட்டிற்கு அனுப்பினார் தசரதன்; தன் மானசீகக் குரு கேட்டதும் தன் கட்டை விரலைக் காணிக்கையாக்கினான் ஏகலைவன்; வண்டு துளைத்த போதும் ஆசானின் உறக்கம் கலையக்கூடாது என்பதற்காகத் தன் வலியை, வேதனையைப் பொறுத்துக் கொண்டவன் கர்ணன்; பார்த்து எழுதச் சொன்ன ஆசிரியர் மீதும் தான் கொண்ட மதிப்பினைக் கைவிடாது இறுதிவரை போற்றியவர் காந்தியடிகள்; சரியான விடையினை அளித்த போதும் அதனைத் தவறான விடை என்று எண்ணி ஆசான் அடித்தபோதும் அவரைத் தெய்வமாக எண்ணியவர் நரேந்திரன் ஆன விவேகானந்தர்; இன்றும் பழைய மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களைப் போற்றி வணங்குவதைப் பல பள்ளிகளில் பார்த்து வருகிறோம்" என்று சொல்லிக்கொண்டே வந்தபோது திடீரென ஒரு சிறுவன் கேவிக்கேவி அழத் தொடங்கினான்.

பின்னர் விசாரித்த போது ஒரு கணநேர வெறுப்பில் தன் ஆசியரைக் கத்தியால் கொன்றுவிட்டு அவன் இங்கே வந்துள்ளான் என்பதை அறிந்த என் இதயத் துடிப்பு ஒரு வினாடி நின்று மீண்டும் துடித்தது. இன்று தன் தவறை உணர்ந்து துடிக்கும் அச்சிறுவனை அணைத்து அவனை ஆசுவாசப்படுத்தினேன். ஆனந்தனின் பேச்சின் வீச்சினை அறிந்து வியந்தேன். நிச்சயம் இவன் பலவித மாற்றங்களை உருவாக்குவான் என உணர்ந்தேன்.

இதோ! ஆனந்தன் இன்று வாலிபனாகி விட்டான். அவன் பேச்சு பல பள்ளிகளில் இடம்பெற்று மாணவச் சமுதாயத்தை எழுச்சிப் பாதையில் சேர்த்திருக்கிறது. ஃபேஸ்புக்கிலும் இவனது கருத்துக்கள் பலரால் விரும்பப்படுகின்றது. அன்று விவேகானந்தர் நூறு இளைஞர்களைத் தாருங்கள் என்றார். இன்று ஒரு விவேகானந்தரை இவ்வுலகிற்குத் தந்த பேறு எனக்குக் கிட்டியது. நூறு இளைஞர்கட்கும் மேல் இவன் வசம் வந்தாயிற்று. இளம் மாணவர்கள் சரியான பாதையில் செல்ல ஆனந்தனை நான் ஒரு கருவியாக்கி விட்டேன். நானும் ஒரு புவனேஸ்வரியாகி விட்டேன் என்று மகிழ்ந்தேன்.

"அம்மா! அம்மா! என்னம்மா! எவ்வளவு நேரமா கூப்பிடறேன். அப்படியே உட்கார்ந்தபடியே தூங்கிட்டீங்களே!" என்று என்னை என் பணிப்பெண் உலுக்க... 'அட! அத்தனையும் கனவா? கனவு மெய்ப்பட வேண்டுமே பாரதி' என்றபடி அன்றாடப் பணியைத் துவக்க, மீண்டும் தொலைபேசி ஒலிக்கிறது. என் பணிப்பெண் அதனை என்னிடம் கொடுத்தாள். மறுமுனையில் அண்ணாநகரின் பிரபல பள்ளியின் முதல்வர்!

முனைவர் ஜெயந்தி நாகராஜன்
Share: