Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது...
- |ஏப்ரல் 2017|
Share:
பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் கவனிக்கப்படுகிறார்கள்; அவர்கள் சொல்லும் செயலும் கவனிக்கப்படுகிறது; அவர்கள் நேசிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் பின்பற்றவும் படுகிறார்கள். அவர்களை வீரவணக்கம் (Hero workship) செய்பவர்களும் பெருகிவிட்டனர் என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. அந்தக் காரணத்தினாலேயே, பொதுவாழ்வில் இருப்பவர்களின் நடத்தை முன்னுதாரணமாக அமைய வேண்டியதிருக்கிறது. இங்கே இதனைக் குறிப்பிடக் காரணம் சிவசேனா எம்.பி. ஒருவரின் நடத்தை ஏற்படுத்திய அதிர்ச்சிதான். பாராளுமன்ற உறுப்பினர் என்பவர் நாட்டுக்கே சட்டமியற்றும் அமைப்பில் அங்கம் வகிப்பவர். அப்படியிருக்க நாம் குறிப்பிடும் இவர், ஏர் இந்தியா பணியாளர் ஒருவரைச் செருப்பால் முகத்தில் அடித்து, அவரது கண்ணாடியை உடைத்து, இழிசொல் பேசியிருக்கிறார். அவர் பயணம் செய்த விமானத்தில் எகானமி வகுப்பு மட்டுமே உண்டு. அப்படியிருந்தும், உயர்வகுப்பு இருக்கை தரப்படவில்லை என்பதற்காக அவர் பணியாளரைத் தாக்கியிருக்கிறார். ஏன் அவரது பெயரை நாம் குறிப்பிடவில்லை என்றால், அவர் மட்டுமே அப்படி என்றில்லை. டோல் கேட்டில் பணம் வசூலிப்பவரைத் தாக்குவது, கடையில் புகுந்து வேண்டியதை எடுத்துக்கொண்டு வெளியேறிப் பணம் கேட்டால் கடைக்காரரை அடிப்பது, ஆற்றுமணல் திருடுவது உட்படப் பலவாறான குற்ற நடவடிக்கைகளைப் பல மட்டங்களிலும் உள்ள அரசியல்வாதிகள் செய்வது இந்தியாவில் அன்றாடச் செய்திதான். அதிகாரம், பணம், ஆள்பலம் என்பவற்றால் சராசரி மனிதன் மிரட்டவும் தாக்கவும் படுவதொன்றும் புதிதல்ல. இப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுக்கிற தம்மிடம் ஏதோ தவறு இருக்கிறதென்பதை மக்கள் உணர்ந்து, சரியான காரணங்களுக்காகச் சரியானவர்களுக்கு ஓட்டுப் போடப் பழகவேண்டும். அவ்வளவுதான்.

*****


இந்தச் சந்தர்ப்பத்தில் அசோகமித்திரன் என்ற அந்த மகத்தான எழுத்தாளரை எண்ணிப் பார்க்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. மார்தட்டி எக்காளமிடும் நவீனகால எழுத்தாளர்களிடையே, அமைதியும் அடக்கமுமாக வாழ்ந்து, ஆனால் அதிசயிக்கத்தக்க எழுத்தாளராகத் தம்மை நிலைநாட்டிக் கொண்டு, மறைந்துவிட்டார் அவர். அரைநூற்றாண்டு தாண்டிய எழுத்துப் பயணத்தில் அவரது திறனுக்கும் அர்ப்பணிப்புக்கும் நிகரான புகழ் அல்லது பொருள் ஈட்டலின் உயரங்களை அவர் தொடாமல் போயிருக்கலாம். ஆனால், எண்ணற்ற எழுத்தாளர்களுக்கு அவர் ஆதர்சமாக இருந்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. தென்றல் (ஃபிப்ரவரி, 2009) இதழுக்குக் கொடுத்த பேட்டியில், எழுத்தே வாழ்க்கையாக அமைத்துக்கொண்டதைப் பற்றி, “அது மிகவும் கடினமானது. அதுபோன்ற ஒரு பைத்தியக்காரத்தனம் வேறெதுவும் கிடையாது” என்று கூறுவதோடு நிற்கவில்லை. “ஆனால் இங்கே (தமிழ் நாட்டில்) நம்மைப்போன்ற மனிதர்கள் ஒருவரை ஒருவர் கீழே தள்ளுவதும், பயன்படுத்திக் கொண்டு, பலனை வேறொருவர் அனுபவிப்பதும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் முகமற்றவனாக ஆங்கிலத்தில் எழுதி, அதன்மூலம்தான் என் வாழ்க்கை நடந்தது” என்று உண்மையைப் போட்டு உடைக்கிறார். ஆனால், அதை முடிக்கும் விதத்தில்தான் நாம் அசோகமித்திரனைப் புரிந்துகொள்ள முடியும்: “அதில் எனக்கு எந்தவித வருத்தமுமில்லை.” அந்த எளிய, எதையும் வருத்தமின்றி ஏற்றுக்கொள்கிற, மகத்தான எழுத்தாளரைத் தமிழுலகம் மறந்துவிடக் கூடாது.

*****
எல்லோரும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் என்று ஆலாய்ப் பறக்கிற காலத்தில் கலையைத் தனது வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்த வித்தியாசமான மனிதர் ரவி ராஜன். ஆனால் தொழில்நுட்பம் அவருக்கு அன்னியமல்ல. BASIC கணினி மொழி தொடங்கி அனிமேஷன் வரை எல்லாவற்றையும் ஒரு கை பார்த்துவிட்டு, கற்பிக்கும் ஆவலில் கல்லூரிக்குள் புகுந்த இந்த இரண்டாம் தலைமுறை தமிழ் அமெரிக்கர் இன்றைக்குக் கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்ட்ஸின் (CalArts, LA) தலைமைப் பதவிக்கு உயர்ந்துள்ளார். அவரது நேர்காணலின் முதல் பகுதி இந்த இதழின் மகுடம். ஹார்வர்டு தமிழ் இருக்கை குறித்த கட்டுரை, கோஸ்வாமி துளசிதாஸர் வாழ்க்கை எனத் தென்றலுக்கே உரிய விதவிதமான சீர்வரிசைகளை உங்கள் கண்முன்னே மீண்டும் விரிக்கிறோம். வாரி எடுங்கள், வளம் பெறுங்கள்.

*****


வாசகர்களுக்கு ஸ்ரீராம நவமி, மஹாவீர் ஜெயந்தி, ஈஸ்டர் ஞாயிறு வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

ஏப்ரல் 2017
Share: 




© Copyright 2020 Tamilonline