Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைபந்தல் | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
சிதம்பரம் நடராஜர் ஆலயம்
- சீதா துரைராஜ்|டிசம்பர் 2016|
Share:
சிற்பரஞ்சோதி சிவானந்தக் கூத்தனைச்
சொற்பதமாம் அந்தச் சுந்தரக் கூத்தனை
பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார் அறிவாரோ


- திருமந்திரம்

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற திருத்தலங்களுள் ஒன்று சிதம்பரம். தில்லை என்ற பழம்பெயரும் உண்டு. இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தைக் குறிப்பதாகும். நடனக்கலைக்குப் புகழ்பெற்ற நகரம்.

மூர்த்தி: நடராஜர், அம்பலக்கூத்தர். அம்பிகை: சிவகாமசுந்தரி. தீர்த்தம்: சிவகங்கைத் தீர்த்தம். தலவிருட்சம்: தில்லை மரம். சைவசமயக் குரவர் நால்வராலும் பாடப்பெற்ற பெருமை உடையது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீக்ஷிதர் இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார். ஆழ்வார்களில் ஒருவரான குலசேகராழ்வார், இத்தலத்தில் உறையும் கோவிந்தராஜப் பெருமாளைப் போற்றிப் பாடியுள்ளார்.

முற்காலத்தில் தில்லையம்பலம், சிற்றம்பலம் எனவும் சிதம்பரம் அழைக்கப்பட்டது. ஏனைய சிவாலயங்களில் லிங்கவடிவமாக இருக்கும் சிவபெருமான் இவ்வாலயத்தில் நடராஜராக, ஆடலரசராக, அம்பலவாணராகக் காட்சி அளிக்கிறார். பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயமாகிய வெட்டவெளியைச் சுட்டுவதே சிதம்பர ரகசியமாகும். சிவபெருமான் நடனக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள் சபைகள் என அழைக்கப்படுகின்றன. அவை கனகசபை (சிதம்பரம்), ரஜதசபை (மதுரை), தாமிரசபை (திருநெல்வேலி), சித்ரசபை (திருக்குற்றாலம்) ரத்ன சபை (திருவாலங்காடு) என்பனவாகும்.

சிம்மவர்மன் என்னும் மன்னன் தீராத நோயில் வருந்தி நாட்டை ஆளமுடியாமல் வெளியேறிப் பல இடங்கள் சுற்றி, தில்லைவனத்தில் சுயம்புலிங்கம் இருப்பதையும், அங்கே புலிக்கால் முனிவர் ஒருவரும், பாம்பின் உடலுடைய மற்றொரு முனிவரும் பூஜை செய்துவருவதை அறிந்தான். அவ்விடம் வந்து அம்முனிவர்கள் இருவரையும் வணங்கித் தன் நோய் தீர்க்குமாறு வேண்டி நின்றான். வியாக்ரபாதர் என்னும் வியாக்ரபாத முனிவரும், பாம்புமுனி என்னும் பதஞ்சலியும் மனமிரங்கி நடராஜரையும், அம்மை சிவகாமியையும் தரிசிக்குமாறு அறிவுறுத்தினர். மன்னனும் அவ்வாறே நடராஜப் பெருமானை வணங்கி, சிவகங்கைக் குளத்தில் நீராடியதும் அவன் நோய் அகன்றதுடன், உடலும் தங்க வர்ணமயமாய் மின்னியது. அதனால் அன்றுமுதல் இரண்யவர்மன் என்று அவன் அழைக்கப்பட்டான். நோய் நீங்கப்பெற்றதால் மிகவும் மனமமகிழ்ந்தான் மன்னன். வியாக்ரபாதரின் ஆணைப்படி சிலகாலம் சிறப்பாக ஆட்சி செய்தபின் பெரும்பொருளுடன் தில்லைத்தலத்துக்கு வந்து நடராஜப்பெருமானுக்குச் சிறப்பான முறையில் கோயிலை அமைத்தான். இன்றளவும் உள்ள மண்டபம், குளக்கரையின் படிக்கட்டுகள், தங்க ஓடுகள், சபைகள், பிரகாரங்கள் என யாவும் அவனால் ஆதியில் அமைக்கப்பட்டவையே!
ஆலயம் 51 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பிரமாண்டமானதாய், நான்கு திசைகளிலும் நான்கு ராஜகோபுரங்களுடன் சிறப்பாக அமைந்துள்ளது. கோபுர சிகரத்தில் 13 பெரிய செப்புக் கலசங்கள் உள்ளன. கோவிலின் கிழக்குக்கோபுரத்தில் 108 பரதநாட்டியச் சிற்பங்களைக் காணலாம். பராந்தகசோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டது. கலைநுட்பம் மிக்க கலைவடிவங்கள், நாட்டிய முத்திரையுடன் கூடிய சிற்பங்கள் உள்ள தலம் சிதம்பரம். தங்கத் தகடு வேயப்பட்ட கூரையில் உள்ள 21600 ஓடுகள் மனிதன் ஒருநாளில் விடும் மூச்சுக் காற்றின் எண்ணிக்கையைக் குறிக்கின்றன. அவற்றைப் பொருத்தி இணைத்திருக்கும் 72000 தங்க ஆணிகள் மனிதனின் சுவாச ஜீவநாடிகளின் எண்ணிக்கையை உணர்த்துகின்றன. கனகசபையில் உள்ள 64 கை மரங்கள் 64 கலைகளையும், 9 தங்கக் கலசங்கள் நவசக்தியையும் குறிக்கின்றன.

கோவிலின் சித்சபையில் நடராஜ மூர்த்தி நடனக்கோலத்திலும் இடப்புறத்தில் அம்பாள் சிவகாமசுந்தரி வீற்றிருக்கும் கோலத்திலும் காட்சிதருகிறார். வலதுபக்கம் திரை போடப்பட்டுள்ளது. நடராஜரின் ஆரத்தி வேளையில் சிறியவாயிலில் திரை காட்டப்படும் போது அந்தத் திரை அகற்றப்படும். அங்கே திருவுருவம் ஏதுமின்றி தங்க வில்வமாலை தொங்கவிடப்பட்டிருக்கும். இறைவன் அங்கே அரூபமாக ஆகாயவடிவில் உள்ளார் என்பது இதன் தத்துவம். சித்சபையில் ரத்னசபாபதி, சந்திர மௌலீஸ்வரர் ஸ்படிக லிங்கம், ஸ்வர்ணாகர்ஷண பைரவர், முகலிங்கம் ஆகியவை உள்ளன.

இரண்டாவது பிராகாரத்தில் நிருத்தசபாவில் ஊர்த்துவ தாண்ட நிலையில் சிவன் காளியை நடனத்தில் வென்ற நிலையிலும், சரபேஸ்வரர் சிற்பமும் அமைந்துள்ளன. காளியின் நடனத்தை விளக்கும் சிற்பம் நிருத்த சபா மண்டபத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் தேவசபாவில் சோமாஸ்கந்தர், பார்வதி, விநாயகர், சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர் இதர தெய்வ உருவங்கள் உள்ளன. மூலநாதர் சிவலிங்க வடிவில் உள்ளார். ரத்தினத்தால் ஆன நடராஜர் விக்ரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும் ஆலயத்தில் இன்றளவும் பூஜிக்கப்பட்டு வருகிறது.

ஆலயத்தில் தினமும் ஆறுகால பூஜை நடக்கிறது. வருடாந்திர பிரம்மோற்சவம், தேரோடும் வீதியில் உற்சவர் உலாவரும் காட்சி, மார்கழிப் பௌர்ணமி, திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசனம் என அனைத்து விழாக்களும் மிகச்சிறப்பாக நடக்கின்றன. ஆனி மாதத்தில் நடக்கும் ஆனித்திருமஞ்சனம் மிகச் சிறப்பானதொரு விழாவாகும்.

தேவாரத் திருமுறைகள் கண்டெடுக்கப்பட்ட தலம் சிதம்பரம். சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தை அரங்கேற்றிய தலம் சிதம்பரம். நடராஜப்பெருமானின் நடனத்தை, ஆன்மாக்களின் ஆணவ இருளைப் போக்கி, பேரின்பமாகிய ஆனந்தத்தை அருளும் நடனம் என சைவத்திருமுறைகள் போற்றுகின்றன.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 
© Copyright 2020 Tamilonline